தடக் குறிப்புகள் -2

This entry is part 2 of 4 in the series தடக் குறிப்புகள்

ஆடம் இஸ்கோ

அந்தப் பாதிரியாரின் வீட்டுப் புழக்கடையில் கூடைப்பந்துக் கம்பத்தின் அருகே, மூன்று கார்களும், ஒரு ட்ரக்கும் துருப்பிடித்துக் கொண்டு நின்றன. செத்த மான் ஒன்றின் உடல் கராஜில் ஒரு கொக்கியில் தொங்கிக் கொண்டிருந்தது. என் சைக்கிளை அங்கே கொண்டு வைக்க நான் போகையில்,  “இதைத்தான் குளிர்காலம் பூராவும் நாங்கள் சாப்பிடுவோம்,” என்றார் அவர். ”டெபொராவுக்கு தசைநார் வலி (ஃபைப்ரோமையால்ஜியா) நோய் உண்டு. எங்களுக்கு என் வருமானம் ஒன்றுதான் இருக்கு, ஒரு பாதிரியாக நான் அதிகம் சம்பாதிப்பதில்லை என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். நான் அதிகம் சம்பாதிக்கவில்லைதான், ஆனால் நான் நல்ல வேட்டைக்காரன். தாட் வீட்டிலேதான் பள்ளிப் படிப்பு பெறுகிறான், அதனால் அவனும் வேட்டையாடக் கற்றுக் கொண்டு வருகிறான்.” அவர் வாயிலை நோக்கிச்  சுட்டினார்; அவருடைய மகன் வெளியே நின்றிருந்தான். நாங்கள் மூவரும் வீட்டுக்குள் போனோம், டெபொராவோடு வீட்டின் வரவேற்பறையில் ஓர் அமெரிக்கக் கால்பந்தாட்டத்தைப் பார்க்கத்தான் போனோம். அவளும் நானும் ஒரு சோஃபாவைப் பகிர்ந்தோம், தாட் தரையில் அமர்ந்தான். யார் யார் விளையாடினார்கள் என்று எனக்கு நினைவில்லை. தொலைக் காட்சிப் பெட்டியின் ஒலி குறைக்கப்பட்டு மெல்ல ஒலித்தது, சோஃபாவுக்கு அடுத்து இருந்த வானிலை அறிவிப்புக்கான ஒரு ரேடியோவிலிருந்து அறிவிப்பாளரின் குரல் கேட்டது.

யாரோ ஒரு விளையாட்டுக்காரர் ஃபீல்ட் கோல் ஒன்றை அடித்தபோது, ஆன்டி டட்டில் என்னிடம் தான் முன்பு ஒரு போதை மருந்து அடிமையாக இருந்ததாகச்  சொன்னார். “அது மிகவும் போராட்டமான காலம்,” என்றார். “நான் இசைப்பதிலும், ஏகமாகக் குடிப்பதிலும் மிக முனைப்பாக இருந்தேன். நிறைய ‘ஸ்பீட்’ போதை மருந்தையும் பயன்படுத்தினேன், அதனால் ஒரு சாதாரண ஆள் குடிக்கக் கூடியதை விட அதிகமாகவே குடித்தேன் – நான்கு முழு பியர்களையும் ஐந்தாவதில் பாதிக்கு மேலும் குடிப்பேன். அனேக இரவுகளில் காலை நான்கு அல்லது ஐந்து மணி வரை நாங்கள் வெளியேதான் அலைந்து கொண்டிருப்போம், பிறகு காலை ஆறுமணிக்கு எழுந்ததும் மறுபடி குடிக்க ஆரம்பிப்பேன்.” தான் நோய்ப்பட்டதாக அவர் தெரிவித்தார். குடிப்பதால் இல்லையாம், ஆனால் மிகவும் நொந்து போயிருந்ததாக, எதையும் விரும்பாமல் வெறுத்துப் போயிருந்தவராக ஆகி இருந்தாராம். “அப்போதுதான் எனக்கு எல்லாம் மாறத் தொடங்கியது.” தான் கடவுளை அப்போது கண்டடைந்ததாகவும், கடவுள்தான் தன்னை நலம் பெறச் செய்தார் என்றும் சொன்னார். மண்ணோடு வீழ்ந்து கிடந்ததாகவும், கடவுள் தனக்கு மறுபடி உயிரூட்டினார் என்றும் தெரிவித்தார்.

2011 இல், பரபரப்பான போக்கு வரத்து நிறைந்த சாலையின் நடுவே நீ விழுந்து கிடந்ததை நான் நினைத்துக் கொண்டேன். நசுங்கிப் போன நுரையீரல், உடைந்த தலை ஓடு, மூளை செயலற்று இறந்த உடல். ஓர் ஆம்புலன்ஸ் உன்னைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்குக் கொண்டு போயிற்று. சில நாட்கள் கழித்து உன் பெற்றோர் உனக்குச் சிகிச்சை கொடுப்பதைப் போதும் என்று நிறுத்தினார்கள், நான் கடவுள் மீது நம்பிக்கையைக் கைவிட்டேன்.

