சரியும் அதிகாரமும், புரவலர்த் தேவையும்

“Assured of certain certainties, the conscience of blackened street Impatient to assume the world (T S Eliot- Thanks to Mr. Nambi Krishnan’s article. Though Eliot says this in an entirely different situation this holds water for the current topic too)

சிலைஅழிப்பு என்பதை, நாகரீகமடைந்த மனோ சிகிட்சையில் தம்மை மேம்பட்டவராகக் கருதுபவர்கள், அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள, சமூகத் தீமைகள் என அவர்கள் நினைப்பதைக் கண்டுபிடித்து அதைத் தாக்குவது எனப் புரிந்து கொள்ளலாம். இந்தத் தீமைகள் ஃப்ராய்டின் சிக்கல்களிலிருந்தும், கிருத்துவம் சொல்லும் பாவங்களிலிருந்தும் தங்கள் பரிமாணங்களைப் பெறுகின்றன. மிகை தாராளவாத மொழி சொல்லும்  ‘வன்முறையோடு’ பிணைக்கப்பட்டிருந்தாலும், இந்த நவீன உருவழிப்பானது குழம்பிய குட்டை. ‘தீயதை’ அடிப்படையெனக் கொண்ட ‘பின்பனிப் போர் தாராள வாதத்தை’, இவர்கள் மேலும் ஆக்ரோஷப்படுத்துகிறார்கள். எவை ‘தீய செல்வாக்கு உடையவை’ என இவர்கள் கருதுகிறார்களோ, எவையின் ஆதிக்கம் தீங்கென நினைக்கிறார்களோ, அதை ஒட்டி வார்த்தைகள், சைகைகள் மூலம் அதன் சக்தியை மிகுத்துக் காட்டுகிறார்கள். அசைவில்லா சிலைகள், இப்படி வரலாற்றின் முகவர்களாகின்றன. காட்சியை ஒத்திருப்பதாலோ, அல்லது, சின்னங்களை ஒத்திருப்பதாலோ அண்ட சக்தியும், பொருட்களும் ஒன்றையொன்று (சாரும்) தாக்கும் என்ற  ‘நியோ ப்ளோடானிக்’ வரைமுறை போல, இவர்களின் சிந்தனை இருக்கிறதல்லவா? பழங்காலத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள், இந்த மறைமுக ஆற்றலை தந்திர வடிவில் செய்து விளையாடினார்கள்- அதாவது சுக்கிர கிரகத்தின் அன்புத்தூண்டுதலை அதை ஒத்திருக்கும் முத்துக்களிலும், காயம் ஏற்படுத்திய கருவிக்கு புண் மருந்து இட்டு காயத்தை ஆற்றுவதிலும் அவர்கள் தங்கள் மேதமையைக் காட்டினார்கள். அந்த முன்னோர்களைப் போலவே, இந்த இளைய உருவழிப்பாளர்கள், தட்டையான மீப்பொருண்மை மொழியில், வெள்ளை மேலாதிக்கத்தையும், ஆன்மீகப் போதைகளையும், அவற்றின் குறியீடுகளை அழிப்பதன் மூலம் காட்ட விழைகிறார்கள். ஒரே தருணத்தில், எங்கும் நிறைந்திருப்பதும், ஆனால் நழுவுவதுமான இந்த கெட்ட சக்தி, எந்தக் காலத்திலும் வெல்ல முடியாததென்பதால், முடிவற்ற இந்தப் போராட்டம் தொடர்கிறது.

