குருதிப் பலி

எங்கும் பெரும் நீல வெளி. நடுங்கியபடி என் சங்கிலிகளை இழுத்துக் கொண்டு வலியில் முனகியபடி நடக்கிறேன் நான். பின்னிருந்து உடலைத் துளைத்து வெளியேறும் விசையுடன் அடிக்கொன்றாக கசையடி. நாலாபுறமுமிருந்து என்மீது வந்து விழும் கற்கள். வசைச் சொற்கள். காரி உமிழ்தல். சின்னஞ்சிறுவர்கள் நால்வர் என்னை நோக்கி நின்று சிறுநீர் கழித்துச் சிரிக்கிறார்கள். மேலிருந்து முடை நாற்றம் வீசும் கிழிந்த துணிகள் என் மீது விழுந்து கொண்டேயிருக்கின்றன. நான் யாரையோ பெயர் சொல்லி அழைத்து கெஞ்சிக் கேட்டபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடக்கிறேன். என் முன் சற்று தொலைவில் ஒரு பெரிய பீடம். ஆர்ப்பரித்தபடி அதைச் சுற்றிலும் இளம்பெண்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் தங்கள் கருவுற்ற வயிற்றில் ஒரு கையை அவ்வப்போது வைத்து ஏதோ சொல்லிக் கொள்கிறார்கள். பீடத்தில் இருந்த குழிவில் தலை வைத்து அசைவற்றுக் கிடக்கிறேன் நான். கூட்டத்தின் ஓசை உச்சமாகிறது. முள்முடி தரித்த நீண்ட அங்கியணிந்த ஒருவர் ஒரு பெரிய வாளேந்தி அப்பீடத்தில் ஏறுகிறார். கூட்டத்தில் அவரை வாழ்த்திப் பேரொலி எழுகிறது. எனக்கும் திரும்பி அவரை ஒருமுறையேனும் பார்த்து விடவேண்டும் என்று இருக்கிறது. களிப்பின் உச்சத்தில் சில பெண்கள் தங்கள் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு இரத்தத்தைப் பீச்சியடித்து ஆடுகிறார்கள். எல்லோரும் நெருக்கியடித்துக் கொண்டு அப்பீடத்தைத் தொட்டு விட நெருங்குகிறார்கள். நீண்ட அங்கியணிந்தவர் எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கையசைக்கிறார். மொத்தக் கூட்டமும் மௌனத்தில் உறைகிறது.

“அதன் பொருட்டே இதை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த இரத்தம் நம்மை பரிசுத்தவான்களாக மாற்றுமாக,” என்று உரக்கச் சொல்லியபடி தன் வாளை ஓங்குகிறார். நான் உள்ளிருந்து ஒரு துளி கண்ணீரை வெளித்தள்ளுகிறேன்.

நீண்ட அங்கியணிந்தவரின் காலடியில் மூன்று சொட்டு இரத்தத் துளிகள் விழுந்து படிகின்றன.

“ஹேய் கெவின், என்ன வேணும் உனக்கு? சொல்லு, சீக்கிரம் சொல்லு. கடவுளே, என்னால இதத் தாங்க முடியலயே! டேய் முட்டாள், உன்ட்ட தான கேக்றேன். உனக்கு என்ன வேணும்? நான் ஏதாவது வாங்கித் தரணும் உனக்கு. இந்த உலகத்துல எந்த மூலைல அது இருந்தாலும் நான் வாங்கிட்டு வருவேன் மை டியர். சொல்லு, சொல்லு,” அடக்க முடியாத சந்தோசக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார் ஜோர்டான்.

“என்ன ஜோர்டி, என்ன ஆச்சு ஒங்களுக்கு? என்ன விஷயம் சொல்லுங்க மொதல்ல.”

“அடப் போப்பா, அது பெரிய சஸ்பென்ஸ் உனக்கு! என்ன வாங்கிட்டு வரணும் சொல்லு நீ.”

“என்ன மிஸ்டர்.பிளே பாய், எதுவும் சிட்டுக்குருவி….”

“நோநோ மை டியர். நீ கெஸ் பண்ணவே முடியாது. பொறு பொறு, இன்னும் கொஞ்ச நாள்ல அங்க இருப்பேன். சரி, உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா! நானே வாங்கிட்டு வரேன்.”

ஜோர்டான் வருடத்திற்கு இரு முறை ஜமைக்காவிற்குச் செல்வார். என்னை விட கிட்டத்தட்ட முப்பது வயது பெரியவர். சின்ட் மார்ட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கி பதட்டத்தோடு திருதிருவென முழித்துக் கொண்டு நின்ற என்னை ஓடி வந்து கட்டிப் பிடித்து வரவேற்றவர் ஜோர்டான். ஆம், அவருக்கு அறிமுகமெல்லாம் தேவையேயில்லை. அன்று ஆரம்பித்த அந்தக் கலகலப்பான உரையாடல் இன்றும் அவருடன் இருப்பதே எனக்கு ஓர் ஆச்சரியம் தான். எப்போதெல்லாம் அவர் விடுமுறைக்குச் செல்கிறாரோ அப்போதெல்லாம் நான் என் குடும்பத்தைப் பிரிந்து வந்த பொழுதுகளைப் போல வாடி விடுவேன்.

