தந்திரக் கை – 2

This entry is part 2 of 3 in the series தந்திரக் கை

தமிழாக்கம் : மைத்ரேயன்

முதலில் அவள் சந்தோஷமாயிருந்தாள். மாத்யூ வழக்கம்போல பருமனாகவும், சகிக்க முடியாதவனாகவும் இருந்தான், ஆனால் அவனது பிறந்த நாள் குடும்பத்தின் பல கிளைகளை ஒன்று சேர்க்க ஒரு வாய்ப்பாக இருந்தது, இல்லாவிடில் அவர்கள் அரிதாகவே சந்தித்தனர். ரகசியமாகவும், அபாரமானதாகவும் பேசப்பட்டிருந்த ராக் அவே, மற்றும் ஃபிலடெல்ஃபியா போன்ற நகர்களிலிருந்து பயணம் செய்து சென்ட்ரல் பார்க்குக்கு வருவது மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. மொத்தக் குடும்பத்தையும் பார்ப்பதற்கு அவள் உற்சாகமாக இருந்தாள், அவளுடைய அப்பா அம்மா, சிறு குழந்தையாகவிருந்த தம்பி, மாத்யூவின் பெற்றோர், மற்றும் மாமன்கள், அத்தைகள், ஒன்று விட்ட சகோதர சகோதரிகள், அவள் தன் வாழ்நாளில் முன்னதாகப் பார்த்திராத பல முதிய உறவினர்கள், எல்லாரும் ஆடுகளுக்கான புல்வெளி என்று பெயர் கொண்ட ஓரிடத்தின் மூலையில் சந்தித்தனர். அங்கே பயணங்களில் கூட்டாஞ்சோறு உண்ண விரிக்கும் துண்டுகளையும், கடற்கரையில் விரிக்கும் துண்டுகளையும், வேறு எதில் உட்கார முடியுமோ அதெல்லாவற்றையும் தரையில் பரப்பினர். தம் முந்தைய நாட்டின் உண்டிகளை வெளியே எடுத்து வைத்தனர்: பிரோஷ்கி, பெல்மென், ஃப்ளான்கென், கஷ்ஷா, ரூகலாக், கூகெல் மிட் மாண்ட்லன், போர்ஷ்ட் மற்றும் ஷாவ் நிரம்பிய பால் புட்டிகள்- தவிர குழலப்பங்கள், பன்றி மாமிச பர்கர்கள், வேகவைத்த அவரைகள், முழுதும் வேகவைத்து இதர உணவுகள் திணிக்கப்பட்ட முட்டைகள் இவற்றோடு பிறந்த நாள் கேக், இனிப்பு மிட்டாய்கள், இனிப்பு பானங்கள் எல்லாம் இருந்தன. அது ஒரு உஷ்ணமான, நீல வான நாள், நிறைய உணவுகளோடு.

ஆனால் நான்கு வயதுப் பெண்ணொருத்தியால் ஏதோ ஒரு அளவுதான் சாப்பிடவோ, குடிக்கவோ முடியும்.. அதோடு கொஞ்ச நேரத்தில் மாமன்கள் எல்லாரும் புல்லிலேயே உறங்க ஆரம்பித்தனர், ஒவ்வொருத்தராகப் படுத்தார்கள், இந்தச் சிறுமியைக் கவனிக்க முடியாதபடி ஏகமாக உணவுண்டு நிரம்பிய வயிறோடு உறங்கினர்… எல்லா அத்தைகளும் சேர்ந்து அமர்ந்து ஒன்றும் விளங்காத கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர்… மாத்யூவோ ’வயிற்றுவலி’ என்று சண்டி செய்து கொண்டிருந்தான், அவளைப் பொறுத்தவரை அவனுக்கு அது நன்றாக வேண்டியதுதான். அவளுடைய பெற்றோரோடு அவளுக்குப் பேச ஒன்றுமில்லை, ஏனெனில் அவள் முயன்றபோதெல்லாம் சிறு குழந்தையான தம்பியோடோ அல்லது வேறு யாரோ வளர்ந்தவர்களோடோ அவர்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டனர், அவள் சொன்னதைக் கேட்கவேயில்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் அவளுக்குச் சலிப்பு ஓங்கியது. முட்ட முட்டத் தீனி தின்றாயிற்று, ஆனால் சலிப்பு ஓங்கி வளர்ந்தது.

அவள், தானாகவே போய் மிருகக் காட்சி சாலையைப் பார்ப்பதாகத் தீர்மானித்தாள்.

சென்ட்ரல் பார்க்கில் ஒரு மிருகக் காட்சி சாலை இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும், அவள் அங்கே முன்னர் ஒரு முறை அழைத்துப் போகப்பட்டிருந்தாள். அது பிக்னிக் நடக்குமிடத்திலிருந்து தூரம்தான், ஆனாலும், அவ்வப்போது அவளால் சிங்கங்கள் கர்ஜிக்கும் ஒலியைக் கேட்க முடிந்தது, அதோடு தூரத்தில் பஸ்கள், டாக்ஸிகள், மற்றும் நகரப் போக்குவரத்தின் ஒலியும் அவள் காதுகளுக்கு மிதந்து வந்து சேர்ந்தது. சிங்கங்களின் கர்ஜிப்பைக் கேட்டால் அவளால் வழி கண்டு பிடிக்க முடியும் என்று அவள் நம்பினாள்.