ஆனாலும், அந்த முந்தைய நியோப்ளோடானிக் மேதைகளைப் போல இன்றைய இளைய கிளர்ச்சியாளர்கள், சமுதாயத்தின் உடனடித் தேவைகளுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீப்பொருண்மையின் தன்மைகள் எதுவாக இருந்த போதிலும், தங்களுக்கான புரவலரைத் தேர்வதும், தங்களுக்கான சமூக இடத்தைப் பெறுவதும் அவர்களின் உந்துவிசை. இந்த நோக்கத்திற்கு அவர்களுக்கு மிக எளிதாக, விரைவாகக் கிடைப்பது சிலைகளின் அழிப்பே. 1700ல் ஏற்பட்டு, பனிப்போர் முழுமைக்கும் தொடர்ந்த, பிரிட்டிஷ்- வட அமெரிக்கா விக்-ஹெனோவேரியன் (Whig-Hanoverian- Conservative Tory Party) கூட்டை ஒரு உதாரணமாக எடுக்கலாம்; அந்தக் கூட்டைச் சேர்ந்த படித்த மேல் நடுத்தர வர்க்கத்தினர், மென்மையான நடத்தையும், நிலமும், நீச்சுமுள்ள மனிதர்களோடு எப்போதுமே இணைய விரும்பினார்கள். வணிகத்திலும், அரசாண்மையிலும் தாங்கள் கொண்டிருந்த திறன்களின் மூலம் அவர்களால் தங்களுக்கான இடத்தைப் பெற முடிந்தது. தங்களின் அத்தகைய கூட்டமைப்பினால் முன்னேறிய அரசாட்சி நிபுணர்கள், பெரும் வணிகர்கள், இராணுவத் தலைவர்கள், தங்கள் சமுதாயத்தை உலகின் முக்கிய சக்தியாக மாற்றியவர்களின் சிலைகள் வட அட்லாண்டிக்கில் பெரும்பாலும் இடம் பெற்றன. இயந்திரக் காலத்திற்குப் பின், முடியாட்சி வீழ்ச்சிக்குப் பின், இவர்கள்  சுய ஐயங்களால் பீடிக்கப்பட்டார்கள்; தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள விழையும்  தொடரும் தலைமுறையினர்க்கு அந்தச் சிலைகளை அழிப்பது வெறுப்பைக் காட்டும் உபாயமாகி விட்டது. கடும் சிக்கலிலுள்ள நாகரீகத்தின் வாரிசென வருபவர்கள், காண்பதற்கு எளிதாகத் தென்படும் முன்னவரின் வெற்றியின் மீது பொறாமையும், ஆவேசமும் கொண்டு, அதனால் பதட்டப்பட்டு, தங்கள் அதிகார நிலையை அடையப் பார்க்கிறார்கள்.

இந்த நவீன உருவழிப்பாளர்களில், மனக்கசப்பு மிகுந்த சிலர், பழமையிலிருந்து தாங்கள் விலகுவதை நாடகீயமாக்குகிறார்கள். இந்த இளம் கிளர்ச்சியாளர்களுக்கு, முந்தைய மேம்பட்டோரைக் குற்றம் சாட்டுவதில், அவர்களின் இடத்தைத் தாமும் பெற வேண்டும் என்னும் இச்சை, அழுத்திவைக்கப்பட்ட குற்ற உணர்விலிருந்து தோன்றுவது சரியான உளவியல் செய்தி. முரணாக, இதைப் பெறுவதற்கு, அந்த முந்தைய தீங்காளர்களை இவர்கள் பணிகிறார்கள். 2015-ல் கேப்டவுன் பல்கலையில் நிறுவப்பட்டிருந்த சி ரோடஸ் (Cecil Rhodes) சிலையை அகற்ற நடந்த மாணவப் போராட்டத்தின் குழுத் தலைவர், சி ரோடஸ் பெயரில் அமைந்த கல்வி உதவித் தொகையை குற்ற உணர்வேதுமின்றி பெற்றுக் கொண்டார் என்பது ஒன்றும் வியப்பல்ல. இந்த கல்வி உதவிக்கான அறக்கட்டளையை நிறுவியவர் சி ரோடஸ் தான். இந்த நன்கொடை ‘ஆங்கிலோ- சாக்ஸன்’ ஒற்றுமையை முன்னிறுத்தி ஏற்படுத்தப்பட்ட ஒன்று; ஆனாலும், அந்த மாணவர் சொன்னார், இரு வருடங்கள் ஆக்ஸ்பர்ட்டில் படித்து, இனவேற்றுமை கொண்டாடிய சமூகத்திற்கெதிராகப் போர் தொடுக்க இந்தப் பணம் தேவையாகிறதே? தங்கள் பட்டதாரிகளில் இன வேற்றுமை எதிர்ப்பாளர் இருக்கிறார் என்று ரோட்ஸ் கல்லூரியும் மார் தட்டிக் கொள்ள முடியும். பரஸ்பர நன்மைக்கான இந்தப் பரிமாற்றத்தில், மேல்மட்ட ஒருமித்தப் புரிதலுக்கு உபயோகப்படுத்திய கருவிகள், மறு வடிவெடுத்து, மேன்மை மிக்க புதிய அடையாளத்தை வழங்குவதில் பயன்பட்டன. தாராளம், பழமையின் உருவங்களை எதிர்காலத்திற்காக பலி கொடுக்கிறது.

