பிடிபடா சலனங்கள்

அந்த காரை ஒரு ஆள் அல்லது அதிகபட்சம் இரண்டு பேர் கழுவிவிடலாம். ஆனால் நான்கு பேர் திசைக்கு ஒருவராய் நின்று தீவிரமாக அந்த மூக்கு நீண்ட வெள்ளை நிறக்காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். காரணம் அது ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மதியழகனின் வாகனம்.எம்எல்ஏ மதியழகன்எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தில் இருந்து வெளியே வரலாம். அவர் வரும் நேரத்தில் தாங்கள் வேலை செய்வதைப் பார்க்க வேண்டும் என்பதே அந்த நால்வரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ராஜாங்கமும் ஒருவன். மதியழகனின் தீவிர விசுவாசி. 

எந்த ஒரு விசுவாசியும் கொள்கைகளால் ஈர்க்கப்படுவதில்லை. தேவைகளால் மட்டுமே ஈர்க்கப்படுகிறார்கள்.அதுவும் சொந்தத் தேவை இல்லை. தலைவனின் தேவையை தன்னுடைய தேவையாக கருதும் எல்லா கட்சியிலும் தவிர்க்கமுடியாத, விசுவாசமான தொண்டர் கூட்டம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படித்தான் ராஜாங்கமும் மதியழகனால் ஈர்க்கப்பட்டான்.அவனைப்போல இன்னும் பலரும் மதியழகன் நிழலாய்த் தொடர்கிறார்கள். கணக்குப்படி எம்எல்ஏவுக்கு ராஜாங்கத்தையும் சேர்த்து இருபதுக்கும் மேற்பட்ட அறிவிக்கப்படாத பிஏக்கள் இருக்கிறார்கள். 

இவர்களுக்கென்று சம்பளம் என்று கிடையாது. சட்டமன்ற கூட்டம் இல்லாத நாளில் தொகுதியில்இவர்கள் புடைசூழதான் மதியழகன் வலம் வருவார். அவருக்குக் கிடைக்கும் தொகுதி வளர்ச்சி நிதியில் தன் பராமரிப்பு போக இவர்களுக்குக் கொடுப்பார். ராஜாங்கம் உட்பட அவர்களது வெள்ளை வேட்டி, சட்டை எவ்வளவுக்கு எவ்வளவு வெண்மையாக இருக்கிறதோ அந்தளவுக்கு சமீபத்திய பலனைப் பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். இது போக வெளியில் இருந்து எம்எல்ஏவைப் பார்க்க வரும் விபரமறியா ஆட்களை அமுக்கி தன்னை எம்எல்ஏவுக்கு அணுக்கமான ஆளாகக் காட்டிக்கொள்வதில் நடக்கும் போட்டி இங்கு சாதாரணம்.

ஊரில் அன்று எம்எல்ஏ இல்லாததால் ராஜாங்கம் மட்டும் கட்சி நாளேடு ஒன்றைத் தீவிரமாக படித்துக் கொண்டிருந்தான். தன்னைப்பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் அதைக் கத்தரித்து தகவல் பலகையில் ஒட்டி வைப்பது மதியழகன் கூறிய முக்கிய வேலை. அப்படி எந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியும் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தான்.

ராஜாங்கம் வயது நாற்பதுக்கு மேல். திருமணமாகாதவன். நாற்பதுக்கு மேல் வரும் ஒவ்வொரு பிறந்தநாளிலும் மிகுந்த குற்றஉணர்ச்சிக்கு உள்ளாவான். தாய், தந்தைக்கு மூன்றாவது ஆண் பிள்ளையாக பிறந்து இப்போதும் குறிக்கோளற்ற வாழ்வை சுற்றித்திரிகிறான். 

யோசிக்க ஏதுமில்லாதபோது ஒரு டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது. எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனையையும், ஏதுமற்ற வெறுமையையும் ஒரு டீயும், ஒரு சிகரெட்டும் தீர்த்துவிடும் என எப்போதும் நம்புபவன். அப்போதுதான் அந்தப்பெண் தயங்கித்தயங்கி அலுவலகம் நோக்கி வருவதைப் பார்த்தான்.

தூரத்தில் இருந்தவள் அருகில் வரவர அவளது வசீகரம் இவனை சுண்டி இழுத்தது. வெகு அருகில் வந்தபோதுதான் அவள் முதுகில் சேர்த்துக் கட்டியிருந்த ஆறு மாதக் குழந்தையைப் பார்த்தான். சேமித்து வைத்திருந்த அத்தனை வசீகரமும் அவளே கெடுத்துக்கொண்டாள் என நினைத்தான். எப்படிப்பட்ட இழிவான மனிதனையும்கூட அடிக்கத் தகுதியில்லாத  மட்டமான ரப்பர் செருப்பு அணிந்திருந்தாள்.