அந்தப் பாதிரி தன் முதல் கதையை முடிக்கும்போது, நான் கேட்பதை நிறுத்தி இருந்தேன். சோக உணர்வு என்னுள்ளே ஊறி எழுந்தது. எட்டு சாரிகளில் போக்கு வரத்து ஓடிய சாலையில் நீ மல்லாக்க விழுந்து கிடந்திருந்தாய், பின்பு நீ போய்ச் சேர்ந்து விட்டாய், என்னால் இதற்கு மேல் எதையும் கேட்க முடியாமல் ஆகி இருந்தேன். குளியல் தொட்டியில் அமர்ந்து அழ வேண்டும்போல இருந்தது, என்னுடைய குளியல் தொட்டியில், ஆனால் எனக்கென்று ஒரு குளியல் தொட்டி எங்குமே இப்போது இல்லை, ஒரு இருசக்கர சைக்கிள்தான் இருந்தது. அதனால் நான் அங்கே அமர்ந்து இருந்து, ஒரு நல்ல விருந்தாளியாக நடந்து கொள்ள முயன்றேன், அந்த இரு அணிகளில் ஒன்று இன்னொரு கோல் அடித்தது. தாட் வெற்றி முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்தான். அந்த இரவின் மீதி நேரத்தில் நான் தலையசைத்தபடி அமர்ந்திருந்தேன், ஆன்டியின் கதைகளைக் கேட்பது போல பாவனை செய்தேன், மரியாதை தெரிந்த ஒரு குழந்தை தன் அத்தையைப் பார்க்கப் போயிருக்கையில் நடப்பதைப் போல அடக்கமாக நடந்து கொண்டேன். டெபொரா மட்டும் ஏதோ என்னிடம் சரியாக இல்லை என்று உணர்ந்து கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார், அவர் வீடுதான் எனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது என்று அவர் நினைப்பு. “இங்கே எல்லாம் இன்னும் நல்ல நிலைமையில் இருந்திருக்கலாம் என்றுதான் நானும் விரும்புகிறேன்,” என்றார். என்னைச் சோகம் ஆட்டிப் படைத்தாலும், அந்த அலங்கோலம் மிகப் பொருத்தமாகவே எனக்குத் தெரிந்தது. பழைய செய்தித்தாள்களும், எங்கேயோ மூலைகளில் எல்லாம் குப்பை கூளங்களும் இறைந்து கிடக்க, டெக்ஸஸில் இருந்த என் அப்பாவின் வீட்டை அது நினைவூட்டியது.  எல்லாம் கச்சிதமாக இருக்கின்றன, இங்கே எல்லாம் கச்சிதம் என்று அவரிடம் சொன்னேன். டெபொரா கீழ் வரிசைப் பற்கள் மட்டும் தெரியப் புன்னகைத்தார். நான் இரவுக்கு விடை பெற்றபோது, எச்சரித்தார், “ஷவர் பகுதியில் தண்ணீர் மிக மெதுவாகத்தான் வடியும்!” நிறைய நாட்களுக்கு அப்புறம் முதல் தடவையாக அன்றிரவு நான் நன்கு உறங்கினேன். ஒன்றுக்கிருக்கவென்று நடு இரவில் நான் ஒரு தடவை எழுந்தபோது, ஆன்டி இன்னும் விழித்துக் கொண்டிருந்தார், அவருடைய வரவேற்பறையில், கிழிந்த தோல் கொண்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி விவிலிய நூலைப் படித்துக் கொண்டிருந்தார். விசாலமான நடு அறையிலிருந்த நான் அவரைப் பார்ப்பதை அவர் அறிந்து கொண்டு அவரும் என்னைப் பார்த்தபடி இருந்தார். சில மணிகள் கழித்து, நாங்கள் இருவரும், பனிப்பெட்டியில் உறைய வைக்கப்பட்டிருந்த வாஃபிள் ரொட்டிகளை எடுத்து சூடாக வாட்டி காலை உணவாகச் சாப்பிட்டோம். அவர்களிடம் கடவுளைப் பற்றிக் கேட்க எனக்கு ஏதும் கேள்விகள் உண்டா என்று டெபொரா என்னிடம் கேட்டார். உன்னை எங்களிடம் இருந்து ஏன் அவர் எடுத்துக் கொண்டு போனார் என்று நான் கேட்கவில்லை.

நடுப்பள்ளி வருடத்தில் ஓர் இலையுதிர்கால நாளில், உன் வீடு தீப்பிடித்துக் கொண்டபோது, காப்பீட்டு நிறுவனம் உன் மொத்தக் குடும்பத்தையும் எம்பஸி விடுதியில் ஒரு அறையில் தங்கச் செய்தார்கள். அது உன் பிறந்த நாளாக இருந்தது. உன் குடும்பத்தார் அறை சர்வீஸ் மூலம் சாக்லெட் கேக் ஒன்றைத் தருவிக்க நம்மை அனுமதித்தார்கள்,  நாம் குதி போட்டுக்கொண்டு அறை பூராவும் ஓடித் திரிந்தோம், கடைசியில் உன் அப்பா நம்மை உறங்கப் போகச் சொன்னார். சில மாதங்களுக்குப் பிறகு, நகரிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்த ஒரு சிறுவர் சாரணர் முகாமில் இருந்த பச்சை நிறக் கித்தான்களால் ஆன நான்கு சுவர்கள் கொண்ட ஒரு கூடாரத்தில், ரைஃபிள் துப்பாக்கிகளைச் சுடக் கற்றுக் கொண்டோம், சீட்டுக் கட்டுகளைக் கொண்டு விளையாடவும் கற்றுக் கொண்டோம். அப்போது ஒரு நாள் பெரிய இடிமழை வந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது, உளை சேற்றில் தோப்புகளிடையே நடந்து போகாமல் இருப்பதற்காக நாம் முறை வைத்துக் கொண்டு அந்தக் கூடாரத்தின் வாயில் கித்தானைச் சற்றுத் திறந்து ஒன்றுக்கிருந்தோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. பிறகு நாம் வளர்ந்து விட்டோம், முன்னத்தனை நெருங்கிப் பழகவில்லை. நீ சிறுவர் சாரணர் இயக்கத்திலிருந்து விலகி விட்டாய்; நான் வேறொரு உயர்நிலைப் பள்ளிக்குப் போனேன். உயரமானாய், பிரிந்தாய், பிறகு நீ வீட்டை விட்டு ஓடிப் போனாய். ஒரு வாரம் பூராவும் உன்னைத் தேடிய உன் அம்மா, என் அம்மாவையும் கூப்பிட்டுப் பேசினாள் என்று எனக்கு நினைவிருக்கிறது. நீ திரும்பி வந்த போது, உன்னை உன் பெற்றோர்கள், ‘பிரச்சனையான இளம் பிராயத்தினருக்காக’ காட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்ட பாசறைகளில் ஒன்றுக்கு அனுப்பினார்கள். நீ மறுபடியும் வீட்டை விட்டு ஓடிப் போனபோது, நெவாடா மாநிலத்தில் ஹெண்டர்ஸன் என்ற ஊரில் இருந்தாய். உனக்குக் கிட்டிய முதல் வாய்ப்பில் நீ ஓடிப் போய் விட்டாய் என்று நான் புரிந்து கொண்டேன்.