“I am moved by fancies that are curled around these images” (T S Eliot- Thanks to Mr. Nambi Krishnan’s article. Though Eliot says this in an entirely different situation this holds water for the current topic too)

முரண்பாடுகள் கொண்ட இந்தப் புது உருவழிப்பின் தன்மையை, மேலாண்மைத் திறன் கொண்டவர்கள், ஒரு நிலையில் புரிந்து கொண்டு சகித்துக் கொள்கிறார்கள். கல்லூரிகளை விட்டுச் செல்லும் கிளர்ச்சியாளர்கள் தங்களுக்கோ, தம் இனத்திற்கோ கிடைக்க வேண்டிய ஆனால் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான சினத்தை சிலை அழிப்பின் மூலம் காட்டுவதில், உயிரோடு இருப்பவர்கள் பொதுவாகப் பாதுகாக்கப் பட்டுவிடுகிறார்கள். இதற்குச் சில வெள்ளைக் காலர் அறிவுஜீவிகளின் ஆசிகளும், பங்கேற்பும் உண்டு. என்றோ மறைந்து விட்ட முன்னோர்களின் சின்னங்களை அழிப்பதன் மூலம், பொருளாதாரத்தில் நலிவினை எதிர்கொள்ள நேரிடும் படித்த இளைய பட்டதாரிகள், தங்கள் ஊதியத்தைக் குறைக்கும் அமைப்பை, அதிகாரத்தை, கடன் வழங்குவோரை இத்தகைய  நிலைகளுக்கெதிரான விழுமியங்களுக்கான வழிவகையாகத் தேர்வு செய்கிறார்கள். நீர் கொதித்து ஆவியாகி தன் குரலை ‘விசில்’ மூலம் தெரிவிப்பது போல, இந்த உருவழிப்பாளர்களை அவ்வாறு இயங்க அனுமதிப்பதில், நிர்வாக அமைப்புகளின் சொத்தும், கௌரவமும் பாதுகாக்கப்படுகின்றன! வீடுகளில் கூட கதவை அறைந்து சாத்துவது,  புத்தகங்களை விசிறி அடிப்பது என கோபங்கள் வெளியாவதைப் பார்க்கிறோமல்லவா?

ஆனாலும், இந்தக் கணக்கு சரிதானா என்பதையும் எண்ண வேண்டும். கல்வியின் விளைப் பொருளான இந்த இளம் போராளிகள் தங்கள் தாக்குதல்களை வெற்றான குறியீட்டுச் சின்னங்களின் மேலே நிகழ்த்துவதைப் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால், மூக்கணாங்கயிறறுந்த காளை என்ன செய்யும் என்று யார் சொல்ல முடியும்? பின் பனிப்போர் காலத்தில், மனிதத்தன்மையும், சகிப்புதன்மையும் இணைந்த தாரள வாதத்தை ரோ(ர்)டியால் எடுத்துச் சொல்ல முடிந்தது. அவரது வழித் தோன்றலுக்கு அந்தப் பேறு கிட்டவில்லை. தீங்கினையும், வன்முறையையும் சுருண்ட, சிக்கலானக் கருதுகோளாகக் கொண்ட மிகை தாராளவாதம் எவ்வெவற்றிலும் அதையே நோக்குகிறது. அதன் ஆதரவாளர்கள் அதி தீவிரமடைகிறார்கள். சத்தில்லாத  விவாதங்கள் உணர்ச்சிகளை மட்டுமே தூண்டுமல்லவா?

