வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது

பொதுவான வண்ணப்படக்கலையை விற்கும் விஷயங்கள் சிலவற்றை இதுவரை நாம் பார்த்தோம்.

இந்தப் பகுதி என்னுடைய தனிப்பட்ட அனுபவம் பற்றியது.

எந்த வண்ணப்படம் விற்கும் என்பதை சரியாக யாராலும் சொல்ல முடியாது. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து அருமையாக படம் பிடித்து மேலேற்றினால், அந்தப் படத்தை யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முதலில் விற்ற என்னுடைய படங்கள் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. மாறாக, என்னைத் தவறாக சந்தையை கணிக்கத் தூண்டியது. என் தன்னம்பிக்கையை குலைக்கவும் செய்தது. ஏன், அசட்டுத்தனமாக இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்குப் போட்டேன் என்று பல தருணங்களில் நினைக்க வைத்தது. நான் எந்தப் படங்கள் சிறந்தவை என்று எண்ணியிருந்தேனோ, அவை அதிகம் விற்றதே இல்லை!

விருதாவது மண்ணாவது!

கனடாவில் உள்ள மானிடூலின் (Manitoulin Island, ON) என்ற தீவு, உலகில் உள்ள நன்னீர் தீவுகளிலேயே மிகப் பெரியது. அங்கு நான் எடுத்த படங்கள் கனேடிய புவியியல் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால், விற்ற மானிடூலின் படங்கள் யாவும் கனேடிய புவியியல் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. அங்கீகரிக்கப்பட்ட வண்ணப்படம் மாலையில், அங்குள்ள படகுத் துறையில் எடுக்கப்பட்டது. எல்லா ஏஜன்சி கண்ணிலும், அதில் ‘யமஹா’ -வின் சின்னமே (விசைப்படகு எஞ்சினின் முடிசூடா மன்னன் யமஹா) கண்ணில் பட்டு, நிராகரித்துத் தள்ளினார்கள்! யமஹாவை நீக்கி மேலேற்றிய படங்கள் பெரும்பாலும், சில பிரதி விற்பனைக்குப் பின் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

நம்பிக்கையுதிர் காலம்!

கிழக்கு கனடாவில் இலையுதிர் காலம் மிகவும் அழகான ஒரு இயற்கைப் பருவம். இந்தப் பருவகால இயற்கைப் படப்பிடிப்பு எனக்குப் பிடித்த ஒன்று. பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து, சில நூறு படங்கள் எடுத்தும், அதிக விலைக்கு விற்றதென்னவோ, என்னுடைய வீட்டிற்கு முன்னிருக்கும் மேபிள் மரத்தின் ஒரு வண்ணப்படம்! வெறும் விற்பனையை மட்டும் கருத்தில் கொண்டால், எந்த ஒரு படம்பிடிக்கும் முடிவும் எடுக்க இயலாது. அழகிய இடங்களைத் தேடிப் படம் பிடிக்கும் முயற்சியையே நீங்கள் கைவிட வேண்டும். என்னுடைய படிப்பினை இதுதான்: ஒவ்வொரு நல்ல வண்ணப்படமும் அதன் தேவை இருந்தால், எப்போதாவது விற்கும். கலைஞரின் வேலை, நல்ல படங்களை எடுப்பது. 1990 -களில், பிரபலமாகாத இளையராஜா பாடல் திடீரென்று காலம் தாண்டி பிரபலமாவதைப் போன்ற விஷயம் இது. என் வீட்டு மரம் இடம் பெற்ற வண்ணப்படத்தில், இருந்த ஒரு முக்கிய விற்பனை அம்சம், அழகை விட, பயனாளருக்காக நான் விட்டு வைத்த இடமோ என்று சில சமயம் தோன்றும். பெரும்பாலும், இலையுதிர் கால வண்ணப்படங்கள் அடர்த்தியான மரங்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் படம்பிடிக்கும் – அவற்றில் வெற்று இடம் அதிகம் இருக்காது.

கிழக்குக் கோடி, இணையத்தின் எங்கோ ஒரு கோடி!

கனடாவின் நியுஃபின்லாந்து என்பது ஒரு அழகிய தீவுப் பிராந்தியம். அங்கு 10 நாட்கள் பயணம் செய்து எடுத்த வண்ணப்படங்கள், கனேடிய புவியியல் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால், விற்ற நியுஃபின்லாந்து படங்கள் என்னவோ, செயிண்ட் ஜான் என்னும் தலைநகரத் துறைமுகப் படம். அந்தத் தீவில் மிக அழகிய fjords மற்றும் அழகிய மலைகள் ஒரு ஏரியைச் சுற்றி மனதைக் கொள்ளை அடிக்கும் காட்சி, என்னைப் பலநூறு படங்களை எடுக்கத் தூண்டியது. இந்தப் படங்கள் சில வெற்றி பெற்றாலும் விற்பனை என்னுடைய எதிர்பார்ப்பை விட மிகக் குறைவுதான்.

