அனல்

சைக்கிளை நிறுத்திவிட்டு சடக்கென்று சாந்தி ‘அத்தாப்’ கம்பத்து வீட்டு வாசலில் வந்து நின்றாள். கம்பத்தினுள் நுழைந்ததும் முதல் வீடு அதுதான். வெயிலோடு சேர்ந்து கொண்ட காற்று அனல் கனக்க வீசிக் கொண்டிருந்தது. ‘சைம் டர்பியின்’ தோட்டத்துப் பாதையிலிருந்து ஐந்தடி தள்ளியிருந்த சில வீடுகள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்தன. இன்னும் சில வீடுகள் உள்ளே இருக்கக்கூடும். வீடுகளுக்கிடையில் சிறிய ஒற்றையடி பாதைகள் இருந்தன. காட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தும் உயரமான ரப்பர் காலணியுடன் சிறுமி ஒருத்தி நடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே தேங்கியிருந்த சேற்றுக் குட்டையை உதைத்தாள்.

“சேகரு! வெளில வந்துரு… நீ உள்ளத்தான் இருக்கன்னு தெரியும்…”

வாசலில் விழுந்திருந்த கூரையின் நிழலுக்குள்ளே படுத்திருந்த கிழட்டுப்பூனை தலையைத் தூக்கி சாந்தியைப் பார்த்தது. சைக்கிளில் வந்ததில் அவளுக்கு வியர்வை சட்டையின் கழுத்துப் பகுதிவரை நனைத்துவிட்டிருந்தது. அதுவும் பக்கத்து வீட்டுப் பையன் முத்துவின் சைக்கிளை மிதிப்பது சாந்திக்குக் கடினமாக இருக்கும். ஆண்கள் ஓட்டுவது என அவனே சாந்தியைப் பலமுறை திட்டியதுண்டு. அவசரத்திற்கு அந்த ‘மவுண்டன்’ சைக்கிளை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கம் கடைகளுக்குப் போய்விடுவாள். சைக்கிளிலிருந்து இறங்கும்போதும் மீண்டும் ஏறி உட்காரும்போதும் பத்து டுவா கள்ளுக் கடையில் உள்ள ஆண்கள் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பார்கள். அது உள்நோக்கம் கொண்ட பார்வை என சாந்திக்குத் தெரியாமலில்லை. கண்டு கொள்ளாமல் போய்விடுவாள். முத்துவின் இந்தச் சைக்கிள் அவளுக்குத் தூரம் செல்ல வசதியாக இருந்தது. ஒரு மிதிக்குச் கூடுதலான வேகத்துடன் தள்ளுகிறது என அவளுக்குள்ளே ஒரு கணக்கு இருந்தது. அதுவும் கொடுத்த சிறு சிறு கடனுக்கு வட்டி வசூலிக்கச் சென்றுவர இந்தச் சைக்கிள்தான் சரியென நினைத்தாள். அதிகம் சத்தம் எழுப்பாத நல்ல முரட்டு டயர். சில வீடுகளுக்கு முன் போய் நிறுத்தும்போது வசதியாக இருக்கும். சத்தமில்லாமல் வீட்டிற்குள் நுழைந்து கடன் வாங்கியவர்களைப் பிடித்துவிடுவாள்.

சாந்தி கடன் வசூலிக்க வருகிறாள் என்றால் எந்த ஆணாக இருந்தாலும் அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தயக்கம் காட்டுவார்கள். அவளைவிட மூத்தவராக இருந்தாலும் இம்மியும் மரியாதை தோரணை இருக்காது. முரட்டுப் பேச்சு. வட்டிக் கொடுக்கும் வரை விடமாட்டாள். அதையும் மீறி யாராவது முரண்டு பிடித்துக் குரலை உயர்த்தினால் சாபமிடுவாள்.

“நீ ஆ சோங் கடையிலத்தானே பசியாற வருவ? உன்ன அங்க வச்சி செருப்பால அடிக்கறன் பாரு,” என முடியை அவிழ்த்து விரித்துவிட்டு வீட்டின் முன்னே நின்று கத்துவாள். சாந்தியின் பேச்சுக்குப் பயந்தே எப்படியாவது வட்டியைக் கொடுத்துவிடுவார்கள்.

“வெளில வந்துரு சேகரு… நான் ரோட்டுலே கத்தற மாதிரி வச்சுக்காத…”

கைலியை இழுத்து இடுப்பில் இலாவகமாக உட்கார வைத்துவிட்டு திறந்திருந்த முன்வாசல் கதவை உலுக்கினாள். வெளியில் யாரும் இல்லை. யாராவது எட்டிப் பார்ப்பார்கள் என சாந்தி காத்திருந்தாள். வீட்டுக்கு வெளியில் இருந்த கோழிக் கொட்டாயின் மீது வைக்கப்பட்டிருந்த தகரத்தில் இருந்த கோழிகள் படபடப்புடன் சுற்றிலும் கவனித்தன. முன்வாசல் கேட் மட்டும்தான் திறந்து கிடந்தது. பூனை மெல்ல எழுந்து வாசல் கதவின்முன் முறையாக விரிக்கப்படாமல் கலைந்திருந்த சணல் சாக்கில் போய்ப் படுத்துக் கொண்டது.

“டேய்… நான் ஏதாச்சம் கெட்ட வார்த்தைல கேக்கறதுக்கு முன்னாள வெளில வந்துரு…”

திறந்து கோணலாகச் சாய்ந்து கிடந்த இரும்பு கதவைச் சாந்தி எட்டி உதைத்தாள். கைலி தளர்ந்து இடுப்பிலிருந்து விலகப் பார்த்தது. பிடித்து இழுத்து சரிசெய்துவிட்டு மீண்டும் கதவை உதைத்தாள். உள்ளேயும் போகாமல் வெளியேயும் இல்லாமல் வாசலுக்கு வந்து நின்றுவிட்டு மீண்டும் கத்தினாள். தரையை இரண்டுமுறை காலால் உதைத்துவிட்டுக் கீழுதட்டை வாய்க்குள் விட்டுக் கடித்தாள்.

வீட்டுக்குள் விளக்கில்லாமல் இருண்டிருந்தது. கண்ணாடிகளற்ற இடைவெளியில் பார்த்தால் வீட்டுக்குள் இருப்பவர்கள் தெரியக்கூடும். அப்படியே யாராவது பின்வாசல் பக்கமாக ஓட நினைத்தாலும் பார்த்துவிடலாம். சாந்தி அதனைக் கவனமாக ஊகித்து வைத்திருந்தாள்.

“எனக்குத் தெரியும் நீ உள்ள படுத்து உருண்டுகிட்ட இருக்கன்னு… வந்துரு…”

சாந்தி வீட்டின் வேலியைச் சுற்றி நோட்டமிட்டாள். வீட்டின் இரு பக்கங்களிலும் கம்பி வேலி. அதுவும் உறுதியில்லாமல் காற்றுக்கே இலேசாக அசைந்து கொண்டிருந்தது. அதில் ஏறித் தப்பிக்க நினைத்தால் எளிதில் முடியாத காரியம். வேலி சத்தம் போட்டு ஊரை அழைத்துவிடும்.

