தன்னறம்

நொடிகள் அங்கு யுகங்களாகும் கனவுலகம் ஒன்றிலிருந்து மீண்டு என் வாகனத்தினுள் விழுந்தது போல இருந்தது. நான் என் நினைவுகளிலிருந்து சட்டென அறுபட்டுத் திரும்பியிருந்தது. மனம் விலகியிருந்தும் பழக்கப்பட்ட சாலைகள் என்பதால் என் உள்ளுணர்வே வாகனத்தை இதுவரை செலுத்தி வந்திருக்கிறது என்று உணர்ந்த தருணம், சுதாரித்து நிமிர்ந்து அமர்ந்தேன். என் வாகனம் ஸ்ப்ரிங் போலிவார்டு சந்திப்பிலிருந்த டிராபிக் சிக்னல் சிகப்புக்குக் கட்டுப்பட்டு நின்றிருந்தது. என் அருகில் நின்றிருந்த வாகனத்திலிருந்தவள் உரக்க யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். அவளின் சிரிப்பிலிருந்த அந்தக் கூரிய ஒலிதான் என்னை மீட்டதோ என்ற எண்ணம் வந்து சென்றது. சுற்றியிருந்த மரங்களிலிருந்து அதன் நிறம் மாறிய இலைகள் உதிரத்தொடங்கியிருந்தன. உதிர்ந்த பின்னும் காற்று இலைகளை அங்குமிங்கும் சாலையில் அலைக்கழித்துக்கொண்டிருக்க, மரத்தில் மீதமிருந்த இலைகள் படபடத்துக்கொண்டிருந்தன. வலது புறத்திலிருந்து வாகனங்கள் யாரோ உந்தித்தள்ளியதெனச் சட்டென வேகமெடுத்து இடதுபுறத்தில் மரங்களின் ஊடே மறைந்துகொண்டிருந்தன. அவ்வாகனங்கள் மறையும் இடத்திலிருந்த மரத்தடியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் “உதவி” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை முன்னும் பின்னுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். உடல் பருத்து தலைமயிர்கள் கலைந்து அவள் தோளிலிருந்த ஒரு கனமான பை முழங்கால் வரை நீண்டிருந்தது. அவளுக்குப் பின்புறம் ஒரு சிறு பெண் மர நிழலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை மடியில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என் முன்னால் நின்றிருந்த ஒரு கனரக வாகனத்திலிருந்து சட்டென வெளியேறிய கண்ணுக்குத் தெரியாத வெப்ப புகை ஏற்படுத்திய கானல் நீரில் அவர்கள் இருவரும் நெளிந்து நீரின் ஆழத்திற்குச் செல்வதுபோல இருந்தது. முன்னால் இருந்த அனைத்து வாகனங்களும் நகர நானும் முன்னகர்ந்து விரைந்தேன். எனக்குள் அவர்கள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றுகொண்டே இருந்தார்கள்.

“சிங் பிரதர்ஸ்” கடை திறப்பதற்கு இன்னும் சற்று நேரம் எடுக்கும் என்பதால், நான் வாகனத்திலிருந்து இறங்காமல் கடையின் எதிரில் இருக்கும் ஒரு நிறுத்தத்தில் நிறுத்தியிருந்தேன். இன்று வார விடுமுறை. கடையின் பின்புறம் சரக்குகள் வந்து இறங்கிக்கொண்டிருக்கும். அவ்வழியாக என்னால் உள்ளே செல்ல இயலும். இருந்தாலும் சற்று நேரம் காத்திருந்து முன்பக்கம் வழியாகச் செல்லலாம் என்று அமர்ந்திருந்தேன். இங்கு அமெரிக்காவில் இந்தியர்களின் மளிகை மற்றும் பலசரக்குகளின் தேவையை “சிங் பிரதர்ஸ்” கடை தான் தீர்த்துவைக்கிறது. இந்தியாவில் மிக அரிதாகவே கிடைக்கும் பொருட்கள் கூட அமெரிக்காவில் இக்கடையில் கிடைக்கும். விலைகளைப் பற்றி இங்கு இருக்கும் இந்தியர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் இருப்பின் வியப்பு இன்றும் மாறவில்லை. இங்கு இருக்கும் இந்தியக் கடைகளுக்கும் அதுதான் மூலதனம். அந்த வியப்பு கொஞ்சம் கூட குறையாமல் இருக்க அனைத்தையும் இங்குக் கொண்டு குவித்திருந்தார்கள். அந்த கடையையொட்டி இருந்த மற்ற கடைகளில் ஒரு சில மட்டுமே அந்நேரத்தில் திறந்திருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் இந்திய முகங்களால் நிறைந்து இந்த இடம் வேறு மனநிலைக்கு மாற்றிவிடும். என் அருகில் நிறுத்தியிருந்த மற்றொரு வாகனத்திலிருந்தவனின் சிகரெட் புகை ஒரு பூனையைப் போல என் வாகனத்துக்குள் நுழைந்திருக்க, நான் என் வாகனத்தின் கண்ணாடியை மேலிழுத்து விட்டேன்.

