உபநதிகள் – 4

This entry is part 4 of 17 in the series உபநதிகள்

மார்ச் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை. லட்சக்கணக்கான பதினெட்டு வயதினரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தினம். குறிப்பிட்ட இளையவர்களுக்கு ஹாலிவுட் திரைப்படம் போல எதிர்பார்த்த சந்தோஷ முடிவு. ஒருசிலருக்கு ஆனந்த அதிர்ச்சி. சந்தோஷத்தில் பெண்கள் கண்ணீருடன் அழுவதையும், பையன்கள் பெரிய சாதனை செய்ததுபோல கைகளை மடக்கிக் குதிப்பதையும் எதிர்பார்க்கலாம். பலருக்கு ஏமாற்றம், சமுதாயம் வஞ்சித்துவிட்டதாக மனக்கசப்பு.

அந்தக் குறிப்பிட்ட அதிருஷ்டசாலிகளில் மானஸாவும் ஒருத்தி. அத்தினத்தில் வழக்கத்துக்கு முன்பே எழுந்து தூக்கம் வராமல் தவிக்கவில்லை. கோவிலுக்கோ யோகா பயிற்சிக்கோ போகவில்லை. படிப்பின் தீவிரம் குறைந்து பள்ளிக்கூட பருவம் முடிவுக்கு வரப்போகும் காலம் என்பதால் மூளையை வருத்தாத பள்ளிக்கூட நாள். அது முடிந்ததும் நிதானமாகக் காரில் அலெக்கை அழைத்துவந்தாள். ஃப்ளாரிடா சென்றிருந்த அண்டை வீட்டினரின் நாய் அவர்கள் வீட்டில். அதனுடன் சில நிமிடக் கொஞ்சல். உயர்மட்டக் கல்லூரியில் நுழையாவிட்டால் வாழ்க்கை என்னாகுமோ என்ற தவிப்பில் நிறையத் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்ளவில்லை. ஒரேயொரு குக்கி, அரை கோப்பை கொழுப்பு குறைத்த பால்.

அவள் அப்பா தான் வீட்டிற்கு சீக்கிரமாக வந்து நிஜமான கேமராவுடன் காத்திருந்தார்.

“நமக்கு ஒரு மணி குறைச்சல்” என்றும் நினைவூட்டினார்.

புன்னகையுடன் மானஸா படிக்கும் அறையில் மடிக்கணினியைத் ‘தீர்ப்பு மணி’க்கு இரண்டு நிமிடங்கள் முன் திறந்தாள். பக்கத்தில் துணைக்கு அலெக்.

கடிகாரம் 3:58:30

3:59:00

:39

:51

4:00:00

தந்தையின் கையில் கேமரா பதிவுசெய்யத் துவங்கியது.

விண்ணப்பித்து இருந்த முதல் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் மானஸா நுழைந்ததுமே பளிச்சிட்ட எழுத்துக்கள்.

2023 வகுப்பில் நீ இருக்கிறாய்!

“யெஸ்! யெஸ்! ப்ரின்ஸ்டன்.”

கைதட்டி கைகளை உயர்த்தி ஆரவாரித்தாள். அலெக்கும் கூச்சலிட்டான்.

“கொலம்பியா?”

ஒரு நிமிடத்திற்குள் “அக்செப்டட்” என்ற வார்த்தை கொட்டை எழுத்துக்களில் திரையில் ஊர்ந்தது.

“கொலம்பியாவிலும் தான்.”

அலெக்கின் கையைத்தட்டினாள்.

“ட்யுக்?”

மானஸாவின் முகத்தில் ஏமாற்றம்.

” டாட்! ட்யுக்கில் ஒரு எதிர்பாராத பிரச்சினை.”

அலெக் திரையை எட்டிப்பார்த்து வேண்டுமென்றே முகத்தில் சோகம் காட்டினான்.

“ப்ரின்ஸ்டனும் கொலம்பியாவும் உனக்கு அட்மிஷன் கொடுக்கும்போது ட்யுக்குக்கு என்ன வீம்பு?”

தன் பெண்ணை யாரோ பொதுவிடத்தில் அவமதித்ததுபோல வெகுண்டார்.

ட்யுக் பல்கலைக்கழகம் நாற்பத்தியிரண்டாயிரம் விண்ணப்பங்களைச் சலித்து, தேர்வு செய்த மூவாயிரத்தி இருநூறு மாணவர்களுக்கு மின்னஞ்சலில் நல்ல சேதி அனுப்பியது. அவர்களில் ஆயிரத்திஎழுநூறு பேர் 2023இல் பட்டம்பெறப்போகும் வகுப்பில் நுழையப்போகிறார்கள். அவர்களிலும் கடைந்தெடுத்த ஏழு பேருக்கு நான்கு ஆண்டுகளின் எல்லா செலவுகளையும் பல்கலைக்கழகமே ஏற்கும் ‘ஏ பி ட்யுக்’ ஸ்காலர்ஷிப். அந்த ஏழுபேரில்…

“ஏ பி ட்யுக் ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு, டாட்! என்ன செய்யறதுன்னு தெரியல” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு இரண்டு மடங்கு ஆரவாரத்துடன் எழுந்துநின்று குதித்தாள்.

“ட்யுக்குக்கு நீ வேற இடம் போயிடுவியோன்னு பயம். உன்னை வளைச்சுப் போட்டுட்டாங்க” என்று அப்பாவுக்கு பெருமை.

காமரா நின்றது. பதிவான படம் யு-ட்யுபில் சேர்க்கப்பட்டது. ‘ஏ பி ட்யுக் ஸ்காலர் மானஸா’ என்ற தலைப்பில்.