வித்தியாசமாகச் சிந்தித்தால் வெற்றி பெற முடியும் என்று பல முயற்சிகளில் ஈடுபட்டாலும், சில படங்கள் வெற்றி பெற்றன. பல தோல்வியுற்றன. முதலில், வெற்றியிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

அமைதியான நதியிலே ஓடம்

எங்கள் ஊரில் ஓடும் ஒரு சிறு நதி, ராட்சச ஏரியில் கலக்கும் இடம் எல்லோருக்கும் பிடித்த இடம். அங்கு ஒரு கலங்கரை விளக்கமும் உண்டு. சலசலப்பான அந்த இடம் என்றும் அமைதியான ஒன்றாகத் தோற்றமளித்ததில்லை. ஒரு மாலை, அந்திப் பொழுதில், அந்தக் கலங்கரை விளக்கம் மற்றும், அங்கு நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகு, மற்றும் ஓடும் நதியை ஒரு long exposure -ல் படம் பிடித்தேன். நதியின் அலைகள் மற்றும் விசைப்படகினால் வரும் தாற்காலிக அலைகள் யாவும் மழுங்கடிக்கப்பட்டன. இந்த வண்ணப்படம், மிக அதிக முறை தறவிறக்கம் செய்யப்பட்ட என்னுடைய வண்ணப்படம் – கிட்டத்தட்ட 100 தரவிறக்கங்கள்!. அதில் என்ன அப்படித் தனித்தன்மை? இன்றும் புரியாத புதிர்களில் ஒன்று! அவசர நகர வாழ்க்கையிலும் அமைதியைக் காட்டுகிறதா? அல்லது, இயற்கையை மறக்கக் கூடாது என்று நமக்கு நினைவூட்டுகிறதா? நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது. இத்தனைக்கும், படகுத் துறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒளிப்படச் சூழல். இந்தச் சூழலில், குறைந்தபட்சம், ஒரு 300 உயர்தர வண்ணப்படங்கள் விற்பனைக்கு உள்ளன. மற்ற படங்கள் ஐந்தோ, பத்தோ விற்பனையாகின்றன. இந்தப் படத்தில் உள்ள தனித்துவம் பற்றி, தமிழ் சினிமாக்காரர்கள் பட அறிமுக விழாவில் கொடுக்கும் பில்டப் போல எதுவும் கொடுக்க என்னால் முடியாது!

சாராய சாம்ராஜ்யம்

நான் பணி புரியும் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு இடம், புகழ்பெற்ற கனேடிய பியர் தொழிலின் மையம். இங்கு பல பழங்காலக் கட்டிடங்கள், மற்றும் உயர்தர உணவகங்கள் உண்டு. இந்த இடத்தின் வாசலில், ஒரு மிகப் பெரிய பியர் பீப்பாயை வைத்திருப்பார்கள். அதை எல்லோரும் பொருட்படுத்தாமல் தாண்டிச் செல்வது வழக்கம். என் கண்ணில், அந்த பீப்பாய், அத்தொழிலின் ஒரு குறியாகப் பட்டது. அங்கு பல்வேறு வண்ணப்படங்களை ஒரு கோடைகால மதிய வேளை இடைவெளியில் படமாக்கினேன். இந்த பியர் பீப்பாய் வண்ணப்படம், அங்கு நானெடுத்த படங்களில் அதிகமாக விற்ற படம்.