உள்ளேயிருந்த அறைக்கதவு திறக்கப்பட்டதும் வெளிச்சம் பாதி இருளை விரட்டியப்படி அகன்று வந்தது. சாந்திக்கு மூச்சிரைத்தது. இருபது கிலோ மீட்டர் சைக்கிளோட்டிக் கொண்டு ஆவேசத்துடன் வந்துவிட்டாள். இப்பொழுது கால்கள் நடுங்கின. வலி தொடைவரை பரவியிருந்தது. பின்முடியைச் சுருட்டிக் கொண்டை கட்டினாள். சிவந்திருந்த கண்களுடன் வாசல் கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போயிடம் போய்விட்டு வரலாம் என அவள் கேட்காத நாளில்லை. சாந்திக்குத் தெரிந்தவர்களில் அவனிடம் மட்டுமே மோட்டார் இருந்தது. மேலும், அவன் சித்தி மகன் என்பதால் கொஞ்சம் உரிமையுடன் கேட்டு வைத்தாள். அவனுக்குச் சாந்தியை இங்கு அழைத்து வருவதில் உடன்பாடில்லை.

பக்கத்தில் இருந்த ஒரு தொழிற்சாலையின் புகை காற்றில் கலந்து வான்நோக்கி ஏறியது. சாப்பாட்டு நேரத்துக்குச் சிலர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். தொழிற்சாலையின் வெளிர்நீலச் சட்டையை அணிந்திருந்த இரண்டு இளம்வயது பெண் பிள்ளைகள் மோட்டாரில் வேகமாகத் தாண்டும்போது வெளியில் நின்ற சாந்தியைக் கவனித்துவிட்டு மோட்டாரை இன்னும் வேகமாக முறுக்கினார்கள்.

“நான் எவ்ள நேரம் ஆனாலும் இங்கத்தான் இருப்பன், சேகரு… நீ என்கிட்ட வேலய காட்டாத…”

அவ்வளவு பலமான கதவென்று சொல்லிவிட முடியாது. முன்னேயிருந்து பார்க்கும்போது தாழ்ப்பாள் பக்கம் உடைந்து துருப்பிடித்து சில இடங்களில் பொத்தல் விழுந்து கிடந்தது. சாந்தி இருக்கும் கோபத்திற்கு எட்டி உதைத்தாள் அதுவே திறந்து கொள்ளக்கூடும். சாந்தி மௌனமாக வாய்க்குள் முணுமுணுத்தாள். கோபம் உச்சம் கொள்ளும்போது அவள் தனக்குள்ளே முனகி கொள்வாள். கோபமாக இருந்தாலும் இப்படியொரு தருணம் அவளுக்குக் கிடைப்பது மிகவும் சிரமம். எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருப்பவள் இன்று சிறிது நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க முடிந்தது.

“சேகரு, நான் உள்ள வர ரொம்ப நேரம் எடுக்காது… ஒழுங்கு மரியாதையா நீயே வந்துரு…”

இலேசான கிசுகிசுப்பு சத்தம் மட்டும் கேட்டது. சாந்தி சுதாரித்துக் கொண்டாள். எட்டடிக்கு பின்வாசல் வந்துவிடும் அளவிலான சிறிய வீடு. சிறு அசைவுக்கூட காட்டிக் கொடுத்துவிடும் நெருக்கத்திலேயே சாந்தி நின்றிருந்தாள். அவளுடைய மூச்சிரைப்பும் வீட்டுக்குள் கேட்டிருக்கக்கூடும்.

“நீ எப்படினாலும் வெளில வந்துதான ஆகணும். நான் செத்தாலும் இங்கயே உக்காந்திருப்பன்டா…”

வாசலிலேயே கால்களை அகற்றி அமர்ந்து கொண்டாள். சற்றும் இரக்கமில்லாமல் காற்று அதே அனலுக்குள் புரண்டு கொதித்துக் கொண்டிருந்தது. தடித்த உருவமொன்று சன்னலின் இடைவெளியிலிருந்து குனிந்து வெளியே பார்ப்பதைச் சாந்தி பார்த்துவிட்டாள்.

“வேவு பாக்க உன்ன அனுப்பிருக்கானா தடிமாடு? யேன் அவன் ஆம்பள இல்லயா?”

இடது கையைத் தரையில் ஊன்றியபடியே சாந்தி கதவு பக்கம் பார்த்துக் கத்தினாள். அதற்குள் அந்த உருவம் தலையை இழுத்துக் கொண்டது.

“ஒளியறியா சுமதி? … வெக்கங்கெட்டவ…”

கால் விரல்களில் அதற்குள் அரிப்பெடுத்துக் கொண்டது. பரக் பரக் எனச் சொரிந்துவிட்டு முகர்ந்து கொண்டே சுவரில் சாய்ந்தாள். சேற்றுப்புண் சொதசொதவென வாடையைக் கிளப்பிவிட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் சொரிந்துவிட்டால் தோல் உறிந்துவிடும் என்பது போல் தெரிந்தது. வலியை அடக்கிக் கொண்டு தொடைகளை வேகமாக ஆட்டினாள்.

“இப்படியொரு பொழப்புப் பொழைக்கறதுக்குத் தூக்கு மாட்டிக்கிட்டுச் சாகலாம்…”

சாந்தியின் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டிலுள்ள ஆள்கள் எட்டிப் பார்க்கத் துவங்கிவிட்டிருந்தனர். அதுவும் சிறுவர்கள் வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தும் மீண்டும் ஓடி ஒளிவதுமாக இருந்தார்கள். ‘நாப்கின்’ மட்டும் கட்டியிருந்த குழந்தை வெற்றுடலுடன் வேலிக்குப் பக்கமாக வந்து சாந்தியைப் பார்த்தது. குழந்தையின் முகத்திலும் வயிற்றிலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

“சேகரு… நீ எத்தன மணிக்குத்தான் வெளில வர்றன்னு நானும் பாக்கறன்… உன் பொழப்ப இன்னிக்கு நாறடிக்காம நான் போவமாட்டன்…”

சாந்தி சம்மனமிட்டுக் கொண்டு இரு தொடைகளையும் ஆட்டியப்படி வேலிக்கு அந்தப் பக்கம் நின்றிருந்த குழந்தையிடம் நாக்கை நீட்டிப் பல்லிழித்துக் காட்டினாள். குழந்தை சிறிது நேரம் யோசித்துவிட்டு அதுவும் பதிலுக்கு நாக்கை வெளியே நீட்டியது. குழந்தை நின்றிருந்த வேலியின் கீழ்ப்பகுதியில் ஓர் ஆள் நுழைந்து போகும் அளவில் ஓட்டை தெரிந்தது.

“கிட்ட வரீயா?”

சாந்தி நாக்கை நீட்டிக் கொண்டு அழைத்ததைப் பார்த்ததும் குழந்தை பயந்து வீட்டுக்குள் ஓடி மறைந்தது. ‘நப்கின்’ பிடித் தளர்ந்து கழன்று வால் போல் தரையில் தொங்கியப்படியே ஊர்ந்து சென்றது.

“என்னா வீட்டு முன்னுக்கு வந்து கத்திக்கிட்டு இருக்க?”

வெகுநேரம் தயக்கத்துடன் போராடிக் கொண்டிருந்த சுமதியின் குரல் வீட்டுக்குள்ளிருந்து கேட்டது. சாந்தி அந்தக் குரலுக்காகக் காத்திருந்தது போல சட்டென ஆவேசத்துடன் எழுந்து நின்றாள்.

