அகர்ஷனா கவிதைகள்

கடலுக்கடியில் பூனை

பாதம் அழுத்தாமல் அடியெடுத்து
பாம்பு வால் ஆட்டி
நிமிர்ந்த காதுகளை கூர் சீவி
கெண்டைக் காலில் வந்துரசுகிறது
செங்காவி வண்ணம் என்னுள்
பாய்ச்ச முயற்சிக்கும் முனைப்பில்.
கண்டும் காணாமல் சென்று
கதவடைத்து விடுவதில் பெரும் நிம்மதி
பாலூற்றும் வேலையில்லை
மடி தூக்கி தலை தடவ அவசியமில்லை
பிரியத்தோணாத நாளை உருவாக்கி
மனச்சுதந்திரம் கெடப்போவதில்லை
எடையால் மூழ்கும் படகிற்கு
துடுப்பும் சுமை.


விலகிச் செல்லுதல்

மூடிய விரல்களுக்குள் வெறுமை
கொஞ்சம் ஈரம்
ரசவாத உவர்ப்பின் வீச்சம்
மென்சூடு கொள்ளும் உடல்
கேட்டால் கூசும் வார்த்தைகள்
எல்லாமும் கொள்ளாத
நாளொன்றினைக் கடந்துவிட்டால் போதும்
சிறுவெள்ளப் புலனூடே
அழித்துச் செல்லும் மீதத்தை.


வெட்டப்பட்ட தலை

எத்திசை நோக்கி கண்களென
எவருக்கும் புகாரில்லை
கூந்தல் நீளத்தில்
எவருக்கும் அக்கறையில்லை
துல்லிய சீவல் பற்றி
எவருக்கும் வியப்பில்லை
மீதமுள்ளதை இணைத்து
முழுதாக்கிவிடக் காட்டும் முனைப்பில்
பஞ்சர் ஒட்டப்பட்ட டயரை
மீண்டும் பொருத்தும் சாயல்.


மூழ்குதல் இனிது

காகித மேகத்தினூடே
மின்னலை எதிர்பார்த்து
மேல்நோக்கும் கணத்தில்
வீசிய புயலொன்றை
காற்றென விளிக்கக்கூடாது
சற்றேனும் பலமாய் மோதி
வெளிச்சம் வந்துவிடக்கூடும்
எக்காகித மேகமும் நிஜத்திற்கு
ஒப்பில்லைதான்
கணுக்காலளவு நீரில் மூழ்கிச் சாதல்
சிலருக்கே வாய்த்த வரம்.


மத்தகத் தீ

சங்கொலிக்கெல்லாம் பயப்படாது
காய்ந்த சருகெல்லாம் சரசரக்க
துரத்தும் நேரம் மயிர்க்கால் நிற்கும்
தப்பிக்கும் எல்லாத் திட்டமும்
தவிடாகும் எதுவும் பொடியாகும்
கூட்டமொன்றை கலைத்துவிட்டு
உயிர்ப்பிழைத்தல் வீண்முயற்சி
நாசமென்பதை நடந்த மறுநாளில்
வாய்பொத்தி கண்டுகொள்ளலாம்
கொம்பன் என்பதெல்லாம் வெற்றுப் பெயர்
பலமும் உருவமுமே பிரதானம்
கரும்பைக் காக்கும் ஒரே வழி
தீயிட்டு அழிப்பதுதான்
மிஞ்சியவை இலாபம் மிஞ்சாதவை தர்மம்
சுடர்கொண்டு எரியும் தலைக்கு
சூட்சுமங்கள் புரியாது
அழிக்கும் அழிக்கும் பெருங்கரும் தீ.


முற்றத்து விண்கலம்

பள்ளிப் போட்டி
அறிவியல் தலைப்பு
தெர்மோகோல் விண்கலம்
முற்றத்தில் தயாராய் உள்ளது
நாளை ஒப்படைக்க வேண்டும்
நள்ளிரவு மழையின் பெருங்காற்றில்
பலத்த சேதம் கண்டது
வானிலை சரியில்லாத காரணத்தால்
இன்னொரு நாள் ஏவ வழியுண்டோ!


கேத பீமம்

நிரம்பாத வயிற்றுக்கு தீனியிட
தீனியாய்ச் செல்கிறான் மந்தன்
வண்டிக்கட்டி பானை அடுக்கும்
கவளங்கவளமாய் சோற்றுருண்டைகளும்
ஏகசக்கர குகை முன்னே அறுசுவை வாசம்
கொண்டு வந்த குவியலை தன்போக்கில்
பிரித்துண்கிறான் குந்திக்கு இரண்டான்
வாசம் கண்டு வருகிறான் பகா எனும் மகா
தன் பங்கென வந்ததை எடுத்துண்பவனை
எத்தினான் சூரன்; அசையவில்லை பீமன்
கையிலுள்ள கலையத்தை பிடுங்கி
தான் குடித்தான்; இடி முழங்கச் சிரித்து
அடுத்தொன்றை எடுத்தான் பகாசுரன்
வந்ததே கோபம் பீமனுக்கு
களிறு மதக் கோபத்தோடு எழுந்தான்
இரு மலைகள் ஒன்றையொன்று நோக்கி
ஒவ்வொன்றும் நெருப்பு உமிழாக்குறை
தோளோடு தோள்முட்டி குலைவித்து
காதவியும் இடிகண்டது ஏகசக்கரம்
குந்தி சிரித்துக்கொண்டாள்

வண்டியோடும் பானைகளோடும்
திரும்பினான் வயிறு நிரம்பிய மந்தன்
மூத்தவனைத் தவிர மூவரும் சிரித்தனர்
காத்தவனென ஊர் கொண்டாடியது
கும்பி நிறைக்கும் இவ்வாய்ப்பு இனி
கிடைக்காதென நாளையும் மற்றுமொரு
பகாசுர வதம் வேண்டினான் பீமன்
தன் அப்பன் வாயுவிடம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.