ஆர்.எஸ். தாமஸ் கவிதைகள்

அவர்கள்

அவர்களது கைகளை

என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்

அழுத்தமான கைகள்

அன்பில்லை அவற்றில்,

வலிய வரவழைக்கப்பட்ட

ஒரு மென்மையைத் தவிர.

கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து

வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.

சோகத்துடன் தங்கள் துக்கங்களை

எனது பின்வாசலருகே

கொண்டுவந்து வைத்துவிட்டு

வாயடைத்து நிற்கிறார்கள்.

பகலொளியின் பிரகாசத்தில்

வீசும் காற்றில்

அவர்களைப் பார்க்கையில்,

அவர்களின் கண்களின் ஈரத்தில்

அவர்களின் அழுகைக்கான

காரணம் புரிகிறது

தங்களை இந்தநிலைக்குக் கொண்டுவந்தவர்களோடு

மல்லுக்கு நிற்கிறார்கள் அவர்கள்..

தினமும் வானம் நீரைப் பிரதிபலிக்கிறது

நீர், வானத்தை.

தினமும் அவர்களது போராட்டத்தில்

நான் நிற்கிறேன் அவர்கள் பக்கம்,

அவர்களது குற்றங்களையும்

என்னுடையதாக ஏற்றுக்கொண்டு.

வீட்டிலிருந்து, வாழ்விலிருந்து

நினைவுகளிலிருந்துகூட

அவர்களால் வெளியேற்றப்பட்டுவிட்ட

அவர்களது ஆன்மாவுக்கு,

பின் எப்படித்தான் நான் சேவை செய்வது ?

**

வீட்டைப் பார்த்துக்கொள்பவன்

கார்கள் சாலையில் சீறிக் கடக்கின்றன அவனை

ஒருநாளும் அவனால் வாங்கமுடியாது

அவற்றில் ஒன்றை

மற்றவர்களோ இதை நம்பமாட்டார்கள்

இந்த மலைப்பிரதேசத்துக்கு

வரட்டுமே அவர்கள்.

வந்து பார்க்கட்டுமே,

சாலையின் இருமருங்கிலும்

வரிசைகட்டி விளாசும் மழையில்

அவன்பாட்டுக்கு அலைந்து திரிவதை,

இப்போது என்னைப்போலவே.

காற்று அவன் கேசத்தைக் கொஞ்சுகிறது

அந்திக் கதிரவனின் தீப்பிழம்புகளில்

மேல்வானம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது

அவனுடையதென்பதாக

எதுவுமில்லை

இந்த நிலமில்லை

நிலத்தின் விலங்குகளோ

பறவைகளோ எதுவுமில்லை.

வெறுமனே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறான்

பூனைகளுடனும் கோழிகளுடனும்

மலைவீட்டின் கதகதப்பைப் பகிர்ந்துகொண்டு

தனியாகக் காலத்தைக் கழிக்குமாறு.

தன்னுடையதென்பனவற்றையெல்லாம்

எப்போதோ அவன் இழந்தாயிற்று.

வாழ்வெனும் பாறையில் மோதிமோதி

நைந்து வெளிறிப்போன

அந்த முகத்தைத் தவிர.

**

வருதல்

கடவுளின் கையில்

ஒரு சின்னஞ்சிறு உலகம்.

பார் இங்கே.. என்றார்.

பார்த்தான் மகன்.

எங்கோ வெகுதூரத்தில்,

நீரினுள் பார்ப்பதுபோல்,

வறண்டு வெடித்திருந்த

செந்நிற பூமியைப் பார்த்தான்.

விளக்குகள் அங்கு எரிந்தன.

பெரும் கட்டிடங்கள் தங்கள்

நிழலைப் பரப்பியிருந்தன

பாம்பைப்போல் நெளிந்து மின்னும்

ஆறொன்று ஒளிவீசி ஓடிக்கொண்டிருந்தது

அந்த மலைப்பகுதியின்  குன்றின்மீது

ஒரு மொட்டை மரம்

வானத்துக்கே துக்கம் தந்து நின்றிருந்தது.

பலர் அதனை நோக்கி

தங்கள் மெலிந்த கைகளை

நீட்டியவாறு நின்றுகொண்டிருந்தார்கள்,

காணாமற்போன வசந்தம்

அதன் கிளைகளுக்குத் திரும்பவேண்டுமென

இறைஞ்சுவதுபோல.

அந்த மகன்

அவர்களைப் பார்த்தான்.

