முன்னுணர்தல்

கீழே நான்கும் மேலே நான்குமாய் எட்டுக் குடித்தனங்கள் இருந்தோம். தெருவை நோக்கிய, முதல் கீழ்ப்  போர்ஷனில் வீட்டு உரிமையாளர். நாய்ப் பிரியர். இரண்டு பாமரேனியன், இரண்டு டாபர்மேன் எந்நேரமும் வளாகத்துக்குள் சுற்றித் திரியும். அவருடை ய செல்ல லாப்ரடார், எந்நேரமும் அவர்கள்  வராந்தாப் படியில் அமரிக்கையாய் உட்கார்ந்திருக்கும். நாயுருவம் எடுக்க நேர்ந்த மனிதப்பிறவியாக்கும் நான், பிற நாய்களை மேற்பார்வை செய்ய அமர்ந்திருக்கிறேன் என்கிற மாதிரி இருக்கும் அதன் தோரணை.

            வளாகத்துக்குள் காற்றுக்கும் பின்கட்டில் இருக்கும் அகலமான மாட்டுத் தொழுவத்தின் சாண மணத்துக்கும் நிகராக நாய்க்குரைப்பும் நிரம்பியிருக்கும். சிலவேளை, டாபர்மேனின் கனத்த அடித்தொண்டைக் குரலும், உச்சத்தில் அலறும் பாமரேனியனின் முற்றாத குரலும் மாறிமாறி டூயட்போல ஒலிக்கும்.   ஆனால், அத்தனை நாய்களுமே சாத்வீகமானவை. யாரையும் கடிக்க முயன்றதுகூட இல்லை. வருகிறவர்களுக்கு இந்த சூட்சுமம்  தெரியாதில்லையா, வாசல் கதவுக்கு இரண்டடி அப்பால் நின்றுதான் கூப்பிடவே செய்வார்கள். குடி வருகிறவர்களுக்கு ஒரே வாரத்தில் பிடிபட்டுவிடும் என்பதால், சரளமாக நடமாடுவோம். சில சமயம் பாமரேனியனின் புசுபுசு ரோமத்தை வருடிக் கொஞ்சக் கூடச் செய்வோம். டாபர்மேன்களின் வாலை வெட்டி விட்டிருப்பார்கள்; வாலாடாத நாயின் பிரியத்தைப் புரிந்துகொள்ள கூடுதல் பிரயாசை தேவை.

            இவ்வளவு நீளமாக நாய்த் தகவல்கள் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மாதவ ராவ். அவருக்கு நேரடித் தொடர்பு இருந்ததா என்று தெரியாவிட்டாலும், சில வேளை அத்தனை நாய்களும் ஒரே நேரத்தில் மௌனத்தில் ஆழ்வதும், எச் எம் வீ  இலச்சினை போலக் குத்திட்டு உட்கார்ந்து ஒரே திக்கில் வெறிப்பதும், எங்கள் வளாகமே இனம் புரியாத அமானுஷ்யத்தில் அமிழ்ந்துவிடுவதும் கடும் பீதி விளைவிக்கும். முதல் தடவை அப்படி நடந்ததை என்னால் மறக்கவே முடியாது. அடுத்தடுத்த தடவைகளில் பழகிவிட்ட காட்சிதான் என்றாலும், எப்போதுமே, ஆரம்பித்த மாத்திரத்தில் நிலைகுத்தத் தொடங் கும் முன்னங்கை ரோமங்கள், அடுத்த ஒருமணிநேரத்துக்கு நட்டமாய் நிற்கும்.

            முதல் தடவை, வீட்டைக் காலிசெய்துவிட்டால் என்ன என்றுகூடத் தோன்றியது. அந்த முறை நடந்ததன் வீரியம் அப்படி. ஆனால், ரயில் நிலையத்துக்கும் பேருந்து நிலையத்துக்கும் கடைகண்ணிகள் மண்டிய காந்திவீதிக்கும் குழந்தைகளின் பள்ளிக்கூடத்துக்கும் அத்தனை அருகில் இருக்கும் வீடு கிடைப்பது கடினம்.  அதைவிடக் கடினமான து,  நிரூபணங்கள் இல்லாமல் ரமாவை உடன்படச் செய்வது. தவிர, அத்தனை இடவசதியுள்ள வீடு, அத்தனை குறைவான வாடகைக்கு  சென்னையில் எங்கேயுமே  கிடைக்காது.  நாய்கள் மட்டும் இல்லாவிட்டால், இன்னும் அதிக வாடகைக்கு விடலாமே என்று யாராவது பேச்சுவாக்கில் ஆலோசனை சொன்னால், வளர்ப்புப் பிராணிகள் அளவுக்கே  குரைத்துத் தீர்த்துவிடுவார் உரிமையாளர் என்று அவருடைய மனைவி பெருமிதமாய்ச் சொல்வாள்.