ஜோர்டானது முதல் மகன் ஓர் ஓவியக் கல்லூரியில் படிக்கிறான். இரண்டாவது மகன் படிப்பில் ஆர்வமின்றி தன் அம்மாவுடன் சேர்ந்து பிஸ்கட்டுகள் தயாரித்து விற்கிறான். எப்போதும் தன் மகன்களைப் பற்றி பெருமையாகப் பேசுவது, அவர்களது புகைப்படங்களை எடுத்துக் காட்டுவது, அவர்கள் குடும்பத்தோடு ஆடிப் பாடும் பாடலைப் பாடி ஆடுவது என்று ஜோர்டானைப் போல இருக்கலாமே என்று அடிக்கடி தோன்ற வைத்து விடுவார். அவர் வயதில் நாமெல்லாம் எப்படி இருக்கப் போகிறோமோ என்று எனக்கு நானே கேட்டுச் சலித்துக் கொள்வேன். நைட் கிளப்பிற்குச் சென்றால் முதல் பாட்டம்-சிப் அடிப்பதும் அவர்தான், மேடையில் ஏறி ஒரு பாப் பாடகனாகிப் பாடுவதும் அவர்தான், மொத்தக் கூட்டத்தையும் ஆட வைப்பதும் அவர்தான். இந்தத் தீவு முழுவதும் அவரை ‘மார்லி, மார்லி’ என்று அழைப்பதை பெரும் கவுரவமாக நினைத்து பாப் மார்லியைப் போலவே சைகைகளை செய்து துள்ளிக் குதிப்பார்.

..

சில மாதங்களுக்கு முன்பு ஜமைக்காவிற்குச் சென்று விட்டுத் திரும்ப வந்தவர் இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை. எவருக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை. நேரில் சென்று அவரது கதவைத் தட்டினேன். உள்ளே மெல்லிய சோகமான இசை கேட்டுக் கொண்டிருந்தது. எந்த பதிலும் வரவில்லை. தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு கதவு திறந்தது. அறை முழுக்க மரியுவானா புகை, கண்கள் சிவக்க என்னைப் பார்த்து உள்ளே வருமாறு கையசைத்தார் ஜோர்டான்.

“ஜோர்டி, சட்டையப் போட்டுட்டு வெளியே வாங்க. எனக்கு இந்தப் புகைலாம் ஆகாது.”

“ஓ மை டியர் கெவின். ஐம் ஃபக்ட். டேம் இட். ஐம் ஃபக்ட்,” என்று கத்தினார்.

“ஜோர்டி, காம் டவுன். வாங்க வெளிய போய் பேசலாம்,” என்று உள்ளே சென்று அவரது சட்டையை எடுத்து மாட்டி விட்டு அவரை அழைத்துக்கொண்டு வந்தேன். மெல்ல நடந்தோம். வழக்கத்திற்கு மாறாக சோகமான பாடலொன்றை முனகிக் கொண்டு நடந்தார் ஜோர்டான். நான் எதுவும் கேட்காமல் அவரே ஆரம்பிக்கட்டும் என்று உடன் நடந்தேன்.

மாஹோ கடற்கரையை அடைந்தோம். திடீரென ஓடத் தொடங்கியவர் நேராக கடலுக்குள் சென்று விழுந்தார். நான் திகைப்படைந்தாலும் அப்படியே நின்று அவரை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எழுவதும் தாவிக் குதித்து விழுவதுமாக சற்று நேரம் கத்திக் கொண்டேயிருந்தார். சற்று முன்னகர்ந்து சென்றேன். கேட்கச் சகிக்காத வசைச் சொற்களால் யாரையோ திட்டிக் கொண்டிருந்தார். நான் அப்படியே உட்கார்ந்து அவருக்காகக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் ஓய்ந்து விழுந்தவர் மெல்ல எழுந்து என்னைப் பார்த்து ஏதோ அப்போதுதான் பார்ப்பதைப் போல கையசைத்தார். நானும் சிரித்தபடி கையசைத்தேன்.

“சரி, என்ன விஷயம் ஜோர்டி? அறைக்குள் பூட்டிக் கிடக்கிற ஆளில்லையே நீங்க?”