சட்டென என் அடையாள அட்டை ஞாபகத்துக்கு வந்து டாஷ்போர்ட்டை திறக்க, அது மூச்சு முட்டி திணறி வெளியே வந்து விழுந்தது. “ஷான், சூப்பரவைசர்-சிங் பிரதர்ஸ்” என்று இருந்த அந்த அடையாள அட்டையில் என் முகம் தெளிவற்று முன்பைவிட பல கீறல்களுடன் இருந்தது. நான் எடுத்து என் சட்டைப் பையினுள் வைத்துக்கொண்டேன். “ஷான்” என்ற அந்த பெயரை எனக்குள் சொல்லிக்கொண்டேன். அந்த பெயர் இன்றும் என்னுள் பதிவாகாமல் அந்நியமாகவே இருந்தது. என் வேலை நேரம் தவிர வேறு நேரத்தில் என்னை “ஷான்” என்று அழைத்தால் சட்டென என்னால் உருமாற முடியாமல் சற்று தவிப்பேன். அமெரிக்காவிற்கு வந்த இந்த இரண்டு வருடத்தில் பெயரளவில் கூட என்னால் மாறமுடியவில்லை. தேவியிடம் இதைச் சொன்னால் சண்டை தான் வரும். லோகமா தேவியை அவள் லோகா என்று எளிதாக அவள் அலுவலகத்திற்காக மாற்றிக்கொண்டாள். “ஆமாம், பெயரில் என்ன இருக்கிறது. அது வெறும் ஒலிகளின் கோர்வைதானே” என்பாள். ஆனால் எனக்கு அவள் சிறுவயதிலிருந்தே தேவிதான். அது எனக்குள் பல நினைவுகளை மீட்டெடுக்கக்கூடியது. கல்யாணமாகி அவளுக்குத் துணையாக இணை விசாவில் இங்கே அமெரிக்காவிற்கு வந்து ஒரு வருடம் வேலை என்று ஏதும் செய்யாமல், கொண்டுவந்திருந்த புத்தகங்களின் உலகத்திலிருந்தது ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. தேவி அலுவலகம் சென்றவுடன், யாரும் இல்லாத அந்த வீட்டில் எவ்வளவு நேரம் தான் மதியம் வீட்டிற்கு வந்து செல்லும் வெயிலுடன் பேசிக்கொண்டும், எங்கோ ஒலிக்கும் அந்த குருவியின் சத்தத்தையும் கேட்டுக்கொண்டிருப்பது. தேவியிடம் சொல்லி வேலை தேட ஆரம்பித்த போதுதான் அமெரிக்காவில் என்னைப்போன்று இணை விசாவில் வந்தவர்களுக்கு இங்கு வேலை செய்ய அனுமதி இல்லை என்ற சிக்கல் புரிந்தது. பின்பு விசாரித்ததில் அமெரிக்காவில் பிற நாட்டிலிருந்து வந்திருக்கும் பலபேருக்கு வேலை செய்ய அனுமதி இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கும் குறைந்த ஊதியத்தில் வேலை கொடுக்கும் சிலர் இருப்பதைக் கண்டுகொண்டேன். அது சட்டத்திற்குப் புறம்பானது தான் என்றாலும், அமெரிக்காவின் வளர்ச்சி இங்குப் பல நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களால் ஆனது என்பதை இங்கிருக்கும் அரசும் உணர்ந்ததால் மிகக் கடுமையாக நடந்துகொள்வதில்லை. மேலும் அமெரிக்கர்கள் கொண்டாட்டத்திற்காகவே சம்பாதிப்பவர்கள். அவர்களை அந்த மன நிலையின் உச்சத்திலேயே திளைத்து வைக்க வேண்டிய பல வேலைகளை