எரியும் காடுகள் – 4

This entry is part 4 of 4 in the series எரியும் காடுகள்

12

அடுத்த நாள் பின் மதியத்தில் நான் அந்தச் சாலையில் மேற்கே மூன்று மைல்கள் நடந்தேன். பனி ஆழமாக இருந்தது, அதில் காலடிகளோ, பாதையோ இல்லை, அது முந்தைய நாளில் ரால்ஃப் என் குடிலை விட்ட பிறகு ட்ரக்கை ஓட்டிச் சென்று மேல்பகுதியில் சில மணிகள் நிறுத்தியதைத் தவிர வேறெங்கும் போகவில்லை என்று காட்டியது, அந்த நேரத்தில்தான் அவருடைய குடிலில் நான் தேட முடிந்திருந்தது.

கடைசியில் நான் அந்த மதுக்கடைக்கு விடாப்பிடிவாதமாகப் பனியில் உளைந்து நடந்து போய்ச் சேர்ந்தேன். வெளியிலிருந்து பார்த்தால் பல மாதங்களாக அது மூடப்பட்டிருந்ததைப் போலக் காட்சி அளித்தது, ஆனால் முன்பும் அது அப்படித்தான் காட்சி தந்திருந்தது. எந்த மேஜையிலும் யாரும் இல்லை, ஆனால் ஒரு நபர் பின்புறத்திலிருந்து வந்து முன் வரவேற்பு மேஜைக்குப் பின் நின்றார். அவருடைய தலைமுடி வெண்மையாக இருந்தது, முகத்தில் பல இடங்களில் தோல் நிறமிழந்து இருந்தது, அவருடைய கண்கள் என்னவோ தெளிவாகவும், கூர்மையாகவும் இருந்தன. நான் ஒரு பியருக்கு உத்தரவு கொடுத்தேன், அவர் அதை என் முன் வைத்தார். நான் உணவுப் பட்டியலைப் பார்க்கக் கேட்டேன்.

‘இன்னக்கி சாப்பாடு ஏதும் இல்லை.’

‘ஏன் அப்படி?’

‘அது முந்தின நாள் ராவுலெ செய்யப்படணும்.’

‘நீங்க நேத்திக்கு இருக்கல்லியா?’

அவர் என்னைச் சும்மா பார்த்தார்.

‘நீங்கதான் டான், சரிதானே?’

அவர் ஆமோதித்தார். ‘உங்க பேரு என்ன?’

‘எனக்குத் தெரியல்லை. உங்களுக்குத் தெரியுமா?’

அவர் தலையசைத்து மறுத்தார். ‘நாம சந்தித்ததே இல்லை.’

நான் பியரை மூலையில் இருந்த மேஜைக்கு எடுத்துப் போனேன், அங்கே அவர் ஒரு சிறிய கணப்பில் நெருப்பு மூட்டி இருந்தார். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பியரை வாங்கினேன். மறுபடி முன்மேஜைக்குப் போன போது அவர் அங்கே இல்லை, வெளியே வரவுமில்லை. நான் மேஜையில் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு, எனக்கு பியரை ஊற்றிக் கொண்டேன், குடித்தேன், அதையே மறுபடி சில தடவைகள் செய்தேன், பிறகு வெளியே போனேன்.

மறுபடி பனி பொழிந்து கொண்டிருந்தது, இருட்டத் தொடங்கியது, கொஞ்ச நேரம் கழித்து நான் கீழே விழுந்தேன், எழுந்திருக்க முடியாமல் இருந்தேன், உண்மையாகச் சொன்னால் எழுந்திருப்பதற்குச் சரியான காரணங்கள் எதையும் என்னால் யோசிக்க முடியவில்லை.

எத்தனை நேரம் என்று தெரியவில்லை, அதற்குப் பிறகு நான் கண் திறந்த போது என் எதிரே ரால்ஃப் நின்று கொண்டிருந்தார், அவர் தலை பின்னே விழுந்து கொண்டிருந்த பனிப்பொழிவில் நிழலாகத் தெரிந்தது.

