பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2

தமிழாக்கம்: மைத்ரேயன்

சனிக்கிழமை காலையில், தன் ஸ்டைன்வே பியானோவின் முன் வழக்கம்போல் அவர் அமர்ந்திருந்தார்.  உடனடியாக மேஜர் மற்றும் மைனர் இசை வரிசைகளை வேகமாக வாசிக்கவில்லை. மாறாக, ரஹ்மானினாஃபின் பியானோ கான்செர்டோவில் இரண்டாவது சாஹித்தியத்தின் இசைக் குறிப்புகளை எடுத்து, அதன் இரண்டாம் இயக்கம் இருந்த பக்கத்தைத் திறந்தார். அடாஜோ ஸாஸ்டினுடோ. கூட்டிசையின் அறிமுகம், கமகங்களைக் கொணரும் சுரங்கள். பிறகு சுரங்களில் ஈ மேஜர். பியானோவின் நுழைவு. அவர் பியானோ நுழைவுப் பகுதியை வாசித்தார்: ஆஸ்டினாட்டோ ஆர்பீஜோ. குழலிசை நுழைவு. அவர் குழலிசையின் பங்கை குரலால் இமிழ்த்தபடி பியானோவை வாசித்தார். க்ளாரினெட் நுழைவு. க்ளாரினெட்டின் பங்கை இப்போது இமிழ்ந்தார். பிறகு ஏதும் செய்யாமல் வாசிப்பதை நிறுத்தி விட்டு, மெள்ள முன்னே சரிந்தார். பியானோவின் மேல் மூடியின் மீது நெற்றி படும்படி சாய்ந்திருந்தார். 

ஆனால், ரஹ்மானினாஃபின் இசையை வாசிக்கையில், அவர் நினைத்தது என்னவோ ‘மூன்லைட்’ ஸொனாட்டாவைத்தான். ஸாஷாவின் ஸொனாட்டா அது. 

அவருடைய பயிற்சிக் கூடத்தில் லியான் லியாங் அந்த சாஹித்தியத்தை வாசிக்கும்போது ஸாஷா அவரைத் தொலைபேசியில் அழைத்தது தற்செயலாக நடந்த நிகழ்வா என்ன? அந்த நேரத்தில் அதற்கு ஏதோ பொருள் இருந்ததைப் போலத் தெரிந்தது. ஆனால் இப்போது, அது அத்தனை முக்கியமான உடன்நிகழ்வில்லை என்று அவர் அலசிப் பார்க்க ஆரம்பித்தார். நிறையப் பேர்கள் ஸி-ஷார்ப் மைனர் ஸொனாட்டாவை வாசிக்கிறார்கள். இந்த சாஹித்தியத்துடைய ஒலிப்பதிவுகளில் 19,666 வாசிப்புகள்,  யூட்யூபில் மட்டுமே இருந்தன. “மூன்லைட்” வால்ட்ஸ் – அல்லது “டர்கிஷ் மார்ச்” அல்லது “மினிட்” வால்ட்ஸ்- இவற்றை நாம் எதிர் கொள்ள நேராத இடங்கள் ஏதாவது இருக்கும் என்றால் அவை இசைப் பல்கலைகள் மட்டும்தான், அங்கு இவை மிகவும் பரவலாகி விட்ட சாஹித்தியங்கள், தவிர வியப்புணர்வை எழுப்பாதவை என்று கருதப்படுகின்றன. அதனால்தான் அந்தப் பண்டிதர் வகுப்பில் – ஸோர்கினிடம் அவர்களுக்குக் கிட்டிய கடைசி வகுப்பு அது – பியானோவிடம் செல்லும் முறை ஸாஷாவுக்கு வந்தபோது, அவள் தன் கைகளில் இருந்த எல்லா வளையல்களையும் அவளருகே இருந்த பெஞ்சில் கழற்றிப் போட்டு விட்டு, புகழ் பெற்ற அந்த இரண்டாம் இன்வர்ஷன்களை துரித கதியில் மேல் நோக்கி வாசிக்கத் தொடங்கியபோது, அங்கு எல்லார் நடுவேயும் அப்படி ஒரு ஆச்சரியம் அங்கு எழுந்தது.[1] 

ஜி#, சி#, ஈ?

ஜி#, சி#, ஈ?

ஜி#, சி#, ஈ?

ஜி#, சி#, ஈ?

[என்று அவள் விசைகளைத் தட்டியபோது] 

‘த மூன்லைட்” டா? நிஜமாகவா? அவளைக் கேட்க அமர்ந்திருந்தவர்களிடையே இதை ஏற்க மறுக்கும் மனநிலை எழுந்தது. அவர்களில் அனேகர் இந்த சாஹித்தியத்தைத் தாமே வாசித்திருப்பார்கள். அவர்களுக்குப் பத்து அல்லது பதினோரு வயதிருக்கையிலேயே, அதன் கடினமான மூன்றாம் இயக்கத்தையும் வாசித்திருப்பார்கள். அவள் வாசித்துக் கொண்டிருக்கையிலேயே, அவர்கள் ஒவ்வொருவரும் தாம் இதையோ அல்லது மற்றதையோ வேறு விதமாக வாசித்திருப்போம் என்று யோசித்திருப்பார்கள். இன்னும் செவ்வையாகவும்தான். ஒருகால் அவர்கள் எல்லாரும் பட்டப்படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்ததால், வழக்கத்தை விட கடுமையான விமர்சனத்தை பரஸ்பரம் மேற்கொண்டார்களோ என்னவோ. விருந்துகளும், நிகழ்ச்சிகளில் வாசிப்பதும் ஒரு புறம் நடக்கையில், படிப்பில் கட்டாயமாக வைக்கப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கிலும் பங்கெடுக்க வேண்டி இருந்தது- அது வேலை வாய்ப்புகளில் அவர்கள் முன் இருந்த பல தேர்வுகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு: ஆசிரியர், பக்க வாத்திய இசைஞர், நிறுவனங்களில் சேராது, தனி வாய்ப்புகளைத் தேடும் கலைஞர், பிற கலைஞர்களின் தொழில் வாய்ப்புகளை நிர்வகிக்கும் வியாபார மேலாளர். தவிர, சர்ச்களில் ஆர்கன் எனும் கருவியை வாசிப்பவர் என்ற வேலையைக் கூட அங்கு முன்வைத்தார்கள்.  உங்களுடைய கல்விக் கடன்களை எப்படி அடைப்பது என்பது பற்றியும் ஒரு தகவல் பிரசுரக் கட்டு வழங்கப்பட்டது. இந்த பண்டிதர் வகுப்புக்குப் பிறகு அவர்களுக்கு வேறு பண்டிதர் வகுப்புகள் அளிக்கப்படாது என்று சொல்லப்பட்டது. எனவே இந்த இறுதி வகுப்பில் நிகழ்த்திக் காட்டவென்று அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை ஆழமாக வெளிக்காட்டும் ஒரு சாஹித்தியத்தைத் தேர்ந்தெடுத்திருந்தனர். ஜோ வாசித்தது கெர்ஷ்வினின் ஒரு அமைப்பு. பென் தேர்ந்தெடுத்தது அவ்வளவாக வெளியே தெரியவராத ஒரு உருப்படி, ஐவ்ஸ் அமைத்தது. தொழில் முறைக் கலைஞனாக வரப் போகிறவன் என்று கருதப்பட்ட ஆல்பெர்ட், மறுபேச்சுக்கே இடம் கொடுக்காத ஒரு சாஹித்தியத்தை வாசித்தான்: லிஸ்ட்டின் பி மைனர்.  

