மார்க் தெரு கொலைகள் – 1

This entry is part 1 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

The Murders in the Rue Morgue – ஆசிரியர்: எட்கர் ஆலன் போ

பகுத்தாயும் திறன் (analytical ability) இருக்குமிடமும், அதன் அங்கம் பற்றியும் அத்தனைத் தெளிவாக அறிய முடியாவிடினும், மண்டை ஓடு மற்றும் மூளைத் திறன் அறிவியல் (Phrenological Science) எடுத்து வைக்கும் சில அடிகள், இருத்தலியலை நம்பச் செய்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. இந்த பகுப்பாய்வுத் திறனை விளக்க முடியலாம், சிந்தனைகளின் அங்கமென வரையறை செய்வது கடினம்; முந்தைய மெய்யியலாளர்கள் சொன்ன இலட்சியத்தின் முக்கிய அங்கமாக இதைக் கொள்ளாவிடினும், இது இயல்பில் அமைந்துள்ள பழைய திறன் எனச் சொல்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. மிதமிஞ்சிய ஆணவம் சொல்லும் பிடித்தமில்லா கட்டளையின் எதிரீடாகவே இதைச் சொல்கிறேன். காரணகாரியமும், ஒப்பீடும், கற்பனைகளும் ஒன்றுக்கொன்று பிரிவினை கொண்டதல்ல. கண்டுபிடிப்புகளும், படைப்புத் திறனும், தீர்வினை ஒத்துத்தான் அமைகின்றன- முன்னது நெருக்கமாகவும், பின்னது சற்று விலகி வேறு வகையிலுமாக.

பகுப்பாய்வாளரின் மனத் திறன், சில, எளிதில் பாதிப்படையக்கூடிய பகுப்பாய்விற்கும் உட்படும் என்பதை சந்தேகிக்கத் தேவையில்லை. அதன் விளைவுகளை நாம் கொண்டாடுகிறோம். அளவிற்குட்படாத வகையில் அதைப் பெற்றுள்ளவர்கள் அதை நற்பேறு எனப் போற்றுவதையும் நாம் அறிந்துள்ளோம். பலசாலி ஒருவர் தன் உடல்பலத்தைக் காட்டி மகிழ்வது போல, விஷயங்களை ஆராயும் மனிதர், தன், மன ஆற்றலில் மகிழ்வுறுகிறார். மிகச் சாதாரண விஷயங்களிலும் கூட தன் திறனைக் காட்டி மகிழ்வுறும் இயல்பினர் இவர்கள். புதிர்கள் இவர்களுக்கு இனிப்பைப் போன்றது. பழங்கால எகிப்திய சித்திர எழுத்துக்களைப் படிப்பது போன்ற, நாம் வியக்கும் (Hieroglyphics) பலவற்றை, அச்சந்தரும் வண்ணம், இயற்கைக்கு அப்பாற்பட்ட (Praeternatural) ஒன்றாக நிகழ்த்திக் காட்டுவதில் சமர்த்தர்கள் இவர்கள். வழிமுறைகளுக்கும் அப்பால், உள்ளுணர்வு (Intuition) இதில் உண்மையில் இடம் பெறுகிறது. ஆம், கணித முறைகளால் பலப்படுத்தப்பட்டுள்ள ஒன்றுதான். ஆயினும், பகுத்தாய்தல் என்பதற்கு மிகவும் உயரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கிடுதலும், பகுப்பாய்வும் ஒன்றா?

கவனித்தல், கவனக் குறைவு இவைகளுக்கிடையே பல வெற்றி தோல்விகள் ஊசலாடுகின்றன. சதுரங்க விளையாட்டையும், செக்கர்ஸ் (Checkerss/ Draughts) விளையாட்டையும் கவனியுங்கள். ஆடம்பரமற்ற விளையாட்டான செக்கர்சில், காணப்படும் அறிவின் பிரதிபலிப்பை, சதுரங்கத்தில், மன அறிவு மேம்பாடு என்று போற்றப்படும் அந்த அற்பத்தனத்தில், காண முடிவதில்லை அல்லவா? சதுரங்கத்தில் இடம் பெறும் சிப்பாய்கள், குதிரைகள், யானைகள், ராணி என்ற பலருக்கும் இருக்கும் வினோதமான சக்திகளும், அவற்றின் இயக்கங்களும் வெளித் தோற்றத்தில் வியக்க வைக்கின்றன. இல்லையில்லை, நான் எந்த விளையாட்டையும் பற்றி இந்தக் கட்டுரையை எழுதவில்லை. கவனக்குறைவு, அல்லது சிதறல் சதுரங்க விளையாட்டில் தோல்வியைக் கொண்டு வரும் சாத்தியங்கள் அதிகம்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்தி கொண்டு ஒவ்வொரு வகையில் இடம் பெயரலாம் என்பது இந்த சதுரங்கத்தில் விதியும், வினையும் ஆகும். ஒரு சிறு இடறல் மோசமான விளைவுகளைக் கொண்டு வரும். அதில் மிக்க தேர்ச்சி பெற்றவரைக் காட்டிலும், மிகுந்த கவனம் கொண்டவர் பெரும்பாலும் வெற்றியடைகிறார். ஆனால், செக்கர்சில் /ட்ராப்டில் இப்போது நான்கு அரசர்கள் மட்டும் தான் எஞ்சியிருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். விளையாடுபவர்கள் அனைவரும் சமமாக இருக்கிறார்கள் என்றும் அனுமானிப்போம். இங்கேதான் ஆய்வின் தேவை நேர்கிறது. எதிராளியின் இடத்தில், தன்னைப் பொருத்தும் மனக் கணக்குகள் நடைபெறும். ஒரு பார்வையில் அறிந்து கொள்வார். இங்கே அறிவின் ஆய்வுத் திறனிற்கு முக்கியம் ஏற்படுகிறது. மிகவும் எளிதான வழிகளின் மூலம் கூட அவரால் எதிராளியைத் தவறு செய்யத் தூண்ட முடியும்.  பலிகடா ஆக்க முடியும்.