“ம்‌ம்.. நான் எப்படின்னு உனக்கு நல்லாவே தெரியும் இல்லையா கெவின்? என் பொண்டாட்டி, மை டார்லிங் மோனா என்ன வெறுத்துட்டா தெரியுமா? நான் எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கே தெரியல.”

“என்ன ஜோர்டி? தெளிவா சொல்லுங்க? ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்கல்ல?”

“அவங்களுக்கு என்ன கொற கெவின்? நான் இங்க கெடந்து டபிள் ஷிஃப்ட் பாக்கதெல்லாம் அவங்களுக்காகதான? ஆனா, ஷீ ஹேட்ஸ் மீ நவ். என்னால நம்பவே முடியல.”

“ஏன்? என்னாச்சு?”

“லுக். நான் போனப்ப அவ நல்லாதான் இருந்தா. டேம் இட். ஐ ஹேட் மல்டிபிள் ஆர்கஸம்ஸ் ஆன் எ சிங்கிள் டே மேன். கேன் யு பிலீவ் இட்? அம்பத்தஞ்சு வயசு மேன் எனக்கு. அப்படி சந்தோசமா தான் இருந்தா.”

“ஓஹோ…”

“ஹேய் லிசன். கொஞ்ச நாளைக்குப் பிறகு திடீர் திடீர்னு என் மேல எரிஞ்சு விழ ஆரம்பிச்சா. காரணமே இல்லாம. நானும் பொறுமையா கண்டுக்காம விட்டுட்டேன். அப்புறம் என் கிட்ட வரதையே கொறச்சிட்டா. என்னப் பாத்தும் பாக்காத மாதிரி இருக்கறது. ஏதும் பேசினா ஜஸ்ட் ஒன் வேர்ட் ஆன்சர்ஸ். ரிடிக்குலஸ் மேன்.”

“பசங்க ஒண்ணும் கேக்கலயா ஜோர்டி?”

“வெயிட். பசங்க கிட்டல்லாம் நல்லாதான் பேசினா. என் கிட்ட மட்டும் தான் அப்படி. நான் பொறுமையா கேட்டுப் பார்த்தேன். என்னோட எல்லா டிரிக்ஸும் செஞ்சுப் பாத்தேன். அதே கடுகடுப்பு. ஒரு நாள், ‘ஒங்க ஊருக்கே கெளம்பி போக வேண்டியதான? ஏன் இப்படி என்னோட உயிர எடுக்கிறீங்க’ன்னு கத்திட்டா. பசங்களும் பாத்துட்டாங்க. என்னால தாங்கிக்க முடியாம ரெண்டு மூணு நாள் வீட்டுக்கே போகாம சுத்தினேன். திரும்பிப் போனப்போ புதுப் பழக்கமா ஸ்வெட்டர் பின்னிக்கிட்டு இருந்தா. சிரிச்சும் சிரிக்காம ஒரு பார்வ. நான் பக்கத்துல போய் பேசினேன், மறுபடியும் ஒன் வேர்ட் ஆன்சர்ஸ். அட் லீஸ்ட் கத்தலயேன்னு நெனச்சுக்கிட்டேன். எப்பப்பாரு ஸ்வெட்டர் ஊசியும் கையுமா இருந்தா. இல்லாட்டி சாஞ்சு கெடந்து கண்மூடிக் கெடப்பா. இதுல காதுல ஹெட்செட் வேற. ஒண்ணுமே புரியல எனக்கு.”

“பொறவு என்னாச்சு ஜோர்டி? நீங்க ஏதும் தப்பு பண்ணீங்களா? அவங்களுக்கு தெரிஞ்சு போச்சா?”

“அடப் போப்பா, என் மொத்த ஜாதகமும் தெரிஞ்ச ஒரே ஆளு அவதான். இதுல அவளுக்குத் தெரியாம என்ன இருக்கு? அவளுக்கு என் மேல ஒரு சலிப்பு வந்துட்டு. என்னப் பிடிக்காம ஆய்ட்டுன்னு நெனைக்கேன். ஆமா, ஆமா..” என்று சொல்லியவர் என் மீது சாய்ந்து கொண்டு தேம்பியழ ஆரம்பித்தார்.

“ஜோர்டி, ஒரு வேள, வேற யாராவது…”

சட்டென நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தவர், “one love.. one love…” என்று பாடிக்கொண்டே எழுந்து மெல்ல நடந்தார்.