ஆல்பெர்ட்டுக்கு இருந்த நினைவுப்படி, ஸாஷா வாசித்த “மூன்லைட்” மோசமாக இல்லை. ஸோர்கினின் எந்த மாணவரும் ஒருபோதும் மோசமாக வாசித்ததில்லை. அவள் எப்படி பியானோவின் விசைப்பலகையை தன் தலையைக் குனிந்து கொண்டு பார்த்தபடி அந்த சாஹித்தியத்தை வாசித்தாள் என்பது அவருக்கு நினைவிருந்தது- அது அவளுடைய முத்திரை உடல் பாவனை. வேறு இடங்களில், அவள் எப்போதும் சிரிப்புடன் இருப்பவள், சில நேரம் நிறுத்தக் கூட இயலாமல் சிரிப்பவள், ஆனால் பியானோ முன் எப்போதுமே சோகமாகக் காட்சி தருகிறாள். ஓர் ஆக்டேவ் விசையைத் தொட அவளுடைய இடது கை எப்படி நீளும், தேவையில்லாத ஆனால் அழகானதோர் வட்டத்தில், அவளுடைய வலது கரம் உள்ளே நுழைந்து வெளியேறும், அப்போது முழங்கையும், மணிக்கட்டும் எப்படிப் பளிச்சிட்டு மறையும்.  அந்தக் காட்சியை அவர் மீண்டும் நினைவு கொண்டார். அதைத் தாண்டி, அவரால் மற்ற மாணவர்கள் அவளுடைய வாசிப்பை– அதன் சாதாரணத் தன்மையை, பிழையேதும் இல்லாத தன்மையை- எப்படிக் கேட்டார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது- அவரும்தான் கேட்டுக் கொண்டிருந்தார். 

“ஜா-ஷா,” ஸோரொகின் கூப்பிட்டு இடை மறித்தார். எல்லா மாணவர்களும் அதைக் கவனித்தார்கள். அவளுடைய சொந்தப் பெயரைச் சொல்லி அவர் அழைத்தார். “அந்த முகவாய்- நீங்கள்லாம் அதை எப்படிச் சொல்றீங்க. முகவாயை உயர்த்து, உற்சாகமாக இரு.” 

அவர்களுடைய இசைக்குறிப்புப் புத்தகங்களில் எழுதுவதற்கு அவர் பயன்படுத்துகிற தங்கப் பேனாவால் அவளுடைய முகவாயை அவர் தொட்டார். ஏனோ கையால் அவர் தொட்டிருந்தால் எப்படி இருக்குமோ அதை விட இந்தச் செய்கை கூடுதலான நெருக்கமான உணர்வைக் காட்டியது. 

“ஆமாம், அதோடு இங்கே,” மென்மையாக, ஆனால் சற்றுச் சீண்டுவது போலச் சொன்னார், “நமக்கு இந்த இடத்தில் என்ன இருக்கிறது? ஒரு கால அளவைக்கான முத்திரை. அது என்ன சொல்கிறது? நேரத்தைக் குறை.”

பேனாவால் அவர் துரித கதியைத் தட்டிக்காட்டினார். 

ஸாஷா துவக்கப் பகுதியை மறுபடி வாசித்தாள், இப்போது கொஞ்சம் வேகமாக வாசித்தாள். 

“இது பந்தயம் இல்லை ஸாஷா. இப்போது காலகதியைப் பார். காலகதி இங்கே அடாஜியோ.”[2]

சற்று மெதுவாக வாசித்தாள். 

“சரி, ஆனால் இசைக்கு நாடித்துடிப்பு வேண்டும். அதில் நாடித்துடிப்பு இல்லாவிட்டால், அது இறந்து விட்டிருக்கும்.”

அவள் மறுபடி முயன்றாள். இன்னும் சில சிறு பகுதிகளை வாசித்தாள். துரிதமாக வாசித்தாள், பிறகு மெதுவாக, இன்னுமே மெதுவாகவும் வாசித்தவள், ஓரிடத்தில் முழுதுமாக நிறுத்தி விட்டு, அடக்கமாகத் தன் கைகளைத் தன் மடியில் வைத்துக் கொண்டு இருந்தாள். அவள் அசைவின்றி அமர்ந்திருந்தாள். அவள் அழப்போகிறாள் என்று ஆல்பெர்ட்டுக்குத் தோன்றியது. அவளை எச்சரிக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். அழுகிற மாணவர்களை ஸோரொகின் பொறுத்துக் கொள்ளாதவர். 

ஆனால் விசித்திரமான இந்த மாலைப் பொழுதில், அவர்களுடைய ஆசிரியர் கோபப்படவில்லை என்பதுதான் நடந்தது. மாறாக, அவர் சபை நாகரிகம் உள்ள ஒரு சைகையைச் செய்தார். ஸாஷா பியானோ பெஞ்சிலிருந்து எழுந்திருந்து தன் இடத்தை அவருக்கு விட்டுக் கொடுத்தாள். தன் இருக்கைக்கு அவள் திரும்பியபோது அவளுடைய உயர்த்திய குதிகால் கொண்ட பாதணிகள் எழுப்பிய ஒலியைத் தவிர வேறெந்த ஒலியும் அங்கிருக்கவில்லை. அவர்கள் எல்லாருமே ஓர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கென்பது போல முறையான உடுப்புகள் அணிந்திருந்தனர். அவளுடைய வழக்கமான பூட்ஸ் இல்லாததோடு, வழக்கமாக அவள் அணியும், அவளை நடுவயதினள் போலக் காட்டும், பித்தான்கள் கொண்ட கருப்பு ஸ்வெட்டரையும் அவள் அன்று அணிந்திருக்கவில்லை. ஸாஷா அமர்ந்த போது, ஜோ தன் கையை அவளுடைய முழங்காலில் வைத்து, அவளுடைய கால் முட்டியைத் தடவிக் கொடுத்தான். 

பெஞ்சில் அமர்ந்த ஸோரோகின், தன் தலையைச் சற்றுக் குனிந்து அவர்கள் எல்லார் புறமும் கடுமையான ஒரு பார்வையைச் செலுத்தினார். “நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒவ்வொருவரும் இது மிக எளிமையானது என்று நினைக்கிறீர்கள். ஆனால் நான் ஒண்ணைச் சொல்வேன். குறைஞ்சது அவள் வாசிக்கும்போது-” அவர் சரியான வார்த்தைக்காகத் துழாவினார் – “மேற்கோள் குறிகள் இல்லாமல் வாசித்தாள்.” தன் மேலங்கியைச் சரியாக்கிக் கொள்ளத் தன் தோள்களை உலுக்கிக் கொண்டார், தன்னுடைய பிரும்மாண்டமான கைகளை நீட்டிக் கொண்டார். “நான் இப்ப ஒண்ணை உங்களுக்குக் காட்டப் போகிறேன்.”

அவர் வாசிக்கத் தொடங்கினார். 

பிற்பாடு, நால்வரான அவர்களின் குழுவினர் இசைக்கல்லூரிக் கட்டடத்தின் கூரையில், சரளைக்கல் பரப்பப்பட்டிருந்த சம தளத்தில் சந்தித்தனர். காற்றுப் போக்கிகளின் மீது சாய்ந்தபடி, பென் உடைய முதுகுப் பையிலிருந்து எடுக்கப்பட்ட பாப்ஸ்ட் நீல ரிப்பன் பியர் பானக் குவளைகளைத் திறந்து கையில் பிடித்தபடி நின்றார்கள். ஆல்பெர்ட் மட்டும் தன் குவளையைத் திறக்காமல் பிடித்திருந்தான். ஒவ்வொரு குவளையின் அடைப்பும் அதன் பிடியால் திறக்கப்பட்டபோது எழும் ஒலியைக் கேட்கச் சகிக்காமல் தன் காதுகளைப் பொத்திக் கொள்ள வேண்டுமென்றும், உடனே அகன்று போய்விட வேண்டுமென்றும் அவனுக்கு எழுந்த உந்துதலைச் சகித்துக் கொண்டிருந்தான். தான் மட்டும் தனியாக இருக்க வேண்டுமென்றும், ஒலி புகாமல் தடுக்கப்பட்ட ஏதோ ஒரு இருண்ட இடத்தில் போய் அமர்ந்து கொண்டு அவன் என்ன கேட்டிருந்தானோ அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அவனுக்கு அவசரமான தேவை இருந்தது. மற்ற மாணவர்களில் வேறு யாராவது கவனித்தார்களா என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் அவனுடைய ஆசிரியரின் வாசிப்பில் ஒரு தெளிவான செய்தி இருந்ததாக அவனுக்குப் பட்டது, அது என்ன என்று முடிச்சவிழ்த்துப் பார்க்க வேண்டுமென்று அவன் விரும்பினான். 