மீஸ்.மேரி மர்ரியை எகானோ லாட்ஜில் சந்திப்பதற்குச் சில வாரங்கள் முன்னதாக, கிழக்கு மிஸ்ஸிஸிபி மாநிலத்தில் நான் சைகிளை ஓட்டிக் கொண்டு பயணம் செய்திருந்த போது, கழுத்தில் மரு ஒன்றும், மஞ்சள் நிறக் கூந்தலும் கொண்ட ஒரு பெண் என்னைக் கையாட்டி நிறுத்தினார். அவளுடைய பெட்ரோல் நிலையத்தின் ரெஸ்டாரெண்டின் வாயிலில் நான் நின்றேன். ரானால்ட் பெர்ட் என்ற ஒருவர் அன்று காலை நான் சைகிளில் பயணம் போவதைப் பார்த்திருந்தார் என்றும், என் அடுத்த உணவுக்கான செலவை அவர் கொடுக்கப் போவதாகவும் தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்திருந்தார் என்று அவள் தெரிவித்தாள். “உங்களுக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்,” என்றாள். நான் மதிய உணவு ஸ்பெஷல் என்பதைக் கேட்டேன்:

பன்றி மாமிசத் துண்டுகள், க்ரிட்கள், வேக வைத்த உருளைக் கிழங்கு,சோளரொட்டி,

கோல்ஸ்லா[1],மேலும் சாக்லெட் கேக்கின் ஒரு துண்டு (ஆகியன அதில் இருந்தன). என் தட்டைக் காலி செய்து வழித்து விழுங்குகையில், அந்தப் பெண்மணி, மீஸ். கே(ய்) சொன்னார், “நீங்க ஜாக்கிரதையா இருங்க, என்ன புரியுதா. இங்கிருந்து கொஞ்ச தூரத்தில ஒரு சைக்கிளோட்டியை ஒரு ட்ரக் இடிச்சுடுத்து- அவரை அது கொன்னுடுத்து.”

பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த இன்னொரு பெண் சொன்னார், “ஆமாம், எனக்கு அது நினைவிருக்கு.”

“அவன் ஒரு இனிய பையன். நான் அவனைப் பார்த்ததே இல்லை. அதைப் பத்திப் படிச்சேன், என்னவொரு சோகமான முடிவு. அவன் புற்று நோய் நிவாரணத்துக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தான், அப்படித்தான் எனக்கு நினைவு, அது சரியா?”

 “ஆமாம், நானும் அது அப்படித்தான் என்று நினைக்கிறேன்,” இரண்டாவது பெண் சொன்னார். “நீங்க ஜாக்கிரதையா இருங்க, நான் சொல்றது கேக்கறதா?”

நான் இரு பெண்களுக்கும், ‘சரிங்கம்மா’ என்று சொன்னேன்.

 “நான் நெசம்மா சொல்றேன்,” மீஸ்.கே(ய்) சொன்னார். “நீங்க பாதுகாப்பா இருங்க, இந்த சாலைகள்லே போற மரக்கட்டை ஏற்றின ட்ரக்குகள் யாருக்காகவும் மெதுவா ஓட்ட மாட்டாங்க, நாங்க இந்த சாலைகள்லே தினசரி போறவங்க, எங்களுக்கே மேடா இருக்கற இடங்களைத் தாண்டி அடுத்த பக்கம் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியறதில்லே- இந்த சாலைகள் எல்லாம் ரொம்ப ஆபத்தானதுங்க. தயவு செய்து, ரொம்ப ஜாக்கிரதையா இருப்பா-”

நான் ஜாக்கிரதையாக இருப்பதைத் தவிர வேறெதையும் செய்வதில்லை, இந்த சாலைகளில் என்று அவர்களுக்கு உறுதி கொடுத்தேன்.

முந்தைய இரவில், இந்த சம்பாஷணை போலவே அச்சு அசலாக இருந்த இன்னொரு சம்பாஷணை எனக்குக் கிட்டியிருந்தது. 1960களில் கடைசி வருடங்களில் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு பாண்டியாக் கார், மிஸ்ஸிஸ்ஸிபி நெடுஞ்சாலை எண் 42 இல், ஒரு மேட்டுப் பகுதியின் உச்சியில், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நான் இன்னும் அந்த மேட்டுப் பகுதியின் அடிவாரத்தில்தான் இருந்தேன், அப்போது அந்தக் கார் சாலை ஓரத்தில் போய் ஒதுங்கி நின்றது. அந்த உச்சிப் புள்ளியை எட்ட எனக்கு நிறைய நேரம் பிடித்தது, அங்கே போய்ச் சேர்ந்த போது, அந்தக் காரை ஓட்டுபவர் பக்கக் கதவில் கண்ணாடி கீழிறங்கியது. பயணி இருக்கையில் ஒரு மரக் கைத்தடி இருந்தது, அங்கே பின்புற இருக்கையில், மடிக்கப்பட்டிருந்த நிலையில், இயல்பாக நடக்க முடியாதவர்களுக்கு நடக்க உதவும் கைப்பிடி சாதனம் ஒன்று இருந்தது. அந்த ஓட்டுநர் என்னிடம், “எங்கப்பா போயிட்டிருக்கே?” என்று கேட்ட போது நான் எரிச்சலுற்ற மனநிலையில் இருந்தேன்.

