தமிழாக்கம்: மைத்ரேயன்

கால் அங்குலம் தடிமனாக இருந்த ஈரக் களிமண் பலகையிலிருந்து, நீள்சதுரமான பக்கச் சுவர்களையும், முன்-பின் புறச் சுவர்களுக்காக சதுரமாகவும், மேல்புறம் உயர்ந்தும் இருக்கும்படியாகத் துண்டுகளை ஜில்லி வெட்டி எடுத்தாள். வெண்ணெயில் சர்க்கரையைக் கலந்து பிசைந்தால் அது இறுகலாகவும், சிறிது சொறசொறப்பாகவும் இருப்பது போல அல்லது வேகவைக்கப்பட்ட மாட்டு நாக்கைப் போல அந்தக் களிமண் இருந்தது. களிமண் வெட்டும் கத்தி அவளுடைய தடித்த விரல்களிடையே சிறியதாகத் தெரிந்தது. செங்குத்தான கோணங்களில் கச்சிதமாகவும், கருக்காகவும், ஆனால் கடினமாக இல்லாமல் மகிழ்ச்சி தரும்படியாகச் சுத்தமாகவும் வெட்ட அது உதவியது.
வழித்துச் சீராக்கும் கத்தியின் முனையால், பக்கச் சுவர் ஒன்றில் தாழ்ந்த பகுதியில் ஒரு ஜன்னலுக்கான இடத்தை அவள் வெட்டி எடுத்தாள், பின் சுவரில் உயரத்தில் சிறு ஜன்னலுக்கு இடம் வெட்டினாள், முன்வாசலுக்கான திறப்பையும் வெட்டினாள். களிமண் துண்டு ஒன்றைப் பிசைந்து, அழுத்தி சமதளமில்லாததான அடித்தளமாக உருக் கொடுத்தாள், அதை அடித்தளமாக்கி அதன் மீது சுவர்களை ஒவ்வொன்றாக நிறுவினாள், விளிம்புகளில் நீரில் நனைந்த விரலால் மெழுகி மூலைகளை இணைத்தாள், பிறகு அந்த இணைப்புகளை அதே முறையில் மூடினாள். முன்சுவர் கடைசியாக வைக்கப்பட்டது, பக்கச் சுவர்களின் விளிம்புகளில் கச்சிதமாகப் பொருந்தியது. களிமண்ணால் மெழுகப்பட்டிருந்த சுழல் மேடையில் இப்போது கூரையில்லாத வீடு ஒன்று, மூன்றங்குலம் நீளமும், இரண்டங்குலம் உயரமுமாக நின்றது.
அவளுடைய மருமாள்கள் எண்ணைப் பசை கொண்ட வகையான, வடிவமைக்கும் களிமண்ணை, ஒரு மேஜை இழுப்பறையில் விட்டுச் சென்றிருந்தனர். அந்த எண்ணைப் பசையுள்ள கருப்பான மண்ணைக் கொண்டு அவள், கிள்ளல்களால் சிறு மிருக உருக்களை, கோரமான தலைகளைச் செய்தாள், பிறகு அவற்றை மறுபடி உருச்சிதைத்து ஒன்றாக்கிப் பிசைந்து உருட்டி வைத்தாள். குழந்தையைப் போல விளையாடியதில், அதுவும் கோரமான உருக்களாகச் செய்ததில், சிறிது வெட்கப்பட்டாள். தையல் வேலையை வெறுப்பவள் அவள், படித்துக் கொண்டிருப்பதில் சலிப்பு ஏற்பட்டுப் போயிருந்தது. சைனாடௌனில் அவள் பார்த்திருந்த சிறு உருவான வீடுகளைப் பற்றியே நினைத்த வண்ணம் இருந்தாள். அவை பழுப்புக் களிமண்ணால் ஆனவை, மிகச் சன்னமாக, நுட்பமாகச் செய்யப்பட்டிருந்தன.
கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார். அவள் அங்கிருந்து தப்பிப் போக முயன்று கொண்டிருந்தாள், ஆனால் அவர் மேன்மேலும் ஏதாவது சொல்லிக் கொடுத்தபடி இருந்தார், களிமண்ணை எப்படிக் கலப்பது, அதை எப்படி ஒட்டாமல் நழுவும்படி ஆக்குவது, அதை எதற்குப் பயன்படுத்துவது, களிமண்ணையும், செய்த பொருட்களையும் இரவில் ஈரமான துணியால் ஏன் மூட வேண்டும் என்று போய்க் கொண்டே இருந்தார். அவள் காரில் ஓட்டிக் கொண்டு கிளம்பியபோதும் அவர் இரைந்து கூப்பிட்டு, அவருடைய சக்கரத்தில் பானைகளை வனைந்து எழுப்ப விரும்பினால் எந்த நாளிலும் மாலையில் அங்கு வரலாம் என்று சொன்னார். அதைக் கேட்டபோது தான் தன் அலுவலகத்தில் இருந்திருந்தால், யாரிடமாவது, “அவர் சொன்னார், ‘நீ வந்து என் சக்கரத்தில் பானைகளைக் கட்டி எழுப்புங்கறார்,’” என்று அவர் இரைந்ததைச் சொல்லி இருக்கலாம் என்று நினைத்தாள்.
அம்மா அதை ரசிக்க மாட்டாள். இரட்டை அர்த்தத்தோடு ஜோக் சொல்ல ஆண்களுக்கு அனுமதி உண்டு, ஆனால் பெண்கள் அவை புரியாதது போல இருந்து கொள்ள வேண்டும்.
நிஜமாகப் பார்த்தால், வயதானவரான பில் வைஸ்லருடன் ஏதும் செய்வது என்பது அப்படி ஒரு கலக்கமூட்டக் கூடிய ஒரு எண்ணம், அதில் நகைச்சுவையைக் காண்பது சிறிதும் ஏற்க முடியாதது. ஆனால் அவருடைய குடிலின் உள்புறத்தைக் காண்பது சுவாரசியமாகவே இருந்தது. போர்ட்லண்ட் நகரில் விற்பனைக்கு அவர் அனுப்பும் கிண்ணங்களும், சட்டிகளும் அலமாரி மாற்றி அலமாரியாக, வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில பச்சைக் களிமண்ணாகவும், சில சுடப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டவையாகவும் இருந்தன. அவர் ஒரு குயவராகத் தொழில் செய்தார் என்பது அவளுக்குத் தெரியும், ஆனால் அவர் அங்கே வசித்தபடி, நாள் பூராவும், ஒருக்கால் சில இரவுகள் முழுதும் கூட களிமண்ணில் கைகளை வைத்துக் கொண்டு, சட்டிகளைச் செய்தார் என்பதை அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
அவள் அந்த மேடையை மெதுவாகச் சுழற்றினாள், சுவர்கள் சரியாக இணைந்திருந்தனவா, நேர் செங்குத்தாக இருந்தனவா என்று சோதித்தாள். சிறு நீள் சதுரமாக இருந்த வாயில் துளை வழியே அந்த வீட்டின் உட்புறம் தெரிந்த காட்சியைப் பாராட்டியபடி நோக்கினாள்.