            கொஞ்சம் நீளமான முன்சுருக்கம்தான்; ஆனால், மாதவ ராவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால், இத்தனையையும் சொல்லித்தான் ஆகவேண்டும். வரிசைக்கிரமமாகவே சொல்லப் பார்க்கிறேன்…          

எங்களுக்கு நேர் மேலே இருந்த போர்ஷனில் வசித்தார் ராவ். எழுபத்திச் சொச்சம் வயது இருக்கலாம். ஆனால், அதைவிட அதிக வயதானவராகத் தெரிவார். முடி முழுக்கக் கொட்டிப் பளபளக்கும் வழுக்கை. நடு நெற்றியில் கறுப்பு நிறத்தில் வட்டப் பொட்டு. அதற்கு அணைகட்டிய மாதிரியும், திறந்த உடலில் அங்கங்கேயும் U வடிவத்தில் மேல்நோக்கிய  சந்தனக் கீற்றுகள். அவர்களுடைய மாடிப் போர்ஷனின் முன்புற பால்கனியில், ஈஸிசேரில் அமிழ்ந்து, மடியில் உள்ள புத்தகத்தில் ஒரு கண்ணும் தெருவில் ஒரு கண்ணுமாய் இருப்பார். மொட்டைமாடியில் துணி உலர்த்துவதற்கு,  அவரைத் தாண்டித் தான் போயாக வேண்டும்.

            என் முதுகில் அவர் பார்வை  முள்போல உறுத்துவதாய் உணர்ந்தேன். இல்லை, முள் இல்லை. துரப்பணம். என் உடம்பில் துளைபோட்டு மறுபுறம் பாயத் துடிக்கிறது அது. வலி இல்லையே தவிர, குடைந்து நகரும் எஃகுக் கம்பியை என்னால் உணர முடிகிறது. பின்னாட்களில் அதற்கும்கூடப் பழகிவிட்டேன். என்றாலும், முதல் தடவை ஏனோ அச்சமும் குடைந்தது.

இன்னொரு பிளாஸ்டிக் வாளி நிறைய ஈரத் துணியுடன் எனக்கு முன்னால் ஏறிப் போன ரமா, தனக்கு அப்படியொன்றும் தோன்றவில்லை என்று புறங்கையால் ஒதுக்கிவிட்டாள். ஆகவே, அடுத்தடுத்த  தடவைகளில் உணர்ந்த உறுத்தலும்கூட என்னுடைய பிரமையாகவே இருக்கலாம் என்று சமாதானம் செய்துகொண்டேன்.

            ராவுடைய இரண்டு கண்களையும் பற்றிச் சொன்னேனல்லவா, இரண்டு கைக ளையும் சொல்ல வேண்டும். இடது கைச் சுட்டுவிரல், வாசிக்கும் வரிகளைத் தடவிய வாறு மெல்ல நகர்ந்தது – விரலால் வாசிக்கிற மாதிரி. கடந்துசெல்லும்போது புத்தகத்தின் விரித்த பக்கங்கள் பார்வையில் பட்டன. தொட்டால் ஒடிந்துவிடும்போலப் பழமையின் மஞ்சளேறிய தாள்கள்.  கொட்டைகொட்டையான எழுத்துக்கள் கன்னட லிபியா, தெலுங்கா, அல்லது எனக்குத் தெரியாத வேறு ஏதேனும்  மொழியா என்று குழம்பினேன். சமஸ்கிருதம் இல்லை – அது நிச்சயம். ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் என்றால், படுக்கைவசக் கோட்டைப் பிடித்துத் தொங்கும் வவ்வால்கள் காட்டித் தந்துவிடுமே.

