மார்க் தெரு கொலைகள்- பகுதி 4

This entry is part 4 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

தமிழாக்கம்: பானுமதி.ந

நான் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டேன், என்னுணர்வில்லாமலும், கேட்டதை நம்பாமலும். ஆனால், டூபான் தனக்குத்தானே பேசுபவர் போல, என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது புலனாகாத பண்புகளைப் பற்றித்தான் நான் முன்னரே உங்களிடம் சொல்லியிருந்தேனே? அவர் குரல் உரத்து ஒலிக்கவில்லை; அந்த ஒலிப்பு இருக்கிறதே, அது தொலைவில் உள்ளவரிடம் பேசுவதைப் போல இருந்தது. பாவமற்ற கண்களுடன் அவர் சுவரைப் பார்த்துப் பேசினார். 

“அந்தக் குரல்கள், அதுதான் கொலைகள் நடந்த வீட்டில் கேட்ட குரல்கள், அவை அந்தப் பெண்களுடையவை அல்ல என்று அனைத்து சாட்சிகளும் சொல்லியிருக்கிறார்கள். இது நமது ஒரு ஐயத்தை நிவர்த்தி செய்கிறது- அதாவது, அந்த மூதாட்டி, தன் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை. நான் இதைக் குறிப்பாகச் சொல்வதே வழிமுறையின் பொருட்டுத்தான். மேடம் எஸ்பன்யேவினால், தன் மகளது சடலத்தை புகை போக்கியில் நுழைத்திருக்க முடியுமா என்ன? அந்த மூதாட்டியின் உடலிலிருந்த காயங்கள் நிச்சயமாகத் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ள முடியாதது என்பதும், அக்காயங்களின் தன்மையால் புலனாகிறது இல்லையா? அப்படியெனில், கொலைகளை யாரோ மூன்றாம் மனிதன் செய்திருக்கிறான். இந்த மூன்றாம் நபரின் குரல் தான் முக்கியமான சர்ச்சைக்கும் இட்டுச் செல்கிறது. அந்தக் குரல்களுக்கு, அதாவது அதன் மொத்த நிகழ்விற்கும் செல்லாமல், அந்தச் சாட்சியங்களில் எது விசித்திரமாக இருந்தது என்பதில் தான் என் கவனம். உங்களுக்கு இதில் விசித்திரம் ஏதும் தென்பட்டதா? 

நான் சொன்னேன், அனைத்துச் சாட்சிகளும் அந்த முரட்டுக் குரல் ஒரு பிரெஞ்சுக்காரரது என்பதில் ஒத்துப் போகின்றனர். ஆனால், அந்தக் ‘க்றீச்’ குரல்- அதைப் பற்றி பலவித வர்ணனைகள்- ஒருவர் அது கடுமையான குரல் என்றும் சொன்னார். 

‘அதுதான் சாட்சியம்; என்ற டூபான், ஆனால், அது சாட்சியத்தின் விசித்திரமில்லை, நீங்கள் குறிப்பான, தனித்துத் தெரியும் ஒன்றை கவனிக்கவில்லை. காரணங்கள், சாதாரணத் தளத்திலிருந்து மேம்பட்டு முக்கியங்களைக் காட்டும் என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளவேயில்லை. இருந்தும், சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். முரட்டுக் குரலில் ஒத்த கருத்தினைச் சொன்ன சாட்சியங்கள் அந்த’ க்றீச்’ குரலைப் பற்றி சொன்னவை-அவர்கள் ஒத்துப் போகாமலில்லை-ஆயின், அதிலுள்ள விசித்திர வர்ணனைகளை எண்ணிப் பாருங்கள்- இத்தாலியர், ஆங்கிலேயர், ஸ்பானியர், ஒல்லாந்தர் அனைவருமே, அது ஒரு அயல் தேசத்தவரின் குரல் என்று சொன்னார்களல்லவா? 

ஒவ்வொருவரும், அந்தக் குரல் தங்கள் தேசத்தைச் சேர்ந்தவரின் குரலல்ல என்பதில் ஒத்துப் போனார்கள். அதிலும், அந்தக் குரலின் மொழி எந்த நாட்டு மனிதரின் மொழி என அவர்கள் நினைத்தார்களோ அந்த மொழியை இவர்கள் அறிந்திருக்கவில்லை! ப்ரெஞ்சுக்காரர் அது ஸ்பானியரின் மொழி என்றார்; மேலும், சில வார்த்தைகளையாவது பிரித்தறிந்திருப்பேன் எனக்கு ஸ்பானிஷ் தெரிந்திருந்தால் என்று விளக்கம் வேறு சொல்கிறார்! டச்சுக்காரர் அது ப்ரெஞ்சுக்காரரின் குரல் என்றே சொல்கிறார்- ஆனால், இவருக்கு ப்ரெஞ்ச் தெரியாததால், இவர் சொல்வதை ஒருவர் மொழிபெயர்த்து சொல்ல வேண்டி வந்தது. ‘எனக்கு ஜெர்மன் மொழி தெரியாது; அது ஜெர்மானியரின் குரல் என்று நினைக்கிறேன்’ என்கிறார் ஆங்கிலேயர். அது ஆங்கிலேயரின் குரல் தான் என்பது எனக்கு உறுதியாக இருக்கிறது, நான் ஆங்கிலம் அறிந்தவனில்லை, ஆனால், நான் உச்சரிப்பை வைத்துத்தான் இந்த முடிவிற்கு வந்தேன் எனச் சொல்கிறார் ஒரு ஸ்பானியர். இத்தாலி தேசத்தவர், ‘அந்தக் குரல் ரஷ்யரின் குரல், ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவருடனும் நான் பேசியதில்லை.’ இரண்டாம் ப்ரெஞ்ச் நாட்டவர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘அது இடாலியரின் குரல்; ஆனால், அந்த மொழி எனக்குத் தெரியாது; உச்சரிப்பைக் கொண்டு அது இத்தாலியைச் சேர்ந்தவருடையது எனச் சொல்கிறேன்.’ 