வட்டமாகத் தட்டையாக்கப்பட்டிருந்த களிமண் மொத்தையை எடுத்தவள், வீட்டு நீளத்த்துக்கு அதில் அளந்து குறித்தாள், அரை அங்குலத்தை இறவாரத்துக்காகச் சேர்த்தாள், அளவில் ஏற்படக் கூடிய பிழைகளுக்கென அகலத்தைச் சோதித்தாள், நீள்சதுரத்தைக் குறித்து ஒதுக்கி வைத்தாள், கூரையை வெட்டி எடுத்தாள். அதன் நடுவில் நடு உத்தரம் பொருத்தப்பட வேண்டிய இடத்தில் ஒரு கோடு போட்டாள், பிறகு ஒரு பழைய முள்கரண்டியாலும், தன் கட்டைவிரல் நகத்தாலும், வைக்கோல் பரப்பிய கூரையைப் போலத் தெரிவதற்காக, களிமண் பத்தையின் பரப்பில் கீறல்களை இட்டாள். கூரையைத் தட்டையான ஓர் அகலக் கரண்டியால் தூக்கிச் சுவர்களின் மீது வைத்தாள். அது பொருந்தியிருந்தது, பக்கவாட்டில் சிறிதே கூடுதலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதை மறுபடி எடுத்துக் கீழே வைத்து, ஓரங்களைச் சிறிது வெட்டி ஒழுங்கு செய்தாள், வெட்டிய ஓரங்களில் முள்கரண்டியால் கீறலிட்டு, வைக்கோலைப் போலத் தோற்றம் தரும்படி செய்தாள், சுவர்களின் மேல் கூரை அமர வேண்டிய இடங்களில் ஈரமாக்கி விட்டு, சிறிது ஈரக் களிமண்ணைக் கொண்டு, அது இணைப்புகளை இடுக்கு இன்றிப் பொருத்த உதவும்படி அங்கு மெழுகினாள், கூரையை மறுபடி மேலே பொருத்தினாள், அதை மெல்ல அழுத்தி வீட்டின் மேல் பொருந்தி அமரும்படிச் செய்தாள். இப்போது வாயிற்கதவுக்கான துவாரத்தின் வழியே பார்க்கும்போது வீட்டுக்குள் ஒளி ஜன்னல்களால் மட்டுமே நுழைந்தது தெரிந்தது. அந்த வீட்டுக்கு ஓர் உள்புறம் இருந்தது, மங்கலான ஒளியோடு, சிறிது அச்சமூட்டும் இடமாகத் தெரிந்தது. அவள்தான் அந்த வீட்டை உருவாக்கினாள் என்ற போதும், அங்கு அவளால் நுழைய முடியாது, தன் பிரும்மாண்டமான கண்ணால் அவள் அதற்குள் பார்க்க மட்டுமே முடியும்.
ஜன்னலுக்காக பல்குத்தும் குச்சியைப் போல களிமண் குச்சிகளை வெட்டி எடுத்தாள். வாயிற்கதவு நிலைக் கட்டைகளை வெட்டினாள். அவளுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது தெரிந்திருந்ததால், வேலை நன்றாக, சுலபமாக, நடந்தது. அவளுடைய முதல் வீடு, கட்டையாக, வருத்தப்படும் விதமாக அமைந்திருந்தது, இப்போது புத்தக அலமாரியில் உட்கார்ந்து காய்ந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு வந்த மூன்று வடிவமைப்புகளும் படிப்படியாக முன்னேற்றம் கண்டிருந்தன, சேர்த்துப் பார்த்தால் அவை புராதனமான சிறு கிராமம் போலத் தோற்றமளித்தன. ஆனால் இது சரியாக வடிவு கொண்டு எழுந்தது. கிட்டத்தட்ட, சைனாடௌனில் இருந்த அந்தப் பொம்மை வீடுகளைப் போல இருந்தது.
அவள் யோசித்துக் கொண்டிருந்தாள், அந்த யோசனை சுழல் மேடை திரும்பி ஆரம்பித்த இடத்துக்கே வருவதைப் போல, திரும்பி வந்தது. நாம் செய்வதெல்லாம் வழக்கமாக ஒரே ஒரு முறைதான் செய்யப்படுவன என்பதை உணர்வது கடினம் என்பது அந்த யோசனை, குறைந்தது அவளுக்கு அப்படி உணர்வது கடினமாக இருந்தது. ஒரே ஒரு தடவை, என்றென்றைக்குமாக. எதையும் செய்வது என்பது தொடர்ந்து மறுபடி மறுபடி நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றைச் செய்ய நாம் பழகுவது போல இல்லை, ஆனால் எது நடக்கவிருந்தோ, அதுதான் நடந்தது. நமக்குப் பயிற்சி பெற வாய்ப்பில்லை.