ஆனால் சிங்கங்களும் சரி, மிருகக் காட்சி சாலையும் சரி, அவளால் காண முடியவில்லை. அவள் தொலையவில்லை, இல்லவே இல்லை, ஒரு நிமிஷம் கூட இல்லை. அவள் சூரியஒளியில் சிரித்தபடி, வழியில் அவளை நோக்கிக் குதித்து வந்த நாய்களைக் கொஞ்சியபடி, நடந்து போய்க் கொண்டு மகிழ்வாக இருந்தாள். நாய்களின் சொந்தக்காரர்கள் அவளுடைய பெற்றோர் எங்கே என்று கேட்டால், அவள் போகிற திக்கில் உறுதியாகச் சுட்டி, ‘அதோ, அங்கேதான்,’ என்று சொல்லி விட்டு, அவர்கள் அதைப் பற்றி ஏதும் யோசிக்கு முன்னர், சிரித்தபடி மேலே நடந்து போனாள். ஒவ்வொரு கிளை பிரியும் சாலையிலும், அவள் நின்று கவனமாகக் கேட்பாள், என்ன ஒலி கேட்டாலும் அது சிங்கங்களெழுப்பும் ஓசை என்று எடுத்துக் கொண்டு போனாள். ஆனால் சிங்கங்கள் இருக்குமிடம் கிட்டே வரும்பாடாக இல்லை. அது கடைசியில் மிக எரிச்சலூட்டுவதாக ஆயிற்று. இருந்தாலும் அது ஒரு சாகசச் செயலாகத்தான் இன்னும் தெரிந்தது, பிறந்த நாள் பிக்னிக்கைவிடக் கூடுதலாகக் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது, ஆனால் இப்போது அது அவளுக்குத் தொல்லையாகத் தெரியத் தொடங்கியது.

பாதையில் ஒரு வளைவிற்கு வந்தாள், அங்கே ஒரு நபர் தன்னந்தனியாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவள் கண்களுக்கு அவர் மிக வயதானவராகத் தெரிந்தார், அவளுடைய மாமா-தாத்தா வில்ஹெல்ம் அளவு கிழவராக இருந்தார். அவருடைய வெள்ளை முடி, கண்களைச் சுற்றி இருந்த ஆழ்ந்த வரிகள், அவர் கால்கள் மேல் மூடி இருந்த நீளமான, சிவப்புநிறப் போர்வை அவை போதும் அவர் வயதானவர் என்று காட்ட. பிற கிழவர்கள் இப்படி அமர்ந்திருந்து அவள் பார்த்திருக்கிறாள். அவருடைய கைகள் அவருடைய மேலங்கியின் பைகளுக்குள் ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்தன, அவர் முகம் பின் மதியச் சூரியனை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தது.

அவர் உறங்குகிறார் என்று அவள் நினைத்தாள், அதனால் அவரைக் கடந்து போகவிருந்தாள், அவருக்கு விழிப்பூட்டாமல் இருக்கச் சத்தமில்லாமல் நடந்தாள். ஆனால் தன் நிலையை மாற்றாமல், கண்களைத் திறக்காமல், அவர் மென்மையான ஆனால் ஆழ்ந்த குரலில் பேசினார், “ஒரு அசாதாரணமான மாலை உனக்கு, இளம் பெண்ணே.”

’ அசாதாரணமான’ என்பது அவளுக்கு ஒரு புது வார்த்தை, அவளுக்குப் புது வார்த்தைகள் பிடிக்கும். அவள் திரும்பிப் பார்த்து, பதில் சொன்னாள், தன்னை எத்தனை வளர்ந்தவளாகக் காட்ட முடியுமோ அத்தனையை முயன்றாள், “நான் ரொம்பவே அசாதாரணமானவள், நன்றி ஐயா.”

“அதைக் கேட்க நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” அந்தக் கிழவர் சொன்னார். “நான் கேட்கலாம் என்றால், நீ எங்கே போகிறாய்?”

“நான் சிங்கங்களைப் பார்க்கப் போறேன்,” அவள் அவரிடம் சொன்னாள். “அத்தோடு ட்ராஃப்களையும் பார்க்கப் போறேன். ட்ராஃப்கள் ரொம்ப உசந்த மிருகங்கள்.”

“அவை அப்படித்தான்,” அந்தக் கிழவர் ஆமோதித்தார். அவர் கண்களைத் திறந்த போது, அவை அவள் பார்த்ததிலேயே மிக நீலமான கண்களாக இருந்தன, இளமையாகவும், பளிச்சிடுவனவாகவும் இருந்ததால், அவருடைய தோற்றத்தில் மற்றதெல்லாம் கூடுதலாகக் கிழடு தட்டித் தெரிந்தன. அவர் சொன்னார், “உனக்குத் தெரியுமா, நான் முன்னே ஆஃப்ரிக்காவில கடைக்குப் போற போதெல்லாம் ட்ராஃப் மேலே சவாரி போயிருக்கிறேன்.”

அவள் அவரை உற்றுப் பார்த்தாள். “நீங்க ட்ராஃப் மேலே சவாரி எல்லாம் போக முடியாது. அது மேல உட்கார இடமே கிடையாது.”