தூரத்துக் கடலில் ஓர் ஒற்றை ஓடம் முன்னும் பின்னுமாக அலைகளில் ஆடிக்கொண்டிருந்தது. அதன் பாய்கள் விரிவதும் சுருங்குவதுமாக எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தன. அதன் மீது நின்று ஆடிக் கொண்டிருந்த ஒற்றை உருவம் வான் நோக்கிக் கை நீட்டி கெஞ்சுவதைப் போல இருந்தது. கூர்ந்து பார்த்தபோது அந்த ஓடம் சட்டெனச் சுருங்கி ஒரு புள்ளியாகி விட்டது. திடுக்கிட்டு எழுந்து மீண்டும் கூர்ந்து பார்த்தேன். ஓர் ஓடம் மெல்ல சலனமற்று போய்க்கொண்டிருந்தது. அப்போது சட்டென ரீட்டாவின் முகம் சோகமாக வந்து என் முன் நின்றது. அந்த மூன்று சொட்டு இரத்தத் துளிகள். ஒருபோதும் என் கண்களை விட்டு நீங்காத அந்த மூன்று சொட்டு இரத்தத் துளிகள்.

திருமணம் முடிந்து வீட்டில் நுழைந்து பாட்டியின் காலில் விழுந்தபோது ரீட்டாவைத் தன் மடியில் இருத்திய பாட்டி தன் வழக்கமான கதைகளை ஆரம்பித்தார்.

“ரீட்டா மக்களு. கல்யாணம் கெட்டியாச்சு செரிதான். பொறவு தான் இருக்கு விசயம். மக்களு, ஒனட்ட சொல்லதுக்கு என்ன கொறச்சல் வேண்டிக் கெடக்கு? ஒங்க தாத்தங்காரன் கூட்டிக்கிட்டு வந்தப்போ எனக்கு ஒண்ணுமே தெரியாது பாத்துக்கோ. அந்தப் பாவி மனியன் என்ன என்னா பாடு படுத்துனான், வெளிய சொன்னா கேவலம். எங்க அத்தக்காரிக்கி ஒடனே பெத்துப்போடனும். ஆனா எனக்கு ஒண்ணும் தரிச்ச பாடில்ல. சும்மா விட்டாளா பாவி. எத்தன சுடு சொல்லு, எத்தன பட்டம். ஒன்னரை வருசத்துக்கு ஒண்ணுமே இல்லன்னு வேற எவளயாம் கெட்டி வைக்கலாமான்னு என் காது படவே சொன்னாளே பாக்கணும். நான் கர்த்தர்கிட்ட போயி நின்னு நெதம் அழுவேன். எனக்கு ஒண்ணத் தாரும் ஆண்டவரே. பொன்னு மாதி பாத்துக்கிடுவேன்னு. அவருக்க ஆசிலயாக்கும் மொதல்ல உண்டானது. பின்ன, மொத வருசம் பெறதுக்கு அம்ம வீட்டுக்குல்லா போனும், நமக்கு எங்க அம்ம வீடு? ஓடி வந்தவளுக்கு….. ஒங்க தாத்தங்காரனே எல்லாத்தையும் பாத்தான். ஒங்க பெரியப்பன் பொறந்தான். பொறவு ஒங்கப்பன், பொறவு ஒம் மாப்ளைக்க அம்ம, எம்மவ, சரியான திமிரு புடிச்சவளாக்கும் பாத்துக்க.. பின்ன, நீ வந்துட்டேல்லா, அவ வால ஒட்ட நறுக்கிறுவோம் என்ன மக்களு?”

ரீட்டா வெட்கத்துடன் தலை குனிந்தபடிச் சிரித்தாள்.

“பாட்டி, புதுசாவா பாக்க ஒம் பேத்திய? எத்தன நாளுதான் இதே கதய சொல்லப் போறியோ?”

“நீ பொத்திக்கிட்டு போல, புது மாப்ள பவுசு மயிரக் காட்டாத பாத்துக்கோ. எம் பேத்திக்கிட்ட நாம் பேசுவேன். எவம்புல கேப்பான்? நீ கேளு மக்களு. சும்மா விட்டானா ஒன் தாத்தங்காரன். ஆடியும் கெடையாது, ஆவணியும் கெடையாது. வருஷா வருஷம் ஒண்ணு. ஒன் சித்தப்பன்மாரு மூணு வேரா, பொறவு, ஒனக்க அத்த மாரு ரெண்டு வேரு. இதுக்கு எடையில தரிச்சதும் தரிக்காததுமா மூணோ நாலோ, மறந்துட்டுன்னு வையி.. அப்படிப் போச்சு கத. எவனாம் நம்மள பாத்து சொல்லுவானா எட்டு புள்ள பெத்தவன்னு? ஒம் மாப்ள கூட ஒரு மூடயத் தூக்கதுக்கு சொறிஞ்சிட்டுல்லா நிப்பான், பாட்டிக்கு இன்னிக்கும் பெலம் அப்படியாக்கும்…”

சொல்லிவிட்டு கண்களை மூடி ஏதோ ஜெப வார்த்தைகளை முனுமுனுத்தார். பெருமூச்சு விட்டபடி, “எதுக்கு இப்படி வத வதன்னு பெத்துப் போடணும்னு நெனைக்கியா மக்களு. எனக்கு மொதல்ல குடுத்தவரு ஆண்டவருல்லா! அவருக்க இஷ்டம் தான். நீரு எத்தன குடுத்தாலும் அதே மாதி பொன்னு மாதி பாப்பேன் ஆண்டவரேன்னு நெனச்சிட்டு தான் எல்லாரையும் பெத்து வளத்தேன். கஞ்சிக்கே கஷ்டப்பட்ட காலமும் உண்டும், நல்லா வெள மீனும் சாலையும் தின்ன காலமும் உண்டும்,” என்று சொல்லி ரீட்டாவின் கைகளைத் தடவி விட்டுக் கொண்டிருந்தார்.