என்னை அங்கே போகவிடுங்கள் என்றான்

**

மற்றொன்று

தூரத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தின்

ஏதோ ஒரு பகுதி ஒரேயடியாகப் பொங்க,

விளக்கில்லாத, துணையேதுமில்லாத

அந்தக் கிராமத்தின் கரையோரத்தில்

சீறும் அலைகள் எழுவதும் வீழ்வதும்,

எழுவதும் வீழ்வதுமான சத்தத்தை

அதிகாலையில் தூக்கமின்றி

படுத்தவாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்

சில மணிநேரத்துக்கு, சில நாட்களுக்கு

சில வருஷங்களுக்கு என்றல்ல –

என்றென்றைக்குமாகவும் நமது பிரர்த்தனைகள்

தன் மீது மோதிமோதி விழுந்து நொறுங்குமாறு

இருந்துகொண்டிருக்கும் அந்த மற்றொன்றும்

தூங்கமல்தானிருக்கிறது

என்கிற நினைவும் கூடவே…

**

நன்று

குன்றின் உச்சியிலிருந்து

கீழே பார்க்கிறான் கிழவன்,

அந்தப் பள்ளத்தாக்கில் தன்

கடந்தநாட்களை நினைவுபடுத்திக்கொள்ள.

அந்த ஓடை மின்னுவதையும்,

அருகில் சர்ச் நிற்பதையும்

பார்க்கிறான்.

கேட்கிறான் குழந்தைகளின்

குதூகல இரைச்சலை.

உடம்பின் ஒரு பகுதியில்

திடீரென சில்லிட்ட அது சொன்னது,

சாவு வெகுதூரத்தில் இல்லையென.

வாழ்வெனும் மரத்தின் பெருங்கிளைகளின் கீழ்

கவிந்திருக்கும் நிழலது.

அவனது தோட்டத்தில்

செடிகொடிகள் வளர்ந்திருக்கின்றன.

மீன்கொத்திப்பறவையொன்று இரையை

கூர்நகங்களில் கவ்வியவாறு கடந்துசெல்கிறது.

காட்டுச்செடிகளின் சுகந்தத்தை

தூவிக்கொண்டு வீசுகிறது காற்று.

பூமியின் மேல் ட்ராக்டர் இயங்குகிறது.

அவனது பேரன்தான் அங்கு உழுவது.

அவனது இளம் மனைவி கொண்டுவருகிறாள்

அவனுக்கென டீ, கேக்குகளோடு

ஒரு விஷமமான புன்னகையையும்.

சரிதான்..

**

கவிதைகள் : ‘Everyman’ வெளியிட்டிருக்கும் ’Selected Poems, R.S. Thomas’ எனும் நூலிலிருந்து.

**

ஆர்.எஸ். தாமஸ் (Ronald Stuart Thomas) :  

பிறப்பு: 1913-ல் கார்டிஃப், வேல்ஸ்.

வேல்ஸ் (British Wales) பிராந்தியத்தின் கிராமிய வெளியில், வேல்ஷ் ஆங்கிலிக்கன் சர்ச்சில் ஒரு பாதிரியாக இளம் வயதிலிருந்தே பணியாற்ற ஆரம்பித்து, பல வருடங்களாக சர்ச் பணியில் ஆழ்ந்திருந்தவர் ஆர்.எஸ். தாமஸ்.

வேல்ஸின் சூழ்ந்து படர்ந்திருக்கும் நீல மலைகள், ஆறுகள், அப்பாவி மக்களென இயற்கையின் வண்ணங்கள் அவரில் பெரிதும் வியாபித்துக்கிடந்தன. மெருகேற்றி அவரை உருவாக்கி ஒரு கவிஞனாய் வெளியுலகிற்கு ஒரு கட்டத்தில் காண்பித்தன. மண்ணின் மைந்தனாக இல்லாமல், உலகளாவிய கவிஞனாக நீ இருக்கமுடியாது எனும் ஆங்கிலேயக் கவி ராபர்ட் ஃப்ராஸ்டின் கூற்றை ஆமோதிப்பதுபோல் தன் தாய்மண்ணான வேல்ஸ் நிலத்தை, மனிதர்களை தொடர்ந்து தன் எழுத்தில் வெளிக்கொணர்ந்தவாறே இருந்தார் அவர். பணியாற்றுமாறு நேர்ந்த வேல்ஸ் சர்ச்சின் பணிசூழல், செயல்பாடுகள் ஒருபுறம், மாறா நம்பிக்கையுடன் வந்து சென்ற ஒன்றுமறியா மனிதர்களின் வாழ்வு மதிப்பீடுகள் மறுபுறம் எனவும், பொதுவாக தேசத்தின் கலாச்சாரச் சீரழிவுபற்றிய கவலையும் விரவிக்கிடக்கின்றன அவரது கவிதை வெளியில். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவராக பிரசித்தி பெற்றிருந்த தாமஸ், நோபல் பரிசுக்கெனப் பரிந்துரைக்கப்படலாம் எனும் பேச்சும் இருந்தது ஒரு கட்டத்தில். பிரிட்டிஷ் ராணியின் கவிதைக்கான தங்க மடலை 1964-ல் பெற்றார்.  2000-ல் மறைந்தார்.  

One Reply to “ஆர்.எஸ். தாமஸ் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.