“நான் அதோட கழுத்துல உசரக்க உட்கார்ந்தேன், ஒரு ப்ளாட்ஃபார்ம் மாதிரி வச்சுகிட்டு.” அந்தக் கிழவர் அவளை அழைக்கவில்லை, அந்த பெஞ்சில் நகர்ந்து அவளுக்கு இடம் விடவும் இல்லை, ஆனால் அவள், அவரருகே தான் நெருங்குவதை உணர்ந்தாள். அவர் சொன்னார், “ஒரு கப்பல் கொடி மரத்தின் மேலே உயரத்தில் இருக்கும் கூண்டில் அமர்ந்து காவலாள் போவது போல இருந்தது. என் கீழே, ட்ராஃப் ஆடி ஆடிக் கொண்டு கடலைப் போல ஓடிப் போகும், ஆகாயமும் ஆடும், நான் ட்ராஃபின் கழுத்தில் ஒரு கையால் கட்டிக் கொண்டு போவேன், கீழே இருக்கும் ஜனங்களுக்கு மற்ற கையை ஆட்டி முகமன் சொல்வேன். அது நிஜமாக நன்றாக இருந்தது.”

அவர் பெருமூச்சு விட்டார், பின் சிரித்தபடி தலையை அசைத்தார். “ஆனால் அதை நான் விட்டு விட வேண்டியதாச்சு, ஏன்னா ட்ராஃபின் மேல மளிகை சாமான்களை வைக்க இடமே இல்ல. எல்லாப் பைகளும் ட்ராஃபோட நீளமான கழுத்துப் பக்கத்துல தொங்கிக்கிட்டிருக்கும். ட்ராஃப் அதுங்க மேலயே காலை வைச்சுடும். ட்ராஃபுங்களுக்குப் பெரிய கால், உனக்குத் தெரியுமில்லையா?”

அவள் இந்நேரம் அவருக்கு நேர் எதிரே நின்றிருந்தாள், அவரது வரிகளோடிய முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவருக்குப் பெரிய, கர்வமான மூக்கு, புருவங்களெல்லாம் ஒரே செடுக்கு. அந்தப் புருவங்களுக்கு பரஸ்பரம் கோபம் என்று அவளுக்குத் தோன்றியது. அவர் சொன்னார், “அதுக்கப்புறம் நான் கடைங்களுக்குப் போக காண்டாமிருகத்தின் மேலே ஏறித்தான் போனேன். காண்டா மிருகத்துகிட்ட ஒரு வசதி உண்டு”- முதல் தடவையாக அவர் அவளைப் பார்த்துச் சிரித்தார்- “நாம கடைக்குள்ளே போகறப்ப, ஜனங்களெல்லாம் நம்ம கிட்டே ரொம்ப மரியாதையா நடந்துப்பாங்க. நாம எல்லாப் பையுங்களையும் அதோட கொம்பு மேலே தொங்க விடலாம், வீட்டுக்கு அப்படியே எடுத்துப் போகலாம். ட்ராஃபை விட ரொம்ப வசதி, என்ன நான் சொல்றது?”

அவர் பேசிக் கொண்டே ஒரு கையை நீட்டி, அவளுடைய வலது காதிலிருந்து ஒரு முட்டையை எடுத்தார். அவள் அது நடப்பதை உணரவில்லை -அவருடைய நீண்ட விரல்கள் இலேசாகக் காதில் பட்டன, அவர் கையில் முட்டை இருந்தது. அவள் தன்னுடைய இன்னொரு காதைப் பிடித்துக் கொண்டு பார்த்தாள், அதிலும் முட்டை இருக்குமா என்று பார்த்தாள், ஆனால் அவர் ஏற்கனவே அதிலிருந்து ஒரு கால் டாலரை எடுத்துக் கொண்டிருந்தார். அவளுக்கு இருந்த வியப்பைப் போலவே அவருக்கும் வியப்பாக இருந்தாற்போலத் தெரிந்தது, அவர் சொன்னார், “அட அட, இப்ப நீ உன்னோட முட்டையோட சாப்பிட ஒரு டோஸ்ட் வாங்க முடியும். எத்தனை அதிசயமான காதுங்க உனக்கு இருக்கு- பாராட்ட வார்த்தையே இல்லை.” அவர் முட்டையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர் மேலும் பல பொருட்களை அவள் காதுக்குள்ளிருந்து கண்டு பிடித்து எடுத்த வண்ணம் இருந்தார். சங்குகள், இன்னும் சில நாணயங்கள், சில கோலிக் குண்டுகள் (அது அவருக்குக் கொஞ்சம் பிடிக்கவில்லை, “நீ கோலிக் குண்டை எல்லாம் காதுக்குள்ள போடக் கூடாது, அம்மணி!”), ஓர் ஆரஞ்ச், ஒரு பூ கூட வந்தது- ஆனால் அது கசங்கிப் போய் இருந்தது, அது காதுக்குள்ளே இருந்ததால் அப்படி ஆகி விட்டது என்றார்.

தான் உட்கார்வதை அறியாமல், அவள் அவரருகே அமர்ந்தாள். “நீங்க அதை எப்படிச் செய்யறீங்க?” அவள் கேட்டாள். “நானும் அதைச் செய்ய முடியுமா? எனக்குக் காட்டுங்க!”

“இந்த மாதிரி காதுங்களை வச்சுகிட்டு, எது வேணும்னாலும் செய்ய முடியும்,” அந்தக் கிழவர் பதிலளித்தார். “நீயே செய்து பாரேன்,” அவளுடைய கையை எடுத்துக் கொண்டு அவள் காதருகே கொண்டு போய், அவளுடைய இடது காதுக்குப் பின்னே செருகப்பட்டிருந்த அழகான சங்கு ஒன்றை எடுக்கச் செய்தார். பிறகு அவர் சொன்னார், “நான் யோசிக்கறேன்… என்ன யோசிக்கறேன்னா…” அவளுடைய தலை முடியை இலேசாக வருடினார், உள்ளங்கை முழுதும் சிறு வெள்ளி நட்சத்திரங்களாகக் காட்டினார். அவளுடைய நர்சரி பள்ளி ஆசிரியை அவளுக்கு நல்ல நடத்தைக்காகக் கொடுக்கிற ஜிகினா நட்சத்திரம் போல இல்லை, நிஜமான உலோகத்தில் கூர்மையான முனைகளோடு, ஆகாயத்தில் இருந்த நட்சத்திரங்களைப் போல மின்னிய உலோக நட்சத்திரங்கள்.

