வாழ்வும் தாழ்வும்

தோழர் ஸ்ரீயுத ராஜராஜ சோழனையும் அவருடைய தர்மபத்தினி லோக மகாதேவியையும் இன்று உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.

“கொஞ்சம் பொறுங்கள்; இந்தச் சரித்திரப் புள்ளிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?”

“தெரிந்திருக்கலாம்; ஆனால்…,”

“தெரிந்திருந்தால், இவர்கள் தங்களை வோட்டர்களாகப் பதிவு செய்து கொள்ளும்படி விண்ணப்பம் அனுப்பிவிட மாட்டார்களா?”

“இல்லை; அது சாத்தியமில்லை.”

“ஏன் சாத்தியமில்லை? அவர்களுக்கு ஏதாவது சொத்து, சுதந்திரம் உண்டோ?”

“உண்டு என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யம்.”

‘சரி, சரி; அப்படியானால் அவர்கள் பெயர் வோட்டர் ஜாபிதாவில் வந்துவிடும். தேர்தலில் காங்கிரஸ்காரர்களுக்கே வோட்டுப் போடச் சொல்லுங்கள்.”

“அதுவும் நடக்கக் கூடியதில்லை…”

“ஒருவேளை வண்டி அனுப்பினால் வருவார்களோ? அனுப்பி விட்டால் போகிறது!”

அதற்கும் ஒரு சங்கடம் இருக்கிறது; அவர்களுடைய இப்போதைய விலாசம் நமக்குத் தெரியாது. இவர்கள் ஊரைவிட்டுப் போய் 900 வருஷங்கள் ஆகின்றன.

“என்ன! 900 வருஷமா? அப்படியானால் அவர்கள் இறந்து போய் விட்டார்களா?”

“ஆமாம்; அப்படித்தான் ஊகிக்க வேண்டியிருக்கிறது.”

“அட மகாதேவா! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? இறந்து போய்விட்டார்கள், வோட்டுக் கொடுக்க வரமாட்டார்கள் அப்படிப்பட்டவர்களைப் பற்றி இப்போது நமக்கென்ன கவலை?”

இந்தக் கட்டுரை எழுத ஆரம்பித்தபோது எனக்கும் என்னுடைய சிநேகிதர் மிஸ்டர் கேள்விக்குறி அவர்களுக்கும் ஏற்பட்ட விவாதத்தை மேலே கொடுத்திருக்கிறேன். இந்தச் சிநேகிதர் என்னுடன் இணைபிரியாமல் என் மனத்திற்குள்ளேயே இருப்பவர். அடிக்கடி இப்படித்தான் வாக்குவாதம் தொடங்குவார். ஒரு மாதத்திற்கு முன்னாடியாயிருந்தால், அவர் ஒரு வேளை ஜயித்திருப்பார். ஆனால், இப்போது அவர் ஆட்சேபத்தை நான் பொருட்படுத்தவில்லை. ஸ்ரீ ராஜராஜ சோழனுக்கு வோட்டுரிமை இல்லாவிட்டாலும், அவனைப் பற்றிக் கொஞ்சம் கவனம் செலுத்தத் தகும் என்றே முடிவு செய்தேன்.

இந்த உறுதி எனக்கு ஏற்பட்டதற்குக் காரணம், சமீபத்தில் நான் தஞ்சாவூருக்குப் போய், அங்குள்ள பிரஹதீஸ்வரர் ஆலயத்தைப் பார்த்துவிட்டு வந்ததுதான். அன்று எழும்பூர் ஸ்டேஷனில் நான் தஞ்சாவூர் போக ரயில் ஏறியபோது இன்னொரு சிநேகிதரும் அவருடைய மனைவியும் செங்கற்பட்டுக்குப் போக ரயில் ஏறினார்கள்.

அந்த சிநேகிதர் என்னைப் பார்த்துவிட்டு அருகில் வந்தார். “போகிறபோது எங்கே போறயள் என்று கேட்கக் கூடாது; இருந்தாலும், எங்கே போறயள்?” என்று கேட்டார்.

“தஞ்சாவூருக்கு…”

“தஞ்சாவூர் எதற்காக? என்ன விஷயம்?”

“விசேஷம் ஒன்றுமில்லை. கோவில் பார்ப்பதற்காகப் போகிறேன்”

இதைக் கேட்டதும் அந்த நண்பர் விழுந்துவிழுந்து சிரிக்கத் தொடங்கினார். ‘கோவில் பார்ப்பதற்காகப் போகிறீர்களா? ஹஹ் ஹஹ் ஹா! ரொம்ப நன்றாயிருக்கிறது! கோவில் பார்க்கப் போகிறீர்களா? ரொம்ப பேஷ்! முதல் தரம்! ஹா ஹா ஹா!” என்று மேலும் மேலும் சிரித்தார். பிறகு தமது மனைவியிடம் சென்று, “கேட்டாயா, சமாசாரம்! கோவில் பார்க்கிறதற்காகத் தஞ்சாவூர் போகிறாராம்!” என்று சொல்லிச் சிரிக்கவே, அந்தப் பெண்கள் நாயகமும், அதில் ஏதோ விகடம் இருக்கத்தான் வேண்டுமென்று எண்ணி ‘க்ளுக்’கென்று சிரித்தாள்.

அவர் என்னைச் சுட்டிக்காட்டிக் காட்டிச் சிரிப்பதைக் கண்டு சுற்றுப்புற முன்னவர்களும் என்னை விரோதமாய்ப் பார்க்கத் தொடங்கவே, நான் கவனத்தை மாற்றுவதற்காக, “தஞ்சாவூரில் உங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வர வேண்டுமா?” என்று கேட்டேன். அவர் பதில் சொல்வதற்குள், அவர் மனைவி சமிக்ஞைகள் மூலம் அவருடைய கவனத்தைத் தன் பக்கம் இழுக்க முயல்வதை நான் கவனித்து, “ஏதோ சொல்ல வேண்டும் று போலிருக்கிறது” என்றேன். அவர் திரும்பிப் பார்க்கவும், அந்த ஸ்ரீமதி அவரிடம் “தஞ்சாவூரில் குடமிளகாய் நன்றாயிருக்கும்” என்று ரகசியமாய்ச் சொன்னது என் காதில் பளீரென் விழுந்தது.

“அதற்கென்ன, குடமிளகாய் வாங்கி வருகிறேன். இன்னும் ஏதாவது வேண்டுமா?” என்றேன். அப்போதும் அந்த அம்மாள் என்னைப் பார்க்காமல், சீதை துரும்பைப் பார்த்துக் கொண்டு ராவணனுடன் பேசினதுபோல், தன் பதியைப் பார்த்த வண்ணம், “பேப்பரில் எல்லாம் ‘தஞ்சாவூர் மிராசுதார் துயரம்’ என்று அடிக்கடி போடுகிறார்களே, அதிலே கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்றாள். அந்தத் தேவி ஹாஸ்ய ரஸமென்று நினைத்து அப்படிச் சொன்னாளா? உண்மையாகவே ‘மிராசுதார் துயர’த்தை ஒரு வஸ்துவென்று நம்பிச் சொன்னாளா? என்பது இன்னும் எனக்குப் பிடிபடவில்லை. நிற்க.