எழுந்திருக்க நான் அவசரமேதும் காட்டவில்லை. பனி குளிர்ந்தது, ஆனால் சௌகரியமாக இருந்தது. ‘இந்த மாதிரி சந்திப்பதை நாம் நிறுத்த வேணும்.’

அவர் என்னைக் குனிந்து பார்த்ததில் கொஞ்சம் கருணை இருந்தது, அவர் எனக்கு எழுந்திருக்க உதவி செய்தார், என்னை வாசஸ்தலத்துக்குத் திரும்ப இட்டுப் போனார்.

13

விடிவதற்கு முன் நான் விழித்து விட்டேன். என் உடைமைகளைக் கட்டி எடுக்க எனக்கு அதிக நேரம் ஆகவில்லை. மீதி இருந்த சில டப்பிகளையும், பெட்டிகளையும் குட்டிச் சமையலறையின் அலமாரிகளில் விட்டு வைத்தேன். அங்கே நான் வந்தபோது சில இருந்தன. நாம் நம் பங்குக்குக் கை மாற்றித் தர வேண்டும்.

வெளிச்சம் வந்த போது நான் குடிலை விட்டுப் போனேன். வெளியே பளிச்சென்று, நிர்மலமாக இருந்தது. ஆனால் அந்த நிலை நீடிக்காதென்று எனக்குத் தெரியும். ரால்ஃபின் குடிலில் நின்று, நான் போகிறேன் என்று அவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. என்னை என் குடிலுக்குக் கொண்டு சேர்த்த பிறகு நேற்றிரவு அவர் குட்நைட் என்று சொல்லி விட்டுப் போயிருந்தார். பிறகு அவர் வரவில்லை. அவருக்கு என்னோடு ஒரு வேலையும் இனி இல்லை, நான் போவதற்குக் காத்திருந்தார்.

அல்லது நான் அப்படி நினைத்தேன். ஆனால் என் மேஜையில் ஒரு காகிதத்தில் குறிப்பு ஒன்றைக் கண்டேன். ‘நான் நாளை இரவு வருவேன்,’ அது சொன்னது. ‘நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எனக்குச் சொல்ல வேண்டும்.’

ஆனால் என்னால் அதைச் செய்ய முடிந்திருக்கவில்லை, அதனால் நான் வெளியேறினேன்.

அவரை இன்னும் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் தொடர்பு அற்றுப் போயிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் என்ன செய்தாரோ அதை நல்ல காரணங்களுக்காகச் செய்தார் என்று எனக்குத் தெரிந்திருக்கிறது. எங்களுக்கு இடையில் எதுவும் நுழைந்து பிளவு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லாம் வேறு விதமாக முடிந்திருக்கலாம். அது என்னைக் குடையாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், குடைந்ததில் நான் மட்டுமே ஏதும் செய்ய முடியுமா என்று பார்க்க நான் எண்ணும் நிலைக்குப் போயிருந்தேன், உடைந்த ஒரு எந்திரத்தைத் துவக்கி மூடிப் பார்ப்பதைத் திரும்பத் திரும்பச் செய்வதைப் போல ஏதோ செய்தேன்.

அது அவர் தவறில்லை. நாம் அனேக நேரம் பிறரையே மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தாலும், அவர்கள் சீர் செய்து கொடுத்த பாதைகளிலேயே நாம் நடந்தாலும், நம் வாழ்வை நம்மைத் தவிர வேறு யாரும் வாழ முடியாது.