மானஸாவின் எதிர்காலத்திற்குப் பாலம் தயார். அதில் எந்த செலவும் இல்லாமல் அவள் கால்வைக்க வேண்டியது தான் பாக்கி.

ப்ரல் மே மாதங்கள். ஏற்கனவே உணவகங்களில், ஊர்திப் பட்டறைகளில், சேவை நிறுவனங்களில் வேலைசெய்யத் தொடங்கிய தொழிலாளர் வர்க்கத்து இளைஞர்களுக்கு ஐம்பது வருஷ உழைப்பு வாழ்க்கை தொடங்கிவிட்டது. எந்தக் கல்லூரிக்குப் போவது என்பது நிச்சயமான மாணவர்களுக்கு படிப்பு பற்றிய கவலை இல்லாத அறுபத்தியோரு நாட்கள். பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய கனவு.

அந்த இரண்டு மாதங்களில் மற்றும் பள்ளிப்படிப்பின் நிறைவு விழா முடிந்ததும் வந்த கோடை விடுமுறையில் மானஸாவுக்கு முழுநேர புத்தக வேலை. முன்பு எழுதியதைப் புதுப்பித்து, ஏற்கனவே யோசித்து இருந்த ஐந்து கதைகளை அதே தரத்தில் எழுதி நிரப்புவதில் முழு கவனம் வைத்து மனதை வேறு எதிலும் சிதறவிடவில்லை.

செய்தித்தாளுக்கு எழுதிய அறிக்கையைக் கதையாக மாற்றி…

Swimming Against Injustice

அநீதிக்கு எதிராக நீச்சல்

மாவட்ட கோடைகால சிறுவர் நீச்சல் போட்டிகள்.

உடற்பயிற்சி மையத்தில் ஒரே இரைச்சல். நுழைவிடத்தில், நடைவழியில், ஓய்வு அறைகளில் மனித கும்பல். எங்கு பார்த்தாலும் விதவிதமான நீச்சல் ஆடையில், தண்ணீரைத் தடுக்கும் கண்ணாடியில், குழுக்களின் பெயர் போட்ட தொப்பியில் பையன்களும் பெண்களும். நீச்சல் அரங்கின் அலுமினியப் பெஞ்ச்களில் கூச்சல்போடும் பெற்றோர்கள். எதிர்ப்புறத்தில் போட்டியின் அடையாள எண் பார்த்து அதில் பங்குபெறும் சிறுவர்களை வரிசைப்படி அழைத்துவரும் கௌரவப் பணியாளர்கள். போட்டிகளில் கலந்துகொள்ளாத தம்பி தங்கைகள் சின்னத்திரையில் கண்களைப் பதித்து, பிளாஸ்டிக் உறைகளில் வந்த தின்பண்டங்களை வாயில் திணித்து இதெற்கெல்லாம் அப்பாற்பட்ட வேறொரு தளத்தில்.

மையத்துக்கு வெளியே வெயிலில் இருந்து தப்பிக்க அணிகளின் பெயர் தாங்கிய கூடாரங்கள். ப்ரென்ட்வுட் பேரகூடாஸ், ஃபேர்வியு ஷார்க்ஸ்…

ஆறு வயதுக்கும் குறைவான பெண்களில் ஆரம்பித்து ஒன்பது-பத்து பையன்களுடன் காலை நிகழ்ச்சிகள் முடியப்போகின்றன. ஐம்பது கஜ ‘பாக்-ஸ்ட்ரோக்’கின் கடைசி ஹீட். பங்கெடுத்தவர்களில் மிகச் சிறந்த எட்டு பேர்.

பிங்ங்!

சிசுவைப்போல சுருங்கி நீர்மட்டத்தின்மேல் தொங்கிய இளம் உடல்கள் நிமிர்ந்து விரிந்து சுவரை உந்திப்பிரிந்து பாய்ந்தன. அலெக் அப்பாவைப் போல கறுப்பு. அத்துடன் கோடை வெயிலின் தாக்கம். மற்ற வெள்ளைகளுக்கு நடுவில் தனித்துத் தெரிந்தான். போட்டி என்பதால் அவன் நீளமான கால்களும் கைகளும் வேகமாக இயங்கின.

அடுத்த எட்டு நொடிகள். குளத்தின் மேற்பரப்பைக் கிழித்த சிறுவர்கள்.

சென்னையில் இருந்து நள்ளிரவில் கிளம்பியதாலும், விமானத்தின் நடுஇருக்கை என்பதாலும் கங்கா கடல்நீரைப் பார்க்கவில்லை. ஃப்ராங்க்ஃபர்ட்டில் இருந்து ஜன்னல் இருக்கை. விரைவில் அட்லான்ட்டிக்கின் நீலம் கீழே. அதுவரை கடல் நீரை அதன் ஓரத்தில் கால்களால் அளைந்து தான் பழக்கம். உயரத்தில் இருந்து பார்த்தபோது அதுவரை அறிந்திராத அச்சம். “விமானம் நீரில் மிதந்தால் லைஃப்-ஜாக்கெட்டை தலைவழியே அணிந்து இடுப்பில் இறுக்கி..” பணிப்பெண்ணின் வார்த்தைகள் காதில் மீண்டும் ஒலித்தன. நிஜமாகவே நடுக்கடலில் விழுந்தால் அவளால் அதையெல்லாம் பதற்றம் இல்லாமல் செய்ய முடியுமா?

