
பாலைவனத்தில் இரவில் கூடாரம் அமைத்துத் தங்கிய வணிகன் சிறிது சிறிதாகத் தன் கூடாரத்திற்குள், குளிர் காரணமாக, ஒட்டகத்தையும் அனுமதித்தான். குடுவையில் மிகுந்திருந்த நீரையும் குடித்துவிட்டு தலை, கழுத்து, முன்னங்கால்கள், உடல், பின்னங்கால்கள் என முழுதாக உள்ளே வந்துவிட்ட ஒட்டகம் அவனுக்கு இடமில்லாமல் செய்துவிட்டது.
இதை தமிழ்ப் பழமொழியில் ‘இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிக் கொண்டான்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிடுவார்கள்.
இன்றைய உலகக்கிராமத்தில் அனைத்துலக அளவில் பொருட்களும், சேவைகளும் பல தேசங்களினிடையே ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்றன. இத்தகைய வாணிபம் கொடுப்போருக்கும், கொள்வோருக்குமான ஏறத்தாழ சரி சம நிலையில் நடைபெறுகையில் பாதிப்புகள் குறையும். நடப்புக் கணக்கிலோ, முதலீட்டுக் கணக்கிலோ ஒரு தட்டு தாழ்ந்து மற்றொன்று உயரும்போது சமம் குலைகிறது. உயர்ந்த தட்டில் மேன்மேலும் பொருளிட வேண்டியுள்ளது- அதற்கும், தாழ்ந்த தட்டு கடனுதவி செய்து அதற்கான வட்டியையும் விதித்து தன் எடையையும் கூட்டிக் கொள்கிறது.
சீனா, ஆப்ரிகாவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படும் நாடுகளில் தன் வணிக ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. ஆப்ரிகாவின் வடகிழக்கிலுள்ள தீபகர்ப்ப நாடுகள் இவை; செங்கடலின் தெற்கு எல்லையில் இவை அமைந்துள்ளன. எதியோப்பியா (Ethopia) சீனாவின் இராணுவ வன்பொருட்களுக்கான சந்தை. ஜெபோடியில் (Djibouti) தன் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது சீனா. எரித்ரியா, (Eritrea) எதியோப்பியா, சோமாலியா, (Somalia) ஜெபோடி ஆகிய நாடுகளில் கட்டுமானத்திற்கெனவும், பிற முதலீடுகளாகவும் $14 பில்லியன் கடன் வழங்கியுள்ளது சீனா. இந்த ஆப்பிரிக நாடுகளில், இரும்புத் தாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினங்கள், இயற்கை வாயு, அதிக அளவில் இருப்பதுதான் சீனாவின் இத்தகைய ஆர்வத்திற்கும், முன்னெடுப்பிற்கும் காரணம். கிழக்கு உகாண்டாவில் பூஷ்ஸா (Busia) நகர்ப்புறத்தில் 31 மில்லியன் தங்கத் தாதுக்கள் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து 3,20,000 டன் சுத்தத் தங்கம் தயாரிக்கலாமாம். குறிப்பிடப் படவேண்டியது வாஹாகை (wagagai Gold Mining Company) என்ற சீனத் தங்கச் சுரங்கக் கம்பெனி அங்கே செயல்படுகிறது என்பதும், செயல்பாடுகளை அதிகரிக்கப் போகிறது என்பதும்தான். தங்கம் ஒரு முக்கியமான உலோகம். நகைகள், கணினி, தகவல் சாதனம், விண்கலம், ஜெட் விமான இயந்திரம் ஆகியவற்றில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச வர்த்தக இருமுனைக் கடனில் கென்யா, சீனாவிடம் பட்டுள்ள கடன் 67% என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அது அந்த ஆப்பிரிக தேசங்களுக்கும், சீனாவிற்கும் இடையே உள்ள ஒன்று, நமக்கேன் கவலை என எண்ணத் தோன்றும். மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி இந்தியப் பெருங்கடலின் கப்பல் பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்தப் பாதை வழியே யுரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் எண்ணெய் ஏற்றுமதியாகிறது. ‘கடல்வழிப் பட்டுச் சாலை’ என்ற சீனாவின் பேரார்வத் திட்டம் செயல்படும் அனைத்து சாத்தியங்களையும் அது இந்தியப் பெருங்கடலில் நிகழ்த்தத் தொடங்கியுள்ளது. மாலத்தீவில் அண்மைக்காலமாக மேலோங்கும் இந்திய வெறுப்பு நமக்கு மறைமுகமாகப் பாடம் ஒன்றைச் சொல்கிறது. அது மட்டுமல்லாமல், இலங்கையின் தற்போதைய பொருளாதார படு வீழ்ச்சியையும், அதன் உள் நாட்டு நிலவரத்தையும், வெளி நாட்டைக் கடன்களையும் நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா?