“உன் தலை முடி கூட திறமையா இருக்கே. அது ரொம்ப அசாதாரணம்.”

”இன்னும் வேணும், ப்ளீஸ்!” அவள் கெஞ்சினாள்.

கிழவர் அவளை கவனித்துப் பார்த்தார். அவர் இன்னும் சிரித்துக் கொண்டிருந்தார், ஆனால் அவர் கண்களில் இப்போது வருத்தம் தெரிந்தது, அது அவளுக்குக் குழப்பமூட்டியது.

“நான் கொடுத்தது எல்லாமே முன்னாடியே உன்னோடதாத்தான் இருந்தது. வேறெதையும் நான் கொடுக்கல்லை,” அவர் சொன்னார். “எனக்கு வேற மாதிரி தரணும்னுதான் ஆசை. ஆனா இது பாரு, என்னோட பரிசு. எங்கிட்ட இருந்து உனக்கு. இந்தா.” அவர் தன் ஒரு கையை தன் உள்ளங்கை மீது சுழற்றி அசைத்தார், அது தாண்டியபோது அவள் ஒரு சிறு வெள்ளி உருவாக ஒரு குதிரையைப் பார்த்தாள்.

அதை மறுபடி பார்த்தாள். அவள் பார்த்திருந்த எதையும் விட மிக அழகாக அது இருந்ததாக அவள் எண்ணினாள்.

“நானே வச்சுக்கலாமா? நிஜம்மாவா?”

“நிச்சயமா,” என்றார். “நீ அதை எப்போதும் வச்சிருப்பேன்னு நான் எதிர்பார்க்கிறேன்.”

அந்த அற்புதமான உருவை அவளுடைய குவிந்த கைகளில் வைத்து, அவளுடைய விரல்களை மென்மையாக அதன் மேல் மூடினார். அவள் அந்த மனிதரின் நகங்களை ஸ்பரிசித்தாள், சிலீரிட்ட காற்றாக அது அவளுடைய விரல் நுனிகளின் மேல் வீசியது.

“உன் பையில வச்சுக்கோ, பத்திரமா இருக்கட்டும், இன்னக்கி ராத்திரி தூங்கறத்துக்கு முன்னாடி அதைப் பாரு.” அவள் சொன்னதைச் செய்ததும், அவர் சொன்னார், “இப்ப நான் உங்கிட்டே கேட்க வேண்டியது, உன் அப்பா அம்மா எங்கே?”

அவள் ஏதும் சொல்லவில்லை, தான் பிக்னிக் இடத்தை விட்டு வந்து எத்தனை நேரம் ஆகிவிட்டதென்பதை அவள் சட்டென்று உணர்ந்தாள்.

“அவங்க உன்னை எல்லா இடத்துலயும் தேடுவாங்க,” கிழவர் சொன்னார். “அவங்க உன்னைக் கூப்பிடற சத்தத்தை என்னால இப்ப கேட்க முடியுதுன்னு நினைக்கிறேன்.” அவர் தன் வாயைச் சுற்றுத் தன் உள்ளங்கைகளைக் குவித்தார், நடுங்கும் குரலில் விளையாட்டாகக் கூவினார், “எல்ஃப்ரீடா! எல்ஃப்ரீடா! எங்கெம்மா இருக்கே எல்ஃப்ரீடா!”

அது அவளுக்குச் சிரிப்பு வந்து அது அடங்கச் சிறிது நேரமாயிற்று. பிறகு அவள் சொன்னாள், “அது என்னோட பேர் இல்லை.” அவரும் சிரித்தார், ஆனால் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார், “எல்ஃப்ரீடா! எல்ஃப்ரீடா!”கடைசியில் அந்தக் குரலில் அத்தனை சோகமும், கவலையும் தெரிந்த பின் அவள் எழுந்து நின்றாள், “நான் திரும்பிப் போய் அவங்க கிட்டே நான் நல்லா இருக்கேன்னு சொல்லணும் போல இருக்கு.” காற்றில் சிறிது குளிரும் கூடியிருந்தது, அவள் தனக்குத் திரும்பிப் போகும் வழி தெரியும் என்பதில் அத்தனை நம்பிக்கை இல்லாதிருந்தாள்.

“நான் அதைப் பண்ண மாட்டேன்,” கிழவர் அவளுக்கு யோசனை சொன்னார். “நானா இருந்தா, இப்ப இருக்கற இடத்துலெயே இருப்பேன், அவங்க வரும்போது நீ அவங்க கிட்டே, “நீங்க இங்கேயே உட்கார்ந்து, கொஞ்சம் இளைப்பாறலாம் இல்லியா?” அப்டீன்னு சொல்லலாம். நான் அதைத்தான் செய்வேன்.”

