மூத்துத்தி மாமி

கிழப்பருவம் எய்தி, குழி விழுந்த ரெட் ஆக்ஸைடு தரை ரேழி. இரண்டு ஆள் அகலத்துக்கு கனமாய் இருக்கும் மரக்கதவின் பின்னால் ரேழி. கத்திரி வெயில் சுட்டெரித்தாலும், ஒரு மந்தமான வெளிச்சமும், நிழலும் ரேழிக்குள் நுழைபவரைச் சூழ்ந்து கொள்ளும்.

ரேழியின் வலதுபக்க அறை. அது தான் சமையல் அறையும், பூஜை அறையும். அதோடு ஒட்டிய மற்றொரு அறையில் படுக்கை, அலமாரி இத்யாதிகள். உத்திரத்திற்கு மேலே கொடுக்கப்பட்டிருந்த மர சட்டங்களுக்கு இடையே, வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சதுரத்தின் வழி, சூரிய ஒளி, பல துகள்களின் கலவையாய், நீண்ட வெளிர்மஞ்சள் நிறப்பின்னல் போல, தரைவரை நீண்டது. அந்த வெளிச்சத்தில், மின்னிய இருபுற மூக்குத்திகளோடு மதுரா மாமி, வெண்டைக்காயைத் தரையில் உட்கார்ந்து திருத்திக்கொண்டிருந்தாள். மண்ணெண்ணெய் அடுப்பில், உலை கொதித்தது. மத்தியான சாப்பாடு மாமாவிற்கு எப்போதும் ஆத்தில் தான்.

அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப
மழ கன்று இனங்கன் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே 
குவிமுலையீர் வந்து காணீரே

பெரியாழ்வார் பாசுரத்தை முணுமுணுத்தபடியே , கண் பார்க்க கைவேலை செய்தபடியிருந்தது. கண்ணனின் குழலழகை மனதால் கண்டு, அந்த சுருட்டைக் குழலைக்கட்டி அழகுபார்த்தாள். திருமணமான போது தாய்வீட்டுச் சீதனமாய் வந்த இரும்பு அரிவாள்மனை, அவளோடு ஈடுகொடுத்தது.

மதுரா மாமியின் பூர்வீகம் இதே, ஸ்ரீராஜகோபாலன் வாசம் செய்யும் மன்னார்குடி. தோப்பனார் வரதராஜ ஐயங்கார், அரங்கன் திருவடி சேர்ந்தபின்னர், அவர் சொல்லிக்கொடுத்த பாசுரங்களை அசைபோட்டப்படியிருப்பது ஒரு வித மன ஆறுதல்.

“மாமி மாமி”

“என்னடா சின்ன பட்டு ராணி? என்ன வேணும்?”

வானின் நீலத்தில் ரோஜாப்பூக்களால் நிறைந்த முட்டிவரை நீண்ட சட்டை; தலையில் முளைத்த சிறு தென்னை மரம் போல சின்னதாய் கட்டிய சிண்டு; கைகளில் ஒன்றாய் ரப்பர் வளையல்கள், அழகிய பெரிய கண்கள்; அதோடு ஆடும் தொங்கட்டான்கள்,கன்னத்திலும் நெற்றியிலும், மைப்பொட்டுகள்; ஒட்டிய கன்னம்.

மூன்று வயதான கிருதிக்குட்டி வாயில் விரல் சூப்பியபடி, மாமி சமைப்பதை வேடிக்கை பார்க்க நின்றிருந்தாள்.

அடுப்பிலிருந்த குக்கர் உஷ் உஷ் என்று சொல்லும் ஒவ்வொருமுறைக்கும், தன் உதடுகளில் கை வைத்து உஷ் உஷ்.

குக்கரோடு போட்டி.

“மாமி அது யாரு?”

அரங்கன் பள்ளிகொண்டிருந்த படம்.

“அவர் ரங்கநாதர்.”

