இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், பிறகு முஸ்லிம் லீக் ஆதரவாளராகவும் இருந்தவர் மௌலானா ஸஃபர் அலி கான். தன்னுடைய பத்திரிகை ஜமீன்தாரில் விடுதலை வேட்கைக் கருத்துகளை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதியதால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். இஸ்லாமிய அடையாளங்களுடன், கொள்கைகளுடன் வாழ்ந்த ஸஃபர் அலி கான் இராமனின் புகழ் பாடும் கவிதைகளை எழுதியுள்ளார். அக்கவிதைகள் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை அல்ல என்னும் கருத்து கொண்டவர்.
கலாசாரத்தையும் மதநம்பிக்கைகளையும் பிரித்து அவற்றுக்கிடையில் குழப்பம் வராத அணுகுமுறையை ஸஃபர் அலி கான் கடைப்பிடித்துள்ளார். அவருடைய கவிதைகள் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் படிக்கும் உருது பத்திரிகையில் வெளியாயின. இந்தியக் கலாசாரமும், இஸ்லாமியக் கோட்பாடுகளும் அவருடைய எழுத்துகளில் ஒன்றுக்கொன்று முரண்படாமல் வழங்கப்பட்டன. தன்னுடைய பத்திரிகையில் இந்தியக் கலாசாரத்தின் தொன்மைகளையும், கோட்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாக்காமல் அவை மரபின் அடிப்படையில் பேணப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மண்னின் மரபுக்கும், கடைப்பிடிக்கும் மதக்கொள்கைக்கும் இடையில் எந்தவிதமான சமரசம் செய்துகொள்ளாமல் அவரால் எழுத முடிந்தது.

இஸ்லாமியர்களின் மொஹர்ரம் பண்டிகையும், இந்துக்களின் தசரா பண்டிகையும் இணையும் நாள்களில், அவை இரண்டையும் ஒன்றாகக் கொண்டாடலாம் என்னும் கருத்தையும் ஸஃபர் அலி கான் முன்வைத்துள்ளார். இக்கருத்தை அவர் முன்வைத்த ஆண்டு 1917 எனச் சொல்லப்படுகிறது.
ஸஃபர் அகி கானின் தந்தை ‘ஜமீன்தார்’ வாரப் பத்திரிகையைத் துவங்கியபோது, அது விவசாயச் செய்திகளைக் கொண்ட பத்திரிகையாக இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பின் ஸஃபர் அலி கானின் தலைமையில் அரசியல் பத்திரிகையாக மாற்றமடைந்தது. இஸ்லாமியக் கட்டுரைகள் அதில் வெளியாயின. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து எழுதப்பட்ட கவிதைகளை வெளியிட்டு காலனீய ஆதிக்கத்தின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டது. பின்னர் ‘ஜமீன்தார்’ பத்திரிகை பிரிட்டிஷ் அரசால் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டது.
பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டு உருதுவில் இலக்கியம் படைத்தவர்கள் வரிசையில் ஸஃபர் அலிகானும் ஒருவர். இந்திய விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, ‘ஜமீன்தார்’ பத்திரிகையை நடத்தி அதில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசிய அவர், பிரிவினைக்குப் பின்னர் லாஹூரில் தன்னுடைய வாழ்கையைத் தொடர்ந்தார்.
இன்குலாப்-ஏ-ஹிந்த் கவிதையில் இந்திய விடுதலை குறித்த தன் கனவை எழுதினார்.
இந்திய விடுதலை என்பது அனைத்து நாடுகளுக்கும் விடுதலை அது விடுதலை மாளிகையை மிகவும் வலுவான அஸ்திவாரமிட்டு எழுப்புகிறது
(இன்குலாப்-ஏ-ஹிந்த் ஹை சாரே ஜஹான் கா இன்குலாப்
கர்ரஹாஹை கஸ்ர்-ஏ-ஆஸாதி கி புனியாத் உஸ்தவார்)
பிரிட்டிஷ் அரசின் தொடர்ந்த ஆதிக்கத்தால் மாறிய இராமனின் போதனைகளை, காலமாற்றத்தால் மாறியதாக மதபோதகர்கள் நினைத்துள்ளார்கள் என்னும் கருத்தைத் தன் கவிதையில் எழுதியுள்ளார்.
உன்னுடைய (இராமனின்) போதனைகள் பறங்கியரின் திட்டங்களால் அழிக்கப்பட்டன மதபோதகர்கள் மாறுகின்ற காலத்தின் மீது பழி சுமத்துகிறார்கள் (தேரி தாலீம் ஹிவி நஸ்ர்-ஏ-குராஃபத்-ஏ-ஃபிறங்க் பிராமண்கோ ஏ கிலா கர்திஷ்-ஏ-ஐயா சே ஹை)
முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் குழப்புபவர்களை எள்ளி நகையாடுவதற்கு இராமனையும் இராவணனையும் கவிதையில் வைத்துப் பாடியுள்ளார்.
இராமன் பெயரை உச்சரித்துக்கொண்டே இராவணனைக் கடவுளென்பர் (கோயி லேத்தா ஹை மூஹ்சே ராம் கா நாம் மகர் கஹ்தா ஹை ராவண்ஹி குதா ஹை)
தன்னுடைய ‘கிருஷ்ண ஜெயந்தி’ கவிதையில், நண்பர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடலாக கிருஷ்ணனுக்கு தான் வந்தனம் சொல்லும் காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வஜீர் சந்த் ஸஃபர் அலி கானிடம் கேட்டான் ‘ஸ்ரீகிருஷ்ணனுடன் உனக்கென்ன இணக்கம்?’ இவன் சொன்னான், ‘அவன் தான் வாழ்ந்த காலத்தில் அனைவருக்கும் ஆசானாக இருந்தவன் அவனுக்கு இந்நாளில் வந்தனம் சொல்வது எனக்கு மகிழ்வை அளிக்கிறது’ (வஜீர் சந்த்னே பூச்சா ஸஃபர் அலி கான்சே ஸ்ரீக்ருஷ்ண்சே கியா தும்கோபி இராத்த் ஹை கஹா ஏ உஸ்னே வோ தே அப்னே வக்த் கே ஹாதி இஸ்லியே ஆதாப் உன்கா மேரா சாதத் ஹை)
ஹஸ்ரத் மோஹானியைத் தொடர்ந்து ஸஃபர் அலி கான் எழுதிய கிருஷ்ண ஜெயந்திக் கவிதையையும் படித்து அன்றைக்கு சமூகத்தில் நிலவிய இணக்கத்தை வியக்கிறோம்.