“வாடி! இவ்ள நேரம் ஊள நடிப்பு நடிச்சிக்கிட்டுக் கம்முன்னு இருந்த? இப்போ என்னா? அவன பின்பக்கம் ஓட விட்டுட்டியா? எங்க ஓடப்போறான்…? எப்படியும் வேலிய தாண்டி குதிக்கணும்ல… வரட்டும்…”

வீட்டுக்குப் பின்னால் பெரிய பள்ளம். பின்பக்கம் ஓட முடியாது. சேகர் பக்கத்து வேலியைத் தாண்டி குதித்து ஓடினால் மட்டுமே சாந்தியின் பார்வையிலிருந்து தப்ப முடியும். காதைக் கூர்மையாக்கி வைத்திருந்தாள். பின்வாசல் கதவு திறந்தால் எழுப்பும் சத்தத்திற்காக சாந்தி காத்திருந்தாள். சிறிய கதவு முனகலும் சேகருக்கு ஆபத்து என்று சாந்தி ஊகித்திருந்தாள்.

“இங்க யாரும் இல்ல. நான் மட்டும்தான் வீட்டுல இருக்கன்… சேகர என்னா இடுப்புலயா தூக்கி வச்சிக்க முடியும்?”

உள்ளேயிருந்து சத்தம் போட்ட சுமதி கதவுக்கு நெருக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.

“கத உடாத நீ. ஒன் பொழப்பு கம்பத்துல நாறுதுன்னு எனக்குத் தெரியும்… அவன உள்ள ஒளிய வச்சிட்டு வந்து எனக்கே ரொட்டி சுடறீயா?”

சாந்தி எழுந்து நின்று பற்களைக் கடித்துக் கொண்டு தொடையைக் குத்தினாள்.

“காலைலேந்து நான் சாப்டாம வந்துருக்கன்… வயிறு எரியுது… சூடேத்திக்கிட்டு இருக்காத… சேகரு இப்ப வெளில வரணும்…”

வீட்டுக்குள்ளிருந்து பதில் வரவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து குழந்தை மீண்டும் தத்தித் தத்தி வந்து வேலி கம்பியைப் பிடித்துக் கொண்டே சாந்தியைப் பார்த்தது. ‘நப்கினை’ யாரோ இழுத்து இறுக்கமாகக் கட்டியிருந்தார்கள். இரண்டு கைகளிலும் கறுப்பு வளையல்கள் தெரிந்தன. காலையில் கன்னத்தில் இட்டிருந்த கருப்புப் பொட்டு மேலுதடு வரை கோடிட்டிருந்தது. குழந்தை வேலிக் கம்பிகளுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொண்டு பார்த்தது. நாக்கை வெளியே நீட்டிக் கம்பியில் விளையாடத் துவங்கியது.

“நீ இப்ப வரலைனா நான் இங்கயே இருந்துகிட்டுக் கத்துவன்… நீ ஆம்பளைன்னா வெளில வா…”

சாந்தி மீண்டும் தரையில் அமர்ந்தாள். அவளுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும். எவ்வளவு நேரம் அதை அடக்கி வைத்திருந்தாள் எனத் தெரியவில்லை. பக்கத்து வீட்டில் கேட்டு உள்ளே போய்விட்டு வரலாம் எனத் தோன்றியதும் எழுந்து நின்றாள். அவள் எழுந்ததும் அந்தக் குழந்தை மீண்டும் உள்ளே ஓடியது. அநேகமாக ஓடி ஒளிவது குழந்தை, சாந்தியின் வருகைக்குப் பின்னர் கண்டுபிடித்த விளையாட்டாக இருக்கலாம்.

“யேங்க, ஒன்னுக்குப் போலாமா?”

வேலி கம்பியின் முனையைக் கீழே இழுத்துத் தலையை மேலே கொண்டு செல்ல முயன்றாள். உள்ளே பாட்டி மட்டும் வாசலில் அமர்ந்திருந்தார். சற்றுமுன் ஓடிச் சென்ற குழந்தை அவரது மடியில் உட்கார்ந்திருந்தது. சாந்தியின் அழைப்பு பாட்டிக்குக் கேட்கவில்லை. இன்னும் கத்திக் கேட்டால் அவர்களுக்கு அசௌகரிகமாக இருக்கும் என நினைத்து மீண்டும் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்துவிட்டாள். வயிற்றுப் பகுதியில் கடுகடுப்பு அதிகரித்திருந்தது.

“யேய்! நீ போய்ரு. இல்லன்னா என் தம்பி இப்ப வர்ற நேரம்… அவன் மண்டக் கிறுக்குப் பிடிச்சவன் சொல்லிட்டன்…”

அமைதியாக இருந்த குரல் மீண்டும் வீட்டுக்குள்ளிருந்து சற்று நடுக்கத்துடன் ஒலித்தது. சாந்தி தகவலைவிட அந்த நடுக்கத்தையே இரசித்தாள்.

“ஓ! உன் தம்பியும் இதுக்கு ஜிங்குச்சாவா? எவன கூப்டுறீயோ கூப்டு… நானும் ஒரு கை பார்த்துக்கறன்…”

கத்திப் பேசியதும் முட்டிக் கொண்டு நிற்கும் சிறுநீர் உடைந்து கொட்டிவிடுவது போல பயம் காட்டியது. அவளால் அதற்குமேல் அடக்கிக் கொள்ள இயலவில்லை. சுமதியின் வீட்டுக்குள்ளும் போக வேண்டுமென அவளுக்குத் தோன்றவில்லை. அடிக்கடி மோட்டார்கள் வருவதும் போவதுமாக இருந்ததைச் சாந்தி கவனித்தாள்.

“இரு என் தம்பி வருவான்… அவன் வந்து உன் மண்டய உடைக்கப் போறான்…”

உள்ளேயிருந்த சுமதியின் குரலில் இப்பொழுது அதிகாரமும் கோபமும் கலந்திருந்தன.

“சேகரு… பொம்பளய பேசவிட்டுட்டு ஒளிஞ்சிருக்கல…நல்ல ஆம்பளடா நீ…”

அவள் சுமதிக்குப் பதில் பேச விரும்பவில்லை. வீட்டுக்கு வலது பக்கமாகச் சென்று சாயம் பூசி வைக்கப்பட்டிருந்த பழைய வாளிகளுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டாள். அங்கிருந்த சிறிய சாக்கடை வீட்டுக்குப் பின்னால் இருக்கும் பெரிய சாக்கடைக்குப் போய்க் கொண்டிருந்தது. நல்ல மூன்று ஆள் உயரம் கொண்ட பள்ளத்தில் தெரியும் பெரிய சாக்கடை. பாசி பூத்து மறைந்திருந்தது.

சிறுநீர் கழித்துவிட்டுச் சாந்தி மீண்டும் வாசலுக்கு வரும்போது ஒரு மோட்டார் வந்து நின்றது. மோட்டாரில் இளம் வயது பையன் கையில் தொப்பியுடன் உள்ளே வந்தான். ஆவேசமாகக் கதவைத் தட்டினான்.

