நீள்ஆயுள் நிறைசெல்வம்

வாசுகி வாசலைப் பெருக்கி கால்படாத தலைபாகத்தில் துளியாகக் கண்ணன் பாதம் வரையும்போதே அம்மா தொலைக்காட்சியில் கந்தர் சஷ்டிக் கவசத்தை மாற்றினாள். 

“வாசுகி…கோலம்போட்டு முடிச்சுட்டு வந்து மத்த வேலையப் பாரு…காக்கா குருவியக் கண்டா அங்கனையே நின்னுக்கிட்டு…தெனமும்தான் பாக்கற,” என்று அம்மா சத்தம் போட்டாள். 

அம்மா முழுநேர செய்தித் தொலைக்காட்சிகளில் எதைத் தேர்வு செய்வது என்று மாற்றிக்கொண்டே இருக்கும் சத்தம் மாறிமாறிக் கேட்டது. தெய்வங்கள், வழிபாடுகள் விஷயத்தில் அம்மாவைப் புரிந்துகொள்வது கடினம். எல்லாம் அப்பா கொடுத்த பயிற்சி. அம்மாவின் பதின் வயதிலேயே திருமணமாகியதால் அவருக்கேற்பதுபோல அம்மாவை மாற்றிவிட்டார் என்று தோன்றும். அவளை ஒத்த பெண்களைப்போல அல்லாமல் சடங்குகள், ஜாதகம், நேர்ச்சை, பரிகாரம் இதிலெல்லாம் அவள் மனசுக்குள் கிண்டல்கள் இருக்கும். கடனே என்று ஊர் உறவுகளுக்காகச் செய்துவைப்பாள். பக்கத்து வீட்டு அத்தை சோற்றுத் தட்டுக் கூடையைத் தலையில் வைத்தபடி வயலுக்குக் கிளம்பிவிட்டாள்.

கோலத்தை முடித்துவிட்டு நடைஅறையைத்தாண்டி வரவேற்பறையில் நுழையும் பொழுதே ‘கரிசல் எழுத்தாளர் கி.ரா. இன்று அதிகாலை காலமானார்’ என்ற செய்தி வாசிப்பாளரின் குரல் காதில் விழுந்தது. உறுதிபடுத்திக்கொள்ள தொலைக்காட்சி முன் நின்றாள். தொண்ணூற்று ஒன்பது வயசாச்சே. நிறைவா வாழ்ந்திருக்கார் என்று அவள் மனம் கி.ரா.வின் இறப்பைச் சட்டென்று ஏற்றுக்கொண்டது. 

“கீரையா…இப்பிடில்லாமா பேரு வைப்பாங்க…”என்ற அப்பாயி வரவேற்பறையின் கோடியில் நாற்காலியில் காலைத் தூக்கி வைத்து அமர்ந்திருந்தது. கி.ரா.வின் பிறந்தநாள் காணொளி ஒன்றில் அவரும் இப்படித்தான் அமர்ந்திருந்தார்.

வாசுகியின் முறைப்பைக் கண்டதும் கிழவி அமைதியானது. ஏதோ பலமான விசயம்… காலங்காத்தால இது கிட்டெல்லாம் எதுக்கு? ‘நாம்மப்பாக்க ஒன்னுக்கடிச்சு அதுமேல கிடந்த சின்னப் பிள்ளைக்கிட்டெல்லாம் நமக்கெதுக்கு வம்பு’ என்று நினைத்திருக்கலாம். அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து மேற்குப்புற வாசல்படிகளில் வீதியைப் பார்த்து அமர்ந்துகொண்டது.

“அந்த மாஸ்க்கைப் போட்டுக்கிட்டுத் தெருவுல ஒக்காந்து பேசுங்கன்னு ஆயிரம் வாட்டி சொல்லியாச்சு…”

சித்தி அவளின் சமையல்அறையிலிருந்து எட்டிப்பார்த்து சொன்னாள்.

‘என்னமோ நாங்க காணாதத கண்டுட்டீங்க. நாங்க பாக்காத ரோகமா? எழவெடுத்த க்ரான ரோகம் வந்து இந்தப்பாடு… அந்த காலரா காலத்துல எங்கம்மா போனாங்க…பெரியம்மை, காசம் ன்னு எத்தன ரோகத்துக்கு தப்பி பொழச்சிருப்பேன்,” என்றபடி வாசல்படியில் இருந்து எழுந்தது. முதுகுபுறம் இளம் ஊதாநிற வாயில்சேலையின் பின்கொசுவத்தை சரிபார்த்து பூமாதிரி விரியவைத்தப்படி தன்அறைக்கு சென்றது. கிழவி இந்நேரம் தன்கையளவு கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டையை சரிசெய்யும்.