வலது கையில் கோலிக்காயைவிடச் சற்றே சிறிய  மணிகள் கோத்த துளசி மாலை. சில விநாடிகளுக்கொருமுறை கட்டைவிரல் ஒவ்வொரு மணியாகத் தடவி ஊர்ந்தது. உதடுகள் லேசாகப் பிரிந்து ஏதோ உச்சாடனத்தில் ஈடுபட்டிருந்தன. நான் பார்த்த அதே சமயத்தில் தெருவில் மெல்ல நகர்ந்த குப்பைலாரியின்  மணத்துக்கு முகத்தைச் சுளித்தார் கிழவர்.

            கைகள் துணி உலர்த்தியபோது,  மனம் அவரையே சுற்றி வந்தது.  குழப்பம் ஜாஸ்தியாகிக்கொண்டே போனது. அவர் வாசிக்கிறாரா, பராக்குப் பார்க்கிறாரா, சுலோகம் எதையும் மனப்பாடம்  செய்கிறாரா, தானாய் அவ்வப்போது சிரித்துக்கொள்வது ஏன் – வீட்டுக்குள் டேப் ரிக்கார்டரில் சன்னமாய் ஒலிக்கும் வாத்திய இசை கேட்டுத்தான் அவர் தலை ஆடுகிறதா. இத்தனைக்கும் நடுவில் மணம் எப்படி உறைத்தது. ஒரே நேரத்தில் அத்தனை வேலைகள் செய்ய முடியுமா ஒரு மனிதப் பிறவியால். அல்லது, புலன்களைப் பிணைத்த சங்கிலியை அவிழ்த்து விட்டுவிட்டாரோ! அதிசயமாய் இருந்தது ஒரு கணம். வளாகத்துக்குள் நாய்கள் திரிவதுபோல அவரது புலன்கள் தனித்தனியாய்த் திரிவ தாய்க் கற்பனை ஓடியது. ஆனால், அதைக் காட்சியாய் உருவகித்துக்கொள்ள இயலவில் லை.

            ஒரே வேஷ்டியெ எவ்வளவு நேரம் உதறுவீங்க!

என்று ரமாவின் குரல் இழுத்துவராவிட்டால், அன்று முழுவதும் அந்த வாரம் முழுவதும் ஏன் இதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இந்த நாள் வரைக்கும்கூட அதே வேஷ்டியை அதே நிலையில் உதறிக்கொண்டிருந்திருப்பேனோ என்னவோ.  பின்னர் நடந்தவற்றை யும் சேர்த்துப் பார்த்தால், அந்த வேஷ்டியில் இருந்த ஈரநைப்பும்கூட முழுக்க உதிராமலே இருந்திருக்க வாய்ப்புண்டு…

            எப்படியோ, துணிகளை உலர்த்திவிட்டுக் கீழே வந்த பிறகும், வெகுநேரத்துக்கு என் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன.

அதற்குப் பிறகுதான் மாதவ ராவை சற்று உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன். இல்லை, அவர்தான் என்னைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று தோன்றுகிற மாதிரி ஒரு  சம்பவம் நடந்தது.

குடிவந்த புதிதில், ஒரு இரவில், தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்கும்போது, ஜன்னல் வழியே தெரிந்த தெருவில் பட்டப்பகல் நிலவுவதைக் கண்டேன். ஆகாயத்திலிருந்து பால் பொழிந்துகொண்டிருந்தது. பார்வைக்குப் படும் சகலத்தின்மீதும் இனம்புரியாத தூய்மை சல்லாத்துணிபோலப் படிவது தெரிந்தது. அத்தனையுமே மிருதுவாகியிருந்தன.  

 சொல்லத் தெரியாத கிளர்ச்சி எனக்குள் ஊறியது.  சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு ஏறினேன். போயிருக்கக் கூடாது.

            நட்ட நடு மாடியில் ராவ் உட்கார்ந்திருந்தார். அதற்குப் பின்னர் அவரைப் பார்க்க நேர்ந்த அசாதாரண சந்தர்ப்பங்களிலும்கூட, தாம் இருக்கும் இடத்தின் மையத்திலேயே அவர் இருப்பார். சட்டென்று, ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் மைய அச்சே அவர்தான் என்றுகூடப் பித்துக்குளித்தனமாய்த் தோன்றியதுண்டு எனக்கு.

