சப் செய் (SUP SEI)

நான், அந்த வீட்டின் கதவை மெல்லத் தட்டத் தொடங்கிய உடனேயே உள்ளே அழுகையும் ஒப்பாரியும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டன!. மனைவி, ஒப்பாரியை இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொண்டு ஆர்ப்பரித்தது வெளியில் கேட்டது. அந்த வீட்டில் சாவொன்று நிகழ வேண்டியது மூன்று வருடங்களுகளுக்கு முன்னரே தீர்மானமான ஒன்று! வீட்டு எண்ணின் உச்சரிப்பே அதற்கான சத்தியப்பிரமாணம்!. இவ்வளவு நாட்களாக வீடு காலியாகவே இருந்ததால் அது நடக்காமலேயே இருந்தது. ஆனால், இப்போது ‘பொறியில் சிக்கிய எலியைப்போல்’ அந்தக் குடும்பமே அதைத் தேடி வந்திருந்தது. போய், உடனடியாக வேலையை முடித்துக்கொண்டு வர வேண்டியதோ என்னுடைய நீண்ட நாள் காத்திருப்பு!.

“ஐயோ, என்னங்க செய்யிது?.. ஏன் ஒரு மாதிரியா பாக்குறீங்க!.. மொகமெல்லாம் வேற இப்படி வேர்த்துரீச்சே!.. மேரி, சீக்கிரமா இங்க வாயேண்டி புள்ள!.. உங்க அப்பாவ பாக்க பயமா இருக்குடீ!.. ஐயோ கர்த்தரவே!.. இப்ப நான் என்ன செய்வேன்?..”

“ஐயோ அப்பா!.. என்னப்பா செய்யிது ஒடம்புக்கு?.. நெஞ்சு வலிக்குதா!.. இருங்கப்பா… நா கொஞ்சம் ஆயேர் சுவாம்(வெது வெதுப்பான நீர்) கொண்டாரேன். மொதல்ல அத கொஞ்சம் குடிங்க!. நா தோ வந்திர்றேன். செர்டாங் ஆஸ்பிட்டலுக்கு போவம்.”

உள்ளே, பதற்றமும், பரபரப்புமாக ஒரே களேபரமாய் இருந்தது. நான், அதையெல்லாம் ஒன்றும் சட்டையே செய்யவில்லை!. எனக்கு இதெல்லாம் சலித்துப்போனக் காட்சி!.. ஒவ்வொரு தடவையும் நான், எனது வேலையைச் செய்யும்போது, இந்தக் கண்றவியைத்தான் பார்க்கிறேன். நோயில் படுத்து இன்னும் சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்த சனியன் வேற இன்னும் சாகாம உயிர வாங்குது..’ என்றோ; ‘ஒத்த கால வெச்சிக்கிட்டு இது இன்னும் என்னத்த சாதிக்கறதுக்கு இப்படி இழுத்து பறிச்சிக்கிட்டு கெடக்குது?’ என்றோ கட்டிய மனைவியே வாயிற்குள் முணுமுணுத்துக்கொள்வதை உயிரைப் பறிக்கப்போன எத்தனை இடங்களில் நான் பார்த்திருப்பேன்!. ஆனால், பிறர் பார்க்க ஒப்புக்கு இப்படி அழுது ஆர்ப்பரிக்க வேண்டும்!. அதுதான் அன்பின் அடையாளமாம்!. பிள்ளைகளின் பாச வெளிப்பாடாம்!. எல்லாமே சுத்த அபத்தம்; வேஷம்!.

அப்போதுதான் நான் அந்த வீட்டு எண்ணைப் பார்த்தேன்.

‘ஓ மை காட்!. நான் தட்ட வேண்டிய 14-ம் நம்பர் வீடு இது இல்லியே!..என்ன காரியம் செய்யப் பார்த்தேன்!.’

