
வானத்தை துண்டாக்கும்
உயர்ந்த கட்டிடங்கள்
என்னைக் கவர்கின்றன.
பாதிப் பொய்களும் பாதி உண்மைகளும்
முயங்கும் கதைகளல்ல
நான் விரும்புவது.
முழுவதும் புரட்டானாலும்
நெடுங்கதைகளே
என் விருப்பம்.
பெரும்பரப்பிலான பொருட்களே
என் விழைவு.
ஒலிப்பெருக்கம்;
விரிந்த வெளியும் ஒளியும் கலந்த உணர்வு.
இரவின் தூரங்களை வெளிச்சப்படுத்தும்
இரயிலின் மாபெரும் மஞ்சள் கண்கள்.
குறு முள்எலி,கம்பளிப் பூச்சி,குழி எலி,
சிறு பெரணிகள் எல்லாம் சரிதான்.
ஆனால் எனக்கு வேண்டியது
பூ மரங்கள், நீளும் படர் கொடிகள்,
பரவும் ஒட்டுண்ணிகள்.
சிறிது நேர அந்தியைப் போல்
குறுகிய மதிய நிழலைப் போல்
அணில் போல் இளமையில் உள்ள
உன்னை ஏன் நேசிக்கிறேன்
என்று நீ கேட்டால், நான்
என்ன பதில் சொல்ல?
***
இங்கிலிஷ் மூலம்: கெகி தாருவாலா-1937-
லாகூரில் பிறந்தவர். பஞ்சாபைச் சேர்ந்த இந்தியக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர். காவல் துறை அதிகாரி.
படைப்புகள்-The keeper of the dead, Love Across the Salt Desert…
விருதுகள்-சாகித்திய அகாதெமி, பத்மஸ்ரீ
தமிழாக்கம்: இரா. இரமணன்
(பின் குறிப்பு: பிரதியைப் படித்துச் சில திருத்தங்கள் சொல்லி உதவிய அம்பை அவர்களுக்கு நன்றி.)