அந்த நண்பர் அவ்வாறு சிரித்ததில் ஆச்சரியமில்லையல்லவா? கொஞ்ச நாளைக்கு முன்பு வேறு யாராவது, ‘கோவில் பார்ப்பதற்காகத் தஞ்சாவூர் போகிறேன்’ என்றால் நான் கூடத்தான் சிரித்திருப்பேன். அப்படி நகைக்கத்தக்க காரியம் ஒன்றை நான் செய்ததற்குக் காரணமாயிருந்தது ஒரு புத்தகந்தான். அதன் பெயர் The Great Temple at Tanjore. (தஞ்சாவூர்ப் பெரிய கோவில்) என்பது, அதன் ஆசிரியர் ஸ்ரீமான் ஜே.எம். சோமசுந்தரம் பி.ஏ, பி.எல். அவர்கள். தஞ்சாவூரில் சித்திரம், சிற்பம் என்று பிரமை பிடித்துக் ‘காமிரா’வும் கையுமாய் அலைபவர் டாக்டர் ஜோதி பாண்டியன் ஒருவர்தான் என்று எண்ணியிருந்தேன். இன்னொருவரும் உண்டென்று மேற்படி புத்தகத்தைப் பார்த்ததும் தெரிந்தது. அப்புத்தகத்தைப் படித்து, அதில் உயர்ந்த ஆர்ட் காகிதத்தில் அச்சிட்டுள்ள படங்களையும் பார்த்த பிறகு, தஞ்சாவூர்ப் பெரியகோவிலை உடனே பார்க்க வேண்டுமென்ற தலம் ஏற்பட்டது. இத்தனைக்கும் அந்தக் கோவிலை நான் ஏற்கொவை பார்த்திருக்கிறேன். அப்போது பார்த்ததெல்லாம் காலே நன்றாய்ப் பஞ்சை கேட்டதுபோல்தான். இந்தப் புத்தகத்தைப் படித்த பின் பார்ப்பதுதான் உண்மையாகப் பார்ப்பது.

இந்த எண்ணத்துடன் தஞ்சாவூரை அடைந்ததும் நேரே ஸ்ரீமான் ஜே.எம். சோமசுந்தரம் அவர்களின் வீட்டைத் தேடிச் சென்று அடைந்தேன். கையில் ஒரு கட்டு அச்சடித்த காகிதங்கள் கொண்டு போயிருந்தேன். அவரைப் பார்த்ததும், “ஐயா! இதோ நான் எனது சொற்ப வாழ்நாளில் எழுதிய ஹாஸ்யக் கட்டுரைகளை எல்லாம் அந்தந்தப் பத்திரிகைகளிலிருந்து கிழித்தெடுத்து வந்திருக்கிறேன். அவற்றையெல்லாம் இதோ படிக்கப் போகிறேன். நீர் கேட்டாக வேண்டும்” என்றேன்.

இப்படித் திடீரென்று தாக்கப்பட்ட ஸ்ரீமான் சோமசுந்தரம், ஒரு நிமிஷம் திகைத்து நின்றார். நான் பக்கங்களைப் புரட்டி வாசிக்கத் தொடங்குவதற்காக தொண்டையைக் கனைத்துக் கொள்ளவே அவர் வரப்போகும் விபரீதத்தை உணர்ந்து, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “ஐயா! இப்படி என்னைத் தண்டிப்பதற்குரிய தப்பிதம் நான் என்ன செய்தேன்? தெரிந்து ஒன்றும் செய்யவில்லையே! தெரியாமல் செய்து விட்டேனோ?” என்று பரிதாபமாகக் கேட்டார்.

நான் கடுமையான குரலில், “என்ன, ஒரு தப்பிதமும் செய்யவில்லையா? ‘தஞ்சாவூர்ப் பெரிய கோவில்’ என்ற புத்தகம் எழுதியவர் நீரேயல்லவா? முழுப் பூசனிக் காயைச் சோற்றில் மறைக்க முயல வேண்டாம். அந்தப் புத்தகத்தை நான் வாசித்தேன். அதற்குப் பதில் என்னுடைய ஹாஸ்யக் கட்டுரைகளை என்பதற்குள், இம்மாதிரி சந்தர்ப்பங்களில் உதவி செய்வதற்காக நான் உடன் அழைத்துப் போயிருந்த என் நண்பர். “போனால் போகட்டும்: அவரை இந்தத் தடவை மட்டும் மன்னித்து விடுங்கள்” என்றார்.

“மன்னிக்கிறேன்; ஆனால், ஒரு நிபந்தனையின் பேரில்தான். இவர் நம்முடன் கோயிலுக்கு வந்து இவர் புத்தகத்தில் எழுதியிருப்பவையெல்லாம் உண்மைதான் என்று நிரூபித்துக் காட்டட்டும்” என்றேன்.

ஸ்ரீமான் சோமசுந்தரம் உடனே துள்ளிக் குதித்து எழுந்தார், “அப்படியா சமாசாரம்? வாருங்கள், போகலாம். கோயிலில் உள்ள ஒரு செங்கல் பாக்கியில்லாமல் சுவரில் கிழித்திருக்கும் ஒரு கோடு பாக்கிவிடாமல் நீங்கள் பார்த்த பிறகன்றி உங்களை விடமாட்டேன்” என்று எங்கள் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

தஞ்சாவூரின் பிரசித்தி பெற்ற சந்துகளின் வழியாக நாங்கள் கோவிலை நோக்கிப் பிரயாணமானோம். இந்தச் சந்துகளைப் பற்றி இங்கேயே ஒரு வார்த்தையைப் போட்டு வைக்கிறேன். (கோவிலுக்குப் போய்விட்டால் மற்றதெல்லாம் மறந்தல்லவா போய்விடும்?) நானும் எத்தனையோ ஊர்களில் சந்துகளைப் பார்த்திருக்கிறேன்; ஆனால், தஞ்சாவூர் சந்துகளைப் போல் பார்த்ததில்லை. அந்தச் சந்துகளில் எதிரும் புதிருமாய் இரண்டு மனிதர்கள் வந்தால் ஒருவர் கீழே படுத்துக் கொண்டால்தான் இன்னொருவர் தாண்டிப் போகலாம். ‘பச்சைக் குதிரை’ என்னும் விளையாட்டும் இந்தச் சந்துகளில்தான் முதன் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

சந்துகள் அவ்வளவு குறுகலாயிருப்பதில் இன்னொரு சௌகரியமும் உண்டு. அவ்வளவு சொற்ப இடத்திலேயே அவ்வளவு வாசனை குடிகொண்டிருக்கிறதே! சந்து பெரிதாக ஆக வாசனையும் அதிகமாய்க் கொள்ளுமல்லவா? மற்றும், சந்துகள் பெரிதாயிருந்தால் கொசுக்களும் ஈக்களும் வாசம் செய்வதற்கு இடம் அதிகம் ஏற்படும். இப்போதோ அந்தக் குறுகிய சந்துகளில் எல்லா இடத்தையும் மனிதர்களே அடைத்துக் கொள்வதயில் கொசுக்கள் நெருங்கிச் சாக வேண்டியிருக்கிறது. நன்றச் சாகட்டும்!

இப்படிப்பட்ட சந்து பொந்துகள், குப்பை கூளங்கள் எல்லாவற்றையும் நடந்து கடைசியாகக் கோயிலை அடைந்தோம். சிதிலமாய்க் கிடந்த கோட்டை மதிலையும் அகழியையும் பார்த்துக் கொண்டு முன் கோபுர வாசலை நெருங்கினோம். கோபுர வாசலின் இருபுறமும் இரண்டு துவார பாலகர்கள் நின்றார்கள். அவர்களைப் பார்த்தால் உயிருள்ளவர்கள் போலவே தோன்றியது. ஆனால், நல்ல வேளையாக அவர்களுக்கு உயிரில்லை.

இந்த துவார பாலகர் சிலைகளின் உயரம் 18 அடி, அகலம் 8அடி. இவ்வளவு பெரிய உருவங்கள் ரே கல்லில் செதுக்கப்பட்டவை! இம்மாதிரி ஏழு ஜதை பெரிய துவாரபாலகர்களும், மற்றும் குட்டி துவார பாலகர்கள் பலரும் இந்தக் கோவிலுக்குள் இருக்கிறார்களாம். எழுநூறு ஜதை துவார பாலகர்கள் இருந்தாலும், அவர்கள் கையை நீட்டி ‘பக்ஷிஷ்’ கேளாத வரையில் நமக்குக் கவலை கிடையாது. அதிகாரவர்க்க தெய்வங்களின் கோவில் வாசல்களில் டவாலியுடன் நிற்கிறார்களே, அந்தத் துவார பாலகர்களும் இவர்களைப் போல் சிலைகளாயிருந்தால் ஏழை ஜனங்களுக்கு எவ்வளவு சௌகரியமாய் இருக்கும்.