உள்ளே இருந்த பதற்றம் அவ்வளவும் இப்போது என்னைப் பற்றிக்கொண்டது. இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவரின் உயிர் பறிபோயிருக்கும். நான், உடனே அங்கிருந்து வேகமாய் விலகிப் போனேன். தாமாகவே ஒரு முடிவிற்கு வந்து, உயிரை மாய்த்துக்கொள்பவர்களை நான் ஏதும் தடுப்பதற்கில்லை. அவை, எனது முதுகிற்கு பின்னால் முடிவாகும் துர்மரணங்கள்!. எனக்கு அப்பாற்பட்டவை. ஆனால் நான், தவறுதலாக யாருடைய உயிரையும் எடுத்துவிடலாகாது என்பதில் மிகவும் கவனமாகவே இருப்பேன். அத்தகைய மரணங்கள், ‘இந்த சாவுக்கே ஒரு சாவு வரக்கூடாதா?’ என்ற சாபத்தைக் கோரும் மரணங்கள். அது, எனக்கொரு சாபக்கேடு!. நல்ல வேளை!. அதற்குள் வீட்டு எண் தட்டுப்பட்டு விட்டதால் நான், அந்தப் பிராணச் சேதத்தைச் செய்வதிலிருந்து தப்பித்தேன்.

‘ம்.. பரவாயில்லை.. இவருக்கு ஆயுள் கெட்டிதான்!..’

எனது தாக்குதலுக்கு ஆளானவரை ஒரு பக்கம் மனைவியும்; மற்றொரு பக்கம் மகளும் கைத்தாங்களாக பிடித்துக்கொண்டு வெளியே வந்தனர். ‘கைய உடுங்கடீ!.. இப்ப கொஞ்சம் பரவால்ல..’ என்று சொல்லி அவர் சுயமாக மகளின் வாகனத்தை நோக்கி நடக்கலானார். இப்போது, அபாய நிலையைக் கடந்துவிட்டதுபோல் அவர் முகத்தில் வேதனையின் சாயல் தணிந்திருந்தது.

‘அப்பாடா!. நல்ல வேளை!..’ – நான் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

மகளின் வாகனம் அவசரமாக அங்கிருந்து கிளம்பியதும், நான் மீண்டும் அந்த வீட்டெதிரே வந்து நின்று, அக்கம் பக்கத்து வீடுகளை நோட்டம் விட்டேன். எனக்கு வலது புறமிருந்த வீடுகளிரண்டின் எண்கள் முறையே 12, 10 என்ற எண்களைக் கொண்டிருந்தன. இடதுப் புறமிருந்த மூன்று வீடுகளும் முறையே 16, 18, 20 என்ற வரிசையில் சரியாக இரட்டைப்படை எண்களாகவே இருந்தன. நான் கதவைத் தட்டிய வீடு மட்டும் 12A என்று இலக்கமிடப்பட்டு, புதிய பலகையில் வெண்கல நிறத்தில் மின்னியது. மற்ற விடுகளின் எண்கள் எல்லாமே கருப்பு பெயிண்டில் சிமெண்ட் சுவரில் எழுத்தப்பட்டிருந்தன. அப்போதுதான் எனக்கு இவர்களின் சூழ்ச்சி தெரிந்தது. நான் வந்த இலக்கு சரியானதுதான். ஆனால், அந்த வீட்டிற்கு குடிவந்தவர்கள் வீட்டு எண்ணை சற்றே மாற்றி எழுதி, என்னைக் குழப்பிவிட்டிருந்தனர்.

‘விதியை வெல்ல யாராலும் முடியாது..’ என்பது தெரிந்தவர்கள்தாம் இந்த மனிதர்கள். ஆயினும், அந்த விதியையே மதியால் வென்றுவிட முடியும் என்று நம்பிக்கொண்டு இப்படித்தான் குருட்டுத்தனமாக ஏதாவது செய்யப் பார்ப்பார்கள். வெட்கமாய் இருக்கிறது!. அவர்களின் நம்பிக்கைக்கு தோதாக நானும் ஏமாந்து போனேனே?.

அந்த வீட்டிற்கு குடி வந்த குடும்பத்தில் ஒருத்தர் அந்த வீட்டிலேயே இறக்க வேண்டியது தனக்கு வாய்த்த எண்ணால், வீடு பெற்றுக்கொண்ட சாபம்!. அந்தக் காவுலேயே வீடு, சாப விமோசனம் பெற வேண்டியது விதி!.