கங்கா என்ற பெயரை வைத்துக்கொண்டு கடலைப் பார்த்துப் பயப்படுவது பொருத்தமாக இல்லை. ‘யுடெர்பி ம்யுசிக் க்ரூப்’பில் சேர்ந்து, அபார்ட்மென்ட்டில் குடித்தனம் செய்யத் தொடங்கியதும் வலைத்தளத்தில் தேடினாள். இரண்டு மைலில் ப்ளு டால்ஃபின் ஸ்விம் க்ளப். குளிர் இல்லாத ஒரு சனிக்கிழமை காலை அங்கே போனாள். இரண்டு உடைமாற்றும் அறைகளை ஒட்டி நீச்சல் குளம். சின்ன இடம் தான். ஐந்து வயதுக் குழந்தைகள் கூட பயமில்லாமல் தண்ணீரில் குதித்து குளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு நீந்தியதைப் பார்த்து வெட்கமும் தயக்கமும். திரும்பிப் போகத் திரும்பியபோது நீச்சல் பயிற்சியாளர்,

“உன் குழந்தைக்கு மூன்று வயதானால் போதும். நீந்த ஆரம்பித்துவிடலாம்” என்று அவளைப் பிடித்துவைத்தாள்.

“எனக்குத்தான்… நீச்சல் தெரியாது…” என்று மென்றுவிழுங்கி, “படிப்பிலேயே கவனம் செலுத்தியதால் நீச்சல் குளம் போக சிறுவயதில் நேரம் கிடைக்கவில்லை. வளர்ந்தபிறகு முழங்காலைவிட ஆழமான தண்ணீரைப் பார்த்தாலே நடுக்கம்.”

கையால் அவள் அச்சத்தை ஒதுக்கி, “எந்த வயதிலும் நீச்சல் கற்றுக்கொள்ளலாம்” என்று ஆறுதல் சொல்லி, கங்காவைப் பதினாறுவயதுப் பெண்ணிடம் ஒப்படைத்தாள்.

அலெக்குக்கும் அவனுக்கு அடுத்த தடத்தில் நீந்திய மார்க் ஈட்டனுக்கும் இடைவெளி பாதி உடல் நீளம். கங்காவுக்கு நம்பிக்கை வளர்ந்தது.

கணினியில் எல்லா உடல் அசைவுகளையும் இயக்கங்களையும் பார்த்து மனதில் பதித்து, இளம்பெண்ணின் பொறுமையை சோதித்து, ஆறு மாதத்திற்குள் கங்காவுக்கு எல்லா ஸ்ட்ரோக்கும் அத்துப்படி. பிறகு, வேலையின் இறுக்கம் போக தினம் நீச்சல் குளத்தின் இரண்டு சுவர்களையும் எழுபது எண்பது முறை தொட்டாள். திருமணத்துக்குப் பிறகு குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு நாள். மானஸாவுக்கும் அலெக்குக்கும் ஐந்தாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நீச்சல் குளத்தில். கடந்த இரண்டு கோடைகளில் சன்மானம் இல்லாத உதவி கோச். பத்து வாரங்கள் தினம் மாலை இரண்டு மணி குழந்தைகளிடம் நைசாகப்பேசி அவர்கள் கவனத்தைப் பிடித்துவைத்து…

அலெக் நீலம் மற்றும் வெள்ளை முக்கோணங்கள் தொங்கிய தோரணத்தை எட்டிவிட்டான். அங்கிருந்து மூன்றுமுறை கையை வாரி இழுத்ததும் அவன் குப்புறத்திரும்ப வேண்டும். இன்று ஒரு பிரச்சினை. கொடியைத் தாண்டியதும் இடது கரம் உயர்ந்துவிட்டது. இன்னும் இரண்டு தடவையா, மூன்றா? நிறுத்தி அறிவுரை கொடுக்க முடியாது.

விரைவாக நீந்தியதாக நினைத்து இரண்டாவது இழுப்பு முடிந்ததுமே அலெக் தோள்களை இடப்பக்கம் சாய்த்து உடலைத் திருப்பினான். வலது கை நேராக நீண்டது. சுவர் அவன் எதிர்பார்த்ததைவிட சற்றுத்தள்ளி. அதனால், கால்களை வேகமாக உதைத்து நீட்டிய கையை வழக்கத்தைவிட மெதுவாக இழுத்தபோது சுவர் கால் எட்டும் தூரத்தில். தலையை மடக்கி, உடலைக் குறுக்கிக் குட்டிக்கரணம். கால்களால் சுவருக்கு உதைகொடுத்து வேகம் எடுத்தான்.

அந்தத் தடுமாற்றத்தினால் அலெக்குக்கும் மார்க்குக்கும் இப்போது கையளவு இடைவெளி தான்.

கோ அலக்!” கங்காவுடன் ப்ளு டால்ஃபின் குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர்.

கோ மார்க்! உன்னால் முடியும்!”

கடிகாரப் பலகையில் எண்கள் வேகமாக நகர்ந்தன. 30, 31, 32. கங்காவின் இதயத்துடிப்பும் அதிகரித்தது.

ஒவ்வொரு கோடையின் நடுவில் நடக்கும் இப்போட்டிகளில் ப்ளு டால்ஃபினில் இருந்து யாரும் எந்த நிகழ்விலும் வென்றது கிடையாது. அவையெல்லாம் ஒய்எம்சிஏ மற்றும் எக்செல் போன்ற பெரிய குழுவைச் சேர்ந்த சிறுவர்களுக்கு. அதுவரை இரண்டு குழுக்களுக்கு இடையில் நடந்த எல்லா போட்டிகளிலும் அலெக் பாக் ஸ்ட்ரோக்கில் ஜெயித்து இருந்தான். மாவட்டத்தின் எல்லா குழுக்களும் கலந்துகொள்ளும் இந்த இறுதிப் போட்டியிலும்…

எவ்வளவு நன்றாக இருக்கும்!

