வானோர்கள்

‘இன்னும் பத்து  நிமிஷத்துல அங்க ஒரு மேஜிக் நடக்க போவுது பாரு.’

ஆகாயத்தில் வெங்கடேஷ் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினேன். அப்பொழுதெல்லாம் மெட்ராஸில் கூட வானில் நட்சத்திரங்கள் துல்லியமாக தெரியும். நாங்கள் இருந்ததோ கும்மிடிபூண்டியை தாண்டி ஆந்திராவை தொட்டுக் கொண்டு.  ஆரம்பாக்கத்தில் அமைந்து இருந்த ஒரு இரும்புத் தொழிற்சாலையுடைய மேலாளார்களின் குடியிருப்பில் தான் நாங்கள் வசித்து வந்தோம். இரண்டு சிறு சாலைகளும் மிகக் குறைவான விடுகளுமே அங்கு  உண்டு. இரவு ஒன்பது மணிக்கு மேல் சில தெரு நாய்களும், இங்கொன்றும் அங்கொன்றுமாக பழுப்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கும் சாலை விளக்குகளும், அதைச் சுற்றும் பூச்சிகளும் தான் கண்ணில் படும். 

நான் வெங்கடேஷ் வீட்டிற்கு அருகில் வந்துக் கொண்டிருக்கும் போது  ‘இந்நேரத்துக்கு எங்க போற தம்பி’ என்று மாணிக்கம் தாத்தா கேட்டார்

‘என்ஜினீயர் வீட்டுக்கு…படிக்கப் போறேன்’ என்றேன் 

‘பாத்து போ..பூச்சிப் பொட்டு இருக்கும். என்னா படிப்போ’ என்று முனகி விட்டு கயிற்றுக் கட்டிலில் படுத்து விட்டார்.

மாணிக்கம் தாத்தா தான் அந்த குடியிருப்புக்கு  காவலாளி.  இவர் இந்தக் குடியிருப்பு உருவாகுவதற்கு முன்பே இந்த இடத்தில வசித்து வந்தார் என்று கேள்வி. ‘கொஞ்சம் கிறுக்கு’ என்று என் அப்பாவின் நண்பர் கூறக் கேட்டிருக்கிறேன். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றியதில்லை சாதாரணமாகத் தான் தெரிந்தார். இரவு பதினோரு மணி வரை ரேடியோ சிலோன் பாடல்களை தன்னுடைய பாக்கெட் ட்ரான்சிஸ்டரில் கேட்டு விட்டு, பிரம்பு குச்சியை இரண்டு தரம் தரையில் அடித்து விட்டு, விசிலை ஊதுவார். போன வருடம் விசில் காணாமல் போய் விட்டதனால் பிரம்படியோடு அவர் காவல் பணி  முடிந்து விடும். 

 வெங்கடேஷ் வீட்டு  மொட்டை மாடியிலிருந்து தொடுவானில் கறிக்கோல் கீற்றுகள் போல பனை மரங்களும், ஸ்ரீஹரிகோட்டாவின் சிறு ஒளிப்புள்ளிகளும் தான் வானத்தையும் பூமியையும் பிரித்தது . கரும் குடை போல வானம் மேலே விரிந்திருக்க அதில் பல கோடிப்  பொத்தல்களாக நட்சத்திரங்கள். ஒளிமாசு என்ற பெயர் கூட அறியப்படாதக்  காலம். 

‘லியோவ பாரு’

‘என்ன’

‘நட்சத்திர மணடலம்டா, சிம்ம ராசி’ 

‘எங்க இருக்கு சிங்கம்’ 

வெங்கடேஷின் விரல் மேலே கவிழ்ந்திருந்த கரும் கடலிலிருந்து தனித் தனி விண்மீன்களை சுட்டி, ஒரு சிங்கத்தின் கோட்டோவியத்தை வானில் வரைந்தது. இவற்றை அவன் எங்கள் பள்ளிப்பாடத்  திட்டத்தில் படிக்கவில்லை என்று நான் அறிவேன். நூலகத்தில் சக மாணவர்கள் நாளிதழ்களில் வரும் ஸ்ரீதேவியின் படத்தை ரகசியமாக கத்தரிப்பதில் மும்முரமாக இருக்கையில் இவன் மட்டும் தூசி மண்டிக் கிடக்கும் பிரிட்டானிகா தொகுப்புகளையும், வெறும் காட்சிப் பொருளாக கண்ணாடி அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும் கனமான இயற்பியல் புத்தகங்களையும் புரட்டிக் கொண்டிருப்பான். 