* * *

அந்தக் குடியிருப்பின் பெயர் தாமான் பாரடைஸ். மொத்தமே 50 வீடுகளை மட்டுமே கொண்ட ஒரு சிறிய தாமான். வீட்டின் விலை ஐந்து லட்சங்களில் ஆரம்பமாகி ஏழரை லட்சங்களில் உச்சம் பெற்றிருந்ததால் இரண்டு மூன்று இந்தியர்களைத் தவிர மற்ற எல்லா வீடுகளிலும் சீனர்களே குடியிருந்தனர். வீடுகளின் விலையாலும்; அதிகமாக சீனர்களே குடியிருந்ததாலும் மலாய்க்காரர்கள் யாரும் வாடகைக்குக்கூட அந்தத் தாமானிற்கு குடி வர விரும்பவில்லை. சீனர்கள் தமது சமையலில் பன்றி இறைச்சியைப் பயன்படுத்துவதும், இன்னும் சிலர் நாய்கள் வளர்ப்பதும் மேலும் முக்கிய காரணங்களாக இருந்தன.

14-ம் நம்பர் வீடு!.

அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து காலியாகவே இருந்தது. விற்பனைக்கு அல்லது வாடகைக்கு என்று அறிவித்துக்கொண்டு, சில கைப்பேசி எண்கள் கொண்ட ஒரு துணி பேனர், மூன்று வருடங்களாகவே வீட்டு கேட்டில் தொங்கிக்கொண்டிருந்தது. சாயம் போய், வெயிலுக்கு வெளுத்துக்கொண்டிருந்த துணியில் அந்த வீட்டிற்கான வணிக தேவை தெரிந்தது. பினாங்கு தீவில் அதிகமாக ஹொக்கியன் வட்டார மொழி பேசும் சீனர்கள் இருப்பது போல், கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘கெந்தனீஸ்’ வட்டார மொழியைப் பேசும் சீனர்களே அதிகம் இருந்தனர். அந்த மொழியில், 14-கு எண்ணை ‘சாப் செய்’ (Sahp Sei) என்று உச்சரித்தனர். 10-க்கு சாப்(Saph)!.. 4-க்கு செய் (Sei)!.. ஆக, சாப் செய் (Saph Sei)!.. ஆனால் அது, ‘சப் செய்’(Sup Sei) என்ற இன்னொரு உச்சரிப்பைப் போலவும் ஒலித்தது. இந்தச் ‘சப் செய்’(Sup Sei) என்ற உச்சரிப்போ, ‘சாவு நிச்சயம்’ என்ற அர்த்தத்தைக் கொண்டு அச்சுறுத்தியது. அதனால், அந்த வீட்டை வாங்கவோ, வாடகைக்கு இருக்கவோ சீனர்கள் யாரும் முன்வரவில்லை!. நகராண்மைக் கழகம் அந்த வீட்டிற்கு 14-ம் எண்ணை அடையாளமாகத் தீர்மானித்து, அதைச் சுவரில் எழுதிய அன்றே சீனர்கள், அங்கே ‘மரணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக’ நம்பி, ஒதுங்கிப் போயினர். அதனால், ஓர் உயிர்ப்பலியில் ‘சாப விமோசனம்’ பெற வேண்டி இருப்பதுபோல் வீடு, இவ்வளவு நாட்களாக காலியாகவே கிடந்தது.