நான் பதில் சொன்னேன்.

“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”

நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.

“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”

இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.

 “நீ கவனமாக இருக்கணும்னு விரும்பறேன், அவ்வளவுதான், இந்த ட்ரக்குகளால இந்தச் சாலை பாதுகாப்பான இடமா இல்லாம போயிடுத்து-”

நான் பொய் சொன்னேன், நான் நல்லபடியாக சமாளிக்கிறேன் என்று சொன்னேன்.

“நீ எங்கப்பா இன்னிக்கு ராத்திரி தூங்கப் போறே?”

எனக்கு அது இன்னும் தெரியாது என்று சொன்னேன், ஒருகால் ரிச் என்ற ஊரைத் தாண்டி இருக்கிற தோப்பு ஒன்றில்- அதுதான் அந்த ஊரின் பெயரா? இங்கே அத்தனை உஷ்ணமா இருக்கிறதாலெ என்னால் சரியாகக் கூட –

“ரிச்டன் தானே?”

ஆமாம், ரிச்டன்.

“நா ஒண்ணு சொல்லட்டுமா- உனக்கு இது வேணுமுன்னு நீ முடிவு செஞ்சா, நீ அப்படித்தான் முடிவெடுக்கணும்னு நா சொல்லல்லை, ஆனா அப்படி நீ முடிவெடுத்தாக்க, நீ என்னோட இடத்துக்கு வந்து உனக்கு எங்கே பிடிக்கறதோ அங்கே கூடாரம் போட்டுக்கலாம், ஒரு பெரிய கோபுரம் இருக்கு, இங்கே இருக்கிறதை மாதிரி, ஆனா இதை விடப் பெரிசு-”

அவர் பைன் மரங்கள் நடுவே இருந்த ஒரு செல்ஃபோன் கூண்டைக் காட்டினார்.

“- அந்த கோபுரத்தைத் தாண்டின உடனே, ஒரு சர்ச் இருக்கும், அதத் தாண்டினா ஒரு சாலை வரும், அங்கே இடப்பக்கம் திரும்பு, ரிச்டன்லேருந்து நாலு மைல்தான் இருக்கும், நாங்க அந்தத் திருப்பத்திலே இடது பக்கம் நாலாவது வீடு. புரியறதா?”

நான் அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை; அதற்கு மேல் கேட்க எனக்குச் சக்தி இல்லை, நான் களைத்துப் போயிருந்தேன். அவர் கிட்டே அந்த இடத்துக்கு முகவரி கொடுக்க முடியுமா என்று கேட்டேன், அப்போது அதை கூகிள் மேப்ஸில் பதித்துக் கொள்ளலாமெ என்று கேட்கிறேன் என்றேன்.

“அது மேப்ல எல்லாம் தென்படறதில்லை. ஆனா, நா சொல்றது கார் மேப்புங்கள்லெ. ஒருவேளை உன்னோட ஃபோன்ல அதைல்லாம் விட நல்ல மேப் இருக்குமோ என்னவோ, அப்ப சரி, ‘யூனியன் சாலை’ன்னு போடு, அது வருதா பாரு.”

அந்த இடத்தில் எனக்கு ஃபோனில் தொடர்பு கிட்டவில்லை.

“என்ன, அதுல வருதா?”

அது வரவில்லை என்ற போதும், வருகிறது என்று சொன்னேன்.

“அப்ப சரி, அந்த சாலைக்கு யூனியன் சாலைன்னு பேரு. அது வருதான்னு பாத்துகிட்டே இரு, வீட்டு முன்னாடி என்னோட இந்தக் கார் நிக்கும், அதைக் கண்டு பிடிக்க உனக்கு ஒண்ணும் கஷ்டமே இருக்காது.”

அவர் அந்தச் சாலையில்  ஓட்டிக் கொண்டு தன் வழியே போனார். அவர் முன்பு நிறுத்தி இருந்த இடத்தருகே இருந்த ஒரு தன்னார்வலர் தீயணைப்பு நிலையத்தின் நிழலில் ஓய்வெடுத்தேன், பதினைந்து நிமிடத்தில் எனக்கு முழு மூச்சு திரும்பியது. ஒருகால் அது ஒரு மணி நேரமாக இருந்திருக்கலாம். எனக்கு நிறைய நினைவிருப்பது அந்த வெப்பம்தான். நான் மறுபடி கிளம்பும்போது, ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, ஒரு சிறிய சிவப்பு நிற ஹ்யுண்டே கார் என்னைக் கடந்து போனபோது, அதை நிறைத்து இருந்த வயதான ஆண்கள் சிலர் என்னை நோக்கி உரக்கக் கூவினார்கள், “—த்தா, ரோடை விட்டுப் போடா!” பிறகு, மரக்கட்டைகள் சுமந்த இரு லாரிகள் அடித்துப் புரண்டு சாலையை அடைத்துக் கொண்டு வேகமாக வந்தன. ஒன்றன் பின் ஒன்றாக, பைன் மரங்கள் பின் புறத்தில் கிளைகள் தொங்கி கிட்டத் தட்ட சாலையைப் பெருக்கி விடுவது போல நிரம்பியிருந்த ட்ரக்குகள் அவை. அவை கடக்கையில் வீசிய பெருங்காற்றில் நான் சாலையிலிருந்து தள்ளப்பட்டு பக்கத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் விழ இருந்தேன். என் இடது கையைப் பாதி நீட்டி இருந்தால் கூட, அந்தக் கை உடம்பிலிருந்து அப்படியே பிய்த்து வீசப்பட்டிருக்கும். நான் மேலும் இரண்டு, மூன்று, நான்கு மைல்கள் சைகிளை ஓட்டிக் கொண்டு போனேன், அந்த செல்ஃபோன் கோபுரம் நன்கு தெரியும் வரை சென்றேன். அங்கே இடது புறம் யூனியன் சாலையில் திரும்பினேன். டேவிட் ஹாமொண்ட்ரீ புல்வெட்டும் ட்ராக்டர் ஒன்றின் மீது அமர்ந்து அதைக் கொண்டு முன்புறத்துப் புல்வெளியில் இருக்கும் புற்களை திருத்திக் கொண்டிருந்தார், வீட்டுக்குள் அணியும் உடுப்புகளைத்தான் அணிந்திருந்தார். நூறு டிகிரி வெப்பத்தில், நீலம்-கருப்புக் கோடுகள் போட்ட ஃப்ளானல் இரவு ஆடை[2] அது. அவர் கையாட்டி அழைத்து, மண்ணும் கற்பரல்களுமாகப் போடப்பட்டிருந்த நீண்ட அணுகுபாதையில் சுற்றி வரச் சொல்லி சைகை செய்தார். அந்த எஞ்சினின் சத்தத்துக்கு மேல் உரக்கப் பேசினார், “நான் இந்த புல்வெட்டும் எந்திரத்தை கொட்டாரத்தில் நிறுத்தப் போகிறேன். நீ இங்கே கொஞ்ச நேரம் காத்திருக்கியா?” அங்கே இருந்த ஒரு மர ஊஞ்சலில் அமர்ந்தேன், அவர் தானே அதைச் செய்து அங்கே பொருத்தி இருந்ததாகச் சொல்லி இருந்தார், அவர் என்னை வீட்டுக்குள் அழைக்கக் காத்து இருந்தேன்.