21-நூற்றாண்டின் சிந்தனைப் போக்கும், கருத்தியல்களும், நல்ல வேளையாக உயிரற்ற உருவழிப்பில் நிலை கொண்டிருக்கின்றன.  இந்த உருவழிப்பானது, தன் போரை கடந்த காலத்துடன் நிகழ்த்தவில்லை;  மாறாக, பழமையுடன் உறவு கொண்ட சிலைகளின் மீது தன் அம்பை எறிகிறது. பெரு மதிப்பிற்குரியதான ஒன்று வெறுக்கப்படுவதால், உணர்வு பூர்வமான தீய எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவேதான் அழிக்கப்பட்ட சிலைகளின் இடத்தில் புதுச் சிலைகள் நிறுவப்படவில்லை. மோயிகள் சிதைக்கப்பட்ட ஈஸ்டர் தீவு வாசிகளைப் போல, துறவிகளின் உருவச் சிலைகள் வீழ்த்தப்பட்டதைப் போல , ப்ராடஸ்டன்ட் நகர்களைப் போல இந்த நவீன உருவழிப்புகள் நிகழ்கின்றன. முன்னர் வழிபாட்டின் பிணைப்பாக இருந்தவற்றை அழிக்க முற்படுகையில், தனி மனிதர்களின் சிலைகள் இலக்காகிவிடுகின்றன.

நிகழ்த்து கலைகளும் , சட்டபூர்வ நடவடிக்கைகளும்

07/04/2003 அன்று பாக்தாதின் ஃபிர்தோஸ் சதுக்கத்தில், ஈராகின் பளுதூக்கும் வீர்ர், வலிமையான பெரிய சம்மட்டியால், சதாம் ஹூசேனின் உருவச் சிலை அமைந்திருந்த பீடத்தை ஓங்கி அடித்தார். அமெரிக்க்கக் கப்பல் படை வீர்ர்கள் அந்தச் சிலையின் கழுத்தினை சங்கிலியால் ஒரு முனையில் பிணைத்து மறுமுனையை இராணுவ வண்டியில் இணைத்து இழுத்துச் சென்றனர். பாலஸ்தீனில் பதுங்கித் தங்கியிருந்த அயலக இதழ்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கப் போகிறதென்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. விழுந்த சிலையும், ஆர்ப்பரிக்கும் ஈராக்கிய மக்களும் காணொலியில் உடனுக்குடன் உலகெங்கும், பிரிட்டனிலும், அமெரிக்க்காவிலும் மீள மீள ஒளிபரப்பாயின. (உலகின் கொடுங்கோலன் ஒழிந்தான் என்று மக்களின் சிந்தனை கட்டமைக்கப்பட்டது). தொடந்த 18 ஆண்டுகளில், அமெரிக்க ஊடகங்களும், ஆங்கிலோ- அமெரிக்கன் ஊடகங்களும் இதை எப்படியெல்லாம் மிகையாக்கினார்கள் என்று சில இதழாலாளர்கள் வெளிச்சமாக்கினார்கள். அமெரிக்க இராணுவத்தினர் காணொலியை இறுக்கமாகக் கத்தரித்து வெளியிட்டிருந்திருக்கிறார்கள். பெரும்பாலும் காலியாக இருந்த அந்த இடத்தில், சிறு எண்ணிக்கையில்தான் ஈராக்கியர்கள் இருந்தார்கள் என்பதை சாமர்த்தியமாக மறைத்துவிட்டார்கள். இதையும் தாண்டி ஒரு பிரிட்டிஷ் நாளிதழ், தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு அந்தக் கூட்டத்தை பன்மடங்கு மிகைப் படுத்திக் காட்டியது. இளைய தலைமுறையினர் இந்தச் சிலை வீழ்ச்சியை பெர்லின் சுவர் அகற்றப்பட்ட நிகழ்வுடன் இணைத்துப் பெருமிதம் அடைவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இதைக் கட்டமைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஈராக்கில் அமெரிக்காவின் எண்ணம் ஈடேறவில்லை என்பதால், சிலை அழிப்பின் தீவிரத் தாக்குதல் அவர்கள் விரும்பிய வழியில் நடக்கவில்லை. இந்தச் சிலையைப் பெயர்ப்பதில் பங்கெடுத்திருந்த உள்ளூர் மனிதர், 2016-ல் கார்டியன் இதழிற்கு அளித்த பேட்டியில் சொன்னார்: “என் செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை; நான் ஏன் அவ்வாறு செய்தேன்? சதாம் போய்விட்டார்- அந்த இடத்தில் ஆயிரம் சதாம்கள்.”