எந்தத் திக்கில் போவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இருட்டில் காலை புலருமுன் இருந்த சில மணி நேரங்களில் எதிரொலிகளைக் கேட்டபடி, புகையும் மரத்தின் நெடி என்னைச் சுற்றிச் சுழன்றபடி, என் படுக்கையில் படுத்திருந்தபோது, அதுதான் அறிய வேண்டிய ஒன்று என்று சந்தேகப்பட்டேன்.  நமக்கு ஓர் இலக்கு இருந்தால், சிலதை எல்லாம் நாம் கண்டு பிடிக்கவே முடியாது. அது என்ன இலக்காக இருந்தாலும், எத்தனை சிறியதானாலும். எங்குமே போகாது, வெறுமனே காத்திருப்பவர்களின் காலடியில் மட்டுமே விழுவதற்காகச் சில பாதைகள் உள்ளன.  பின் இரவில் ஆடிகளில் உற்று நோக்கி, அங்கு ஒரு அந்நியனைப் பார்க்கிறவர்கள். பனியால் குருடாகி, வீடு திரும்பப் பாதை தெரியாமல் துடுப்பு வலிப்பவர்கள். அதனால்தான் ரால்ஃப் அதை எங்கும் காண முடியவில்லை. அவர் மிகவும் தீவிரமாகத் தேடி இருக்கிறார்.

நான் ஏரியின் விளிம்போரமாக கொஞ்ச தூரம் நடந்தேன். அந்தத் தீவுகளைப் பற்றி நான் நினைத்தது தவறு என்று புரிந்து கொண்டேன். அவற்றைப் பார்த்தால் தனித்தனியாக இருப்பது போலத் தெரிந்தன. ஆனால் அவை மிதக்கவில்லை. ஒவ்வொரு தீவும் நீர்ப் பரப்புக்குக் கீழே போகிறது, ஏரியின் அடித்தளம் வரை நீள்கிறது. அவை எல்லாத் திக்கிலும் தொடர்கின்றன, மற்ற தீவுகளின் அடித்தளங்களைச் சந்திக்கின்றன, இணைகின்றன. மேல் பரப்புக்குக் கீழே, அவை எல்லாம் தொடர்புள்ளவை. ஒன்றின் மீது நாம் நின்றால், அவை எல்லாவற்றின் மீது நாம் நிற்கிறோம். நாம் ஒருவரானால், நாம் எல்லாரும்தான்.

அந்த வாசஸ்தலத்தைத் திரும்பிப் பார்த்தேன், அதை இப்போது அறிந்து கொண்டேன். அது ஒரு மகிழ்வான இடமாக இருந்தது, என் சிறு பிராயத்திலிருந்து எனக்குக் கிட்டிய கடைசி நினைவு அது. நாங்கள் மூவரும் மேற்கொண்ட கடைசி விடுமுறைப் பயணம் அது, என் அப்பா இன்னும் சிரிக்கக் கூடியவராக இருந்தார், என் அம்மா எப்போதும் எதையாவது செய்த வண்ணம் இருந்தாள், எப்போதும் எதையாவது திட்டமிட்டபடி இருந்தாள், எப்போதும் நகர்ந்த வண்ணமிருந்தாள். எனக்கு அப்போது எட்டு வயது. காட்டில் ஒவ்வொரு நாளும் நடந்து போனோம், காயாக்கில் பயணித்தோம், கரியடுப்பில் நிறைய வாட்டி உண்டோம்.

இரண்டு வாரங்கள் கழித்து என் அம்மாவுக்குப் புற்று நோய் என்று கண்டு பிடித்தோம். ஒன்பது மாதம் கழித்து என் அப்பா தான் செய்ததைச் செய்தார்.

அதை நான் அப்போது அறிந்திருக்கவில்லைதான். அவள் போய் விட்டாள் என்று மட்டும் தெரிந்து கொண்டிருந்தேன். அது நடந்து எத்தனையோ காலம் கழிந்து விட்டதால், சிறிது தெளிவுடன் நான் திரும்பப் பெறக் கூடிய ஒரே நினைவு அவளுடைய ஒரு பிம்பம்தான். தபாலில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தவள், கைகளைக் கட்டியபடி, எங்கள் பழைய வீட்டின் முன்புறம் இருந்த வேலிக்கருகே நின்ற அந்தக் காட்சிதான். எனக்காகவோ, என் அப்பாவுக்காகவோ அவள் காத்திருக்கவில்லை. உருப்படியான எதற்காகவும் இல்லை. அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததாகவோ, என்னை அணைத்ததாகவோ, அல்லது எனக்கு ஒரு சாண்ட்விச்சைத் தயாரித்ததாகவோ,, நான் உறங்குவதற்கென்று எனக்கு ஒரு பாட்டுப் பாடியதாகவோ ஏதும் எனக்கு நினைவில்லை.