ஆனால் அங்கே ஸாஷா இருந்தாள், அவனுக்கும் பென்னுக்கும் இடையே இருந்தாள். தன் கால்களை ஆடை விளிம்புக்குக் கீழே இழுத்து மடித்து வைத்திருந்தாள், அவளுக்குக் குளிராக இருந்தது என்பது போலத் தெரிந்தது. அப்போது குளிராக இருந்ததா? அவனுடைய புலனுணர்வுகள் எல்லாம் கூர் தீட்டப்பட்ட நிலையில் இருந்ததாக அவன் உணர்ந்தான். மேற்குத் திசையில் ஹட்ஸன் ஆற்றின் மேலாக மென் காற்று வீசிக் கொண்டிருந்தது. அதைத் தன்னால் சுவைக்க முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. தார், தண்ணீர் மற்றும் அழுக்கான லிண்டன் மரங்களின் சுவடுகளடங்கிய காற்று. 1/9 தடத்தில் செல்லும் சுரங்க ரயில் தரையடியிலிருந்து மேலேறி வெளியே வந்து, மார்னிங்சைட் ஹைட்ஸும் ஹார்லெமும் சந்திக்கும் இடத்தில் உள்ள 125 ஆம் தெரு நிறுத்தத்தின் உயர்த்தப்பட்ட நடைமேடைகளை அடைந்த போது எழுப்பிய அதிர்வுகள் கொண்ட பேரொலி. பளீரென்ற இளஞ்சிவப்பு நிறக்கால்களும், கழுத்து இறகுகளில் எண்ணெய்ப் பூச்சின் பல வண்ண ஒளிர்வும் கொண்ட மாடப்புறாக்கள். தம் தொண்டைகளுக்குள் அவை விடாது தொடர்ந்து எழுப்பிய மெல்லிய ஒலிகள். உருத் தெளிவற்றுத் தெரிந்த ஆற்றோரத்து மாதாகோவிலின் கூம்பு. அதில் எழுபத்தி நான்கு காரிலான் மணிகள் பொருத்தப்பட்டிருந்தன.  காரிலான் மணிகளை வாசிக்கத் தெரிந்த ஒருவர், அங்கு வரிசையாகப் பொருத்தப்பட்ட மரத் தண்டுகளைத் தம் முஷ்டிகளால் அடித்து நான்கு அங்க ஒத்திசைவுகளாலான இசையொலியை எழுப்ப முடியும். 

“மழை வர்றாப்லத் தெரியறது,” என்றான் பென். அது ஆல்பெர்ட்டின் கூர்மைப்பட்டிருந்த உணர்வுகளில் தட்டுப்பட்ட ஏதோ சாத்தியப்பாட்டோடு இசைந்த முன் ஊகமாகத் தெரிந்தது. 

ஸாஷா அவனருகில் நெருங்கி அமர்ந்திருந்தாள், அவள் அந்தக் குவளையிலிருந்து பியரை அருந்தக் கையை உயர்த்திய ஒவ்வொரு தடவையும் அவளுடைய கை அவனை உரசியது. அந்த மாலையில் அவள் வாசித்த நிகழ்ச்சியைப் பற்றி ஏதோ சொல்ல அவன் விரும்பியிருந்தான். அது பழுதற்றதாகத்தான் இருந்தது என்று சொல்ல நினைத்தான். ஆனால் அதை என்ன சொற்களால் சரியாகச் சொல்வது என்று அவனுக்கு இன்னும் புலப்பட்டிருக்கவில்லை. 

ஜோ திடீரென்று குதித்து எழுந்தான், பளபளக்கும் சிறகுகளை அடித்துப் புறாக்கள் எழுந்து பறந்து போயின. கைப்பிடிச் சுவரின் மீதேறித் தன் கைகளை விரித்து நின்றான். வழக்கமான ஜோக். அடுத்து அவன் கீழே தலை குப்புற விழப் போவது போல பாவலா செய்வான். அவர்கள் யாரும் அதைப் பார்க்கவில்லை. அவன் திரும்ப வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டபோது, அவன் ஸாஷாவிடம் ஒரு பெட்டியிலிருந்த சிகரெட்டுகளை நீட்டினான். அதன் மூடி திறந்திருந்தது, ஒரு சிகரெட் சிறிது உருவப்பட்டுத் துருத்தி நின்றது. 

“ஸோர்கின் ஒழிஞ்சு போகட்டும்,” அவளிடம் சொன்னான். 

ஸாஷாவின் விரல்கள் அந்த சிகரெட்டை உருவுவதற்கு முயல்வதை ஆல்பெர்ட் பார்த்துக் கொண்டிருந்தான். மூட்டுகளின் அசைவுகள் வினோதமாகக் கொண்ட மெல்லிய நீண்ட விரல்கள். அடுத்து, ஜோ ஒரு லைட்டரை நீட்டினான், அது சிறு கொழுந்து நெருப்பை உயர்த்தியது. “ஹைடிங்க்குடன் சேர்ந்து அவர் வாசித்த ப்ராம்ஸ் இரண்டு இருக்கே,” அவன் ஸாஷாவிடம் சொன்னான், “அதை எனக்குப் பிடிக்கல்லை.”

அவள் புகையை வெளியே ஊதினாள், ஏதும் பேசவில்லை. 

“எனக்கு ரிக்டரைத்தான் முழுக்கப் பிடிக்கும்,” ஜோ சொன்னான். 

“ரிக்டரையா? நிஜமாவா?” ஆர்வம் தூண்டப்பட்டு, ஆல்பெர்ட் கேட்டான். “கர்ஸானைப் பிடிக்கல்லியா?”

பென்னுக்கு அருகில் தரையில் விழுந்து அமர்ந்த ஜோ, ஆல்பெர்ட்டின் பக்கம் பார்க்கவே இல்லை. “க்ளிஃபோர்ட் கர்ஸான் ஒரு பேடி.”

 “என்னது?” ஆல்பெர்ட் கத்தினான். “இதை நான் கண்டிக்கிறேன்! நீ எதை இப்படித் தாழ்த்தறே? சீர்மையையா? அடக்கத்தையா? கருக்கையா?” 

“என்ன உளறல் இது ஆல்பெர்ட்!” என்றான் ஜோ. “இங்க நாம என்ன அதையா செய்யப் பார்க்கறோம்? சீராவும் அடக்கமாகவும் வாசிக்கிறத்தையா?”

 “என்னோட வாக்கு செர்கினுக்குத்தான்,” மூலையிலிருந்த பென் சொன்னான். “அந்த 1968 ஒலிப்பதிவு.”

“தப்பு!” ஆல்பெர்ட் கத்தினான். “அது 1966!”

“ஏசுவே,” என்றான் ஜோ. “பொத்திக்கிட்டுக் கிட. அது 1968. எங்கிட்ட அந்த ரெகார்ட் இருக்கு.”

ஆனால் ஆல்பெர்ட் இதற்கும் சர்வநிச்சயத்திற்குப் போய் விட்டிருந்தான். “1968 இல் செர்கின் ஒலிப்பதிவு செய்தது ப்ராம்ஸ் ஒண்ணு. 1966 இல் ப்ராம்ஸ் இரண்டை அவர் ஒலிப்பதிவு செய்தார்.  இதில் சுவாரசியமா ஒண்ணு இருக்கு, ரெண்டையும் விட முன்னால ஒரு ஒலிப்பதிவு உண்டு. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தி எட்டில அது. அது வந்து….. ஆ…ஆ…ஆ,” அவன் தன் கை விரல்களை விட்டு விட்டுத் தொடர்ந்து சொடுக்கினான். “ரெய்னர் இசையைத் தொகுத்தார். அது சரிதான். ரெய்னர்.”

“ஆ..ஆ… ஆ.. ரெய்னரா?” என்று நக்கலாகக் கேட்டான் ஜோ. 