அந்தக் குடும்பம், அப்போது பீல் ரோட்டில் வசித்து வந்தது. குடும்பத் தலைவர் ‘டெலிகாம்ஸில்’ வேலைச் செய்து வந்ததால் அவருக்கு அரசாங்க குவாட்டர்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆபீஸ்சில், சாப்பாட்டு நேரத்தைத் தவிர மற்ற நேரத்தையெல்லாம் உட்கார்ந்தே கழிக்க வேண்டிய வேலை!. நேரத்திற்கு வந்த சாப்பாட்டின் தேவையை பசிக்கு பதில், ருசி தீர்மானிக்கத் தொடங்கியதால் வயிறு புடைத்துக்கொண்டு வர ஆரம்பித்தது. முன்பெல்லாம் சைக்கிள் மிதித்து வேலைக்குப் போனவர் இப்போதெல்லாம் மகளின் வாகனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்படி ஆனது. ஆகக் குறைந்தபட்ச சரீர இயக்கம்கூட அவரை சுவாசகாசத்தில் திணற வைத்தது. மனைவியின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மருத்துவப் பரிசோதனையைச் செய்துக்கொண்டபோதுதான் இரத்த நாளங்களில் இருந்த அடைப்புகள் தெரிய வந்தன. உடனே டாக்டர். ‘உங்களின் மரணத்திற்கான கவுண்ட் டாவுன்’ ஆரம்பமாகிவிட்டது என்ற செய்தியையே மிகவும் நாசுக்காக, ‘நீங்க சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கவேண்டிய நேரம் வந்துரிச்சி.. பத்தாததுக்கு நீங்க ஒரு சுகர் பேஷண்ட் வேற..’ என்று எச்சரித்து வைத்தார். அப்போது, அவர் பதவி ஓய்வு பெறுவதற்கான வயதை அடைந்துவிட்டிருந்ததால் பிரியாவிடை விருந்தொன்றில் கை நிறைய பூங்கொத்துகளுடன் நிரந்தரப் பணி ஓய்வு கொடுக்கப்பட, உடனே அரசாங்க குவார்ட்டர்சையும் காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மகள் ஒருத்தியின் சம்பாத்தியம். நல்ல, வசதியான குவார்ட்டர்சிலேயே வாழ்ந்து பழகிவிட்டதால் அபார்ட்மண்ட் யூனிட்டிற்குள்ளேயே நாளேல்லாம் அடைந்து கிடக்கும் தண்டனையை ஒரு நினைப்பாகக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, வாடகை குறைவாக இருந்தாலும் அபார்ட்மண்ட் வாழ்க்கையை முற்றாக தவிர்த்தனர். சற்று விஸ்தீரமான ஆனால் வாடகை கம்மியாக வீடு தேடியபோதுதான் அந்த 14-ம் நம்பர் வீட்டை அவர்கள் கண்டடைந்தனர். மகளுக்கு ஏனோ வாடகை கம்மியாக இருந்தும் வீடு பிடிக்கவில்லை. ஆனால், விதிவசமாக அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு அனுசரணையாக அம்மாவும் இருந்தாள்.

இந்த வீட்டில் மூன்று அறைகள் இருந்தன. மகள் ஒரு அறையில் படுத்துக்கொள்ள, டெலிவிஷன் பார்த்துக்கொண்டே கணவன் ஹாலிலேயே தூங்கிப் போவது மனைவிக்கு வசதியாகவே இருந்தது. சரீர சம்பந்தமெல்லாம் எப்போதோ முடிந்து போயிருந்ததால் அந்த இடைவெளியால் நஷ்டம் ஏதும் இருக்கவில்லை!. மேலும், நள்ளிரவு வரை கைபேசியைப் பார்த்துக்கொண்டு அறையில் தனியாக படுத்துக்கொள்வது மகிழ்ச்சியையே தந்தது. எந்தச் சக்தியின் ரகசிய முன்னேற்பாடோ என்னவோ!.. முன்பெல்லாம் கலவியின் போது மட்டுமே கழற்றி வைக்கப்பட்ட தாலி, இங்கே வந்ததிலிருந்து. ‘புது எடம்!.. திருட்டு பயமெல்லாம் இருக்குமோ.. என்னமோ..’ என்ற எச்சரிக்கையில் நிரந்தரமாகவே கழற்றப்பட்டு, தலையணைக்குள் புதைத்து வைக்கப்பட்டது. நெற்றி வகிட்டில் பெரியதாய் கொட்டி வைக்கப்பட்ட குங்குமம்கூட நெற்றிக்கண்ணிற்கு இறங்கி, சிறிய ஸ்டிக்கர் பொட்டாய் ஒட்டிக் கிடந்தது. சமயங்களில், அதுகூட கண்ணாடியில் தெரிந்த நெற்றியில் ஒட்டிக்கொண்டிருக்க, நிஜ நெற்றி மூளியாகவே இருந்தது.