எத்தனை சொற்களை, காரணங்களை, அனுபவங்களை போட்டு மூடினாலும் அந்தக்கனல் மெதுவாக புகைந்து எரியத்தான் செய்கிறது. கி.ராவிற்கு வயசாவதால் மட்டும் இறப்பு இழப்பில்லை என்று ஆகிவிடுமா என்று தெரியவில்லை. ‘வாழற வயசில சாகக்கூடாது’  ‘எட்டுல போகலாம். எண்பதிலே போகலாம் பதினெட்டுல போகக்கூடாது’ என்பது போன்ற சமாதானங்களை அவள் சிறுவயதிலிருந்து கேட்கிறதுதான். தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு தேநீருக்காக சமையலறைக்குள் நுழைந்தாள்.

பசுவிற்கு உடம்பு சரியில்லை என்று அழும் அயிரக்கா, செவந்தி பூக்கள் மற்றும் கருவளையல்களை தன் அன்பனிடமிருந்து வாங்கி சிரிக்கும் கோமதி செட்டியார், கோபத்துடன் பம்புசெட்டை சுற்றிவரும் ராமசாமி நாயக்கர், நாச்சியாரு என் ப்ரியே…நீ எங்கிருக்கிறாய் என்று காய்ச்சலில் புலம்பும் ரங்கய்யா, கோனேரி, துரைசாமி நாயக்கர், சிவகாமி ஆச்சி என்று கி.ராவின் ஊர்சனங்களே வாசுகியைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒருகட்டத்தில் கி.ராவே கிண்டல் கலந்த புன்னகையுடன் அவள் முன்னால் வந்து விட்டார். 

“தூக்கக்கலக்கத்துல இன்னைக்கும் பாலை பொங்கவிட்டேன்னா பாரு…”என்ற அம்மாவின் குரல் கேட்டு சுதாரித்துக்கொண்டாள். “என்ன நெனப்புல இருக்க நீ,” என்று பாத்திரங்களை ‘நங்’ என்று வைத்தாள். 

அடுப்பை குறைத்துவிட்டு சன்னல் வழியே வானத்தைப் பார்த்தாள். கடைசி இருட்டும் ‘இந்தா போறேன்’ என்று நகர்ந்து கொண்டிருந்தது. வெளியே சிட்டுக்குருவிகள், மைனாக்கள், காக்கைகளின் கரைதல்களும் இணைந்த சக்சக்…சக்சக் குரல்கள். கோபல்ல கிராமத்தின் அதிகாலையை நாவலில் கி.ரா எழுதியிருப்பது நினைவிற்கு வந்தது. பறவைகளின் குரலை கெச்சட்டங்கள் என்றும், மனிதர்களின் குரலை செல்ல சிணுக்கட்டங்கள் என்றும் எழுதியிருப்பார். 

தானே நிறைவதை நிறுத்த முயற்சிப்பது வீண் என்று மனதை அதன்போக்கில் விட்டுவிட்டு தேநீர் கோப்பையுடன் முக்காலியில் அமர்ந்தாள்.

“ஏம்மா…கீரைன்னு ஒரு பேரா…என்னோட வயசுக்கு இப்படி ஒரு பேர கேட்டதில்ல,” என்றபடி பால்டம்ளருடன் அப்பாயி சமையலறை நிலைக்காலை பிடித்துக்கொண்டு நின்றது. எப்படியும் விசாரித்து தெரிந்துகொள்ளாமல் விடாது.

“ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் ன்னு பேரு. உன்னைய வெங்கிடுன்னு கூப்புடுறாங்கல்ல…அந்த மாறி கி.ரா…”

“இப்ப யாரு வெங்கிடுன்னு கூப்புடற வயசுல இருக்கா…எல்லாரும் தான் போயிட்டாங்களே. டீ.வியில போடுறானே… காலமாயிட்டான்னு?”

“தாத்தாவுக்கு தொண்ணுத்தி ஒன்பது வயசு…கதை எழுதறவரு.”

“பெரியவுகளா..சரி..சரி..மேலுக்கு முடியலயா…”

“வயசாயிருச்சுல்ல…நோயெல்லாம் ஒன்னுமில்ல…”

தகவலை அறிந்த நிறைவில் தனக்குள் பேசியபடி திரும்பி சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டது.

அப்பாயிக்கு தன்னைவிட மூத்தவர் நேற்றுவரை இருந்தார் என்பதே ஆசுவாசமாக இருக்கும். ஊருக்குள் அப்பாயியை விட மூத்தவர்கள் இல்லை.  கி.ரா வைவிட அப்பாயி ஐந்தாண்டுகள் இளையவராக இருக்கலாம்.

