பொதுமங்களும் அரசாங்கமும்

தமிழாக்கம் : கோரா  

எதிர்மறை  வளர்ச்சிகளை விமர்சிக்கவும்  நுணுகி ஆராயவும் பயன்படக் கூடிய கருத்துப் படிவமாக பொதுமம்  நிரூபிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் விவசாய நிலங்களுக்கான போராட்டங்களைப் பற்றியும், சீனாவில் நிலவும் குடியிருப்புத் தட்டுப்பாடுகள் பற்றியும், சிலி நாட்டில் சல்வடோர் அல்யெண்டேயின் வீழ்ச்சிக்குப் பிந்திய ராணுவ ஆட்சியில் பணவீக்கம் காரணமாக எழுந்த சட்டவிரோதமான சிற்றுணவகங்களைப் (soup kitchens) பற்றியும் ஃ பெடெரிச்சி கடுமையாக விமர்சித்து எழுதுகிறார். ஃ பெடெரிச்சி, டர்டோ  மற்றும் லவால், ஆகிய மூவரும் பொதுமத்துக்கான பிரத்யேக வில்லையை (lens) வழங்கி அதன் வழியாக நாம் வெவ்வேறு  சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுப் போராட்ட வடிவங்களை சம்பந்தப் படுத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளச் செய்துள்ளார்கள். அதேசமயம், சமூகம் குறித்த பொய்யாக மேம்படுத்தப்பட்ட புனைவுகளை (false romanticization) உண்டாக்குதல் அல்லது  பொதுமங்களை புதுமையானதொரு கொள்கை என்னும் அலங்கார உறைக்குள் (encapsulation) மறைத்து வைத்தல் அல்லது Uber, Airbnb போன்ற கம்பெனிகள் தம் சுரண்டல் நடைமுறைகளைப்   பொருளாதாரப் பங்கேற்பு (sharing economy) என்ற கவர்ச்சிகரமான சொல்லாடலுக்குள்  வெற்றிகரமாக ஒளித்து வைத்து செயல் படுதல் போன்றவற்றை விரைவில் புரிந்துகொண்டு  எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை இந்த நூலாசிரியர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்.

ஆனாலும், பொதுமம் என்ற கருத்துருவில் இருந்து பற்பல அடுக்குகளைக் கொண்ட சிக்கல்கள் நிறைந்த சமூகங்களுக்கான அமைப்பு சார் கொள்கைகளை வடித்தெடுப்பது மிகவும் கடினமானது  என்று நாம் ஏற்கனவே டர்டோ மற்றும் லவால் நூலின் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்.  இந்த நிலை ஃ பெடெரிச்சிக்கு சிறிதளவும் திருப்தி அளிக்கவில்லை. மார்க்ஸையும்  மற்றும் அவரின் பாதிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பிறரையும் அவர்களுடைய பகுப்பாய்வுகளின் கருத்தியல் உள்ளடக்கம் காரணமாக  ஃ பெடெரிச்சி இவ்வாறு   விமர்சிக்கிறார்: “ஆதாயம் மற்றும் இழப்புகளை ஏந்திய அருவமான பலகையில் (abstract board) வர்க்கப் போர் நிகழ்வதில்லை; அதற்கு ஒரு நிலப் பரப்பும் வேண்டியிருக்கிறது.” இது நியாயமான கருத்து; ஆனாலும் இது  பொதுமங்களுக்கான அளவுகோல்  எது அல்லது எதுவாக இருக்க முடியும்’ என்ற இன்னும்  தீர்வு காணப்படாத கிட்டத்தட்ட வரலாற்றுச்  சிறப்புடையதாகிவிட்ட பிரச்னையையும் கூடவே  அழைத்து வந்து விடுகிறது. ஏன்- “சமூகப் பங்கேற்பற்ற பொதுமம் வேண்டாம்” என்ற முழக்கமே, அத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர் யார் சேராதவர் என்ற கேள்வியை எழுப்புகிறது, அல்லவா? மதம், இனம் மற்றும் பிரதேச அடையாளங்களைப் பகிர்ந்துள்ள சமூகங்களை விட்டு ஃ பெடெரிச்சி அழுத்தமாகத் தூரவிலகி இருக்கிறார். உறவுகளின் தன்மை, ஒத்துழைப்புக் கொள்கை மற்றும் நிலம், காடுகள், கடல்கள், விலங்குகள் அனைத்துக்குமான பரஸ்பர பொறுப்புணர்ச்சி ஆகியவையே சமூகம் என்று அவர் வரையறுக்கிறார். ஆனால் இது சற்று தெளிவற்ற விடையாகவே நீடிப்பதோடு  இந்த வகை சமூகம் எவ்வளவு தூரம் போகும் என்ற கேள்விக்கு நம்மை மீண்டும் கொண்டு வருகிறது. இது சிறு, உள்ளூர் சமூகங்கள் சார்ந்த விஷயமா அல்லது கடைசி முடிவாக  பூவுலகக் குடியுரிமை வடிவத்தை சம்பந்தப் படுத்துமா?