அங்கு மாற்றலாகி வருவதற்கு முன்னர், வீடு கட்டப்பட்டதிலிருந்தே காலியாகவே கிடந்ததை அறிய நேர்ந்தபோது அவர்களுக்கு மனசு கேட்கவில்லை!. ‘காத்து சேட்டை’ ஏதும் குடிவந்திருக்குமோ என்று சஞ்சலம் பற்றிக்கொண்டது. ஒரு ஞாயிற்றுக்கிழமை பாதிரியாரை அழைத்து, வீட்டிற்கு சடங்கு செய்து, ஆசீர்வதித்த பின்னரே சஞ்சலம் நீங்கி சாந்தி பெற்றனர். வீட்டின் எண்ணாலேயே யாரும் வாடகைக்குகூட வரவில்லை என்பதை வீட்டு முகவர் நேர்மையாகவே ஒப்புக்கொண்டார். அவர்களுக்கு சங்கடமாக இருப்பின், வீட்டு எண்ணை 12A என்று தாராளமாக மாற்றிக்கொள்ளலாம் என்ற மாற்று யோசனையும் சொன்னார். அவர்களுக்கு அது, ஏற்புடைய பரிந்துரையாகவே தோன்றியது. முகவர், தனது செலவிலேயே பழுப்பு நிற பின்புலத்தில் தங்க நிறத்தில் 12A பொறிக்கப்பட்ட பிளேட்டை ஆர்டர் செய்து, சுவரில் மாட்டிவிட்டுச் சென்றார்.

முகவர் தெரிந்துதான் செய்தாரோ இல்லை தெரியாமல்தான் செய்தாரோ?.. A என்ற எழுத்திற்கிருந்த 1 என்ற எண்ணியல் மதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டு 1+2+1(A) கூட்டிப் பார்த்தபோது 4 வந்தது. கெந்தனீஸ் வட்டார வழக்கில் 4-ஐ செய் (Sei) என்று உச்சரித்தனர். அதற்கு, ‘சாவு’ என்று மற்றொரு அர்த்தமும் இருந்தது. நல்லவேலையாக இவர்களுக்கு அவ்வளவு ஆழமாகவெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை!. கம்மியான வாடகையில் நல்ல விஸ்தீரமான வீடு கிடைத்த சந்தோஷம்!. உடனே, 12A வீட்டிற்கு குடி வந்தனர்.

விதி வலியது!..

* * *

நான் அந்த வீட்டிலேயே காத்திருந்தேன். அந்த வீட்டு எண்ணின் குழப்பத்தில் அவர் உயிர் தப்பி, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, இப்போது சிகிச்சை என்ற பெயரில் ஏதோ ஒன்றை செய்துக் கொண்டிருந்தார்.

அவர் சாகப் போவது உறுதி. சாகப் போகும் இடத்தில் கொஞ்சம் மாற்றத்தை செய்துக்கொண்டால்தான் என்ன என்று நான், ஒருகணம் யோசிக்கலானேன். சமயத்தில், தேவை கருதி அப்படிப்பட்ட மாற்றங்களை செய்துக்கொள்வதும் உண்டுதான். எனக்குத் தேவை சம்பந்தப்பட்ட உயிர்!. ஆனால், இந்த உயிரைப் பொருத்தவரை எனக்கொரு சிக்கல் இருந்தது. வீட்டு எண்ணின் உச்சரிப்பால் அவர் அந்த வீட்டிலேயே சாக வேண்டியதுதான் விதி!.

இந்த மனிதர்களுக்கிடையே நான், எனது பணியைச் செய்வது மிகவும் எரிச்சலூட்டும் விவகாரமாய் இருந்தது.. இவர்களுக்கு நிலையான சிந்தனை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. நாக்கில் நரம்பில்லை என்பதால் எப்படியும் பேசுவார்கள்.

‘வந்தா இப்படி ஒரு சாவு வரனும்..’ என்று என்னைக் கொண்டாடும் அவர்களேதான்

‘சனியன், எந்த ஜென்மத்திலும் இப்படிப்பட்ட சாவு வரவே கூடாது..’ என்று பழிக்கவும் செய்வார்கள்.

ஹீனப்பிறவிகள்!.