அவனுக்குக் கோபமா இல்லை கிண்டல் செய்கிறானா? ஆல்பெர்ட் வியந்தான். அதை இனம் காண்பது கடினமாக இருந்தது. சில சமயம் இதற்கு எளிய விடை, ஜோவுக்குத் தன்னைப் பிடிக்காதது என்பது என்று அவனுக்குத் தோன்றும். அது அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. பல ஜனங்களுக்கு அவனை அனேக நேரம் பிடிப்பதில்லை. 

இந்த மாதிரிக் கட்டங்களில் வழக்கமாக ஸாஷா இடைமறிப்பாள், வேறெதையாவது சொல்லி உரையாடல் அடுத்த கட்டத்துக்கு நகர-அவர்களின் நட்பு தொடர்ந்து இருக்க- வழி செய்வாள். ஆனால் அந்த மாலையில், அவள் சும்மா புகை பிடித்த வண்ணமிருந்தாள். சாம்பல் சரளைக் கற்களில் விழுந்ததைப் பார்த்திருந்தாள். ஆல்பெர்ட் அவளிடம் சொல்ல நினைத்தான், செர்கினைப் பற்றிப் பேசுவதானால், அவர் 1965 இல் “மூன்லைட்” ஸொனாட்டாவையும் பதிவு செய்திருந்தார். அந்தத் தகவல்கள் அவனுடைய வாயில் தயாராக இருந்தன. 

ஆனால் ஸாஷா திடீரென்று பேசினாள். “அவர் செய்தாரே, அது,” சன்னமாக, சோகமாக, நிறைந்த வியப்போடு அவள் சொன்னாள். 

அவர்கள் எல்லாரும் திரும்பி அவளைப் பார்த்தார்கள். அவள் எதைப் பற்றிச் சொன்னாள் என்று அவர்கள் எல்லாருக்கும் துல்லியமாகத் தெரிந்தது.  ஸோர்கினின் வாசிப்பைத்தான். 

“மோட்ஸார்ட்டையும், பீத்தோவனையும், ஷோபானையும், ரஹ்மானினாஃபையும், பீட்டில்ஸையும் வச்சுகிட்டு அவர் செய்து காட்டினாரே அது.”

“செமையா இருந்ததில்லே,” யாரோ சொன்னான். 

பிறகு அவர்கள் இருவரும் மட்டும் அந்த மேல்தளத்தில் தனியாக இருக்கும்படி எப்படி ஆயிற்று? ஜோவும் பென்னும் எங்கே போனார்கள்? அவருக்கு நினைவிருந்ததெல்லாம் அன்று மாலை அவனும் ஸாஷாவும் அருகருகே அமர்ந்திருக்கையில்,  காற்று அடித்து வீசத் தொடங்கியதும், சூழலில் அழுத்தம் திடீரென்று குறைந்தபோது, அவளுடைய தலைமுடி பிரமிப்பூட்டும் உருமாற்றத்தை அடைந்தது, அதன் உரு பெரியதாகி, மேலும் அடர்த்தியாகி – இன்னும் ஏதோவாகி இருந்தது. அதை விவரிக்க ஏதோ ஒரு வார்த்தை உண்டு. அது அவனுக்கு வசப்படும். இப்போதைக்கு அவன் இரு விரல்களை நீட்டி அதைத் தொட்டுப் பார்க்கத் துணிந்தான், தொடும்போது அது அவன் கற்பனை செய்தபடி இருந்ததா என்று பார்ப்பது அவன் உத்தேசம். மென்மை. உலர்ந்த- இலேசுத்தன்மை. 

“சகிக்க முடியாததாக இருக்கா?” அவள் தீர்மானமாகக் கேட்டாள். 

“இல்லை. அது….” ஒரு சுருளைத் தன் கட்டைவிரலில் உரசினான், அந்த வார்த்தை தெளிவாயிற்று. “சுருட்டையாயிருக்கு.” அதை அவன் திருப்தியோடு சொன்னான். அவள் ஏன் தன் கைகளைத் தலைமேல் அழுத்திப் பிடித்துக் கொண்டு, அவனைப் பார்க்க ஒரு தீவிரமான, நெருக்கத்தை உணர்த்தும் பார்வையை வீசினாள், அது ஏன் அத்தனை மனக்கசப்பைக் காட்டியது என்று அவனுக்குப் புரியவில்லை. 

“கடவுளே! நான் இதை வெறுக்கிறேன்! வெறுக்கிறேன்! எப்பவுமே இதை வெறுத்துகிட்டுத்தான் இருந்திருக்கேன்!” என்று குமுறினாள். 

“வெறுத்தியா, எதை?” என்று நிதானத்தோடு கேட்டான். 

“என் முடியை, என் வாழ்க்கையை.”

“ஏன் ஸாஷா?” என்றான், புரிந்து கொள்வதை நோக்கி ஒரு சிறு எட்டு எடுத்து வைத்தான். 

“நீயும் அங்கேதானே இருந்தே! நீ கேட்டே இல்லை! நான் வெத்தாயிருந்தேன்!” 

“நீ வாசிச்சது நறுவிசாத்தான் இருந்தது.”

“அது சரி. நறுவிசாமே. நறுவிசுன்னு எதுவும் கிடையாது.

“அப்றம் இது,” என்று தொடர்ந்தாள், தன் தலைமுடியில் ஒரு பிடியைக் கையில் பிடித்தபடி. “என் அம்மா இதுக்கு ஏதாவது செய்யின்னு எப்பப் பார்த்தாலும் என்னைப் பிடுங்கறா. ஆனா நான் என்ன செய்ய முடியும்? என் தலையில இருக்கற முடி இது. என்னவோ , எப்படியோ போகட்டும். ஒண்ணும் செய்யறத்துக்கில்லை. எதுவுமே பொருட்டே இல்லை. நேரம் ஆயிடுத்து. என்னோட சொப்பனத்துக்கு ஒரு முடிவு கட்டணும். சான் ஃப்ரான்சிஸ்கோவுக்குத் திரும்பிப் போகணும்!”

“சான் ஃப்ரான்சிஸ்கோவுல என்ன இருக்கு?”

”அவள் இருக்கா. என் அம்மா என்னோட மாற்று அப்பாவோடவும், மாற்றுச் சகோதரியோடவும் இருக்கா. ஒலிவியா. அவ என்னோட மாற்று சகோதரி. நாட்டியமாடற ஒலிவியா. ஏன்னா நாட்டியமாடறது அத்தனை சத்தமில்லாத வேலை.”அவள் அவனை ஒரு தடவை பார்த்தாள். “நான் என்ன சொல்லிக்கிட்டிருக்கேன். உனக்கு இது புரியாது. ஆல்பெர்ட் ஒம்முக்கு இதெல்லாம் எப்படிப் புரியும். நீ ஒரு நட்சத்திரம்.”

தன்னைப் பற்றி அவள் சொன்னதை அவன் ஏற்றுக் கொண்டான். அது வியப்பு கொடுக்கவில்லை. ஆனால் அது அவனிடம் தற்பெருமை உணர்வை எழுப்பவில்லை, மாறாக அந்தக் காற்றிலும், பம்மென்று விரிந்த முடியிலும் ஒருவாறாகத் தன் இயல்பை இழந்து சிறிதாகி, இருண்டு போயிருந்த அவள் முகத்தை நாடுபவனாக்கியது. அவளுடைய கண்கள் சாம்பல் நிறம் கொண்டிருக்கவில்லை, பச்சையாக இருந்தன என்று கவனித்தான். அவள் உதடுகள் வெடித்திருந்தன. அவளுடைய முடியைப் பற்றி, ஜாக்கிரதையாகச் சொன்னான், “இது ரொம்ப அழகாயிருக்கிறதாகத்தான் நான் எப்பவுமே நினைச்சு வந்திருக்கேன்.”