“யாருக்கா பெரச்சன பண்றது? மகேன் சொன்னான் யாரோ வீட்டு முன்னுக்கு நின்னு கத்திக்கிட்டு இருக்காங்கன்னு…”

அவன் கத்தியதும் சுமதிக்குத் தைரியம் வந்தது போல் தெம்பாகிவிட்டாள்.

“டேய் குமாரு… அவ வெளில உக்காந்துருக்கா பாரு… மானத்த வாங்கறாடா!”

மீண்டும் குழந்தை வேலிவரை வந்து வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் ஓடியது. சாந்தி வழக்கம் போல அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். கைலியை இழுத்து விட்டவாறு கால் விரல்களை ஒன்றையொன்று தேய்த்தாள். மோட்டாரில் வந்தவன் சாந்தியைப் பார்த்து முறைத்தான். கையில் வைத்திருந்த தொப்பியை வசதியாக அதன் வாரோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டான். சாந்தி அவனைக் கண்டும் தெரியாதது போல அமர்ந்திருந்தாள்.

“சேகரு, வெளில வர்றீயா இல்லயா? நீ உள்ள இருக்கன்னு தெரியும்…”

சாந்தி அந்த வாக்கியத்தை மாற்றவில்லை. அவள் கத்தியதும் வெளியில் நின்றிருந்தவனுக்கு மேலும் எரிச்சல் கூடியது. தொப்பியைக் கொண்டு பலகை சுவரை ஓங்கி அடித்தான்.

“டேய், குமாரு… அவள அடிச்சி வெரட்டுடா,”

மீண்டும் சுமதி உள்ளேயிருந்து ஆக்ரோஷத்துடன் கத்தினாள். கடைசிவரை அவள் முகத்தைக் காட்டவில்லை. வெளியில் வந்தும் பார்க்கவில்லை.

“நீ கதவ தொறக்கா… இவ யாரு இவளுக்குப் பயந்துகிட்டு உள்ள இருக்க?”

சொந்த வீட்டு வாசலில் காற்று வாங்குவதைப் போல சௌகரிகமாக அமர்ந்திருந்தாள் சாந்தி. அவள் கால்களை நீட்டியிருந்த விதமும் அவனுக்குக் கோபத்தைக் கிளறியது. முன்கதவை சுமதி மெல்ல திறந்து குமாருக்கு மட்டும் உள்ளே நுழைய வழிவிட்டாள். சடக்கென மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டாள்.

“யேன் தம்பிய மட்டும் உள்ள விடற? நான் வந்தா பயமா? நீ யார வேணும்னாலும் கூட்டிட்டு வா…”

சாந்தியின் கவனம் முழுவதும் உள்ளே இருப்பதாக அவள் நம்பும் சேகரின் மீதே இருந்தது.

“வெளக்கமாறு பிய்யப் போகுது…”

சுமதி, தம்பி இருக்கும் துணிச்சலில் குரலை முன்பைக் காட்டிலும் உயர்த்தினாள். சாந்தி அமர்ந்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நா வரண்டு தாகம் எடுக்கத் துவங்கிவிட்டது. பக்கத்து வீட்டில் தண்ணீர் கேட்கலாம் என நினைத்தாலும் அவளுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பசி மயக்கம் உடல் முழுவதும் சூழ்ந்து சாந்தியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது.

குழந்தை மீண்டும் வீட்டிற்கு வெளியில் வந்து நின்றது. கையில் வைத்திருந்த அரிசியைத் தூரமாகத் தரையில் வீசியது. அவை மண்ணில் விழுந்து இறைந்தது. சாலைக்கு அந்தப் பக்கம் மேய்ந்து கொண்டிருந்த கோழிகளும் குஞ்சுகளும் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. குழந்தை கைத்தட்டி அவற்றை வேடிக்கைப் பார்த்தது. சாந்தி, குழந்தையிடம் அரிசி கேட்பதைப் போல கையை நீட்டினாள். குழந்தை சிரித்துவிட்டு வெட்கப்பட்டுக் கொண்டே வீட்டுக்குள் ஓடியது.

“கா, நீ சொல்லு… இப்பயே மண்டய பொளந்துடறன்…”

“யேன்டா உனக்கு? சும்மா இரு. இவ என்ன பெரிய இவளா? இங்கயே உக்காந்து சாகட்டும்…”

சாந்தி குழந்தை தூவிய அரிசிகளைக் கோழிகள் கொத்தித் தின்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாந்தியின் கண்களில் பயம் இல்லை. முரட்டுப் பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தாள். வீட்டுக்கு எதிரில் அடுக்கப்பட்டிருந்த பழைய தகறக் கதவுகளுக்கு மேல் சேகரின் ‘பாவர்’ சப்பாத்துக் காய வைக்கப்பட்டிருந்ததைக் கவனித்தாள். அவன் உடும்பு வேட்டைக்குப் போனால் அணிந்து செல்லும் சப்பாத்து அது. தூரத்திலிருந்து பார்க்க இன்னும் ஈரம் காயாதது போல் தெரிந்தது.

“சேகரு… வாயத் தொறக்க மாட்டற? அவ்ள பயமா?”

சாந்தியின் குரல் அவளுடைய வயதிற்கு ஒத்தக் குரல் அல்ல. கீச்சு குரல் மாதிரி ஒலிக்கும். ஒவ்வொரு சொல்லின் கடைசி எழுத்தில் கீச்சென சப்தமிடும். யாராக இருந்தாலும் அவளுடைய குரலுக்கு எரிச்சலடைவார்கள். அதுவும் அவள் கோபத்தில் கத்தினால் மண்டைக்குள் ரீங்காரமிடும். குமார் அதற்குமேல் சாந்தியின் குரல் உண்டாக்கும் எரிச்சலைப் பொறுக்க முடியாமல் வெளியில் வந்து கையில் வைத்திருந்த தலைக்கவசத்தை அவள் மீது விட்டெறிந்தான். அது தரையில் பட்டு சாந்தியின் முதுகில் உரசிக் கொண்டு போய் மண்ணில் விழுந்தது.

“சனியன! போய்த் தொலைய மாட்டியா?”

சாந்தி அசையவில்லை. திடமாக அமர்ந்திருந்தாள். என்ன நடந்தாலும் அந்த வீட்டின் வாசலைவிட்டு அவள் நகர்வதாக இல்லை. அதற்குள் சுமதி வெளியே ஓடிவந்து குமாரைப் பிடித்துக் கொண்டாள்.

“உள்ள வாடா… போலிஸ் கேஸ் ஆச்சின்னா முடிஞ்ச நீ…”

சுமதி அவனைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்றாள்.

“ஆள் வச்சி அடிக்கிறீயா, சேகரு? மூஞ்சி காட்ட வக்கில்ல…”

சாந்தி விடுவதாக இல்லை. மண்ணில் விழுந்த தலைக் கவசத்தை எடுத்து கண்ணாடி சன்னலை நோக்கி வீசியெறிந்தாள். கண்ணாடிகள் உடைந்து சில துண்டுகள் வாசலில் சிதறின.

“ஏய்! நாசமா போறவள… என் வீட்ட ஒடைக்கிறீயா?”

சுமதி ஆவேசத்துடன் கத்தினாள். பின்னால் உள்ள சில வீடுகளிலிருந்து வயதானவர்கள் நடந்து வந்து வேடிக்கைப் பார்க்கத் துவங்கினர். சுமதி வீட்டுக்கு வெளியில் வரவே தயங்கினாள்.