வாசுகிக்கு இந்த முதியவர்களின் இருப்பும், மனநிலையும், வாழ்க்கை பற்றின நினைப்புகளும் தினமும் மலைக்கச்செய்யும்.  நன்கு கனிந்து குழைந்து மெதுவான ஒன்று என்று இப்பொழுது தோன்றுகிறது. வாழ்க்கை என்ற தேன்குடித்த வண்டு என்றும் வைக்கலாம். ஒரு வயதிற்குமேல் சாவுவராதவர்கள், உடல்நலமாக இருப்பவர்கள் தான் உண்மையில் வாழ்க்கையின் இனிப்பை கொஞ்சமாவது மனம்விட்டு சொல்கிறார்கள். அப்பா இந்த சிடுக்குகளில் இருந்து ஒருமாதிரி விலகிவிட்டார். 

ஐம்பது வயதிற்கு மேலான வாழ்க்கை நெருக்கடிகள், நோய் போன்றவை மற்றவர்களை இறுக்கிச் சுற்றுவதால் ஓரிரு ஆண்டுகளாக வீட்டில் ஓர் அமானுஷ்யம்போலச் சோர்வு கவிழ்ந்திருக்கிறது. அப்பாயியும், புதிதாகப் பிறந்துள்ள குழந்தையும் அந்த படலத்தைக் கிழித்து ஔி பரப்புகிறார்கள்.அவர்களால்தான் வீடு தினமும் துலங்கி எழுகிறது. இதை வீட்டில் சொன்னால் இருக்கிற கோபத்தில் பிய்த்துவிடுவார்கள்.  ஆனால் அதுதான் உண்மை. 

அம்மா காலையிலேயே ஹைப்பரில் எழுந்திருப்பாள். ஒரு தீ, மற்ற தீயை பற்ற வைக்கத்தானே செய்யும். அப்பாயி அங்கும் இங்கும், இரண்டு நடை நடந்து, வாசுகிக்குச் சைகை காட்டிப் புன்னகைத்துவிட்டுப் போகவில்லை என்றால் அவளின் அந்த நாளிற்கு விடியல் இல்லை. சித்தப்பா குரல் கேட்டு அவள் பதறி எழுந்தால், “அவன் மேககர்ப்பத்துல உதிச்சவன், அப்படித்தான் கடமுடான்னு உருட்டுவான். நீ பாட்டுக்கு எனக்கென்னன்னு மெதுவா போய்க் கேளு,” என்று சொல்ல அவளுக்கு அப்பாயி கூட இருக்க வேண்டும்.

வாசுகி திருமணத்தில் ‘இன்ட்டரஸ்ட்’ இல்லை என்று சிலஆண்டுகளுக்கு முன் கூறிய அன்று வரவேற்பறை பதறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல அப்பாவுடன் ஆறஅமர பேசியிருந்தாள். அவர், “வீட்ல மத்தவங்கள நீதான் கன்வின்ஸ் பண்ணனும்,” என்று சொல்லிவிட்டு எழுதும்அட்டையுடன் மேசையில் அமர்ந்துவிட்டார்.

“இன்டுரட்டுன்னா…என்னாது….” என்று அப்பாயி பலமுறை கேட்டுக்கொண்டிருந்தது.

பொறுமை இழந்த சித்தப்பா,“யம்மா…உங்களோட வேற எழவா இருக்கு. கல்யாணத்துல விருப்பமில்லையாம்…எங்களையெல்லாம் கேட்டுக்கிட்டா தள்ளிவிட்டீங்க…”என்று அமர்ந்திருந்த நாற்காலி பதற கத்தினார். சித்தி அவரை கண்களை உருட்டிப் பார்த்தபடி கடந்துசென்று மாடிப்படியில் அமர்ந்து கொண்டாள். சிறிய மௌன இடைவெளிக்குப் பின்பு சித்தப்பா நிதானித்துக்கொண்டு, அடுத்த சமையலறை வாசலில் நின்ற அம்மா பக்கம் திரும்பி பேசத்தொடங்கினார்.

“ஆமா….எழவு அதுஇதுன்னு பேசறதுக்குதான் உன்னைய புத்தனாம்பட்டிக்கு அனுப்பி பெரியபடிப்பு படிக்க வச்சனா…” என்று கிழவி குறுக்கிட்டது.

“வாயமூடிக்கிட்டுஇருங்க. நான்  அவங்கக்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருக்கேன். கவனம் மாறிப்போகும். உங்க புராணத்த ஆரம்பிக்காதீங்க…”

அப்பாயியின் வசவுபேச்சுக்கள் ஊரறிந்தது. வீட்டில் ஒருசொல் மாறினால் எகிறும். அதற்குள்ளாக சித்தி குறுக்கிட்டாள்.

“நம்ம குடும்பத்துத்துல இதுமாதிரில்லாம் கல்யாணம் பண்ணிக்காம பொண்ணுங்க இருந்ததில்ல. இதெல்லாம் செய்யக்கூடாத பெரியபாவம். கேக்றவங்களுக்கு என்னா பதில் சொல்றது…என்ன பெரியவங்க நீங்க? வாயத்தெறக்காம இருக்கீங்க…சொல்லுங்கத்த. ஊருக்கே நியாயம் பேசறீங்க. நம்ம வீட்டுக்கில்லையா,” என்ற சித்தி கிழவியைக் கோபமாகப் பார்த்தாள். சித்தப்பா தன்னைப் பேசவிடாத பெண்களை பார்த்தபடி அமைதியானார்.