‘அப்படி எப்படி ஒரு புதிரான குரல் அது? எத்தனை வகை வாக்குமூலங்கள் அந்தக் குரலைப் பற்றி? யூரோப்பின் ஐந்து பெரும் நிலப்பரப்புகளைச் சேர்ந்தவர்களால் அதை அறிய முடியவில்லையே? அது அவர்களுக்குப் பரிச்சயமான ஒன்றாக இல்லையே? 

நீங்கள் சொல்லலாம்- அது ஆசியர் அல்லது ஆப்பிரிக்கரின் குரலாக இருக்கலாம் என்று. ஆசியர்களோ, ஆப்பிரிக்கர்களோ பாரிசில் அதிகமாக இல்லை. இது ஒரு புறமிருக்கட்டும்; இந்த நம் உரையாடலுக்குத் தொடர்புள்ள மூன்று செய்திகளுக்கு உங்கள் கவனத்தைக் கோருகிறேன். ஒரு சாட்சி சொல்லியிருக்கிறார் ‘அந்தக் குரலை ‘க்றீச்’ என்பதை விட ‘கடுமை’ என விவரிப்பது பொருத்தம்’ என்று. மற்ற இருவர் ‘அது விரைவாகவும், சமமற்றும்’ இருந்தது எனச் சொல்லியிருக்கிறார்கள். சொற்களோ, அல்லது சொற்களை ஒத்த ஒலியோ, தனித்து அறியக் கிடைத்ததாக எந்த சாட்சிகளும் சொல்லவில்லை. 

‘நீங்கள் இந்த விஷயத்தில் என்ன புரிந்து வைத்துள்ளீர்களோ, அதன் மீது என்னுடைய தாக்கம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு தயக்கம் ஒன்றுமில்லை- இந்த சாட்சியங்களைக் கொண்டு- அதுதான் அந்தக் கடுமையான, மற்றும் ‘க்றீச்’ குரல்களைப் பற்றிய விவரங்களை வைத்தே நாம் ஒரு நியாயமான சந்தேகத்திற்கு வரலாம். அது குழப்பலாம்- தீர்வை நோக்கி நம்மை நகர்த்தலாம். நான் சொன்னேனல்லவா- நியாயமான அனுமானங்கள் என்று. ஆனால், அது கூட நான் நினைக்கும் அர்த்தத்தில் முழுமையாக வெளிப்படவில்லை. அந்த அனுமானங்கள் தான் முழுமையான ஒன்று என்பது உள்ளீடு; அந்த ஐயங்கள், ஒற்றை முடிவாக அதிலிருந்து கிளைத்தவை. நான் இன்னமும் சந்தேகம் என்னவென்று சொல்லவில்லை. அந்த அறையில் நான் விசாரித்தவற்றைக் கொண்டு, ஒரு போக்கினைக் கட்டமைத்து வடிவம் கொண்டு வரும் என் முயற்சி இது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

நாம் மீண்டும் மனதளவில் அந்த அறைக்குச் செல்வோம். நாம் முதலில் அங்கே காண வேண்டியதென்ன? கொலையாளிகள் எந்த வழியில் வெளியேறியிருப்பார்கள்? நாமோ மாயாவிகளை நம்புபவர்களில்லை. எனவே, மூதாட்டியையும், அவரது மகளையும் பேய் ஏதும் கொன்றிருக்கமுடியாது. இந்த அராஜகம் செய்தவர்களுக்கு உடல்களும் உண்டு, அதை உபயோகித்து தப்பிக்கவும் செய்திருக்கிறார்கள். அப்படியானால், எப்படி தப்பித்தார்கள்? இதில் தான் காரணம் அடங்கியுள்ளது. இந்த ‘ரீசனிங்’ நம்மை ஒரு தீர்மானத்திற்குக் கொண்டு செல்கிறது. ஒவ்வொன்றாக, நாம் அவர்கள் தப்பிச் சென்ற வழிமுறைகளைப் பார்க்கலாம். மகளைப் பார்த்த அறையில் அந்தக் கொலையாளிகள் இருந்திருந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. குறைந்தபட்சம், அதை அடுத்த அறையில். இந்த இரண்டு அறைகளையும் கணக்கில் கொண்டு நாம் இந்த மர்மத்தை அணுக வேண்டும். தரைகள், மேற்கூரைகள், சுவர்களின் கட்டுமானம் இவற்றை இண்டு இடுக்கு விடாமல் காவல் துறை ஆய்ந்துள்ளது. இரகசியமான எதுவும் அவர்களின் விழிப்புணர்வில் தப்பவில்லை. ஆனால், நான் அவர்களின் கண்களை நம்பாமல் என் கண்களைக் கொண்டு பார்த்தேன். ஒரு இரகசியமும் அப்போது புலப்படவில்லை. நடைபாதைக்கு இட்டுச் செல்லும் இரு அறைகளின் கதவுகளும் பூட்டப்பட்டு, உள் தாழ்ப்பாள் இடப்பட்டிருந்தது. நாம் இப்போது புகை போக்கியைப் பார்ப்போம். கணப்படுப்பின் மேலே சுமார் எட்டு, பத்தடி தூரத்தில், சாதாரணமான அகலத்தில் அது இருந்தாலும், அதன் நீட்சி முழுமைக்கும், ஒரு பெரும் பூனையைக் கூட அடைக்க முடியாது. இவ்வளவு தெளிவாக இந்த விஷயம் இருப்பதால், நாம் ஜன்னல்களின் பக்கம் நம் கவனத்தை எடுத்துச் செல்வோம். முன் பகுதி சட்டகங்கள் வழியே தப்பித்திருக்க முடியாது- தெருவில் தான் அத்தனைக் கூட்டம் இருந்ததே? அதனால், கொலையாளிகள் பின் அறையின் சட்டகங்கள் வழியே வெளியேறியிருக்கக் கூடும். நாம் காரணங்களை, அவை ‘சாத்தியமற்றவை’ என்றாலும் கூட, ஆராயாமல் விடுபவர்களில்லை. ‘அது ஒன்றும் சாத்தியமற்றதல்ல’ என்பதை நாம் இப்போது நிரூபிக்க வேண்டும். 