‘இப்பத் தெரியுதா’

பள்ளி நூலகத்தில் நைந்துப்  போன பழைய நேஷனல் ஜியோக்ராபிக் இதழில் அழுக்குப் பிடரியுடன், நாக்கை தொங்க போட்டுக் கொண்டு  மர  நிழலில் இளைப்பாறும் சிங்கத்தை என்னால் நட்சத்திர மண்டலத்தில்  காண இயலவில்லை. 

‘ஆ…இப்ப தெரியுது’ என்றேன்

‘இப்ப ஆரம்பிக்கிற நேரம் தான்’ என்றான் வெங்கடேஷ் தன் கைக்கடிகாரத்தை பார்த்தபடி. போன வருடம் அவனுடைய சிங்கப்பூர் உறவினர் பரிசாக கொடுத்த கேசியோ கைக்கடிகாரம் கட்டி இருந்தான். கடிகாரத்தின் வெளியில் துருத்திக் கொண்டிருக்கும் பொத்தான்களை அழுத்தினால் தேதியும், கிழமையும் காண்பிக்கும். பரிசு வந்த அதே தினத்தில் அதை முழுவதுமாக பிரித்துப் போட்டு மறுபடியும் சேர்த்து கடிகாரத்தை ஓட  வைத்ததை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் அன்று என் மனதில் அவனைப் பற்றிய பிம்பம் இன்னும் பெரிதாயிற்று.  10:52 என்ற எண்களுக்கு  நடுவில் இருப் புள்ளிகள் சிமிட்டிக் கொண்டிருந்தன. அந்த இரவில் கூட அவன் தலை நன்கு படிய சீவியிருந்தான். முழுக்கைச்சட்டையின் கைப்பட்டை பொத்தான்கள் போடப் பட்டிருந்தது. மொட்டை மாடியின் ஓரத்தில் ஒரு முக்காலியின் மீது பழுப்பு காகிதம் சுற்றிய புத்தகமும், அதன் மேல் மையூற்றுப் பேனாவும், சலவை செய்து நான்காக மடிக்கப்பட்ட வெள்ளை கைக்குட்டையும்  இருந்தன. என் பள்ளியிலேயே நேர்த்திக்கு மறு பெயர் என்ன என்று கேட்டால் வெங்கடேஷ் என்ற பதில் தான்  வரும். உடுக்கும் உடையிலிருந்து பள்ளிக்கு எடுத்துப் போகும் பையில் சீராக அடுக்கப்பட்ட புத்தகங்கள் வரை எல்லாவற்றிலுமே ஒரு ஒழுங்கு. சாப்பாட்டு டப்பாவில் கூட தயிர்சாதமும் ஊறுகாயும் ஒட்டி உறவாடி வழிந்து ஓடாமல் தம் எல்லைகளை மதித்து இருக்கும். 

லேசான குளிர் காற்று மொட்டை மாடியில் விழுந்திருந்த சருகுகளை சிறு சத்தத்துடன் அல்லாட வைத்தது.

‘ஆரம்பிச்சாச்சு’  என்றான் வெங்கடேஷ். 

அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையில் நட்சத்திரங்கள் மட்டுமே ஜொலித்து கொண்டிருந்தது. சரி இதுவும் சிங்கம் போலத் தான் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே ஒரு வெளிச்சக் கீற்றுத்  தோன்றி மறைந்தது. தீபாவளி ராக்கெட் கிடைமட்டமாக பறந்ததுப் போல. விண்கல்லாடா என்று கேட்க எத்தனிப்பதற்குள் பல வெள்ளை, சிவப்பு மற்றும் அடர் நீலத்  தீக்கோடுகள் வானின் அந்தப் பகுதியில் தோன்றி மறைந்தன. கரு மட்டும் வெள்ளையாய் தகிக்க, நீண்ட தங்க வாலுடன் ஒரு கொள்ளிக்கட்டை வானில் சற்று மெதுவாகவே நகர்ந்து மறைந்தது. அன்னையைத் தொடரும் குட்டிகளைப் போல அதை தொடர்ந்து பல சிறிய நெருப்புக் கோடுகள் சிறிது தூரம் பயணித்து தணிந்தது. நான் நேரத்தைக் கணிக்க மறந்திருந்தேன். ஆனால் பத்து நிமிடத்திற்காவது இந்த ஒளிக் காட்சிகள் நீண்டிருக்கக்கூடும்.