ராஜாங்கம் அவள் மீதுள்ள ஈர்ப்பை இழந்திருந்தாலும் முழுமையாக இழக்க விரும்பவில்லை என்பது போல அவளை என்னவென்று விசாரிக்கத் தயாரானான். அவனைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டாள். இவனுக்கு அந்த பதில் கும்பிடு இயல்பாகவே வந்தது. யாருமற்ற நண்பகல் நேரத்தில் இருவரும் மட்டும். கண்ணில் மிக நுட்பமாக மையிட்டு இருந்தாள். சரியான விகிதத்தில் அவளது உடலமைப்பு இருந்தது. இப்போது மீண்டும் அவளை ரசித்துக்கொண்டிருக்கும்போதுதான் செம்பட்டை முடி குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது. அவள் குழந்தைக்குக் கொஞ்சம்கூட சுகாதாரமில்லாத, தன் பொழிவை முற்றிலும் இழந்திருந்த புட்டியில் பால் புகட்டினாள். குழந்தை அமைதியானது. 

இத்தனை கால அரசியல் வாழ்க்கையில் ஒருவரிடம் எப்படி பேச ஆரம்பிப்பது என்றெல்லாம்ராஜாங்கம் யோசித்ததே இல்லை. முதன்முறையாக இப்படி விக்கித்து நிற்கிறான். வெக்கத்தை விட்டு வீட்டில் பெண் பார்க்கச் சொல்லிவிடலாமா? என்று கூட யோசித்து தலையில் அடித்துக்கொண்டதைப் பார்த்து அவள் சற்று பயந்துவிட்டாள்.

“சொல்லுமா என்ன வேணும்?” அவன் பேச்சில் கனிவு கூடியிருந்தது.

“எம் புருஷனை மூணு மாசமா காணல?” என்பதை அன்றாட சூரிய உதயம் போல வெகு இயல்பாகக் கூறினாள்.

“யாரும் போலீஸ் ஸ்டேஷன் போகச் சொல்லலையா?” குரலில் தன்னியல்பாக கூடிப்போன கடுமையை கணிசமாகக் குறைத்துக்கொண்டு கேட்டான்.

“மூணு மாசம் அங்கதான் நடையா நடந்து வெறுத்துப் போனேன். எதிர டீக்கடக்காரண்ணேதான் எம்எல்ஏ ஆபீஸ் போனா வழி பொறக்கும்ன்னு சொல்லி அனுப்பிசாரு. நீங்கதான் எம்எல்ஏவா?:என்றாள் வெகுளியாக!

எங்கிருந்தோ வந்தவள் திடீரென்று தன்னை எம்எல்ஏவாகக் கருதிக்கொண்டது அவனுக்கு இன்னும் அவள் மீது கரிசனம் கூடியது. எனிலும் தன்னை எம்எல்ஏ என சொல்லி மஞ்சள் பையில் பணம் வாங்கிய கருப்பையாவின் நிலையை மனதில் நிறுத்திக்கொண்டு, “நான் எம்எல்ஏ இல்ல, ஆனா அவருக்கு எல்லாமே நாந்தான்!” என்று தன் மதிப்பு எவ்வகையிலும் குறையாமல் பார்த்துக்கொண்டான்.மேலும் அவளை ஏதோ சால்ஜாப்பு சொல்லி அனுப்பி வைக்க உண்மையில் அவனுக்கு மனமில்லை.

அவனை நம்பிக்கையோடு பார்த்தாள். ஆனால் அந்தக் குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது.

இன்னும் நம்பிக்கையை அதிகரிப்பு செய்வதற்கு பையில் இருந்த டைரியை எடுத்து குறித்துக் கொள்ளத் தயாரானான். முதன்முறையாக அன்றுதான் அந்த சிறிய நாட்குறிப்பை பயன்படுத்த நேரம் கூடி வந்திருக்கிறது.

“சொல்லும்மா உன் புருஷன் பேரென்ன?” எழுதத் தயாரானான்!”

“வில்லியம்” என்றபோது மட்டும் கணவனின் பிரிவை மெல்லியதாக அவனுக்கும் கடத்த முயற்சித்தாள்.

ராஜாங்கத்தின் பேனாவுக்கும் அன்றுதான் எழுத வாய்ப்பு வந்ததால் விடுபடாமல் எழுத ஒத்துழைக்க மறுத்தது. உதறிவிட்டு “விளியம்” என்று எழுதினான். “உன் பேரு?”