“இப்டியும் இருக்கலாம் தப்பில்ல. இருந்துமிருக்காங்க…கொத்தம்பட்டியில எங்கவூட்டுகாரு வகையறாவில ஒரு நாத்துனா இப்பிடி இருந்தா…அதுக்கும் முந்தின வம்சத்துல ஒருத்தி இருந்தாளாம். ஒடக்கரை புளியாமரம் பக்கத்துல அவுங்களுக்க பதுவு இருக்கு. அங்கதான் நம்மகுடும்ப கலியாணங்காச்சிகளுக்கு முதல்ல கலியாணவெத்திலை வச்சு படைக்கிற வழக்கம். உங்க கலியாண கடுதாசுதான் கடசியா படைச்சது…அதுமில்லாம இந்தப்பிள்ள தாய் தகப்பனுக்கிட்ட சொல்லு வாங்குனப்பிறவு நாம சொல்லு குடுத்தா என்ன? குடுக்காட்டிஎன்ன?” என்ற கிழவியை ஆச்சரியமாகப் பார்த்தபடி சித்தி அமைதியானாள். சின்னப்பா தலையாட்டிக்கொண்டார்.

“அன்னிக்கு என்னசூழ்நிலையோ…நம்ம இத்தன பேரு இருந்தும் இந்தப்பிள்ள இப்படி சொல்லுதே…”

“நம்ம விதி…அதமாத்த உன்னால என்னால முடியாது…வேகமாக பேசிறப்பிடாதுப்பா….சின்னதுக்கு பாக்கலாம். அதுங்கள பாத்தாவது இதுக்கு மனசு மாறுதான்னு பாக்கலாம், ”என்ற கிழவி சித்தப்பாவின் தலைமுடியைக் கோதியது. அவர் தலையை குனிந்து அமர்ந்திருந்தார்.

பிரிக்குமிடத்தில் பிரித்து சேர்க்குமிடத்தில் சேர்த்து தைக்கும் அன்பின் உரிமை எல்லை வித்தையை இந்த மாதிரி அனுபவஸ்தர்கள் நுணுக்கமாக செய்வார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை நடந்து ஒரு வாரம் சென்று அத்தை, “கல்யாணம் கட்டிக்கலன்னு ஒரு பொட்டப்பிள்ள சொல்லும்… அத நம்ம கேட்டுக்கனுமா? ஊருல என்ன சொல்லுவாங்க. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசமாட்டாங்க…வூட்ல இத்தன பேரு பெரியவங்க இருந்துக்கிட்டு என்னத்த….” என்று கோபமாக வந்ததும் வராததுமாக கத்தினாள்.

அப்பாயி நிதானமாக அமர்ந்திருந்தது.

“எவனாச்சும் ஏமாத்திப்புடுவான்…அன்னிக்கு எல்லாரும் கைக்கட்டி நிக்கப்போறோம்,”

வாசுகி வாய்த்திறப்பதற்குள் கையமர்த்திய அப்பாயி மெதுவாக, “ஏமாத்தலேங்கறதுதானே நமக்கு வைகொலையா வந்து நிக்குது…நம்மளாட்டமா பூத்துபூக்காத வயசுல கல்யாணம் முடிச்சுவிட்டுட்டாக. இந்தப்பிள்ளக்கி வயசென்ன? படிக்கறதுக்கு வேலக்கின்னு எங்கெங்க போவுது, வருது..ஒருத்தருமா!” என்றதும் அவள் தான் முதலில் சிரித்தாள்.

வாசல்படியில் நிக்காத, அங்கிட்டு என்ன பார்வை, ரோட்டுல நடந்தா கண்ணு சுழலக்கூடாது..வாய்விட்டு சிரிச்சா குடும்பம் விளங்காது என்று எந்தநேரமும் அதட்டும் அப்பாயியா இது! என்று வாசுகி அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பார்வையை உணர்ந்த கிழவி கனிவுடன் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.