‘லியோனிட்ஸ் விண்கல் மழை’ என்றான் வெங்கடேஷ் பல நிமிடங்களுக்கு பிறகு.

‘தினம் வருமா’

‘இல்ல..வருஷத்துக்கு ஒரு தரம் தான்..அதுவும் இன்னிக்கும் நாளைக்கும் தான் உச்சம்.’

‘எப்படி சரியா இந்த நேரத்துக்கு வருஷா வருஷம் வருது ‘

 ‘இந்த வானமே ஒரு கடிகாரம் மாதிரி டா…சுற்றது, சுழலறது…எல்லாமே ஒரு விதிப்படி தான். நியூட்டன் என்ன சொன்னார் தெரியுமா?’ 

எனக்குத் தெரியாது என்று நான் தோள்கள் தூக்கி வாய் சுழித்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. கண்கள் என் மீது இருந்தாலும் அவன் எங்கேயோ இருந்தான். உள்ளே யாரோ ஏதோ சொல்வதை கூர்ந்து செவி மடுப்பதைப் போல. தூரத்தில் ஆந்திராவை நோக்கிச் செல்லும் ரயிலின் சத்தம் என் காதுகளுக்கு மட்டும்தான் கேட்டது

‘இந்த பிரபஞ்சத்தில எல்லா பொருட்களோட இப்போதய இருப்பிடம் தெரிஞ்சிதுன்னா…அந்த பொருட்களெல்லாம் கடந்த காலத்தில எங்க இருந்துச்சு, எதிர் காலத்துல எங்க இருக்கும்ங்கறத துல்லியமா சொல்லிடலாம்’

போன வருடம் விடுமுறையில் நானும் என் குடும்பத்தாரும் சுவாமிமலை சென்றோம். அங்கே என் அம்மா ஒரு நாடி ஜோதிடரைப் பார்க்க சென்ற போது நானும் கூடவே ஒட்டிக் கொண்டேன். ஒரு திண்ணை வீட்டில் உட்கார்ந்திருந்த அவர் என் அம்மாவின் கை விரல்  ரேகைகளை மைத் தடவி வெள்ளைத் தாளில் பதித்து இது போதும் எனக்கு நேற்று, இன்று, நாளை எல்லாத்தையும் புட்டுப் புட்டு வெச்சுருவேன் என்று சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. நியூட்டன் ஒரு பெரிய நாடி ஜோசியன் என்று எழுந்த வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.

சரி, அதெல்லாம் ஏன் சிம்ம ராசியிலிருந்து வருது..ரொம்ப தூரம் இல்ல? என்றேன்

‘ச்ச்..அதெல்லாம் அங்கிருந்து வரலடா. இந்தக் கல்லுங்க எல்லாமே நம்ம சூரிய மண்டலத்துக்குள்ள தான் இருக்கு. பழைய வால் நட்சத்திரத்தோட மிச்சம்’ 

இந்த விளக்கம் வானில் உள்ள சிங்கம் போல ஏதோ தெரியாத பகுதியிற்கு செல்லப் போவதை நான் உணர்ந்தாலும், இந்த எரிகல் மழை தனது மாயையில் என்னை கொஞ்சம் சிக்க வைத்திருந்தது. வெங்கடேஷ் வானத்தைப் பார்த்தபடியே இன்னும் பேசிக் கொண்டிருந்தான். எப்படி பூமியின் சுற்றுப்பாதை, இந்த விண்கற்களின் குவியல்களுக்கு ஊடே பின்னுகிறது, புவியீர்ப்பின் வீச்சு, காற்று மண்டலத்தின் பகுதிகள், உரசல், வெப்பம் என்று நீண்டுகொண்டே இருந்தது விளக்கம்.

நேரம் பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்தது.

‘டைம் ஆச்சு…நான் கிளம்பறேன்’ என்று சொல்லி விட்டு படிகளில் இறங்கினேன்.