“அந்த அறையில் இரு ஜன்னல்கள் இருக்கின்றன. ஒன்று எந்த அறைகலனாலும் தடுக்கப்படாமல், முழுமையாகக் காணக் கிடைத்தது. மற்றொன்றின் கீழ்ப்பகுதி, அந்த மாபெரும் கட்டிலின் தலைப் பகுதியால் மறைந்திருந்தது. அந்த முதல் ஜன்னல் உட்புறமாக நன்றாக மூடியிருந்தது. பலம் கொண்டு அதைத் தூக்கி உயர்த்த முயன்ற பலரால் அதைச் செய்ய முடியவில்லை. அதன் சட்டகத்தின் இடப்பக்கத்தில் பெரிய மரத்துளை செதுக்கப்பட்டு, வலுவான ஆணி தலைப்பகுதியின் அருகே பொருத்தப்பட்டிருந்தது. மற்றொரு ஜன்னலையும் பார்த்தால், இதைப் போன்றே ஆணி அறையப்பட்டிருந்தது. மேலும், கீழும் திறந்து மூடும் பலகணியை, தீவிர முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை. எனவே, இந்த வழிகளில் வெளியேறியிருக்க முடியாது என்று காவல் துறை நம்பியது. அந்த ஆணிகளைப் பிடுங்குவதும், ஜன்னல்களைத் திறப்பதும் அந்தக் கொலைகாரர்கள் செய்திருக்க முடியாது, அவ்வாறு நினைப்பதே மிகைப்படுத்துதல் என்று காவல் துறை சமாதானம் சொல்லி தன்னை மெச்சிக் கொண்டது.” 

“ஆனால், நான் சோதித்தது ஒரு விதத்தில் குறிப்பிடத் தகுந்தது- அது நான் முன்பு சொன்னேனே ‘நடக்க முடியாதவைகள் என நாம் அனுமானம் செய்வதெல்லாம், உண்மையில் அப்படியல்ல என்று நிரூபிக்க வேண்டும், அதுதான் பகுத்து ஆயும் வழி.” 

“நான் இவ்வாறு நினைக்கத் துவங்கினேன்- ஆம், அந்தக் கொலைகாரர்கள் இந்த ஜன்னல்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்திருக்க வேண்டும். அப்படியாக இருந்தால், அவர்களால் பலகணியை உள்ளிருந்தும்/ வெளியிலிருந்தும் எப்படி சாத்தியிருக்க முடியும்? காவல் துறையும் இப்படித்தான் நினைத்தது. ஆம், பலகணி மூடித்தான் இருந்தது. அப்படியெனில், அவைகள் தாமே மூடும் திறம் கொண்டவையாக இருக்க வேண்டுமல்லவா? இந்த முடிவு தான் சரி வரும். எந்த ஜன்னலை அணுகுவதற்கு, நான் முன்னரே சொன்னது போலத் தடைகள் இல்லையோ, அதை அணுகி, அந்த ஆணியை சிறிது சிரமங்களுக்குப் பிறகு பெயர்த்துவிட்டு, அந்தப் பலகணியைத் தூக்க முயன்றேன். நான் எதிர்பார்த்த மாதிரியே அது என் முயற்சிகளை எதிர்த்தது. இப்போது எனக்கு இந்த விஷயம் புரிபடலாயிறு- மறைவில் ஒரு திருகு சுருள்வில் இருக்க வேண்டும். இது நான் ஊகித்தவைகளுடன் ஒத்துப் போய், சரியான முறையில் தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்று உறுதிப்படுத்தியது. ஆயினும், அந்த ஆணி பொருந்தியிருந்த விதம்… அது மர்மமாகத்தானே இருக்கிறது? கவனமாக ஆராய்ந்ததில் மறைந்திருந்த சுருள் வில்லைக் கண்டு பிடித்தேன். நான் அதை அமுக்கிப் பார்த்தேன்- அது பலகணித் திறப்பை தடை செய்தது.” 

“நான் ஆணியை மறுபடியும் பொருத்தி அதைக் கவனத்துடன் பார்த்தேன்; ஜன்னல் வழியே சென்ற ஆசாமி, அதை மூடியிருக்க முடியும்- அந்த சுருள் வில் தான் இருக்கிறதே அது பலகணியை மூடியிருக்கும். ஆனால், ஆணி, அதை எப்படி அந்த நபர் மீண்டும் பொருத்தியிருப்பார்? அதனால் ஒன்று தெளிவானது- இந்த ஜன்னல் இல்லை, அந்த மற்றொன்றின் மூலம் தான் வெளியேறியிருக்க வேண்டும். அந்தப் பலகணிகளின் திருகு சுருள் விற்கள் ஒத்தவை எனக் கொள்ளலாம்- அப்படி ஒத்தவையாக அவை இருப்பது அதிக சாத்தியங்களுள்ளது. அப்ப்டியெனில், அந்த ஆணிகளிடையே வித்தியாசம் அல்லது குறைந்த பட்சம் அவை பொருத்தப்பட்ட விதங்களிலாவது மாறுபாடு இருக்க வேண்டும்.” 

“படுக்கையில்லாத அந்த கட்டிலில் ஏறி அந்த இரண்டாம் ஜன்னலின் தலைப் பகுதியை நுணுக்கமாக ஆராய்ந்தேன். தலையின் பின்பகுதியை தடவுகையில், நான் உடனே அந்த சுருள் வில்லை அறிந்தேன். அதை அமுக்கிப் பார்க்கும்போது, அது அந்த மற்றொரு ஜன்னலில் இருந்ததைப் போலவே இருந்தது. ஆணியைக் கவனித்தேன். அது அந்த மற்றொரு ஆணியைப் போலவே வலுவானது, பார்க்கையில் அதே விதத்தில் பொருத்தப்பட்டுள்ளதைப் போலத் தோன்றியது. தலை வரை அறைந்து பதிக்கப்பட்டிருந்தது.” 