“ராசாத்தி!” என்றபோது கொஞ்சம் வெட்கப்பட்டாள்!

சூழல் தெரியாமல் ராஜாங்கம், “ராஜாங்கம்-ராசாத்தி” என்று வெட்கப்பட்டுக்கொண்டே “ரசாத்தி” என்று எழுதினான். அவனது பிரார்த்தனையெல்லாம்தன்னைப் போன்ற அல்லக்கைகள் வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்பதுதான்.

“அழாம சொல்லு, கடைசியா உன் புருஷனை எப்ப பாத்த?” என்ற ராஜாங்கத்தின் கேள்வியில் ஒரு துப்பறிவாளன் தொனி இருந்தது.

அவள் அழாமல் எப்போதும்போலவே இருந்தாள். “அதான் சொன்னனே ஒரு மூணு மாசம் இருக்கும்ன்னு”

“அதில்லமா குறிப்பிட்டு தேதி இருக்கும்ல?”

“அது ஒரு அம்மாவாச! சரியா ஒரு மூணு அம்மாவாசைக்கு முன்னுக்க!”

அது எந்த நாளாக இருக்கும் என்பதெல்லாம் ராஜாங்கம் அறிய முற்படவே இல்லை. ஆகையால் மூன்று பூஜ்ஜியம் போட்டு அதற்குள் கருப்பு அடித்து வைத்தான்.

”உங்க வீட்டோட விலாசம்?”

கையைப் பின்புறமாகக் காட்டி “சாமுண்டிகுளம் ஒட்டி!”

“எது ஊருக்கு வெளிய இருக்க சாமுண்டி குளமா?”

அது ஊருக்கு வெளியவா இருக்கு? என்பது போல ஆச்சரியமாக “ஆமா” என்பது போல தலையசைத்தாள்.

ராஜாங்கத்திற்கு அந்தக் குளம்பற்றி நன்கு பரிச்சயம் உண்டு. அந்தக் குள தூர்வாருதல் நிதியில்தான் எம்எல்ஏ அதிலிருந்து ஆறுகிலோமீட்டர் தொலைவில் நாலு குரௌன்ட்’ நிலம் வாங்கிப் போட்டிருந்தார். மிகப்பெரிய குளம் என்பதால் நிதியும் கொஞ்சம் வலுவாக ஒதுக்கப்பட்டிருந்தது. இன்னொன்று குளம் சுற்றி புறம்போக்கு நிலங்களே இருக்கிறது. அதுவும் மண்சுவர் குடிசைகள். அதில் இருக்கும் ஐம்பது மண் வீடுகளில் இருந்துதான் இவள் வந்திருக்கக்கூடும் என்பதை ராஜாங்கம் அறிந்திருந்தான்.

“புருஷன்” என்று ஆரம்பித்துவிட்டு “அவரு என்ன வேலை பாக்குறாரு?”

“அது என்ன வேலை பாக்குது? யாராச்சும் மரம் வெட்ட, பள்ளம் பறிக்கக் கூப்பிட்டா போகும். வந்த காசை நல்லா குடிச்சிட்டு என்னையப் போட்டு மிதிக்கும்!”

“இப்படிப்பட்ட அரசியல் பொறுப்பில்லாத ஆள ஏ தேடுற?” என்று வெம்பித் தெறிக்க இருந்த வார்த்தையை மென்று முழுங்கி, “ஓ அப்படியா?” என்று அசுவாரஸ்யமாய் முடித்துக் கொண்டான்.

அவள் கிளம்பும்போது ராஜாங்கம், “கவலப்படாத வில்லியம கண்டுபிடிச்சு தர்றது என்னோட பொறுப்பு” என எந்த தைரியத்தில் சொன்னான் எனத் தெரியவில்லை.கூடவே அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு அவளது கைபேசி இலக்கத்தைக் கேட்டான்.

அவள் ஒரு பழைய பர்சிலிருந்து ரப்பரால் மூன்று சுற்று சுற்றப்பட்ட செல்போனைக் கொடுத்து நீங்களே அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று நீட்டினாள். அது மிகுந்த பழமையான அலைபேசி. அது இப்போதும் இயங்குவது ஆச்சர்யம்தான். அதை வாங்கி விசையை அழுத்தினான். அது மெல்லிய குருத்தெலும்பைத் தொடுவது போல தோன்றியது. அதில் அவனது பத்து இலக்கத்தைப் பதிந்து எடுப்பதே அசௌகரியமாக இருந்தது.அவள் அலைபேசியில் இருந்து இவனுக்கு ஒரு அழைப்பு கொடுத்தான். தேடிக்கண்டுபிடித்தாலும் இப்படி ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத பத்து இலக்கம் கிடைப்பது கடிது என்பது போல இருந்தது. ராஸ்தி என்று ஆங்கிலத்தில் அந்த எண்ணை சேமித்துக்கொண்டான்.