டேவிடின் மனைவி, ட்ட்டில்லி,ஒரு ஸ்டைரோஃபோம் கோப்பை நிரம்பிய குளிர்ந்த தேநீரோடு வெளியே வந்தார். இரவு உணவுக்கு நாங்கள் வீட்டில் செய்த ஸ்பகெட்டி குழம்போடு, அந்த வாரத்தில் முன்னதாக அவர் செய்திருந்த பூண்டு ரொட்டியைச் சாப்பிட்டோம். என் தட்டில் அவர் அதை இட்ட போது அந்த ரொட்டி இன்னும் பாதி உறைநிலையிலேயே இருந்தது. டேவிட் இப்போது சிவப்பு கம்பளி பைஜாமா, நீல டி சட்டைக்கு மாறி இருந்தார். நாங்கள் சாப்பிட்ட போது, அந்த தம்பதியர் மாறி மாறி என்னிடம் சொன்னார்கள், நான் இன்னும் ஓரிரு நாட்கள் அங்கே தங்க வேண்டும்- ”ஒரு வாரம் கூடத் தங்கலாம்” என்றார் ட்ட்டில்லி, தங்களுடைய விருந்தாளி அறையை எனக்குக் கொடுப்பதாகச் சொன்னார். “ஒரு வாரம் இருந்தீர்களானால், டேவிட் உங்களை ஜ்யார்ஜியா வரையிலும் காரில் அழைத்துப் போய் விடுவார்.” டேவிட் என்னை தென் காரோலினா வரை கூட அழைத்துப் போக முடியும் என்று தெரிவித்தார். அவர் முதல் ஈடு பீச் பழங்களை அங்கே கொண்டு கொடுக்கவிருந்தார், போகும்போது பேசிக் கொண்டே போவது உதவும், அது அவருக்குத் தொல்லை இல்லை, மேலும் கொஞ்ச தூரம் அவர் பாதையை விட்டு விலகிப் போக வேண்டும் என்றாலும் பரவாயில்லை, ஓரிரு நூறு மைல்கள் வரை கூடுதலாக, அவரால் ஓட்டிக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்று டேவிட் தெரிவித்தார். அடுத்த நாள், காலை உணவுக்குப் பிறகு நான் அவர்களிடம் விடை பெற்ற போது அவர்களுக்கு அது வியப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். நான் என் தலையில் ஒலித்த தனிமையை நிறைக்கும் குரலைப் பற்றி அவர்களிடம் சொல்லவில்லை.

பல மாதங்களாக அது என்னைத் துரத்திக் கொண்டிருந்தது, தபால் அலுவலகங்களிலிருந்து, பணம் மட்டுமே ஏற்கும் மோடெல்கள் வரை (நான் எங்கெல்லாம் தங்கினேனோ அங்கு), மைல் மைலாக ஒரு சரக்கு ரயிலின் ஊதல் காற்றில் கேட்பது போல அது என்னுள் ஒலித்தது. சில நேரம் என்னால் அதைக் கேட்க முடியாமல் இருக்கும்; மற்ற நேரம் அதைக் கவனிக்காமல் இருப்பது இயலாததாக இருக்கும். நான் அங்கு இன்னும் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் கூடத் தங்கி இருக்க வேண்டும், அந்த பீச் பழங்களையும், அவரது எலெக்ட்ரிக் சக்கர நாற்காலியையும் தூக்கி அவரது பிக் அப் ட்ரக்கின் பின் புறம் ஏற்றுவதற்கு டேவிடுக்கு உதவி இருக்க வேண்டும், அவரோடு மிஸ்ஸிஸிப்பி, அலபாமா, ஜ்யார்ஜியா, தென் காரொலினா மாநிலங்கள் வழியே ட்ரக்கை ஓட்டிச் சென்று, அவரோடே அவரது வீட்டுக்குத் திரும்பி வந்திருக்க வேண்டும். சிறுவனாக இருந்த போது அவர் மிஸ்ஸிஸிபி ஆற்றுப் பக்கம் வாழ்ந்ததையும், பண்ணையிலிருந்து பஞ்சு பொறுக்கியதையும் பற்றிக் கேட்டிருக்க வேண்டும். திருமதி ட்டில்லியிடம் தெற்கு மாநிலங்களில் அடிமை முறையின் பாதிப்புகள் என்ன என்று கேட்டிருக்க வேண்டும். அவள் தன் முப்பாட்டனாரின் குடும்பத்தினர் அடிமைகளை வைத்திருந்தனர் என்று சொல்லி இருந்தார், நான் அப்போது அதைப் பற்றி யோசித்தேன், ஆனால் அவரிடம் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்று கேட்கும் துணிவு எனக்கு இருக்கவில்லை. உங்கள் வாழ்வில் எதைப் பற்றி நீங்கள் பெருமையோடு நினைக்கிறீர்கள் என்றும், எதைப் பற்றி நீங்கள் வெட்கப்படுகிறீர்கள் என்றும் அவரிடம் கேட்டிருக்க வேண்டும், ஆனால் கேட்கவில்லை. கேட்டிருக்கத்தான் வேண்டும், ஆனால் கேட்கவில்லை. அந்தக் கார் உன்னை இடித்த நாளுக்கு முந்தைய நாட்களில், நான் இன்று என் தலைக்குள் கேட்கிறேனே ஒரு தனிமையின் பிரலாபக் குரல், அதை நீயும் உன் தலைக்குள் கேட்டிருந்தாயோ? அல்லது அது எனக்கு மட்டுமானதா? என்று யோசித்தபடி சைக்கிளை அந்த உஷ்ணத்தின் நடுவே ஓட்டிச் செல்வதுதான் இப்போது இயற்கையானதாகத் தோன்றியது.