ரீட்டா மெல்ல எழுந்துகொள்ளப் பார்த்தாள்.

“நல்லாயிரி மக்களு. நல்லாயிரி. அட, எதுக்கு எங்கதைய சொன்னமுன்னு மனசிலாச்சா மக்களு.”

ரீட்டா தலைகுனிந்தே நின்றாள். அம்மா வந்து அவளை இழுத்துப் போக, பாட்டி எல்லோருக்கும் கேட்கும்படி, “சிங்கக்குட்டியாக்கும் வரப்போவு, ஒரு பய பேச்சக் கேக்கமாட்டான், பத்தே மாசம் தாம்ல, பாருங்கல, தாத்தங்காரன் பேரச் சொல்ல வருவான் சிங்கக்குட்டி,” என்றாள்.

பாட்டி சொல்லியதைப் போல பத்து மாதத்திலோ இல்லை இருபது மாதத்திலோ எதுவும் நடக்கவில்லை. ரீட்டாவின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றங்களாய்ப் போய்க் கொண்டிருந்தன. மருத்துவம் இருவர் மீதும் குறையேதும் சொல்லாததால் குடும்பத்தில் பெரிய அளவில் சலசலப்புகள் இல்லை. ஆனால், பாட்டி ரீட்டாவிடம் முகம் கொடுத்து பேசுவதைக் குறைத்துக் கொண்டார். ரீட்டாவால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பல நாட்கள் என்னிடம் அழுது புலம்பியவள் பிறகு தன் அறையை விட்டு வெளிவருவதை குறைத்துக் கொண்டாள். ஆனால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எல்லாம் அங்குதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் மருதாணி வைப்பதும் நகப்பூச்சு அடித்து விடுவதுமென அவளுக்கான ஒரு தனி உலகில் இருந்தாள். யாருமற்ற நேரங்களில் அவளது அறைக்குள் பைபிள் வசனங்கள் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஈஸ்டர் நாளன்று. அதிகாலையில் என்னை எழுப்பி என் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு பாட்டியின் அறைக்குச் சென்றாள் ரீட்டா. பாட்டியைத் தட்டி எழுப்பி அவளது காலில் விழுந்தாள். பாட்டி, “ஏசப்பா, ஸ்தோத்திரம். ஏசப்பா, நான் கேட்டதக் குடுத்திட்ட, நான் கேட்டதக் குடுத்திட்ட,” என்று கத்தினாள். ரீட்டாவை அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள்.

ஜோர்டானை அழைத்து வருவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன். ஒவ்வொரு முறை பேசியபோதும் அவரது குரல் அதே உற்சாகத்துடன் இருந்தது. அப்படி என்ன தான் இரகசியம் கொண்டு வரப் போகிறார் என்கிற ஆர்வம் ஒரு பக்கம். சென்ற முறை நடந்த விசயங்கள் மாறி அவரது one love மீண்டும் சாத்தியமாகி இருக்கலாம்.

கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தை பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக கத்திக்கொண்டே வந்தார் ஜோர்டான். ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு பெருமூச்செறிந்து தனக்குத் தானே ஏதோ சொன்னார்.

“ஓ டியர் ஜோர்டி, என்ன தான் விசயம்? என்னோட லவ்வ சொல்லும்போது கூட நான் இவ்ளோ டென்ஷன் ஆகல. சொல்லுங்க.”

ஜோர்டான் விசும்பியபடி தன் கையிலிருந்த பரிசுப் பொருளை என் கையில் கொடுத்தார். அவரது முக பாவங்களைக் கவனித்தபடியே அதை மெல்லப் பிரித்தேன்.

ஒரு புகைப்படச் சட்டம். அதனுள்ளே பாப் மார்லியின் ஒரு ஓவியம். மார்லி தன் நெஞ்சோடு ஒரு கைக்குழந்தையை அணைத்து வைத்திருந்தார். நான் ஆச்சரியமாக ஜோர்டானைப் பார்த்தேன்.