நான் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு சில மணி நேரப் பயணத்தில், மதுத் தொழில் மையம் (தென் அண்டேரியோவின் மிகப் பெரிய தொழில்) ஒன்று இருப்பது இன்னொரு வண்ணப்படக் கலைஞரின் ப்ளாக் மூலம் அறிந்தேன். அத்துடன், அங்கு அழகிய ஏரிக்கரையும் இருப்பது தெரிய வந்தது. அந்த வைனரி (winery) இருக்கும் இடம் சுத்தமாக மனித நடமாட்டமில்லாத இடம். நான் அங்கு சென்ற போது யாருமே இல்லை. அங்கும், திராட்சை மரங்களுக்கு முன் ஒரு பெரிய பீப்பாயை வைத்திருந்தார்கள். இத்தனை உப்பு சப்பில்லாத (இந்த மதுவில் உப்பில்லைதான் 😊) விஷயத்தை ஏன் இவ்வளவு தூரம் எழுத வேண்டும்? இதுவரை, இந்த இரு தளங்களில் எடுத்த பீப்பாய் வண்ணப்படங்கள் ஏறக்குறைய 50 -க்கு மேல் விற்பனை ஆனது! இதன் ரகசியம் இன்றுவரை எனக்குப் புரியவில்லை! இந்த மது மையங்களில் நான் எடுத்த மற்ற வண்ணப்படங்கள் பீப்பாய் படங்களை விட என்னைக் கவர்ந்தவை! எனக்குத் தெரிந்தவரை வண்ணப்படக்கலையின் சில முக்கிய விதிகளை இந்தப் படங்களில் பின்பற்றினாலும், என்னுடைய எத்தனையோ ஆயிரம் படங்கள் அதே விதிகளைப் பின்பற்றியும், விற்கவில்லை. கடைசியில், என்னைத் தேற்றிக் கொள்ள நான் நினைப்பது, “யாருக்கு என்ன தேவையோ, யார் கண்டார்?”

விற்கும் செயற்கைப் பறவைகள்

கனடாவின் மிகப் பெரிய விமான தளம், நான் வசிக்கும் இடத்திலிருந்து மிகவும் அருகாமையில் உள்ளது. சில இணையதளங்களை ஆராய்ச்சி செய்து, கீழிறங்கும் விமானங்களை படம் பிடிக்கும் இடங்களைக் கண்டுபிடித்தேன். பிறகு, அங்கு சென்று சில நூறு படங்கள் எடுத்த பின், பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. கண்ணிற்கு சோம்பேறித்தனமாக கீழிறங்கும் விமானங்கள், அருகாமையில் படம் பிடித்தால் தெரியும் அவற்றின் வேகம்! ஓரிரு சுமாராக வந்த படங்களை ஆராய்ந்ததில், நான் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அத்துடன், எந்த நேரத்தில், உலகின் மிகப் பெரிய விமானங்கள் எங்கள் ஊருக்கு வருகின்றன என்ற ஆராய்ச்சியும் உதவியது. நல்ல வேளையாக , மாலை 3 முதல் 5 மணிக்கு இடையில் அவை வந்தடைவதை அறிந்தேன். அத்துடன், எந்த ஓடுபாதையில் வந்திறங்கும் என்று கண்டறிந்தேன். ‘அது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு மணி நேரத்தில், 150 படங்கள் அருமையான வெளிச்சத்தில் பதிவு செய்தேன். இந்த வண்ணப்படங்களிலும் பிரச்சினை இல்லாமல் இல்லை. அதில் ஒரு ‘எமிரேட்ஸ்’ அல்லது ஒரு ‘ஏர் கனடா’ என்று எழுதியிருந்தால், ஏஜன்சிகாரர்கள் தாளித்து விடுவார்கள்! 150 படங்களைச் சரி பார்த்து, அவற்றில் வியாபாரக் குறிகளை நீக்குவது அலுப்பு தட்டும் வேலை. இதனால், அவற்றை, எடிடோரியல் சமர்ப்பணமாக்க முடிவெடுத்தேன்.. இதில், 50 படங்கள் சிறந்தவை என்று மேலேற்றியதில், குறைந்த செலவில் அதிக விற்பனையான படங்கள் இவை!. விமானக் கம்பெனிகள் பற்றிய செய்திகள், விமானம் பற்றிய கட்டுரைகள், அல்லது, இத்துறை சார்ந்த எந்த ஒரு விஷயத்திற்கும் ஊடகங்களுக்கு படங்கள் தேவை. அவற்றில் சில தேவைகளை என் படங்கள் பூர்த்தி செய்கின்றன என்பது என் கணிப்பு.