தபாலில் வரப் போகிற ஏதோ ஒரு உபயோகமற்ற பொருளுக்காகக் காத்திருந்தபடி, அந்த வேலிக்கருகில் நின்றவளாகத்தான் நினைவு வருகிறது.

நான் நடந்தேன். தரையிலிருந்த பனி அடர்த்தியாக இருந்தது, குளிர் கடுமை, ஆகாயம் இமம் சூழ்ந்து இருந்தது, தாழ்ந்து கொண்டே வந்தது. மரங்களால் நான் அதை முதலில் கவனிக்கவில்லை, இறுதியாக, பனி கொட்டத் துவங்கியது, நான் மேலே பார்த்தேன், அது மாலை முழுதும் விழவிருக்கிறது என்று அறிந்து கொண்டேன். நான் அந்நேரம் நான்கைந்து மணி நேரம் நடந்திருந்தேன், அரை நாள் நடந்திருந்தேன். பல முறை திக்குகளை மாற்றி இருந்தேன், என் பாதையை சில பாகைகள் மாற்றி இருந்தேன், இப்படியும் அப்படியும், தற்செயல் நிகழ்வான மாறுதல்கள் அவை.

சிலர் குறிக்கோள்களோடு பிறக்கிறார்கள். சிலர் வாழ்வில் பிற்பகுதியில் அதைக் கண்டு பிடிக்கிறார்கள், அல்லது ஏதோ ஒரு இடத்தையோ, மனிதரையோ அதற்கான நிலையில் இருக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றவர்கள் வெறுமனே காத்திருந்து வாழ்வைத் தீர்க்கிறார்கள், ஏனெனில் ஏதோ ஒரு வழியில் அதைத்தான் நாம் செய்கிறோம்.

ஆனால் சிலர் அதைச் செய்வதில்லை. அதைச் செய்ய முடியாதவர்கள் அவர்கள்.

சிலர் குடித்துச் சாவைத் தேடுகிறார்கள், டான் போல- என் தாத்தா, அவரை நான் சந்தித்ததே இல்லை. அந்தக் காத்திருப்பை நிறுத்த அவருக்கென்று ஒரு வழி இருந்தது, தொடர்ந்து ஒரு வட்டப் பாதையில் போனார், குடிபோதையில் சிக்குவது, போதை தீர்ந்ததும் வலியில் சிக்குவது, மறுபடி குடிப்பது, இந்த மெதுவான, மிடறு மிடறாக மூழ்கிப் போவதற்குச் சாட்சியாக இருந்ததுதான் என் அப்பாவை அந்த வேலையைச் செய்து என் அம்மாவுக்கு உதவ வைத்தது. என் அப்பாவை நான் கடைசியாகப் பார்த்தது, இருபது வருடங்களுக்கு முன்பு, அவர் என்னிடம் அதை விளக்க முயன்றார். அப்போது நானுமே குடிபோதையில் இருந்தேன், அவர் மீது கோபம் கொண்டிருந்தேன், அல்லது உலகத்தின் மீது, அல்லது வேறெதன் மீதோ, நான் எதையும் கேட்கவில்லை.

நான் அதை விட மேலான மனிதன் என்று நினைத்தேன். அவரை விட மேல், அவருடைய அப்பாவை விட மேல். நாங்கள் எல்லாரும் தேடிக் கொண்டிருந்த ஒன்றை நான் கண்டு பிடித்து விடுவேன் என்று நினைத்தேன், அவர்கள் கவனிக்கத் தவறிய அந்தப் பாதையைக் கண்டு விடுவேன். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விட்டதாக நான் நினைத்திருந்தேன். அல்லது பகுதியையாவது, குறைந்தது அதையாவது. நாங்கள் மூவருமே நீரில் நின்ற மூன்று தீவுகள், எங்கள் கால்கள் அதே ஏரியின் படுகையில் ஊன்றப்பட்டிருந்தன, அதே நீர் ஓட்டங்களால் இணைக்கப்பட்டு சூழப்பட்டிருந்தன என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை. அல்லது ஒருகால் நான் ஒரு தீவாக ஆகவே இல்லை, அந்த அளவு வளர்ந்திருக்கவில்லையோ.