“நாசமா போறவன் வீட்டுக்குள்ள இருக்கான்… உன்கிட்ட எனக்கெதுக்குப் பேச்சு. சேகர வர்ற சொல்லு… அவன்கிட்டதான் பேசணும்…”

சாந்தி அவிழ்ந்து தொங்கிய கொண்டையை மீண்டும் சுருட்டி இறுகக் கட்டினாள்.

“எத்தன தடவ சொல்றது அந்த நாய் வீட்டுல இல்லன்னு… எங்க மேயுதுன்னு யாருக்குத் தெரியும்?”

கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளை எடுத்துக் கோபத்தில் உடைக்கும் சத்தம் கேட்டது. சுமதியின் குரலில் கேவலும் கெஞ்சலும் ஒட்டிக் கிடப்பதை சாந்தி அறிந்தாள்.

சாந்தி முன்வாசலுக்கு வந்து நின்று உள்ளே நிற்கும் சுமதியைப் பார்த்தபடி, “சேகரு வாசம் வீசுது… அந்தாளு கூட பதினெட்டு வருசம் குடும்பம் நடத்திருக்கன்… எனக்குத் தெரியும்டி… அவன் உள்ளத்தான் இருக்கான்… வர்ற சொல்லு… நாக்கப் புடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தக் கேக்கணும்…” எனக் கத்தினாள். சந்ததிலிருந்து சாந்தியின் தொனி இறங்கவில்லை.

சாந்தியை எதிர்க்கொள்ள மனமில்லாமல் சுமதி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். குமார் சுவரோடு சாய்ந்து மேல்மூச்சு வாங்க அமர்ந்திருந்தான்.

“அந்த நாசமா போறவன நம்பித்தான் வயித்துல ஒன்ன வாங்கிகிட்டன்… அதக் கரை சேக்க நானும் வீட்டு வேல செஞ்சித்தான் சாவறன்… இதுல அவன நான் என்ன வீட்டுக்குள்ளயா பொத்தி வைக்கறது? அது இங்க வந்தே வாரக்கணக்கு ஆச்சி…”

சுமதி உடைந்து அழுதுகொண்டே தரையில் அமர்ந்துவிட்டாள். இருளுக்குள் அவள் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. சாந்தி ஏதும் பேசாமல் வாசலிலேயே நின்றிருந்தாள். அவளுக்கு மூச்சிரைத்தது. பசியில் கண்கள் மங்கத் துவங்கின. அதற்குமேல் நின்றிருந்தால் மயங்கிவிடலாம் எனத் தோன்றியது.

“வீட்டு வேல செஞ்சிட்டு இப்பத்தான் வந்து படுக்கலாம்னு உக்காந்தன்…நானும் மனுசித்தான்…”

சுமதியின் புலம்பல் ஓய்வதற்குள் பக்கத்து வீட்டில் இருந்த குழந்தை வெளியில் வந்து எட்டிப் பார்த்தது. சுமதியின் அழும்குரல் கேட்கும் திசையைப் பார்த்து குழந்தையும் அழத் துவங்கியது. அதற்குள் பாட்டி வெளியில் வந்து குழந்தையைத் தூக்கினார்.

“அம்மா, பாவம்ல… தூங்கணும்… வாங்க நம்ம உள்ள போலாம்…” எனப் பாட்டி குழந்தையைச் சமாதானம் செய்தபடி வீட்டுக்குள் கொண்டு போனார்.

சுமதி அதன் பின்னர் ஒன்றும் பேசவில்லை. ஏதோ முனங்கல் ஒலி மட்டும் சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

“அவன்கிட்ட சொல்லு அவன் சாவு என் கையிலதான்னு…”

சாந்தி கத்திவிட்டு எழுந்து கைலியைச் சரிசெய்தாள். நேரே பக்கத்து வீட்டிற்கு நடந்தாள். குழந்தை வெளியே வராமல் இருக்க பாட்டி வாசலில் தடுப்புப் பலகையைச் செருகியிருந்தார். அதன் விளிம்பில் தாடையை வைத்தபடி குழந்தை வெளியே பார்த்துக் கொண்டிருந்தது. அழுது வடிந்திருந்த கண்ணீர் கன்னத்தில் பிசுபிசுத்து மின்னிக் கொண்டிருந்தது. வீட்டில் இன்னும் சில சிறுவர்கள் இருப்பதைச் சாந்தி கவனித்தாள். கவுன் அணிந்திருந்த சிறுமி அநேகமாக பாட்டியின் பேத்தியாக இருக்கலாம், பலகையின் விளிம்பைக் கடித்துக் கொண்டிருந்த குழந்தையின் தலையை மெல்லத் தூக்க முயன்றாள்.

அதற்குள் சாந்தி, குழந்தையைத் தூக்கி கொஞ்சிவிட்டுக் கையில் பத்து வெள்ளி நோட்டைக் கொடுத்தாள். குழந்தை ஒன்றும் புரியாமல் நோட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. பிறகு, வேகமாக வந்து ஓட்ட மனமில்லாமல் அனல் காற்றை இரசித்தபடி மவுண்டன் சைக்கிளை தள்ளிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்

குறிப்பு: ‘சைம் டர்பி’ – sime dirby தோட்ட நிறுவனம்

10 Replies to “அனல்”

  1. வாசிக்கத் துவங்கி எங்கும் நிறுத்த முடியவில்லை.
    கதையோட்டம் அத்துணை சிறப்பு. அசோகமித்திரன் கதையை வாசிப்பது போல உணர்வைக்கொண்டு வந்து விட்டது.

    ஒவ்வொரு சிறு சிறு அசைவையும் சிறுகதையில் குறிப்பிட்டிருப்பது நம்மை கதைக்குள் இருத்தி வைக்கிறது.

    யார் சரி, யார் தவறு என்றில்லாமல் நிதர்சன நிகழ்வுகளையும் மனிதர்களையும் காட்டிச் செல்கிறது.

    மனித வாழ்வின் ஒரு காட்சி. அதில் சில பாத்திரங்கள். அத்தனைக்கும் ரத்தம் சதை துடிப்புண்டு. அவற்றின் இயக்கம்- அவற்றின் மனம், கனம். இதனை நம் மனதோடு இயைந்த கதையாகக் கொண்டு வருவதுதான் எத்துணை அசாத்தியமானது?

    வென்றிருக்கிறார் பாலமுருகன்.
    அது எழுத்தில் மட்டுமல்ல.