நான் ஒரு நியாயவான்!. ஏழை பணக்காரர்; இருப்பவன் இல்லாதவன்; ஆண் பெண்; குழந்தை முதியவர்; நோயாளி திடகாத்திரமானவன் என்ற வித்தியாசமெல்லாம் எனக்கு கிடையாது. பாவ புண்ணியமும் பார்க்க மாட்டேன்!. நேரம் வந்துவிட்டால் சரியான இடத்தில் சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவேன். ஆனால், சில சமயங்களில் நான் வலிந்து வரவழைக்கப்படுவதும் உண்டு!. விபத்திற்குள்ளான சக மனிதனைக் காப்பற்றுகிறேன் என்று சொல்லி, எடுக்கவேண்டிய பாதுகாப்பை எடுக்காமல், ‘சாலையைக் கடந்த நாயைப்போல்’ இவர்கள் அடிபட்டு சாகும் போதெல்லாம் நான், அபாண்டமாய் பழி சுமத்தப்பட்டு, நிந்திக்கப்பட்டேன்!.

‘இவர்களின் குருட்டுத்தனத்திற்கு நான் என்ன செய்வேன்? மூடர்கள்!’

* * *

மாலை நேரம்!. மகள் மட்டுமே வீட்டிலிருந்தாள். அம்மா அப்பாவிற்குத் துணையாக ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கொண்டாள். அப்போது, ஒரு குடும்பம் வீட்டிற்கு வந்தது. கைகளில், நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது கொண்டு செல்லும் ‘மரியாதை’ பிளாஸ்டிக் பைகளில் தொங்கியது. கொஞ்ச நேரத்தில் இன்னொரு குடும்பமும் வந்து சேர்ந்தது.

“அப்பாவுக்கு எப்படிம்மா இருக்கு இப்ப?. டாக்டரு என்ன சொல்றாரு?” வந்தவர்கள் எல்லோரும் இந்தக் கேள்வியையே கேட்டனர்.

“இப்ப கொஞ்சம் பரவால்ல மாமா. ஆனா, டாக்டரு இன்னும் ரெண்டு வாரத்துக்கு இருந்து, பாத்துட்டு போறதுதான் நல்லதுன்னு சொல்றாரு. அதான் அம்மா அப்பாகூட இருக்காங்க..”

“பேரு வெட்டி வந்திருப்பார்னு நெனச்சிதான் வீட்டுக்கு வந்தோம்.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா ஆஸ்பத்திரிக்கே போய் பாத்திருப்போம். இருந்தாலும் பரவால்ல. ஒடம்ப நல்லா தேத்திக்கிட்டு மெதுவாதான் வரட்டுமே!. என்ன அவசரம் இப்ப?.” என்று மாமா சொன்னார்.

நான் மாமாவைப் பார்த்தேன்.

‘பாவம், அப்பாவி!. உடம்பு தேறி மெதுவாக வருவதற்கெல்லாம் அப்பாவிற்கு அவகாசம் இல்லையே!’.

‘மேலும் இரண்டு வாரத்திற்கு இருக்கச் சொல்லி டாக்டர் அபிப்பிராயப்படலாம்!. அவ்வளவு நாட்களுக்கெல்லாம் என்னால் காத்திருக்க முடியாதே!.’

டாக்டரின் அனுமதி இல்லாமல் அப்பாவால் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியாகவும் சாத்தியம் இல்லை!.

நான் சற்றே குழம்பிப் போனேன். ஆயினும், எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

‘எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!.’

அப்போது, ‘கிராப்’ காரொன்று வீட்டின் முன்னே வந்து நின்றது. இன்னும் யாரோ அப்பாவைப் பார்க்க வருகிறார்கள் போல!.. வருவதற்கு முன், இவர்கள் ஏன் விவரத்தைத் தெரிந்துகொண்டு இங்கே வரக்கூடாது!. இல்லாத நோயாளியின் நலத்தை விசாரிக்க என்ன இருக்கிறது இங்கே?. காரின் பின் கதவு திறக்கப்பட பின்னிருக்கையிலிருந்து பயணி ஒருவர் இறங்கி, பக்கத்திலிருந்த விளக்குக் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு நின்றார்.

‘ஆ, அப்பா!..’

எனது நம்பிக்கை வீண் போகவில்லை!.

கம்பத்தைப் பிடித்திருந்த கை, நிதானத்தை இழந்து நடுங்கியது. மாலை வெயிலுக்கு அவரின் நிழல், முன் சரிந்து அவரின் பிணத்தைப் போல் தரையில் விழுந்து கிடந்தது. ‘அவரின் பார்வை ஏன், வீட்டு எண்ணிலேயே நிலைக்குத்தி நிற்கிறது?’ நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறருக்கு வெளிரிப் போனதாய்த் தெரிந்த அவரின் முகத்தில் நான், எனது நிழலைக் கண்டேன். சற்று முன்னர் எனக்கிருந்த குழப்பமெல்லாம் உடனே விலகிப் போனது.