இதற்கு ஒரு தாக்கம் இருந்தது. “யாரு நானா, அழகாயிருக்கேனா?” திடீரென்று உஷாராகியவள், கேட்டாள்.  “நான் அழகாயிருக்கேனா?” அவள் இரண்டாவது தடவை ‘அழகு’ என்ற சொல்லைச் சொன்னபோது அவள் முகம் மாறியது, திறந்து விரிந்தது, ஆனால் கொஞ்சம் நம்பிக்கையின்மையைக் காட்டும் கோணலும் அதில் தெரிந்தது. 

சரியாகச் சொன்னால், நான் சொன்னது அதில்லை என்று ஆல்பெர்ட் நினைத்தான். சரியாகப் பொருந்தாத முடிவு அவளுடையது. அவன் சொன்னது, அது அழகாயிருக்கிறது என்று, அதற்கு வேறு பொருள். உண்மையாகச் சொல்வதானால், அவள் அப்படியா இல்லையா என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. அதாவது அழகா என்பதைப் பற்றி. இந்த விஷயங்களில் தன்னுடைய தீர்மானங்களில் அவனுக்கு அதிக நம்பிக்கை இருக்கவில்லை: தன் செவித் திறனைத்தான் அவன் நம்பினான். 

“இதைச் செய்,” தன் கைவிரல்களை அவன் முன் விரித்தபடி, அவள் திடீரென்று கட்டளை பிறப்பித்தாள். அவன் செய்தான். “உனக்கு நல்ல கைகள்” என்றாள். 

“உனக்கும் நல்ல கைகள்தான்,” அவளை நகலெடுத்துச் சொன்னான். 

“பொய்யன்,” அவள் புன்னகைத்தாள்.

அவள் தன்னுடைய விரல்களை அவனுடைய விரல்களிடையே நுழைத்துப் பின்னினாள். இப்போது அவர்கள் கைகோர்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய கைகளைத் தன்பால் இழுத்து அவனருகே வரப் பயன்படுத்தினாள். மிக அருகில் இருந்ததால் அவள் முகம் உருத் தெளிவற்று மசமசப்பாக ஆனது. 

“ஜோ என்ன ஆனான்?” அவன் அதை எப்படியோ சொல்லி விட்டான். 

“ஜோ? ஜோ டோர்ரெஸ்ஸா?” அவள் வியப்புற்றுப் பின்னே தள்ளி அமர்ந்தாள். பிறகு வாய்விட்டுச் சிரித்தாள் – ஏதாவது சிரிப்பூட்டுவதாக இருந்தால் எங்கிருந்தோ பீறிட்டுக் கொண்டு வரும் உண்மையான, அற்புதமான சிரிப்பு அது. “அப்படியா நீ நினைச்சே? ஜோவும் நானும் வெறும் சிநேகிதங்கதான். தொடறது மத்ததெல்லாம் சும்மா சாதாரணம். அந்த குணத்தாலதான் நாங்க சிநேகிதர்களா இருக்கோம். சிநேகிதங்க பொதுவா அப்படித்தான் பழகுவாங்க. அதாவது….”

அவள் முகத்திலிருந்த அந்த நேர்மையான பார்வை விலகியது. அவள் தன் கண்களைச் சுருக்கிக் கொண்டாள். அவனுடைய தோலுக்குக் கீழே இருக்கும் எல்லா உணர்விகளூடாகவும் மின்சாரத் தாக்கமாக ஓர் உறுத்தல் பிரவாஹித்தது. ஆனால் அது குறித்த தகவல் அவனுடைய புத்தியை மெதுவாகத்தான் அடைந்தது. அந்தப் பீறிட்ட உணர்ச்சிக்குக் காரணம் அவளுடைய வெட்டப்பட்ட நகங்கள், அவனுடைய முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை இலேசாகப் பயணித்திருந்ததுதான். 

“இது சரியாயிருக்கா?” அவள் கேட்டாள், தான் தலையசைத்தோமா, அல்லது தலையை ஆட்டி மறுத்தோமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவளுக்குப் பின்னால், நகரத்தின் மரங்களின் உச்சிகளையும், வானம் இருண்டு வருவதையும் அவன் பார்த்தான். 

“பென் சொன்னது சரி,” அவன் சொன்னான். “மழை பெய்யப் போகிறது.”

இதற்கு அவளுடைய பதில், அவனுடைய கையில் சுண்டு விரலையும் கட்டைவிரலையும் பற்றிக் கொண்டு அவனை அவளிடம் இழுத்து, அவனுடைய உள்ளங்கையை அவளுடைய நழுவும் ஆடையின் கீழிருந்த, பளுவாக இருந்த மேட்டின் மீது அழுத்தியதுதான். தன் உள்ளங்கையின் குழியில் சற்றே மையத்திலிருந்து அகன்றிருந்த முடிச்சை அவன் உணர்ந்தான். சிறு உருண்டை. முலைக்காம்பு. 

“இது எப்படி இருக்கு?” அவள் கேட்டாள்.

அவன் என்ன சொல்ல முடியும்? என்ன சொல்ல வேண்டும்?

“இது?”

“இப்ப இது?”

அது நடக்கிறது, அவன் நினைத்தான், தனக்குத் தைரியம் கூடி வருகையில் துன்பமும் கூடுவதாக உணர்ந்தான். 

அவளுடைய ஆடையின் நீளம் ஒரு பிரச்சினை என்பது கவனிப்புக்குள் வந்து போய்க்கொண்டிருந்தது. அவள் எழுந்திருக்க முயன்ற போது அது முழங்காலருகே, அல்லது அவளது குதிகாலின் கீழ், அல்லது அவளுடைய காலணியின் முன்முனையில் சிக்கிக் கொண்டு இழுபறி நிலையில் இருந்தது, பிறகு தளர்ந்து அவனுக்கு நுழைவுக்கு இடம் தராமல் தடுத்தது. அவளுடைய புரிதலையும், அத்துடன் அவள் செய்த சோதனைகளையும், அவளுடைய உடுப்புகளில் அவள் மேற்கொண்ட சிறு மாற்றங்களையும் அவன் உணர்ந்திருந்தான். அவளுடைய காலணியின் குதிகால் கற்களில் எழுப்பிய சரக் சரக்கென்ற ஒலி அவனுக்குக் கேட்டது. அப்போது அவள் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள், அவளுடைய ஆடை முழங்காலுக்கு மேல் உயர்த்தப்பட்டிருந்தது. அவனுடைய கையை ஆடையின் நுனித் தையலைத் தாண்டிய சுருக்குப் பட்டிக்கு அடியே கொண்டு போனாள், அந்த இருண்ட குறுகிய பகுதிக்குள். அவளுடைய தொடைகள் மீதாக அவனுடைய உள்ளங்கை படர்ந்து போன போது, அவளுடைய தோலில் இருந்த புல்லரிப்புக் குமிழிகளை அவன் உணர்ந்தான். அந்த மனக்காட்சி கிட்டியதும், அவனுக்கு ஒரு அதிர்வு எழுந்தது, குமட்டல் உள்ளே துவங்கியது. வேண்டாம், தனக்குள் அவன் உறுதியாகச் சொல்லிக் கொண்டான், கூடாது. 