இங்குக் குடியேறியவர்கள் தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அது தான் அவர்களுக்கு வாழ்வாதாரம். அமெரிக்காவில் வருமானம் இல்லாமல் வாழ முடியாது. பிச்சை எடுப்பது என்பதும் கூட பல காரணிகளால் மிகச் சிரமமான காரியம். அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது என்பது இறுதியின் உச்சம். எனக்குப் பணத்தின் தேவை இல்லாமல் இருந்தாலும் என்னால் தனியாக வீட்டில் இருப்பது ஒரு கட்டத்தில் சிரமமாக இருந்தது. ஒரு முறை தேவி “சிங் பிரதர்ஸ்” கடையில் வேலை செய்த இந்தியர் ஒருவரிடம் அவள் சிறு வயதில் சாப்பிட்ட “எலந்த வடையை” புரியவைக்க முயன்று தோல்வியுற்று என்னிடம் சொல்ல, நான் அக்கடையின் உரிமையாளர் அமரீந்தர் சிங்கிடம் ஹிந்தியில் பல உதாரணங்கள் சொல்லிப் புரியவைத்தேன். நான் அவருக்குப் புரியவைத்தது பிடித்துப்போய், அன்றிலிருந்து என்னிடம் நட்பாகப் பேச ஆரம்பித்து எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் உண்டானது. அம்ரீந்தரை இதற்கு முன்பு ஒரு சில முறை இக்கடைக்கு வரும்போது பார்த்திருக்கிறேன். வெள்ளை டர்பனும், கனிந்த முகத்தில் இருக்கும் வெண் தாடியும், புன்னகைக்கும் கண்களுமாகக் காலணி அணியாமல் கடையினுள் எங்கேனும் ஓரிடத்தில் தென்படுவார். முப்பது வருடத்திற்கு முன்பாகவே அமெரிக்காவில் குடியேறி, பல வியாபாரங்கள் செய்து இன்று நல்ல நிலையில் இருக்கும் அமரீந்தர் பொருளாதாரத்தில் கடைசி படியிலிருந்து உச்சத்திற்குச் சென்றவர் என்பதை அவரிடம் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டேன். அதுவே அவருக்கென ஒரு ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து அதை வியாபாரத்திலும் கடைப்பிடிப்பதால் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்திருந்தது. நாங்கள் எப்போது சந்தித்தாலும் எங்கள் உரையாடல்கள் பொதுவாக இந்தியா மற்றும் உலக வரலாறுகள் என நீண்டிருக்கும். அது எங்கள் இருவரையும் ஒரு புள்ளியில் வைத்தது. ஒரு நாள் நான் வீட்டில் வேலையின்றி தனியாக இருப்பதைப் பற்றிச் சொல்ல அவர் “சிங் பிரதர்ஸ்” கிளைகளுக்கு என்னை மேற்பார்வையாளர் ஆக்கினார். எனக்கு அது ஆச்சரியமாகவே இருந்தது. எனக்கு அதில் முன் அனுபவமில்லை என்று முதலில் நிராகரித்தேன். ஆனால், அவர் என்னை முயன்று பார்க்கச் சொன்னார். மூன்று நகரில் இருக்கும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களுடன் இணக்கமாகப் பேசி அவர்களிடமிருந்து என்னால் வேலை வாங்க முடியும் என்று என்னை அவர் நம்பினார்.