தினசரி மறுபடி மறுபடி செய்ய வேண்டியது எல்லாம் இருக்கவே செய்தது, வீட்டுவேலை, அலுவலகவேலை, முதியவரான பில்லின் சட்டிகள்; ஆனால் அவை மட்டும்தான் நமக்கு நன்றாகச் செய்யத் தெரிந்த வேலைகள் என்றாலும், நாம் அவற்றைப் பொருட்படுத்த வேண்டியவையாக எடுத்துக் கொள்வதில்லை, மாறாக முக்கியமான விஷயங்களுக்காக நம்மை நாம் தொடர்ந்து சேமித்து வைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அவற்றைச் செய்ய வேண்டி வரும்போது அவற்றை எப்படிச் செய்வது என்று நமக்குத் தெரிவதில்லை. நகர அரசாங்கத்தில் பெண்களின் பங்கு பற்றிய கூட்டம் ஒன்றை நடத்துவதைத் திட்டமிட பெண் செயலர்களின் குழு ஒன்று சந்தித்தபோது, அந்தச் சந்திப்பு அருமையாக அமைந்ததால், வந்தவர்கள் தாம் இதையெல்லாம் பற்றிச் சிந்தித்திருக்கிறோம் என்று அறியாத விஷயங்களை எல்லாம் பற்றிப் பேசினார்கள், யோசனைகள் பெருகி வந்தபடி இருந்தன, யாரும் யாரையும் புறந்தள்ளவில்லை. அப்போது ஜெட்ஸின் நிர்வாகச் செயலர் தன் அலுவலகத்தில் இருந்த பெண்களிடம் சந்திப்புக்குப் போகக் கூடாது என்று சொல்லவும், அந்தக் குழு மறுபடி சந்திக்கவே இல்லை. அவர்கள் நிஜமான கூட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர், ஆனால் அதோடு நின்றது, எல்லாம் முடிந்து போய் விட்டது. அந்த முதல் சந்திப்பு நடக்கையில், அதுவேதான் நிஜக் கூட்டமும் என்பதை ஏன் பார்க்க முடியவில்லை? திருமணமும் இதே போலத்தான். தானும் டேவிடும் நடத்திக் கொண்டிருப்பதுதான் திருமண வாழ்க்கை என்பதை, அவள் வளர்ந்து புத்தித் தெளிவடையும்போதுதான் புரிந்து கொண்டாள், ஆனால் அப்போது அவர் ஏற்கனவே விட்டுப் போக விரும்ப ஆரம்பித்திருந்தார். ஒருக்கால், அவருமே அப்போதுதான் புரிந்து கொண்டிருந்தார் போலும். யாருக்குத் தெரியும்? சைனாடௌனுக்குப் போனது கூட இப்படித்தான். சீனாவுக்குப் பயணம் போனதைப் போல இல்லையே அது, அது வாழ்நாளில் ஒரு தடவைதான் நேரும் என்று எவருக்கும் தெரியும். ஆனால் சைனாடௌன் நகர்ப்பகுதிக்கு கடைகண்ணிகளைப் பார்க்கப் போனதுதான் அது. அப்போது சில சிறு சுட்ட களிமண் வீடுகளைப் பார்த்திருந்தாள், ஆனால் அவற்றை வாங்கவில்லை, ஆனால் சொல்லியிருந்தாள், “நான் திரும்பி வரும்போது ஒன்றிரண்டை வாங்குகிறேன்.” திரும்பிப் பார்ப்பதற்குள் பல வருடங்கள் ஓடி விட்டன, இப்போது அவள் திரும்பிப் போனால் அவை அங்கே இருக்குமா என்பதே ஐயம்தான். அதே கடைகள் கூட அங்கே இராது.
எனவே அவள் இப்போது செய்கிற இது, முட்டாள்தனமாகத் தெரிந்தாலும், குறைந்தது அவள் சில முறை செய்து பார்த்து விட்டாள், இந்த முறை அவள் சரியாகச் செய்து கொண்டு வருகிறாள்.