ஒருகால் நான் காயாக்கில் தொலைந்து போன ஒரு பையன், எனக்கு முன்னால் அங்கே வந்திருந்த மனிதர்களின் நடுவே ஒரு பாதையைக் காண முனைந்திருக்கிறேன், ஆனால் எப்போதும் இருட்டில் அதைச் செய்கிறேன், என்றென்றும் அவர்கள் மீதே மோதிக் கொண்டிருக்கிறேனோ.

நான் நடந்தபடி இருந்தேன், எங்கே போகிறேன் என்பதைப் பற்றி கவனம் இல்லாமல் போனேன். எங்கே மரங்களிடையே இடைவெளி இருந்ததோ அது போதுமானதாக இருந்தது. யாரோ ஒருவர் சாலையை அமைத்ததால்தான் அதை நாம் பின் தொடர்கிறோம், அது அங்கே இருந்தால் அது பாதையாகத் தெரிகிறது, அது ஒரு அர்த்தமுள்ள இடத்திலிருந்து அர்த்தமுள்ள இன்னொரு இடத்துக்குப் போகிறதென்று எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அது அப்படி இல்லை. காட்டில் எந்த இடமும் இன்னொரு இடத்தை விட மேலானதல்ல. அது போலவே, நாம் கடக்கும் ஒரு கணம் என்பது எங்கேயும் போகவில்லை, மற்ற கணங்களின் மீதே படிகிறது, முன்பு-நடந்தது-இப்போது- போய் விட்டது என்ற குளிர்ந்த பருப்பொருளோடு, உருகி, முன்னே இருந்ததோடு கலக்கிறது.  

நான், அடர்ந்த காட்டுக்குள் உறைந்த பனிப் பொதியில், சிறு கைப்பெட்டியோடு போய்க் கொண்டிருந்த மனிதனாய், நடந்து போய்க் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக தூரத்தில் ஒரு வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கினேன். இந்நேரம் அங்கு காரிருளாக இருந்தது, அதனால் அந்த வெளிச்சம் எத்தனை தூரத்தில் இருந்தது என்பது தெரியவில்லை. அது ஒரு பொருட்டாக இல்லை, நான் திரும்பிப் போகப் போவதில்லை.

இன்னும் ஒரு மணி நேரம் போல ஆகியிருக்கும், நெருப்பு ஜ்வாலைகளின் வெடிப்பை நான் கேட்கவாரம்பித்தேன். என்னைச் சுற்றி இருந்த மரங்கள் பகலில் தெரிந்த மாதிரியேதான் இருந்தன. என் அப்பா அதைப் பற்றிச் சொன்னது தவறு, அவருக்கு முன்னால் அவருடைய அப்பா சொன்னதும்தான். அவை ஏதும் விசேஷமான வகை மரங்களில்லை, மற்றவை போலவே இருந்தவைதான்.

ஆனால் அவை நெருப்புப் பற்றி இருந்தன. அதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

நான் நெருப்பு ஜ்வாலைகளுக்குள் நடந்தேன், எரியும் காட்டுக்குள் ஆழப் போனேன். என்னைச் சுற்றி எங்கும் மஞ்சள்- ஆரஞ்சு நிறமாக ஆகும்வரை, தீய்ப்பதாக இருந்தது. நான் அப்போது காட்டின் தரையில் அமர்ந்தேன், ஜ்வலிக்கும் கங்குகள் கருத்த ஆகாயத்திலிருந்து புரண்டு விழுவதைப் பார்த்திருந்தேன்.