வளர்ந்தவர்களிடம் அப்படிச் சொல்வதென்ற யோசனை அவளுக்கு மறுபடி சிரிப்பை வரவழைத்தது, தன் குடும்பத்தினர் வந்து தன்னைக் கண்டு பிடிக்கப் போவதை எதிர்பார்க்க அவளுக்குப் பொறுமை குறைந்தது. கிழவர் அருகே அமர்ந்து அவருடன் பேசினாள், சாதாரணமாக. பள்ளிக்கூடம், தன் மாமன்கள், நண்பர்கள், பேசியபடி அவளுக்கு எரிச்சலூட்டும் சகோதரன் மாத்யூ வரை சொல்லி விட்டாள், அதற்கப்புறம் காண்டாமிருகத்தின் மீது கடைகண்ணிக்குப் போவதைப் பற்றிப் பேசினாள். அவர் அவளிடம், காண்டாமிருகத்துக்கு நிறுத்துமிடம் தேடுவது எப்போதும் ஒரு பிரச்சனையாக இருந்தது, அவற்றுக்கு கடைகண்ணிக்குப் போவது பிடித்தமாக இல்லை, ஆனால் நம்மைப் பிடிக்கும் என்றால் அவை கடைக்கு வரச் சம்மதிக்கும் என்று விளக்கினார். காண்டாமிருகத்துக்கு நம்மைப் பிடிக்க வைக்க நாம் என்ன செய்யலாம் என்று அவர்கள் பேசியபோது அவளுடைய அப்பா அவளைத் தேடித் தன் மோட்டர்சைக்கிளில் வந்தார்.

”அதை நான் கல்லூரியில் படிக்கும்போது தொலைத்து விட்டேன்,” அவள் அந்தச் சிறு உருவைத் தடவியபடி சொன்னாள், தன் கன்னத்தில் அதை இழைத்தாள். “தேடினேன், தேடினேன், எங்கேயுமே கிடைக்கல்லை.” அவரைச் சிறிது சந்தேகத்தோடும், அதிசயத்தோடும் பார்த்தாள். பிறகு மௌனமாகினாள், தன் வாயைத் தொட்டுக் கொண்டிருந்தாள். “சென்ட்ரல் பார்க்…அங்கே ஒரு ஜூ இருந்தது.”

ஜால வித்தைக்காரர் தலையசைத்து ஆமோதித்தார், “இன்னும் இருக்கு.”

“சிங்கம். அங்கே சிங்கமெல்லாம் வச்சிருந்தாங்களா?” அவர் பதில் சொல்ல அவகாசம் கொடுக்கவில்லை அவள். “எனக்கு சிங்கங்களை நினைவிருக்கு. அதுங்க கர்ஜித்ததை நான் கேட்டேன்.” அவள் மெல்லச் சொன்னாள், அவரிடம் பேசாமல் குதிரையுடன் பேசுகிறவள் போலிருந்தாள். ”நான் சிங்கங்களைப் பார்க்க ஆசைப்பட்டேன்.”

”ஆமாம்,” ஜால வித்தைக்காரர் சொன்னார். ”நாம் சந்தித்தபோது நீ அதற்குத்தான் போய்க் கொண்டிருந்தாய்.”

“எனக்கு இப்ப நினைவு வரது,” அவள் சொன்னாள். “நான் எப்படி அதை மறக்க முடிஞ்சது?” அந்த நினைவு ஒரு உருப்பெறத் தொடங்கியபோது அவள் மேலும் வேகமாகப் பேசினாள். “நீங்க ஒரு பெஞ்சுல உட்கார்ந்திருந்தீங்க, அப்பா… அப்பா ஒரு மோட்டர்சைக்கிளில வந்தார். இல்லை, பொலீஸ்காரரோட மோட்டர்சைக்கிள்ல வந்தார், அப்பா… அதுல இருந்த இணைப்பு வண்டில இருந்தார். எனக்கு நினைவிருக்கு. அவருக்கு அத்தனை கோபம் வந்திருந்தது, பொலீஸ்காரர் அங்கே இருந்தது நல்லதாச்சுன்னு நான் நெனச்சேன்.”

ஜால வித்தைக்காரர் மெல்லச் சிரித்தார். “நீ ஆபத்தில்லாம, பத்திரமா இருக்கேங்கறதைப் பார்க்கிற வரைக்கும் அவர் கோபமாய் இருந்தார். பிறகு அவர் நன்றி தெரிவிக்க நெனச்சு எனக்குப் பணம் கொடுக்க முன்வந்தார்.”

“அப்படியா? நான் கவனிக்கல்லை.” சங்கட உணர்வால் அவளுடைய முகம் திடீரென்று உஷ்ணமாகியது. “நான் வருந்தறேன். அவர் உங்களுக்குப் பணம் கொடுக்க வந்தார்னு எனக்குத் தெரியல்லே. அவமானப்படுத்தறார்னு உங்களுக்குத் தோணியிருக்கும்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை,” ஜால வித்தைக்காரர் சட்டென்று சொன்னார். “அவர் உன் மேல பாசம் வச்சிருந்தார், அவர் கிட்டே என்ன இருந்ததோ அதைக் கொடுக்க முன்வந்தார். நாங்க ரெண்டு பேருமே ஒரே நாணயத்துலதான் அங்கே புழங்கினோம்.”

அவள் தயங்கினாள், சுற்றிலும் பார்த்தாள். “இது கூட சரியான தெரு இல்லெ. நான் மோடெலைப் பார்க்க முடியல்லியே.”

அவர் அவளுடைய தோளை ஆதரவாகத் தட்டினார். “நீ பார்ப்பே. நான் உத்தரவாதம் தரேன்.”

“அதைப் பார்க்கணும்னு எனக்கு விருப்பம் இருக்கான்னு எனக்குத் தெரியல்லை.”