குழந்தைக்கு ஒரு ரொட்டி பொட்டலம் வாங்கிக் கொடுத்தால் வெட்கமறியாமல் வாங்கிக்கொள்வாள் என்று நினைத்து ஒன்றை நீட்டினான். மிகுந்த மானஉணர்வோடு மறுத்து நன்றி கூறி நடந்தாள். திரும்பி நடக்கும்போது குழந்தை அவனைப் பார்த்து சிரித்தது. குழந்தையின் பெயரை கேட்டிருக்கலாம் என நினைத்தான். பின்பு வில்லியமுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்னவாக இருந்தால் என்ன? என நினைத்துக்கொண்டான்.

அவள் சென்றதும் மிகுந்த அல்பஉணர்வோடு தாம் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினாலும், அவளில் மூக்குத்தியோடு ஒரு முறை சிரித்தது இன்னும் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை. 

“வில்லியம் திரும்ப வந்துடாத!” என்று எம்எல்ஏ மதியழகன் புகைப்படத்தைப் பார்த்து சொன்னான். எம்எல்ஏ மிகுந்த கனிவுடன் சிரித்துக்கொண்டிருந்தார்.

ராஜாங்கம் அடிப்படையில் ஜாதி வெறியன் இல்லாவிட்டாலும் பற்று உள்ளவன். மதியழகன் இவனை சேர்த்துக்கொண்டதும் இவன் மதியழகனிடம் ஒட்டிக்கொண்டதும் அதே ஜாதிப் பற்றுதல்தான் காரணம்.அப்படிப்பட்ட குறுகிய பாரம்பரியமுள்ளவன் ராசாத்தி விஷயத்தில் தேங்கி நிற்பது அவனுக்கே கொஞ்சம் விந்தையாக இருந்தாலும் அதிலே தொடர நினைத்தான். அன்று இரவுகூட அவளை முற்றிலுமாக அப்புறப்படுத்த முடிவெடுத்தான். அதற்கு முன் கொஞ்ச நேரம் அவளைப் பற்றிய நினைவுகளை ஓடவிட்டு அதன் பின் முழுமையாகத் துடைத்தெறிய எண்ணம் கொண்டவன் அப்படியே தூங்கிவிட்டான்.

ராசாத்தி அப்போது அழகாக இருந்ததால் மெல்லிய நறுமணம்கூட வீசியது. குழந்தை எங்கே என கேட்டதற்கு, உன்னைப் பார்க்க குழந்தை தேவையில்லை என பக்கத்துவீட்டில் கொடுத்து வந்திருக்கிறேன் என்றாள். ராஜாங்கம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தான். அவளை மார்போடு அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட முயற்சிக்கும்போது முடியவில்லை. அப்போதே அது கனவென்று உணர்ந்தாலும் அதிலிருந்து இன்னும் கொஞ்சம் லயிக்க நினைத்தான். “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” அலைபேசி ஒலிதான் அவனை அதிலிருந்து விடுவித்தது.

மணி எட்டு. அதுராஜாங்கத்திற்கு எப்போதும் எழும் நேரத்திலிருந்து ஒருமணிநேர தாமதம். யாரும் அவனைத் தேடமாட்டார்கள். என்றாலும் மக்கள் அவனுக்காக காத்திருப்பது போலவே அவனை நம்பவைத்துக்கொண்டு பரபரப்போடு கிளம்புவான். குளிக்கும்போதுதான் அந்தக்கனவைப்பற்றி நினைத்தான். பிறந்ததில் இருந்து இத்தனை தத்ரூபமாக அவன் கனவே கண்டதில்லை. அவளைத் தொட்டதில் இருந்து வாஞ்சையான பார்வை முதற்கொண்டு துல்லியமாக இருந்தது. நாற்பதுக்கு மேல் மணம் முடிக்காத ஆணின் மனம் இப்படித்தான் மானம்கெட்டுப்போய் பறக்கும் என்பதை கொஞ்சம் நம்ப ஆரம்பித்தான். எப்போதும் சுருங்கிப் பேசும் அவனது நெற்றி அன்று சமமாக இருந்தது.