“எனக்குப் பின், என் நீட்சியாக அதே எண்ணங்களுடன் சிந்தனைகளுடன் கூடிய ஒருவன் இங்குச் சமன் செய்ய இருக்க வேண்டும். நீ அதற்குப் பொருத்தமானவன்”. என்றார்.

நான், “என்னால் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இந்த வேலை ஒரு பெரிய அனுபவமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது”, என்றேன்.

“புரிந்துகொள்வாய்”. என்றார்.

“அப்படியென்றால், நான் இந்த வேலையில் பக்குவமான நிலைக்கு வரும் வரை எனக்குச் சம்பளம் என்று ஏதும் வேண்டாம். என் நோக்கம் அதுவல்ல. அது என்னை உங்களுடன் சுதந்திரமாகப் பேசுவதற்கும், என் கருத்துக்களை உங்களிடம் பகிர்வதற்கும் தடையாக இருக்கும்”. என்று கூறினேன்.

அம்ரீந்தருக்கு அது வியப்பாக இல்லை. ஒரு புன்னகையுடன் “சரி” என்றார்.

ஆரம்பத்தில் அவர்களின் வியாபார நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது சற்று கடினமாக இருந்தது. இது போன்ற பல கிளைகள் உள்ள நிறுவனங்களில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் “ஒரே மாதிரியான தன்மையை” கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு கிளையும் அங்கு உள்ள சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொண்டதால் சிக்கலான ஒரு அமைப்பாக இருந்தது. அமரீந்தர் அனைத்தையும் ஒரு உள்ளுணர்வோடு நிர்வகித்துக்கொண்டிருந்தார். ஆனாலும், அதனால் பெரிய தவறுகள் ஏதும் நடக்காமலிருந்தது வியப்பாகவே இருந்தது. அங்கு வேலை செய்பவர்களுடன் பேசியதிலிருந்து பலர் அவர்கள் நாட்டில் நடக்கும் உள் நாட்டுப் பிரச்சனைகளால், கலவரங்களால் அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அமெரிக்காவுக்கு குடியேறியவர்களாக இருந்தனர். சிலருக்கு முறையான குடியுரிமைகூட இல்லை. அவர்களை வேலைக்கு அமர்த்தியது சட்ட ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும், அம்ரீந்தரின் உள்நோக்கம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. சம்பள மட்டுமில்லாமல் அமரீந்தர் கொடுத்த நம்பிக்கையும், மரியாதையும் அவர்களை நீண்ட நாள் அங்கேயே வேலைப்பார்க்க வைத்தது. எனக்கும் அந்த சூழ்நிலை பல மொழிகள் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் மெக்ஸிகன் நாட்டை சேர்ந்தவர்கள். பலருக்கு ஆங்கிலம் தெரியாமல் இருந்தது. அவர்களுடன் ஸ்பானிஷ் மொழியில் பேசினால் மட்டுமே அவர்களிடமிருந்து எளிதாக வேலை வாங்க முடியும் என்பதால் ஓரளவுக்குப் பேசி, உரையாடும் அளவில் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொண்டேன்.

இன்று ரிச்மண்ட் நகரில் இருக்கும் கிளையில் வேலை செய்வதற்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக வந்திருந்தேன். பெரும் தொற்றுக்குப் பிறகு கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பலரும் வரவில்லை என்பதால், ஆள் பற்றாக்குறை ஏற்பட நாங்கள் புது ஆட்களைக் கண்டுபிடித்து வேலைக்கு அமர்த்திக்கொண்டிருந்தோம். இதில் தேஜ்பால் பல கடுமையான நிபந்தனைகள் போட்டு ஆட்களை நிராகரித்துக் கொண்டிருந்தான். தேஜ்பால் அம்ரீந்தர்சிங்கின் மருமகன். மூன்று மாதத்திற்கு முன்புதான் “சிங் பிரதர்ஸ்” நிறுவனத்தின் மேலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அமரீந்தர் பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டதால் உடல் நலம் சரியில்லாமல் போக அவர் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் மொத்த பொறுப்பும் தேஜ்பாலுக்கு வந்து சேர்ந்தது. எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் தேஜ்பால் அம்ரீந்தருக்கு நேர் எதிராக இருந்தான்.

சிறிது நேரத்தில் கடை திறந்திருக்க நான் உள்ளே சென்றேன். தேஜ்பால் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கர்களையும் கவர கடையின் அமைப்பையும் விற்பனை பிரிவையும் மாற்றி அமைத்திருந்தான். கடையில் மிகக் குறைவான ஆட்களே வேலை செய்துகொண்டிருந்தார்கள். நான் விற்பனை பிரிவைத் தாண்டி செல்லும் வழியில் அங்கே பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த ஊர்வியை பார்த்து நின்றேன்.

“கடை புதிதுபோல பளபளப்பாக இருக்கிறது”, என்றேன் அவளிடம்.

அவள் குரல் வந்த திசை நோக்கித் திரும்பி என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தாள். பின்பு, “அதற்கு நான் மிகக் கடினமாக, அதிக நேரம் உழைக்க வேண்டியுள்ளது.”, என்றாள். ஊர்வி இந்த கிளையில் வெகு நாட்களாக வேலை செய்துகொண்டிருப்பவள். எப்படியும் அவளுக்கு ஐம்பது வயதிருக்கும். அவளின் மகளும் மகனும் பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், அவள் இந்த வேலையை விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் சிரித்துக்கொண்டே, அவளின் உடல் நலனைப் பற்றி விசாரித்தேன். அவள் அதனைக் காதில் வாங்காமல் தேஜ்பால் பற்றி நிறைய குறைகளை அடுக்கிக்கொண்டே சென்றாள். அமரீந்தர் சிங்கிக்கிற்கு பிறகு வேலை எப்படி கடுமையாக மாறிவிட்டது என்பதைப் பற்றிச் சொன்னாள். அவள் என்னிடம் கொட்டித் தீர்ப்பதை வேறு எங்கும் கசியாமல் எனக்குள்ளே நிரப்பி வைத்துக்கொள்ளத்தான் முடியும். என் நிலையில் இதனை தேஜ்பாலிடம் கேட்க முடியாது.