தன் கவனத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்தான், அதைக் கையாளக் கூடிய இடத்திற்குக் கொணரப் பார்த்தான். ஆனால் அவளுடைய தோலின் இழைவு அவனுடைய கற்பனையைப் பீடித்திருந்தது.  காய்ந்த பொருக்கில் இருக்கும் முண்டு முடிச்சுகளை வரிசையும் பத்தியுமான ப்ரெய்ல் எழுத்துகளோடு இணைத்துப் பார்த்தான். சூரல் பெரணியின் அடிப்புறத்தில் இருக்கும் நுண்ணுயிர் விதைகளைப் போல. இது எங்கே போகிறது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. தன் மூச்சைக் கட்டுப்படுத்த முயன்றான். கோபத்தாலோ அல்லது இந்த நிலையைத் தாங்க முடியாத அவஸ்தையாலோ, தன் கையை ஆழமாக நுழைக்க முயன்றான், எலாஸ்டிக் பட்டைக்கு உள்ளே கட்டை விரலை நுழைத்தான், அது மெல்லிய துணிக்குக் கீழே இருந்த முள்ளான முடியில் உரசியதை உணர்ந்தான். அவளுடைய முழங்கால்கள் கிடுக்கிப் பிடியாக மூடிக் கொண்டு, அவனது கையைச் சிறைப்பிடித்தன, மறுபடியும் அவன் கூடுதலான இடைவெளியை, காற்றை, விலகலைக் கேட்கும் அவசர உந்துதல் எழுவதை உணர்ந்தான். தயவு செய், வேண்டாம். அவன் தானாக இருக்கவும், எல்லாவற்றையும் மறுமுறை அளந்தறியவும் அவனுக்கு ஒரு சில கணங்கள் அவள் கொடுக்க மாட்டாளா. மாறாக அவள் கைகளை அவனுடைய கழுத்தின் பின்புறம் சுற்றிப் பிடித்தாள். அவளுடைய கால்கள் சிறு ஒலியோடு பிரிந்தன. பின்வாங்கும் அவனுடைய கை, அவளுடைய தொடைகளில் அவனால் பார்க்க முடியாதபடி இருந்த சிறு முடிச்சுகளை, ஸ்பரிசத்தால் உணர்ந்தது. முகத்தின் பரப்பில் இருந்த பெரியம்மைக் கொப்புளங்கள் போல உயர்ந்தவையா அவை. சோளக் கொண்டையிலிருந்து முத்துக்களை உதிர்த்தபின் எஞ்சும் தட்டையின் வெற்றிடக் குழிகளா. அவளுடைய திறந்த வாய் அவனது வாயை நாடி வந்தது, சுவையில் உப்பும், தயிரும், இரும்பின் துருவும் கிட்டின. அவர்களுடைய பற்கள் இடித்தன, அந்த சகிக்கமுடியாத இடிப்பொலி மண்டைக்குள் மூளையில் கேட்டது. பிறகு அங்கு அந்த நாக்கு- யாருடைய நாக்கு? – அசைந்து, துழாவி, ஏதோ அவனுடைய தொண்டையில் காற்றுப் போகும் பாதையை எட்டி விடுவதுபோல இயங்கியது. 

அவளிடமிருந்து விடுபட வேண்டி அவனுக்கெழுந்த விருப்பம் அத்தனை வெளிப்படையாகவும், ஆக்ரோஷமாகவும் இருந்ததால் அவன் திமிறிக் கொண்டு விடுபட்டான், அவள் பின் தள்ளப்பட்டுக் கீழே சாய்ந்தாள்.  அவன் அதைப் பற்றி ஏதும் அக்கறை கொள்ளவில்லை. அவனுக்குக் குமட்டல் எகிறி வந்தது, அவன் பதட்டத்தால் ஓட்டப்பட்டிருந்தான், அதன் உச்சியில் அருவருப்பு மிகுந்திருந்தது. மேலே உச்சிக்குச் சென்று சர்ரென்று கீழிறங்கிய உணர்வுகளால் அவன் மூச்சு விடத் திணறினான், வயிற்றிலிருந்து பொங்கி வந்ததை ஓக்காளித்தான். அது அங்கே அவர்களிடையே தரையில் சிதறியது. அவனுள்ளிருந்து வெளியேறிய அது. அவனுடைய வாக்குமூலம். 

அவள் அவனை மூட்டமான முகத்தோடு ஒரு பார்வை பார்த்தாள். ஒரு புன்னகையின் சிறிய தோற்றம் இருந்தது, உடனே பொங்கிய கண்ணீர். தன் முடியைக் காதுகளுக்குப் பின்னே ஒதுக்கி ஒழுங்கான அமைப்பாக்கினாள், ஆனால் அந்தச் சுருள் உடனடியாக விடுபட்டு ஆடியது. அதற்குப் பிறகு அவள் எந்த சைகையும் செய்யவில்லை, படிக்கட்டுகளை அடையத் திறந்திருந்த கதவு வழியே ஓடிப் போனாள். தனிமையின் பிரும்மாண்டமான விடுதலை உணர்வில் அவன் நின்றான், அப்போது மழை பெய்யத் தொடங்கி இருந்த போதும், அந்த மொத்தக் கட்டடத்தின் ஆறு தளப் படிக்கட்டுகளையும் கடந்து தரைத் தளத்தை அடைய அவளுக்கு அவகாசம் கொடுத்தான். 

அந்த மாத இறுதியில், அவர்கள் பட்டப் படிப்பை முடித்து, பிரிந்து போனார்கள். அவர்களுக்கு பண்டிதர்களின் வகுப்புகள் வேறேதும் இருக்கவில்லை, கூரைத் தளத்தில் மறுபடி அவர்கள் சந்திக்கவில்லை. ஆல்பெர்ட்டும் ஸாஷாவும் அந்த இரவைப் பற்றிப் பேசவேயில்லை; இன்னும் சொன்னால், அவர்கள் பேசவே இல்லை. பட்டமளிப்பு விழாவை ஒட்டிய நடவடிக்கைகளால் – விருந்துகள், இசைக் கச்சேரிகள், ஊர் திரும்ப எல்லாவற்றையும் எடுத்துக் கட்டுதல், விடை பெறும் சந்திப்புகள்- ஒருவரை ஒருவர் தவிர்ப்பது எளியதாகவே இருந்தது. பிற்பாடு, பென்னிடமிருந்து அவள் முன்பு சொன்ன மாதிரியே, ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்குத் திரும்பி விட்டாள் என்று தெரிந்து கொண்டான். ஆல்பெர்ட்டுக்கு ஆறுதலாக இருந்தது. 

ஜூன் மாதம் ஒரு நாள், ஆல்பெர்ட்டும் பென்னும், ஆயிரத்து எண்ணூறு டாலர்களுக்கு ஜோ வாங்கியிருந்த ஒரு காரில் அவனுடைய பொருட்களை ஏற்ற உதவினார்கள். ஆஸ்டின் நகருக்குப் போகவிருந்த ஜோ, எத்தனை சுற்றிப் போக முடியுமோ அத்தனை தூரம் ஓட்டிப் போகும் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.  அங்கே அவன் இசைக் குழுக்களை வழிநடத்துபவராக ஆகப் பயிற்சி தரும் துறையில் முதுநிலைப் படிப்பைத் தொடரவிருந்தான். வெப்பம் ஊடுருவாத ஒரு பெட்டிநிறைய காஸெட்களைச் சேமித்து, அதைப் பயணியின் இருக்கையில் வைத்துக் கொண்டிருந்தான். பொருள் வைக்குமிடத்தின் கதவை அடித்துச் சாத்தியபின், ஜோ ஆல்பெர்ட்டை நோக்கித் திரும்பினான். “நடந்ததை மறப்போம்,” என்றான், இருவரும் கை குலுக்கினார்கள். ஆல்பெர்ட் அந்தக் கார் தெருக்கோடிக்குப் போய், ஜ்யார்ஜ் வாஷிங்டன் பாலத்தை நோக்கிப் போகும் திசையில் ப்ராட்வேயில் திரும்புவதைப் பார்த்திருந்தான். 

சில நாட்கள் கழித்து, பென்னும் போனான், முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவசியமான ஜிஆர் ஈ பரீட்சைக்குத் தயார் செய்ய சிக்காகோ நகருக்குப் போனான். 