ஈராக்கில் நடைபெற்ற இந்தச் செயல், மெது மெதுவே புரிய ஆரம்பித்தாலும், வீழ்ந்து படும் அந்தச் சிலையைப் பார்வையிட்ட பல்லாயிரம் இளைஞர்களுக்கு, அது தொன்மையான முறையில் விடுதலை என்ற வித்தினை விதைத்தது. அரும்பும் சமயத்தில் இளைஞர்கள் கண்ட அந்தக் காணொலி, புதிய தலைமுறை உருவழிப்பாளர்களுக்கு உத்வேகம் தந்தது. அலைபேசிகள் படம் பிடிக்க, ஆரவாரமாக தங்கள் வீரத்தை சிலை அழிப்பில் காட்டி மகிழ்கின்றனர் இந்த இனத்தினர். வெற்றுச் சிலைகளை அழிப்பதன் மூலம், அடக்குமுறைகளுடனான பந்தம் அறுபட்டுவிடும் என்பது செயற்கை நிறைவு என்று இவர்களில் எத்தனை பேர் அறியப் போகிறார்கள்? இன்றைய இந்த உருவழிப்பு, தாக்கத்தை ஏற்படுத்தாத ஒன்றாக இருப்பதால், மெல்ல மறையலாம்; இன்னும் ஒரு தலைமுறைக்குத் தொடரலாம். சிக்கலான கடின விஷயங்களின் தீர்விற்காக சித்து வேலைச் சிந்தனைகளில் இறங்கலாம். நிற்கும் சிலைகளோ, வீழ்ந்த சிலைகளோ நம் எதிர்காலத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அனுபவ அறிவின்றி நம்மைப் போன்றோர் இருக்கக்கூடாது. பாரபக்ஷமற்ற, நேர்மையான முறைகளில், ஜனநாயக வழியில், இத்தகைய விஷயங்களின் குறியீடுகளை உணர்ந்து ஆவன செய்ய வேண்டும்.