இரு நூல்களும் எடுத்துள்ள அரசு விரோத நிலைப்பாடு இந்த கேள்விகளுக்கு விடை காண உகந்ததாக இல்லை.  ஃ பெடெரிச்சி, டர்டோ மற்றும் லவால் ஆகியோரின்கருத்தையொட்டிப் பார்க்கையில்  ‘அனைவர்க்கும் உரியவற்றைக் குறிக்கும் பொதுமம் என்னும் கருத்துருவமும்  பொதுமங்கள் என்ற பதமும் ஒன்றல்ல; எதிரானது கூட’. இந்த மோதலின்   முனைப்பான எடுத்துக்காட்டு,  ஆப்பிரிக்க அரசாங்கம்  அயலக முதலீட்டாளர்களுக்கு  நிலங்களை விற்பனை செய்வது  அல்லது குத்தகைக்கு விடுவதால்,  பெரும்பாலும் சுய வளப் பெருக்கத்தை நாடும் உள்நாட்டு மேட்டுக் குடியினரே லாபமடைகின்றனர்; ஊரார் தம் உடைமையைப் பறிகொடுக்கிறார்கள். பொதுமங்களில் அக்கறை உயிர்த்து எழுந்ததின் காரணம் நிச்சயமாக அரசு என்ன செய்ய வல்லது என்பது குறித்த மாயைகள் அழிந்ததின் விளைவே என்று டர்டோ மற்றும் லவால் சுட்டிக்காட்டுகிறார்கள்.  அவை: மக்கள் நல அரசு புதிய தாராளமயமாக்க வாதத்தால் அகற்றப் படுவது மட்டுமல்ல; கம்யூனிச நாடாக சுயப்பிரகடனம் செய்து கொண்ட அரசுகளின் குடியாட்சிக்கு ஒவ்வாத நடத்தையும் கூட. இது பற்றி  நூலாசிரியர்கள் கீழ்கண்டவாறு எழுதுகிறார்கள்:

அரசாங்க  சொத்தின்  வடிவமாகப் பாவித்துக் கொள்கின்ற பொதுமம் குறித்த புரிதல், அரசால் பொதுமம் அழிவுறுதற்கே  வழி வகுக்கும்.  மேலும் பொதுமத்தின் சில பகுதிகள் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சமூகத்தின்  எல்லைகளுக்கு உள்ளே  புதைப் படிவங்களாக  பிழைத்திருக்கக் கூடுமானால், அது  மூச்சுத் திணற வைக்கும் அரசுக்  கட்டுப்பாட்டைத்  தம் ஊக்கமுள்ள எதிர்ப்பால் அந்த ஆதிக்க சமூகம் தடுத்து நிறுத்த முடிவதாலேயே. 

மேற்கண்ட விமர்சனம்  நியாயப் படுத்தக் கூடியதே என்றாலும், கொள்கைசார் போராட்ட அரங்காகவும்,  முற்போக்கு அரசியலுக்கான கருவியாகவும் திகழும் அரசு மற்றும் அதன் நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விடுதல் அவ்வளவு எளிதல்ல. முதலிய உறைபொதியாக்கம் (Capitalist encapsulation) மற்றும் கருவியான பொதுமம் (instrumentalization of the commons ) என்ற உத்திகளின் கைப்பாவையாக ஆகி விடும் ஆபத்து இருக்கிறது. உதாரணமாக டேவிட் காமரான் குறிப்பிட்ட ‘பெரிய சமூகம்’ (Big Society) அல்லது பால்கெனெண்டே குறிப்பிட்ட ‘பங்கேற்பு சமூகம்’ (participation society ) ஆகிய திட்டங்களின் நடைமுறையில்  பொதுநல அரசைக் கழற்றிப் போடுவது மற்றும் சமூகம் அதன் செலவுகளை ஏற்பது ஆகிய இரண்டு செயல்பாடுகளும் கைகோர்த்துக் கொண்டன.   