அவள் அந்தச் சின்னஞ்சிறு கதவு நிலையை வாயில் துவாரத்தில் பொருத்திக் கொண்டிருக்கையில், அவளுடைய அம்மா அந்த அறைக்குள் நுழைந்து வந்தாள்.
ஜில் திரும்பிப் பார்த்துச் சொன்னாள், “ஹாய்!” அவளுக்குத் திரும்பிப் பார்க்கவோ, பேசவோ விருப்பமில்லை, ஆனால் அவளுக்கு அப்படி இருக்க ஒரு காரணமும் இல்லை, அவள் எந்த வேலையையும் செய்யவில்லை, சும்மா விளையாடிக் கொண்டிருந்தாள், பொம்மை வீடுகளைச் செய்து பார்க்கிறாள். அவளுடைய அம்மா செய்கிறவற்றோடு ஒப்பிட்டால், அவள் செய்கிற எதுவுமே விளையாட்டைத் தவிர வேறெதுவுமாக இருக்கவியலாது. அம்மா தன் படுக்கையறையிலிருந்து குளியலறையைத் தாண்டி வந்து, ஜில்லியின் அறை வழியே சென்று, வீட்டின் பின்புறம் பகல் ஒளிக்காகக் கட்டப்பட்ட அறைக்கு நடந்து போகிறாள். போர்ட்லண்ட் நகரில் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை விற்கும் கடை ஒன்றில் ஜில்லி வாங்கி வந்த கிமொனொவை அணிந்திருந்தாள். அது மரகதப் பச்சை, இளம் மஞ்சள் மற்றும் தங்க நிறங்களில் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது, மெலிந்த மற்றும் உப்பிய பகுதிகளில் பொருளற்ற அலங்காரப் பட்டுத் துணிகளைக் கொண்டிருந்தது. அவள் வெயிலுக்கான அறையின் வாயிலில் நின்று சொன்னாள், “சூரியன் ஒருவழியாகப் பின்பக்கத்துக்கு வந்திருக்கிறது.”
ஜில்லி சுழல்மேடையின் மேல் குனிந்திருந்தாள், உற்சாகம் காட்டும் ஒலியொன்றை எழுப்பினாள். ஒரு நிமிடம் கழித்துத் தன் அம்மா அந்த வெளிச்சமான அறைக்குள் போனதைக் கேட்டாள். அங்கே செய்தித்தாள் படிப்பது போல பாவனை செய்துகொண்டிருப்பாள், அதை தெற்குப் பார்த்த ஜன்னல்கள் பக்கத்திலிருந்த கைவைத்த சொகுசு நாற்காலிக்கு அருகில் ஜில்லி அவளுக்காக விட்டிருந்தாள். ஆனால் அவள் எந்நேரமும் சாவை நோக்கிப் போகப் பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.
கடைசி தடவை சிகிச்சைக்குப் போய் வந்த பின் அவள் வெளியே எங்கேயும் போகவில்லை. அவள் சமைப்பதில்லை, சுத்தம் செய்வதில்லை, பின்னல் வேலை செய்வதில்லை, ப்ரிட்ஜ் விளையாட்டு கூட ஆடுவதில்லை, அதெல்லாம் வெகுகாலமாக அவள் செய்து வந்தவை. அதையும் விட நெடுங்காலமாக அவள் பழகி வந்தது நடை, அதை மட்டும் இப்போது செய்கிறாள். அந்தச் சிறு கூடத்தின் வழியே நடந்து குளியலறைக்குத் தானாகப் போக அவளுக்கு முடிந்தது, அங்கிருந்து வெயிலுக்கான அறைக்கும் வர முடிந்தது. ஜில்லியின் அப்பா, ஓய்வுக்காலத்துக்காக தங்களுக்கு வேண்டுமென அந்த வீட்டை ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கியபோது, தெற்குப் பார்த்த அந்த வெயில் முற்றத்தை மூடி ஓர் அறையாக ஆக்கி இருந்தார். அதன் மேல் கூரையை எழுப்பி மூடி, ஜன்னல்கள் பொருத்தி, மடக்குச் சட்டங்கள் கொண்ட தட்டிகளும், சிறு திரைகளும் கொடுத்து, முழுதாகச் சீர்படுத்தி இருந்தார், “எல்லாம் உன் அம்மா காற்று வாதை இல்லாமல் சூரிய ஒளியில் அமர முடியும்னுதான்.” அதெல்லாம் முடிந்தபின் முன் தோட்டத்துக்குப் போய், மண்வெட்டியின் கைப்பிடியைப் பற்றியவர், அதைத் திடீரென்று தூர எறிந்து கூக்குரலிட்டார், கைகளை வீசி விரித்தார், இறந்து போனார் – அப்போதே, அங்கேயே, எந்த முன் பயிற்சியும் இல்லாமல்.