உனக்குத் தெரியுமா, அதை விபத்து இல்லை என்றுதான் நான் எப்போதுமே நினைத்து வந்திருக்கிறேன். வேகமாக வரும் அந்தக் கார் உன் மீது மோத வேண்டும் என்றுதான் நீ நினைத்தாய் என்று நான் நினைத்திருக்கிறேன். உன் பெற்றோர்தான் மருத்துவ மனையில் உன்னை உயிரோடு வைத்திருக்கும் கருவிகளை நிறுத்தச் சொன்னார்கள், அதற்குக் காரணம் அந்த விபத்து உன் மூளையைக் கொன்றிருந்தது, ஆனால் என் நினைப்பிலாவது, நீதான் உன் உயிரை மாய்த்துக் கொண்டாய். நெவாடா மாநிலத்தின் ஹெண்டர்ஸன் நகரில், ஜூலை 9, 2011 அன்று, சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு, புனித ரோஸ் அகன்ற சாலைக்கு வடக்கே உள்ள தென் கிழக்கு நிழற்சாலையில் எதிரே வந்த போக்குவரத்தின் நடுவே நீதான் இறங்கி நின்றாய்.

சிக்கசாவே ஆற்றைக் கடந்த பின், மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் எல்லைக் கோட்டருகே என் ஒரு டயரில் ஓட்டை விழுந்தது. நான்கு நாட்களில் இது மூன்றாவது தடவை. முணுமுணுப்பாக வசவுகளைப் பொழிந்த வண்ணம், மக்னோலியா மரமொன்றின் நிழலில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே ஒரு வெள்ளை டோயோட்டா கொரோல்லா கார் சாலையில் ஓரமாக ஒதுங்கி வந்தது, பழுப்புச் சர்க்கரை நிறத்தில் தலை முடி இருந்த ஒரு பெண்மணி இறங்கினார். நான் என்ன செய்கிறேன் என்று கேட்டார், நான் விளக்கினேன், டயரைச் சரி செய்ய உதவுகிறேன் என்று முன்வந்தார்.  ஓட்டையால் காற்றுப் போன சைக்கிள் டயர்களை நூற்றுக்கணக்கான தடவைகள் நான் பழுது பார்த்திருக்கிறேன் என்றாலும், இந்த முறை அவருடைய உதவியை நான் ஏற்றுக் கொண்டேன். நான் அத்தனை களைத்திருந்தேன். தென்கிழக்கு அமெரிக்கா சமதளமான நிலப்பரப்பு என்று யாராவது சொல்வாரே ஆயின் அவர் பொய்தான் சொல்கிறார்; அத்தனை அதிக உஷ்ணத்தில், அந்தக் குன்றுகள் பெரிய மலைகளைப் போலத் தெரிந்தன. அவருடைய காரில் பின் இருக்கையில் காற்றழுத்தும் கருவி ஒன்றை அவர் வைத்திருந்ததால், பழுது பார்க்கும் வேலை சீக்கிரமே முடிந்து விட்டது. நாங்கள் டயரைச் சரி செய்ததும், அந்தப் பெண்மணி காரை ஓட்டிப் போய் விட்டார், நான் நகரத்திலிருந்த ஒரு பல்பொருள் சிற்றங்காடிக்கு வந்து சேர்ந்தேன். முன்புறத்தில் மரச் சட்டங்களால் ஆன பலகைகளில் பலர் அமர்ந்திருந்தார்கள்.