அன்று என்ன ஏதென்று தெரியாது பதின்மூன்று வயது வாசுகி பதறி விழித்துக்கொண்டிருந்தாள்.  முற்றத்தில் அவளின குளியல் சடங்கிற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. வாசுகி பெட்டிக்கோட்டுடன் சற்றுத்தள்ளி முற்றத்து மறைவில் அமர்ந்திருந்தாள். முதன்முதலாக அவள் அப்பாயியை பார்த்துவிடக் கூடாது என்று கிழவி அப்பால் சற்று நேரம் ஒதுங்கியிருந்தது. பின்புறமிருந்து  மெதுவாக நடந்துவந்து அவளருகில் நின்றது. குளிர் போன்ற ஒன்றால் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்த அவளுடைய மெல்லிய புஜங்களை அணைத்துப் பிடித்தபடி, “ பயப்படாத…எல்லாருக்கும் உள்ளதுதான். எனக்கு, உங்கம்மாவுக்கு, சித்திக்கு, அத்தைக்கு…எல்லாவளுக்கும்தாம்மா,” என்று சிரித்தது.  அந்த முதல் தொடுகை காலகாலத்திற்கு இந்த உடல்என்னும் உணர்வு உள்ளவரை அவளால் மறக்கமுடியாது. எவ்வளவு ஆசுவாசமான தருணம்.

அவர்களின் கூட்டுக்குடும்பம் உடைந்த நாளிற்கு அடுத்துவந்த நாட்களில் வாசுகி நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்தாள். 

“சோறுதான் தனியா ஆக்குவாங்க. ருசியா திங்கலாம். விடும்மா. பிரிச்சுவிட விதி இருந்திருக்கு. எல்லாம் ஒன்னா பூவாவே மலந்த மேனிக்கே காலத்துக்கும் இருக்குமா? இப்ப விதி அடிபட்டு போச்சு. இனிமே இன்னொரு பாகுபாடு வராதுன்னு வச்சிக்க. இவனுங்களும், இவனுங்க பொண்டாட்டிகளும் பாத்துக்காம, சிடுசிடுன்னு பேசிக்காம,கூடி குழாவாம இருக்க மாட்டாங்க. இந்த நாலும் இந்தவூட்டுக்கு நாலுதெசைய எணச்சு வரஞ்ச சதுரக்கணக்கு. சேந்தே தான் இருக்கும்…”என்ற அப்பாயியின் சொல் இத்தனை ஆண்டுகளாக உண்மை என்று காலம் அவளுக்கு சொல்கிறது. 

“இங்க பாரு இனிமே ரெண்டுவூட்டு சோறு எனக்கு. உங்கம்மாவும் சின்னம்மாவும் சரியான ஆளுக.  நீக்குடு, நாங்குடுன்னு பெரும்போக்கா எங்கணக்கு சோறு, கொழம்பை விட்டாலும் விட்ருவாளுங்க. எத்தன குடும்பத்தப்பாக்கறேன். அதனால சோறுதண்ணி திங்காம நாங்கொஞ்சம் ‘பிகு’ பண்ணி சண்டை இழுப்பேன். அவனுங்க ரெண்டுபேரும் உன்னியத்தான் என்னிட்ட துறத்துவானுங்க…அனுமார விட்டா ராமனுக்கு கதியேது. சும்மா அழுதுக்கிட்டிருக்கப்படாது…”என்று கிழவி அவளிடம் ரகசியம் பேசும்.

கிழவியின் அகந்தைக்கும், வீட்டில்உள்ளவர்களின் மனஅழுத்தத்திற்கும் பதிலாக வாசுகி புதியவழியை நடைமுறைபடுத்தினாள். சாப்பாட்டை தட்டில்எடுத்துக்கொண்டு போய் நேராகக் கிழவியின் அறையில் கைகளில் தந்துவிடுவது. தன் நீண்ட நரைத்த கூந்தலை மின்விசிறி காற்றில் காயவைத்துக்கொண்டு படுத்திருக்கும் அறையை ‘பொந்து’ என்றுதான் கிழவி சொல்லும்.  

“இந்த வூட்டையே ஆச்சி செஞ்சேன். ஆச்சி மாறிப்போச்சு. பொந்துக்குள்ள தள்ளிப்பிட்டானுங்க…” என்று பொழுது முழுவதும் மேற்குப் பக்கம் நீண்ட படிகளில் அமர்ந்து ஓயாது கச்சேரி பண்ணும். கிழவிக்கு தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கு மட்டும் தான் பொந்து தேவைப்படும்.

வாசுகியின் தங்கையை பெண்பார்க்க வரத்தொடங்கியதும் கிழவி ஒரு திருகாணி வேலை செய்தது. வாசுகியை முதலில் இழுத்துவிடும். எதாவது எக்குத்தப்பாக நடந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்கும். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஒருகட்டத்தில் கிழவி சலித்து, “ நேருக்கு நேரா நெத்தியில அடிக்கறாப்ல பாத்து பேசினா எந்தப்பயலுக்குதான் தோணும்,”என்றது. சோதனைக்கு என்ற அவள் தங்கைக்கு இருபத்தைந்திற்கு மேற்பட்ட வரன்கள் வந்தார்கள். ஒருமாதிரி தங்கைக்கே போர் அடிக்கத்தொடங்கிய போதுதான் அவர்கள் அனைவருக்கும் பிடித்த பொறுப்பு தலைமையாசியர் ஒருவர் அவர்கள் குடும்பத்தில் இடிபட வந்து சேர்ந்தார். 