அலெக் சுவரைத் தொட்டதும்,

33.98 எண்கள் நின்றன. ஐந்தாவது தடத்தில் நீந்திய மார்க் அடுத்தது.

தாய், உதவி கோச் என்ற முறையில் கங்காவுக்குப் பெருமிதம். அதைத்தொடர்ந்து மனதில் ஒரு துணுக்கம். ஏன்?

அலெக் மற்ற பையன்களுடன் குளித்து உடைமாற்றிக் கொள்ளப் போனான். ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டிக்கு அடுத்த எட்டு பேர் தண்ணீரைத் தாக்க வந்தார்கள்.

முடிவுத்தாள்கள் ஒட்டப்பட்ட ஜன்னல் பக்கமாக கங்கா நடந்தாள். மார்க் ஈட்டனின் தந்தையைப் பார்த்து சற்றுத்தள்ளி நின்றாள். ஏற்கனவே அங்கே பல குறுகலான தாள்கள், நடந்துமுடிந்த போட்டிகளின் முடிவுகள்.

அலுவலகத்தில் இருந்து ஒருத்தி ஒரு சுருள் காகிதத்தை நீட்டி அதன் இரு முனைகளிலும் டேப்பைப் பதித்து கண்ணாடியில் ஒட்டினாள். முதலில் நெருங்கிப்பார்த்த மார்க்கின் தந்தை இரு கைகளையும் உயர்த்தினான். பிறகு கங்காவின் பக்கம் ஒரு அலட்சியப் பார்வை. அவன் அகன்றதும் கங்கா.

9-10 வயது பையன்கள்

50 கஜங்கள் பாக்ஸ்ட்ரோக்

முதல் இடம் மார்க் ஈட்டன் ஃப்ராங்க்லின் ஒய்எம்சிஏ நேரம் 34.81.

கண்களை இறக்கினாள்.

அறுபத்திமூன்று பேருக்கும் அடியில்

அலெக் சஹாதேவன் ப்ளு டால்ஃபின் க்ளப் டிஸ்க்வாலிஃபைட் (டிக்யு).

கங்காவின் முதல் எண்ணங்கள்: வேண்டுமென்றே செய்யப்பட்ட விலக்கல். ஆனாலும் இது வெள்ளைகள் பிரதேசம். சண்டைபோட்டு ஒன்றும் நடக்காது. பத்து வயதில் ஒரு நீச்சல் போட்டியில் நடந்தது அலெக்கின் வாழ்வை நிர்ணயிக்கப் போவது இல்லை. ஒலிம்பிக் என்ன, பள்ளிக்கூட அணிக்கு நீந்துவதற்கான திறமை கூட அவனுக்குக் கிடையாது. கோடை விடுமுறையில் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு. அவன் இதுவரை கற்றுக்கொண்ட நீச்சல் வழிமுறைகள், வாழ்நாள் முழுக்க உடலை நலமாக வைத்திருக்க உதவும். அலெக்குக்கு ‘போனால் போகிறது, விட்டுத்தள்ளு!’ என்று சமாதானம் சொல்லி வீட்டிற்கு அழைத்துப்போக-

முந்தையத் தலைமுறையைச் சேர்ந்த ஜமுனாவுடன் நடந்த வார்த்தைப் பரிமாற்றம் குறுக்கிட்டது.

‘இப்ப மாதிரி இல்ல. நாங்க இந்த ஊருக்கு வந்தப்ப வித்யாவைத் தவிர மத்த எல்லாரும் வெள்ளைக் குழந்தைகள். ஐந்தாவது முடிச்சப்ப அவ தான் நாலு செக்ஷன்களுக்கும் சேர்த்து நல்லா செஞ்சிருந்தா. நாங்க அதைப் பெரிசா எடுத்துக்கல. அதைக் குறிப்பிட்டு க்ராஜுவேஷன் அன்னிக்கி ஒரு ஸ்பெஷல் சர்டிஃபிகேட் தரப்போறோம்னு க்ளாஸ் டீச்சர் கிட்டேர்ந்து ஒரு கடிதம் வந்தது. நானும் அவரும் ஒரு காமராவை வெச்சிகிட்டு மத்தவங்களோட உட்கார்ந்தோம். எல்லா குழந்தைகளுக்கும் எலிமென்ட்டரி ஸ்கூல் முடிச்சதுக்கு ஒரு பட்டம். கடைசியில்… தவறாம வகுப்புக்கு வந்தவங்க, செடிகளுக்குத் தண்ணி ஊத்தினவங்க, கூப்பான் புக் நிறைய வித்தவங்கன்னு சிலருக்கு சர்டிஃபிகேட். வித்யாவைக் கூப்பிடவே இல்லை. விழாவும் முடிஞ்சிரிச்சு. நான் அவளோட க்ளாஸ் டீச்சரைப் பார்க்கப் போனேன். பக்கத்தில ஹெட்மிஸ்டரெஸ் இருந்தா. இந்த மாதிரி எனக்குக் கடிதம் வந்தது. ஆனா சர்டிஃபிகேட்தான் இல்லன்னு சொன்னேன். உடனே ஹெட்மிஸ்டரெஸ், ‘ஓ! மறந்தே போயிட்டேன்’னு போய் அதை எடுத்தவந்து என் முன்னாலயே அதில கையெழுத்துப் போட்டுக்கொடுத்தா. வெள்ளை இல்லாத, அதுவும் ஒரு பெண் மத்தவங்களைவிட நல்லா செஞ்சதுன்னு விழாவில சொன்னா வெள்ளை அப்பா அம்மாக்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். அதனால தான் அவ சர்டிஃபிகேட்டை அங்கே தர்றலன்னு நான் நினைச்சேன்.’