நான் அவளிடம் விடைபெற்று ஓய்வறைக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது தேஜ்பால் அவன் அறையில் அமர்ந்திருந்தான்.

நான் அவன் அறையின் கண்ணாடிக் கதவுகள் வழியே கை காட்ட அவன் என்னை உள்ளே வரச் சொன்னான். நான் உள் சென்று அமர்ந்ததும் “எனக்கு முன்பே நீ இங்கு வந்திருப்பாய் என்று எதிர்பார்த்தேன்”, என்றான்.

“நான் வந்துவிட்டேன். கடை திறக்காததால், வெளியே அமர்ந்திருந்தேன்”, என்றேன்.

அவன் தீவிரமாக மேசையின் மீதிருந்த மடிக்கணினியைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அதனை என்னிடம் திருப்பி, “எல்லா இடத்திலேயும் இப்ப கேமரா இருக்கு” என்று என்னிடம் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டான். அதில் கடையின் வெவ்வேறு பகுதிகளில் ஓரிடத்தை உற்று நோக்கியிருக்கும் காமெராவின் காணொளி சிறு சிறு சதுரமாகத் திரையில் தெரிந்தது. ஒரு சதுர கட்டத்துக்குள் ஊர்வி அடைபட்டிருந்தாள்.

நான், “எதற்கு இவையெல்லாம்? கடையில் ஏதேனும் திருட்டுப்போகிறதா?”, என்று கேட்டேன்.

அவன் “இல்லை, இது வேலை ஒழுங்காகச் செய்கிறார்களா? என்று கண்காணிக்க”, என்றான்.

“அமரீந்தர் சிங் அதற்கு வேறு ஒன்றை அவர்களிடம் வைத்திருந்தார்”, என்றேன்.

நான் சொன்னது அவனுக்குப் புரியாமல் என்னைப் பார்த்தான். நான் விளக்கம் தராமல் தவிர்த்தேன்.

அவன், “ப்ளூமிங்டன் கிளையில் இருக்கும் நம் கடையில் காலியாக இருக்கும் மேனேஜர் வேலைக்குப் பத்து பேர் அப்ளை செய்திருக்கிறார்கள். அவர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து இங்கு வரச் சொல்லியிருக்கிறேன். அவர்களுடன் பேசுவோம்” என்றான்.

“சரி, அவர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா?, எனக் கேட்டேன்.

“ஆம், ஒவ்வொருவராக உள்ளே வரச் சொல்கிறேன்”, என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

ஒரு வேலைக்குப் பத்து பேர் விண்ணப்பித்திருப்பது வியப்பாக இருந்தது. அதுவும் இங்குத் தரும் சம்பளம் மற்ற வேலைகளை விட மிகக் குறைவு. இந்த பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வருமானமின்றி இருந்த பல குடும்பங்களுக்கு அரசு மானியத்தொகை கொடுத்திருந்தாலும், அது அமெரிக்காவில் முறையாகக் குடியேறியவர்களுக்கு மட்டும்தான் கிடைத்தது. பக்கத்து நாடுகளிலிருந்து முறையாக விண்ணப்பிக்காமல் பிழைப்புக்காக இங்குக் குடியேறியவர்களுக்கு அரசு தந்த மானியத்தொகை கிடைக்கவில்லை. பலர் வேலை இல்லாமல் வருமானமில்லாமல் தங்கியிருந்த வீடுகளுக்கு வாடகை கொடுக்க இயலாமல் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்ட பலருக்கு பெருந்தொற்று வந்து தடுப்பூசி போடும் இடத்தில் தாங்கள் முறையாகப் பதிவுசெய்யாமல் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்காகத் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளாமல் இறந்துபோனதைக் கேட்டபோது வருத்தமாக இருந்தது.

தேஜ்பால் ஒருவருடன் அறையினுள் நுழைய நான் என் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தேன். சிறிது நேரத்தில் தேஜ்பாலும் நானும் அந்த இருவரிடமும் பேசியதிலிருந்து, எனக்கு ஓரளவு இரண்டாவதாக வந்த நபரைத் தேர்வு செய்யலாம் என்றும் அவரின் சில யோசனைகள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினேன். ஆனால் தேஜ்பால் அந்த இருவரையும் தேர்வு செய்யாமல் நிராகரித்தான். அந்த இரண்டாவது நபரைத் தேர்வு செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதை அவனிடமே நான் சொன்னேன். அவன் யோசிப்பதாகச் சொன்னாலும் அவன் உடல் மொழி வேறு ஒன்றைச் சொல்லியது.