“நிஜமாவா?” அந்த இரவில் அவருடைய குரல் அவளைச் சூழ்ந்திருப்பதாகத் தோன்றியது. “அது ஏன் அப்படி? உனக்கு ஒரு பயணத்தைத் தொடரணுமே, இல்லையா?”

ஒரு கசப்புணர்வு அவளுடைய தொண்டையில் அத்தனை வேகமாக எழுந்தது, அவளுக்கு வாந்தி வரும்போல இருந்தது. “என் பேர் உங்களுக்குத் தெரியும், என் குடும்பம் பத்தி உங்களுக்குத் தெரியும், நான் மறந்துட்ட விஷயங்களெல்லாம் உங்களுக்குத் தெரியும்னா அது ஏன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆலன் செத்துப் போயிட்டார், டாலி-என்னோட குட்டி எலி, கடவுளே, என்னோட குட்டி எலி – அதே மாதிரி நானும்தான், உங்களுக்குப் புரியுதுல்லே? நானும் செத்துப் போயிட்டேன், நான் சும்மா காரை ஓட்டிகிட்டு சுத்திச் சுத்தி அலையறேன், அழுகிப் போறவரை இதைச் செய்யப் போறேன்.” சினம் ஓங்கி நெஞ்சுக் குழியை அடைக்க, அவள் குனிந்து இருமினாள். “அவங்களோட நானும் செத்துப் போயிருக்கணும்னு ஆசைப்படறேன், அதுதான் என்னோட ஆசை.” வாந்தி எடுத்திருந்தால் அந்த நேரம் அவளுக்கு மகிழ்வாக இருந்திருக்கும், ஆனால் அவளுக்கு வெளியே கொட்ட முடிந்தவை வார்த்தைகள்தான்.

வலுவான, முதிய கைகள் அவள் தோள்களை ஆதரவாகப் பிடித்தன, சிறிது நேரத்தில் அவளால் தலையை உயர்த்த முடிந்தது, அந்த ஜாலவித்தைக்காரரின் முகத்தைப் பார்க்க முடிந்தது, அங்கே அவள் கோபத்தையோ, இரக்கத்தையோ பார்க்க முடியவில்லை. அவள் சன்னமாகச் சொன்னாள், “இல்லை, நான் நிஜம்மா என்ன விரும்பறேன்னு உங்க கிட்டே சொல்றேன். நான் அந்த விபத்துல செத்திருக்கணும், ஆலனும் டாலியும் இன்னும் உசிரோட இருக்கணும்னுதான் விரும்பறேன். ஒரு தயக்கமும் இல்லாம அப்படி ஒண்ணுக்கு நான் ஒத்துக்குவேன், நான் மாட்டேன்னு நீங்க நினைக்கிறீங்களா?”

ஜால வித்தைக்காரர் மென்மையாகச் சொன்னார், “அது உன்னோட தப்பு இல்லை.”

“இல்லெ, என்னோடதுதான். என்னோட கார்ல அவங்க இருந்தது என்னோட தப்புதான். நான் ஆலன் கிட்டே அதை ஆயில் சேஞ்சுக்கு எடுத்துகிட்டுப் போகச் சொன்னேன், எலியையும் … டாலி அவரோட போகணும்னு ஆசைப்பட்டா. அப்பாவோட தான் மட்டும் இருக்கறது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும் – அவரை எப்படி ஆட்டி வைப்பா, ஆர்டர் போடுவா, அது என்னை மாதிரி நடிக்கறதா அவளுக்கு நெனப்பு.” ஒரு கணம் அவள் தன் கட்டுப்பாட்டை இழந்து விடும் நிலைக்கு வந்திருந்தாள், ஆனால் ஜால வித்தைக்காரர் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தார், அதனால் அவளும் தன்னைத் தேற்றிக் கொண்டாள். “அதைச் செய்யச் சொல்லி அவர் கிட்டே நான் கேட்டிருக்கல்லைன்னா, நான் சோம்பேறித்தனமா, சுயநலக்காரியா இல்லாம இருந்திருந்தா, எனக்குச் செய்ய நிறைய முக்கியமான வேலை இருக்கறதா நெனைக்காம இருந்திருந்தா, அந்த மோதல்லெ இறந்தது நானாத்தான் இருந்திருக்கும், அவங்க இன்னும் உசிரோட இருந்திருப்பாங்க. அவங்க உசிரோட இருந்திருப்பாங்க.” அவள் மேலே நீட்டி ஜால வித்தைக்காரரின் கரங்களைப் பற்றினாள், தன்னால் முடிந்த மட்டில் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள், அவருடைய கண்களுக்குள் ஆழ நோக்கினாள், “உங்களுக்குத் தெரியுதா?”

பதில் சொல்லாமல் ஜால வித்தைக்காரர், தலையசைத்தார். நிழலில் அவர்கள் அப்படிச் சேர்ந்து அந்தக் கணம் நின்றனர். பின் அவர் அவளுடைய தோள்களிலிருந்து தன் கைகளை எடுத்து விட்டார், சொன்னார், “அப்படின்னா, உன்னோட உசிரை உன் கணவரோடது, மகளோடது உயிர்களுக்குப் பதிலா கொடுக்கறேங்கறெ. நீ இன்னும் அந்த பேரத்துக்குத் தயாரா இருக்கியா?”

அவள் அதிர்ந்து அவரைப் பார்த்தாள். சொன்னாள், “அந்த முட்டாள்தனமான புதிர். நீங்க நிஜம்மா சொல்றீங்களா? நீங்க யாரு? சாவா?”