“எஸ் கெவின். எனக்கே எனக்குன்னு ஒரு தேவதை பொறந்திருக்கா. எம் பொண்டாட்டிக்க கோவமெல்லாம் எதுக்குன்னு புரியுதா? கேன் யு பிலீவ் இட் மேன்? ஐ ஆம் எ டேட் எகைன். இத மூத்தவன் எனக்காக வரஞ்சு வச்சிருந்தான் கெவின். இத உனக்குக் கொடுக்கணும்னு தோணிச்சு. அவனுக்கு என்னை விட ஒரு படி அதிக சந்தோசம். தனது புது தங்கைக்காக இந்த உலகையே வாங்கிக் கொடுப்பேன்னு சொல்றான்,” என்று சொன்னவர் முகம் முழுதும் புன்னகை பரவ, “எஸ் கெவின். நெஜமா தான், நான் மீண்டும் அப்பாவாகிட்டேன். அம்பத்தி அஞ்சில் அப்பா..” என்றார்.

பல கேள்விகளும் எண்ணங்களும் எனக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்க, “ஓஹ் மை காட் ஜோர்டி. நிஜமாவா? அருமை, சூப்பர், வாழ்த்துகள் யங் மேன்,” என்று சொல்லியபடி அவரைக் கட்டியணைத்துக் கொண்டேன். அந்த நொடி என்னுள் பலத்த சோகம் வந்து என் முகத்தை சிரிப்பிலிருந்து அழுகைக்கு இழுத்துச் சென்றது. நான் விசும்ப ஆரம்பித்திருந்தேன்.

“ஹேய் மேன்.. கம் ஆன். சியர் அப்.. போய் நம்ம ஸ்பாட்ல உக்காந்து ரெண்டு ரோல் போடுவோம் வா, ஐ ஹேவ் க்ரீன் மரியுவானா மேன், ஃப்ளையிங் டைப்..” என்றபடி என்னை இழுத்துக் கொண்டு நடந்தார்.

நான் ஊரில் அந்த மருத்துவமனை வராண்டாவில் அங்குமிங்கும் நடந்தபடி என்னை நானே நொந்துகொண்டிருந்த நினைவு என்னை ஆக்கிரமித்தது.

மகள் பிறந்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் தயங்கித் தயங்கி என்னருகே வந்து நின்றாள் ரீட்டா.

“என்னடீ? எதுக்குப் பதுங்கிட்டு வார?”

சொல்ல மனமில்லாததைப் போல தலை குனிந்து, “தள்ளிப் போய்ட்டு டா…” என்றாள்.

“என்ன?”

“டேட்ஸ்.. கன்சீவ் ஆகிருப்பேன்னு நெனைக்கேன் கெவின்,” என்றபடி அழ ஆரம்பித்தாள். நிச்சயமாக அந்த நொடி நான் மகிழ்ச்சியாக இல்லை. குடும்பம், பொருளாதாரம், அவமானம் என என்னென்னவோ எண்ணங்கள் தான் என் மனதில் அலையடித்து என்னைக் குழப்பின.

“கெவின்…”

“ம்‌ம்.. என்ன பண்ணலாம்?”

“என்ன கெவின்? உனக்கு கொஞ்சம் கூட சந்தோசம் இல்லையா?” ரீட்டாவின் குரல் உடைந்தது.

திணறியபடி, “அதில்ல…” என்றேன். அவள் பேசமுடியாமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

“இல்லடி.. இப்போ இன்னொன்னு எப்பிடி சரியாகும்னு யோசிக்கிறேன்.”

அவள் ஒன்றும் பேசவில்லை. சன்னலின் வழி கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரீட்டா, நா என்னெல்லாமோ யோசிக்றேன். நான் இப்பதான் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்றேன். அதுவும் நெலையான வேலயில்ல. வரது நமக்கும் பிள்ளைக்குமே சரியா இருக்கு. அம்மயயும் பாக்கணும். இப்போ இன்னொன்னுன்னு ஆனா, எல்லா செலவுக்கும் என்ன பண்ணுவோம்? பின்ன பிள்ளைய அம்ம கிட்ட விட்டுட்டு நீ எப்பிடி சமாளிப்ப? ஏதும் தேவைன்னா நான் யாருகிட்டயும் போயி நிக்கவே மாட்டேன் பாத்துக்கோ. அது ஒண்ணும் செரிப்பட்டு வராது. நமக்குன்னு ஒரு நெலம வரட்டும் ரீட்டா. அப்போ பாத்துக்கலாம், என்ன? வெளிநாட்டுல நல்ல வாய்ப்பு ஒண்ணு வருது ரீட்டா. அங்க போய்ட்டா கொஞ்சம் சேத்து வச்சிருவேன். பொறவு எதுக்கும் கவலப்படாண்டாம்லா?”