சம்படங்கள் அடுக்கிய பெஞ்சில் அவளுக்கிருந்த துளியிடத்தில் அவரைப்போல சயனித்திருக்க முயன்றாள்.

மாமி, “எனக்கொரு கதை சொல்லுங்கோ. அன்னிக்கு சொன்ன கிருஷ்ணர் கதை”

“கிருஷ்ணரோட அம்மா யசோதைகிட்ட, ஊர்ல இருந்த கோபியர் எல்லாம், உங்க பையன் என் பின்னலை பிடிச்சு இழுக்கிறான், எங்காத்து வெண்ணைப்பானை எல்லாம் உடைச்சுட்டான், வெண்ணை எல்லாம் திருடிட்டான்னு சொன்னா”

“ம். அப்புறம்.”

“உங்கம்மாட்ட யாராவது நீ விஷமம் பண்றேன்னு சொன்னா அம்மா என்ன பண்ணுவா?”

“திட்டுவா. அடிக்கக்கூட செய்வா.”

“அதே தான். கிருஷ்ணரோட அம்மாக்கும் கோவம் ரொம்ப வந்துது. அவரைக்கட்டி போட்டுட்டா.”

“வெண்ணை திருடினியான்னு கேட்டா”

“இல்லை”

இடதும் வலதுமாய் கிருதி தலை ஆடியது.

“பொய் சொல்லாதே. வாயை காமி”

“”ஆஹ்”

“கிருஷ்ணர் வாய்க்குள்ள உலகமே தெரிஞ்சுதாம். யசோதைக்கு அப்போ தான் தெரிஞ்சுதாம் கிருஷ்ணர் தான் பகவான்னு”

“கதை முடிஞ்சுதாம்…”

“கத்திரிக்காய் காச்சுதாம்”

“கிருதி”.

அம்மாவின் குரல் கேட்டதும், கைகளை ஆட்டியபடி ஓடிவிட்டாள் கிருதி.

கிருதி, வீட்டின் சொந்தக்காரர் ராஜி மாமியின் மூன்றாவது பெண்.

மாமியின் வீட்டுக்கு தினம் ஒருமுறையாவது வருவது பள்ளிக்கூடம் போகாத கிருதியின் வழக்கம்.

ஞாயிறு பிற்பகலில் மூன்று குடித்தனத்தில் இருக்கும், பெண்களும் குழந்தைகளும் முற்றத்தை ஒட்டிய தாழ்வாரத்தில் தான் கூடுவார்கள்.

அங்கு தான் சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களின் ஒலிச்சித்திரத்தைக் கேட்டபடி, பெண்குழந்தைகள் தலையிலுள்ள ஈர், பேன்கள் வானுலகம் போகும். ஒற்றைத்தெரு பிள்ளையாருக்கு நந்தியாவட்டை மாலை தயாராகும். மிளகாய் வற்றல்களும், வடாம் வகைகளும் காய வைக்கப்படும்.

கிருதியின் அக்காக்கள், இருவரும் வீட்டுப்பாடம் எழுதுவார்கள்.

“மாமி மாமி. மூத்துத்தி தரியா”

“என்ன கிருதி வேணும் உனக்கு?”

“இது வேணும்”

மடியில் அமர்ந்தபடி, அய்யங்கார் மடிசாரிலிருந்த மாமியின் மூக்கை தொட்டாள்.

இருபக்கமும் எட்டு கல் வைத்த மூக்குத்திகள்.

“ஓ. தந்துட்டா போச்சு”

“கிருதி வா இங்கே”

அம்மா அழைக்கும்வரை மதுரா மாமியின் மூக்குத்திகளின் அழகை ரசித்தபடி அவள் கருவண்டு கண்கள் அலையும்.

மாமி அத்தனை நிறமில்லை. அழகுமில்லை. நெற்றியில் அவள் வைக்கும் நீண்ட கோபி பொட்டும், கல் வைத்த தோடுகளுக்கு இணையான இருபக்கமூக்குத்திகளும், எப்போதும் நிறைவும், அமைதியாய் இருக்கும் கண்களும், கிருதியை ஈர்த்தன.