நான் இங்கு வந்த வேலை முடிந்ததால் அவனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரானேன். நான் அந்த அறையை விட்டு வெளியே செல்ல கதவைத் திறந்த தருணம் தேஜ்பால் எதையோ கண்டுகொண்டவனாக என்னை மீண்டும் அழைத்தான்.

“ஷான், இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க முடியுமா? இந்த கடையில் ஸ்வீப்பர் வேலைக்கு ஒருத்தி விண்ணப்பித்திருக்கிறாள். அவள் மெக்சிகன் நாட்டை சேர்ந்தவள் என்று நினைக்கிறேன். நீதான் ஸ்பானிஷ் பேசுவாயே. அவளுடன் பேசுவதற்கு எனக்கு உதவுவாயா?” என்று கேட்டான்.

தேஜ்பாலின் இந்த வினோத தேர்வு முறை எனக்கு உவப்பானதாக இல்லாததால் எனக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. இருந்தாலும் அவனுக்கு என்னை விட்டால் வேறு ஆளில்லை. இன்று செய்யாவிட்டால் அவன் என்னை நாளையும் இங்கு வரச் சொல்லுவான் என்பதால் ஒத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் ஒரு பெண் நாங்கள் இருந்த அறைக்கு உள்ளே வந்தாள். சற்று குள்ளமாக, மெக்ஸிகன் நாட்டுப் பெண்களுக்கே உரிய உருண்டை முகமும், நீண்ட கூந்தலுடன் இருந்தாள்.

தேஜ்பால் அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் “ஆங்கிலம் தெரியுமா?” என்று அவளிடம் கேட்க அவள் முழித்தாள். அவன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டும் அவளிடம் எந்த விதமான பதிலும் வராததால் என்னைப் பார்த்தான்.

நான் புரிந்துகொண்டு ஸ்பானிஷ் மொழியில் “ஓலா” என்று கூற. அவள் சற்று திகைத்துச் சிரித்துக்கொண்டே “ஓலா” என்றாள்.

நான், “ஆங்கிலம் தெரியாதா?”, என ஸ்பானிஷ் மொழியில் கேட்க, அவள் “இல்லை” என்று சொன்னாள்.

நான் தேஜ்பாலிடம், “அவளுக்கு ஆங்கிலம் தெரியாதாம்” என்று சொன்னேன். அவன் முகம் சுளித்து, அவன் சொல்லும் கேள்விகளை அவளிடம் கேட்டுச் சொல்லச் சொன்னான்.

அவள் தன் பெயர் சில்வியா ஹில்டகோ என்றும், இந்த கடை இருக்கும் இடத்திலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில்தான் வசிப்பதாகச் சொன்னாள்.

“உன்னிடம் வாகனம் இருக்கிறதா? எப்படி இங்கு வருவாய்?”, எனக் கேட்டேன். அவள், இங்கு வருவதற்கு அவள் இருக்கும் இடத்திலிருந்து பேருந்து இருப்பதாகச் சொன்னாள்.

நான் அடுத்ததாய் என்ன கேள்வி கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் இடைவெளியில் அவள் கண்களில் இருந்த பயமும், அவளின் உடல் மொழியும் அவளுக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை எனக்குக் காட்டியது.

சட்டென நாங்கள் இருந்த அறைக்கதவு மெல்லத் திறக்க ஒரு சிறு பெண்ணின் பாதி முகம் மட்டும் மெல்ல எட்டிப்பார்த்தது. அப்பெண்ணின் கண்கள் என் எதிரில் அமர்ந்திருந்தவளை ஏக்கமாகப் பார்க்க, இவள் அப்பெண்ணை வெளியே போகச் சொல்லிக் கைகாட்டினாள்.

அவள் கேட்காமல் ஓடிவந்து இவளின் மடியில் வந்து அமர்ந்துகொள்ள, அவள் அப்பெண்ணை அங்கிருந்து போகச் சொல்லித் தள்ளினாள். அப்பெண் போகாமல் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான், “பரவாயில்லை” என்று சொன்னேன். அவள் சங்கடமாகச் சிரித்துக்கொண்டே “என்னுடைய பெண்”என்று சொன்னாள். நான் அந்த சிறுமியின் பெயரைக் கேட்க அவள் திரும்பி அவளின் அம்மாவின் மடியில் முகம் புதைத்துக்கொண்டாள். தேஜ்பால் என்ன நடக்கிறது என்பது போல என்னைப் பார்த்தான்.