வண்டியைக் கிளப்பினான். இரண்டு பாதை பிரிந்தது. வலது பக்கம் எம்எல்ஏ அலுவலகம். இடதுபக்கம் சாமுண்டிகுளம். நடந்த போராட்டத்தில் இடதுசாரியாக மாறினான். கொஞ்சம் பதைபதைப்போடு இருந்தது. அவளைக் காதலிக்க ஆரம்பித்து முழுமையாக பதினெட்டு மணிநேரமாகியிருக்கிறது. வழியெங்கும் கரடுமுரடான சாலைகள்குறித்து முதன்முறையாக கவலை கொண்டான். தொகுதி மேம்பாட்டு நிதியின் இறுதிப்போக்கிடம் குறித்து ஒரு கடைநிலை அரசியல்வாதியாக சிந்திக்கவும் செய்தான்.

சாமுண்டிகுளத்தை தூர்வாரிய கழிவுகளில் இருந்து வேயப்பட்டது போல இருந்தன அதை சுற்றிய குடிசைகள். பகுதிமுழுக்க நிசப்தம் நிலவியது. தூரத்தில் குழந்தை அழும் சப்தம்கூட தெள்ளத்தெளிவாகக் கேட்டது. யாரை அணுகுவது என ராஜாங்கத்திற்கு தயக்கம். வெக்கை காற்றுகூட குளத்தில் ஊடுருவி குளிர்ந்த காற்றாக அவன்மீது வீசியது. கண் மூடி வெகுவாக ரசித்தான். ஒரு மனிதனைப் பார்த்தாலே அவனை ஆராய்ந்து அவனால் என்னென்ன ஏற்படும், பணபலம் என்ன என்பதை மோப்பமிட்டு உட்கார்ந்திருக்கும் ராஜாங்கம் அன்று புதிதாக இருந்தான்.

நான்கு பெண்கள் குளத்தில் இறங்கி குடத்தில் நிரப்பி நீர் எடை போக்கில் ஒரு சுற்று சுற்றி லாவகமாக இடுப்பில் தூக்கி வைத்தார்கள். இடுப்பில் இருக்கும் நிரப்பிய குடத்தின் சுமையைப் பொருட்படுத்தாமல் சாவகாசமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களிடம் விசாரிக்கலாமா என யோசித்தான். அவர்களையும் விட்டால் வேறு இதுபோன்ற இயல்பான வாய்ப்பு கிட்டாது என அவர்களை நெருங்கினான். 

“ராசாத்தி வீடு எங்க இருக்கு?”

நால்வரில் இருந்த ஒரு மூதாட்டி அவசரமாக தன் மாராப்பை இழுத்து மூடிக்கொண்டாள். ராஜாங்கம் இதை மிகுந்த அவமானமாக உணர்ந்தான். எனிலும் வந்த வேலைக்கு இந்த அவமானம் ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்திருந்ததால் மீண்டும் அழுத்திக் கேட்டான், 

““ராசாத்தி வீடு எங்க இருக்கு?”

பெண்கள் தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொண்டார்கள். பின்பு ஒரு பெண், 

“எதுக்கு? நீங்க போலீசா?”

“நான் போலீஸ் இல்ல! எம்எல்…

“அப்புறம் ஏன் புல்லட்ல வந்துருக்கீங்க?”

“புல்லட்ல வந்தா போலீசா? என்ன கொடுமையா இருக்கு. பேசாம காலாகாலத்துல வீட்ல சொன்ன புள்ளயாவே கல்யாணம் பண்ணிருக்கலாம்” என ராஜாங்கம் அவனுக்குள்ளே நொந்து கொண்டான். தொகுதி மக்கள் இந்தளவுக்கு அடிப்படை அறிவு இல்லாதது குறித்து ஒரு எம்எல்ஏவின் பிஏகளின் ஒருவனாக கவலையும் கொண்டான்.

“இல்லங்க, நா எம்எல்ஏ ஆபீஸ்ல இருந்து வந்துருக்கேன். நேத்து ராசாத்தி அவங்க புருஷன் பேரு….!”

“வில்லியம் எங்க அண்ணேதான்!” என்று அதிர்ச்சியில் ஒருத்தி குடத்தைக் கீழே போட்டாள். அதில் எழுந்த சப்தத்தில் ராஜாங்கம் பயந்துவிட்டான்.

பக்கத்தில் இருந்த பெண்தான் சொன்னாள், “இவ வில்லியம் அண்ணனோட தங்கச்சி!”

அந்தப்பெண் இவன் காலிலும் விழுந்தாள். “எங்க அண்ணனை நீங்கதான் கண்டுபிடிச்சு குடுக்கணும் சார். போலீஸ்ட சொல்லி ஒரு புண்ணியமும் இல்ல. நீங்கதான் அண்ணனைத் தேட சொல்லணும்!” ராஜாங்கம் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு அழுதாள். கூட்டம் கூடியதும் அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. இப்படியெல்லாம் அவன் அடித்தட்டு மக்களின் நடுவே நின்றதே இல்லை. 