பல்கலை வண்ணங்கள்

ஒரு முறை பாஸ்டன் சென்றிருந்த பொழுது, புதிதாக வாங்கிய ஓர் அகலக் கோண லென்ஸை சோதிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள சில கட்டிடங்களைப் படம் பிடித்தேன். அவை நன்றாக வரவே, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்டு, கனடாவில் உள்ள வாட்டர்லூ மற்றும் மெக்மாஸ்டர் என்று பல்கலைக்கழகப் கட்டிடங்களைப் படமெடுத்து Editorial வண்ணப்படங்களாக மேலேற்றினேன். இந்தப் பலகலைக்கழகங்கள் யாவும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள். ஏதாவது புதிய அணுகுமுறை, ஆராய்ச்சி, மற்றும் கண்டுபிடிப்பு என்று செய்திகளில் வர வாய்ப்புண்டு. அப்படி செய்தி வெளியிடும் பொழுது, இவ்வகை புதிய வண்ணப்படங்களை செய்தி நிறுவனங்கள் நாடும். மிகக் குறைந்த செலவில் (இதற்கென்று அதிகம் மெனக்கெடுவதில்லை) உருவாக்கப்படும் இவ்வகை வண்ணப்படங்கள் எனக்கு உதவியிருக்கின்றன. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சில பழைய, அழகான கட்டிடங்கள் உள்ளன. அவற்றைப் படம் பிடிக்க சரியான ஒளி, மற்றும் கோணம் தேவை. அங்கங்கு, மாணவர்கள் நடந்து செல்வது தூரத்தில் தெரிந்தாலும் நல்லது. வட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மிகவும் பெரிய அமைப்புகள். கால்நடையாக அவற்றைக் கடப்பது மிகவும் கடினம். ஆயினும், இவற்றைப் படம் பிடிக்க அதிக செலவாவதில்லை. அத்துடன் நான் வாழும் இடத்திலிருந்து சில மணி நேரப் பயணத்தில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பது எனக்கு உதவியது. குறிப்பாக, நான் சொன்ன வாட்டர்லூ, மெக்மாஸ்டர், ஹார்வர்டு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் படங்கள் மிக வித்தியாசமானவை.. நான் நினைத்ததைப் போல, இவ்வகை பல்கலைக்கழக வண்ணப்படங்கள் அவ்வப்பொழுது விற்றுக் கொண்டே இருக்கின்றன.

அகலமாகக் கால் வைத்தால் நல்லது!

வழக்கமாக நாம் காணும் வண்ணப்படங்கள், பெரும்பாலும், அகல நீள விகிதம் 6:4 அல்லது 4:6 –ல் அடங்கும். இயற்கை வண்ணப்படங்களில், பெரும்பாலும் 6:4 விகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அகலமான எந்த ஒரு மின்னணுப் படம், அல்லது ஆவணத்தை உருவாக்கினாலும், அதை landscape என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இன்று, பல புதிய தேவைகள் டிஜிட்டல் வண்ணப்படங்களால் நிறைவு செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று, மிக அகலமான வண்ணப்படங்கள். இவற்றை, பானராமிக் காட்சிகள் (panoramic images) என்று அழைக்கிறார்கள். இவற்றை உருவாக்குவது சற்றுக் கடினமான வேலை. ஒரு பரந்த இயற்கைக் காட்சி முன், காமிரா தாங்கியில் துல்லியமாகக் காட்சியைப் பல பிரிவாகப் பிரித்து, ஒரே உயரத்தில், பகுதி பகுதியாகப் படம் பிடிக்க வேண்டும். பதிவாக்கப்பட்ட வண்ணப்படங்களை கணினியில் மேலேற்றி, தேவையான திருத்தங்களைச் செய்து, கணினியிடம், எல்லாப் படங்களையும் இணைக்கச் சொல்ல வேண்டும். இதனால், உங்களுக்கு ஒரு மிக அகல வண்ணப்படம் உருவாகும்.

என்னுடைய சில அகல இயற்கை வண்ணப்படங்களை, 79:26 போன்ற விகிதங்களில் உருவாக்க முடிந்தது. கனடாவின் மேற்கு பசிஃபிக் கரையில் உள்ள ஒரு கலங்கரை விளக்க வண்ணப்படம், அமெரிக்காவில் உள்ள அரிஸோனா மாநிலத்தில் பாலைவனத்தில் வளைந்து செல்லும் கொலராடோ நதி என்று என்னுடைய பல அகலவண்ணப்படங்கள் விற்ற வண்ணம் இருக்கின்றன. இவ்வகை அகல வண்ணப்பட உருவாக்கம் என்பது திறன்பேசியிலும் இன்று சாத்தியம். ஆயினும், இவ்வகை திறன்பேசிப் படங்களில் துல்லியம் இல்லாததால், இந்தப் படங்களின் நேர்த்தி என்னுடைய உழைப்பிற்கும், தொழில்நுட்பத்திற்கும் கிடைத்த சிறு வெற்றி என்று நினைக்கிறேன்.

அடுத்த பகுதியில், என்னுடைய வண்ணப்பட வியாபாரத் தோல்விகளை அலசுவோம்.

(தொடரும்)

Series Navigation<< எத்தகையப் படங்களுக்கு வரவேற்பு அதிகம் ?என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.