கோபுர வாசலைத் தாண்டி உள்ளே போனதும், விஸ்தாரமான பிராகாரம் தென்படுகிறது. அதன் மத்தியில் நந்தி பகவான் பிரம்மாண்டமான வடிவில் படுத்து சேவை சாதிப்பதையும் காண்கிறோம்.

படுத்து சேவை சாதிக்கும் விஷயத்தில் நந்தி பகவானுக்கு ஈடு கிடையாதென்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இந்தத் தஞ்சாவூர் நந்தியின் பெருமையை என்னால் சொல்லும் தரமன்று. அதனுடைய நிறை 25 டன் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்க வேண்டும். ஓர் அவுன்சு நிறைகூட இல்லாத என் பேனாவினால் அதை எப்படிச் சொல்ல முடியும்? இன்னும் அந்த நந்தியின் உயரம் 12 அடி, நீளம் 19 1/2 அடி, அகலம் 8 1/4 அடி. “இதுவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதுதான்!” என்று ஸ்ரீமான் சோமசுந்தரம் ஆச்சரியம் தோன்ற கூறினார்.

“ஏன் அவ்வளவு தரித்திரம்? கல் விஷயத்தில் அந்தக் காலத்து மனிதர்கள் ரொம்பச் செட்டென்று தோறுகிறதே. ஒரு கல்லுக்கு மேல் அவர்களுக்கு கிடைப்பதில்லையோ!” என்றேன்.

ஸ்ரீமான் சோமசுந்தரம் ஒரு நிமிஷம் திகைத்து, “இல்லை; ஒரே கல்லில் சிலை செய்வது விசேஷம்” என்று தெரிவித்தார்.

இந்த நந்தியைப் பற்றிக் கதைகள் சில உண்டு. அது வரவர வளர்ந்து பெரிதாக வந்ததாம். முதுகில் ஓர் ஆணியை வைத்து அடித்தார்களாம். அதற்கு அப்புறந்தான் அது வளர்வது நின்றதாம். நந்தியின் மண்டையில் ஒரு தேரை இருந்ததென்றும் அதை எடுத்துப் பக்கத்திலுள்ள குளத்தில் விட்ட பிறகு நந்தி வளர்வது நின்று போய் விட்டதென்றும் இன்னொரு கதை. அந்தக் குளம் இப்போது கிணறாக மாறி ‘மண்டூக தீர்த்தம்’ பெற்றிருக்கிறது. அந்தக் கிணற்றில் ஸ்நானம் செய்பவர்கள் மூன்றே முக்கால் நாழிகையில் மேதாவிகள் ஆகிவிடுவார்களாம். பெயர் மகாத்மியம்!

இதெல்லாம் பழைய கதைகள். புதிய கதையும் ஒன்று இருக்கிறது. நமது புது வைஸராய் ரிஷப தானம் செய்தாரல்லவா? அன்றைய தினம் தஞ்சாவூர்க் கோவிலிலுள்ள நந்தி பகவான் ஓர் எக்காளம் போட்டுக் கொண்டு எழுந்து நேரே தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் சென்றாராம். புதுடெல்லிக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டு ஸ்டேஷனுக்குள் போகப் பார்த்தாராம். எந்த வாசற்படிக்குச் சென்றாலும், அவருடைய திருமேனி நுழையவில்லையாம். எனவே அவர் அலுப்புற்று, “சீ! இந்தத் தரித்திரம் பிடித்த ஸ்டேஷனில் ஒரு மாடுகூட நுழைய முடியாது” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நேரே கோயிலுக்குச் சென்று பழையபடி படுத்துக் கொண்டு விட்டாராம்!

என்னுடைய கூற்றுக்களில் உங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாய்த் தோன்றுகிறது. பூராவும் குறைந்துவிடுவதற்கு முன் பாக்கி விஷயங்களையும் சொல்லி விடுகிறேன். இந்தக் கோவிலில் துவார பாலகர் சிலைகளும், நந்தியுந்தான் பெரியவை என்பதல்ல. எதைப் பார்த்தாலும் பிரம்மாண்டமாய்த்தான் இருக்கிறது. நந்தி பகவானிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு நேரே மூலஸ்தானத்துக்கே போய்ப் பார்க்கலாம். அங்குள்ள லிங்கம் எவ்வளவு பெரியதென்பதை நம்மால் அளவிடவே முடியாது. அதற்கு முக்கிய காரணம் அங்கே சூழ்ந்திருக்கும் இருட்டு சமீபத்தில்தான் கோவிலுக்குள் மின்சார விளக்குப் போட்டார்களாம். மின்சார விளக்கின் வெளிச்சத்தில் லிங்கத்தின் சில பாகங்கள் தெரிந்தன. சுற்றிலும் சாரங்கள் போட்டிருப்பதைப் பார்த்தோம். கீழே நின்று இந்த லிங்கத்துக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்வது இயலாத காரியம். சாரத்தில் ஏறித்தான் செய்ய வேண்டும். ஸ்ரீ பிரகதீஸ்வரர் என்ற பெயர் இந்தப் பெரிய ஸ்வாமிக்கு நிச்சயம் பொருந்தும்.

‘முத்தியளித்திடும் மூலஸ்தானரைக் கண்டு பக்தி செய்து பின்னர், கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் வேண்டுமென்று தோன்றுவது இயல்பல்லவா? (அதாவது உடனே முத்தி த் தயாராயிருந்தால்?)

அங்கிருந்து கிளம்பிப் பிராகாரத்துக்கு வந்ததும், தக்ஷிண மரு என்னும் கோபுரம் கண்ணில் படுகிறது. இது, மூலஸ்தானத்துக்கு மேலே 216 அடி உயரம் கம்பீரமாக எழுந்து நிற்கும் கோபுரம். தஞ்சாவூர்க் கோவிலைப் பற்றி இந்தியாவிலுள்ள கோவில்களுக்குள்ளே மகத்தான் கோவில்’ என்று என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா என்னும் கலியுக வேதம் கதறுவதெல்லாம் இந்தக் கோபுரத்தை முன்னிட்டுத்தான்.

தமிழ்நாட்டிலுள்ள மற்ற அநேக கோவில்களுக்கும் தஞ்சாவூர்க் கோவிலுக்கும் ஒரு விதத்தில் வித்தியாசம். மற்ற கோவில்களில் எல்லாம் கோவிலுக்குள் பிரவேசிக்கும இடங்களில் பெரிய கோபுரங்கள் இருக்கும். மூலஸ்தானத்தின் மேல் சின்ன மண்டபமும் ஸ்தாபியுந்தான் இருக்கும். இவை பிற்காலத்தில் கட்டப்பெற்ற கோவில்கள். (அவற்றில் சிலவற்றின் மூலஸ்தானங்கள் மட்டும் பழமையானவையாயிருக்கும்) ஆனால், சோழ மன்னர்கள் காலத்தில் கட்டிய கோவில்களில், மூலஸ்தானத்துக்கு மேலுள்ள கோபுரம் பெரியதாயும், வாசல் கோபுரங்கள் சிறியவையாயுமிருக்கும். இந்த மாதிரி சோழர் காலத்திய கோவில் இன்னும் ஒன்றுதான் இப்போது தமிழ் நாட்டில் உண்டு. அது கொள்ளிடக் கரையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கிறது.

மேற்கூறிய 216 அடி உயரக் கோபுரம் அடிவாரத்தில் 96 அடி சதுரமான தளத்தின் மேல் கிளம்பி நிற்கிறது. பூமிக்குள்ளே அதன் அஸ்திவாரம் எவ்வளவு ஆழமாகவும் விசாலமாகவும் போட்டிருக்க வேண்டும்? அவ்வளவு கல்லும் எங்கிருந்து எவ்வளவு கஷ்டத்தின் மேல் கொண்டு வந்தார்களோ? தஞ்சாவூர் ஜில்லாவில், இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்களின் தலையில் கடன் வளி வாங்கியவர்கள் கல்லைப் போடுகிறார்களே, அதைத் தவிர வேறு கல்லே கிடையாதென்பது அனைவரும் அறிந்த விஷயம். கோவில் கட்டுவதற்கு வேண்டிய அவ்வளவு கல்லும் ஜில்லாக்களிலிருந்து கொண்டு வந்திருக்க வேண்டும்.