‘ரொம்ப சரி. நீ அங்கேயே அதைக் கிழிச்சுப்போட்டு அவ முகத்தில வீசி எறிஞ்சிருக்கணும்.’

‘கங்கா! இந்தக்காலத்தில நீங்க எல்லாம் அப்படிச் செய்வீங்களோ என்னவோ, அப்ப எனக்கு பயம். ‘தவறு நடக்கறது சகஜம்னு’ சொல்லி அதை வாங்கிண்டேன்.’

ஜமுனாவுக்கு கங்கா வழங்கிய அறிவுரை இப்போது எங்கே?

அலெக் சாதாரண உலர்ந்த ஆடையில் தோள்-பையுடன் வந்தான். அவனைப் பார்த்ததும்,

“உன்னை டிக்யு பண்ணிட்டாங்க, அலெக்!”

அதிர்ச்சியுடன், “ஏன்?”

“‘ஃப்ளிப் டேர்னா’த்தான் இருக்கும்.”

“நான் சரியாத்தானே பண்ணினேன்.”

“ஜட்ஜ் எங்கே உன்னை மாட்டினான்னு பார்க்கலாம்.”

அலைபேசியில் ஒரு வேகமான தேடல்.

“போகலாம் வாம்மா! சின்ன விஷயம். நான் இனிமே இந்தமாதிரி போட்டிகளில் கலந்துகொள்ளப் போறது இல்லை.” விரக்தி வருத்தம் இரண்டும் கலந்த குரல்.

“அப்படி விடக்கூடாது.”

“நான் வெளிலே மானஸாவோட காத்திருக்கேன்.” அவனுக்கு அந்த இடத்தைவிட்டுப் போவதில் அவசரம்.

கங்கா நிர்வாக அறையின் நுழைவாயிலில் நின்றாள்.

ஹெட்ஃபோனைத் தலைக்குமேல் நகர்த்தி எழுந்துவந்தவன்,

“என்ன?” என்று அதட்டினான்.

“ஒரு பையனை டிக்யு செய்தது சரியில்லை.”

“அதை கோச் தான் கேட்க வேண்டும்.”

“நான் அவன் கோச்.”

“மொத்தம் இருபது நிகழ்வுகள். ஒவ்வொன்றிலும் அறுபதுக்கு மேல் குழந்தைகள். இப்போது நேரமில்லை.”

“இதுவரை ப்ளு டால்ஃபின் க்ளப்பைச் சேர்ந்த நான்கு பேருக்கு டிக்யு. எனக்கே என்ன தவறு என்று தெரியும். இது வித்தியாசம். போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிறது.”

“ஓகே.” கணினித் திரையின் முன் அமர்ந்து,

“பெயர்?”

“சஹாதேவன். ஒன்பது-பத்து, பாக்ஸ்ட்ரோக்.”

பெயர்களின் வரிசை நீண்டது. அதை மேலே தள்ளி,

“திருப்பம் சரியாகச் செய்யவில்லை.”

“என்ன தவறு?”

மேஜைமேல் இருந்த அட்டைகளில் ஒன்றை எடுத்துப் படித்தான்.

“சுவர்வரை நீண்ட தூரம் குப்புற நீந்தியது தவறு.”

“அவன் கையை உயர்த்துவதற்கு முன்பே உடலைத் திருப்பினான் என்ற குறிப்பு அதில் இருக்கிறதா?”

“இல்லை.”

“குப்புற நிலையில் அவன் இரண்டு தடவை கைகளை இழுத்தான் என்று…”

“அதுவும் இல்லை.”

“நானும் கவனித்தேன். அவன் ஒரேயொரு முறைதான் வலதுகையை மெதுவாக இழுத்தான். அப்போது அவன் எத்தனை முறை கால்களை உதைத்தான் என்பது முக்கியம் இல்லை. யுஎஸ்ஏ ஸ்விம்மிங் 101.4.3 விதியின் படி அவன் செய்தது தவறு இல்லை.”

அவனுக்கு தர்மசங்கடம். ஹெட்ஃபோனைக் கழற்றி மேஜையில் வைத்து யோசித்தான். வெள்ளைப்பையனுக்கு சாதகமாக சாமர்த்தியமாக சந்தேகம் எழாதபடி ஜட்ஜ் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதை ஒப்புக்கொள்ளவும் மனம் இல்லை.

“ஜட்ஜ் மார்க்குக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக உன் பையனை டிக்யு செய்தான் என்று குற்றம் சொல்கிறாயா?” என்று கங்காவைக் குற்றவாளி ஆக்கினான்.

“இல்லை. மனிதர்கள் தவறு செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதைத் திருத்தலாம்.”

“முடிவை மாற்றுவதால் குழப்பம் நேரிடும்.”

“போட்டியில் மார்க்குக்கு முதல், அலெக்குக்கு இரண்டாவது இடம் என்றால் நான் போனால் போகிறது என்று விட்டுவிடுவேன். இப்போது அலெக்கின் முயற்சிக்கு ஒரு பரிசும் கிடையாது என்பதுடன் டிக்யு என்கிற அவமானம். முடிவை மாற்றுவதால் மார்க்குக்கு பெரிய நஷ்டம் இல்லை. நியாயமான இரண்டாவது இடம். அலெக்கைவிட கிட்டத்தட்ட ஒரு வினாடி தாமதமாக வந்ததும், இப்படிப்பட்ட உயர்மட்டப் போட்டியில் அலெக் போன்ற ஒருவன் இந்தமாதிரியொரு சின்ன தவறு செய்யமாட்டான் என்பதும் மார்க்குக்கு நன்றாகத் தெரியும். முதல் இடத்திற்கான மெடலைப் பார்க்கும்போது அவனுக்கு அது பெருமையாகப் படாது.”