நான், “எத்தனை குழந்தைகள் உனக்கு”, என்றேன்.

அவள், “எனக்கு மூன்று பெண் குழந்தைகள். பெரியவள் வேறு வேலை தேடிச் சென்றிருப்பதால் இவளைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இவளை என்னுடன் அழைத்துக்கொண்டு வரவேண்டியதாகி விட்டது”, என்றாள்.

தேஜ்பால் என்னிடம் என்ன என்று கேட்க நான் அவனிடம் சொன்னேன்.

அதற்குள் தேஜ்பால் ஏதோ முடிவு செய்தவனாக அவளை நிராகரிக்கச் சொல்லி ஒரு காகிதத்தில் எழுதி அவள் பார்க்காதவாறு என்னிடம் காட்டினான். நான் சற்று அதிர்ந்து என்ன காரணம் என்று தெரியாமல் திணறிக்கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன். பின்பு தேஜ்பாலிடம் எதற்காக அவளை நிராகரிக்க வேண்டும் என்பதுபோல அவனைப் பார்க்க, அவன் மீண்டும் அதே தாளில் “மூன்று குழந்தைகள் இருப்பதால், வேலைக்கு ஒழுங்காக வரமாட்டாள்” என்று எழுதி என்னிடம் கொடுத்தான்.

நான் அந்த சிறு பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது வாயில் ஒரு விரலை வைத்துக் கொண்டு அவள் அம்மாவை உரசி இடித்து பின்னுக்குத் தள்ளி விளையாடியது. நான் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் எழுந்து தேஜ்பாலை தனியாக அழைத்துச் சென்று, “அவளை வேலைக்கு எடுத்துக்கொள். நீ சொல்லும் காரணம் சரியில்லை.” என்று சொன்னேன்.

தேஜ்பால் இதை எதிர்பார்க்கவில்லை. சற்றுத் தடுமாறி, ” மூன்று குழந்தைகள் இருக்கிறது. அவள் எப்போது வேண்டுமென்றாலும் விடுமுறை எடுத்துக்கொண்டு வேலைக்கு வரமாட்டாள்.”, என்றான்.

“அதை இப்போதே ஏன் தீர்மானிக்கிறாய். கொஞ்ச நாள் வைத்திருந்து பார்ப்போம்.”, என்றேன்.

தேஜ்பால் சற்று யோசித்தவனாக, “அப்படியென்றால், அவள் முறையாகக் குடியுரிமை பெற்று இங்கு வேலை செய்வதற்கான அனுமதி இருக்கிறதா? என்று கேள். அப்படி இருக்கிறது என்று சொன்னால், நான் வேலைக்கு எடுத்துக்கொள்கிறேன்”, என்றான்.

இது ஒரு சிக்கலான தந்திரமான கேள்வி. இந்த கேள்விக்கான பதில் அவள் கண்களிலேயே அப்போது நான் பார்த்திருந்தேன். அவனிடம், “இதற்கான பதில் உனக்குத் தெரியும்”, என்றேன்.

அவன் “ஆம்” என்றான்.

“பின்பு ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறாய்?”

அவன் மௌனமாக இருந்தான். பின்பு “அதைப் பற்றி நீ கவலைப்படாதே. அவளிடம் முறையான குடியுரிமை இல்லையென்றால் முன்னர் நிர்ணயம் செய்த தொகையில் பாதி தான் சம்பளமாகக் கொடுக்க முடியும் என்று அவளிடம் சொல்”, என்றான்.

எனக்கு அப்போதுதான் புரிந்தது அவனுடைய நோக்கம். அவளுக்குச் சம்பளமாக நிர்ணயம் செய்திருப்பது மிகவும் குறைவு. மேலும் அதில் குறைக்கவே இவன் அந்த கேள்வியைக் கேட்கச் சொல்கிறான் என்று புரிந்தது. முறையாகக் குடியுரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் நிர்ணயம் செய்வதுதான் சம்பளம். இதற்கு முன் அமரீந்தர் கொடுத்த சம்பளம் அரசு நிர்ணயம் செய்ததைவிடச் சற்று குறைவு. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் அதைப் பாதியாக்குவது என்பது சுயநலம். நான் தேஜ்பால் சொன்னதை அவளிடம் சொன்னால், அவளின் நிலையில் ஒத்துக்கொள்ளக்கூடும். ஆனால், என்னால் செய்ய இயலாது. மனம் முழுவதும் ஏதோ ஒன்று வியாபித்துத் தடுத்தது.