அதிலும், கல்லை மொட்டை மொட்டையாக அடுக்கித்தான் கோபுரம் கட்டிவிட்டார்களா? அந்தப் பெரிய கோபுரத்தில் அபூர்வமான சிற்ப வேலை செய்யாத ஓர் அங்குல இடங்கூடக் காட்ட முடியாது. விதவிதமான வேலைப்பாடமைந்த தூண்கள், மாடங்கள், சிலை என எங்கும் காணப்படுகின்றன. கோபுரத்தின் உச்சியில் எண்கோண வடிவமான சிகரமும், அதற்கு மேல் ஸ்தூபியும் இருக்கின்றன.

ஸ்தூபியைக் கீழிருந்து பார்க்கும்போது ஒரு சாண் உயரம் இருக்கலாமென்று தோன்றுகிறது உண்மையில், அதன் உயரம் 12 1/2 அடியாம்! நம் கண்ணைப்போல் நம்மை ஏமாற்றுவது வேறொன்றுமில்லை.

ஸ்தூபிக்கு கீழேயுள்ள எண்கோணச் சிகரம் 25 1/2 அடி சதுரமான ஒரு தட்டைப் பாறாங்கல்லின் மேல் அமைந்திருக்கிறதாம். இந்தப் பாறாங்கல் 80 டன் கனமுள்ளதாம். இவ்வளவு கனமான பாறாங்கல்லை அவ்வளவு உயரத்தில் எப்படித் தூக்கி நிறுத்தினார்கள் என்ற சந்தேகம் நமக்கு உடனே உண்டாகிறது.

நம்மைப் போன்ற சந்தேகப் பிராணிகளை உத்தேசித்தே, தஞ்சாவூருக்கு வடகிழக்கே நாலு மைல் தூரத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு ‘சார பள்ளம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தக் கிராமத்திலிருந்து கோபுரத்தின் உச்சிக்குச் சாய்வாக சாரம் கட்டி, அதன்மேல் மேற்படி பாறாங்கல்லை இழுத்துச் சென்றார்களென்று ஸ்ரீமான் சோமசுந்தரம் சொன்னார். அவர் கூற்றை நான் நம்புகிறேன்.

இது விஷயமாக அவர் பொய் சொல்வதற்கு எவ்வித முகாந்திரமும். கிடையாது. ஆனால், இந்த வேலையைச் சிவபிரானுடைய பூத கணங்களைக் கொண்டு செய்வித்திருந்தால் நலமாயிருக்குமென்று மட்டும் நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

மேற்படி பாறாங்கல் எப்படிக் கிடைத்தது என்பது பற்றிலும் ஒரு வரலாறு உண்டு.

அந்நாளில் ஒரே ஒரு இடைச்சி இருந்தாளாம். அவளுக்குத் தாயார் தகப்பனார் இருந்திருக்கலாம்; ஆனால், நிச்சயமாய் சொல்வதற்கில்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றி எவ்வித ஆதாரமும் நமக்குக் கிட்டவில்லை. அந்த இடைச்சியைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பதெல்லாம் இவ்வளவுதான்: அவள், சிவபெருமானிடம் மிகவும் பக்தி கொண்டவளாம். அவள் வீட்டு முற்றத்தில் மேற்படி பெரிய பாறாங்கல் கிடந்ததாம். அந்தக் கல்லை ஸ்வாமி தலைமேல் போடவேண்டுமென்று அவள் உருகினாளாம். சிவபெருமான் அந்தப் பாறாங்கல்லைத் தாம் மனமுவந்து அங்கீகரிப்பதாக அந்த அம்மையார் கனவிலும், ஸ்ரீராஜராஜ சோழனுடைய கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றி அருளினாராம். அரசன் அந்தக் கல்லைக் கொண்டுவந்து கோபுரத்தின் உச்சியில் வைத்தானாம். அது முதல் ஈசன் அவ்வம்மையாரின் நிழலில் வீற்றிருக்கிறாராம்.

நிழல் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. தஞ்சாவூர்க் கோபுரத்தின் ஸ்தூபி, சிகரம் இவற்றின் நிழல் பூமியில் விழுவதில்லையென்று ஒரு வதந்தி உண்டு. ஆனால், ஒருவரும் இதைப்பற்றி நிச்சயமாய்ச் சொல்வதில்லை. ஸ்ரீமான் சோமசுந்தரத்துக்காவது தெரிந்திருக்கலாமென்று கேட்டேன். ‘ஆமாம், ஸ்தூபி சிகரங்களின் நிழல் விழுவதில்லையென்றுதான் சொல்கிறார்கள்” என்றார். பூ மியில்

“அடடா, அப்படியா? ஏன் அவ்விதம் சொல்கிறார்கள்? அந்த மாதிரி அவதூறு அவர்கள் சொல்லக் காரணமென்ன? அந்த மாதிரி அவர்கள் சொல்வதற்கு அந்தச் சிகரமும் ஸ்தூபியும் என்ன தப்பிதம் செய்தன?” என்று கேட்டேன்.

ஸ்ரீமான் சோமசுந்தரத்திற்கு ஏற்கெனவே என்னைப் பற்றி ஒருவித அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. அது இப்போது உறுதிப் பட்டது என்று தோன்றிற்று. நான் அந்த சமயத்தைக் கைவிடாமல், “அப்படியே ஒவேளை அவற்றின் நிழல் பூமியில் விழாவிட்டாலும்தான் என்ன மோசம்? அதற்குப் பதில் நாம் வேண்டுமானால் விழுந்து விடலாமே?” என்றேன்.

ஸ்ரீமான் சோமசுந்தரத்தின் தலை சுற்றத் தொடங்கியது. உண்மையாகவே காணப்பட்டார். அவர் விழுந்துவிடுவார் போல்

ஸ்ரீமான் சோமசுந்தரம், பிரமிக்கத்தக்க விதமாகச் சமாளித்துக் கொண்டார்; கீழே விழவில்லை. இதற்கு முன்னால் என்னைப் போன்ற இன்னும் எத்தனையோ சிற்ப அபிமானிகளைச் சமாளித்தவர் அல்லவா? ‘இந்தக் கோவிலுக்கு வைஸ்ராய்கள், சேநாதிபதிகள், கவர்னர்கள் இராஜ தந்திரிகள், அரசியல்வாதிகள், தத்துவ சாஸ்திரிகள் உலக யாத்ரிகர்கள் எல்லாரும் வந்து பார்த்துப் போற்றிச் சென்றிருக்கின்றனர்’ என்று அவர் எழுதிய புத்தகம் கூறுகின்றது. கோவில் ‘விஸிட்டர்’களுக்காக வைத்திருக்கும் புத்தகத்தில் கர்ஸன், கிச்சனர் கனிமரா, கேயர் ஹார்டி, காந்தி முதலியோரின் கையொப்பங்கள் இருக்கின்றனவென்றும் அவர் தெரிவித்தார். (அந்த ‘விஸிட்டர்’ புத்தகத்தையும் வாங்கிப் கையெழுத்து பார்த்தேன். அந்தப் பெரிய மனிதர்களுடைய கையொப்பங்கள் எல்லாம் அப்படியொன்றும் சிலாக்கியமாயில்லை. காக்கை குளறினாற்போலத்தான் இருக்கின்றன. எது யாருடைய என்று கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருந்தது!)