மிகவும் கடினப்பட்டுதான் அதிலிருந்து விடுபடவேண்டியதாகி இருந்தது. 

“அழாதம்மா, அதுக்குதான் வந்துருக்கேன்” என்று சொன்னால் மிக சாதாரணமாக இருக்கும் என்பதால் “எம்எல்ஏ நேரில் பாத்து விசாரிச்சிட்டு வர சொன்னதால்தான் வந்துருக்கேன்” என்று அவனையும் அறியாமல் ஒரு பொய் விழுந்தது. கூட்டத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட விளைவு என்பதையும் அறிந்தான்.

கூட்டத்தில் ஆண்கள் என்று யாருமே இல்ல. எல்லோரும் வெளிவேலைக்கு சென்றிருக்கலாம். ஒரு வயதான மூதாட்டி எல்லோரையும் விளக்கிவிட்டு அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தினாள். 

“வந்த மனுசனை உட்கார வைக்காம ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்களே, பொம்பளையாடி நீங்க?” என்று சொற்றொடரின் இறுதியில் ஒரு கெட்டவார்த்தையை இறக்கினாள். ரகசியமாக பார்த்து செல்ல முற்பட்ட ஒரு காரியம் இந்தளவுக்கு பகிரங்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் விஷயம் எம்எல்ஏ காதுக்கு போனா அவ்வளவுதான் என்றும் அவன் உள்ளூற பயந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“வாங்க தம்பி ராசாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்று மூதாட்டி அவன் கையைப் பிடித்து செல்வதைப் பார்த்து இரண்டு இளம்பெண்கள் சிரித்தார்கள். அந்த மூதாட்டி அவர்களுக்கே உரிய வயது பக்குவத்துடன் மாராப்பை சரி செய்யாமல் படுஅலட்சியமாக இருந்தது அவனுக்கு இவள் மீதான நன்மதிப்பை உயர்த்தியிருந்தது.

வீட்டுவெளியில் அடுப்புகள் எரிந்துகொண்டிருந்தது.மணமக்களை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் என எழுதியிருந்த பிளக்ஸ் போர்த்தப்பட்ட வீட்டின் முன்பாக நின்றார்கள். எல்லா வீடுகளின் கதவுகளும் திறந்தே கிடந்தன. அது இல்லாதிருப்பின் அப்பட்டமாக தெரியவில்லை ஒருவித நம்பிக்கையின் நீட்சியாக தெரிந்தது.

“இந்தாடி ராசாத்தி!” என்று சாமுண்டிகுளம் எதிரொலிக்க கத்தினாள். வீடுகள் திறந்திருந்தாலும் வெளியே இருந்து அனுமதி கேட்கும் மூதாட்டியின் செயல் இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ராசாத்தி வெளியே வந்தாள். அவனைப் பார்த்த இரண்டு நொடிக்குள் எட்டு வகையான அபிநயம் பிடித்தாள். பின்பு சிரித்துக்கொண்டே அவனை உள்ளே வருவீர்களா? எனும் தயக்கத்துடன் அழைத்துச் சென்றாள்.

“எம்எல்ஏவே விசாரிக்க அனுப்பிருக்காராம். எல்லாத்தையும் இந்த தம்பிகிட்ட சொல்லுடி. நா போய் குடிக்க எதாவது வாங்கிட்டு வர்றேன்!”

அழுக்கடைந்த போர்வையை விலக்கினாள். அதைவிட மாசடைந்த கயிற்றுக்கட்டில் தெரிந்தது. அதில் உட்காரச் சொன்னாள். குழந்தை படுத்திருந்த தொட்டில் லேசாக அசைந்து தொட்டி வழியே சிறுநீர் கழித்தது. கடைசி சொட்டு சிறுநீர் வெளியேறியதும் மீண்டும் தொட்டில் இயல்பு நிலைக்குப் போனது. 

“சொல்லுங்க சார்!”

“நேர பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்! அதுவில்லாம இன்னும் கொஞ்சம் விஷயம் தெருஞ்சா போலீஸ்ட பேச வசதியா இருக்கும்! ”

“எப்பவும் இப்படித்தான் என்னையும் புள்ளையையும் விட்டுட்டு போயிருவாரு. ஆனா ரெண்டு, மூணு வாரத்துல வந்துருவாரு. இப்ப முழுசா மூணு மாசமாச்சு. அதான் வயித்துல புளியகரைக்குது!” என கண்ணீரை வழிய விடாமல் கண்ணிலே பிழிந்து எடுத்து அழுதாள்.ஆனாலும் அழும்போது இன்னும் அழகாக இருக்கிறாள் என்று மனதுக்குள்ளே சொல்லிவிட்டு தன்னைத்தானே கடிந்து கொண்டான், ராஜாங்கம்!