துப்பாக்கி ரவை நம் மூளைக்குள் குடைந்து போவது போகும்போது எப்படி உணர்வோமோ அப்படித்தான் எரியும் மரங்களும் தெரிந்தன. மரங்களில் வலியை உணரும் திசுக்கள் இல்லை அதனால் நெருப்பு அந்த மாதிரி வலியாகக் கொணராது. அது தூலமானதல்ல. அது எல்லாவற்றின் இறுதியிலும் இருக்கும் நியாயத்தின் நெருப்பு. நிரந்தரமான, மாற்ற முடியாத தவறுகளையெல்லாம் எரிப்பது, உலகின் விளிம்பிலிருந்து பறந்து போவதைப் போன்றது. அது கடைசி ஒலியின் தாக்கும் எதிரொலி, எல்லாவற்றையும் முடிக்க நான் சுட்ட துப்பாக்கி ரவை தாக்கும் ஒலி.

அதனால்தான் நான் எப்போதும் ரால்ஃபுக்கு முன்னே போய் விடுகிறேன், அந்தக் கடைசி பியரைச் சேர்ந்து குடிக்கிறேன். என் அப்பாவிடம் நான் என்ன செய்தேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் தலையில் முத்தமிட்டு உயரத் தூக்கிய பையன், குடும்பத்தினர் வீட்டை விட்டு நீங்கும் வரை காத்திருந்து விட்டு, அந்தத் தலையைச் சுட்டுச் சிதறடித்துத் தன் உயிரைத் தானே பறித்துக் கொண்டான் என்று எப்படிச் சொல்ல? அதில் பகுதி அந்தப் பையனின் தவறென்றாலும், அப்பாவின் தவறும் பகுதி அதில் உண்டு, இந்தத் தொடர் காலத்தின் துவக்கம் வரை போகும்.

ஏனெனில் அது அப்படி இல்லை. எனக்கு அப்போது இது தெரிந்திருக்கவில்லை, இப்போது எனக்குத் தெரிகிறது. அவர்கள் துப்பாக்கியையோ, ரவைகளையோ வாங்கவில்லை. அந்தக் காத்திருப்பைத் தம் கையாலேயே முடிப்பதால் அவர்கள் இறுதியாக புரிந்து கொள்கிறார்கள், தம் அப்பா தன் மனைவிக்கு, என் அம்மாவிற்கு, போய்ச் சேர்வதற்கு உதவுவதற்காகச் செய்ததை மன்னிக்கிறார்கள் என்றோ; அல்லது குடிபோதையடிமையாக ஆழ்வதால் – நான் செய்ததைப் போல – நான் என் தாத்தாவின் பாதைக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றோ, தமக்குத் தாமே சொல்லிக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அது செய்ய வேண்டியதாகத் தெரிந்தது. அல்லது அப்படி இருப்பதுபோலத் தெரிந்தது.

நான் அதற்காக வருந்துகிறேன் என்பது இப்போது கூட எனக்கு நிச்சயமாகவில்லை. நான் பின்னே விட்டுச் சென்ற என் மனைவியும், மகளும் கூட அதற்கு வருந்தவில்லை என்றிருக்கலாம். அது நடந்து எத்தனை ஆண்டுகளாயின என்பது எனக்கு இப்போது தெரியவில்லை. நான் என் மகளுடைய வாழ்விலிருந்து போய் விட்ட போது அவளுக்கு வயது எட்டு என்றாலும் அதைக் கணக்கிலெடுத்துச் செய்யப்பட்டதல்ல என் முடிவு, அதை ஒரு பொருட்டாக நான் உணர்ந்தேன் என்று நான் நம்பவில்லை.  அதை நான் ஒரு வினோதமான உடனொற்றுமை என்று ஏற்கிறேன். எட்டு என்ற எண்ணைப் பக்கவாட்டில் போட்டால் அதற்கு என்ன வடிவம் கிட்டுகிறது என்பதை நான் அறிவேன். அவள் தான் குளிக்கும்போது தன் தலை முடியை வாருவதை இன்னமும் செய்கிறாளா என்று யோசிக்கிறேன். அப்படிச் செய்வாள் என்று நம்புகிறேன். அதை அவளிடமிருந்து நான் பறித்து விடவில்லை என்று நம்புகிறேன். அவளுடைய அம்மா வேறொரு நபரைக் கண்டு பிடித்தாள் என்று நம்புகிறேன்.