“புதிர் எனக்குப் புரியாத நிலையில் நான் இருந்தேன் என நீங்கள் சொல்வீர்கள். அப்படிச் சொல்வீர்களானால், என் தூண்டுதல்களை நீங்கள் சரிவர அறியவில்லை. விளையாட்டில் ஒன்று சொல்வார்கள்- நான் ஒரு முறை கூட தவறிழைக்கவில்லை; அந்த வாசம் ஒரு வினாடி கூட அகலவில்லை! அந்த இரகசியம் எனக்குப் புலனானது- நான் வந்த முடிவு அந்த ஆணியைச் சார்ந்தது! அது என்னவோ அந்த மற்றொரு ஜன்னலின் ஆணியைப் போலத்தான் இருந்தது. அது முழுமையாக நிராகரிக்கப்படவேண்டிய கூற்று; தோற்றம் மட்டும் ஒன்றாக இருந்தாலும், செயல்பாடு? ஏதோ தவறிருக்கிறது இந்த ஆணியில் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். நான் அதைத் தொட்டேன், அதன் தலையைத் தடவினேன்; சங்கின் எட்டில் ஒரு பகுதி அங்குல அளவிலான தலை என் விரல்களில் இப்போது; மீதியோ அந்த மரத் துளையில், எங்கே ஒடிந்ததோ, அங்கே. அந்தப் பிளவு இருக்கிறதே அதன் ஓரங்கள் துருப்பிடித்து இருந்தன. அந்தப் பிளவே ஒரு சுத்தியல், அந்த ஆணியின் தலைப் பகுதியை, பலகணியின் கீழ்ப் பகுதியின் மேற்பகுதியில் அறைந்த போது ஏற்பட்டிருக்கலாம்; எப்படி அந்த ஆணியின் தலைப் பகுதியை எடுத்துப் பார்த்தேனோ, அதே முறையில், கவனமாக உட்செலுத்தினேன். அது முழு ஆணியின் வடிவுடன் கச்சிதமாகப் பொருந்தியது. சில அங்குலங்களுக்கு நான் பலகணியைத் திறந்தேன். தலை அதனுடன் மேலெழும்பியது, தன் படுகையில் உறுதியாக இருந்தது. நான் ஜன்னலை மூடினேன்.  ஆணி மீண்டும் சம நிலையை அடைந்தது.” 

“இந்தப் புதிர், இது வரை அவிழ்க்கப்பட்டு விட்டது. படுக்கையை நோக்கி இருந்த ஜன்னலின் வழியே அந்தக் கொலையாளிகள் தப்பித்திருக்கிறார்கள். அவர்கள் வெளியேறியவுடன், அந்தச் சுருள் வில்லை செயல்பட்டு பலகணி தானே மூடியிருக்கலாம் அல்லது அவர்களே கூட மூடியிருக்கலாம். இந்தச் சுருள் வில்லையின் செயல்பாட்டை, அதாவது அதன் தானியங்கும் முறையை, ஆணியின் இறுக்கம் என்று நினைத்து காவல் துறை இதைக் கோட்டைவிட்டுவிட்டது. ‘இனி இதிலென்ன விசாரணை?’ என்று கை விட்டு விட்டது.” 

“சரி, ஜன்னல் வழியே தப்பித்திருக்கலாம்; ஆனால், எப்படி இறங்கியிருப்பார்கள்? இந்தக் கேள்விக்குப் பதில், நான் உங்களுடன் இந்தக் கட்டிடத்தைச் சுற்றி நடந்தேனே அதிலிருக்கிறது. அந்த ஜன்னல் சட்டகத்திலிருந்து ஐந்தரை அடி தூரத்தில் ஒரு இடி தாங்கி நிற்கிறது. அதிலிருந்து இந்த ஜன்னலுக்கு வருவதே கடினம் என்றிருக்கையில் உள்ளே நுழைவதாவது? அந்த நான்காம் மாடியின் அடைப்புகள் ‘ஃபெராட்ஸ்’ (Ferrades) என்று பாரிஸ் தச்சர்கள் சொல்லும் வகையைச் சேர்ந்தது. இந்தக் காலத்தில் இதை அவ்வளவாகக் கட்டிடங்களில் பொருத்துவதில்லை. லியோன், (Lyons) (Bourdeaux) போன்ற பகுதிகளில் இருக்கும் பழைய பங்களாக்களில் இதை அதிகம் பார்க்கலாம். அவை ஒற்றைக் கதவுகள், ஆனால், மடிக்கும் விதத்தில் இருக்காது. சாதாரண அந்தக் கதவுகளில் கீழ்ப் பாதியில் பின்னல் வேலை இருக்கும் அல்லது குறுக்கு நெடுக்கான தட்டிப் பின்னல் இருக்கும்; கைகளால் பிடித்துக் கொள்ள வாகாக இருக்கும். இந்தக் கட்டிடத்தின் நாலாவது மாடியின் அடைப்புகள் மூன்றரை அடி அகலம் கொண்டவை. வீட்டின் பக்கவாட்டிலிருந்து நாம் பார்க்கையில் அவை பாதி திறந்திருந்தன; அதாவது, சுவற்றிலிருந்து செங்கோணத்தில். நானும், காவல் துறையும் இந்த வசிப்பிடத்தின் பின்பகுதியைப் பார்த்தோம். இந்த ‘ஃபெராட்ஸ்’ அடைப்புக்களின் அகலத்தை காவல் துறை கண்டு கொள்ளவேயில்லை. வெளியேறுவதின் சாத்தியங்கள் எங்கும் அவர்களுக்குப் புலப்படவில்லை என்பதால், இயல்பாகவே இந்த அடைப்பான்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. படுக்கையின் தலைப் பகுதியில் இருக்கும் ஜன்னலின் ஷட்டர்களை, அறையின் வெளிச் சுவரை நோக்கி முழுவதுமாகத் திறக்கும் போது, அது, இந்த இடி தாங்கிக்கு இரு அடி தொலைவிற்குள்ளாக வந்து விடும். நடைமுறையில் அதிகம் பழக்கமில்லா விதத்தில், பயங்கர துணிச்சலுடன், இந்த இடி தாங்கியிலிருந்து அந்த ஜன்னலுக்குத் கொலையாளி(கள்) தாவியிருக்க வேண்டும்.. நாம் அந்த ஷட்டர்கள் முழுதுமாகத் திறந்திருந்தன என்று கொள்வோம். அந்த இரண்டரை அடி தூரத்தைத் தாண்டிய திருடன், அந்த அடைப்புக்களின் கீழ்ப் பகுதியிலுள்ள பின்னல் வேலைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பான். அந்த இடி தாங்கியை இப்போது விட்டிருப்பான்; சுவரில் வலுவாகப் பாதம் பதித்திருப்பான்; தைர்யமாக உள்ளே குதித்திருப்பான். அந்த ஷட்டரைக் கூட மூடியிருக்கலாம்; நாம் ஜன்னல் திறந்திருப்பதாகக் கற்பனை செய்து பார்த்தால், அவன் நேரே அறைக்குள்ளேயே குதித்திருக்கக்கூடும்.” 