‘அடுத்த வாரம் ராக்கெட் லாஞ்ச் ஞாபகம் இருக்குல்ல…ராத்திரி 10.20க்கு’ வெங்கடேஷ் சொன்னான்.

‘தெரியும்…வருவேன்’ என்றேன்.

சில வாரங்களுக்கு முன் வெங்கடேஷ் ஹிந்து நாளிதழின் ஒரு கத்தரிப்பை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னான். கோடுப் போட்டு கத்தரித்தது போல இருந்த அந்தக் காகிதத் துண்டில் ISRO to Launch SLV3 from Sriharikota Range என்ற தலைப்புக்கு அடியில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் பல வரிகள் சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட்டு இருந்தன. நான் படிக்க தொடங்கிய சில வினாடிகளிலேயே

‘எங்க வீட்டு மாடியிலிருந்து லாஞ்ச் தெரியும். வா..சேர்ந்து பாக்கலாம்’ என்று சொல்லி விட்டு என் கையில் இருந்த காகிதத்  துண்டை திரும்ப வாங்கி கவனமாக அதை மடித்து தன் கைப்பையில் வைத்துக் கொண்டு என் பதிலுக்குக்  கூட காத்திருக்காமல் சென்று விட்டான்.

ராக்கெட் லாஞ்ச் தினத்தன்று இரவு பத்து மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி விட்டேன். அரையாண்டு தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். வீட்டில் அவ்வளவாக கண்டுக் கொள்ளவில்லை. என் கால் சட்டைப் பையில் அன்று மாலை வாங்கிய இலந்தைப் பழங்களை ஒரு காகிதத்தில் சுற்றி வைத்திருந்தேன். வெங்கடேஷ் வீட்டை நெருங்கும் போது கயிற்றுக் கட்டிலில் போர்வையை உதறி போட்டுக் கொண்டிருந்த மாணிக்கம்  தாத்தா 

‘படிக்கப் போறியா?’ என்று கேட்டார் 

‘ஆமாம்’ 

‘பொஸ்தகம் ஒண்ணயும் காணோம்?’

‘ஃபிரென்ட் கிட்ட இருக்கு’ என்றேன் 

‘ராத்திரில ரொம்ப நேரம் மொட்ட மாடியில கிடந்து அலையாதிங்க…உடம்புக்கு நல்லதுல்ல’ என்றார் 

அங்கிருந்து சிறிது தூரத்தில் வெங்கடேஷின் மொட்டைமாடி தெரிந்தது. தாத்தாவிற்கு கழுகுப் பார்வை என்று அன்று தான் உணர்ந்தேன்.

‘இல்ல..படிச்சு முடிச்சிட்டு சும்மா வானத்தை பாத்துக்கிட்டு இருப்போம்’ என்று சொல்லி விட்டு கிளம்பினேன்.

‘அவுங்களும் பாத்துகிட்டு தான் இருக்காங்க’ என்று முணுமுணுத்தது போல இருந்ததது. யாரு என்று கேட்கும் முன் தன டிரான்சிஸ்டர் பொட்டியை காதின் அருகில் வைத்து திருகத்  தொடங்கி விட்டார்.

வெங்கடேஷ் மாடியில் தயாராக இருந்தான். முக்காலியில் ஒரு பிஸ்கட் பொட்டலமும், ஒரு சிறு சொம்பில் தண்ணீரும் இருந்தன. இலந்தைப் பழங்களை அவனிடம் நீட்டினேன். இரண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு விரலில் ஒட்டி இருக்கும் உப்பு மிளகாய் துகள்களை தன் கைக்குட்டையின் ஒரு மூலையில் துடைத்துக் கொண்டான்.

‘டைம் என்ன’ என்றேன் 

‘இன்னும் பத்து நிமிஷம் இருக்கு.’

மென்சிவப்பாக பிறை நிலவு. சலிப்பூட்டும் வகுப்பில் நான் வரையும் படகுப் போல எளிமையான ஓரு வளைந்த கோடு.  மாணிக்கம் தாத்தா ட்ரான்சிஸ்டரிலிருந்து இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் அம்மப்பா அம்மம்மா என்று பாடலை விரும்பிக் கேட்பவர்களின் பட்டியலை ஒரு ராகத்துடன் படித்துக் கொண்டிருந்தது  மிக மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.