ரீட்டா விசும்பியபடி, “இந்த வயித்துல இருக்கது எனக்க பாசமாக்கும். சும்மா கூரயப் பொத்துக்கிட்டு ஒன்னும் வரல்ல கெவின். நெனச்ச ஒடனே கிழிச்சி எறிஞ்சிற முடியுமா? நீ இப்பிடில்லாம் பேசுக? நான் எவ்ளோ ஆசையா உங்கிட்ட சொல்ல வந்தேன் தெரியுமா? ஒங்க அம்ம மட்டும் பெத்துக்கலயா கேக்கேன்? நீயும் ஒந்தம்பியும் நல்லாதான இருக்கீங்க? அடுத்த வேள சோத்த நெனச்சா வாழவே முடியாது பாத்துக்கோ. எனக்கு வயிறெல்லாம் எரியுது. நானே அடிச்சிக் கொன்னுருகேன். நீ நிம்மதியா இரி,” என்றபடி கைகளை ஓங்கினாள். அவளைத் தடுத்து கோவத்தில் அறைந்து விட்டேன். அடுத்த நொடி நடுங்கியபடி அவளை இழுத்து அணைத்து அவள் கைகளைப் பிடித்தேன்.

“ரீட்டா, நான் ஒனக்காகவும் சேத்துதான் யோசிக்றேன். பிள்ள பொறந்து ஆறு மாசம் கூட ஆகல, இப்போ கன்சீவ் ஆகறது ஒன் ஒடம்புக்கும் நல்லதில்லல்லா? எப்படி ரெண்டு பிள்ளைங்களுக்கு ஃபீட் பண்ணுவ? ஒனக்கு சத்தா யாரு ஆக்கிப் போடுவாங்க? எல்லாரையும் டிப்பெண்ட் பண்ணி இருக்க வேண்டி வரும். வெளிநாட்டு வேல ரெடியாயிட்டுன்னு வையி. நான் இங்கயும் அங்கயுமா அலஞ்சிட்டே இருக்க முடியுமா? ஃபிளைட்டுக்கே எவ்ளோ ஆகும்னு தெரியுமா?”

சற்று நேரம் அமைதியாக இருந்தோம்.

“புரிஞ்சிட்டு. விடு. ஆஸ்பிட்டல் போனும், வா,” என்றபடி கண்களை மூடிக்கொண்டாள் ரீட்டா.

எங்கள் முதல் குழந்தையை பத்திரமாக எங்கள் கைகளில் கொடுத்துச் சிரித்த அதே டாக்டரின் முன் காத்திருந்தோம். அவர் பலவும் பேசி எங்களை மாற்ற முயற்சித்தார். ரீட்டா கண்ணிமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு கணம் திரும்பி ரீட்டாவின் முகத்தைப் பார்த்தேன். துளி சலனமுமில்லை.

திடீரென, “டாக்டர், நாங்க யோசிக்க ஒண்ணும் இல்ல. நாளக் கடத்த வேண்டாம்,” என்றாள் ரீட்டா.

என் கைகளில் தூங்கிக் கொண்டிருந்த மகளை முத்தமிட்டு விட்டு, என் கைகளைப் பற்றிக்கொண்டு, “பயப்படாத,” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

மருத்துவமனை வராண்டாவில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தேன். ஏதோ ஓர் ஆசுவாசமும் குழப்பமுமாக ரீட்டாவின் முகத்தைக் காண காத்து நின்றேன். கன்னியாகுமரி கடற்கரையில் ஜோசியம் பார்க்கும் பாட்டி, “ஒனக்கு ஒரு பெண்ணும், ரெண்டு ஆணும், என்ன மக்ளே” என்று ரீட்டாவிடம் சொன்னது நினைவில் வந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து வெளிவந்த நொடி முதல் ரீட்டாவின் கண்கள் என்னைப் பார்த்த விதம், கேட்ட கேள்விகள்…

“கெவின், கொஞ்சம் பிடி. பாத்ரூம் போனும்..”

அவள் கைகளைப் பிடித்து மெல்ல இறக்கி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றேன்.

“விடு, நானே போய்க்கிறேன்.”

மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்தாள். அந்த வெள்ளைத் தரையில் ஒவ்வொரு அடி இடைவெளியில் மூன்று கருஞ்சிவப்புப் புள்ளிகள்.

ஜோர்டானிடம் கேட்பதற்கு என்னிடம் பல கேள்விகள் இருந்தன. என் குறுக்குப் புத்தியின் கேள்விகள். இந்த வயதில் எப்படி இதை இவ்வளவு மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள முடிகிறது? இவ்வளவு பெரிய மகன்களை அவரால் எப்படி முகம் கொண்டு பார்க்க முடிந்தது? சென்ற வருடத்தின் சண்டை நாட்களில் அவரது மனைவி ஏன் இதை அவரிடமிருந்து மறைத்தார்? ரீட்டாவும் என்னிடம் சொல்லாமல் மறைத்திருந்தால்? அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து ஜோர்டானுக்கு துளியளவேனும் பயமில்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக என்னை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி. நிஜமாகவே இது அவரது குழந்தை தானா? எப்படி அவ்வளவு உறுதியாக நம்புகிறார்? இல்லை, இதுதான் வாழ்க்கையென்று ஏற்றுக் கொண்டு இருக்கிறாரா?