“ஆபத்தும், வழக்கமில்லா துணிச்சலும் நிரம்பிய இந்தச் செயலைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சாத்தியமானவை என்பதைத்தான் முதலாக நான் சொல்ல வருகிறேன்; இயற்கைக்கு அப்பாற்பட்ட இத்தகைய சாகசம், அந்த சுறுசுறுப்பு, ஆற்றல் இதிலுள்ளதைச் சொல்வது தான், அதை உங்களுக்குப் புரிய வைப்பதுதான் என் முழுமையான நோக்கம்.” 

“சந்தேகமில்லை, நீங்கள் சொல்லலாம், அனுமானங்களைப் பற்றி சட்டம் என்ன சொல்லியுள்ளது என்று; ஆம், முழு அனுமானங்களால் ஒரு புரிதலை ஏற்படுத்தாமல், அதைக் கட்டுப்படுத்தி வழக்கைக் கட்டமைக்க வேண்டும், சரிதானே? அது சட்டத்தின் செயல்முறையாக இருக்கலாம்; ஆனால், காரணத் தேடல்களில் அதற்கு என்ன மதிப்பு இருக்கிறது? எனக்குத் தேவை உண்மை.” 

அந்த விசித்திரமான ‘க்றீச்’ அல்லது கடுமையான கரடுமுரடுக் குரல், அந்தச் சமமற்ற குரல், எந்த நாட்டைச் சேர்ந்தவரது என்பதில் சாட்சிகள் ஒத்துப் போகாத குரல், அதன் ஒலிப்பிலிருந்து சொற்களை பிரித்தறிய முடியாத குரல், அதுனுடன், நான் உங்களிடம் தற்போது விவரித்த ‘வழக்கமற்ற செயல்பாட்டைப்’ பிணைப்பதுதான், அதை நோக்கி உங்கள் கவனத்தைக் கோருவதுதான் என் குறிக்கோள்.” 

‘நான் தெளிவற்றும், அவர் சொன்னதில் பாதி புரிந்தும் புரியாமலும் திகைத்திருந்தேன். புரிந்து கொள்ளும் விளிம்பில், ஆனால், புரிந்து கொள்ளும் சக்தியற்று..ஹும்.. நினைக்க முயற்சி செய்யும் மனிதன், அதன் விளிம்பில், முடிவில் அந்த நினைப்பை அடைய முடியாதது போல என வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால், என் நண்பர் தன் உபன்யாசத்தைத் தொடர்ந்தார்.’ 