முன்னால் கிணறும் மல்லிகைப்பூச்செடியும் நின்ற அந்தவீடு நவகிரகங்கள் திசைக்கொன்றாக அமர்ந்த பீடம். ஒன்றுக்கொன்று சேராது, பிரிந்தும் தொலையாது. அந்த கிரகங்களின் ஓயாத சுழற்சிகளும், இணைப்புகளும், மாறுதலும், எதிரெதிராக நிற்பதும், ஒன்றை ஒன்று மறைப்பதுமான சலிப்பில்லாத ஆட்டம்  கொண்டது அந்தவீடு. ஒருமாதிரி இதற்கு அவர்கள் ‘செட்’ ஆனவர்கள். இனிமேல் மற்றவர்களின் குடும்பஅமைப்புகள் அவர்களுக்கு போர் அடிக்கும் என்று தோன்றுகிறது. 

மாப்பிள்ளைகள் வந்து செல்லுகிற போதெல்லாம் கிழவி வாசுகியின் தங்கையை தனியே அழைத்து, “இந்தப்பயலுக்கு ஒனக்கு நிக்க தகாது. சரின்னு சொல்லீறாத…நமக்குன்னு ஒருத்தன் வருவான்…” என்று முதலில் தட்டிக்கழித்துவிடும். தன் வேலை மிச்சம் என தங்கை சிரித்துக்கொள்வாள். அசால்ட்டாக மாப்பிள்ளைகளை தட்டிவிட்டுவிட்டு சித்தப்பாவின் முறைப்பை கண்டு கொள்ளாமல் தன்கச்சேரி நடக்கும் இடத்திற்குசென்று அமர்ந்துகொள்ளும். 

“மாப்பிள்ள பாக்குறானுங்களாம் மாப்பிள்ள. பிள்ளக்கேத்த மாப்பிள்ளயா பாக்காட்டி நாளைக்கு நமக்கு பஞ்சாயத்துபண்ணவே சரியாயிருக்கும். நம்ம குடும்பம் தடுமாறிப்போயிறாது. வெவரங்கெட்டவனுங்க…இவனுங்கள காலேசு கொண்டுவிட்டு படிக்கவச்சு என்னத்தக் கண்டேன். கொஞ்சமாச்சும் பிள்ளையும் பயலும் நேர்நிக்கனுங்கறதுக்கூட பிரியாம,” என்று கச்சேரியை தன் ரசிகைகளுடன் தொடரும்.

அவளின் தங்கையின் கணவர் முதன்முதலில் வீட்டில் தங்கிய அன்று மிரண்டு போனார். அவர் மூன்றுஆட்கள் உள்ள வீட்டில் பிறந்தவர். 

“இதென்னப்பா ஹாஸ்ட்டல் மாதிரி..ரெண்டு கிச்சன், ஒரு ஹால், மூணுநாலு பாத்ரூம், நாலஞ்சு ரூம் உள்ள இவ்வளவு பெரியவீட்டில எங்கயுமே ப்ரைவசி இல்லயே,” என்று தொடங்கியவர் ஆண்டுக்கணக்காக ப்ரைவசியை முடித்த பாடில்லை. 

கொரானா ஊரடங்கில் வந்து தங்கியவர், “சமூக இடைவெளிங்கறத உங்க வீட்டுக்கு, குடும்ப இடைவெளின்னு போடனும். அந்தந்த பசங்க மாமியார் வீட்டுக்குன்னு போனா என்னா மாதிரி இருக்கானுங்க. இங்க என்னடான்னா சந்தையில மாட்டுன மாதிரி…முதல்ல உங்க வீட்டத்தான் தனிமனித இடைவெளி பின்பற்றாத சமூகம்ன்னு கவர்ண்மெண்ட்டுல மாட்டிவிடனும்…”என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.

“கண்ணு வக்காதீங்க. ஏற்கனவே கண்ணுவச்சிதான் பிரிஞ்சு இருக்கோம்…”

“நல்லா பிரிஞ்சிருக்கீங்க போங்க…”

“காஃபி குடிக்கிறீங்களா அன்பு…”என்றபடி வாசுகி வந்தாள்.

“நம்ம பேசினது உங்கக்காவுக்கு கேட்ருக்குமோ… தப்பா நெனச்சுப்பாங்களா…இந்த வீட்ல ஒரு ப்ரைவசியும் இல்ல…”

“என்னா…ப்ரைவசி ப்ரைவசின்னு ரொம்ப பேசறீங்க. குடும்பம்ன்னா அப்படித்தான்..உங்க வூட்ல மனுச இருப்பாங்களா… மூணு பேருக்கு அத்தாம் பெரியவீடு…பேய்பங்களா மாதிரி…”

மாப்பிள்ளை மெதுவாக சமையலறையை  எட்டிப்பார்த்து, “வாசுகி..தப்பா நெனச்சுக்காதீங்க..சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்…”என்றார்.