மொட்டை மாடியிலிருந்து தூரத்தில் தெரியும் ஸ்ரீஹரிகோட்டாவின் வெளிச்சப்  புள்ளிகளின் நடுவே ராக்கெட் நின்று கொண்டிருப்பது தெரியவில்லை என்றாலும் அது கிளம்பும் பொழுது அதன் எரிபொருள் வெளிப்படுத்தும் ஒளியை நன்கு பார்க்கலாம் என்று வெங்கடேஷ் சொன்னான் 

‘கவுன்ட்டௌன் இப்ப ஆரம்பிச்சிருக்கும் ‘ என்றான் வெங்கடேஷ் தன் கடிகாரத்தை பார்த்தபடி 

சில வினாடிகளில் ஒரு ஒளிப் பிழம்பு ஸ்ரீஹரிகோட்டாவின் சிறு விளக்குகளை மறைத்தது. முதலில் மெதுவாக எழுந்து, பின் ஒரு பாய்ச்சலுடன் மேல் நோக்கி நகரத் தொடங்கியது. என்னையும் அறியாமல் நான் கைக் கொட்டினேன். 

‘இன்னும் இருவது வினாடில முதல்  ஸ்டேஜ் கழண்டுக்கும்’  என்று இந்த சாதாரண மனித உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பால் நிற்பது போல தன்  கைக் கடிகாரத்தையும், ராக்கெட்டையும் வெங்கடேஷ் பார்த்துக் கொண்டு சொன்னான்.

‘கழண்டு எங்க விழும்?’

‘கடல்ல’

இருள் சூழ்ந்த ஆழ்க் கடலில் மெதுவாக முழுகும் ராக்கெட்டின் ஒரு உருளைவடிவ பிம்பம் என் மனதில் தோன்றி மறைந்தது. அந்த மனக் காட்சிக்குப் பின்னணி இசைப் போல மாணிக்கம் தாத்தாவின் ட்ரான்சிஸ்டரில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்று வாணி ஜெயராமின் குரல் மெலிதாக கசிந்து கொண்டிருக்க, என்ன என்று சொல்லத் தெரியாத ஒரு சிறு துக்கம் என் நெஞ்சை அடைத்தது. ராக்கெட் வடகிழக்கு வானில் ஒரு சிறு வெளிச்சப் பொட்டாய் சுருங்கிக் கொண்டிருந்தது. என் கழுத்துப் பிடிப்பை சற்று விடுவிக்க தலையை திருப்பிய போது தான் அதை வானில் பார்த்தேன்.

தென் கிழக்கில் உச்சி வானிலிருந்து அதி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தது ஒரு நட்சத்திரம் . முதலில் விண்கல் என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பின்னால் தீப்பின்னல் எதுவும் இல்லை. எந்த பிசிறுமின்றி குவிந்த ஒளி. கரைந்து மறையவுமில்லை, நேர்க் கோட்டில் சீராக இறங்கிக்  கொண்டிருந்தது

‘என்னடா அது’ என்றேன். வெங்கடேஷ் அதை கவனித்ததாக தெரியவில்லை. ராக்கெட் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தான். 

‘டேய்…’ என்று அவன் சட்டைக் கையை பிடித்து இழுத்தேன் 

‘ச்…என்னடா?’ என்று எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தான். 

புள்ளி உரு மாறி ஓர் சிறு ஒளிப் பந்து ஆகி இறங்கி கொண்டிருந்தது.

‘ராக்கெட்டோட ஒரு பகுதியா?’ என்றேன்.

இல்லை என்பது போல மெதுவாக தலை அசைத்தான்  வெங்கடேஷ். இறங்கி கொண்டிருந்த ஒளிப் பந்து சற்றைக்கெல்லாம் ஒரே இடத்தில் நின்றது.    