சீட்டாட்டத்தில், கணக்கிடும் திறனின் பாதிப்பு அதே நேரத்தில் கவனத்திற்கு உள்ளாகி வந்திருக்கிறது. மிகப்பெரும் அறிவாளிகள் இதில் அளவு கடந்த இன்பம் காண்கிறார்கள். சதுரங்கத்தை அற்பமெனவும் கருதுவார்கள். பகுப்பாய்தல் கோரும் அதிகமான ஒன்றிற்குச் சமமாக மற்றொன்றைச் சொல்ல முடியாது. திறமை என்பதுதான் என்ன? ஒரு சதுரங்க வீரர் மற்றொரு சதுரங்க வீரரை விட சிறப்பாக விளையாடலாம், ஆனால், சீட்டாட்டத்தில்  இருக்கும் மேதமை, மூளையும், மூளையும் எதிரெதிரே நிற்கையில், முக்கியச் செயல்பாடுகளில், வெற்றி அடைவது எனச் சொல்லலாமா? திறமை என்பது எந்த அர்த்தத்தில் கையாளப்படுகிறதென்றால், உள்ளீடுகளை அறிதல், சட்ட அல்லது நெறிமுறைகளைப் பின்பற்றுதல், போன்றவற்றைத் தன்னுள் கொண்ட ஒன்றாக. பலவகை வடிவங்கள், பல்வகைக் கூற்றுக்களின் இடைவெளியில், எளிதாக அணுகவியலாததாக சாதாரணப் புரிதல்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இருப்பதைக் கண்டு கொள்ளும் ஒன்றாக.

கூர்மையாகக் கவனித்தல் என்பது நினைவில் நிலை நிறுத்தும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். கவனமுள்ள சதுரங்க வீரர் இதில் தேறிவிடுவார். ‘ஹோயல்’ (Hoyle) விளையாட்டு விதி முறைகள் சொல்வதும் அதுதானே? ஆனாலும், ஒரு நிகழ்வு, விதி எல்லைகளின் வரம்பை மீறும் சூழ் நிலைகளில் பகுப்பாய்பவர் உருவாகிறார். அமைதியாக, இயக்கங்களை கவனித்து, அதை உள்வாங்குகிறார். அவரது எதிர் விளையாட்டாளரும் அதைச் செய்வார். ஆனால், எதைக் கவனிக்கிறோம் என்பதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. தனக்குள் அவர் அடங்குவதில்லை;  விளையாட்டுத்தான் குறி; விளையாட்டைத் தாண்டியும் அவர் கவனம் செல்கிறது.  (கதை சொல்லி சொல்ல வருவது சாத்தியக்கூறுகளற்ற விதங்களில் சிக்கலைத் தீர்ப்பது என்பதைப் பற்றியது.)