இது ஏற்கனவே நாம் மார்க்ஸின் கருத்தாக அடையாளம் கண்டுள்ள இடதுசாரி அரசியலின் பழைய தடுமாற்றத்துக்கு (dilemma) நம்மைக்  கொண்டு வருகிறது. இதையே சமீப காலத்திய மார்க்ஸியரான எ ரிக் ஓலின் ரைட்டும் தன் How to  be  an anticapitalist in the 21st century என்னும் நூலில் அண்மையில் இவ்வாறு சுருக்கிக் கூறுகிறார்: அடிப்படையில் அரசு என்பது தனியார் சொத்தைக் காக்கவும், சக்தி வாய்ந்த மேட்டுக் குடியினர் லாபம் பெற அவர்களுக்கு  மூலதனத்தை மீண்டும் உற்பத்தி செய்து தரவும்  அமைக்கப் பட்ட கருவியா? அப்படியென்றால்,  அடிப்படையில் அது இடது சாரி அரசியலுடன் முரண்படுகிறது அல்லவா ? அல்லது மூலதனத்தின் அழிக்கும் வலிமையிலிருந்து எளியோரைப்  பாதுகாக்கும் கேடயமாக அரசு  செயல்படுகிறதா?

உண்மையில் சரியான தர்க்க முறைப்படியான விடை  இரண்டும் தான். ரைட் -இன் கருத்து: “உலக வரலாற்றில் பெரும்பாலும் அரசுகளே மூலதன சேவையைக் கைவசம் வைத்திருந்தன; இன்று மறுபடியும் அதே நிலைக்குத் திரும்பி  வந்து விட்டதாகத் தெரிகிறது.” அதே நேரம் இடர்ப்பாடுகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் – பொருளாதார, சுற்றுச் சூழல், மனிதாபிமான மற்றும் பெருந்தொற்று நெருக்கடிகள்- நன்கு சீரமைக்கப் பட்ட தீர்க்கமாக முடிவெடுக்கும் அரசு இல்லாமல் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாது என்ற மெய்யான உணர்தலைத்  தூண்டியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த புதிய தேவை இடது சாரிகளுக்குக் கட்டாயமாக அனுகூலமானது என்று சொல்வதற்கில்லை. சமீபத்திய ஆண்டுகளில், விளாடிமிர் புடின், ஜயிர் பொல்சொனாரோ மற்றும் டானல்ட் டிரம்ப் போன்ற தீ- நாயகர்களின் எழுச்சியை நாம் கண்டு வருகிறோம். மேலும் அரங்கிலிருந்து தற்போது ட்ரம்ப் காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், சுற்றுச் சூழல்  பேரழிவுகளின்  காரணமாக சர்வாதிகார அரசுகள்  தங்கள் மக்களுக்கு இயற்கை வளங்களின் கடைசி துண்டங்களைப் போராடிப் பெற்றுத் தர  வேண்டிய அவசியம் உருவாகி  ஒரு வித சூழல் பாசிசத்துக்குக் (ecofacism) கூட வழி நடத்தப்படலாம்;  உண்மையில் சமனற்ற  கொரோனா தடுப்பூசி விநியோகம் இதை முன் கூட்டியே  உலகுக்கு உணர்த்தி விட்டது.