‘பின்ன…என்னது அது’ 

வெங்கடேஷின் இறுக்கமான தோள்களும் அவன் கண்களும் விடை அவனுக்கே தெரியவில்லை என்று உணர்த்தின. நின்ற இடத்திலிருந்து அது கிடைமட்டமாக நாங்கள் இருக்கும் திசையை நோக்கி நகரத் தொடங்கியது. என்னையும் அறியாமல் நான்  ஓர் அடி  பின் எடுத்து வைத்தேன். முக்காலியில் என் கால் பட்டு தண்ணீர் சொம்பு கீழே விழுந்து மாடித் தரையில் ஒரு நீர்க் கோலம் வரைந்தது. ஒளிப் பந்து எங்கள் வகுப்பறை மேஜையில் இருக்கும் உலக உருண்டை போல சுற்றத் துவங்கியது. மின்சார மின்மாற்றி அருகில் செல்லும்போது வரும் ஒரு மெல்லிரைச்சல் கேட்டது. என் கையில் உள்ள சிறு ரோமங்கள் குத்திட்டு நின்றன. மனதின் ஏதோ ஒரு மூலையில் மாணிக்கம் தாத்தாவின் டிரான்சிஸ்டர் ரேடியோ நின்று விட்டது என்று உணர்ந்தேன். அந்த உருண்டையின் மேல் வண்ணத் திட்டுக்கள் தோன்றத் தொடங்கின; மயில் நீலமும், அதில் பச்சை சிவப்பும் ஒளிர் விட்டன. சட்டென்று அனைத்து வண்ணங்களும் மறைந்து ஒரு மின்னல் வெட்டியது. பட்டாசு சத்தத்திற்கு பயந்து பறந்து ஓடும் பறவைகளைப் போல இரு பச்சை நிற ஒளித் தட்டுகள் அந்தப் பந்திலிருந்து கிளம்பி ஒன்று ராக்கெட் சென்ற திசையிலும் மற்றொன்று ஸ்ரீஹரிகோட்டாவையும் நோக்கிப்  பறந்தன.

சில வினாடிகளில் இரு பச்சைத் தட்டுகளும் திரும்பி வந்து மீண்டும் ஒளிப் பந்தில் மறைந்தன. வண்ணக் கலவைகள் மறைந்து அதன் தோலில் ஒரு மின்னல் வெட்டியது. உள்ளங்கைகளால் என் கண்களை பொத்திக் கொண்டேன். மீண்டும் பார்த்த போது ஒளிப் பந்து மறைந்திருந்தது. 

டேய்…வீட்டுக்கு போய்டலாம் டா ‘ என்றேன் 

வெங்கடேஷ் உறைந்து போயிருந்தான். அவன் கண்கள் பந்து மறைந்த இடத்தில் குத்திட்டு இருந்தது.

‘ஏய்…வாடா போலாம்’ என்றேன் 

மெதுவாக தலை அசைத்து ‘நீ போ’ என்றான் 

அவசரமாகக் கிளம்பினேன். சற்று தூரத்தில் மாணிக்கம் தாத்தா தன்னுடைய ட்ரான்ஸிஸ்டரின் மெல்லிய அலைவாங்கியை இங்கும் அங்குமாக திருப்பி கொண்டிருந்தது தெரிந்தது. பாட்டரியை ட்ரான்ஸிஸ்டரின் பின்னிலிருந்து நகத்தால் நெம்பி அதை துடைத்து மீண்டும் சொருகினார். ட்ரான்ஸிஸ்டர் மௌனமாக இருந்தது. ஒரு கெட்ட வார்த்தை காதில் துல்லியமாக கேட்டது. என்னை பார்த்ததும் 

 ‘ராத்திரில சொம்மா அலையாத நா…கேக்க மாட்ட இல்ல நீயி’ என்றார்.

இல்ல…வீட்டுக்கு தான் போறேன்’ என்றேன்.

அவரை கடந்த போது ‘தாத்தா…நீங்க அந்த லைட்ட பாத்தீங்களா’ என்றேன். ஏன் கேட்டேன் என்று தெரியவில்லை. 

தாத்தா ஒன்றும் சொல்லவில்லை. அவர் மேல் இருந்த தெரு விளக்கின் கண்ணாடி ஓட்டில்  பூச்சிகள் மோதும் சப்தம் மட்டும் கேட்டது. பதில் ஒன்றும் வராது என்று எண்ணி அவரைக்  கடந்து போக யத்தனித்தபோது

‘கெணத்துக்குள்ளாறந்து வெளிய வர விடவே மாட்டானுங்க’ என்றார். நான் நின்று அவரை திரும்பிப் பார்த்தேன். 