“எனக்கு எதுவும் கேக்கலயே…”

“அது சரி…”

வாசுகி சமையலறையில் இருந்து சத்தமாக தங்கையிடம்,“அன்பு என்ன சொல்றாரு …”என்றாள்.

“மாமன பேரூ சொல்லி கூப்பிடாதன்னு எத்தன வாட்டி சொல்றது. இப்ப கூப்டறதுதான் சொந்தபந்தம் நாலு பேரு இருக்கையிலயும் வாயில வரும்…”என்று கிழவி பொந்துக்குள்ளிருந்து கத்தியது. சட்டென்று அவர் வாய் பொத்திச் சிரித்தார்.

“ஆமா..அந்தப்பிள்ளையே பேரு சொல்லிதான் கூப்பிடுது…என்னைய மட்டும் சொல்ற,”

“இது என்ன பழக்கம் புருசன பேரு சொல்லி கூப்படறது…”என்று கிழவி அவர்களிடம் சென்றது.

“உங்க வீடு..சூப்பர்…”என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியை அவர் அப்பாயிடம் கொடுத்துவிட்டு கீழே அமர்ந்து கொண்டார்.

அந்தக் குடும்பம் பாறை. அதன் மேலுள்ள சிறுசெடியா இல்லை இந்தக் கிழவியே அதை பாறையாக்கிவிட்டதா என்பது குழப்பமானது. ஆனால் வரவேற்பறையில் அமர்ந்து தன் சிறிய மகன் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று திரும்பும் நாளிற்காகவும், மறதி நோய் அலைக்கழிக்கும் தன் பெரிய மகன் மாடியிலிருந்து வழக்கமாக கீழிறங்கிவரும் நேரத்தில் சிறிய தட்டில் தின்பண்டத்துடனும் காத்திருக்கும் முதியதாய் என்பவள் தன் மகன்களின் உடல் மனநிலையை நினைத்து உள்ளுக்குள் கலங்குபவள்.  தன் தெய்வத்தின்முன் அதிகாலையில் தினமும் கைவிரித்து நிற்பவளாக, அதன் பொருட்டு தன் நீண்ட ஆயுளை அதிகாலையிலேயே வெறுப்பவளாக இருப்பவள். 

“அப்பாயி…இருக்காங்களா?” என்ற குரல் வழக்கம்போல காலையிலையே வாசலில் கேட்டது.

“யாருண்ணே…வாங்க,”

“அப்பாயிய பாக்கனும்…கொஞ்சம் வரச்சொல்லும்மா…”

“யாரு வாசுகி…”

“தெரியலப்பாயி…வடக்கால தெருவுக்காரங்கன்னு நெனக்கிறேன்…”

“ஆருவூட்டுப் பிள்ளைய்யா…”என்றபடி அப்பாயி வெளியே சென்றது.

“மாமுனி கொள்ளுப்பேரன்…”

“சரிய்யா….சரிய்யா…நம்மப்பிள்ளதானா? என்னய்யா…”

“கிருஷ்ணாபுரத்துல பங்காளி வகையறாவுல ஒரு சாவு…தங்கச்சிய பொண்ணு பாக்க தாக்கல் வந்திருக்கு. வரச் சொல்லலாமா. வூட்ல பெரியவங்க உங்கக்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு வரச் சொன்னாங்க…”

கிழவி ஆதிஅந்தம் விசாரிக்கத்தொடங்கியது. 

அம்மா, “ இனிமே ஒவ்வொருத்தரா வருவாங்க. இவங்களையும் இந்த ஊரு நம்புதே…”என்று சிரித்தாள்.

பத்துநிமிடம் கழித்து எட்டிப்பார்த்தாள். அந்த அண்ணன் சட்டையைக் கழட்டிவிட்டு முதுகைகாட்டியபடி குனிந்து கீழ்ப்படியில் அமர்ந்தார். அப்பாயி அவரின் கருத்த இடதுதோளில் கையூன்றிக்கொண்டு வலதுகையால் உடலை தொட்டு தொட்டுப்பார்த்து அவரிடம் விசாரித்தது. உள்ளே வந்த வாசுகி கழுவிய செம்பில் தண்ணீர் நிரப்பி வைத்தாள்.

சற்றுநேரத்தில்,“இந்தா…அம்மாடி…” என்ற குரல் கேட்டதும் தண்ணீர் செம்புடன் சென்று நின்றாள். 

“பெறந்தவங்கிட்ட நீயே குடும்மா…”

அவர் புன்னகையுடன் வாங்கிக்குடித்தார்.

“இத்தன நாளா கண்டுக்காம வுட்டுட்டியேய்யா. இப்பவும் இதுக்குன்னு வரல. என்ன பிள்ள நீ…பொண்டாட்டியும் பச்சப்பிள்ளையும் இருக்கு. இன்னும் பொறுப்பு வரலயே,”என்று கிழவி குரலை உயர்த்திப்பேசியது.