“எப்படி வெளியேறிருப்பான் என்ற கேள்வியை, எப்படி உள்ளே வந்திருப்பான் என்று நான் மாற்றி அணுகியுள்ளேன். ஒரே மாதிரி, ஒரே சமயத்தில் உட்புகுதலும், வெளியேறுதலும் நடந்தன என்பதுதான் என் கருத்து. அந்த அறையின் உட்புறத்தை நாம் மனக் கண்ணால் பார்ப்போமா? என்ன தெரிகிறது? பீரோவின் இழுப்பறைகள் தாறுமாறாகக் கலைந்திருந்தன எனச் சொல்லப்பட்டது; ஆனால், ஆடை அணிகலன்கள் அந்த இழுப்பறைகளில் இருந்திருக்கின்றன. எவ்வளவு மோசமாக இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்? அது ஒரு கேவலமான ஊகம் மட்டுமே. அந்த இழுப்பறைகளில் இப்போது காணப்பட்ட பொருட்கள் தான் முன்னரும் அவற்றில் இருந்ததா? அது நமக்கு எப்படித் தெரியும்? மூதாட்டி எஸ்பன்யேவும், அவர் மகளும் நிம்மதியான ஓய்வு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். யாரோடும் நட்பு பாராட்டவில்லை; வெளியில் போகவே இல்லை; பழக்கங்களை அதிக அளவில் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவைகளும் அவர்களுக்கு இல்லை. அந்த இழுப்பறைகளின் பொருட்கள், இத்தகைய மகளிர் பயன்படுத்தும் தரமான சாமான்கள். ஒரு திருடன் அதில் இருந்ததை திருடியிருந்தால், ஏன் நல்லத் தரத்திலுள்ள பொருட்களை எடுத்துச் செல்லவில்லை? ஏன் மொத்தமாகக் கையாடவில்லை? 4000 ஃப்ரேங்க் தங்க நாணயங்களாக இருக்கையில் பொதியைச் சுமப்பது போல் அவன் ஏன் துணி மூட்டைகளை எடுத்துச் செல்ல நினைப்பான்? தங்கத்தை வேண்டாமென்பவனா அவன்? மிஸ்டர். ம்யூ, அந்த வங்கியாளர் சொன்ன மொத்தப் பணமும் பைகளில் தானே அங்கே தரையில் கிடந்தது? வீட்டில் கொண்டு வந்து தரப்பட்ட பணம், அந்தச் செய்தி, காவல் துறையினரின் மூளையில் அழுத்தமாகப் பதிந்துள்ள அவலத்தை நீங்கள் தயவு செய்து ஒரு முக்கியச் செய்தியாக எடுக்க வேண்டாம். இதைப் போன்ற பத்து மடங்கில் தற்செயல்கள், பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்த மூன்று நாட்களில் கொலையுண்டு போவதும், யாரும் கவனிக்காமலேயே ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒவ்வொரு மணி நேரமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்செயல்கள், சிலவற்றைக் காண முடியாமல் செய்து விடும்; அதுவும், எதையும் அறிந்து கொள்ளாமல் படிப்பவர்களுக்கு, எதைப் பற்றியும் அக்கறை இல்லாதவர்களுக்கு, ‘சாத்தியங்களைப் பற்றியே சிந்திக்காதவர்களுக்கு- என்ன ஒரு உன்னதமான கோட்பாடு ‘ப்ராபலிட்டீஸ்’- மிகப் பெருமை வாய்ந்த ஆய்வுகளுக்கு வழி செய்த அந்த அறிவியல், என்றென்றும் மனிதர்கள் அதற்குப் பட்டுள்ள நன்றிக்கடன், அதைப் பற்றியே அக்கறை இல்லாமல் துப்புத் துலக்குபவர்களைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டாம். இந்தக்கொலைகளில் அந்தத் தங்க நாணயங்கள் ஒருக்கால் களவு போயிருந்தால், மூன்று நாட்களுக்கு முன்னர் தான் வங்கியிலிருந்து அந்த மூதாட்டி அதை எடுத்து வந்தார் என்பதை, ஒரு தற்செயலிற்கும் மேலாக நாம் பார்க்கலாம். அந்தக் கொலைகளுக்கான முகாந்திரமாக அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தங்கம் களவு போகவில்லை; தன் முகாந்தரத்தையும், தங்கத்தையும் கைவிட்டுவிட்டு வெறுமனே ஒடிப் போகும் அசடனா அந்தத் திருடன்?” 

இந்தப் புள்ளிகளை இப்போது கோர்ப்போம்- விசித்திரமான குரல், இயல்பாகப் பார்க்க முடியாத அதீத வலு, திகைக்க வைக்கும் விதமாக கொலைகளுக்கான் முகாந்திரம் இல்லாதது, அதுவும், படு பயங்கரமான கொலைகள்! அந்தக் கொடூரத்தை மனதில் கொண்டு வருவோம்; இங்கே ஒரு பெண், மனித வலுவினால் கொலை செய்யப்பட்டு, புகைப் போக்கியில் தலைகீழாகச் சொருகப்பட்டு.. கொலை செய்பவர்கள் இப்படியெல்லாம் கொலை செய்வதில்லை. மேலும், சடலத்தை இப்படியா புகை போக்கியில் தாறுமாறாக, தலைகீழாக அடைப்பார்கள்? மிகவும் சீரழிந்த மனிதன் கூட இப்படிச் செயல்படமாட்டான்; நாம் மனித இயற்கையைப் பற்றி அறிந்துள்ளோம். இந்த அடாத செயலை ஒரு மனிதன் நிகழ்த்தியிருப்பானா? இதையும் சிந்தியுங்கள்- பலர் முயன்று போராடி சிரமப்பட்டு கீழிறக்கிய அந்த சடலம், சிறு துவாரத்தில் சொருக்கப்பட்டது என்றால் அதற்கு எத்தகைய பலம் வேண்டும்? அத்தகைய பலத்தைப் பற்றி இன்னும் பிரமாதமான விஷயங்களையும் சொல்கிறேன், கேளுங்கள். அந்த கணப்படுப்பில், அடர்ந்த, மிக அடர்ந்த முடிக்கற்றைகள், சாம்பல் வண்ணத்தவை, மனித முடிகள் இருந்தன அல்லவா? அது வேரிலிருந்து பிடுங்கப்பட்டது. இருவது, முப்பது முடிகளை வேரோடு பெயர்ப்பதற்கு அசாதாரண பலம் வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்.  நாமிருவருமே அந்த முடிக் கற்றைகளைப் பார்த்தோம். எத்தனை அருவெறுப்பான காட்சி?  உச்சந்தலையின் சதைத் துணுக்குகள்.ஹீம்.. எத்தனை கோரம்? மில்லியன் முடிக் கற்றைகளை புடுங்குவதற்குத் தேவையான அசுர பலம். அந்த மூதாட்டியின் தொண்டை சாதாரணமாக வெட்டப்படவில்லை, தலையே உடலிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. எந்தக் கருவியால் வெட்டப்பட்டது- ஒரு சவரக் கத்தியால். அப்படியென்றால் எத்தகைய அசாத்தியமான தெம்பு வேன்டும் அப்படிச் செய்ய? கோர்வையாக, இந்த வன்முறை அராஜகத்தை நினைத்துப் பாருங்கள். லிஸ்பன்யேவின் உடற் காயங்கள்.. அதைப் பற்றி நான் என்ன சொல்ல? மிஸ்டர் டூமாவும்,(Dumas) அவரது இணையர் இட்டெனியும், (etinne) அந்தக் காயங்கள் மழுங்கிய கருவியால் ஏற்பட்ட ஒன்று என்று சரியாகத்தான் சொல்லியுள்ளார்கள். கீழே இருந்த கல் நடைபாதையில், படுக்கையை ஒட்டிய ஜன்னலின் வழியே அவர் வீசப்பட்டதால்/விழுந்ததால் அவை ஏற்பட்டுள்ளன. அந்த அடைப்பான்களின் அகலமே காவல் துறையின் கணக்கில் வரவில்லை- ஒரே எண்ணம் தான்- அந்த ஆணி அசைந்தே கொடுக்கவில்லையே- எனவே அதைத் திறப்பதாவது, மூடுவதாவது என்றே காவல் துறை கணித்தது; எது புதிர்க்கான விடையின் அருகில் அவர்களைக் கொண்டு வருமோ, அதைப் பற்றிய சிந்தனையே இல்லை அவர்களுக்கு.” 