நீண்ட யோசனைக்குப் பிறகு முடிவை மாற்றி இன்னொரு நீண்ட தாள் அச்சிட்டான்.

அறையில் இருந்து வெளியே வந்தபோது அவள் முகம் காட்டிக்கொடுத்துவிட்டது. மார்க் அவன் தந்தை. இருவரையும் பார்த்து,

“மார்க்கின் எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்!”

பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினாள்.

———-

ட்யுக் போவதற்கு மூன்று வாரங்கள் இருந்தபோதே Ganga: the girl who wanted to swim தொகுப்பு முற்றுப்பெற்றது. அதன் மின் வடிவத்தை ஏஞ்சல் டியாகோவுக்கு அனுப்பினாள். இரண்டே நாளில் பதிப்பாசிரியர்களின் ஒப்பனைகளுக்குக் காத்திருப்பதாக பதில். சந்தோஷச் செய்தியைப் பெருமையுடன் சொல்ல குடும்பத்தினருக்கு அடுத்ததாக பொம்மி ஆன்ட்டி, சுகன்யா.

அந்த சமயத்தில் குடும்பமாகப் பயணம் போவது வழக்கம். இத்தாலி, எகிப்து, பெரு. போய்வந்ததும் மானஸாவின் பயணக்கட்டுரை (படங்களுடன்) வலைத்தளத்தில். இந்த தடவை அப்பாவின் கையில் ஒரு சிக்கலான வழக்கு. அவர் இல்லாமல் தனியாகப்போக யாருக்கும் விருப்பம் இல்லை. எதிர்கால எதிர்பார்ப்பில் மானஸாவுக்கு அது குறையாகப்படவில்லை.

கல்லூரியில் முதன்முதலாக அவளை சந்திப்பவர்கள் பெயரைக் கேட்டதுமே உன் கட்டுரைகள் எல்லாம் நான் படித்திருக்கிறேன், ‘என்ன ஆழம்! என்ன விரிவு!’ என்று பிரமிப்பார்கள். அதற்கு, “ஸோ நைஸ் ஆஃப் யூ” என்கிற அடக்கமான பதில். பெண்களாக இருந்தால், ‘என் முதல் புத்தகம் இளவேனிலில் வெளிவரப்போகிறது’ என்கிற ரகசியத் தகவல். பள்ளிக்கூடத்தையும் தாண்டி எத்தனை பேருடைய பெயர் பரவியிருக்கப்போகிறது? ஏ பி ட்யுக் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்ற ஆசை நிறைவேறாத சிலர் அவளைப் பொறாமையுடன் பாராட்டலாம். அந்தப் பெருமையையும் அதிருஷ்டத்தின்மேல் போட்டு அடக்கம் காட்டப்போகிறாள்.

முடிவுக்கு வரப்போகும் குழந்தைப் பருவத்தின் கவலையற்ற கடைசி நாட்கள்.

“அவை போனால் போனது தான், இன்னொரு தடவை வராது!” என்றாள் அம்மா.

அம்மா வார்த்தையைத் தட்டாமல் அலெக்கை மட்டம் தட்டுவதிலும், படேல் கடையில் வாங்கிய இனிப்புகளைக் குற்ற உணர்வு இல்லாமல் தின்பதிலும் மானஸாவின் நேரம் போனது. நடுவில் கல்லூரி வாழ்க்கைக்குத் தேவையான சாமான்கள் சேகரித்தாள் – படுக்கை உறை, தலையணை, மேஜை விளக்கு…

கல்லூரிப்படிப்பு கல்வியின் அடுத்த நிலை என்பதுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டம். வீட்டில் இருந்து ஐநூறு மைல் தொலைவில் இல்லத்தின் நிழல்படாத இடத்தில் வசிக்கப்போகிறாள். இனி அவள் நேரம் அவளுக்கே சொந்தம். அவள் பெற்றோர்கள் அவளை அதிகம் கட்டுப்படுத்தியது இல்லை என்றாலும் அவள் மனதில் அவர்கள் வரைந்த எல்லைக்கோடுகள். அவற்றை அழிக்க இன்னும் நான்கு நாட்கள். நிமிடங்கள் ஏன் இத்தனை மெதுவாக ஊர்கின்றன?

சுவாரசியமாக எதுவும் செய்யத்தோன்றாமல்… வலைத்தளத்தில் ஒரு தேடல். கடந்த ஆறு மாதங்களில் அவளைப்பற்றி என்ன புதிய தகவல்? எதிர்பார்த்தபடி, அவள் புத்தகம் வெளிவரப்போகிறது. மின்வடிவப் பிரதியைப் படித்த பாஸ்டன் க்ளோப் விமரிசகரின் பாராட்டு. ஏ பி ட்யுக் ஸ்காலர் ஏழு பேரையும் தனித்தனியாகப் பாராட்டிய நார்த் கரோலைனா கவர்னர். அவற்றுக்கு நடுவில்… சிவப்பு ஆப்பில் குவியலில் ஒரு பச்சை க்ரானி ஸ்மித் பழம் போல.

மானசா சகாதேவன் ஆனிக்ஸ் பப்ளிஷிங் ஹெளஸ் வணிகப்பிரிவின் புதிய மேற்பார்வையாளர் சென்னை பிசினெஸ் வீக்.

