
(1)
ஒரு குழந்தையைத்
தூக்கிக் கொஞ்சும் போது
முதுமையைத் தூக்கிச்
சுமப்பதாய்த் தெரியவில்லை,
ஒரு குழந்தையின்
மெய்த்தீண்டலில்
இடிந்த சுவரின் இடுக்கில்
துளிர்க்கும் தளிராய்
வாழ்வின் ஆதி வேட்கை
முதுமையிலும் துளிர்க்கிறது.
ஒரு குழந்தையின்
காலனிடமிருந்து
மரணத்தைப் பறித்துக் கொண்டு
பூத்ததாய்ப் பூக்கும்
புன்னகையில்
பூரிக்கும் முதுமை
கனவாய்க் கடந்து போன தன்
குழந்தைமையின் சாத்திய
பழைய கதவுகளை
ஒரு கணம் திறக்கிறது.
கொண்டாடக்
குழந்தைகளோடில்லாத
முதுமைக்கும்
கொலைப் போரில்
குண்டுகள் தாக்கி
குழந்தைகள் மடிந்து
வெறிச்சோடிய நகரத்தின்
சிதைவுக்கும்
ஒன்றும் வித்தியாசமில்லை.
(2)
நட்ட நடுகற்களாய்ப் பழைய நினைவுகள்
முதுமையில் நிலைகுத்துகின்றன.
தெரிந்தவர்களாய் இருக்கிறவர்கள்
காலப் பயணத்தின் ஒரு திருப்பத்தில் சட்டென்று
இருக்கிறவர்களாய் இனியில்லையெனும் போது
வெற்றிடங்கள் நிரப்ப முடியாதவையாகின்றன.
ஒரு வெற்றிடம் உனக்கும் காத்திருக்கிறதென்று
எனக்கு அவை நினைவுபடுத்துகின்றன.
ஏன் உடலுடன் இவ்வளவு காலம்
இப்படி உடலேயாகிப் பழகி
உடலாகினேன் என்று தோன்றுகிறது.
எக் கணமும் தூக்கிக் கொண்டு திரிந்தது
அதைத் தான்.
அதற்கு சட்டை போட்டு கழற்றுவது போல்
தானும் உயிருக்கு ஒரு சட்டையென்றே,
ஆதியிலிருந்தே அது
அரற்றிக் கொண்டேதான் இருந்தது.
செவிட்டு மனம்
செவிமடுத்திருந்தால்தானே.
உடல் மொழி புரிகிறது
இப்போது எனக்கு.
எவ்வளவு அது உண்மையானதென்று
உணரும் போது
அதற்கு நன்றியுடையவனாகிறேன்.
(3)
கலைத்துப் போட்டிருக்கும்
அறையெல்லாம்
விளையாட்டு சாமான்களை
குழந்தை.
தாத்தா, தன் சிதறுண்ட
பால்ய நினைவுகளைப்
பொறுக்கியெடுத்து வைப்பது போல்
அவற்றைப்
பொறுக்கியெடுத்து வைக்கிறார்.
தினம் தினம்
குழந்தை கலைத்துப் போடும்
விளையாட்டு சாமான்களை
முன்பு பொறுக்கிய பால்ய நினைவுகள்
திரும்பச் சிதறுண்டு போக
திரும்பப் பொறுக்கியெடுப்பது போல்
தினம் தினம்
பொறுக்கியெடுத்து வைக்கிறார்.
தானே குழந்தையின்
விளையாட்டு சாமானாகி விடவும்
விரும்புகிறார்.
தன் பால்யத்திற்கு திரும்பவும்
திரும்பும் தந்திரமாய்த்
தெரிகிறது அது
அவருக்கு.
குழந்தை கலைத்துப் போட்ட விளையாட்டு சாமான்கள்
கலைத்துப் போட்டபடியே கிடந்தன ஒரு நாள்-
(4)
வேடிக்கை பார்க்கத்
தெரிய வேண்டும்-
வயதாகிய உடல்
ஓடி விளையாட முடியாது.
ஓடி விளையாடிய காலங்களிலும்
ஓடி விளையாடியது உடல் மட்டுமல்ல.
உடலோடு ஓடி விளையாடியது மனமும்.
குழந்தைகள் ஓடி விளையாடும் போது
வேடிக்கை பார்ப்பதும்
உடல் ஓடி விளையாடாமலேயே
கூடு விட்டுக் கூடு பாய்ந்து மனம்
ஒடி விளையாடும் ஒரு விதமே.