நிலுவையில் இருந்த பணி, நிறைவேறப்போகிற சந்தோஷம் எனக்கு!.

மனைவி, மருத்துவமனையிலிருந்து கொண்டுவந்த கூடையை வாசலில் வைத்துவிட்டு, கணவனை அழைத்துப் போக திரும்பியபோது,

“நீங்க உள்ளுக்கு போங்கம்மா. நான் அப்பாவ கூட்டிக்கிறன்..” என்று மகள் அப்பாவிடம் போனாள். ஆனால் அப்பாவோ, தன்னால் பிறர் துணையில்லாமல் நடக்க முடியும் என்பதுபோல் சுயமாக நடந்து வரலானார்.

“அப்பா, பாத்துப்பா..” என்று மகள் விரைந்து போய் அவரை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டாள்.

“பரவால்லம்மா!.. என்னால ஒண்டியா நடக்க முடியும்..” என்று ஒரு பாதுகாப்பிற்கு மகளின் தோள்பட்டையில் ஒரு விரலை மட்டும் வைத்து சுயமாக நடந்து வந்துகொண்டிருந்தார். உறவினர்கள் சிலர் வெளியே வந்தனர்.

“வாப்பா. எப்படி இருக்க?. செத்து பொழச்சிருக்க.. இனி ஒனக்கு ஆயுசு கெட்டிதான்!.. கவலப்படாத!..” என்று மொட்டைத்தலை உறவினர் ஆரூடம் சொன்னார்.

‘அப்படியா?..’ நான், எனக்குள் கேட்டுக்கொண்டு ஏளனமாய்ச் சிரித்துக்கொண்டேன்.

“வாப்பா ஹீரோ!.. சாவையே என்ன செய்தின்னு கேட்ட ஹீரோவாச்சே நீ!..” என்று இன்னொரு உறவினர் இவரின் கையைப் பற்றிக்கொண்டார். இவர் முகத்தில் உயிர் செத்தச் சிரிப்பொன்று தோன்றி மறைந்தது.

‘என்ன?.. என்னையே என்ன செய்தி என்று கேட்ட ஹீரோவா!.. பரவாயில்லையே!.. தவறான வீட்டைத் தட்டிவிட்டோமே என்ற சந்தேகத்தில் உடனே அங்கிருந்து விலகிப்போனது எவ்வளைவு கேலிக்குரிய விஷயமாய் ஆகிவிட்டது?..’

உள்ளேயிருந்து வலமும் இடமும் ஆடியபடி நடந்து வந்த ரெட்டை நாடி உடம்மொன்று கேட்டது.

“பேரு வெட்றப்ப டாக்டரு என்னக்கா சொன்னாரு?.. இனி ஒன்னும் சீரீயஸ் இல்லியே?..”

“அட, நீ ஒன்னுடீ!. அந்த கூத்த ஏங் கேக்கற?.. டாக்டரு எங்க பேரு வெட்னாரு?.. அவுரு உன்னும் ரெண்டு வாரத்துக்கு இருந்துட்டு போறதுதான் நல்லதுன்னு சொன்னாரு.. ஆனா, இந்த மனுஷன் கேட்டாதானே?.. இங்க என்னமோ வெட்டி முறிக்கிற வேல பாக்கி இருக்குறமாரி பிடிவாதமா வீட்டுக்கு போனாலே ஆச்சின்னு ஒத்த கால்ல நிக்க ஆரம்பிச்சிட்டாரு.. சும்மா சொல்லக்கூடாது!.. டாக்டரும் பாவம், பொறுமையா எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு. இந்த மனுஷனோ ஏதும் கேக்கறதாவே இல்ல. கடசீல, ‘டாக்டரோட ஆலோசனையையும் கேக்காம நாங்களாவே பிடிவாதமா பேர வெட்டிக்கிட்டு போறம்ன்னு..’ எழுதி வாங்கிட்டுதான் எங்கள வெளிய உட்டாரு…நாளக்கி ஏதும் ஒன்னுன்னா மறுபடியும் அந்த ஆஸ்பிட்டல் வாசப்படிய கூட மிதிக்க முடியாதுடீ. அப்ப தெரியும் இந்த மனுஷக்கு!..” என்று அவரின் மனைவி, அக்கறையுடன் புலம்பிக்கொண்டே ஒரு சாபத்தை விட்டாள்.