எல்லாரும் போய் விட்ட பிறகு, ஆல்பெர்ட் பூரணமான லயிப்பைப் பெற்ற காலகட்டத்தில் புகுந்திருந்தான். வான் க்ளைபர்ன் போட்டி இன்னும் மூன்று வருடங்களில் வரவிருந்தது. ஒவ்வொரு வார நாள் காலையிலும், அவன் இரண்டு பைகளைச் சுமந்து போவான். அவற்றைத் தோள்களில் குறுக்காகப் போட்டுக் கொள்வான். ஒவ்வொரு தோளிலும் ஒரு கைப்பிடி நாடா இருக்கும். அந்த X தன் மார்பில் பாரமாக அழுத்தியிருக்க, வளைகுடாப் பக்கம் இருந்த தனது பழைய வீட்டிலிருந்து கிளம்புவான். சில சமயம், அது ஞாயிறாக இருந்தால், அங்கு காரை நிறுத்தும் கான்க்ரீட் தளத்தின் நடுவில் முளைத்திருக்கும் புற்களிலோ அல்லது அதன் பக்கவாட்டில் இருந்த புல் வெளியிலோ தன் புல்வெட்டும் எந்திரத்தை வைத்து அவனுடைய அப்பா, புல்லை வெட்டுவதைப் பார்க்க நேரும். அவனும் அவன் அப்பாவும் முறையாகக் கையுயர்த்துவார்கள், ஒருவரையொருவர் கடப்பதை அங்கீகரிக்கும் சைகை அது. ஆல்பெர்ட் புல்லை வெட்ட வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்பும் அங்கு இல்லை. அது ஒருபோதும் இருந்ததில்லை. 

எல் ஐ ஆர் ஆர் (லாங் ஐலண்ட் ரெயில் ரோட்) ரயிலைப் பிடித்து கேந்திரமான பென் ஸ்டேஷனுக்கு அவன் போகையில் தினசரி வேலைக்குப் போகும் ரயிலில் பயணிகள் போலத்தான் அவன் சென்றான்: இரண்டு முழு நீள இசை நிகழ்ச்சி, இரண்டு கான்செர்ட்டோக்கள், ஒரு பியானோ க்வின்டெட் ஆகியனவற்றுக்கு அவன் தயாரிக்க வேண்டி இருந்தது. அவனுடைய பழைய மாணவ அடையாள அட்டை அவனுக்குப் பல்கலைக்குள் செல்ல உதவி செய்தது. ஆனால் இப்போது அவனுக்கு அதிகம் பேர்களைத் தெரிந்திருக்கவில்லை. ஒரு பயிற்சி அறையை அவன் பிடித்துக் கொண்டபின், கழிப்பறைக்குக் கட்டாயமாகப் போக வேண்டி இருந்தாலொழிய அவன் அந்த அறையை விட்டு வெளியே போவதில்லை. அப்போது கூட வரும் உந்துதலைப் பொருட்படுத்தாமல் மேலே பயிற்சியை நடத்துவது சில சமயம் அவனுக்கு முடிந்தது. அவனுடைய பையில், புத்தகங்களைத் தவிர, மூன்று புட்டிகளில் தண்ணீர், சுவை கூட்டும் எந்த உதவிப் பொருளும் இல்லாத வான்கோழி இறைச்சி இருந்த நான்கு சாண்ட்விச்சுகள், வீக்கங்களுக்கு சிகிச்சைக்கு ஆஸ்பிரின், மக்னீசியம் சேர்க்கைப் பொருட்கள், ஒரு வாழைப்பழமோ அல்லது ஆப்பிளோ, மற்றும் கொரிய சக்தி பானமான பாக்கஸ்-டி. 

தன்னுடைய முந்நாள் ஆசிரியரை வாரம் ஒரு தடவை, ஞாயிறுகளில் சந்திப்பதைத் தொடர்ந்தான். அது ஆஸ்டோரியாவில் இருந்த  ஸோர்கினின் அடுக்ககத்தில் நடந்த சந்திப்பு. அவர்களின் உறவு இப்போது மாறி விட்டிருந்தது. அவனுடைய ஆசிரியர் பழுப்புக் கம்பளி ஸ்வெட்டரும், ஸ்லிப்பர் காலணிகளும் அணிந்தபடி அவனுக்குக் கதவைத் திறப்பார். ஆல்பெர்ட் உள்ளே நுழைகையில் அடுக்ககத்தில் பொறித்த மீனின் வாடை நிரம்பி இருக்கும். பக்கவாட்டு மேஜை ஒன்றின் மீது அவருக்கான கட்டணத்தை அவன் வைப்பான் – அவள் வேலை பார்த்த கடையில் கிட்டிய இருபது டாலர் நோட்டுகளில் நல்ல நிலையில் இருந்தவற்றை அவன் அம்மா வாரம் பூராவும் சேகரித்துக் கொடுத்த நூற்றி இருபது டாலர்கள் அவை. அந்தப் பாடங்கள் மிக நீண்ட நேரம் நடந்தன, அனேக நேரம் இரவுணவுக்கான நேரத்தைத் தாண்டிப் போகும். ஆல்பெர்ட் சில நாட்களில் அந்த அடுக்ககத்தில் எங்கோ, மரியாதை தெரிந்தவளாக உலவும்  ஸோர்கினின் மனைவியின் இருப்பை உணர்வான் -ஸோர்கின் அப்படி ஒரு நபர் இருப்பதைப் பற்றிப் பேசியதே இல்லை. 

ஒரு மாலையில் போட்டிக்கான நாள் நெருங்கி வருகையில், அவன்  ‘மெஃபிஸ்டோ வால்ட்ஸ்’  என்ற சாஹித்தியத்தை வாசித்துக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் ff tutta forza என்று குறிக்கப்பட்ட பகுதியை எட்டியபோது, அந்த பெஹ்ஸ்டைன் பியானோவிலிருந்து பலமான ரீங்கரிப்பு கேட்டது. அவனும், ஸோர்கினும் உயர்த்தப்பட்ட பியானோவின் மேல் மூடிக்கு அடியில் தலையை நீட்டி அந்த ஒலி ஏன் வந்தது என்று கண்டுபிடிக்க முயன்றார்கள். தங்கத்தால் ஆன அடிப்பலகையை, சுருதி கூட்டும் கம்பிகளை, ட்ரெபிள் கம்பிகளுக்கு மேல் பாஸ் ஒலிப்புக்காக இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளை, உரோமத்தால் பின்னப்பட்ட சிவப்பு நாடாவை என்று ஒவ்வோரிடமாகச் சோதித்தனர். பின் ஸோர்கின் ஆல்பெர்ட்டை நோக்கினார். அந்த நோக்கு, அவனுடைய வயதான ஆசிரியருடன் சேர்ந்து, அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பனவற்றை மெச்சி நோக்கத் தூண்டும் அழைப்பு என்று அவனுக்குத் தெரிந்தது. 

“நீண்ட இழை மேபிள் (மரம்),” என்றார் ஸோர்கின், சுட்டியபடி. “பழைய ஸிட்கா ஸ்ப்ரூஸ் (மரம்). வார்ப்பு இரும்பு. நிக்கல். பதினெட்டு அடுக்குகள் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கின்றன, பார். அது யூரியா ரெஸின் ஒட்டுப் பசை. இதற்கு முன்னால் ஒரு காலத்தில் இதுவே மிருகத் தோல்களிலிருந்து காய்ச்சிய ஊன்பசையாக இருந்தது.”

அவர் கம்பிகளின் மேல் தன் கையைத் தடவினார். “எஃகிரும்பு. கூடவே செப்புக் கம்பியில் சுற்றிய எஃகிரும்பு.”

“இப்ப இங்கே பார்,” என்றார் அவர். “இது அத்தனை சிறப்பு. காஷ்மீர் (கம்பளம்).” அவனுடைய வியப்பைப் பார்த்து அவர் சிரித்தார். “ஆமாம், காஷ்மீர். திருப்பு முனைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.” அவர் தன் தடியான, நீண்ட விரல்களை இடவலமாக அசைத்தது, பாடபோதனை இன்னும் முடியவில்லை என்பது போல இருந்தது. 

பிறகு, ஏதோ ஒன்றைக் கண்டார், அடிப்பலகை வரை கையிலிருந்த தங்கப் பேனாவை நீட்டி, அதால் கொக்கி உடைந்த மெல்லிய தங்கக் கை வளை ஒன்றை மேலே தூக்கினார். அதுதான் அந்த ரீங்கரிப்புக்குக் காரணம். “அய்-யய்-யாய், அனுஷ்கா,” என்றார் ஸோர்கின், ஆனால் அதில் பாசம் தெரிந்தது, அனுஷ்கா என்பது அவரது மனைவியின் பெயரா என்று ஆல்பெர்ட் யோசித்தான். 