நான் உள்ளே போய் ஒரு கேடரோட் பானமும், கொஞ்சம் உலர்ந்த மாட்டு மாமிசக் கீறும் வாங்க முனைந்தேன். குட்டைச் சட்டை அணிந்த ஒருவர் பியர் வாங்கினார், வரிசையில் என் பின்னே நின்ற ஒரு பெண், ஒல்லியானவர், முன்னங்கைகளில் பச்சை குத்தியிருந்தார், என்னிடம் சில டாலர்களையும், சில்லறையையும் கொடுத்தார், “குளிர்ச்சியா பானம் எதாச்சும் வாங்கிக்க பையா,” என்றார். “ என்னோட மாற்று அப்பா ராணுவத்தில் இருந்தார் – இப்படி ஊரூரா பயணம் போறது எத்தனை கஷ்டம்னு எனக்குத் தெரியும்.” பயணம் போகையில் இப்படி அன்பு காட்டும் சிறு சைகைகளை எண்ணற்ற அளவில் பெற்றிருக்கிறேன், ஆனால் யாரும் இப்படி பணத்தை நேரே என்னிடம் கொடுக்கவில்லை. வாயடைத்துப் போய், கையில் ஒரு கேடரோட் புட்டியோடு அவரைப் பின்பற்றிப் புறவெளிக்குப் போனேன். அவருடைய மஸ்டாங் காரின் பின்னே நின்று, சிறிது நேரம் உரையாடினோம். அது குறிப்பிட்ட எதையும் பேசாத உரையாடல். குட்டைக் கால் சராய் அணிந்த ஒரு பெண், எங்களை அங்கிருந்து அகன்று போகும்படி சொன்னார், நாங்கள் அந்த பெட்ரோல் பம்ப் முன்னே இடத்தை வெகுநேரமாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம், நகர்ந்து போக வேண்டும் என்றார். போகுமுன், உரையாடிய பெண்ணின் பெயரை எழுதிக் கொண்டேன்: ஆக்னெஸ் டெப்ரா வில்லியம்ஸ். அந்தப் பெயரை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.

அங்கேயே மரச்சட்டப் பலகைகளில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பெட்ரோல் நிலையத்தைக் கவனிப்பது பறவைகளையோ, நெருங்கி வரும் புயலையோ பார்த்துக் கொண்டு இருப்பதை ஒத்தது. மிகப் பருமனான ஒரு பெண் என்னிடம் அரை டாலர் இருக்குமா என்று கேட்டார்; புடைத்திருந்த ரத்தக் குழாய்கள் கொண்ட நடு வயது ஆண் ஒருவர் பெரிய கத்தி ஒன்றை அலங்காரமாகக் கற்கள் பதித்திருந்த இடுப்பு பெல்ட் ஒன்றில் செருகி இருந்தவர், பூச்சைச் சுரண்டிப் பார்த்து முடிவு தெரிந்து கொள்ளும் லாட்டரி டிக்கெட் ஒன்றில் சில டாலர்களை வென்றார்; சுழற் படிகளைப் போலப் பற்கள் கொண்ட மரம் வெட்டி ஆண் ஒருவர், மரங்களை வெட்டுவதை விட மோசமாக ஏதும் உண்டு என்றால் அது இந்த வெப்பம்தான் என்றார். நான் அவருடன் ஒத்துக் கொண்டேன், பிறகு அவரிடம் வழி கேட்டேன். சில நிமிடங்கள் கழித்து நான் தவறான திக்கில் செல்லத் தொடங்கிய போது அவர் சாலை ஊடே என்னை நோக்கிக் கத்தினார், சரியான திசையில் போகும்படி பணித்தார். பத்து நிமிடம் கழித்து, கர்ட் ஜான்ஸன் என்ற பெயர் கொண்ட ஒருவர், தன் புதிய ஃபோர்ட் பிக் அப் ட்ரக்கின் பின்னே இணைப்பு வண்டி ஒன்றில் சிறிய கவசாக்கி பார வண்டி ஒன்றை ஏற்றிக் கொண்டு போனவர், என் அருகே வண்டியை நிறுத்தி, ட்ரக்கின் ஜன்னல் வழியே இருபது டாலர்களை என்னிடம் நீட்டி, என்னிடம் சொன்னார், “ஜீசஸ் உன்னை நேசிக்கட்டும், நான் உன்னை நேசிக்கிறேன், உன் அடுத்த சாப்பாடு என் செலவில்.” என்றார்.