“இல்லவே இல்லை. ஆனா உன்னோட சம்மதத்தோட என்னால சில விஷயங்களைச் செய்ய முடியும்.”

“என்னோட சம்மதம்.” அவள் பின்னே தள்ளி நின்றாள், தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்தாள். “ஆலனும் டாலியும் … யாரும் அவங்களோட சம்மதத்தைக் கேட்கல்லை- அல்லது என்னோட சம்மதத்தையும் கேட்கலை. நான் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நிஜம்மாச் சொன்னேன்.”

“நல்லா யோசி,” ஜால வித்தைக்காரர் அவசரமாக உந்தினார். “நீ என்ன கேட்டிருக்கேன்னு உனக்கு நல்லாத் தெரியணும்னு எனக்குத் தெரிய வேண்டி இருக்கு. அதை எந்த அளவுக்கு நீ அர்த்தம் தெரிஞ்சு சொல்றேன்னு எனக்குத் தெரியணும்.” அவர் தன் இடது கையின் உள்ளங்கையை மேல் நோக்கி உயர்த்தினார், அதைத் தன் வலது கையின் சுட்டு விரலால் தட்டினார். “பூங்காவுல ஜாக்கிரதையா இரு, சின்னப் பொண்ணே. அங்கே சிங்கங்களெல்லாம் இருக்கு.”

“நான் என்ன கேட்டேன்னு எனக்குத் தெரியும்.” அவளுடைய காலடியில் நடைபாதை சுருள்வதாக அவள் உணர்ந்தாள்.

“அப்ப, இதைத் தெரிஞ்சுக்க. என்னால உசிரை எடுக்கவும் முடியாது, அதைத் திரும்பக் கொடுக்கவும் முடியாது, ஆனால் என்னால உன்னோட விருப்பத்தைத் தர முடியும், அதை நீ எப்படிக் கேட்டியோ சரியா அதையே கொடுக்க முடியும். நீ சொன்னாப் போதும் – உன்னோட ஆத்மாவுல இதுதான் உன்னுடைய நிஜமான விருப்பம்னு நிச்சயமாத் தெரிஞ்சிருக்கணும்.” அவர் திடீரென்று சிறிது சிரித்துக் கொண்டார், அது விதிர்க்கச் செய்தது; அவளுக்கு அது கிட்டி முட்டி ஓர் உறுமல் போலக் கேட்டது. “கடைசியா அந்தச் சொல்லை, ஆத்மாவை, எப்ப உபயோகிச்சேன்னு எனக்கு நினைவு வரல்லை.”

அவள் தன் உதட்டைக் கடித்தாள், கைகளைத் தன்னைச் சுற்றிக் கட்டிக் கொண்டாள், ஆனால் அந்த இரவு இன்னும் உஷ்ணமாகத்தான் இருந்தது. “இப்ப எனக்கு நீங்க என்ன வாக்குறுதி கொடுக்க முடியும்?”

“இன்னொரு எதார்த்தம்- நீ என்ன கேட்டியோ சுத்தமா அதையே. நான் சொல்றது உனக்குப் புரியுதா?”

“இல்லை,” என்றாள்; பின் மெதுவாக, “நீங்க என்ன சொல்ல வரீங்கன்னா, சினிமா ரீலை பின்னாலெ ஓட விடற மாதிரியா? பின்னே பின்னே போய்,… முந்தைய இடத்துக்கா?”

கிழவர் தன் தலையை அசைத்து மறுத்தார். “இல்லை. எதார்த்தம் ஒரு போதும் பின்னோக்கி ஓடாது; ஒவ்வொரு விஷயமும் இருக்கு, அதோட அது எப்பவும், அப்படியேதான் இருந்தது. தேர்வுங்கறது அபூர்வமான பொருள், அது கிடைச்சிருக்கிற கொஞ்சம் பேர்களும், அதைப் பொக்கிஷமாக் கருதறாங்க. ஆனா மாயாஜாலம் (மாஜிக்) அங்கே இருக்கு, சரியாச் செய்தால், மாயாஜாலத்தால கொஞ்சம் சாத்தியங்களை சீட்டுக்கட்டோட அட்டைங்களைப் போல கலைச்சுப் போட்டு ஆட முடியும். என்னோட கட்டுப்பாட்டுல இருக்கற அப்படி ஒரு கலையை வச்சு என்னால உன் விருப்பத்தைக் கொண்டு வர முடியும், கச்சிதமா நீ கேட்கற மாதிரியே. நான் உனக்குத் திருப்பிக் கொடுத்த குதிரையை அந்த விபத்து நடந்த இடத்துக்கு எடுத்துப் போ. சரியா அது நடந்த இடத்துக்குப் போகணும். உன் கையில அதை வச்சுக்கோ,இல்லை உன் கிட்டே அதை வச்சுக்கோ, ஒரு எட்டு எடுத்து வை, ஒரே ஒரு எட்டு. நீ நினைச்சது மேல உனக்கு இருக்கற உறுதி நிச்சயமா இருந்தா, உன்னோட தேர்வு உண்மையா, இறுதியா எடுக்கப்பட்டிருந்தா, விஷயங்கள் எப்போதும் எப்படி இருந்தனவோ அப்படியே இன்னும் இருக்கும் – ஆனால் இப்போ, அதுங்க எப்போதும் இருந்த விதம் என்றென்றைக்கும் வேற மாதிரி இருக்கும். உன் கணவரும், மகளும் உயிரோட இருப்பாங்க, ஏன்னா அவங்க அன்னிக்கி காரை ஓட்டி இருக்க மாட்டாங்க, ஒருபோதும் ஓட்டவும் மாட்டாங்க. நீ செய்திருப்பே. உனக்கு இப்ப புரியறதா?”