“இந்த அனைத்துடனும், அந்த அறை இருந்த அலங்கோலத்தையும் நினைவில் வையுங்கள். இதுவரை, மிக மிக வலுவான ஒரு மனிதன், வியப்பிற்குரிய சுறுசுறுப்பு, வன்முறைக் கொடூரம், காரணமில்லாமல் வதைகளுக்கு ஆளாக்கப்பட்ட உடல்கள், மனிதத்தன்மைக்கும், மனித நடவடிக்கைகளுக்கும் பொருந்தியே வராத காட்டுமிராண்டிச் செயல்பாடுகள், பல தேச மனிதர்களுக்கு இன்னதென்று வகைப்படுத்த முடியாத மொழி, தனித்த, உணர இயலாத ஒலிப்பு.. இவற்றைக் கொண்டு எந்த முடிவிற்கு வருவீர்கள்? உங்கள் எண்ணத்தில் நான் சொன்னவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது?” 

‘நான் தோள்களைக் குலுக்கிக் கொண்டேன்- ஒரு பைத்தியக்காரன், வெறித்தனம் மிகுந்தவன், பக்கத்தில் இருக்கும் மன நலம் குன்றிய விடுதியிலிருந்து தப்பித்து வந்து இதைச் செய்திருக்கலாம்.’ 

“ஒரு விதத்தில் பார்த்தால், உங்கள் சிந்தனை பொருத்தமற்றதல்ல. ஆனால், மிக மோசமான வலிப்பு அல்லது துக்க நிலையில் இருக்கும் பைத்தியக்காரர்களின் குரல்கள், மேலிருந்து கேட்கப்பட்ட இந்த வினோதக் குரலோடு ஒத்துப் போகாது. ஏதோ ஒரு நாட்டவராக பைத்தியக்காரன் இருந்தாலும், அவன் கோர்வையாகப் பேசாவிட்டாலும், ஒலிப்பில் ஒரு ஒழுங்கைப் பார்க்கலாம். மேலும், ஒரு பைத்தியத்தின் முடி, நான் இப்போது கையில் வைத்துள்ளேனே, அதைப் போல இருக்காது. மூதாட்டியின் தலையில் மீதமிருந்த முடிக் கற்றையிலிருந்து இந்தச் சிறு குடுமியை பிரித்து எடுத்து வந்தேன். இதிலிருந்து நீங்கள் எந்த முடிவிற்கு வருகிறீர்கள் எனச் சொல்லுங்கள்.” 

‘நான் ஸ்தம்பித்தேன்- கடவுளே, இது…இது.. மனித முடியே இல்லை; இது விசித்திரமானது.’ 

“நானும் அது மனித முடி எனச் சொல்லவில்லை; ஆனால், நாம் இதைப் பற்றி தொடர்ந்து பேசுவதற்கு முன்னால், இந்தக் காகிதத்தில் நான் வரைந்துள்ள ஒரு கோட்டோவியத்தைப் பாருங்கள். இந்தக் காகிதத்தில், மகளின் உடலில் அடர் காயக் கீறல்கள், கை விரல் நகங்கள் ஆழமாகப் பதிந்துள்ள பதிவுகள் என்று சாட்சிகள் சொன்னதும், நகங்களால் ஏற்பட்டுள்ள வெளிறிய நீல நிறப் புள்ளிகள் என்று டூமா மற்றும் இட்டெனி சொன்னவை இவற்றின் சரியான நகலின் சித்திரத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த வரைபடம் ஒரு உறுதியான, அழுத்தமான பிடிப்பைக் காட்டுவதை உணர்வீர்கள். அந்த விரல்கள் நழுவவேயில்லை. முதலில் எந்த வேகத்துடன் அந்த விரல்கள் அந்தப் பெண்ணின் உடலில் பதிந்ததோ, அந்த வேகம், ஒருக்கால், அந்தப் பெண் மரணிக்கும் வரை, ஆழமாகப் பிடித்திருந்திருக்கின்றன. இந்தப் பதிவுகளின் மேலே, ஒரே நேரத்தில், உங்கள் விரல்களை வையுங்கள் இப்போது” 

‘வீண் முயற்சி. என்னால் முடியவில்லை.’ 

“இந்த விஷயத்திற்கு நாம் நியாயம் செய்யவில்லை. இந்தக் காகிதம் சமதளத்தில் உள்ளது. மனிதத் தொண்டை உருளை வடிவானது. இந்த மரத்துண்டு, தொண்டையின் சுற்றளவில் இருக்கிறது. இந்த ஓவியத்தை அந்த மரத்துண்டால் சுற்றுங்கள்; இப்போது மீண்டும் முயலுங்கள்.” 

‘நான் செய்து பார்த்தேன்; முன்பை விடக் கடினமாக இருந்தது. இது மனிதனின் கை அல்ல என்று சொன்னேன்.’ 

“நிச்சயமாக இல்லை; குவியர் (Cuvier) எழுதியுள்ள இந்தப் பத்தியைப் படியுங்கள்.” 