ஆயினும், இதன் தொடர்பாக ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது- படித்த இந்த வர்க்கம், குறியீட்டுச் சின்னங்களின் மீது புனித வைராக்கியத்தைச் செலுத்துவதை தொடரப்போகிறார்களா அல்லது பொது நன்மைக்காக, தங்கள் கடின உழைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அமைப்புகளில் கொண்டு வரப்போகிறார்களா? பின்னதை நடத்திக் காட்டுவதற்கு இப்போது தட்டுப்பாட்டில் இருக்கும் சிறந்த குணங்களைக் கையாண்டு, வீர்யத்திற்கும், நல்லவற்றை அறியும் வழிக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். அதே நேரம் இளமையின் கனவுகள் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்ற அதீதத்தையும் இவர்கள் துறக்க வேண்டும்; நடைமுறையில் எது செயல்படும் என்ற தெளிவு வேண்டும். இவைகளை, இந்தக் குண நலன்களை மறுதலிக்கும் விதமாக மேல் நடுத்தர வர்க்கம் வளர்க்கப்படுகிறது- இருந்தும் நம்பிக்கையை நாம் ஏன் இழக்க வேண்டும்? பல்காலங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்ட மிஸிஸிப்பியன் நகரங்களில் நிகழ்ந்ததை விட, இந்த உருவழிப்புகள், நம் நாகரீகத்தை காக்கப் போவதுமில்லை, அழிக்கப் போவதுமில்லை. வரக்கூடிய புயலை எதிர் கொள்ள, பணிவும், மரியாதையும் கொண்ட தார்மீக மேதைகளின் துணை இன்றியமையாதது. பெரும் பசிபிக் கடலில் பயணித்த கேப்டன் குக்கைப் போல எதிர்வரும் கொந்தளிப்பான நூற்றாண்டில் பாதுகாப்புடன் நாம் பயணம் செய்ய இணைந்து செயல்பட வேண்டும். நினைவில் நிற்கும் தன் இரு பயணங்களிலும், குக், தன் குழுவினரின், சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியமான உணவு ஆகியவற்றைத் திறம்பட கையாண்டார்- ஒருவர் கூட ‘ஸ்கர்வி’யால் இறக்கவில்லை. நம் அனைவருக்குமான நலமான எதிர்காலம் வேண்டுமென்றால், ஈஸ்டர் தீவுகளில் சிதறிக் கிடந்த சிலைகளை எந்த ஒரு பற்றுமில்லாமல், குக்கின் அதிகாரிகள் எப்படிப் பார்த்துக் கடந்தார்களோ, அதைப் போல வெற்றுச் சின்னங்களை மையப்படுத்தி நிகழும் வன்முறைகளை நாமும் கடக்க வேண்டும்.

நெட்ஃப்ளிக்சில், ஜேன் ஆஸ்டென் எழுதிய ‘பர்சுவேஷன்’ என்ற புத்தகத்தை மறு ஆக்கம் செய்து திரைப்படமாக வெளியிட்டிருந்தார்கள். அதில் கறுப்பின, மாநிற மக்களை அரசின் மேல்மட்டத்தினர்களாக, அரசின் ஆலோசகர்களாகச் சித்தரித்திருந்தார்கள். அம் மக்களுக்குச் சிறந்த பங்கை அளித்து, அவர்களையும் அரவணைத்துச் செல்வதுதான் நல்ல படைப்பின் அடையாளம் என்று வேறு சொன்னார்கள். நல்ல எண்ணம் தான்-ஆனால், வரலாற்றை  மாற்றும் அதிகாரத்தை யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு? 1814களில், பிரிட்டிஷ் அரசில் ஆசியர்கள், கறுப்பினத்தவர் மேம்பட்ட அரசு நிலைகளில் இருந்தனர் எனச் சித்தரிப்பது எந்த வகை சமாதானம்? இதில் ஒரு குரூரம் இருக்கிறது- தங்கள் தவற்றை மறைத்து, ஆனால், அவ்வாறு நடந்ததற்கு ஈடு போல, அரவணைப்பது போல, வரலாற்றைக் காட்டுவது, போலித்தனம் அல்லவா? புதிய படைப்புகளில் தாங்கள் விரும்பும் சமத்துவத்தைக் காட்டலாம்; அது வரவேற்கத் தக்கது. ஆனால், வெள்ளைச் சுண்ணாம்பு பூசி வரலாற்றை மறைப்பது, தொல் இதிகாசங்களை மறு ஆக்கம் என்ற பெயரில் இதுதான் தொல் புராணம் என்று இளைஞர்களை ஈர்ப்பது போன்றவை என்ன நன்மைகளைக் கொண்டு வந்து விடும்? அதற்குப் பதிலாக, நற்சிந்தனைகளைக் கொடுக்கும் படைப்புகளில் ஈடுபடலாமே. பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், இந்திய வம்சாவளியினரான ரிஷி சனக் (தன் விவாதங்களில் பலச் சிறந்த தீர்வுகளை அவர் முன் வைத்தார்) தோற்றதும் இந்த 21-ம் நூற்றாண்டில் தான் நடைபெற்றுள்ளன. பாவம், ஜேன்!