இரண்டு ரோல் மரியுவானாவை முடித்து விட்டு என்னை எழுந்து ஆட வருமாறு அழைத்தார் ஜோர்டான். நான் அந்த இடத்திலேயே அப்படியே மண்ணுக்குள் புதைந்து விட விரும்பினேன். அந்த மண்ணின் ஈரத்திற்குள் புதைந்து போக நினைத்தேன். என் கண்களின் மிக அருகே அந்த மூன்று சொட்டுகள். கருஞ்சிவப்பு இரத்தத் துளிகள். என் கைகளால் தடவித் தடவி அவற்றை அழித்து விடப் பார்க்கிறேன். கண்களை மூடிக்கொண்டு மண்ணில் முகம் புதைத்துக் கிடந்து அழுகிறேன். ஈரம் போதவில்லை, ஈரம் போதவில்லை என்று பிதற்றுகிறேன். அந்த இரத்தத் துளிகள் என்னை விட்டுப் போவதாயில்லை. முள்முடி தரித்து நீண்ட அங்கியணிந்த ஓர் உருவம் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதன் கைகளில் கூரிய வாள். என்னைச் சுற்றிலும் இளம் பெண்கள் தங்கள் கர்ப்ப வயிறுகளைத் தடவியபடி நின்று என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். அந்தக் கூரிய வாள் என் தலைக்கு மேலாக எழுகிறது. ஈரம் போதவில்லை, ஈரம் போதவில்லை என்றபடி அங்கேயே விழுந்து கிடக்கிறேன் நான்.

என்னருகே உட்கார்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார் ஜோர்டான்.

“நமக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணு தான். வாழ்க்கைய வாழணும். அது போக்குல போக விடணும். எதையும் பெருசா பிளான் பண்ணல்லாம் கூடாது, என்ன? ஏன்னு சொல்லு பாக்கலாம்? ஏன்னா நம்ம ஒரு பிளான் போடுவோம், மேல உள்ளவன் வேற ஒண்ண நடத்திக் காட்டுவான். பொறவு நம்ம கெடந்து பொலம்பனும். எதுக்கு வம்பு. சும்மா கொடஞ்சிட்டே கெடக்காம அப்பப்போ என்ன முடியுமோ அதச் செய்ய வேண்டியதான? பெருசா என்ன ஆகிடப் போகுது? எம் பொண்டாட்டியையும் பிள்ளைங்களையும் விட்டுட்டு எத நம்பி இந்த நாட்டுக்கு வந்தேன்? சரி, அவ என்ன நம்பிக்கைல என்ன அனுப்பி வச்சா? இப்போ ஒண்ணும் பெரிய லார்ட் ஆகிடல தான். ஆனா, ஒரு கொறையும் இல்லாமதானே இருக்கோம். வாழ்க்க அப்படிதான். அதிசயமா சில விசயங்கள் வந்து சேரும், எப்போ, எங்கன்னுலாம் தெரியாது. ஆனா, வரும். வராமப் போனாலும் ஒண்ணும் கொழப்பம் இல்லையே? என்னப்பாரு, இன்னும் மூணு நாலு வருசத்துல ரிட்டயர்ட் ஆகிறலாம்னு நெனச்சேன். யு ஸீ வாட் ஹேப்பண்ட்! என் பையனோட கொழந்தைங்களும் என் பொண்ணும் ஒண்ணா ஸ்கூலுக்குப் போவாங்க, ஹவ் பியூட்டிஃபுல்!”

எனக்குள் ஏதோ தெளிந்தது மாதிரி இருந்தது. இன்னும் சிறிது நேரம் அம்மண்ணின் ஈரத்தோடு இருக்க வேண்டும் போலிருந்தது.

“ஹேய் கெவின். என்ன மேன், மண்ணுக்கு முத்தம் கொடுக்கிற? வா வா, ஐ வில் ஷோ யு சம் குட் பீசஸ்.”

என்னைத் தூக்கியெழுப்பிய ஜோர்டானை விலக்கி விட்டு கடலை நோக்கி நடந்தேன். என் சட்டையைக் கிழித்தெறிந்தேன். ஓடிச்சென்று அலைகளின் மேலாக விழுந்தேன். எழுவதும் விழுவதுமான அலைகளின் ஊடே எழுந்து விழுந்து வசைச் சொற்களாக கத்திக் கொண்டேயிருந்தேன். ஜோர்டான் தூரத்தில் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.