‘தோண்டித் தோண்டி உள்ளார தான் போணும். மீறி மேல வந்தா…இதா இப்டி தான்’ என்று தன் தொடையில் உட்கார்ந்த ஒரு ஈசலை விரலால் சுண்டி விட்டார். ‘இல்லனா மன்சுக்குள்ளாற பூந்து கனவையெல்லாம் கலச்சுருவானுக. பயம் தான். நாம அவுங்க எடத்துல போய் உக்காந்துருவம்ன்னு’ என்று சொல்லி மஞ்சள் ஏறிய பற்கள் தெரிய சிரித்தார். அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அந்த இரவில் அவரின் அந்த சத்தமில்லாத சிரிப்பு என்னை மேலும் எந்த கேள்வியும் கேட்க விடாமல் துரத்தியது.

மறு நாள் காலை வாழை மரத்தடியில் நின்று பல் தேய்த்து கொண்டிருக்கும் போது ஆகாச வாணியில் சரோஜ் நாராயண ஸ்வாமி பதட்டம் இல்லாமல் வாசித்துக் கொண்டிருக்கும் செய்தி வீட்டிற்குள் இருக்கும் ரேடியோ பெட்டியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது; சரண் சிங், ஜெயப்ரகாஷ் நாராயண், அன்னை தெரெசா என்று ஏதேதோ காதில் வந்து வீழ்ந்து கொண்டிருந்தது. வாயை கொப்பளித்துத் துப்பும் போது தான் அந்த செய்தி  கேட்டேன். பல் துலக்குவதை நிறுத்தினேன் 

‘நேற்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்ட SLV3 ஏவுகலம் இலக்கை அடைவதற்கு முன்னமே செயலிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள். சுமார் 180 வினாடிகள் வரை தடையின்றி பறந்ததாகவும்  பின்னர் திடீர் என்று  செயலிழந்ததாகவும் அதை உயிர்ப்பிக்கச் செய்த அத்தனை முயற்சிகளும் பயனற்று போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கான காரணங்களை அறிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்… விளையாட்டு செய்திகளில் உலகக் கோப்பை கிரிக்கெட்…’

அன்று மதியம் வெங்கடேஷை பள்ளி நூலகத்தில் கண்டேன்.  அவன் முன்னால்  மேஜையில் அன்றைய தினப் பத்திரிகைகள் முழுவதும் இருந்தன. ராக்கெட்  கடலில் விழுந்த செய்தி அவனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

‘அந்த லைட்ட பத்தி எந்த  நியூஸும் இல்லடா’ என்றான்.

நான் எதுவும் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். முகம் களைப்பாக தெரிந்தது. கண்ணை சுற்றி கரு வளையம்.

‘அந்த லைட் என் வாட்ச வேற கெடுத்திடுச்சு’ என்று பெருமூச்சு விட்டான் 

கடிகாரத்தின் சிறு திரையில் எண்களும், கிழமைகளும் தொடர்பின்றி மாறி மாறி வந்து போய் கொண்டிருந்தன. சில வினாடிகள் அதை பார்த்துக் கொண்டிருந்து விட்டு ‘அந்த…லைட்… என்னான்னு கண்டிப்பா கண்டு பிடிப்பேன்டா’ என்றான், ஜன்னலுக்கு வெளியில் பார்த்த படி. 

அவனுடைய நிலையான நியூடோனியன் உலக கடிகாரத்தின் சீரின்மையை சமன் செய்யாமல் அவனால் இருக்க முடியாது என்றே அன்று எனக்கு தோன்றியது

அந்த ஆண்டின் இறுதியில் வெங்கடேஷின் அப்பாவின் பணி  மாற்றம் காரணமாக அவன் பாட்னாவோ, ராஞ்சியோ சென்று விட்டான். அதற்குப் பிறகு ஓர் இரண்டு முறை கடிதங்கள் எழுதிக் கொண்டோம். பின்பு அதுவும் துண்டித்துப் போய் விட்டது.

பல பத்தாண்டுகளுக்கு பின் முகநூலின் வழியாக வெங்கடேஷை மீட்டெடுத்தேன். நியூ ஜெர்சியில் இருந்தான். 