ஆனால், ‘கடன் வலை’ வீசி நாடுகளை வசப்படுத்துகிறது என்ற விமர்சனத்தை சீனா வன்மையாக மறுக்கிறது. ‘Debt Justice’, தன் அறிக்கையில் 49 ஆப்பிரிக அரசுகளின் மொத்தக் கடனான $696 பில்லியனில் 35% சீனாவைத் தவிர்த்த மற்ற நாடுகளின் தனி நிறுவனங்கள் வழங்கியுள்ள கடன் என்றும், 12% மட்டுமே சீனா வழங்கியுள்ள கடன் என்றும் தெரிவித்துள்ளது. புள்ளியியலை எடுத்துக் கொண்டாலும் (புள்ளியியலுக்குப் பச்சைப் பொய்கள் என்ற புகழும் உண்டு!) சீனா எந்தெந்த வகைகளில் கடன் வழங்குகிறது, அதற்கு ஈடாக எதைக் கேட்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமானது.
‘நவீன காலனியாதிக்கம்’ என்றே சீனாவின் அயல் நாட்டுக் கடனுதவி திட்டத்தை அறிஞர்கள் சொல்கிறார்கள். வாணிபம், நேரடி முதலீடு, கடன் என்ற மூன்று வகைகளில் அனைத்து நாடுகளும் சர்வதேச சந்தையில் செயல்படுகின்றன. ஆனால், பல நாட்டு ஒப்பந்தங்களிலுள்ள நிபந்தனைகள் வெளிப்படையாக இருக்க, சீனாவின் பல ஒப்பந்தங்கள் இணை அடமானத்தைக் கோருகின்றன. கடனிலிருந்து மீட்பு கோரும் நாடுகளின் சொத்தினை அடமான உரிமையுள்ள சீனா தன் பங்கிற்கு எடுத்துக் கொண்ட பிறகே மற்ற நாடுகளுக்கு ஏதேனும் எஞ்சும். இது பெரும்பாலும் ஊகத்தின் அடிப்படையில் வைக்கப்படும் கருத்து என்றாலும், சீனாவுடனான கடன் ஒப்பந்தப் பிரதிகள் ‘இரகசியக் காப்பு’ விதிகள் உள்ளவை; கடனைத் திருப்பிச் செலுத்தும் வகைமைகளும் பெரும்பாலும் சர்வதேச வணிக ஒப்பந்தத்தை ஒத்து இருப்பதில்லை.