அன்று சாயங்காலம்கூட ஸ்ரீ பிரகதீஸ்வர ஸ்வாமி ஒரு பெரிய மனிதரை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக அறிந்தேன். அவர் ஹிந்து தேவஸ்தான பரிபாலன போர்டின் கமிஷனராம்; ஒரு டென்னிஸ் சாம்பியனும் கூடவாம். ‘டென்னிஸ் சாம்பியன் என்றால் என்னவென்று பிரகதீஸ்வரருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆயினும், அவர் டென்னிஸ் சாம்பியன்தான். ஆனால், அவ்வளவு பெரிய மனிதர்களைப் பற்றி நாம் அதிகம் பேசுவானேன்? ஸ்வாமிக்குத்தான் தலையில் எழுத்து; நமக்கென்ன வந்தது?

தக்ஷிண மேருவைச் சுற்றிப் பிராகாரத்தில் வலம் சென்றோம். அந்த அபூர்வ கோபுரத்தைக் கட்டி 900 வருஷங்களுக்கு மேலாகின்றன என்பதை நம்பவே முடியவில்லை. அதிலுள்ள சிற்பங்கள் அவ்வளவு புத்தம் புதிதாய்க் காணப்படுகின்றன. சிற்சில இடங்களில் மட்டும் மூளியாக இருப்பதைப் பார்த்து, “இந்த திருஷ்டி பரிகாரங்கள் எப்படி ஏற்பட்டன?” என்று விசாரித்தேன். ஒரு சமயம் பிரஞ்சுக்காரர்களும், இன்னொரு சமயம் இங்கிலீஷ்காரர்களும் இந்தக் கோவில் பிராகாரத்தை ஆயுத சாலையாக உபயோகித்தார்களாம். அப்போது கோவிலில் தங்கிய ஸோல்ஜர்கள் மேற்படி ‘மூளித் தொண்டு’களைச் செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது.

உடனே தஞ்சாவூரின் அரசியல் சரித்திரத்தில் என் ஞாபகம் சென்றது. அந்த நாளில் அதாவது இந்தக் கோவில் முதல்முதலில் கட்டப்பெற்ற காலத்தில் தஞ்சாவூர் ஒரு மகா சாம்ராஜ்யத்தின் தலைநகரமாயிருந்தது. தமிழ் மன்னர் பரம்பரையில் மிகப் பிரசித்தி பெற்றவனான ஸ்ரீ ராஜராஜ சோழன் உலகமெல்லாம் தன் புகழ் பரவும்படி ஆட்சி செலுத்தி வந்தான்.

ஸ்ரீ ராஜராஜனுடைய காலத்தில் சேர பாண்டிய தேசங்களு மைசூர் ஆந்திர நாடுகளும் அடங்கிய தென்னிந்தியா முழுவ சோழ சாம்ராஜ்யத்துக்குள் அடங்கியிருந்தது. அவனுகை சைன்யங்கள் இலங்கைத் தீவுக்கும் சென்று வெற்றி கண்ட அவனுடைய புதல்வன் ஸ்ரீ ராஜேந்திர சோழன் காலத்தில் சாம்ராஜ்யம் இன்னும் விஸ்தாரமாயிற்று. விந்திய மலைக்கு வடக்கேயும் அவனுடைய அதிகாரம் சென்றது. கடல்களுக்கு அப்பால் ஜாவா, ஸுமந்திரா, மலாய், ஸ்யாம் ஆகிய பிரதேசங்களிலும் அவனுடைய ஆட்சி நிலைபெற்றது.

மேற்படி தகப்பனுக்கும் பிள்ளைக்கும் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான வேலைகள்தான் உண்டென்று தெரிய வருகிறது. அவர்கள் யுத்தம் செய்யாதபோதெல்லாம் கோவில் கட்டினார்கள்; கோவில் கட்டாதபோதெல்லாம் யுத்தம் செய்தார்கள். யுத்தத்திலே எதிரிகளை வென்று, அவர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்று வந்த பொருளையெல்லாம் கோவில் கட்டுவதில் செலவழித்தார்கள்.

ஆஹா! அந்த மகத்தான கோபுரத்தைப் பார்க்கப் பார்க்க, என் கழுத்தை வலிக்கிறது; எவ்வளவு உயரம்! எவ்வளவு அகல நீளம்! இத்தனை பெரிய கோபுரம் திடீரென்று முளைத்து விடுமா? ஆறு வருஷத்திலே அதைக் கட்டியிருக்கலாம். ஆனால், அதற்கு முன் எத்தனை வருஷ காலம் அது ராஜராஜனுடைய உள்ளத்தில் கட்டப்பட்டு வந்ததோ, யாருக்குத் தெரியம்?

அப்படிப்பட்ட அவனுடைய உள்ளம் எத்தனை பெரிதாயிருந்திருக்க வேண்டும்? ராஜராஜனுடைய விஷயங்கள் எல்லாமே பெரியவைதான். அவனுடைய சாம்ராஜ்யம் பெரியது; அவன் கட்டுவித்த கோயில் பெரியது. அதிலுள்ள சிவலிங்கம், நந்தி எல்லாம் பெரியவை. அற்பமாகவும், சின்னதாகவும் அவனால் எதையுமே சிந்தித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. அவனுடைய மகன் இராஜேந்திர சோழனும் அவ்வளவு பெரிய மனது படைத்தவனாயிருந்து பெரிய காரியங்களைச் செய்திருக்கிறான்.

அப்படிப்பட்ட மகா மன்னர்கள் வாழ்ந்து அரசு புரிந்த தஞ்சாவூர் சோழ நாடு இப்போது எவ்வளவு சிறுமையடைந்திருக்கிறது? கேவலம் சர்க்காருக்குச் செலுத்த வேண்டிய நிலவரியைக்கூட மூக்கால் அழாமல் செலுத்த யோக்யதை இல்லை; வெட்கம், வெட்கம்!

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்ட கோபுரத்தின் வடபுறத்துக்கு வந்ததும், “அதோ! ஒரு தொப்பி போட்ட தலையைப் பார்த்தீர்களா?” என்று ஸ்ரீமான் சோமசுந்தரம் கேட்டார். ஆம், தொப்பி அணிந்த ஒரு தலை கோபுரத்தில் காணபட்டது! ‘குட்மார்னிங்! ஹவ்டுயு என்று அந்தத் தலை வாயைத் திறந்து பேசப் போவது போல் தோன்றியது. ஆனால், அது வாயைத் திறக்கவுமில்லை; பேசவுமில்லை. அந்த நாள் சிற்பிகள் செய்த சிலைகளே இப்படித்தான். பேசப்போவது போல் காணப்படும்; ஆனால், பேசாமல் ஏமாற்றிவிடும்.

“நன்றாய்க் கவனியுங்கள். அந்தத் தொப்பித் தலையின் கீழே, ஒன்றன் கீழ் ஒன்றாக, இன்னும் மூன்று மனித உருவங்கள் இருப்பதைப் பாருங்கள்! எல்லாவற்றிற்கும் கீழே உள்ள உருவம் பெரியது; அதற்கு மேலுள்ளது கொஞ்சம் சின்னது; அப்படியே மேலுள்ள உருவங்கள் ஒன்றைவிட ஒன்று சிறியவை. இந்த நாலு உருவங்களும், சோழர், நாயக்கர், மராட்டியர், வெள்ளைக்காரர் ஆகிய இவர்களுடைய ஆட்சியை முறையே குறிப்பிடுகின்றன. “அந்தக் காலத்தில் தீர்க்க தரிசனம் வாய்ந்த ஒரு சிற்பி இருந்தானாம். அவன் தஞ்சாவூர் ராஜ்யம் யார் யார் கைக்குப் போகப் போகிறது என்பதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்து, மேற்படி உருவங்களை அமைத்தானாம்” என்றார்.

நான் அந்த வரலாற்றைக் கேட்டுப் பிரமித்து நிற்கையிலேயே அவர், “ஆனால், இதைச் சிலர் நம்புவதில்லை; இந்தத் தொப்பித் தலை, பின்னால் நாயக்கர்களின் ஆட்சியில் அமைக்கப்பட்டதென்றும், அந்தக் காலத்தில் தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் குடியேறியிருந்தபடியால் அது ஒரு டேனிஷ்காரனின் தலையாயிருக்கலாமென்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், வெனிஸ் நகரிலிருந்து உலகமெல்லாம் சுற்றிவந்த மார்க்கோ போலோவின் தலையாய் இருக்கலாமென்றும் கூறுகிறார்கள்” என்றார்.

