ஜாவீத் அக்தர்

This entry is part 12 of 12 in the series கவிதை காண்பது

‘யுகாந்தர்’, மிதுன் சக்ரபோர்த்தி – சங்கீதா பிஜ்லானி நடித்து, என். சந்த்ரா எழுதி இயக்கிய திரைப்படத்துக்குப் பாடல் எழுத ஜாவீத் அக்தர் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் தயக்கத்துடன் ஒரு பாடலில் கண்ணபிரானின் ‘ஆரத்தி’ படமாக்கப்படும், பாடல் வரிகளும் அதற்கு ஏற்றாற்போல் அமையவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இதை ஏன் தயங்கித் தயங்கிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டுப் பாடலின் மெட்டை வாசிக்கச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த நாள் இசையமைப்பாளர்களை சந்தித்துப் பாடல் வரிகளைத் தருகிறார். உடன் கூடுதலாக சில வரிகளையும் தருகிறார்.

‘ஆரத்தி இசை படிப்படியான ஒலிப்பெருக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், உங்கள் மெட்டு அப்படி இல்லை, அதனால் நான் சில விருத்தங்களை நானாக ஆரத்திக்காக எழுதி வந்துள்ளேன். தேவையென்றால் மெட்டமைத்துப் பாடலில் இணைத்துவிடுங்கள்’ – எனச் சொல்லி விருத்தத்தைப் பாடிக்காட்டியிருக்கிறார்.

வோ கிருஷ்ண் கன்னையா முரளிதர்
மன்மோஹன் கஞ்ச்பிஹாரி ஹை!
கோபால் மனோஹர் துக்பஞ்சன்
கன்ஷ்யாம் அடல்பன்வாரி ஹை!
ஹோ கன்ஸ்விநாஷக் மஹாரதி
சுதர்சன் சக்ரதாரி ஹை!
பன் கஞ்ச்பிரையா சாவரியா
நந்தலாலா கன் முராரி ஹை!
ஹர் ரூப் நிராலே ஹை உஸ்கே
ஹர் லீலா உஸ்கே நியாரி ஹை!
வோ கோபிசந்த் மதன்மோஹன்
வோ ஷ்யாம் பீதாம்பர் ஆயேகா!
ஆயேகா யுகாந்தர் ஆயேகா!

‘எங்களுக்கும் கிருஷ்ணனின் இத்தனை பெயர்கள் தெரியாது ஜாவீத், உங்களுக்கு எப்படி இத்தனை தெரிந்தது?’ – என லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் கேட்க,

‘நான் உருது படிக்கிறேன். உருதுக் கவிதைகளில் கிருஷ்ணனின் பல பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன’ – என ஜாவீத் அக்தர் பதில் அளிக்கிறார்.

ஜாவீத் அக்தர் திரைக்காக எழுதிய கண்ணன் ஆரத்தி பாடலை இசையமைப்பாளர்கள் வியக்கிறார்கள்.

நீண்ட நாள்கள் கழித்து ‘லகான்’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் இன்னொரு கண்ணன் பாடல் எழுதினார். அது கண்ணன் – ராதை பாடல்.

மதுபன்மேன் ஜோ கன்னையா கிசி கோபி சே மிலே
கபி முஸ்காயே கபி சேடே கபி பாத் கரே
ராதா கைசே நா ஜலே, ஆக் தன் மன் மே லகே

நந்தவனத்தில் கண்ணன் கோபியரை
சந்தித்தால்
புன்னகத்தால்
குறும்பு செய்தால்
பேசினால்
ராதையால் எப்படிப் பொங்காமல் இருக்க இயலும்?
உடலும் உள்ளமும் வேகின்றன

அதற்கு பதில் சொல்லும் விதமாக,

ராதை நிலவென்றால் கோபியர் விண்மீன்கள்
பிறகெற்கு ராதை கோப்ப்படுகிறாள்?

ராதைக்காகத்தான் கண்ணன் இதயத்தில்
காதல் மலர்ந்துள்ளது
பிறகெதற்கு ராதை சஞ்சலமடைகிறாள்?

இப்படியாகப் பாடல் செல்லும்.

ஜாவீத் அக்தரின் திரையுலகப் பயணத்தில் (சலீம் – ஜாவீத் இணைந்து) முதன் முதலாக அதிகத் தொகை கொடுத்து இந்தியில் திரைக்கதை எழுதச் சொன்னவர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். திரைப்படம் ஹாத்தி மேரே சாத்தி (தமிழில், ‘நல்ல நேரம்’).

சலீம் – ஜாவீத் இணைந்து எழுதிய வெற்றிப் படங்களில் சில, யாதோன் கி பாராத் (தமிழில், நாளை நமதே), ஜன்ஜீர் (தமிழில், சிரித்து வாழவேண்டும்), மஜ்பூர் (தமிழில், நான் வாழவைப்பேன்), ஹாத் கி சஃபாய் (தமிழில், சவால்), தீவார் (தமிழில், தீ), டான் (தமிழில், பில்லா), திரிஷூல் (தமிழில், மிஸ்டர் பாரத்).

பின்னாளில் சலீம் – ஜாவீத் கூட்டணி பிரிந்தது. ஜாவீத் அக்தர் தனியாகப் படங்களுக்கு எழுதினார். அவற்றுள் சில, டான் 2 (தமிழில், பில்லா 2), மேரி ஜங் (ஒரு தாயின் சபதம்).

ஜாவீத் அக்தர், கவிஞராக, திரைப்பாடலாசிரியராக, முற்போக்குவாதியாக, சமூகப் போராளியாக அடையாளம் காணப்பட்டார். ஜாவீதின் தந்தை நிசார் அக்தரும் உருதுக் கவிஞர். அவருடைய முன்னோர்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள். இருப்பினும் ஜாவீத் அக்தர் தன்னை நாத்திவாதியாக முன்னிறுத்திக்கொண்டார்.

ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும், ஆறு முறை சிறந்த பாடலாசிரியருக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் ஜாவீதுக்குக் கிடைத்தன. பத்மஸ்ரீ (1999) விருது, பத்மபூஷன் (2007), உருது மொழிக்காக சாகித்திய அகாடமி விருதும் ஜாவீத் அக்தர் பெற்றுள்ளார்.

ஜாவீத் அக்தரால் ஒரு பக்கம் ஏக் தோ தீன் (திரைப்படம்: தேஸாப்) எனக் களியாட்டப்பாடலும் எழுத முடியும், இன்னொரு பக்கம் தேக்கா ஏக் க்வாப் தோயே சில்சிலே ஹுவே (திரைப்படம்: சில்சிலா, ‘கனவில் கண்டது கதையானது’) எனக் கவித்துவமாகவும் எழுத முடியும்.

*

கடந்த ஆறு மாதங்களாக மீர்ஸா காலிப் காலம் முதல் இன்றைய திரைப்பாடல் காலம் வரையில் கண்ணபிரானைத் தன் பாடல்களில் எழுதியுள்ள பன்னிரண்டு கவிஞர்களுக்கு சொல்வனத்தில் சிறுகுறிப்பு வரைந்தது நல்ல அனுபவம்.

தொடர் எழுத வாய்ப்பு அளித்த பாஸ்டன் பாலா அவர்களுக்கும் சொல்வனம் குழுவினர்க்கும் என் நன்றி.

Series Navigation<< ஷகீல் பதாயுனி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.