கிழக்கிந்தியத் தீவுகளில் காணப்படும், பெரிய, நல்ல எடையுள்ள ஒராங்-ஒட்டாங் (Ourang Outang) என்ற குரங்கினத்தின் உடல் அமைப்பும், மற்றும் அந்த இனத்தின் பொது அம்சங்களையும் நுணுக்கமாக விவரித்து எழுதப்பட்டிருந்தது அந்தக் குறிப்பு. அதன் பேருருவம், ஆச்சர்யகரமான சக்தி, செயற்பாடுகள், அதீத கோப வன்முறைகள், மனிதர்களை நகலெடுத்து அவை இயங்கும் முறைகள் அனைவர்க்கும் நன்கு தெரிந்தவையே. அந்தக் கொலைகளின் கொடூரம் உடனே எனக்குப் புலனானது. 

‘இதைப் படித்த பிறகு அதில் கூறப்பட்டவைகள் அப்படியே உங்கள் வரைபடத்துடன் பொருந்துகின்றன. நீங்கள் கவனத்துடன் ஆய்ந்து சொன்ன, அந்த அரக்கத்தனமான செயல்களை, வேறெந்த விலங்கும் செய்திருக்க முடியாது. அந்த மஞ்சள் நிற முடிகள் குவியர் சொன்னவற்றுடன் ஒத்துப் போகின்றன. இந்தப் பயங்கர மர்மத்தினை இன்னமும் என்னால் முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலே கேட்டதோ இரு குரல்கள்- அதில் ஒன்று ஃப்ரெஞ்சுக்காரருடையது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.’ 

“உண்மை. அனைத்து சாட்சிகளும் சொன்ன அந்த வார்த்தை, ‘என் கடவுளே’ என்ற அந்தச் சொல்லை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இதை அந்த இனிப்புக் கடைகாரர், மான்டெனி, மிகச் சரியாக ‘மறுப்பாக’ அதாவது அந்தச் செயலைச் செய்யாதே என்பதாக ஒலித்தது எனச் சொன்னார்; பதட்ட வெளிப்பாட்டின் ஒலியாகவும் சொன்னார். ‘என் கடவுளே,’ ‘பிசாசே’ இந்த இரு வார்த்தைகள், அந்த இனிப்புக்கடைக்காரர் செய்த விவரணை, இவற்றின் மூலம் தான் நான் விடை கண்டடைய முடியும் என்ற நம்பிக்கைக்கு வந்தேன். அந்தப் ஃப்ரெஞ்சுக்காரருக்கு இந்தக் கொலையைப் பற்றித் தெரியும். இந்த இரத்தவெள்ளக் கொலைகளில் அவருக்கு எள்ளலவிலும் தொடர்பில்லை. அவரை அப்பாவி என்றே சொல்லலாம். அந்த ஒராங்-ஓட்டான் அவரிடமிருந்து தப்பித்திருக்கக் கூடும். அதை, அவர் இந்த அறைவரை பின்தொடர்ந்திருக்கக்கூடும். ஆனால், அங்கே நடந்த அவலப் பயங்கரத்தினால், அவரால் அதை பிடித்திருக்க முடியாது. அது இன்னமும் எங்கோ இருக்கிறது. இவை ஊகங்களே; ஊகங்களில்லை என்று சொல்ல எனக்கு அதிகாரமில்லை. ஏனெனில், எந்த பிரதிபலிப்பின் மீது இந்த ஊகங்கள் எழுந்துள்ளனவோ, அவை ஆழமற்றவையாக என் அறிவிற்கே தோன்றுகையில், நான் மற்றவருக்கு அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டதாக எனக்கு நானே நடித்துக் கொள்ள முடியாது. எனவே, இதை ஊகம் என்று வைத்துக் கொண்டு மேலே தொடர்வோம். அந்தப் ஃப்ரெஞ்ச் மனிதன், நான் நினைத்தபடி இந்த அநியாயக் கொலைகளில் ஈடுபடவில்லையென்றால், ‘லு மன்டேயில்’ (Le Monde) (உலகம்-கடலோடிகள் விரும்பும், கடற் பயணம் மற்றும் அது சார்ந்த செய்திகள் வரும் இதழ்) நாம் வீடு திரும்புகையில், நான் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து நம் வசிப்பிடத்திற்கு வருவார்.” 

அந்த விளம்பரம் இவ்வாறு இருந்தது: 

‘பிடிபட்டது- இன்று காலை கொலை நடந்த நேரம், மிகப் பெரிய, பளபளப்பான, ஒராங்- ஒட்டான், பார்னீஸ் வகை இனத்தைச் (Bornese Species) சேர்ந்தது, பிடிபட்டது. மால்டீஸ்  (Maltese Vessel) கப்பலைச் சேர்ந்த மாலுமி (Sailor) ஒருவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. அதை சரியாக அடையாளம் காட்டி, அதைப் பிடித்து, பராமரித்த செலவுகளுக்காக அவர் சிறிது பணமும் கட்ட நேரிடும். உரிமையாளர் இந்த விலாசத்தில் தொடர்பு கொள்ளக் கோருகிறோம்.’ எங்கள் விலாசம் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. 

‘இதெப்படி சாத்தியம், அந்த மனிதர் ஒரு கடலோடி என்பதும், அவர் மால்டீஸ் கப்பலைச் சார்ந்தவர் என்பதும்?’ 

டூபான் சொன்னார்- அது எனக்குத் தெரியாது; அதை பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது என்னால். எனினும், இதைப் பாருங்கள்- இந்த எண்ணெய்க் கறை படிந்த நாடாவின் சிறு பகுதி, அது சில செய்திகளைச் சொல்லியது- கடலோடிகள் தங்களது நீள் கூந்தலை, அதில் அவர்களுக்கு பெரு விருப்பம், இத்தகைய நாடாவினால் கட்டுவார்கள். இதைப் போன்ற முடிச்சினை கடலோடிகளைத் தவிர வெகு சிலரே போடுவார்கள்; இது மால்டீஸ் ஸ்பெஷல். நான் இந்த நாடாவை அந்த இடிதாங்கியின் காலருகில் கண்டெடுத்தேன். 

(தொடரும்)

Series Navigation<< மார்க் தெரு கொலைகள் -3மார்க் தெரு கொலைகள்-  இறுதிப் பகுதி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.