வாழ்வும் தாழ்வும்

அவர் காட்டிய இடத்தில் சுவரின் மேல்பூச்சு இடிந்து விழுந்திருந்தது. உள் சுவரில் சில சித்திரங்கள் காணப்பட்டன. அப்ஸர ஸ்திரீகள் இருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சலங்கை சப்தம் என் காதில் ஒலித்தது. (சிறிது சந்தேகப்பட்டுத் திரும்பிப் பார்த்தபோது, எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் தமது பையில் பணம் இருக்கிறதா என்று குலுக்கிப் பார்த்துக் கொண்டார் என்று தெரிந்தது.) நடன மாதர்களுக்கு எதிரில் சிவபெருமான் புலித்தோல் மீது யோகாசனத்தில் வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள். அருகில் படுத்திருக்கும் நந்தி. சற்றுத் தூரத்தில் ரிஷிகள் பக்திபரவசமாய் நிற்கும் காட்சி.