குதித்தோடும் மனதிற்கு அப்போது
ஓடோடும் கால்களாகின்றன விழிகள்.
வேடிக்கை பார்க்கத் தெரிய வேண்டும்-
வேடிக்கை பார்க்க வேண்டும் தெரிய-
அநியாயமாய்
இளமை கைவிட்டுப் போன
முதுமையில்.
(5)
சின்னப் பையன்
படுவேகமாய்
சைக்கிள் விட்டுப்
பறந்து கடப்பது
பார்த்துப் பரவசிக்க-
சைக்கிளின் பின் சீட்டில்
ஒரு தாவு தாவி
உட்கார்ந்து,
ஒரு கணத்தில்
படுவேகமாய்
என்னைக் கைவிட்டுப் போன
பாழும் முதுமை
எப்படித் தான்
அதே கணத்தில்
அதே படுவேகத்தில்
திரும்பி வந்து
கூடியதோ
கைவிட்டுப் போய் அது
திரும்புவதற்குள்
இளமை மீண்டு
என்னுடலை
மீண்டும் அது
தழுவுவதற்குள் !
(6)
நான்:
ஒற்றைத் தென்னையே!
எப்படி நீ காலந் தள்ளுகிறாய்
இத் தனிமையில்?
ஒற்றைத் தென்னை:
என் மீது அமர்ந்து செல்லும் பறவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் பகலில்.
என் மீது மினுங்கும் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் இரவில்.
ஒற்றைத் தென்னை:
எப்படி நீ காலந் தள்ளுகிறாய்
இம் முதுமையில்?
நான்:
ஜன்னலண்டை தெரியும் உன்னையே
திருப்பித் திருப்பி எண்ணிக் கொண்டிருக்கிறேன்
பகலிலும், இரவிலும்.
(7)
அக்குவேறாய் ஆணிவேறாய்க்
கழன்ற கைவண்டி போல்
கலகலத்துப் போன உடலில்
எஞ்சிய வாழ்வை
ஊடுபாவாய் நெய்யும்
உயிர் மூச்சு விட்டு
காகங்கள் மட்டுமே
விசாரித்துச் செல்லும்
தனிமை சூழ –
கட்டிலில்
நெடுநாட் கிடக்கும்
எதிர்வீட்டுக் கிழவரை
தினம் தினம் கண்டு
தூர விசாரிக்கும்
என் விழிகளுக்கு-
தன்னைத் தொட தன் அனுமதிக்கு
தூர மரணம் காத்திருக்க
கடந்து போன குருச்சேத்திர
வாழ்வின் நினைவுகளின்
அம்புப் படுக்கையில்
சயனிக்கும் ஒரு பிதாமகராய்க்*
கிழவர் ஒரு நாள் தோன்ற-
எண்ணி ஐம்பத்தெட்டு நாட்களில்
ஒரு வேளை கிழவர்
’சொர்க்க இரதம்’
ஏறிச் செல்வாரோயென்று
ஏனோ இரக்கமில்லாமல்
எண்ணும் என்
திரிபு மனம்.
*குறிப்பு: மகாபாரதத்தில் போர்க்களத்தில் வீழ்ந்த பீஷ்மர் அம்புப் படுக்கையில் தேகத்தை விட்டுப் பிரிய தகுந்த காலம் குறித்து உத்தராயணம் வரையில் ஐம்பத்தெட்டு நாட்கள் காத்திருந்து உயிர் நீத்தார்.
(8)
ஆச்சரியப்படுவதை
தக்கவைத்துக் கொள்ளும் வரையில்
வயதாகினும் இன்னும் நான்
முதுமையடையவில்லையென்றே
உணர்கிறேன்.
ஆச்சரியப்பட எவ்வளவோ
வைத்திருக்கிறது உலகம்.
எத்தனை காலமாய்
நின்ற இடத்திலேயே
முடிவில்லாது ஆச்சரியப்படுகிறது
முதுமை தெரியாது மரம்.
ஆச்சரியப்பட முடியாத போது
சம்மதித்து விடுகிறேன் நான்
வயதாகியதாலே முதுமையாகியதாய்
முன்னமேயே இறந்து போக-
உடலளவில்லாமல்-
உடல்
உடலாய் மூத்து
பிறகு
இறந்து போவது
அதன்
காலநியதி.