சில மனிதர்கள் எரியும் காடுகளைக் கண்டு பிடிக்க விதிக்கப்பட்டவர்கள். அவர்களில் நான் ஒருவன். என் மனைவிக்கு அது கடைசியில் புலனாகி இருந்தது என்று நினைக்கிறேன். இது மேலான பாதை. அப்படி இல்லை என்றாலும் இனிமேல் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. நடந்தது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது.

ஆமாம், நான் செத்தது எனக்குத் தெரிந்திருக்கிறது. எனக்கு அதில் பிரச்சனை இல்லை. உயிரோடு இருந்தது அதை விட மோசமாக இருந்தது. உயிருடனிருப்பது என்பது ஒரு வாசகம், செத்துப் போன பகுதிகளில் நம்மால் எதையோ மாற்ற முடியும்போலத் தெரியும்போது அதை நாம் பயன்படுத்துகிறோம். நம்மால் முடியாதது அது.

காத்திருத்தல் என்பதே முடிவதற்கு நாம் காத்திருக்கிறோம்.

கொஞ்ச நேரத்தில் நான் எழுந்திருப்பேன், என் பெட்டியை எடுத்துக் கொள்வேன், எரியும் காடுகளின் மறுபக்கத்தின் வழியே வெளியே நடந்து போவேன், நடந்து கொண்டே இருப்பேன். ஒரு வழியாக அதில் இன்னும் பனி பெய்திருக்காத ஒரு சாலையைக் கண்டு பிடிப்பேன், அதில் மேல் நோக்கி நடப்பேன். வழியில் கடையில் பியரும் சிகரெட்டுகளும் வாங்குவேன், அந்த வாசஸ்தலத்தை நோக்கி நடப்பேன், அங்கே என் அப்பா என்னை உள்ளே வரவிட்டு, அறை ஒன்றை ஒதுக்குவார். என்னிடம் வலுவாக எரிந்த மரத்தின் புகை வாடை வீசுகிறது என்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பார்.

இது முன்பு நடந்திருக்கிறது. எப்போதும் நடந்து வருகிறது, ஒவ்வொரு கணமும் கால முடிவிலி வரை நீடிக்கிறது என்ற உண்மையாலேயே நாம் வட்டங்களில் சுழல்கிறோம் என்ற உணர்வை அது கொடுக்கிறது. எல்லாப் பாதைகளும் நாம் அவற்றைத் தொடர்ந்து போகும்போது நேரான பாதைகளாகவே தெரிகின்றன. திரும்பிப் பார்க்கையில்தான் அது வளைகோடு என்பதை அறிகிறோம். நாம் நம்மையும், நம்மை உருவாக்கியவர்களையும் சுற்றி வருகிறோம். காலத்தில் நம் புள்ளியைச் சுற்றியே நாம் சுழல்கிறோம். நாம் நிகழ்கிறோம், நாம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்போம்.

நான் ஒருவழியாக எழுந்திருப்பேன், மறுபடியும் நிகழ்வேன், அல்லது நிகழவிருப்பேன்.

ஆனால் இப்போதைக்கு இங்கே அமர்ந்திருப்பேன், என் காடுகள் எரிவதைப் பார்த்திருப்பேன்.

***                       ***

மூலக் கதையாசிரியர்: மைக்கெல் பிஷப் ஸ்மித் / தமிழாக்கம்: மைத்ரேயன் –(ஜனவரி 2022)

இக்கதை ‘த பெஸ்ட் ஆஃப் மைக்கெல் பிஷப் ஸ்மித்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. மூலக்கதையின் தலைப்பு, ‘த பர்னிங் உட்ஸ்’.

இந்தத் தொகுப்பைப் பிரசுரித்த நிறுவனம்: ஸப்டெரேனியன் ப்ரெஸ். 

புத்தகம் பிரசுரமான வருடம்: 2020

இதில் பிரசுரமான கதைகள் 1990 இலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை எழுதப்பட்டவை. பல பத்திரிகைகளில் பிரசுரமானவை.

Series Navigation<< எரியும் காடுகள்-3

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.