அதைத்தட்டிதும் உணர்ச்சியற்ற செய்தி.

ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து பாந்தியன் சாலையில் இருக்கும் ஆனிக்ஸ் பிரசுர நிறுவனத்தின்… இளம் வயதில் பெரிய பொறுப்பு ஏற்கப்போகும்…

அவளைத் தவிர இன்னொரு மானசா சகாதேவன்! இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து முளைத்தாள்? அவள் யார்?

ஆனிக்ஸ் தளத்தில் புகுந்தாள். அந்த மானசா சில மாதங்களுக்கு முன்பு மதிப்பான மகளிர் சமணக் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டம் வாங்கியவள். அவளைவிட மூன்று நான்கு வயது மூத்தவள். எல்லா வர்த்தகப்பாடங்களிலும் வகுப்பில் எல்லாரையும்விட சிறப்பாகச் செய்தவள். ஓ! அப்படியா? அதுவரை பதிப்பகத்தில் பகுதிநேர வேலை செய்த மானசாவின் முழு மேற்பார்வையில் நிதிநிர்வாகம். ம்ம்.. வாசிப்பது குறைந்துவிட்ட இக்காலத்தில் அது ஒரு சவாலாக இருக்கப் போகிறது.

பெங்களூரு போனபோது அவள் மாமாவின் வாரிசுகளைக் கவனித்திருந்தாள். பள்ளிப்பாடங்கள், அவற்றை விட்டால் உயர்மட்டக் கல்விக்குத் தயார்செய்யும் காலை மாலை வகுப்புகள். அவர்களைப்போல அந்த மானசாவும் தமிழ்நாட்டின் ஒரு சராசரிப் பெண். வர்த்தகம் படித்து மூளையை ஒரு குறுகிய பாதையில் செலுத்தும், இலக்கண சுத்தமான வாக்கியம் அமைக்கத் தெரியாத மனித இயந்திரம். வெளிநாடு அழைத்தால் உடனே விமானத்தில் கால்வைக்கும் அவசரம்.

அவள் ஆர்வம் குறைந்தது.

2010-இல் வெளிவந்த நாவலில் இருந்து…

பரிமளவல்லி

பூர்வாங்கம்

ர்திகளுக்குத் தேவையான பல பகுதிகளைத் தயாரிக்கும் ஒரு கூட்டுக் கம்பெனியின் கிளைத்தொழிற்சாலையில் சகாதேவன் உதவிமேனேஜர். அவன் மேற்பார்வையில் இருக்கைகள் தயாரிக்கப்பட்டன. ‘ரைடர் சீட்ஸ்’ தொழிற்கூடத்தில் நுரை-ரப்பர் இருக்கைகளுக்குத் தேவையான அளவில் வெட்டப்பட்டது. ஒவ்வொரு துண்டும் பசை தடவப்பட்டு மேற்புறமும், மூன்றுபக்கங்களும் ரெக்சினுடன் ஒட்டித் தைக்கப்பட்டு ஊர்திகளை ஒன்றுசேர்க்கும் தொழிலகத்திற்கு அனுப்பப்பட்டது. பசையைக் கரைக்க கடந்த நான்காண்டுகளாக ‘ரீகல்-சால்வ்’ என்றொரு புதிய கலவை பயன்படுத்தப்படுகிறது. அதன் சிறப்புகளை மோனார்க்கோ கெமிகல் கம்பெனியின் பிரதிநிதி விவரித்தான். விரைவில் உலர்ந்துவிடுவதால் பசை உடனே ஒட்டிக்கொள்ளும். அதேசமயத்தில் ரெக்சின் துணிகளை ஒட்டித்தைக்கும் போது சிறிது நகர்த்த இடம்தரும். செயற்கைப் பசைகளைக் குறைந்த அளவிலேயே கரைக்கும் தன்மைகொண்டது. முன்னால் பயன்படுத்திய கரைப்பான்களைப் போல எரிவதற்கான ஆபத்து இல்லை. சென்னையின் சூட்டிற்கு அது மிகஅவசியம். அவன் பெருமை அடித்துக்கொண்ட ‘ரீகல்-சால்வி’ன் அத்தனை குணங்களையும் சகாதேவன் நடைமுறையிலே கண்டான். அதற்கு இன்னொரு உபயோகமும் இருக்கிறது என்று அவனுடைய உறவினள் சரவணப்ரியா அனுப்பிய மின்-கடிதத்தின் இணைப்பைப் படித்தபோது தெரியவந்தது.

அன்புள்ள சகாதேவன்!

நீங்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் ‘ரீகல்-சால்வ்’ கலவை பயன்படுத்தப்படுவதாக அறிகிறேன். 1-ப்ரோமோப்ரோபேன் என்கிற கரைபொருள் அதில் முக்கால்பங்கு. அதன் ஆவியை அதிக அளவில் சுவாசிப்பது உடல்நலத்தைப் பாதிக்கலாம் என்று எங்களுக்கு ஒரு சந்தேகம். அதை சோதித்தறியும் ஆராய்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில், அந்த குறிப்பிட்ட இரசாயனப்பொருளை எலிகள் சுவாசிக்கும் காற்றில் கலந்து, அதனால் அவற்றுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனித்தபோது, நம்பிக்கைதரும் முடிவுகள் கிடைத்திருக்கின்றன. ஆராய்ச்சியைத் தொடர யூ.எஸ். அரசாங்கத்தின் மானியத்திற்கு விண்ணப்பிக்கப் போகிறோம். விண்ணப்பத்தின் பக்கபலமாக இன்னும்சில சோதனைகள் செய்ய விருப்பம்.

