அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு

இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 260 ஆவது இதழ் ஒரு சிறப்பிதழாக அமையவிருக்கிறது. இந்தச் சிறப்பிதழ், தற்போதைய தலைமுறை எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக அமையும். புதிதாக எழுத வந்து, கவனிக்கப்பட்ட எழுத்தாளர்களையும், அவர்களில் குறிப்பாக இளைஞர்களையும் பற்றிய இந்த இதழ், எங்களால் மட்டுமே வடிவமைக்கப்பட முடியாதது. 

தற்கால வாசகர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி நிஜமாகவே உலகளாவிய தமிழ்ச் சூழலில் இருந்து இலக்கியத்தை அணுகுகிறார்கள் என்பது எங்கள் அனுபவம். இத்தனை பரந்த வாசகச் சமூகத்தைச் சிறு குழுவினர் அறிதல் என்பது அனேகமாக இயலாத செயல். எனவே எங்களுக்குப் பரிச்சயமான பல எழுத்தாளர்களின் கருத்தைக் கேட்டறிவதோடு, சொல்வனத்தின் வாசகர்களையும் கருத்து தெரிவிக்குமாறு கேட்கப் போகிறோம். 

காலத்துக்கேற்ற நடைமுறை வேண்டும்.  அன்னப்பறவை, புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப்பட்ட காலத்திலிருந்து வெகுவாக மாறி, இன்று மீண்டும் காற்றூடே செய்திகளைப் பரிமாறும் காலமாகி விட்டது. பறவைகளுக்குப் பதில் மின்னணுக்கள் தூது போகின்றன. காற்று வெளியில் பரவியதைத் தாண்டி, அண்ட வெளியில் தகவல் உலவிப் பாய்கிறது. 

பறவை அஞ்சல் காலத்திலிருந்த மனித இயல்பு இன்றில்லை. மின்னணுக்களின் வேகத்துக்கு இன்னும் மனித மனம் பழகவில்லை என்றாலும், அந்தத் திக்கில்தான் நாம் மேன்மேலும் துரிதமாகப் பயணிக்கிறோம். ஒருமையை எட்டிப் பிடிக்க மனிதமும், அவர் கட்டியாளும் கருத்துலகும், பொருளுலகும் விரைந்தேகுகின்றன என்றார் ரேமண்ட் கர்ஸ்வைல்[1].

மனித உயிரின் உடல் விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தாண்டிய சிரஞ்சீவி நிலையும், உலகளாவிய தகவல் பெருக்கைச் சுலபமாகக் கையாளும் வல்லமையும் மனிதகுலத்துக்கு எட்டும் காலம் சீக்கிரமே வந்து விடும் என்பது அவர் கணிப்பு. பிற வல்லுநர்கள் அது அவர் அவா என்று சொல்கின்றனர்.

அச்சுப் பிரசுரத்தை நாடாமல் வலைவெளிப் பத்திரிகையானதும், அதைப் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்ததும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடங்கள் பல, அவற்றில் ஒன்று எம் பதிப்புக் குழுவுக்கு எத்தனை குறைவான தகவல்களும், புரிதலும் உள்ளன என்பது. 

எத்தனை நாடுகளில், எத்தனை வகையான சமூகக் குழுக்களிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் புறப்படுகிறார்கள், எவ்வளவு விதம் விதமான இயற்கைச் சூழல்களும், வாழ்வு முறைகளும், அனுபவத் துய்ப்புகளும் நம் தமிழ்ச் சமூகத்திடையே உள்ளன என்பது வியப்பூட்டுவது. 

ஆனால் அத்தனை வண்ணப் பிரிவுகளும் ஒருமையை நோக்கிப் பயணிக்கின்றன என்ற யோசனையும் கூடவே தோன்றாமல் இல்லை. இதற்குக் கர்ஸ்வைலின் கருத்துதான் உதவியதா என்றால், இல்லை, எம் அனுபவமே இதைச் சொல்லித் தருகிறது. நம் அனைவரின் அனுபவமும் இதைத் தினமும் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. 