சில மணிகள் கழித்து, அலபாமா மாநிலத்தில் சாத்தம் என்ற ஊரில் சிண்டி, கார்ல் க்ரெய்க் தம்பதியரின் வீட்டில் அவர்களோடு இரவு உணவுக்கு நான் அமர்ந்திருந்தேன். சமைத்த கோழி, பன்றி மாமிச பர்கர்கள், வேகவைத்த சோளக் கொண்டை, உருளைக் கிழங்கு, ஒரு சாலட், சோளமாவு ரொட்டி, மற்றும் இரவுணவுக்கான உருண்டை ரொட்டிகள் இருந்தன.  விருந்தைப் போன்ற மற்றோர் உணவு. அவர்களுடைய வீடு குளிர் பதனப்படுத்தப்பட்டிருந்தது. நான் ஒரு பியர் அருந்தினேன்; சிறிது உரையாடினோம். அந்த வீட்டின் மணம் பழக்கப்பட்டதாக இருந்தது, என் இளம் பிராயத்தில் என் அம்மா பயன்படுத்திய ஒரு சோப்பின் வாசனை போல இருந்தது. நான் இரண்டாவது பியர் அருந்தினேன், பிறகு மூன்றாவதை. கடந்த சில தினங்களில் எனக்குக் கிட்டிய நல்ல அனுபவங்களைப் பற்றி அவர்களிடம் பேசினேன். டேவிட், ட்டில்லி தம்பதியின் வீடு; ரெஸ்டாரெண்டில் கிட்டிய உணவு; அலபாமா மாநில எல்லைக் கோட்டருகே என் கைகளில் பத்து நிமிடங்களுக்குள் இரு முறை என் கைகளில் கொடுக்கப்பட்ட பணம்; பிறகு இப்போது , இன்று உங்களோடெல்லாம் அமர்ந்து இருப்பது என்றேன். இதெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருந்த மற்றொரு சைக்கிள் பயணியோடு சம்பந்தப்பட்டவையா என்று நான் வெளிப்படையாக வியந்தேன். அந்த சைக்கிளோட்டியைப் பற்றி எல்லாருக்கும் தெரிந்திருந்தது- அவர்தான், சாலை விபத்தில் இறந்தாரே அவரைச் சொன்னேன் என்றேன். கார்ல் என் கண்களைத் தவிர்த்தார். சிண்டி தாங்கள் அந்த இளைஞனைச் சந்தித்ததாகத் தெரிவித்தார், ஜேம்ஸ் டாப்ஸன் என்பது அவர் பெயர். என்னைச் சந்தித்த அதே முறையில் அவரையும் சந்தித்தார்களாம்- ’வார்ம்ஷவர்ஸ்.ஆர்க்’ என்ற அந்த வலைத்தளம், முகநூல் வழியே உருவாக்கப்பட்டது, நீண்ட தூர சைக்கிள் பயணிகளுக்கு படுக்க ஒரு சோஃபா, ஒரு தனி அறை, அல்லது ஒரு வேளை சூடான உணவு போன்ற ஏதாவது வசதிகளைக் கொடுக்க அந்தத் தளம் ஏற்பாடுகள் செய்தது. ஜேம்ஸும் அவர்களுடைய சமையலறையில் ஹாம்பர்கர்களை மகிழ்வோடு உண்டிருக்கிறார், அவர்களுடைய விருந்தாளி அறையில் ஒரு இரவு வசதியாக உறங்கியும் இருந்தாராம். நன்கு தடித்த தலையணைகள், கையால் தைத்த படுக்கை விரிப்பு அந்த அறையில். 2016 ஆம் வருட டாட்ஜ் சாலெஞ்சர்[3] காரோட்டி ஒருவர் ஜேம்ஸ் மீது மோதியிருந்தார். அவர்கள் இருவரும் அமெரிக்க ஹைவே 98 இல் மேற்கு நோக்கிப் பயணித்திருந்தனர். விபத்து ஹாட்டிஸ்பர்க் அருகே, மிஸ்ஸிஸ்ஸிபி மாநிலத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை பின்மாலையில் நடந்திருக்கிறது. சிண்டி, கார்ல் ஆகியோரின் வீட்டை விட்டுப் போய் சில மணி நேரம் தாண்டுவதற்குள் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. சில நிமிடங்களுக்குள்ளேயே தன்னார்வலர் தீயணைப்புப் படையினர் விபத்து நடந்த தலத்தை அடைந்திருக்கின்றனர். ஆனால் ஜேம்ஸ் சம்பவம் நேர்ந்த இடத்திலேயே இறந்தவராக அறிவிக்கப்பட்டு விட்டிருந்தார்.

சிண்டி தனக்கு வந்த ஒரு டெக்ஸ்ட் செய்தியை நினைவு கூர்ந்தார். “அப்படித்தான் நான் கண்டு பிடித்தேன்,” அவர் சொன்னார். “யாரோ எழுதினார், “இந்த சைகிளிஸ்ட் உங்களுக்குத் தெரிந்தவரா?” அப்போதே அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார்- என் அடிவயிற்றில் பிசைந்தது, அந்த அழைப்பை நான் ஏற்குமுன்னரே – அவர்கள் ஜேம்ஸைப் பற்றிச் சொல்லத்தான் கூப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தது.” நான் அவர்களிடம் அப்போது சொன்னேன், உன் சாவைப் பற்றியும் நான் அதே விதமாகத்தான் கேட்டிருந்தேன் என்று.

அது ஜூலை மாதம், ஒரு சனிக்கிழமை மாலை. கிட்டத் தட்ட பத்து வருடங்கள் முன்பு நடந்தது. ஒரு அழைப்புக்குப் பிறகு எனக்கு ஒரு டெக்ஸ்ட் செய்தி வந்தது. (தொடரும்)


மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

இந்தப் பயணக் கட்டுரையின் இங்கிலிஷ் மூலம் மக்ஸ்வீனிஸ் காலாண்டுப் பத்திரிகையின் அறுபத்தி மூன்றாம் இதழில் 2021 ஆம் வருடத்துவக்கத்தில் வெளியானது. ‘Field Notes’ by Adam Iscoe/ McSweeny’s issue #63/2021)

இது ஆடம் இஸ்கோவின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டு இங்கே பிரசுரமாகிறது. இக்கட்டுரையை மொழிபெயர்த்துப் பிரசுரிக்க அனுமதி கொடுத்த ஆடம் இஸ்கோ அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் மைத்ரேயன் நன்றி தெரிவிக்கிறார்.

[Translator Maitreyan expresses his thanks to Adam Iscoe for granting permission to translate his into Tamil and publishing this story in Solvanam magazine.)

தன் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது என்று ஆடம் இஸ்கோ தன் கடிதத்தில் எனக்குத் தெரிவித்தார்.


[1] க்ரிட்= Grits என்று இங்கிலிஷில் பெயர் கிட்டும். சோளமாவுக் கஞ்சி என்று புரிந்து கொள்ளலாம்.

கோல்ஸ்லா= Coleslaw என்று இங்கிலிஷில் பெயர். இது மெல்லிய நூல்கள் போல அரியப்பட்ட முட்டைக் கோஸ் இலைகள், புளித்த காடியோடு (vinegar) அல்லது முட்டை மஞ்சள் கரு, எண்ணெய், வினெகர் ஆகியவற்றால் தயாரான மயன்னைஸ் எனப்படும் பதார்த்தத்தோடு கலந்து ஊறியபின் பரிமாறப்படும் ஒரு உணவுப் பண்டம்.

[2] Flannel என்று அழைக்கப்படும் வகை கம்பளிப் பின்னலால் ஆன உடுப்பு அது. Pajama என்று இங்கிலிஷில் சொல்லப்படுவது. இந்தியாவில் பைஜாமா என்று அழைக்கப்படலாம்.

[3] டாட்ஜ் சாலெஞ்சர் என்பது Muscle car என்று அழைக்கப்படும் அதிவேகம் பெறக் கூடிய ஒரு வகைக் கார்.

Series Navigation<< தடக் குறிப்புகள்தடக் குறிப்புகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.