  2. வேறொரு உலகத்திற்குச் சென்று வந்ததைப் போல ஓர் உணர்வைக் கொடுத்த கதை. அவ்வளவு தைரியமான, முரட்டு குணம் , போராட்ட குணம் கொண்ட பெண்கள் கூட ஆண்களில் ஆசை வார்த்தையில் ஏமாறுவதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது சிறுகதை. எவ்வளவுதான் முரட்டுக் குணம் இருந்தாலும் ஒரு குழந்தையைப் பார்க்கும் போது பெண்ணிற்கே உரிய தாய்மை குணம் வெற்றி பெறுவதை எழுத்தாளர் அழகாக காட்டியுள்ளார். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மனதில் நிற்கும் வண்ணம் அக்கறையும் கதாப்பாத்திரங்களை விவரித்திருப்பது கதையில் பாராட்ட வேண்டிய கூறு. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

  3. கதையை கொண்டு சென்ற பாங்கு மிகவும் அருமை சகோதரரே! பேசும்போது நம் உணர்வுகளை வெளிப்படுத்திவிடலாம், ஆனால் எழுத்தின் மூலம் வாசர்கர்களை கதைக் களத்திற்குள் கொண்டு செல்வது தனி கலை. நீங்கள் மிக அழகாக அந்நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து விடீர்கள். இன்றும் கூட இத்தகைய அவலங்கள் நம் சமூகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

  4. ‘அனல்’ சிறுகதை வாசிப்பில் முற்றிலும் புதியதொரு அனுபவத்தைக் கொடுத்துள்ளது.வாசிப்பில் விறுவிறுப்பை உண்டாக்கி முடிவை நோக்கி விரைந்து செல்ல வைக்கிறது.வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் தேடலை விசாலமாக்கியுள்ளது.தலைப்பிற்கேற்றவாறு அனல் தெறிக்கிறது.அனல் என்பதற்கு வெப்பம்,சூடு என்று பொருள்பட்டிருக்கலாம்.ஆனால்,ஒரு மனிதனின் குணாதிசியங்களுக்குள் ஊர்ந்து நிற்கும் கொடுங்கோலும் அச்சாரத்தைக் கொண்டிருப்பதை இக்கதை உணர்த்தி நிற்கிக்கிறது.

    எந்த ஒரு உயிரும் தீங்கிற்கு உட்பட்டவை அல்ல. காலத்தாலும்,கடந்து வரும் சோதனைகளாலும் ஆளுமையை இழக்கும் தன்மைகளாலும் தான் வித்தியாசப்பட்டு விவகாரமாக்கப்பட்டு மனிதம் எனும் கோட்டிலிருந்து விலகிச் செல்கின்றன. சாந்தியின் கதாபாத்திரம் புனைவுக்காக மிகைப்படுத்தப்படவில்லை‌ என்பதில் வாசகனுக்குத் தெளிவு நிகழ வேண்டும்.உருவத்தில் பெண்ணாகவும், தன்மையில் அசூர வேகம் கொண்டவளாகவும் மூர்க்கத்தனத்துடன் நடமாடும் சாந்திகளும் இருக்கவே செய்கின்றனர். யாரும் தீயவனாக பிறப்பதில்லை.சாந்தியின் பாத்திரப் படைப்பை இவ்வளவு மூர்க்கத்தனமாக காட்ட வேண்டிய சூழல் இக்கதையில் உள்ளது.உதவாக்கரை சேகரின் மனைவியாக அவள் வாழ்ந்திருக்கக் கூடிய சூழல்களால் அவள்
    மாறுப்பட்டிருக்கலாம்.வாழ்வின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டவர்களின் அடுக்குகலிலிருந்து பார்த்தோமானால் சாந்தியின் கதாபாத்திரத்தின் வாய்ப்புத் தன்மை விளங்கும்.சாந்திக்கு எதிரான முரணாக சுமதியின் பாத்திர வார்ப்பு.கதையின் துவக்கத்தில் சித்தரிக்கப்படும் இயல்பான சுபாவத்தைக் கொண்டிருக்கும் சுமதி சாந்தியின் சாடல்களினால் இயல்பிலிருந்து விலகி ஆக்ரோசமாகிறாள்.இதுவே மனித உளவியல் சாரம்.காலமும் சூழ்நிலைகளும் எத்தகைய அனுமானங்களிலும் இருந்து விலகிடச் செய்யும் காரணிகள்.

    நடமாடும் கதாபாத்திரமாக சேகர் உருவாக்க ப்படுத்தப்படாவிட்டாலும் இரு பெண்களின் உளவியல் சிக்கல்களுக்கு ஊர்ஜீனமாகிறான்.இதை புனைவியலின் அழகியலாக உணர்கிறேன்.உயிர்ப்பெறும் கதாபாத்திரம் மட்டும் பேசப்படுவதி ல்லை.சேகரைப் போன்று அந்நியமான கதாபாத்திரமும் கதைகளில் உயிரோட்டமாகின்றன.

    கதையில் பல இடங்களில் நாம் பார்க்க கூடிய வாழ்வின் மீதான சிறுசிறு விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு எழுதியிருப்பது எழுத்தாளனின் நுண்பார்வையை வழியுறுத்தி நிற்கிறது. கண்களில் படும் பல விடயங்களை எந்தவொரு சலனமுமின்றி எளிதாக கடந்து விடுகிறோம் . அது போன்ற விடயங்களை இக்கதை கூர்ந்து உணர வைக்கிறது.
    மவுண்டன் சைக்கிளைக் கொண்டு சாந்தியின் உடல் வலிமையை உணர்த்துவதும்,கோழிகள் சுதந்திரமாக திரிந்து அகப்படாமல் திரிவதில் சேகரின் குணத்தையும்,சுமதியின் வறுமையை காட்சிப்படுத்திய விதத்திலும்,குழந்தையின் நப்கினில் குடும்ப சூழல்களின் வறுவாயையும் இக்கதை உணர்த்தி,உரைத்தி நிற்கிறது.கதைக்கு வார்த்தைகளின் விளையாட்டை விட காட்சிகளில் வகைப்படுத்தலே சிறப்பு.

    இறுதியில் சாந்தியை மேலெழுப்பிக் காட்டிய விதத்தில் இக்கதை வென்று நிற்கிறது.குழந்தமை கதாபாத்திரம் இக்கதையில் கையாளப்பட்ட விதம் சிறப்பு.எல்லா மனித மனங்களும் குழந்தைத்தனம் மிக்கவை‌ என்பதை நினைவுறுத்துகிறது.கொடுங்கோல் குணமும் களைந்து அழிந்து போக ஒரு குழந்தையின் புன்னகை,மொழியற்ற பேச்சு,தட்டுத்தடுமாறும் கால்கள்,காந்தியைப் போன்ற பெண்ணைப் பார்த்தும் நகைக்கும் தன்மை போதும்.புயலெனவானவள் தென்றலாகிப் போகிறாள்.

    அனல்…பார்வையில் அல்ல,உடலில் அல்ல…வேண்டாத குணங்களையெல்லாம் இழுத்துக் கட்டிக் கொள்ளும் நம் மனத்தில் உள்ளது.அதை மற்றவர் மீது திணிக்கும் நம் பயனற்ற‌மாண்புகளாகிறது.

    காந்தி முருகன்

  5. ‘அனல்’ சிறுகதை வாசிப்பில் முற்றிலும் புதியதொரு அனுபவத்தைக் கொடுத்துள்ளது.வாசிப்பில் விறுவிறுப்பை உண்டாக்கி முடிவை நோக்கி விரைந்து செல்ல வைக்கிறது.வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் தேடலை விசாலமாக்கியுள்ளது.தலைப்பிற்கேற்றவாறு அனல் தெறிக்கிறது.அனல் என்பதற்கு வெப்பம்,சூடு என்று பொருள்பட்டிருக்கலாம்.ஆனால்,ஒரு மனிதனின் குணாதிசியங்களுக்குள் ஊர்ந்து நிற்கும் கொடுங்கோலும் அச்சாரத்தைக் கொண்டிருப்பதை இக்கதை உணர்த்தி நிற்கிக்கிறது.