மிகப் பெரிய பொருளாதாரச் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா $3.5 பில்லியன் உதவிகளை வழங்கியிருக்க, யார் அதிபராக இருந்தாலும், உற்பத்தி, கட்டுமானத் துறைகளில் தன் முதலீட்டையும், கடனையும் வழங்கி, தன் பொருட்களை அதிகளவில் சந்தைப்படுத்தும் சீனா $74 மில்லியன் மான்யம் மட்டுமே தந்துள்ளது! இதை இலங்கையில் சீனாவின் முதலீட்டான ‘ஹாம்பாந்தோடா துறைமுகக்’ (Hambantota International port) கட்டுமானத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். மியான்மரில் ஜூலை 3-ம் தேதி, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி (Wang Yi) வங்காளக் கடல் பகுதியில் துறைமுகக் கட்டுமானங்களுக்கு போட்டுள்ள ஒப்பந்தங்கள், பாகிஸ்தானில் அது மிகச் சமீபத்தில் நடத்திய இரு நாட்டுக் கடற்படை இராணுவ இணைப் பயிற்சிகள் போன்றவை அதன் நோக்கம் முதலீடுகள் மட்டுமல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.
இந்திய சீனா எல்லைக் கட்டுப்பாட்டு (Line of Actual Control) மேலைப் பகுதியில், தொலை தூரம் தாக்கும் ராக்கெட்டுகள், மேம்படுத்தப்பட்ட வானப் பாதுகாப்பு அமைப்புகள், சண்டை விமானங்கள் போன்றவற்றை, கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனா குவித்து வருகிறது. 20,000 படை வீர்ர்கள் தங்கும் பகுதியாக 2020-ல் இருந்த இந்திய – சீனா லடாக் பகுதி எல்லையில், இன்று 1,20,000 சீன வீரர்கள் தேவையான வசதிகளுடன் தங்க அது கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்ய சக்தி மற்றும் சிறிய நீராற்றல் மின்சக்தி நிலையங்களை எல் எ சி (LAC) முழுதும் கட்டியிருக்கிறது. அருணாச பிரதேசத்திற்கு 50 கி மீ தொலைவில் தன் படைக்கலன்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. இவை அனைத்தும், நாம் நம் உள் நாட்டில், நம் நாட்டின் நலனிற்காக நாம் எடுத்த, முற்றிலும் நம் ஆட்சியைச் சேர்ந்த காஷ்மீரில் விதி எண் 370ஐ செயலற்றதாக நாம் செய்ததற்கு சீனா காட்டும் அச்சுறுத்தலும், எதிர்ப்புமாகும். அத்தகைய சீனா, நம் நாட்டின் பிரதேசத்தை நியாயமற்ற போரில் கைபற்றி இன்றுவரை அதைத் திருப்பித் தராத சீனா, தலாய்லாமாவிற்கு பாரதப் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதைக் கண்டிக்கும் சீனா, நம் எல்லைகளைச் சுற்றி பாகிஸ்தானிற்காக உளவறியும் சீனா, ஆப்பிரிகாவில், தன் நலன் மட்டுமே பேணாது என்பதை உலகம் அறிய வேண்டும்.
சீனாவின் உணவுத் தேவைக்காக அது ஆப்பிரிக நாடுகளுடன் வணிக ஒப்பந்தகள் செய்துள்ளது. அந்த நாடுகளும் இந்த ஏற்றுமதிகளைச் சார்ந்துதான் தங்கள் கடனை- அதில் பெரும்பான்மை சீனா வழங்கியுள்ள கடன்கள்- திருப்பிச் செலுத்த முடியும். கென்யாவின் ககூசி பண்ணைக் குழுமம், சீனாவின் வணிகச் சந்தையை மையப்படுத்தி, சீனாவின் ஆர்வத்தின் பேரில் அவகாடோ பழங்களை ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணியை ஈட்டும் எண்ணத்தில் இருந்தது. இதன் மூலமாக வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓரளவிற்காவது குறையும் என்று கென்ய அரசு எதிர்பார்த்தது. 