ஊன்றிய பலகைபோல அவரது முதுகுதான் எனக்குத் தெரிந்தது. செங்கோணத்தில் மூட்டிய இரண்டு பலகைகளை சிமெண்ட்டுத் தரையில் பதித்ததுபோல அவ்வளவு நேராக, அவ்வளவு விறைப்பாக, சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். தொலைக்காட்சி கோபுரத்தின் வாணலிபோல ஆகாயத்தை நோக்கி உயர்ந்திருந்தது முகம். பவுர்ணமி நிலவுடன் ஏதோ உரையாடுகிற மாதிரி சன்னமாக அவர் குரல் முறுமுறுத்தது.

            ஆனால், நிஜத்தில் அவர் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. ஆமாம், அவருடைய முதுகிலிருந்த, உள்ளங்கைப்  பரிமாணமுள்ள கண்கள் இரண்டும்  என்னை உறுத்துப்  பார்த்தன. ’அட, உருவெளித்தோற்றம்…’ என்று சுலபமாய் உதறியிருப்பேன்; ஆனால், அந்தக் கண்களுக்கு இமைகள் இருந்தன. மூடிமூடித் திறக்க வேறு செய்தன.

            மின்சாரம் தாக்கியதுபோன்று உணர்ந்தேன். பதறியடித்துக்கொண்டு படியிறங்கி, வீட்டுக்குள், படுக்கையறைக்குள் ஓடிச்சென்று படுத்தேன்.  சீராக மூச்சுவிட முடிய வில்லை. சிறுநீர் முட்டியது. வேகமாகக் கழிவறைக்குள் சென்றேன். அடுத்து நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை – பீப்பாய் பீப்பாயாகச் சிறுநீர் வெளியேறியது. உண்மையில், என் உடம்பு முழுவதும் பனிக்கட்டிபோல உருகி உறுப்பின் வழியாய்க் கொட்டுவதுபோல இருந்தது. இந்த உடம்பு தீர்ந்ததும் முந்தைய பிறவிகளில் கிடைத்த உடம்புகளும்கூடக் கரைந்து கொட்டுமோ என்று அச்சமாய் இருந்தது. எப்போது நின்றது, எப்போது வெளியில் வந்தேன் எதுவுமே துலக்கமாய் இல்லை.

            அவ்வளவு பயத்துக்கு, தூக்கம் என்னைவிட்டு ஓடியிருக்க வேண்டுமல்லவா. அது தான் இல்லை. கனவுகள்கூட வராத, நிச்சிந்தையான உறக்கத்துக்குள் அமிழ்ந்து விட் டேன். அடுத்த நாள் காலையில் எழுந்தபோது அசாத்தியமான புத்துணர்வு எனக்குள் நிரம்பியிருந்தது.

            உபரியாக இன்னொரு விநோதத்தையும் சொல்ல வேண்டும். ராவ் சம்பந்தமான மேற்படி விவகாரமெல்லாம் எனக்கும், எங்கள் வளாக நாய்களுக்கும்  மட்டுமே தெரிந்திருந்தது.  ரமா, குழந்தைகள் மட்டுமில்லை; பிற குடித்தனக்காரர்கள், உரிமையாளர் குடும்பம் என வேறு யாருக்குமே இதெல்லாம் உறைத்தமாதிரியே தெரியவில்லை…    

ஒரு நாள் முன்னிரவில் தனியாக நின்று சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தேன்.  இல்லை இல்லை, தனியாக என்று சொன்னது பிசகு. என் காலடியில் நின்று சதா என்னை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது டாலி. இடையில் ஒருதரம் தன் புசுபுசு உடலால் என் குதிரைச்சதையை உரசும். ஓரிரு அடிகள் நகர்ந்துவிட்டு, பழையபடி வந்து முகரும். ஏதோவொரு கட்டத்தில் பின்னங்காலில் ஒன்றைத் தூக்கி, என் முழங்காலில்  மூத்திரம் அடித்துவிடுமோ என்று லேசாகத் தயக்கம் தட்டிய அதே சமயம், சட்டென்று உட்கார்ந்து ஒரே திக்கில் வெறிக்க ஆரம்பித்தது டாலி. அதன் வெண்ணிறத்தில் ஒளிர்வு கூடி, ரேடியம்போல மிளிர்ந்ததை வியக்கக்கூட அவகாசமில்லை எனக்கு. வீல் என்று ஒரு பெண் குரல் அலறுவது கேட்டது.