அவருடைய பிந்தையக் கூற்றுகளில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அது மார்க்கோ போலோவின் தலையாயிருக்க முடியாது. ஏனென்றால், அந்த உலக யாத்ரீகன் ஊருக்குத் திரும்பிப் போய் தன்னுடைய யாத்திரைக் குறிப்புகளைத் வெளியிட்டிருக்கிறான். அவன் தன் தலையை இங்கே கோபுரத்தில் விட்டு எப்படிப் போயிருக்க முடியும்? அப்படித் தலையற்ற முண்டமாய் அவன் ஊர் போய்ச் சேர்ந்தான் என்பதற்கு நமக்கு எவ்வித ஆதாரமும் கிட்டவில்லை.

மேலும், அந்தச் சிற்பக் கதையை நம்புவதற்கு எனக்கு ஆசையாயிருக்கிறது. அது நிஜம் போலவும் தோன்றுகிறது. உண்மையில் அப்படி நடந்திருக்கிறதே, அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? சோழர்களுக்குப் பிறகு நாயக்கர்கள், நாயக்கர்களுக்குப் பிறகு மராட்டியர்கள், அவர்களுக்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் வரிசையாக வந்திருக்கிறார்களே? அதிலு அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டுப் போரிட்டு ஜயித்த ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டார்களா! கிடையவே கிடையான ‘பிரிட்டிஷ் கவர்மெண்டுக்கு ஒரு ரூபாயாவது ஒரு சோல்ஜரின் உயிராவது செலவாகாமல் தஞ்சாவூர் ராஜ்யம், பிரிட்டிஷ் ஆட்சிக்குள் வந்தது’ என்று கபர்மெண்ட் தஸ்தாவேஜிகள் கூறுகின்றன. அதே மாதிரிதான், அவர்களுக்கு முன்னால் மராட்டியர்கள் நாயக்கர்களிடமிருந்தும், நாயக்கர்கள் சோழர்களிடமிருந்தும், ‘கத்தியின்றி, ரத்தமின்றி’ தஞ்சாவூர் ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இப்படி ஒரு பெரிய ராஜ்யம் கைமாறுவதை எங்கேயாவது கேட்டிருக்கிறோமா? ஆகவே, இதை விதிவச மாறுதல் என்று சொல்லாது வேறு என்னவென்று சொல்ல முடியும்?

மேற்படி வரலாறு நிஜமாயிருக்கலாமென்று நான் நம்புவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நாலு உருவங்களும் மேலே போகப்போக ஒன்றைவிட ஒன்று சிறுத்திருக்கின்றனவல்லவா? சோழ சாம்ராஜ்யத்தை விட நாயக்கர் ஆட்சி குறைந்த காலமும், மராட்டியர் ஆட்சி அதைவிடக் குறைந்த காலமும் நடந்திருக்கின்றன. ஆகவே, தீர்க்கதரிசனம் பலிப்பதென்றால் பிரிட்டி ஆட்சி அதைவிடக் குறைந்த காலமே இருக்க முடியும். ஆகவே, நாம் சுயராஜ்யம் பெறும் காலம் நெருங்கிவிட்டதென்று எனக்கு ஒரு நம்பிக்கை உண்டாகிறது. மேலும், நான் இந்த வருஷம் காங்கிரஸில் நாலணா மெம்பராய்ச் சேர்ந்து விட்டபடியாலும், வோட்டர் ஜாபிதாவில் பெயரைப் பதிவுசெய்து கொண்டுவிட்டபடியாலும் அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது.

இந்தக் கோபுரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய இன்னும் இரண்டு விசேஷங்கள் பாக்கியிருக்கின்றன. அதில் அமைந்திருக்கும் சிற்பங்களில் அநேகம் வைஷ்ணவ சம்பிரதாயக் கதைகளைக் குறிப்பவை. புத்தருடைய வாழ்க்கையிலிருந்து சில காட்சிகளும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ ராஜராஜசோழன் சைவ சமயத்தினனாயினும், மதத் துவேஷம் கொண்டவனல்ல; சர்வசமய சமரஸ மனப்பான்மை கொண்டவன் என்பதற்கு மேற்படி சிற்பங்கள் அத்தாட்சியாகும்.

இன்னொரு விசேஷம் என்னவென்றால், தமிழ் நாட்டில் பிற்காலத்தில் கட்டப் பெற்ற முன் வாசல் கோபுரங்கள் பலவற்றில் அசங்கியமான பொம்மைகள் பலவற்றைக் காண்கிறோம். ‘ஆபாஸங்களின் மூலமாகத்தான் பாமர ஜனங்களைக் கவர முடியும்’ என்ற மனப்பான்மை நாயக்கர் மன்னர் காலத்திலேயே ஏற்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால், சோழ மன்னர்களின் காலத்தில் அது இல்லை. தஞ்சாவூர்க் கோபுரத்தில் ஆபாஸக் காட்சியே கிடையாது!

ஸ்ரீ ராஜராஜ சோழனையும் அவனுடைய கோபுரத்தையும் நாம் வேண்டிய அளவு கண்யப்படுத்தி விட்டோம். ஆகவே, வடக்குப் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோவிலுக்குப் போவோம். இந்தக் கோவில் பிற்காலத்தில், நாயக்க மன்னர்களின் காலத்தில் கட்டப்பெற்றது. பெரிய கோவில் கட்டி 600 வருஷங்களுக்குப் பிறகு இதைக் கட்டியிருக்கலாமென்று சொல்கிறார்கள். தமிழ் காட்டில் 600 வருரகாலத்தில் சிற்பத் தொழில் எப்படி மாறுதலடைந்தது என்பதை இந்த இரண்டு கோவில்களையும் ஒப்பிட்டுப் பார்த்தத் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோவிலில் பெரிய கோவிலின் கம்பிரத் தோற்றம் இல்லை; ஆனால், சிற்ப வேலைகளின் நுட்பங்கள் அதிகமாயிருக்கின்றன. நிதானமாய் நீண்ட கார்வையுடன் சனசாரீரத்தில் பாடப் பெறும் சங்கராபரணத்தைப் பெரிய கோவிலுக்கும், இனிய ஸ்திரீ சாரீரத்தில் சங்கதிகளை உதிர்த்துப் பாடப் பெறும் செஞ்சுருட்டி ராகத்தை சுப்ரமண்யர் கோவிலுக்கும் உவமை சொல்லலாம்.

ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயிலில் இரண்டு யானைகள் இருக்கின்றன; அதே இடத்தில் இன்னும் இரண்டு யானைகள் இருக்கின்றன. ஒரு யானை, ஒரு மனிதனை வேட்டையாடும் காட்சி அந்தச் சிலையில் காட்டப்படுகின்றது. ஒன்றில், யானை மனிதனைத் துரத்துகிறது; அதில் யானையின் முகத்தில் காணும் பரபரப்பு கவனிக்கத்தக்கது. இன்னொன்றில், யானை மனிதனைத் தூக்கிக் கொல்லப் போகிறது. அப்போது அதனுடைய முகத்தில் காணப்படும் ரௌத்ரம் பார்த்துப் பிரமிக்கத் தக்கது. அடுத்ததில் யாலை மனிதனைக் கொன்று விட்டது; அப்போது அதனுடைய முகத்தி காணப்படும் திருப்தியும் குதூகலமும், ஆஹா! பார்த்துப் பார்த் இன்புறத் தக்கவை.