    எந்த ஒரு உயிரும் தீங்கிற்கு உட்பட்டவை அல்ல. காலத்தாலும்,கடந்து வரும் சோதனைகளாலும் ஆளுமையை இழக்கும் தன்மைகளாலும் தான் வித்தியாசப்பட்டு விவகாரமாக்கப்பட்டு மனிதம் எனும் கோட்டிலிருந்து விலகிச் செல்கின்றன. சாந்தியின் கதாபாத்திரம் புனைவுக்காக மிகைப்படுத்தப்படவில்லை‌ என்பதில் வாசகனுக்குத் தெளிவு நிகழ வேண்டும்.உருவத்தில் பெண்ணாகவும், தன்மையில் அசூர வேகம் கொண்டவளாகவும் மூர்க்கத்தனத்துடன் நடமாடும் சாந்திகளும் இருக்கவே செய்கின்றனர். யாரும் தீயவனாக பிறப்பதில்லை.சாந்தியின் பாத்திரப் படைப்பை இவ்வளவு மூர்க்கத்தனமாக காட்ட வேண்டிய சூழல் இக்கதையில் உள்ளது.உதவாக்கரை சேகரின் மனைவியாக அவள் வாழ்ந்திருக்கக் கூடிய சூழல்களால் அவள்
    மாறுப்பட்டிருக்கலாம்.வாழ்வின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டவர்களின் அடுக்குகலிலிருந்து பார்த்தோமானால் சாந்தியின் கதாபாத்திரத்தின் வாய்ப்புத் தன்மை விளங்கும்.சாந்திக்கு எதிரான முரணாக சுமதியின் பாத்திர வார்ப்பு.கதையின் துவக்கத்தில் சித்தரிக்கப்படும் இயல்பான சுபாவத்தைக் கொண்டிருக்கும் சுமதி சாந்தியின் சாடல்களினால் இயல்பிலிருந்து விலகி ஆக்ரோசமாகிறாள்.இதுவே மனித உளவியல் சாரம்.காலமும் சூழ்நிலைகளும் எத்தகைய அனுமானங்களிலும் இருந்து விலகிடச் செய்யும் காரணிகள்.

    நடமாடும் கதாபாத்திரமாக சேகர் உருவாக்க ப்படுத்தப்படாவிட்டாலும் இரு பெண்களின் உளவியல் சிக்கல்களுக்கு ஊர்ஜீனமாகிறான்.இதை புனைவியலின் அழகியலாக உணர்கிறேன்.உயிர்ப்பெறும் கதாபாத்திரம் மட்டும் பேசப்படுவதி ல்லை.சேகரைப் போன்று அந்நியமான கதாபாத்திரமும் கதைகளில் உயிரோட்டமாகின்றன.

    கதையில் பல இடங்களில் நாம் பார்க்க கூடிய வாழ்வின் மீதான சிறுசிறு விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு எழுதியிருப்பது எழுத்தாளனின் நுண்பார்வையை வழியுறுத்தி நிற்கிறது. கண்களில் படும் பல விடயங்களை எந்தவொரு சலனமுமின்றி எளிதாக கடந்து விடுகிறோம் . அது போன்ற விடயங்களை இக்கதை கூர்ந்து உணர வைக்கிறது.
    மவுண்டன் சைக்கிளைக் கொண்டு சாந்தியின் உடல் வலிமையை உணர்த்துவதும்,கோழிகள் சுதந்திரமாக திரிந்து அகப்படாமல் திரிவதில் சேகரின் குணத்தையும்,சுமதியின் வறுமையை காட்சிப்படுத்திய விதத்திலும்,குழந்தையின் நப்கினில் குடும்ப சூழல்களின் வறுவாயையும் இக்கதை உணர்த்தி,உரைத்தி நிற்கிறது.கதைக்கு வார்த்தைகளின் விளையாட்டை விட காட்சிகளில் வகைப்படுத்தலே சிறப்பு.

    இறுதியில் சாந்தியை மேலெழுப்பிக் காட்டிய விதத்தில் இக்கதை வென்று நிற்கிறது.குழந்தமை கதாபாத்திரம் இக்கதையில் கையாளப்பட்ட விதம் சிறப்பு.எல்லா மனித மனங்களும் குழந்தைத்தனம் மிக்கவை‌ என்பதை நினைவுறுத்துகிறது.கொடுங்கோல் குணமும் களைந்து அழிந்து போக ஒரு குழந்தையின் புன்னகை,மொழியற்ற பேச்சு,தட்டுத்தடுமாறும் கால்கள்,காந்தியைப் போன்ற பெண்ணைப் பார்த்தும் நகைக்கும் தன்மை போதும்.புயலெனவானவள் தென்றலாகிப் போகிறாள்.

    அனல்…பார்வையில் அல்ல,உடலில் அல்ல…வேண்டாத குணங்களையெல்லாம் இழுத்துக் கட்டிக் கொள்ளும் நம் மனத்தில் உள்ளது.அதை மற்றவர் மீது திணிக்கும் நம் பயனற்ற‌மாண்புகளாகிறது.

    காந்தி முருகன்

  6. அனல் போன்ற சுட்டெரிக்கும் பெண்ணிடமும் மென்மையான குணம் இருப்பதை மிக லாவகமாக எழுத்தாளர் கதையில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு சூழலும் காட்சிகளும் வழிய செதுக்கப்படாமல் தானாக அதன் சுவாரசியத்தோடு நகர்ந்து சென்றது. எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அன்றாட போராட்டங்களையும் உணர்த்தும் கதையாகவும் இது அமைகிறது. சேகரைப் போல பல ஆண்கள் சுற்றித் திரிந்துக்கொண்டு தான் வருகிறார்கள். தன் சுயநலத்திற்காகப் பிறரைப் பகடை காயாக்கி மகிழ்வது மனித நெறியாகாது என்பதைக் கதையினூடே சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுள்ளார் எழுத்தாளர். சிறப்பானதொரு கதையோட்டம். பத்து நிமிடங்கள் அத்தாப் கம்பத்திற்குச் சென்று வந்த ஓர் உணர்வு. அருமை ஐயா 💐👌