வான் க்ளைபர்ன் போட்டிக்கு முந்தைய அந்த மூன்று வருடங்கள். நினைத்துப் பார்க்கையில் அவை காலம் கடந்து சென்ற வருடங்கள் என்றே தோன்றவில்லை. மாறாக, அவை அவன் இருப்பதற்குக் கொடுக்கப்பட்டிருந்த இடம் என்பதாகத் தோன்றியது. அப்போது காலம் இருந்திருந்தால், அது மீட்டர்களிலும், மெஷர்களிலும் பொதிந்திருந்தது, அல்லது உடல் தெம்பை படிப்படியாக மேம்படுத்துவதில் இருந்தது, அல்லது சிறிது சிறிதாக, மெதுவாக, ரகசியமாக, வாசிப்புக்குத் தக உடல் வளைந்து கொடுக்கக் கற்பதில் இருந்தது. அந்த வருடம் அவனுடைய கை விரல் விரிவு 9.2 அங்குலங்களை எட்டியது, கீழிறக்கத்தில் திரும்பத் திரும்ப பத்தாவது சுரத்தை அவனால் எட்ட முடிந்தது. 

போட்டியைப் பற்றியோ, அதில் வென்றால் என்ன அடைய முடியும் என்பனவற்றைப் பற்றி அவன் யோசிக்கவில்லை. பரிசுப் பணம் அல்லது இசைப்பதற்கு வரக் கூடிய ஒப்பந்தங்கள், அல்லது அமெரிக்காவில் கச்சேரிகளுக்கான சுற்றுப் பயணம் ஆகியன பற்றியும் அவன் எண்ணவில்லை. தன் வருங்காலத் தொழில் வாழ்க்கை பற்றியும் யோசிக்கவில்லை. அந்த வார்த்தையே,  ‘தொழில் வாழ்க்கை’ என்பதே, அவனுடைய நோக்கங்களைப் பற்றிய பெரும் தவறான புரிதல் என்று அவனுக்குத் தோன்றியது. 

அவன் ஸாஷாவைப் பற்றியும் எண்ணவில்லை. சில நாட்களில், நாளின் இறுதியில், ஒலிச் சுத்தம் கொண்ட மரப்பெட்டி போன்ற அந்த பயிற்சி அறையில், காதுகளில் ரீங்கரிப்பு இன்னும் இருக்கையில், தனக்கு விறைத்துக் கொள்வதை உணர்வான்.  தான் அதிலிருந்து விடுதலையைப் பெற முயற்சி செய்பவன், அதற்காக சாண்ட்விச்களை வைக்கும் காலிப் பையைத் திறந்து முன்னே பிடித்துக் கொள்வான். அது தனக்கில்லாமல் யாருக்கோ நடப்பதுபோல, அவனுடைய விருப்ப இயக்கத் தசைகளில் களைப்பால் அவனுடைய கைகள் நடுங்க, பசியையோ, தாகத்தையோ தீர்ப்பதுபோல அதையும் தீர்த்து விடுவித்துக் கொள்வான். பிறகு இலேசாகச் சூடாகி வெண் மூட்டமாகத் தொங்கும் அந்தப் ப்ளாஸ்டிக் பையின் ஜிப்பை இழுத்து மூடுவான். வெளியே போகும்போது அவன் எடுத்துப் போகவேண்டிய குப்பைகளோடு சேர்த்து வைப்பான். அவனுடைய கற்பனை எல்லாம் வேறெங்கேயோ இருக்கும். 1999 இல் அவன் இந்தக் கூட்டு வாசத்திலிருந்து வெளியேறி அந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுகள் நடக்கவிருக்கும் ஃபோர்ட் ஒர்த் நகருக்குப் போக ஒரு விமானத்தைப் பிடிக்கப் பயணம் துவங்கியபோது, அவனுக்கு வயது இருபத்து நான்கு. தான் இருபத்து மூன்று வயதிலோ, இருபத்து இரண்டு வயதிலோ இருந்ததாக அவனுக்கு நினைவே இல்லை. அவனை விருந்தாளியாகப் பராமரிக்கவிருந்த வீட்டுக்கு இரண்டு பெட்டிகளோடு வந்து சேர்ந்தான், அவற்றை கட்டிலில் படுக்கை மீதிருந்த கட்டத் தையல் போட்ட ரஜாய் விரிப்பின் மீது வீசித் தூக்கிப் போட்டான். முதல் பெட்டியில், அதை அவனுடைய அம்மா கட்டி இருந்தாள், அவனுடைய மற்றத் துணிகளோடு, இரண்டு கருமை நிறக் கம்பளி சூட்களும், வாடகைக்கு எடுத்த ஒரு டக்ஸீடோவும், இன்னும் ப்ளாஸ்டிக் க்ளிப்கள் எடுக்கப்படாத மடிப்போடு இருந்த புதுச் சட்டைகள் சிலதும் இருந்தன. இரண்டாவது பெட்டியில் அவனுடைய இசைப் புத்தகங்கள் இருந்தன. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான், அதில் மழை மேகத்து நீல நிறத்தில் இருந்த புத்தகங்கள் படேல்ஸன்ஸிலிருந்து வாங்கியவை, அவை சாஹித்தியங்கள், இசைத்தொகுப்புகள் ஆகியவற்றைப் படைத்தவர்களின் இசைக் குறிப்புகளை அப்படியே பிரதி எடுத்த புத்தகங்கள்.[3] அந்தக் கடை ஐம்பத்து ஆறாம் தெருவிலிருந்த ஒரு பழைய வீட்டிலிருந்தது, அங்கிருந்த கணக்கர்கள், நூலகர்களைப் போன்றவர்கள். புத்தகவிலைகள் அட்டைகளில் ஒரு மூலையில் குறிக்கப்பட்டிருந்தன, அவை ஒரு போதும் டாலர் விலைகள் கொண்டவை அல்ல, மாறாக அடக்கமாக, புள்ளிகளால் குறிக்கப்பட்டிருந்தன. அப்புத்தகங்கள் அங்கு புழங்குபவர்களிடையே இருந்த ஒரு புரிதலால் உருவான குழுமத்தைச் சுட்டின. அந்த இசைக் குறிப்புகளை யாரோ துணியைப் போன்ற தடிமனான காகிதத்தில் கட்டமைத்திருந்தார்கள், அது சற்று ஈரமாகக் கூட இருப்பது போன்று தெரிந்தது. அந்த யாரோ, முதலட்டையின் மீது விலையைக் குறிக்க விருப்பமில்லாதவராகவும் தெரிந்தார். இந்தப் புத்தகங்கள் அவனை ஆசீர்வதிக்கப்பட்டவன் போல உணரச் செய்தன. எது நடந்தாலும் என்ன. வெற்றியோ, தோல்வியோ.

(தொடரும்)

பின்குறிப்புகள்:

[1] கதையில் இந்த இடத்தில் மூலப் பிரதியில் கொடுக்கப்படும் வர்ணனை இது – arpeggiated second inversion.  இன்வர்ஷன் என்பதற்கு இசைச் சொல் அகராதியில் கிட்டும் விளக்கம் இது: https://www.freemusicdictionary.com/definition/inversion/  –

ஆர்பெகியேடட் என்ற சொல்லுக்குக் கிட்டும் விளக்கம்: https://www.freemusicdictionary.com/definition/arpeggiated-chord/

[2] அடாஜியோ பியானோவில் எப்படி இருக்கும்? ஒரு உதாரணம்: https://www.youtube.com/watch?v=NzW_ZEaYMh8

 [3] Urtexts என்பது மூலக் கதையின் வர்ணனை. இந்தப் புத்தகங்களைப் பற்றிய விக்கிபீடியா விளக்கம் இது: a printed version intended to reproduce the original intention of the composer as exactly as possible, without any added or changed material. அதாவது எந்த இடைச்செருகல்களும் இல்லாது, பிற்சேர்க்கைகளைத் தவிர்த்த புத்தகங்கள்.

Series Navigation<< பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.