ஒவ்வொரு சிலையிலும் ஒவ்வொரு வித பாவம் அந்த யானையில் கண்களில் வெளியாகிறது. சுருங்கச் சொன்னால், அந்த யானை பரத நாட்டியமும், முக்கியமாக அபிநய சாஸ்திரமும் படிந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமியை நாங்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கர்ப்பக் கிரகத்திலிருந்து ஓர் ஆசாமி வெளியே வந்தார். ஆடை விஷயத்தில் மகாத்மா காந்தியும்கூட அவருடன் போட்டிபோட முடியாது. காந்திஜி முடித்துண்டு. தரிக்கிறாரல்லவா? இவர் இடுப்பிலோ சாண் துணிதான் இருந்தது; அநேக இடைவெளிகள், மகாத்மா ஒருவேளை தனது முடித் துணியைச் சாண் துணியாகச் செய்து, அதில் துவாரங்களும் செய்து கொள்ளுதல் சாத்தியமாகலாம். ஆனால், அந்த அபூர்வமான அழுக்குக்கு எண்ணெய்ப் பிசுக்குக்கு, அசல் தூம வர்ணத்துக்கு, எங்கே போவார்?’

அம்மனிதரின் ஆடையை நான் உற்று நோக்குவது கண்ட ஸ்ரீமான் சோமசுந்தரம். “ஐயோ பாவம்! இவர்கள் எல்லாம் ஏழைகள். கோவிலில் இவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் ரொம்ப சொற்பம்” என்றார். என் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியைப் பார்த்துவிட்டு, “ஆமாம்; இந்தக் கோவிலும் ரொம்ப ஏழைக் கோவில்தான். கோவில் கட்டடங்களைப் பராமரித்துக் காப்பாற்றுவதே பிரமப் பிரயத்தனமாய் இருக்கிறது” என்றார்.

என்னுடைய பிரமிப்பு இப்போது 106 டிரிக்கு மேலே போய் விட்டது. ஆகவே, மிகவும் அபாயநிலை ஏற்பட்டு விட்டது. “ஐயா! இனிமேல் இப்படி அதிசயமான செய்தி ஒன்று சொன்னீர்களோ, அப்புறம் என் மேலே தப்பு சொல்லாதீர்கள் நான் நிச்சயமாய் மூர்ச்சை போட்டு விழுந்துவிடுவேன்!” என்று அவரை எச்சரித்துவிட்டு, ராஜராஜ சோழனும் அவனுடைய தமக்கை குந்தவை பிராட்டியும் இந்தக் கோயிலுக்கு அளித்த செல்வங்களைப் பற்றி புஸ்தகத்தில் எழுதியிருப்பதை நினைப்பூட்டினேன்:

‘கோயில் செலவுகளுக்கு ஒரு விதக் குறைவும் ஏற்படக் கூடாதென்பதற்காக ராஜராஜ சோழன் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தான். பூஜா பாத்திரங்கள்; விக்ரகங்களுக்கு ஆபரணங்கள்; நிவேதனத்துக்கு வேண்டிய நெல்லுக்காக ஏராளமான கிராமங்கள், சுற்பூரம், லக்காய், சமங்பகமொட்டு, விளாமிச்ச வேர் வாங்குவதற்குப் பணம்: விளக்கேற்ற நெய்க்காக ஆடு மாடுகள்; தேவார கோஷ்டிகள், தேவதாஸிகள், அர்ச்சகர்கள், கணக்கர்கள், தட்டார்கள்; தச்சர்கள், வண்ணார்கள், நாவிதர்கள், எல்லாருக்கும் சம்பளத்திற்கு வேண்டிய பணம் இவ்வளவுக்கும் ஏற்பாடு செய்தான். 41,559 களஞ்சு (480 ராத்தல்) நிறையுள்ள நிறை பாத்திரங்கள், 5,100 களஞ்சு நிறையுள்ள தங்க நகைகள், 50,650 களஞ்சு நிறையுள்ள வெள்ளிப் பாத்திரங்கள் கொடுத்தான். வருஷத்தில் 1,16,000 கலம் நெல் வருமானமுள்ள நிலங்களையும் அளித்தான். அவனுடைய தமக்கை பராந்தகன் குந்தவை அம்மணி 10,000 களஞ்சு கட்டித் தங்கமும் 9,000 களஞ்சு தங்க நகைகளும் கொடுத்தாள்’

இவ்வளவும் அவர்கள் இறந்து போவதற்கு முன்பே கொடுத்துவிட்டார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த நகைகள், செல்வங்கள், ஆடு மாடுகள், கிராமங்கள் எல்லாம் இப்போது எங்கே? அவர்களுக்குப் பின்னால் ராஜவம்சத்தில் வந்தவர்கள் அளித்த செல்வங்கள் எல்லாம் எங்கே? இதற்கு ஸ்ரீமான் சமேசுந்தரம் அவர்களால் பதில் சொல்ல முடிய வில்லை. பதில் சொல்லக் கூடியவர்கள் ஒருவரே ஒருவர்தான். அவர்தான் சண்டிகேசுவரர். எல்லாக் கோவில்களிலும் கோவில் சொத்துக்கெல்லாம் அவர்தான் காவலராம். கோவிலுக்கு வந்து வெளியே போகிறவர்களெல்லாம் அவரிடம் வந்து, மடியை உதறி விட்டுத்தான் போகவேண்டுமாம். மேலும், தஞ்சாவூர்க் கோவிலில் தக்ஷிண மேருவுடன ஒரே காலத்தில் கட்டப் பெற்ற கோவில் அவருடையது ஒன்றுதானாம். ஆகவே, சண்டிகேசுவரர் மட்டும் மனது வைத்தால் அந்தச் செல்வமெல்லாம் எங்கே போயின என்று சொல்லக்கூடும்; ஆனால், அவர் மனது வைக்கவில்லை.

“போனது போகட்டும்; இப்போதாவது இந்தக் கோவிலின் செல்வ நிலையை அபிவிருத்தி செய்வதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யக்கூடாதா? உதாரணமாக, இந்தக் கோவிலில் இவ்வளவிற்குச் சீட்டு வாங்கிக் குழந்தைகளுக்கு முடி இறக்கினால், பரீட்சைகளில் கேள்விப் பேப்பர்களைத் திருடாமலேயே பாஸாகும்; இந்தக் கோவில் உண்டியில் இவ்வளவு பணம் போட்டால், கடன்காரன் தொல்லையிலிருந்து தப்பலாம்; இவ்வளவிற்கு கட்டளை ஏற்படுத்தினால் சந்ததி விருத்தியாகும்; இவ்வளவு நன்கொடை அளித்தால், ராமேசத்தின் பிரசங்கம் கேட்காமலேயே பிரஜா விருத்தியைக் கட்டுப்படுத்தலாம்; இந்தச் சந்நிதியில் இவ்வளவு தடவை பிரதட்சணம் செய்தால் ஆபீஸ் ஆபீஸாக அலையாமல் சீக்கிரம் வேலை கிடைக்கும் என்று இப்படி ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், ராஜராஜ சோழன் கண்காட்சி ஒன்று ஏற்படுத்தியிருக்கிறேன்” என்று சொல்லி, சுப்ரமண்ய ஸ்வாமி கோவிலுக்கு முன்புறமுள்ள மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ராஜராஜன் காலத்திய அநேக சிலைகளும், அந்தக் காலத்தில் உபயோகமான மற்றும் பல பொருள்களும் இருக்கின்றன. ராஜராஜன் பூஜித்த ஒரு சின்ன லிங்கமும், அம்மன் விக்ரகமும்கூட இருக்கின்றன. விதவிதமான குத்துவிளக்குகள் இருக்கின்றன. அவ்வளவு அபூர்வமான, சரித்திர முக்கியம் வாய்ந்த, பொருள்களை அவர் சேர்த்து வைத்திருப்பது போற்றத் தக்கதுதான். ஆனால், அவைகளை அவர் சரிவர உபயோகப்படுத்தவில்லை என்று கண்டு துயரமுற்றேன். உதாரணமாக, அந்தக் குத்துவிளக்குகளையெல்லாம் வரிசையாக ஸ்வாமி ஸந்நதியில் வைத்து அவை அணையாமல் எரிவதற்காக நன்கொடை அளிப்பவர்கள் ‘சீக்கிரத்திலேயே, கண் வைத்தியரின் உதவியில்லாமலேயே, பார்வை மங்கப் பெற்று மூக்குக் கண்ணாடி அணியும் பாக்கியத்தைப் பெறுவார்கள்’ என்று ஒரு விளம்பரம் செய்தால், கோவிலுக்கு எவ்வளவு ஏராளமான வருமானம் கிடைக்கும்?