  7. எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘அனல்’ தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் தன் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது. வட்டிக்கு விடும் சாந்தியின் வன்மையான குணத்திலிருந்து கதை விறுவிறுப்பாக தொடங்கினாலும் அதன் அனல் கொஞ்சங்கூட குறையாமல் மேலெழும்பி கொண்டே போகிறது. தோட்டத்துப் பெண்ணின் உடல் வாகுவை விவரிப்பதற்காக மவுண்டன் சைக்கிளை எழுத்தாளர் கையில் எடுத்த விதம் சாந்தியின் மொத்த பலத்தையும் விவரிக்கிறது.
    எட்டிப்பார்க்கும் குழந்தையின் குணத்திலிருந்து மாறுபடும் சாந்தியின் தாய்மை உள்ளமும் அவ்வப்போது வெளிவந்து போகும் காட்சிமை எல்லா பெண்களிடத்திலும் இயல்பாக இருக்கும் தாய்மை குணத்திற்கு ஒரு சாட்சியாகவே அமைந்திருக்கிறது. சுமதி எனும் பெண்ணை வடிவமைத்திருக்கும் விதமும் மிக நேர்த்தியாகவே இருக்கிறது. தோட்டத்தில் வாழ்ந்திருந்த பெண்களில் மிக வலிமையான பெண்களும் வலிமை இருப்பது போல காட்டிக்கொண்டு விரைவில் உடைந்து அழும் குணமும் எதார்த்தமாகவே படைக்கப்பட்டிருக்கிறது.
    இக்கதையில் இரண்டு பெண்களுமே ஓர் ஆணால்தான் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். வலுத்தவன் விழித்துக் கொள்வான் என்பது போல வல்லமையை ஊடறுக்கும் சாந்தி எதிர்த்தே நிற்கிறாள். சுமதி புலம்பலோடு தன்னை ஓரிடத்திலேயே இழந்து தவிக்கிறாள். தன்னைப் போல சுமதியும் ஏமார்ந்து கிடக்கிறாள் என்று தெளிந்தவுடன் சாந்தியின் உள்ளுணர்வில் எழும் தாய்மையும் மென்மையும் கதையின் ஆக சிறந்த தரிசனங்களாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது. வன்மை தன்னையே விஸ்வரூபமாகவும், மென்மை தான் சார்ந்த ஒன்றை ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளும் என்ற ஆழமான கருத்தை, சாந்தி – சுமதி – குமார் கதாபாத்திரங்களின் வழி முன்னிருத்தியிருக்கிறார்.
    வன்மையின் பேரணை உடைந்து பெருகி பின்னர் சமன் அடையும்போது இயல்பான நிலையிலிருந்து மென்மையான நிலையில் அமைதியை எங்கும் வியாபித்து விட்டு போகும் எனும் சூழல் குழந்தையின் கையில் பத்து வெள்ளியை சாந்தி திணித்து விட்டு மவுண்டன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கடந்து போகும் கடந்தகால நினைவுகள் அவளை நிலைகுலையவே செய்திருக்கிறது. இன்றைய நம் சமூகத்தின் அவல நிலையை எடுத்துச் சொல்லும் ஓர் அங்கமாக இந்தச் சிறுகதை அமைந்திருக்கிறது.
    வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களின் பாத்திர படைப்புகளின் வழி நம் முன்னே நடமாடும் மனிதர்களின் இயல்புகளைக் காண முடிகிறது. இங்கே சேகர் எனும் கதாபாத்திரம் மறைந்தே தன் பாத்திரப்படைப்பை வழங்கியிருந்தாலும் ஒவ்வொரு மானிடனின் உள்ளக்கிடங்கில் உறங்கி கிடக்கும் சோம்போறி. அது எல்லாரையும் சில சமயங்களில் சேகரைப் போலவே நம் வாழ்வில் உலாவி திரிய காத்திருக்கிறது. அந்தக் குணம் எப்பொழுதெல்லாம் வெளிப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் எங்கோ ஓடி ஒளித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அப்படி ஓடி ஒளிந்து கொள்ளும்போது, தன்னை சார்ந்தவர்களும் தன்னை மேலாதிக்கம் செய்பவர்களின் நிலையும் செயலும் எப்படியெல்லாம் நிலைகுத்தியும், மேலெலும் அனலாகவும் மாறும் என்பதை அனல் சிறுகதை உணர்த்தி விட்டு மௌனமாகவே போகிறது. ‘அனல்’ – தேவைக்கேற்ப!

  8. அனல் சிறுகதை

    கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. கதையை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து இறுதிவரை எங்கேயுமே அதன் விறுவிறுப்பு குறையவில்லை. “என்னடா இவங்க, ஒரு பெண் ஆனா இப்படி கத்துறாங்களே”, என்று சாந்தியின் ஒவ்வொரு சொல்லையும் பேச்சையும் வாசிக்க வாசிக்க மனம் நெருடலாகவே இருந்தது. தோட்டத்து மக்களின் இயல்பான வாழ்க்கையை மிக அழகாக, ஆழமாக சாந்தியின் ஒவ்வொரு செயலிலும் கதையில் காண்பிக்கிறார் எழுத்தாளர். என்னதான் அனல் சுட்டெரித்தாலும் ஒரு கட்டத்தில் அணைந்து போகும். அது போலத் தான் என்ன தான் சாந்தி உச்சக்கட்ட கோபத்திலிருந்தாலும் சுமதியின் அழுகையைக் கேட்கும் போதும் குழந்தையின் மழலைத்தனத்தை இரசிக்கும் போதும் அந்தக் கோபம் ஆங்காங்கே அணைந்து தான் போனது.
    “அந்தாளு கூட பதினெட்டு வருசம் குடும்பம் நடத்திருக்கன்”, என்ற வரியைப் படித்தவுடன் “அடக்கவுளே”, என்று தூக்கிவாரிப் போட்டது. கதையில் இந்தத் திருப்புமுனை வாசகரை நிச்சயம் வியக்க வைத்திருக்கும். ஆண்கள் ஓட்டும் மவுண்டன் சைக்கிளைக் கடினமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஓட்டுவது, கறாரான பேச்சு, நடத்தை என எல்லாம் சாந்தியின் முரட்டுத்தனத்தைக் காட்டினாலும் அவளுக்குள்ளும் தாய்மை, பெண்மை என உணர்வுகள் இருக்கின்றன என்பதை இக்கதையில் காணலாம். கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் சின்னச் சின்ன அசைவும் மிகத் துல்லியமாகக் கதையில் எழுதப்பட்டிருப்பது மிகச் சிறப்பான விடயம். நல்லதொரு வாசிப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் ‘அனலுக்கு’ நன்றி ஐயா.

    -கலைமதி இரமேஷ்

  9. அனல்.. தலைப்பைப் போலவே கதையில் உள்ள காட்சிகளும் சலிக்காமல் விறுவிறுப்பாகக் காட்டப்பட்டுள்ளன. அடுத்த என்ன நடக்கப்போகிறது? சேகர் வெளியே வருவாரா? வாங்கிய கடனுக்கு எப்படி வாசலில் கத்திக் கொண்டிருக்கும் சாந்தியை எதிர்கொள்வார்? என்ற கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத முடிவைக் கொண்டிருந்தது இந்தச் சிறுகதை. கோபத்தில் சுமதியின் வாசலில் கத்திக்கொண்டிருந்த சாந்தியின் குணநலன்கள் குழந்தையுடன் அவ்வப்போது காட்சிப்படுத்தப்படும் வேளையில் எதிர்மறையாகவே இருந்தன. சாந்தி கரடுமுரடான குணம் கொண்டவள் என்று நினைக்கும் போது, குழந்தையுடன் நடந்துகொண்ட விதம் அவளின் பெண்மையையும் தாண்டி அவள் மீது ஒரு நல்ல பார்வையையும் விட்டுச் சென்றது. மேலும், பலர் என்ன நினைப்பார்கள் என அஞ்சி வாழும் மக்களிடையே, எதையும் கருதாது, காதில் போடாது நினைத்ததைச் செய்யும் சாந்தி இக்கதைக்கு மேலும் அனலைச் சேர்த்துள்ளார். சிறந்த கதையோட்டத்தைக் கொண்டு சற்றும் சலிக்காமல் கொண்டுசென்றது அனல் சிறுகதை. நன்றி ஐயா.

Leave a Reply to காந்தி முருகன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.