நம் புரிதல்களையே, கருத்தாளர்களுக்கே உரிய கூர்மைப்படுத்தலைக் கர்ஸ்வைல் செய்து சுருக்கிக் கருக்காகக் கொடுக்கிறார். 

அதே நேரம் நம் அனைவரிடமும் நம்முடைய குறிப்பிட்ட அனுபவங்கள், புரிதல்களை முன்வைக்கும் உந்துதலும், அது கவனிக்கப்பட வேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும், கூடிய மட்டில் அந்தப் புரிதல்களுக்கேற்ப உலகம் மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும் என்றெல்லாமும் அவாக்கள் உள்ளன.  இது மூட்டையிலிருந்து தனி மனித நெல்லிக்காய்கள் உருண்டு பிரியும் நிலையா என்றால் அதுவும்தான். தனி இல்லாத சமூகம் இல்லை. சமூகத்தைப் புறம் தள்ளிய தனி பூரணமாகாது. மொழி இல்லாத தனி மனிதரை நாம் இனிக் காண வழியுண்டா?

ஒருமையும், பிரிபிரியாகப் பிரிதலும் புரசிப் புரசி நாம் வெவ்வேறு கதிகளில் மாறுகிறோம், நம் உலகும் அப்படியே மாறுகிறது. இந்த அறிவிப்பு இதனால் மின்னணுக்களின் உதவியுடன், ஒரு பொறியில் பதிவாகி, பற்பல பொறிகள் வழியே பதிப்புக் குழுவுக்குக் கடத்தப்பட்டு, உலகத் தமிழ்ச் சமூகத்தின் நடுவே இன்னும் சில மணி நேரங்களில் பரப்பப்படவிருக்கிறது. 

இந்தத் துரிதப்படுதலே உங்கள் பங்களிப்பு இந்தச் சிறப்பிதழுக்கு எத்தனை அவசியம் என்று போதிக்கிறது. 

ஆனால் காட்டாற்று வெள்ளத்தைப் பயன்பாட்டுக்குக் கொணர்வது கடினம். தீயணைப்புக் குழாயில் தாக சாந்தி செய்வது கடினம். உள்ளங்கைத் தோலே பிய்ந்துவிடும் நீரின் விசையில். எனவே உங்கள் கருத்துகளை ஓர் அமைதிக்குள் அல்லது சில வகைகளுக்குள் கொணர்ந்து பயன்படுத்த வேண்டி இருக்கும். 

அடுத்த இதழில் எங்கள் /உங்கள் கவனிப்பு என்ன வகையானதாக இருக்கும் என்பது குறித்த அணுகுமுறை விவரணையைக் கொடுக்கவிருக்கிறோம். 

இணையம் என்பது ஒவ்வொரு நாளும் மாறும் இடம் கூட இல்லை,  ஒவ்வொரு பத்து நிமிடங்களிலுமே துரிதப் பெரும் மாறுதல்களுக்கு ஆட்படும் ஓர் இடம். இங்கு தொடர்ச்சி என்பது நேர்கோடாக அமைவதில்லை. 

எங்கெல்லாமோ நடக்கும் உரையாடல்களும், கருத்துக் குவிப்புகளும், அலசல்களும் தொடர்ந்து கொட்டப்படும் ஒரு பிரமாண்ட வெளி இது. இதைப் பல நூறு அல்லது பல ஆயிரம் வாசகர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கவனிப்பதாலும், இங்கு பங்கெடுப்பதாலும், இங்கு பல பிரம்மபுத்திரா நதிகள் அளவு நீரோட்டம் இருக்கும். 

கட்டற்ற வெள்ளத்து மேல் பரப்பில் அடித்துப் போகும் யானை, பானைகளைக் கவனித்துக் கொண்டிருப்பது சுவாரசியமாக இருக்கும், ஐயமில்லை. 