கிருதியின் பாட்டி, அம்புஜம் மாமி, தன் மற்றொரு பிள்ளையின் வீட்டிலிருந்து வந்த பிறகு, கிருதி மதுரா மாமியின் வாசற்கடையில் தரிசனம் கொடுக்கும் பொழுதுகள் அறவே இல்லை.

கிருதியின் முகத்தைப்பார்க்காத நாட்கள் நகர்வது ஜானவாச ஊர்வலம் மாதிரி தான்.

“ஏற்கனவே கன்னம் ஒட்டி ஓன்னு இருக்கா. இதுல புள்ளையில்லாதவ கைபட்டா விளங்கினாப்ல தான்!”

இந்த போர்ஷன் வரை கேட்கவேண்டுமென்றே, உரக்கத் தன் மாட்டுப்பெண்ணுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார் அம்புஜம் மாமி.

வேதனையாக இருந்தாலும் ஒன்றும் சொல்லமுடியாது. இந்த கஷ்டத்தை வெளிப்படுத்தினால் வலி அதிகமாகலாமே தவிர குறைய வாய்ப்பில்லை.

பதினைந்து ஆண்டு திருமண வாழ்வில், சவுக்கடிகள் பல பெற்றதாலோ என்னவோ, மெளனமாக இருப்பது பழக்கமாகிவிட்டது.

மதுரா மாமி, மாமா போல இருப்பவர்களின் வீடுகளுக்கு, உற்சவமூர்த்தி போல சின்ன பிள்ளைகள் வலம் வருவதைக்கூட விரும்பாதவர்கள் அதிகம்.

மாமாவிற்கு இந்த பேச்சுகளை எப்போதும் மதிக்க தோன்றாது.

பொதுவான குழாயில் தான் எல்லாரும் குடிதண்ணீர் பிடிக்கவேண்டும்.

“எங்க போன நேத்திக்கு சாயங்காலம்? “

“பிக்கல் பிடுங்கல் இல்லாதவ. ஆத்துகாரரோட சாந்தி தியேட்டர்ல விடுதலை படமா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சொந்தக்காராளைப் பார்த்துட்டு, கடைத் தெருக்கு போயிட்டு வந்தோம்.”

“எப்படியோ நீயும் நாளை ஒட்டிடற”

அக்கரை பச்சை தத்துவம் மற்றவர்கள் பேசாத நாள் இல்லை. மூக்குத்தியை போல மெலிதாய் புன்னகைத்தபடி, குடத்தோடு திரும்பினாள் மதுரா மாமி.

மட்டையடி உத்சவம். ராஜகோபாலன் பல்லக்கில் அமர்ந்தபடி, கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அவர் கோபத்தின் அழகைக்காண ,எல்லாரும் வாசலில் அவசரமாய் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு, கையில் வெத்தலை, பாக்கு , கல்பூரம் என்று வாசலில் நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மூன்று குடித்தனங்கள் இருக்கும் வீட்டில் அத்தி பூத்த அமைதி.

மதுரா மாமியின் அந்த மூணு நாட்கள் ஆரம்பமாகிவிட்டன.

வீட்டுக்கு விலக்கென்றால் தாழ்வார வாசம் நிச்சயம்.

கொல்லைப்பக்கம் போக வேண்டுமென்றால், யாராவது கிணற்றிலிருந்து தண்ணீரைச் சேந்தித்தர வேணும்.

சாப்பிடும்போது தாழ்வார மூலையில் தட்டை வைத்து விட்டு, பத்தடி தள்ளி நிற்க வேண்டும். நடுவில் என்ன வேண்டுமானாலும், இப்படித்தான் எழுந்து எழுந்து போய் மூலையில் நின்றபின் தான், கரண்டியிலிருந்து தூக்கி வீசுகிறார்களோ என்பது போல உணவும் வீசப்படும்.