அவர் ஆரம்பித்த தோட்டம் அப்படியே மாறாமல் நின்றது. எர்னஸ்ட் தன் பெண்குழந்தைகளோடு தாங்க்ஸ்கிவிங் தினத்துக்காக வரும்போது, அவர் ஹைட்ராஞ்சியா புதர்களை கத்திரித்துக் குறைப்பார், வேலியாகப் பயன்பட்ட லாரல் செடிகளை வெட்டி அளவாக ஆக்குவார். வார இறுதியில் சில நேரங்களில் ஜில் ரோஜாச் செடிகளைச் சுற்றிப் புல்பூண்டுகளை அகற்றும் வேலையில் ஒருமணி நேரம் செலவழிப்பாள், அது அவளுக்குப் பிடித்திருந்தது, அடுத்த வார இறுதியில் இன்னமும் செய்யலாம் என்றும் நிச்சயமிருந்தது. இப்போது அவள் இங்கேயே முழு நேரமும் தங்கி இருக்கையில், தோட்டத்துக்கு அவள் போவதே இல்லை, ஏனெனில் அம்மா அங்கு போவதில்லை. உடல் நன்றாக இருந்தபோதே அவள் கடற்கரைப் பக்கம் ஒருபோதும் போனதில்லை. அவளுக்குக் காற்று ஆகாது. மேலும் அங்கே வெளியில் பூச்சிகள் இருந்தன.
சென்ற வசந்த காலத்தின் போது, நிணநீர் கணுக்களில் மட்டும் நோய் இருந்தபோது, மருத்துவர்களில் ஒருவர் ‘கற்பனை வழிச் சிகிச்சை’ பற்றிய நூல் ஒன்றைப் பரிந்துரைத்தார், ஜில்லி அதை வாங்கி அம்மாவுக்கு உரக்கப் படித்தாள். ஒத்தாசை செய்யும் உயிரணுக்களும், நாயகம் வகிக்கும் உயிரணுக்களும் படைகளாகப் போர் புரிந்து வெல்வதாகக் கற்பனை செய்யச் சொன்னது அந்தப் புத்தகம். ஜில்லியிடம் அடுத்த நாள் காலையில் அம்மா சொன்னாள், “அது சொன்ன மாதிரி ஒரு சேனையைக் கற்பனை செய்தேன்,” அவளுடைய குரல் மென்மையாக, தட்டையாக ஒலித்தது. “அதெல்லாம் ஏராளமாக இருந்தாப்ல, இறக்கைகளோட தெரிஞ்சதுங்க. வெளிச்சம் அதுங்க உள்ளால போயிடலாம்போல இருந்ததுங்க.”
“தேவதைங்க மாதிரியா?”
“இல்ல,” அம்மா சொன்னாள். “எறும்புங்க ரெக்கையோட இருக்குமே, வெள்ளையா. அதுங்களெல்லாம் என் உடம்புள்ளே எங்கே பார்த்தாலும் ஊர்ந்து போற மாதிரி. என் உள்ளே.”
(அடுத்த இதழில் முடியும்)
- In and Out
- By Ursula K. Le Guin
- View Article
- Published in the print edition of the January 16, 1989, issue.
One Reply to “உள்ளும் வெளியும்”