நான் என்னை அமைதிப்படுத்திக்கொண்டேன். பின்பு, அவனிடம் என்னால் சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டு என் நாற்காலியில் வந்து அமர்ந்தேன். என் குரலிலிருந்த அந்த கடுமையை எவ்வளவு முயன்றும் என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனதை எண்ணிக்கொண்டேன். அவன் நான் அப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பின்பு அவன் அவளிடம் ஏதோ சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

அம்ரீந்தரிடம் இந்த விசயத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென்று முதலில் தோன்றியது. ஆனால் அவர் இருக்கும் இந்த நிலையில் இது அவரை மேலும் காயப்படுத்தும் என்று தோன்ற அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். மேலும் தேஜ்பாலின் வியாபார பார்வையில் அவனுக்கு அது சரியாக இருக்கலாம். அவனிடம் பொறுப்பைக் கொடுத்த பிறகு அவன் செய்வதுதான் முடிவு. ஆனால் அது தவறு என்று தெரிந்திருந்தும் என்னால் அதில் ஒத்துக்கொள்ள இயலவில்லை. இந்த மனநிலையில் இருக்கும் ஒருவனிடம் என்னால் வேலை செய்ய இயலாது என்று தோன்றியது. அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். அங்கேயே அமர்ந்து அம்ரீந்தருக்கு ஒரு கடிதம் மூலம் என்னால் அங்குத் தொடர்ந்து வேலை செய்ய இயலாது என்றும், என் மனநிலை இப்போதிருக்கும் சூழ்நிலையோடும், எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகொடுக்க இயலாது என்றும் எழுதி ஊர்வியிடம் கொடுத்து அம்ரீந்தரிடம் சேர்க்குமாறு சொல்லிவிட்டு, தேஜ்பாலின் எண்ணங்களுக்கு அவன் இழக்கப் போவது என்ன என்பதை இது அவனுக்குத் தெரியப்படுத்தும் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினேன்.

வேலையிலிருந்து விலகி இரண்டு மாதங்கள் கழிந்திருந்தது. மீண்டும் தனிமை. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் விழும் வெயில் மெல்ல அனைத்தையும் உருப்பெருக்கி உச்சத்தை அடையும் தருணம் மனதில் இன்னதென தெரியாத ஒரு உணர்வு வந்து அழுத்திச் சென்றது. தேவியிடம் இதைப்பற்றிச் சொன்னேன். அவள்,” அந்தப் பெண் வேறு வேலையில் இந்நேரம் சேர்ந்திருப்பாள். நீ அமரீந்தர் உன்னைத் தவறாக எடுத்துக்கொள்வார் என்று கவலைப்படுகிறாய்”. என்றாள். யோசித்துப்பார்த்ததில், அதுவல்ல காரணம். நான் என் வேலையை விடும்போதே, அவளுக்கு வேறு வேலை கிடைத்துவிடும், அம்ரீந்தரும் என்னைப் புரிந்துகொள்வார் என்று திடமாக நம்பினேன். வேறு ஏதோ ஒன்று என்னை மன நிறைவு கொள்ளாமல் செய்தது. அமரீந்தர் உடல் நலம் சற்று தேறி அவ்வப்போது கடைக்கு வருவதாக ஊர்வி சொல்லியிருந்தாள். அவரை கண்டு பேசிவரலாம் என்று தோன்றக் கடைக்குச் சென்றேன். அவர் இருக்கும் அறையிலிருந்த கண்ணாடிக் கதவுகளின் வழியே எட்டிப் பார்த்தேன். அவர், வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் காத்திருந்தேன். பின்பு அவர் பேசிமுடிப்பதற்குள் ஓய்வறைக்குச் சென்று வரலாம் எனச் சென்றேன். உள் நுழையும் முன் சட்டென யாரோ “உள்ளே ஈரமாக இருக்கிறது. கவனமாகச் செல்லுங்கள்” என்று ஸ்பானிஷ் மொழியில் சொல்ல, நான் “நன்றி” என்று சொல்லிக்கொண்டே குரல் வந்த திசை நோக்கிப் பார்த்தேன். அன்று தேஜ்பால் நிராகரித்த அதே பெண். அவளும் என்னைக் கண்டுகொண்டு புன்னகைத்தாள்.

அமரீந்தர் எப்படியோ விஷயம் அறிந்து அந்தப்பெண்ணைக் கண்டுபிடித்து இந்த வேலையை அவளுக்கே கொடுத்தார் என்று அறிந்தபொழுது, நான் எதைச் செய்யத் தவறினேன் என்றும், என் மன நிறைவின்மைக்குக் காரணமும் புரிந்தது.

One Reply to “தன்னறம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.