சக விளையாட்டாளரின் முக பாவம் இதில் முக்கியமாகிறது. அவர்களின் கைகளில் உள்ள சீட்டுக்களின் வகையை நோட்டத்தில் வைக்கிறார். துருப்புச் சீட்டுக்களின் மீது சக விளையாட்டாளர்கள் என்ன பார்வையிடுகிறார்கள் என கவனிக்கிறார். விளையாட்டு நடக்க நடக்க அவர்களின், நிச்சயமான, வியப்பான, வருத்தமான, பாவங்களைப் படித்துக் கொண்டே வருகிறார். சீட்டுக்கள் மேஜையில் போடப்படும் விதத்திலிருந்தே அவரால் தீர்மானம் செய்ய முடிகிறது. எதைக் கவனிக்க வேண்டுமோ அதைக் கவனிப்பதி்ல் தான் இரகசியம் அடங்கியுள்ளது. மிக இயல்பாக தன்னை மீறி வரும் ஒரு சொல், தவறி கீழே போடப்படும் சீட்டு, அல்லது அதை வெளிப்புறமாகப் பிடித்து, அவசர அவசரமாக அதை மறைத்தல், அந்தப் பதட்டம், அவர் தேர்ந்தெடுக்கும் சீட்டு, அனைத்துமே நம்மவருக்கு தட்டில் கொடுக்கப்பட்ட அல்வாத் துண்டு. அனைத்தும் உள்ளுணர்வால் உள் வாங்கப்பட்டது. முதல் இரண்டு மூன்று சுற்றுக்கள் முடிந்தவுடனேயே, அவர் மிகத் தீர்மானமாக அனைத்தையும் கவனித்தவராக, தன் வெற்றியை நிலை நாட்டி விடுகிறார்.

புத்திசாலித்தனமும், பகுப்பாய்வும் ஒன்றுதானா? பகுப்பாய்வாளர் அறிவாளி; பெரும்பாலும், அறிவாளிகள் பகுத்தறிவதில் பின் தங்கித்தானிருக்கின்றனர். சிந்தனையின் கூறுகளை புரிந்து கொள்ளுதல் -இவ்விரண்டின் வேறுபாட்டைக் காண்பிப்பதற்காகச் சொல்கிறேன். ஆக்கபூர்வமான சக்தியால் வெளிப்படும் அறிவினை, தலையோட்டு ஆய்வாளர்கள், அந்த அங்கத்தோடு சம்பந்தப்படுத்தி விட்டார்கள். அது பழமையான ஒன்று என்றும் சொல்லிவிட்டார்கள். இதை நாம் சில அறிவுஜீவிகளிடத்தில் (முட்டாள்தனத்தின் எல்லையில்) காண்பது, ஒழுக்க விதிகளைப் பேசும் எழுத்தாளரிடத்தில் இடம் பெறுவது என்றும் எடுக்கலாமோ? ஆடம்பரத்திற்கும், கற்பனைகளுக்கும் இடையே உள்ள மாறுபாட்டை விட புத்திசாலித்தனத்திற்கும், பகுப்பாய்வுத் திறனிற்கும் இருக்கும் இடைவெளி மிகப் பெரிதான ஒன்று. ஆனால், குணம் என்னவோ பகுத்து உணரும் திறன்.  அறிவாளிகள் பளபளப்பாகத் தெரிய, பகுப்பாய்வாளர்கள் உண்மையில் சிறந்த கற்பனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த முன்மொழிவு பின்னர் வரும் இந்தக் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது.

18—வசந்தத்தில், கோடையின் ஒரு பகுதியில் பாரிசில் அகஸ்த் சி டூபானுடன் (Monsieur C.Auguste Dupin) எனக்கொரு ஆத்ம நெருக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் புகழ் பெற்ற குடும்ப வரலாறு கொண்டவர். சில நிகழ்வுகள், அவரைப் பலவீனமாக்கின. தன் சொத்துக்களைத் திரும்பப் பெற அவர் முயலவில்லை. அவரது கடனாளிகள் கருணையுடன் அவருக்கு மீதம் வைத்திருந்த சில சிறிய சொத்துக்கள் தந்த வருமானத்தைக்  கொண்டு, மிதமிஞ்சிய ஆசைகளில்லாமல், தன் வாழ்க்கையை அவர் நடத்தி வந்தார். அவரது ஆடம்பரம் என்பது புத்தகங்கள் மட்டுமே, அவை பாரிசில் எளிதில் கிடைத்தன.

அவரை, முதலில் ரூ மான்ட்டில் (தெருவின் பெயர்- Rue Montmartre) ஒரு பழைய நூலகத்தில் ஒரு அரிய புத்தகத்தை நாங்கள் இருவரும் ஒரே நேரம் தேடியபோது சந்தித்தேன்; அந்த் நூல் தொகுதி எங்களை நெருக்கமாக்கியது. நாங்கள் மீள மீளச் சந்தித்தோம். ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் தன் சுய சரிதையைச் சொல்லும் போது சொல்லும் நேர்மைத் தொனியில் அவர் தன் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னார். அவர் சிறந்த படிப்பாளியாக இருந்தது எனக்கு வியப்பினைத் தந்தது. அவரது பரந்து பட்ட படிப்பு என்னை ஆட்கொண்டததையும் மீறி, அவரது தெளிவான, புதிதான கற்பனைகள் என்னை வசீகரித்தன. பாரிசில் நான் அப்போது விரும்பிய பொருட்களை விட, இத்தகைய ஒரு மனிதர் எனக்கு நல் வரமாகத் தெரிந்தார். அதை நான் அவரிடம் தெரிவித்தும் விட்டேன். நீண்ட ஆலோசனைக்குப் பின் புறநகர் ஜெர்மன் தெருவில், (Faubourg St. Germain) பாழடைந்த, கோரமான, மூட நம்பிக்கைகளால் எவரும் குடிபுகாத, விழுந்து விடக்கூடும் என்ற நிலையிலிருந்த ஒரு வீட்டை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். அவரை விட என் பொருளாதார நிலை சற்று மேம்பட்டிருந்ததால், அதன் வாடகையையும், அதன் அறைகலன் செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டேன். எங்கள் இருவரின் இருள் சூழ்ந்த மன நிலைக்கு ஏற்ற ஒன்றுதான் அந்த வீடு.