10 அவகாடோ ஏற்றுமதி நிறுவனங்கள் கென்யாவின் தீவிர பரிசோதனைகளுக்கு உட்பட்டு ஏற்றுமதிக்கான அனுமதி பெற்ற நிலையில் சீனா, தான் அவைகளைத் தணிக்கை செய்து ஒப்புதல் அளித்த பின்னரே இறக்குமதி செய்வோம் என்று சொல்லிவிட்டது. அது பழப் பண்ணைகளைப் பார்வையிடும், கிடங்குகளை சோதனை செய்யும், பூச்சி மருந்துகளை ஆராயும், (ஆனால், வூகான் கிருமியைப் பற்றி எவரும் எதுவும் சொல்லக் கூடாது) சுருக்கமாகச் சொன்னால், விதையிலிருந்து, நிலம், நீர், பூச்சிக் கொல்லி, தரம், கிடங்கு, பெட்டகங்கள் அனைத்தையும் சோதிக்கும். சில ஆப்பிரிக பழ ஏற்றுமதியாளர்கள், இதற்கு பத்தாண்டுகள் ஆகலாமென தங்களின் முன் அனுபவச் சான்றைக் கொண்டு சொல்கிறார்கள். பெய்ஜிங் பழ இறக்குமதியை ஊக்குவித்தாலும், அதன் சிவப்பு நாடா வழிமுறைகளும், விரிந்த வர்த்தக ஒப்பந்தங்களில் அதற்கு நாட்டமில்லாததும் முட்டுக்கட்டைகளாகி ஆப்பிரிகாவை அல்லாட வைக்கிறது. கென்யாவிற்கும், சீனாவிற்குமிடையேயான வர்த்தகத்தில் அதன் வணிகக் கணக்கில் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருகிறது.. சீனக் கடனுக்கு வட்டி மற்றும் ஆண்டுத் தவணை செலுத்த குறைந்தபட்சம் $630 மில்லியன் வேண்டும் கென்யாவிற்கு. அந்தத் தொகை அதன் சீன ஏற்றுமதியின் மூன்று பங்கு அளவு என்றால் அந்த நாட்டின் நிலை என்னவாகும்?
பல ஆப்பிரிக தேசங்கள் சீனக்கடன் கட்டுப்படியாகாதென்றும், ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றும் சொல்கின்றன. அதை ஏற்றுக் கொண்ட சீன அதிபர் எதிர் வரும் மூன்றாண்டுகளில் ஆப்பிரிகாவிலிருந்து $300 பில்லியன் மதிப்பில் இறக்குமதிகள் செய்யப்படும் என்றும், 2035லிருந்து ஆண்டுதோறும் $300 பில்லியன் மதிப்பிற்கு அது அதிகரிக்கும் என்றும் சொல்லியுள்ளார். ஆப்பிரிகாவில் உலகின் விவசாய நிலங்கள் 60% இருக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தியில், அதன் ஏற்றுமதியில், அதன் பொருளாதாரம் மேம்படும் என்பதும் உண்மை. மின்சக்தி நிலையங்கள், போக்குவரத்துச் சாலைகள், துறைமுகங்கள் போன்ற கட்டுமானத் திட்டங்களில் சீனா, ஆப்பிரிகாவில் முதலீடு செய்துள்ளது- நேரடி அன்னிய முதலீடுகள், கடன்கள், அதன் அரசுத் துறை வங்கிகள் வழங்கும் கடன்கள், தனி முதலீட்டாளர்கள் என்று பல்முனைக் கடன்கள். 2021ல்ஆப்பிரிக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி $148 பில்லியன், அதன் இறக்குமதி $106 பில்லியன். அதிலும் வளம் நிறந்த ஐந்து ஆப்பிரிக நாடுகளான அங்கோலா, காங்கோ ரிபப்ளிக்,, டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோ, தென் ஆப்பிரிகா, ஜாம்பியா ஆகியவற்றுடன் பெரும்பான்மையான $75 பில்லியன் வணிகம் நடந்திருக்கிறது. நைஜீரியாவோ $23 பில்லியன் இறக்குமதி செய்திருக்கிறது. $44 மில்லியன் ஏற்றுமதி செய்து, $1 பில்லியன் இறக்குமதி செய்துள்ள உகாண்டாவின் பிரச்சனைகள் என்று தீரும்? இதில் சிந்திக்க வேண்டிய சிறப்புச் செய்தி ஒன்று உண்டு- 2020ல் $160 பில்லியன் மதிப்பிற்கு உணவு மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை சீனா இறக்குமதி செய்துள்ளது- அதில் ஆப்பிரிகாவின் பங்கு 2.6% மட்டுமே!