‘வாயேண்டா வீட்டுக்கு’ என்றான். நியூயார்க் நகரிலிருந்து என் வாகனத்திலேயே கிளம்பி வந்து விட்டேன். சூரியன் மறையும் வேளையில் அவன் வீடு வந்து சேர்ந்தேன். விரிந்து பரந்திருந்த செதுக்கிய புல் வெளியின் நடுவில் அவன் வீடு இருந்தது. தூரத்தில் கெராஜில் நான்கைந்து கார்கள் நிறுத்தி இருந்தது. நில எல்லைகளை ஸ்ப்ரூஸ், ஓக் மரங்கள் ஆக்ரமித்திருந்தன. வெங்கடேஷின் தோற்றம் மாறி இருந்தாலும் இன்றும் நேர்த்தியாகவே தெரிந்தான். கரு நீல சட்டையும், ஜீன்ஸ் பேண்டும் அப்பழுக்கு இல்லாமல் அவன் மேல் அமர்ந்திருந்தது.

‘வா…வெதர் நல்லா இருக்கு. வெளில உக்காரலாம்’ என்றான். 

‘பியர்?’ என்று கேட்டு விட்டு பாட்டிலை திறந்து தகர மூடியை ஒரு சிறு பிளாஸ்டிக் கலத்தில் வைத்தான். பாட்டிலை சாய்த்து ஒரு மடக்கு விழுங்கி விட்டு, காகிதத் தாளால் உதட்டை தொட்டெடுத்தான். மடிக்கப்பட்ட காகிதம் மீண்டும் அவன் சட்டைப் பையில்  மறைந்தது.

‘அமெரிக்கன் கனவை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்றான் வீட்டையும், விஸ்தாரமான நிலத்தையும் தன கைகளால் அளந்த படியே. இருள் கவியத் தொடங்கி இருந்தது. தூரத்து மரங்களை  மின் மினி பூச்சிகள் அலங்கரித்திருந்தன. உலகின் ஒரு மிகப் பெரிய முதலீட்டு வங்கியின் இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையும், தாமிரமும், தங்கமும் வாங்கி, விற்கும்  வழி முறைகளையும் வங்கிக்காகவும், அவனுக்காகவும் செல்வம் ஈட்டும் சூட்சமங்களையும் விளக்கினான். அவனுடைய கை  அசைவுகளும், மொழியின் தெளிவும் அந்த பழைய வெங்கடேஷை நினைவு படுத்தியது. ஆனாலும் ஏதோ ஒன்று அவனிடத்தில் இருந்து விலகிச் சென்றது போலவே எண்ணினேன்.  

பள்ளியையும், நூலகத்தைப் பற்றியும் பழங் கதைகள் பேசினோம்.

‘ராக்கெட் லாஞ்ச் பார்த்தோமே…ஞாபகம் இருக்கா’ என்று கேட்டேன்.  

‘அஃப் கோர்ஸ்…எப்படி மறக்க முடியும்’

‘அந்த லைட்டு?’ என்று இழுத்தேன்.

அவன் கண்கள் அவனுள்ளே ஏதோ தேடுவது போல நிலைத்தது.

‘என்ன லைட்டு?’ என்றான். அவன் கேள்வியின் தொனி அந்த நிகழ்வை முற்றிலுமாக மறந்து விட்டான் என்றே உணர்த்தியது. நேரம் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது.

‘சரி..நான் கிளம்பணும்’ என்றேன் 

‘தங்கிட்டு…நாளைக்குப் போயேன்’

‘இல்ல வெங்கடேஷ்…நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்’

‘ஓகே’ என்றான் தோள்களை தூக்கி.

என் கார் வரை நடந்து வந்து என்னை அணைத்து வழி அனுப்பினான். அவன் வீட்டிலிருந்து புறப்பட்டேன். வானம் துடைத்து விட்டது போல காட்சி  அளித்தது. சற்றென்று அந்த இருட்டை கிழித்துக் கொண்டு ஒரு விண்கல்லின் நெருப்பு கீற்று தோன்றி மறைந்தது. அப்பொழுது தான் எனக்குள் ஏதோ மின்னலிட்டது. இந்த இரவில் பல மணி நேரம் வெளியில் உடகார்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த போதும்  வெங்கடேஷ் ஒரு முறை கூட வானத்தை அண்ணாந்து பார்க்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.