1-ப்ரோமோப்ரோபேன் சேர்ந்த கலவையைப் பயன்படுத்தும் ‘ரைடர் சீட்ஸ்’ பணியாட்கள் அதை சுவாசிக்க நேரிடலாம். அவர்களின் இரத்தமும் (அதிகமில்லை, ஒருசில மிலி போதும்), சிறுநீரும் (அதற்கு ஆட்சேபம் இருக்கமுடியாது!) எங்கள் ஆராய்ச்சிக்கு உதவும். வேன்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் என்னுடன் ஆய்வுநடத்தும் இருவர் (ஜேசன், ஐரீன்) அங்கே ஒருவாரம் தங்கி அவற்றைச் சேகரிக்க முடியுமா? அப்படிச் செய்யும்போது உங்கள் தொழிற்சாலையில் உண்டாகும் இடையூறுகளுக்கான செலவை ஏற்றுக்கொள்வோம். உங்கள் சாதகமான பதிலுக்குக் காத்திருக்கும்…

சரவணப்ரியா.

சாரா.நாதன்@வான்டர்பில்ட்.ஈடியு

சரவணப்ரியாவின் கோரிக்கையை மேனேஜர் கஜமுகன் எப்படி எடுத்துக்கொள்வார் என்று சகாதேவனுக்குத் தெரியாது. இருவருக்கும் இடையில் பரஸ்பர மதிப்பும், சுமுகமான உறவும் இருந்தாலும் சகாதேவன் ஓரெல்லைக்குமேல் தாண்டியதில்லை. அதனால், தானே செய்தியைச் சொல்லாமல், சரவணப்ரியாவின் கடிதத்தை அச்சடித்து அவருடைய தனியறைக்கு எடுத்துச்சென்று கொடுத்தான்.

கடிதத்தை படித்துமுடித்ததும் கஜமுகன் அவனிடம் அதைத் திருப்பித்தரவில்லை.

“அழகா தமிழ்லே எழுதியிருக்காங்களே” என்று பாராட்டினார். “அவங்க வர்றதனாலே உங்களுக்குக் கஷ்டம் ஒண்ணுமில்லயே?”

“இல்லைங்க.”

“நானே அவங்களுக்கு பதில் போட்டுடறேன். கீழே அட்ரஸ் இருக்குதில்ல” என்று அவரே சொன்னதில் சகாதேவனுக்கு மகிழ்ச்சி.

ஜேசனும், ஐரீனும் சென்னைக்கு வந்த மறுநாள் ஒரு ஞாயிறு. சகாதேவன் தன்வீட்டிற்கு அவர்களை சாப்பிட அழைத்தான். விமானநிலையத்திற்கு அருகில் தங்கியிருந்த விடுதியிலிருந்து வந்தார்கள். ஞாபகமாகக் காலணிகளை வீட்டுவாசலில் கழற்றினார்கள். அறிமுகத்திற்குப் பிறகு இருவரும் முன்பே பழகியதுபோல் சரளமாகப் பேசத்தொடங்கி விட்டார்கள்.

ஐரீன் வினதாவிடம் வரும்வழியில் வாங்கிய பத்துமுழம் மல்லிகைப் பூவைத் தந்தாள்.

பெரிய அறையின் சோஃபாக்களில் அமர்ந்தார்கள். ஆர்வத்துடனும் வெட்கத்துடனும் விருந்தினர்களைப் பார்த்து ஓரத்தில் நின்றிருந்த ஒன்பதுவயதுப் பெண்ணை ஐரீன் அருகில் அழைத்தாள். மானசாவின் நீண்ட பின்னல் அவளுக்குப் பிடித்திருந்தது. அதைத் தொட்டுப்பார்த்தாள். மானசாவுக்கும் ஐரீனின் தந்தத்தின் நிறத்தில் நெளிநெளியாகப் பரந்து முன்புறம் தொங்கிய கூந்தல் அதிசயமாக இருந்தது. கையிலெடுத்துப் பார்த்தாள்.

“மானசா! எந்த வகுப்பில் படிக்கிறாய்?”

“நான்காவது.”

“உனக்கு எந்தப்பாடம் பிடிக்கும்?”

“கணக்கு.”

“ஏன்?”

“எதையும் மனப்பாடம் செய்ய வேண்டாம். பதில் சரியா தப்பா என்று உடனே தெரிந்துவிடும்!”

“உன் ‘வொர்க்-புக்’கைக் காட்டுகிறாயா?”

அறையின் ஒருபக்கத்தில் இரண்டு கதவுகள். ஒன்றில் நுழைந்து மானசா நோட்டுப்புத்தகத்தை எடுத்துவந்து கொடுத்தாள். ஐரீன் பக்கம்பக்கமாக அதைப் பிரித்துப்பார்த்தாள்.

ஒரேசீராக வழிமுறைகளோடு தீர்வுசெய்யப்பட்ட கணக்குகள் அவளை மயக்கின.

“நான்காவதுக்கு இவ்வளவு கடினமான கணக்குகளா? கையெழுத்து என்ன அழகு! என்ன நேர்த்தி! எங்கள் பையன் ஆன்ட்ருவுக்கு பதினோரு வயது. இம்மாதிரி ஒருகணக்கு அவனைப் போடவைப்பதற்குள் அவன் ஒருபல்லைப் பிடுங்கி எடுத்துவிடலாம்.”

Series Navigation<< உபநதிகள் – மூன்றுஉபநதிகள் – 5 >>

2 Replies to “உபநதிகள் – 4”

Leave a Reply to AlexaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.