என்ன சொல்வது என்று தெரியாமல் மேற்கூரையைப் பார்த்தான். பலமாக காற்றடித்தால் வீடு நிச்சயமில்லாததன்மை. 

“போலீஸ் என்னதான் சொன்னாங்க?” 

“சம்பந்தமே இல்லாம எங்கங்கயோ அலய வச்சாங்க! அப்புறம் போன் நம்பர் வாங்கிட்டு அனுப்பிட்டங்க. எனக்கு அவங்க மேல நம்பிக்கையே போச்சு. கடைசியா அந்தக் டீக்கடக்காரண்ணே சொல்லி நம்பிக்கையா உங்ககிட்ட வந்தேன்!” 

அந்த மூதாட்டி குளிர்பான பாட்டில் ஒன்று நீட்டினாள். குடிசைக்கு வெளியே சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மிகுந்த யோசனைக்குப் பின்னர் ராஜாங்கம் அதை வாங்கிக் குடித்தான். உப்புசப்பில்லாமல் இருந்தது. இவனது முக நெளிவை அறிந்து கொண்ட வயதானவள். 

“ஜிஞ்சர் சோடா இல்ல. அதான் வெறுஞ்சோடா வாங்கியாந்தேன்!” 

வந்த வேலை வெவ்வேறு பரிணாமங்களில் செல்வதை அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வெறும் சோடாவை அவன் வாழ்வில் குடித்ததே இல்லை. அவன் சோடா குடித்துக் கொண்டிருப்பதை ஓரங்கநாடகம் போல ஒரு பத்து ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது. இந்தளவுக்கு பகிரங்கமாக காதல் செய்ய வாய்ப்பில்லாததால் கிளம்ப எத்தனித்தான்.

“நா கிளம்புறேன். உங்க வீட்டுக்காரர் கண்டிப்பா கிடச்சிருவார்!” என்பதை ஜீவனே இல்லாத வார்த்தைகளில் சொன்னான்.

மூதாட்டி இவனுக்கு முன்னால் குடிசையை விட்டு வெளியே போனாள். இவனும் அவளைத் தொடர்ந்து வெளியே செல்ல முயன்றபோது, 

“சார்!”

ஆவலாக அவள் பக்கம் திரும்பினான்.

உங்க பேரு?” என்பதைக் கேள்வியாக இல்லாமல் விண்ணப்பம் போல வைத்தாள்.

“ராஜாங்கம்!” 

கேட்டதும் மெல்லியதாய் சிரித்தது விட்டு தொட்டிலைக் காட்டி, “என்னோட பையன் பேரு ராஜாராம்!” என்றாள்.

பதிலுக்கு ராஜாங்கம், “நல்ல பெயர்!” என்று சொன்னான். தான் நாகரீகவாதியெல்லாம் இல்லை என்பது அவனுக்கே தெரிந்தாலும் தான் கொஞ்சம் மாறியதைப் போல உணர்ந்தான். 

வெளியே வந்தான். எந்த சலனமே இல்லாமல் மனம் கலங்கியிருந்தது. ஆனாலும் அவள் மீதுள்ள மெல்லிய ஈர்ப்பு அப்படியே இருந்தது. இருபுறமும் பெண்கள் கூடியிருந்தார்கள். நேற்று நண்பகலில் இருந்து நடந்த எல்லா விஷயமும் யாவும் இவன் இயல்புக்கு மாறாக முரண்பட்டு இருந்தது. இவனை வழி நடத்தும் உணர்வுகுறித்து குழப்பமாக இருந்தது. அவள்மீது விழுந்துள்ள உறவுகுறித்து யோசிக்க யோசிக்க இன்னும் தலை வலித்தது அவனுக்கு.

வண்டியை அடைந்தான். இரண்டு சிறுவர்கள் ஏறி விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் பதறியபடி ஓடிவந்து அவர்களை விரட்டியடித்தாள். புல்லட்டை இரண்டு மூன்று முறை உதைத்த பின்புதான் வண்டிக்கு சாவி போட்டான். வழியெங்கும் யோசனைகள். தனித்திருத்தல் வலி அவனை வாட்டியது. 