நான், விஷமத்தனமாய் புன்னகைத்துக்கொண்டேன்.

‘பாவம், இந்த மனிதர்கள்!..’

* * *

இரவு வந்தது. வந்திருந்த எல்லோருமே திரும்பிப் போயிருந்தனர். மயான அமைதியில் வீடு!.. ஒரு வாரம் ஆஸ்பத்திரி சாப்பாட்டைச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போய்விட்டதென்று சலித்து, ‘தண்ணீ சாறு’ வைத்து ‘அவிச்ச மீன் சம்பால்’ சமைக்கச் சொல்லி, வாய்க்கு ருசியாக வயிறாற சாப்பிட்டு எழுந்தார் அப்பா. வயிற்றின் திருப்தி, வாய் விட்ட ஏப்பத்தில் தெரிந்தது.

ஹாலின் சுவரில், இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே தொங்கிக்கொண்டிருந்த ஏசு நாதரும் அவர்தம் 12 சீடர்களும் கொண்ட சித்திரம், இப்போதுதான் எனக்கு அர்த்தம் மிக்கதாய்த் தோன்றத் தொடங்கியது.

இன்றுதான் கணவர் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தால், ‘ஆபத்து அவசரத்திற்கு’ நல்லதென்று, அவரை தன்னுடன் அறையிலேயே படுத்துக்கொள்ளச் சொல்லி, மனைவி வற்புறுத்தினாள். மகளும் தாயிற்கு ஆதரவாய் நின்றாள். ஆனால் அவரோ, பிடிவாதமாக மறுத்து, ஹாலிலேயே படுத்துக்கொண்டார்.

எனது பணியைச் செய்வதற்கு எனக்கு நேரம் காலமெல்லாம் ஒன்றும் கிடையாது!.. ஆனால், பாவம் இந்த மனிதர்கள்!. ‘ராகு காலம்..’ என்று சில நேரங்களைக் கணித்து, தமது மதியால் என்னை வெல்லப் பார்த்தார்கள். இவர்கள் யார் எனக்கு காலத்தைக் கணிக்க?.. யாருடைய யோசனையையும் தலையீட்டையும் நான் மதிப்பதெல்லாம் கிடையாதே!. ஆயினும், சில நேரங்களில் அவர்கள் கணித்த நேரத்திலேயே என் பணியும் முடிவதுண்டு!. ஆனால், அவையெல்லாம் அகஸ்மாத்தாய் நடக்கும் விவகாரங்கள். அதற்கெல்லாம் இவர்கள் பெருமை பாராட்ட முடியாது.

அதிகாலை மணி மூன்றரை!. அன்று, எனக்கான நேரமாக மனிதர்கள் கணித்ததைக் காலண்டர் சொன்ன நேரம், அதிகாலை மணி 3.00 லிருந்து 4.00 வரை!.

‘போகட்டும்!.. அது அவர்கள் கணக்கு!..’

வீடும், வீதியும் இருட்டில் மூர்ச்சையாகிக் கிடக்கின்றன. காற்றின் சிற்றலை அடங்கிப் போய், எதற்கோ அஞ்சலி செலுத்தத் தயாராகிக்கொண்டிருந்த தருணம்!..

சட்டென்று, ‘டாய்லட்’ விளக்கு எரியத் தொடங்குகிறது.

நான் ஆயத்தமாகிறேன்…

கொஞ்ச நேரத்திலேயே ‘தொப்’பென்று ஒரு சத்தம்!. அடுத்த கணம், ஒரு ஹீனக் குரலின் உள்ளடங்கிய விளிப்பு சன்னக்குரலில் திணறுகிறது!..

சில நிமிடங்களில் சிலிர்த்துக்கொண்டு விழித்த எதிர் வீட்டு நாய், 12A வீட்டைப் பார்த்து ஊளையிட்டு அழுது, வானத்தை நோக்கிக் குரைக்கிறது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.