தலையணை இல்லை. பழைய புடவை விரித்துப்படுக்க வேண்டும்.

இந்த ஆத்தில் இல்லை பிரகடனத்தால் யார் கர்ப்பம், யார் இல்லை என்பது எல்லாருக்கும் அத்துப்படி.

பகலில் தீவெட்டி ஏந்தியவர்கள் முன்னே போக, ராஜகோபாலன் பல்லக்கில் வந்துக்கொண்டிருந்தார்.

மட்டையடி ராஜகோபாலனுக்கு மட்டுமா என்ன?

மூன்று நாட்களும் அனுபவிக்கும் உடல் வேதனைகளோடு, ஆச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அவமதிப்புகளும் பெண்ணாய் பிறந்ததே தவறோ என்று எண்ண வைக்கின்றன.

“கோபாலா”

“உனக்குப்புரியும் என் வேதனை”

மாமி மனத்தால் சேவித்தார்.

“அம்மாஆ…….”

மயிர்க்கூச்செறிந்த அலறல்.

ராஜி மாமியின் குடித்தனத்தில் பூஜை அறையிலிருந்து, தீப்பிழம்பாய் ஏதோ ஓடி வரவர, தீ மேலெழுந்துகொண்டிருந்தது.

கிருதி தான்!

அணிந்திருந்த சட்டையின் கீழிருந்து தீ, கொஞ்சகொஞ்சமாய் மேலே ஏறிக்கொண்டிருந்தது.

வீட்டுப்பூஜை மாடம் தரையிலிருந்து இரண்டடி கூட இல்லை. எப்போதும் எரியும் காமாட்சி விளக்கு, கிருதிக்கும் எட்டியிருக்கிறது.

அப்பாவை போல, கற்பூரம் காட்ட யாருமில்லாத நேரத்தில் முயன்றிருக்கிறாள்.

வலப்பக்கம் தொடையும் வயிறும் நெருப்பால் சூழப்பட்டு, மூன்று வயதுப்பிள்ளை வேதனையின் உச்சத்திலிருந்தது.

யோசிக்க அவகாசம் இல்லாமல், ஒதுங்கி உட்கார்ந்திருந்த தாழ்வார மூலையிலிருந்து ஓடிப்போய், இதுவரை தாண்டாத ஆச்சாரக்கோடுகளைத்தாண்டி, பூஜை அறையின் உள்ளிருந்த பிள்ளையை நெஞ்சோடு அணைத்து, தன் உடல் சுட்டதையும் பார்க்காமல் தீயை அணைத்தே விட்டாள் மதுரா மாமி.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா!

மூத்துத்தி மாமி என்று மழலை மொழியில் கொஞ்சும் பிள்ளை, மாமி அணைத்துப் பிடித்ததும் மயங்கியது. உணர்வின்றி தீக்காயங்களுடன், மேல் தோல் நழுவி, உள்ளிருக்கும் சதையும், ரத்தமுமாய் கைகளில் பிடித்த நொடி, பேச்சு வரவில்லை.

தோள் இணை மேலும் நன் மார்பின் 
     மேலும் சுடர் முடி மேலும் 
தாள் இணை மேலும் புனைந்த 
     தண் அம் துழாய் உடை அம்மான் 
கேள் இணை ஒன்றும் இலாதான் 
      கிளரும் சுடர் ஒளி மூர்த்தி 
நாள் அணைந்து ஒன்றும் அகலான் 
      என்னுடை நாவின் உளானே!

முன்வாசலில் கோபாலன் விடைபெற, பிள்ளை விடைபெற்றுவிடக்கூடாதென்று சுடர் ஒளி மூர்த்திக்கு விண்ணப்பித்தவாறே இருகைகளிலும் ஏந்திக்கொண்டு முன்வாசலுக்கு தலைதெறிக்க ஓடினாள் மூத்துத்தி மாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.