எங்கள் இருவரின் தினசரி நடவடிக்கைகளைப் பார்ப்போர், இடஞ்சல் செய்யாத பைத்தியங்கள் என்றே நினைத்திருப்பார்கள். இந்த இருப்பிடமே, என் பழைய நண்பர்கள் உள்ளிட்ட யாருக்குமே தெரியாத ஒன்று. டூபானையே பாரிசில் யாரும் நினைவில் கொள்ளவில்லை. நாங்கள் எங்களுக்குள் தனித்திருந்தோம்.

என் நண்பருக்கு இரவின் மீது மோகம் அதிகம். இருளுக்காக இருளை விரும்பும் அந்த மனிதருக்காக, அவரது ஆசைக்காக, நாங்கள், பகலில் வராத அந்த தேவதைக்காக, அவளை போலியாக உருவாக்கினோம். நாளின் காலைப் பொழுதில் அந்த வசிப்பிடத்தின் மாபெரும் கதவுகளை, ஜன்னல்களை மூடி விடுவோம். கசியும் ஒளி. இதன் உதவியுடன், கனவுகளில் ஆழ்ந்தோம், எழுதினோம், படித்தோம் உண்மையான இரவு எழும் வரையில். தெருத் தெருவாக கைகளைப் பிணைத்துக் கொண்டு நடந்தோம், அன்றைய தினத்தில் பேசியவற்றைத் தொடர்ந்தோம், வெறுமே அலையவும் செய்தோம் அந்த நகரம் சிந்தும் பளீர் வெளிச்சங்களுக்கிடையே, நிழல்களுக்கிடையே, ஆழ்ந்த கவனம் கொண்டு வரும், மனப் புத்துணர்ச்சியை அனுபவித்தோம்.

சில நேரங்களில் என் நண்பரின் செழுமையான இலட்சியங்களை நான் அறிந்திருந்தாலும், அதைப் பற்றி வியந்து பாராட்டிப் பேசுவேன். அவரிடம் சிறந்த வினோதமான பகுப்பாய்வுத் திறம் இருந்தது. அந்தச் செயலில் அவருக்கு மகிழ்ச்சி இருந்தது, அதை வெளிப்படுத்த அவ்வளவு ஆர்வம் காட்டியதில்லை. சிறிய நகைப்பொலியுடன் அவர் சொன்னார்: பலமனிதர்கள் தங்கள் மார்பில் ஜன்னல்களை வைத்திருக்கிறார்கள்; திடுக்கிடும் நிரூபணத்துடன் எதிர் கொள்ளத் தயங்குகிறார்கள். தெளிவற்றும், குளிர்ச்சியாகவும் இருந்த அவரது இந்தச் சொல்லாடல்.. அதை என்னவென்று சொல்ல? கண்களில் பாவமில்லை; அடர்ந்த அவரது குரல் மும்மடங்காகியது; வேண்டுமென்றெ தனித்துக் கேட்கும் வகையில் இருந்த உச்சரிப்பு, கோபமான ஒரு சொல்லாடல் போலத் தோன்றியிருக்கலாம் கேட்பவர் எவருக்கேனும். நான் இரு-பகுதி ஆத்மனை இந்த மாதிரி நேரங்களில் தியானித்து, இரு நபரை சிந்திப்பேன்; படைப்பூக்கம் கொண்டுள்ள டூபான், தீர்மானம் செய்யும் டூபான்.

நான் மர்மத்தையோ, காதலையோ பற்றியெல்லாம் இங்கே சொல்லவில்லை. அவரது தூண்டப்பட்ட அறிவு, ஒருக்கால் அது நோயுற்றதோ என்னவோ … நான் நினைத்துக் கொள்வேன். என்ன நடந்தது எனச் சொல்கிறேன் கேளுங்கள்.

(வளரும்)

Series Navigationமார்க் தெரு கொலைகள் -2 >>

2 Replies to “மார்க் தெரு கொலைகள் – 1”

Leave a Reply to Selvam kumarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.