“ஆமாம்,” அவள் சன்னக் குரலில் சொன்னாள். “ஓ, சரி, சரி, எனக்குப் புரியறது. தயவு செய்து அதைச் செய்யுங்க, நான் அதை ஏத்துக்கறேன், எனக்கிருக்கிற ஒரே விருப்பம் அதுதான். ப்ளீஸ், ஆமாம்.”

ஜால வித்தைக்காரர் அவளது கைகளைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டார். “உனக்கு நிச்சயமா இருக்கா? அப்படீன்னா என்ன அர்த்தம்னு உனக்குப் புரியறதா?”

”என்னால அவங்க இல்லாம வாழ முடியாது,” அவள் எளிதாகச் சொன்னாள். “நான் உங்க கிட்டே அதைச் சொன்னேன். ஆனால்… எப்படி- “

”சாவு, அவரோட மத்த தங்கமான குணங்களெல்லாம் எப்படி இருந்தாலும், அத்தனை புத்திசாலி இல்லை. சுத்தமான வேலைத் திறன், நேரம் தப்பாம இருக்கறது அதெல்லாம் உண்டு, ஆனா அத்தனை புத்திக் கூர்மை இல்லை.” ஜாலவித்தைக்காரர் குனிந்து மிகச் சிறிய வணக்கம் தெரிவித்தார். “நான் தந்திரங்கள்லெ ரொம்ப ஜாலக்காரன். அசாதாரணமானவன்னு கூட நீ சொல்லலாம்.”

“நீங்க என்னை அங்கே அனுப்ப முடியாதா, இந்த நிமிஷமே- இடம் மாத்தறது, இல்லைன்னா என்னை மின்னஞ்சல் மூலமா அனுப்பறது, அல்லது அதுமாதிரி. இந்த முட்டாள்தனமான காரோட்டறதை விட்டுட முடியாதா? அதை நீங்க செய்யக் கூடாதா? நான் என்ன சொல்ல வரேன்னா – உங்களால அதை எல்லாம் செய்ய முடியறப்ப – உங்களுக்குப் புரியும் – இதை?”

அவர் தலையாட்டி மறுத்தார். “ரொம்ப சுலபமான தந்திரத்துக்குக் கூடத் தயாரிப்பு வேணும்… இதுவோ அத்தனை சுலபம் இல்லை. ஓட்டு, நான் உன்னை ஏற்பாடான நேரத்துல அந்த இடத்தில சந்திக்கறேன்.”

“சரி, அப்ப பார்க்கலாம்,” அவள் அவரது கரங்களில் தன் கைகளை வைத்தாள், பசும் இலைகளூடே சூரியனைப் பார்ப்பது போல அவரைப் பார்த்தாள். “உலகத்துல உங்களுக்கு நன்றி சொல்றதுக்கு வேணுங்கற வார்த்தைங்க இல்லாததால, நான் வெறுமனே வீட்டுக்குத் திரும்பிப் போகறேன். என் குடும்பம் காத்திருக்கு.”

ஆனாலும் அவள் தாமதப்படுத்தினாள், அவரும்தான், ஏதோ இருவரும் தங்களுக்குப் புரியாத ஒரு மொழியோடு தடுமாறும் அயல்நாட்டினர் என்பது போல இருந்தது: நெருக்கத்துக்கும், நினைவுக்குமான மொழி அது. ஜால வித்தைக்காரர் சொன்னார், “நான் இதை ஏன் செய்யறேன்னு உனக்குத் தெரியாது.” அது ஒரு கேள்வியாக இருக்கவில்லை.

“இல்லை, எனக்குத் தெரியத்தான் இல்லை.” அவளது தயங்கிய புன்னகை, ஐயத்தின் புயலாக இருந்தது. “பழைய நாட்களுக்காகவா?”

ஜாலவித்தைக்காரர் தலையசைத்து மறுத்தார். “அது நிஜமாவே முக்கியமானதில்லை. இப்பொ நீ போ.”

தெருவில் எதிரே மோடெலுடைய அறிவிப்புப் பலகை சந்திரனைப் போலப் பிரகாசமாக இருந்தது, அவளால் பாதி காலியாக இருந்த கார் நிறுத்தும் மனையில் தன் காரைப் பார்க்க முடிந்தது. அவள் திரும்பினாள், நடந்து போனாள், திரும்பிப் பார்க்காமல் ப்யூயிக்குக்குள் ஏறிக் கொண்டு அதை அந்த மனையிலிருந்து ஓட்டிப் போய் விட்டாள். அவளுக்கு உள்ளேயிருந்து சேகரிக்க ஏதும் இருக்கவில்லை. காலையில் சிறிதும் கலையாமல் இருந்த படுக்கை, குளியலறை அலமாரியிலிருந்து எடுக்கப்படாத உலர்ந்த துண்டுகள் பற்றி அவர்கள் வியக்கட்டும்.

மாயா ஜாலக்காரர் அவளுடைய பின் நோக்கும் கண்ணாடியில் தெளிவாகத் தெரிந்தார், அவளைப் பார்த்திருந்தார், ஆனால் அவள் கையசைக்கவில்லை, திரும்பிப் பார்க்கவில்லை.

(தொடரும்)

Series Navigation<< தந்திரக் கை – 1தந்திரக்கை – பாகம் 3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.