இந்தியாவில் உருவழிப்புகள்

இந்தியர்களும் இவ்விஷயங்களில் சளைத்தவர்களில்லை.  குலோத்துங்கன், விஷ்ணுவின் சிலைகளை அழித்து, அதன் மூலம் சைவத்தை வளர்த்து விடலாம் என்று செயல்பட்டான். சமணத்திலிருந்து, சைவத்திற்கு மாறிய அப்பர் பெருமான் பட்டத் துன்பங்களை நாமறிவோம்.

அன்னியப் படையெடுப்புகள் கலாச்சார மையங்களைத் தகர்த்தும், தெய்வச் சிலைகளை அகற்றியும், வழிபாட்டிடங்களில் தங்களது மதச் சின்னங்களை அமைத்தும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  கல்வி என்ற பெயரால், நம் கல்வி முறையினை சீரழித்து, நம் மருத்துவ முறைகளையும் மாற்றி நம்மை ஆண்டார்கள் வெள்ளையர்கள். அன்னியர் கதை இப்படியிருக்க நம்மவர்களே நம் சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டார்கள். தமிழ் மாநிலத்தில் மட்டும் ‘ஐயர், ஐயங்கார்’ என்று, பெயருடன் இணைத்துக் கொள்வது ‘உயர் வகுப்பின் கொழுப்பு’ என்று பார்க்கப்பட்டது. ‘பிள்ளை, நாயர், நாயுடு, ராய், சர்மா,’ போன்ற ஜாதிப் பெயர்கள் நம்மைச் சுற்றியுள்ள மாநிலங்களில் புழக்கத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி இருந்தது. (மிஸ்டர் கோடு, கோடு, கோடு என்ற தி. ஜாவின் கதையில் இந்தப் பகடியைப் பார்க்கலாம்.) குடுமிகளை அறுப்பதும், பூணூலை வெட்டுவதும் கேள்வி கேட்க யாருமின்றி நடை பெற்றன. விபூதியைப் “பட்டை” என்றும், ருத்ராக்ஷத்தைக் “கொட்டை” என்றும் கொச்சையாகப் பேசினார்கள். ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்பதை சௌகர்யமாக மறந்து போனார்கள்.

அனைத்தையும் விட பழமையின் மதிப்பு தெரிந்தவர்கள் இந்தியர்கள். சிலைகளை அழிப்பதை விட, அவைகளைக் கடத்துவதில் பண வரவு அதிகம் எனக் கண்டு கொண்டார்கள். இன்றும் தொடரும் அவலம் இது. வெளி நாட்டிற்குக் கடத்தப்படும் இந்தச் சிலைகள், அங்கே நல்ல நிலையிலிருக்கும் என்ற காரணத்தைச் சொல்லி அதை  மறைமுகமாக நியாயப்படுத்துபவர்களும் இங்கே உண்டு. எதையும் உருவாக்க அறிவும், உழைப்பும் வேண்டும்; அழிப்பதற்கு, தூண்டப்பட்ட உணர்ச்சிகளே போதும். வரலாறு என்றென்றும் உண்டு; ஆனால், நாம் விரும்பும் வகையில் அது இருப்பதில்லை. அதிலிருக்கும் சில கசடுகளுக்காக நாம் நம் சக்தியை வீணடிப்பது தேவையா, இல்லாத அர்த்தங்களை அதில் ஏற்றுவது தேவையா, அல்லது மனதைப் பண்படுத்தி இணைந்து வாழ்க்கையை வாழ்வது நல்லதா என்பதை சிந்திப்போம்.

முதல் பகுதியைப் படிக்க

இரண்டாம் பகுதியை படிக்க

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.