ஆனால் மனிதருக்கு வளமும், பராமரிப்பும் கொடுக்க உதவுவது அந்த நதியின் ஆழத்தில் படியும் வண்டல் மண். அதை மேலோட்டத்தைக் கவனித்தால் புரிந்து கொள்ளவியலாது.  காலப் போக்கில் பொறுத்திருந்து கவனித்தலால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 

பிரம்மபுத்திரா நதியோ ஒரே போக்கில், குறிப்பிட்ட பாதையில் மட்டும் பாயும் மகாநதி இல்லை. அவ்வப்போது அது தன் போக்கை மாற்றிக் கொண்டு பற்பல ஊர்களில், நிலப்பரப்புகளில் தன் கொடையை விட்டுச் செல்லும் நதி. 

ஆகவே உலகத் தமிழ் இலக்கிய பிரம்மபுத்திரா நதிகளின் கொடைகள் பற்றி பற்பல நிலப்பரப்புகளில் வசிக்கும் வாசகர்களும், எழுத்தாளர்களும் தம் அனுபவத்தில் கிட்டும் தீர்மானங்களைக் கொடுப்பது சிறப்பாக இருக்கும். 

முதல் கட்டமாக, 

உங்கள் வாசிப்பில், கவனிப்பில், சிந்தனையில் எந்த எழுத்தாளர்களை நீங்கள் பாராட்டிப் படிக்கிறீர்கள், அவர்களால் உங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று யோசித்து, ஒரு சுருக்க மின்னஞ்சல் அனுப்புங்கள். 

இந்தச் சிறப்பிதழ் புதுப் புனலாக வந்த எழுத்தாளர்கள் பற்றியது என்பதால் சமீபத்தில் எழுத வந்துள்ளவர்களைப் பற்றி இந்த யோசனைகள் இருக்க வேண்டும். சமீபம் என்றால் என்ன காலகட்டம்? 

2000த்துக்கு அப்புறம் எழுத வந்தவர்களைப் பற்றி இருக்கட்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்திருக்கிறோம். 

இவர்கள் எல்லாருமே இளைஞர்களாக மட்டுமே இருப்பார்களா என்றால் இல்லை. சில எழுத்தாளர்களுக்கு வாழ்வில் இரண்டாம் வசந்தம், இரண்டாவது இளமை அமைகிறது. வாழ்வில் நடுப்பகுதியில், ஏன் பிற்பகுதியில் கூட எழுத ஆரம்பிப்பவர்கள் உண்டு. ஆகவே எப்போது எழுத்துலகில் பிரவேசிக்கிறார்கள் என்பதையே கருத வேண்டும் என்று கோருகிறோம். 

மின்னஞ்சலைத் தவிர, வாசகர்களோ, இதர எழுத்தாளர்களோ, தம் அவதானிப்புகள் குறித்துக் கட்டுரைகளும் அனுப்பலாம். 

முன் சொன்ன மாதிரி, அடுத்த இதழில் என்னென்ன அம்சங்களை நீங்கள் கருதினால் எங்களுக்கு உதவும் என்று ஒரு சில யோசனைகளைக் கொடுக்கிறோம். அவற்றை உங்கள் வசதிப்படிப் பயன்படுத்தி உங்கள் படைப்புகளை வடிவமைத்தால் சிறப்பிதழ் நன்கு அமையும். 

உங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

சரி, இந்த 260 ஆம் இதழ் எப்போது வெளி வரும்? 

டிசம்பர் 12 ஆம் தேதி வெளிவர வேண்டிய இதழ். 

இந்த இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகள், எங்களுக்குக் கிட்ட வேண்டிய இறுதித் தேதி நவம்பர் 1, 2021. 

***

குறிப்பு:

[1] இந்தக் கட்டுரை ரேமண்ட் கர்ஸ்வைலின் கருத்துகளை எளிதாக அணுகக் கூடிய முறையில் தருகிறது https://www.wired.com/2008/03/ff-kurzweil/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.