எனினும் இதே காரணங்களுக்காகத்தான்  அரசியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த போராட்டம் நிகழ்த்தும் ஒரு முக்கிய செயற்களமாக அரசு நிலைத்திருக்கிறது. எனவே அரசு ஒரு மிகையான அமைப்பு  அல்லது இயல்பாகவே அது ஒரு மக்கள் விரோத அமைப்பு என்று காட்டுவது விவேகமற்ற நடத்தை என்று உணர்ந்து பொதும உந்தம் (momentum) செயல்பாட்டாளர்கள் அரசு எதிர்ப்பைக் கைவிட வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள நெருக்கடிகள் புதுத் தாராளமயக் கொள்கையின் எல்லை வரையறைகளை வெளிப்படுத்தி இருக்கலாம், ஆனால் அவையும் பொதுமங்கள் பற்றிக் கேள்விகள் எழுப்புகின்றன. உதாரணமாக, டர்டோ மற்றும் லவால்-ஆகியோரின் பொதுமங்கள் பேரவை, எப்படி தடுப்பூசித் திட்டம் அல்லது முகக்கவசம் அணியவேண்டிய கட்டுப்பாடு ஆகியவற்றை  நிர்வகித்திருந்திருக்கும்? பொதுமத்தை அரசுக்கு எதிராக நிறுத்துவது அல்லது அவ்வாறு சிந்திப்பதற்குப் பதிலாக, நாம் அவைகளை ஒன்றாக இணைப்பதே நம் நற்செய்கையாக  இருக்கும். பொதுமங்களுக்கு அரசு எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அரசுக்கும் பொதுமங்கள் தேவைப்படும். பொதுமங்கள் பற்றிய சிந்தித்தல், இன்று அதிகமாகத் தேவைப்படுகிற சமூகத்தின் மக்களாட்சிமயமாக்கத்துக்கு (democratization) உரிய பங்களிப்பை செய்யமுடியும்.  மக்களாட்சிமயமாக்கம் அரசுக்கு வெளியேயும் உள்ள  பற்பல  அமைப்புகளை உட்படுத்திக் கொள்ளும் என்கிறார் ரைட். அவையாவன: ஒரு மேலதிக குடியரசு ஆதரவுப் பணிச் சூழல், கல்விக் கூடங்கள் மற்றும் வாழ்க்கைச் சூழல்- அனைத்து சிந்தனைகளும் டர்டோவும் லவாலும், மற்றும் ஃபெடெரிச்சி எழுதிய இரு நூல்களில் காணப் படுகின்றன. இத்தகைய பொதுமங்களாலான மட்கிய உர அடுக்கு (humus layer) காரணமாக,  அரசின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, அது பொதுமங்கள் மீது  உண்மையான அக்கறையுடன் செயல்படக் கூடியதாக ஆகி விடும்.

இத்தகைய மாறுதல் படிப்படியான சீர்திருத்தங்கள் வழியாக ஏற்படுமா அல்லது புரட்சி மூலம் கிடைக்குமா (டர்டோ மற்றும் லவால் எழுதியுள்ள instituent paxis- முடுக்கமும்  தீவிரப்படுத்தலும் பெறுவதால் எழும் புரட்சி) என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். எதுவாயினும் நாம் தயாராக இருப்பது புத்திசாலித்தனம். இந்நூல்கள் அதற்கான கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன.

(நிறைவு)

Montage of two book covers. L: Pierre Dardot and Christian Laval, Common: On Revolution in the 21st Century, Translated by Matthew MacLellan (New York: Bloomsbury Academic, 2019). R: Re-enchanting the World: Feminism and the Politics of the Commons by Silvia Federici, Oakland, PM Press, 2019

சொல்லடைவு:

Neoliberalism (புதிய தாராளமயக் கொள்கை): தடையிலா சந்தை முதலியம்,  கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், அரசு செலவினங்கள் குறைப்பு ஆகிய கொள்கைக் கூறுகளை ஆதரிக்கும் ஒரு அரசியல் அணுகுமுறை

Big Society : 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான அரசியல் கொள்கை. டேவிட் காமெரோன் இதன் உறுதியான ஆதரவாளர்.

Participation Society: நெதர்லாண்ட்ஸ் பிரதமரான Jan Peter Belkenende (2002-10), குடிமக்களின் பங்கேற்பு பிரதிநிதித்துவ குடியாட்சியின் வழிமுறைகளை மேம்படுத்தும் என்ற கொள்கையைக் கொண்டவர்.

Ecofascism: இது சூழலிய வரலாற்றாசிரியர் மைக்கேல் E. ஜிம்மேர்மன் -ஆல் வரையறுக்கப் பட்டது. இவர் உலக நலனுக்காக தனி நபர் தன் நாட்டங்களை தியாகம் செய்ய வலியுறுத்தும் சர்வாதிகார அரசு அமைப்பைப் பரிந்துரைக்கிறார்.

Jair Bolsonaro: தற்போது இவர் பிரேசில் நாட்டின் 38-வது அதிபராக பதவி வகிக்கிறார். டிரம்ப் இவர் பதவி ஏற்பை ஆதரித்தார்.

E. Olin Wright : How to be an Anticapitalist in the21st Century என்ற நூலின் ஆசிரியர். அமெரிக்காவில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் மாடிஸன் என்ற நகரில் உள்ள அம்மாநில அரசின் பல்கலை ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.

சுட்டி: https://www.eurozine.com/the-commons-versus-capitalism/

Series Navigation<< சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.