“வேல நெருக்கல்ல நாளு போனதே தெரியலப்பாயி…”

“இப்பிடியே விட்டீன்னா…இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல எல்லாத்தையும் விட்டுட்டு வூட்ல ஒக்காந்திருப்ப…”

“உங்க பாட்டனுக்கு இந்த நோவுக்கண்டிருந்துச்சு…இப்பல்லாம் கைமருந்தும், பத்தியச் சோறும் சரிவராது. தோலுக்குன்னு டாக்ட்டரு உண்டுல்ல…அவனப்போய் பாரு. முதல்லயே போயிருக்கனும். பரவாயில்ல… பயப்படாத போ. எத்தனவாட்டி வரச்சொன்னாலும் போய் மருந்து வாங்கித்தின்னு…”

“சரிப்பாயி…”

“டாக்டரப் பாத்துட்டு பேராண்டீ இந்த அப்பாயிய வந்துப் பாக்கனும்…ஒனக்குன்னு பாத்துக்கிட்டிருப்பேன்…ரூபத்துல உங்க பாட்டனக் கொண்டிருக்கடா,”என்று குரலைத்தாழ்த்திப் பேசிய கிழவி அவரின் முகவாயை தடவி நெற்றியில் கண்ணேறு முறித்தது.

அவர் வெட்கப்பட்டவராகத் தலையாட்டிவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு தனது பல்சரை கிளப்பினார்.

மீண்டும் ஒருகாலையில் வாசல்படிகளில் அமர்ந்து மற்றுமொரு நாளை  சாலையில் செல்லும் இளவட்டங்களுடன் கிழவி தொடங்குகிறாள். பொண்ணுப்பாக்கட்டுமா பேராண்டி, மாப்பிள்ளை பாக்கட்டுமா பேத்தி என்று நையாண்டியுடன் பேசுகிறாள். இருந்தும் தன்மனம் விரும்பும் சொந்தப் பேத்தியிடம் அவள் மறுப்பதைக் கேட்கக்கூடாது என்ற விவேகம் அறிந்தவளாக மௌனித்திருக்கிறாள்.

“வயசாவுதே…ஒரு வரைமுறையா பேசுறீங்களா…படிக்கற பிள்ளைங்கக்கிட்ட பேசறபேச்சா இது…”என்றபடி சித்தப்பா தன் டி.வி.எஸ் ஜைவ்வை கிளப்புகிறார்.

“பெருசா கண்டுட்டான்…வரமுற…வரமுறன்னு என்னத்த சொல்வ…நீ கூடதான் காலேசு படிக்கையிலயே அத்த மவளுக்கு கடுதாசு எழுதுன…அந்தப்பிள்ளயும் எழுதுச்சு, ”என்று எள்ளலாகச் சிரித்துக்கொண்ட கிழவி எதிர்வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்த தன் சகாக்களின் நமுட்டு சிரிப்பிற்கு தலையாட்டிவிட்டு பேசத்தொடங்கியது. அவர் தன்கடுப்பை வண்டியிடம் காண்பித்ததில் அது கிளம்பி உறுமி வேகமெடுத்தது.

“நெதமும் காலங்காத்தால டீ.வி. பொட்டியில சேதி பாத்தா ஓரே எழவு சேதிதான்…ஆனாப்பாரு பங்காரு…எனக்கும் மூத்தவுக இன்னிக்கு நல்ல சாவு செத்திருக்காக…கதப்பாட்டுக்காரவுங்களாம்…”

“ஒனக்கும் மூத்தவுராம்மா…கலி காலத்துல என்னாதான் நடக்காது…சிலதுக்கெல்லாம் ஆண்டவன் ஆயுசு போடறான் பாரு…அவனச் சொல்லனும்…”என்ற அத்தையைக் கிழவி உற்றுப் பார்த்தது.

“அப்பாயி….எத்தன தடவ உன்னக் கூப்பிடறது…சூடு ஆறினா…கொழம்பா வக்கிறீங்கன்னு பேசுவ…”என்று வாசுகி கத்தினாள்.

“பெரிய கொழம்பு வச்சுட்டா…நீ போய் தின்னு. ஏ…பங்காரு பேசறது கேக்கல. இந்தட்டமா வாம்மா…” என்ற கிழவியை அதன் ரசிகைகள் ஆவலுடன் பார்த்தன.

4 Replies to “நீள்ஆயுள் நிறைசெல்வம்”

  1. வீட்டில் உள்ள முதியவர் சுமையல்ல! சென்ற காலத்திற்கும் வரும் காலத்திற்குமான இணைப்பு பாலம்என்பதை அருமையாக. உணர்த்துறது.வாழ்த்துகள் கமலா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.