உண்மையில் இந்தக் கோவிலில், ‘மகாத்மியம்’ என்று சொல்லக் கூடியது ஒன்றுதான் இருக்கிறது. அதுதான் கருவூரார் சந் கருவூர்தேவர் ஒரு பெரிய சித்தராம். அவர்தான் அந்தக் கோவில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வதற்கு ஸ்ரீ ராஜராஜ சோழனுக்கு உதவி செய்தாராம். ‘திருவிசைப்பா’ என்று தஞ்சாவூர்க் கோவிலைப் பற்றி ஒரு பிரபந்தமும் இயற்றியிருக்கிறார். இவருடைய சந்நிதி மேலண்டைப் பிராகாரத்தில் இருக்கிறது. வியாழக்கிழமை அவருக்கு விசேஷ நாளாம். அன்றைய தினம் அவரிடம் யார் என்ன வரம் வேண்டினாலும் பெறுகிறார்களாம். நம்பிக்கை மட்டுந்தான் வேண்டுமாம்!

இந்தச் சித்த புருஷருடைய மகிமையை ஸ்ரீமான் சோமசுந்தரம் இன்னும் நன்றாய் வெளிப்படுத்திவிட வேண்டும். வியாழக்கிழமை மட்டும் போதாது, செவ்வாய்க் கிழமையையும் சேர்த்துக் கொள்ளலாம்? உண்டி வசூலிலும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திசாலிகளுக்கு ஒரு வார்த்தை போதும்; மேலே அவர்களுடைய சாமர்த்தியம்.

‘எல்லாம் பார்த்தாய் விட்டது; போகலாம்’ என்று நான் எண்ணிய சமயத்தில் “மிகவும் முக்கியமானதை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை” என்றார் ஸ்ரீமான் சோமசுந்தரம். பிரகதீஸ்வர ஸ்வாமி கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றியுள்ள இருளடைந்த குறுகிய பிராகாரத்திற்கு அழைத்துச் சென்றார். கையில் ஒரு மின்சார விளக்கும் கொண்டு வந்தார். அந்த விளக்கு வெளிச்சம் சுவரில் விழும்படி பிடித்து, “பாருங்கள்!” என்றார். சில சித்திரங்கள் தென்பட்டன; அவ்வளவு ஒன்றும் விசேஷமாகத் தோன்றவில்லை. லவலேசமும் வெளிச்சமில்லாத இடத்தில் இருப்பதற்கு தகுந்தனவாகவே காணப்பட்டன. அந்தச் சித்திரங்கள் எழுதப் பெற்றபோது அங்கே கொஞ்சம் வெளிச்சம் இருந்திருக்க வேண்டும்; பின்னால் யாரோ ஒரு ரஸிகன் அந்தச் சித்திரங்களைப் பார்க்கச் சகியாமல் இண்டு இடுக்குகளை மூடி, வெளிச்சமே நுழையாமல் தடுத்திருக்கக் கூடும்.

ஸ்ரீமான் சோமசுந்தரம் மேலே விர்ரென்று நடந்து சென்றார். இன்னும் ஓரிடத்தில் நின்று, வெளிச்சம் சுவர்மேல் விழச் செய்து, “இப்போது பாருங்கள்” என்றார்.

பார்த்தேன்; இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன்! இது என்னுடைய அத்தாட்சியாகும். உயிர் எவ்வளவு கெட்டி என்பதற்கு அத்தாட்சியாகும்.

அவர் காட்டிய இடத்தில் சுவரின் மேல்பூச்சு இடிந்து விழுந்திருந்தது. உள் சுவரில் சில சித்திரங்கள் காணப்பட்டன. அப்ஸர ஸ்திரீகள் இருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சலங்கை சப்தம் என் காதில் ஒலித்தது. (சிறிது சந்தேகப்பட்டுத் திரும்பிப் பார்த்தபோது, எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் தமது பையில் பணம் இருக்கிறதா என்று குலுக்கிப் பார்த்துக் கொண்டார் என்று தெரிந்தது.) நடன மாதர்களுக்கு எதிரில் சிவபெருமான் புலித்தோல் மீது யோகாசனத்தில் வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள். அருகில் படுத்திருக்கும் நந்தி. சற்றுத் தூரத்தில் ரிஷிகள் பக்திபரவசமாய் நிற்கும் காட்சி.

இம்மாதிரி மேல்பூச்சு உதிர்ந்துபோன இடங்களிலெல்லாம் உள் சுவரில் அபூர்வமான சித்திரங்கள் இருந்தன. அவை பல்வேறு வர்ணம் தீட்டப்பட்டிருந்தன. ஸ்ரீ சுந்தரமூர்த்தியின் சரித்திரக் காட்சிகள் சில இடத்தில் காணப்பட்டன. சிவபெருமான் திரிபுரர்களுடன் போரிடும் காட்சி வேறிடத்தில் இருந்தது.

‘இந்த அபூர்வ சித்திரங்கள் எல்லாம் சோழர்கள் காலத்தில் எழுதப்பட்டவை. 900 வருஷங்களாக இவை வர்ணம் அழியாமல் அப்படியே இருக்கின்றன. பின்னால் நாயக்கர்கள் காலத்தில், அந்தச் சித்திரங்களின் மேல் சுண்ணாம்பு காரை பூசி, அதன்மேல் நாயக்கர் சமஸ்தானத்துச் சித்திரகாரர்கள் சித்திரம் வரைந்திருக்கிறார்கள். உள் சுவரில் சோழர் காலத்துச் சித்திரங்கள் இருக்கிற விஷயம் சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது’ என்றும் விஷயங்களைத் தெரிந்துகொண்டு, காற்றுப் புகாதிருந்த அந்த இடத்தில் மூச்சுத் திணறுவதற்கு முன்னால் வெளியே வந்து சேர்ந்தோம்.

முன் கோபுர வாசலண்டையில் ஸ்ரீமான் சோமசுந்தரம் எங்களிடம் விடை பெற்றுக்கொண்டபோது, அவர் கண்களில் நீர் ததும்புவதைக் கண்டேன். ‘ஐயோ! இவ்வளவு நல்ல ஆத்மாவை இப்படிக் கஷ்டப்படுத்தி விட்டோமே?” என்று நான் பரிதாபப்பட்டு, அவரிடம் எந்த மாதிரி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாமென்று யோசிப்பதற்குள் அவர், “ஐயா! நீங்கள் மறுபடியும் ஒரு தடவை அவசியம் வந்து போகவேண்டும்; பார்க்க வேண்டியதில் மிகக் கொஞ்சம்தான் பார்த்திருக்கிறீர்கள்; இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது” என்றார்.

நான் பரிபூரண தோல்வி அடைந்ததை உணர்ந்தேன். இவ்வளவு உபத்திரவத்திற்கு ஆளான பிறகு அவர் என்னை மறுபடியும். வரச் சொல்வார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“ஆம்; அவரைப் பழி வாங்கவேண்டுமென்று என்னுை டை உத்தேசம் அவலமாயிற்று. அதனால் எனக்கேற்பட்ட ஆத்திரங் சொல்லி முடியாது. அந்த ஆத்திரத்தை இப்போது உங்க மேல்காட்டிப் பழி தீர்த்துக் கொண்டேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

இந்தக் கட்டுரையில் கூறிய நூலை (The Great Temple at Tanjore by JM Somasundaram Pillai BA.,BL. – Published by The Thanjavur Palace Devasthanams, 1935 with a Foreword by FH. Ghaveli D.Sc.) இங்கே சென்று வாசிக்கலாம்.

ஆனந்த விகடன்

17.04.19

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.