நிரந்தரமாக ஏதுமில்லாமல் ஒரு அரசியல்வாதிக்கு அடியாள் போல வாழ்வு குறித்து கொஞ்சம் அச்சமாக இருந்தது. தானும் வில்லியம் போல ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என நினைத்தான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்காவது தேட ஒரு அழகிய மனைவி இருக்கிறாள். நமக்கு என்ன இருக்கிறது? இருக்கும்வரை அம்மா தேடுவாள்? இல்லாதபோது? எனும் கேள்வி ராஜாங்கத்தை இம்சை செய்தது. அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பெயர்கூட அர்த்தமில்லாமல் இருப்பது குறித்து நீண்ட பெருமூச்சு வந்தபோது காவல் நிலையத்தை அடைந்திருந்தான்.

அவன் நேரத்துக்கு நன்கு பழக்கமான அதிகாரி தன் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் விஷயத்தை சுருக்கமாக சொன்னான்.

ஏதோ நீண்ட நேரம் யோசித்தவர், பட்டென்று சொன்னார். 

“அந்த சாமுண்டிகுளம் ஸ்லம் ஏரியா வில்லியம தான சொல்றீங்க?”

“ஆமா ஸார்!”

“உங்களுக்கு தெருஞ்சவன்களா?” என்ற அந்த அதிகாரியின் முகத்தில் கிண்டல் தொனி இழயோடுகிறதா? என்று கவனித்தான். 

“இல்ல ஸார், அவனோட பொண்டாட்டி ஆபீஸ் வந்துச்சு!” 

“என்ன ஸார், எத்தனை தடவ போன் பண்ணி கூப்புடுறது? சம்பந்தமே இல்லாம உங்க ஆபீஸ்க்கு ஏ போனாங்க?”

“என்ன ஸார் விஷயம்!”

“ரெண்டு ஆக்சிடென்ட்ல. பாடி ஐடென்ட்டிஃபிகேசனுக்கு கூப்பிட்டா வரவே மாட்றாங்க!”

“நேர போய் சொல்ல வேண்டியதுதானே?”

“எங்க ஸார், ரெண்டு தடவ நேர்ல போனா சரியாவே பதில் சொல்ல மாட்றானுங்க!” என்ற அதிகாரியின் பேச்சில் நேர்மையே இல்லை.

இப்ப என்ன சார் பண்றது?

“ஒர்நிமிஷம்!” என்ற அதிகாரி அடுக்கி வைத்திருந்த டஜன் ஃபைல்களில் ஒன்றை மட்டும் பாதுகாப்பாக எடுத்து வந்தார். அதில் நிறைய புகைப்படங்கள் இருந்தது. அவை அனைத்துமே கோரமான முகத்துடன் சாவைத் தேடிக்கொண்ட சடலங்களின் தொகுப்பாக இருந்தது. 

அதை ஒவ்வொன்றாக ரசனையுடன் அவன் முன் அடுக்கினார். எதுவுமே காணமுடியாத அளவுக்கு இருந்தது. ஒரு புகைப்படம் எங்கோ பார்த்தது போல இருந்தது. அதை மட்டும் தனியாக எடுத்தான். ராஜாங்கம் கிளம்பும்போது ராசாத்தி கொடுத்தனுப்பிய புகைப்படத்தில் அணிந்திருந்த சிலுவை போலவே ஒருவன் கழுத்தை ஒட்டி அணிந்திருந்தான்.

“என்ன ஸார், ஒரு மாதிரியா இருக்கீங்க? இந்த ஆள்தானா?”

“சரியா தெரியல ஸார்!” என்று எழுந்து வெளியே வந்தான். இனி ராசாத்தியை சந்திக்கக்கூடாது என்ற முடிவுடன் வண்டியை மிதித்தான். வண்டி எம்எல்ஏ அலுவலகம் நோக்கி சென்றது. அலுவலகத்தைப் பார்த்ததும் ஒரு பெரிய துயரில் இருந்து மீண்டது போல இருந்தது. அலுவலகத்தின் வெளியே எம்எல்ஏவின் கார் நின்றது. வழக்கம்போல மூவர் துடைத்துக்கொண்டிருந்தார்கள். இவனுக்கான இடம் காலியாக இருந்தது. ராஜாங்கம் நாலாவது ஆளாக சேர்ந்து கொண்டான்!

4 Replies to “பிடிபடா சலனங்கள்”

  1. What a powerful storytelling! Reminds me of the writer’s writer Asokamithran. Absurdities of life and still a human being’s persistence in comforting routines, almost as a way coping with the former, has been captured nicely. So much behind the allakkai carwasher that we all can find lot of similarities with him if we care to dig deeply inside ourselves. Can’t stop thinking about absurdism of Nobel winner Albert Camus and Thaayumaanavar’s ‘yOsikkum vELaiyil pasi tIra uNbadum uranguvadumAga muDiyum’. Take a bow, Rafeek Raja!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.