இந்தியா- சீனா வர்த்தக நிலையும் மெச்சும் தரத்தில் இல்லை. 2022 முதல் அரையாண்டில் நாம் $57.5 பில்லியன் இறக்குமதி செய்திருக்கிறோம்; நம் ஏற்றுமதி $9.6 பில்லியன் தான்.
அரிய வகை பூமிக் கனிமங்களுக்காக மடகாஸ்கர், மியான்மர், ஆஃப்கனிஸ்தான், க்ரீன்லேன்ட் ஆகியவற்றுடன் வணிகப் பேச்சு வார்த்தைகளில் சீனா இறங்கியுள்ளது. அதன் நிலத்திலேயே 44 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் 13 அரிய தாதுக்களின் கையிருப்பு உள்ளது. இந்தக் கனிமங்களை அகழ்ந்து எடுக்க தலை சிறந்த தொழில் நுட்பமும் அதனிடம் உள்ளது. ஆனால். கையிருப்பு குறைவதால்தான் அது மடகாஸ்கர் போன்ற மேலே குறிப்பிட்ட நாடுகளை முன்னெச்சரிக்கையுடன் அணுகியுள்ளது.
இந்தியாவிடம் இத்தகைய கனிமங்கள் இருக்கின்றன. ஐ2யு2 இதில் முதலீடு செய்தால் நலமே; தொழில் நுட்பம் வளர வேண்டும். (மெடலார்ஜி, கெமிகல் என்சினீரிங், மைனிங் போன்ற துறைகளை இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களா என ஐயமாக இருக்கிறது.) பெருந்தொற்றுக் காலம் தற்சார்பின் தேவையை உணர்த்தியது. நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
சீனாவின் வீட்டுக் கட்டுமானத் துறை மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதில் கடன்கள் 9.2 ட்ரில்லியன் எனப்படுகிறது. 86 நகரங்களில் ஏறத்தாழ 260 கட்டுமானங்கள் தேங்கியுள்ளன. வீடுகளை குறிப்பிட்ட நேரத்தில் ஒப்படைக்காததால் கடனாளிகள் மாதத் தவணைகளை நிறுத்தியுள்ளனர். விளைவு வங்கிகளில் இருப்புக் கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. (லேமென் சப் ப்ரைம் கலவரத்தை ஒத்துள்ள நிலை) அதற்காகப் போராட்டம் செய்த வங்கி வாடிக்கையாளர்களை அது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. வழக்கம் போல் அதன் நிதி நிலை வெளிப்படையாகத் தெரியப் போவதில்லை.
மாபெரும் பொருளாதார வலையைப் பின்னியுள்ளது சீனா. சிலந்தி வலையின் பூச்சிகள் போலவோ, நெருப்பின் கவர்ச்சியால் வீழும் பூச்சிகள் போலவோ நாம் ஆகிவிடக் கூடாது. தன் மக்களையே உளவு பார்க்கும் சீனா, ஹாங்காங்கில் அடக்குமுறையை ஏவியுள்ள நாடு, தைவானை அச்சுறுத்தும் தேசம், இராணுவ அராஜக நாடான மியான்மருடன் நட்பு பூணும் தந்திரம், தற்சமயம் இலங்கையை சற்று எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் மனோபாவம், நம்முடனான உரசல்கள், அனைத்தும் கனன்றுகொண்டே இருக்கும் செந்தணல்.
“வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள் போல் பகைவர் தொடர்பு”- திருக்குறள்.
Ref:https://www.reuters.com/world/africa/africas-dream-feedingchina-hits-hard-reality-2022-06-28; WION news The Hindu and other media.