            மாடியிலிருந்து வருகிறது, ராவுடைய மனைவியின் குரல் என்றெல்லாம் தெளிவு படுவதற்கு முன்பே மாடிக்குப் போய்ச் சேர்ந்திருந்தேன்.

            கூடத்தின் நடுவில் ராவ் மல்லாந்து கிடந்தார். கைகளும் கால்களும் வெட்டிவெட்டி இழுத்தன. விறைத்த கண்கள் விட்டத்தில் நிலைத்திருக்க, வாயோரம்  நீர்க் கோடு இறங்கித் தரையில் சேகரமாகியிருந்தது. அவருடைய வலதுகையில் ஒரு சாவிக்கொத்தைத் திணித்துவிட்டு, அது விழுந்துவிடாதபடி தானும் பிடித்தவாறே, மறு கையால்  கணவரின் நெஞ்சை நீவினார் அந்தப் பெண்மணி.

            நான் வரும்போது இருந்த சூழ்நிலை, நிலைதாண்டி நுழைந்து நான் அருகில் சென்ற மாத்திரத்தில் வெகுவாகச் சீர்பட்டது. கண்ணைத் திறந்தபடி உறங்குபவர்போல சமனப்பட்டார் ராவ். அந்த அம்மாளின் உடல்மொழியிலும் மெல்லிய ஆசுவாசம் படர்வதை என்னால் காண முடிந்தது.  ராவ் இப்போது பேச ஆரம்பித்தார்:

அடடே, ஆதித்த கரிகாலன் பொறப்புட்டுட்டானே. தம்பீ, போகாதப்பா. அந்த வேட்டையறைக்குள்ளே என்ன காத்திருக்குன்னு ஒனக்குத் தெரியாது. ஆட்க ஒளிஞ்சிருக்காங்கப்பா. அந்தப் பழிகாரி நந்தினி வேற ஒனக்காகக் காத்துருக்கா. ஒன்னெ அவ வரச்சொன்னதே இதுக்காகத்தான். அந்தப் பயகளோட ஆளு அவ. அவ எதுத் தாப்பிலெ நின்னா ஒனக்குக் கையும் ஓடாது காலும் ஓடாதுன்றது அவளுக்கும் தெரியும், அவன்களுக்கும் தெரியும். எவ்வளவு பெரிய மாவீரன் நீ. யுத்தகளத்திலே வீரமரணம் அடையவேண்டாமா? கேவலம், பொம்பளெ வெவகாரத்துலே முதுகுலெ குத்துவாங்கியா சாகுறது… அடே, சொன்னாக் கேளுடா. வயசுலெ மூத்தவன். நாஞ் சொல்றதை காதுலயாவது வாங்குடாய்யா… அடடே, வெளக்கும் அணஞ்சு போச்சே…

நிதானமான, ஒவ்வொரு சொல்லும் துல்லியமாய்க் கேட்கும் குரல்.  ஒரேயொரு வித்தியா சம், சாதாரணமாய்ப் பேசும்போது சற்றுக் கிரீச்சிட்ட தொனியில் தெலுங்கு மணக்கும் உச்சரிப்புடன் ஒலிப்பது, மிக நல்ல தமிழில் கேட்டது இப்போது. குரலும், பழைய ஓ ஏ கே தேவரின் குரல்.

            எதுவுமே நடக்காத மாதிரி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் ராவ். நன்றி சொல்கிற பாவனையில் எழுந்துநின்று என்னை நோக்கிக் கைகூப்பினார் அவரது மனைவி. மெல்லப் பின்வாங்கி நகர்ந்து கீழே இறங்கத் தலைப்பட்டேன்.

வளாகம் ஆழ்ந்த அமைதிக்குள் மூழ்கியிருந்தது. விசித்திரமான உணர்வு என்னைத் தாக்கியது. அந்த அம்மாள் அப்படி அலறியும், ஒரு போர்ஷனில்கூடச் சலனம் தென்படவில்லையே. எனக்கு மட்டும்தான் அந்தச் சப்தம் கேட்டதா! தொடர்ந்து இதே விதமாகச் சிந்தித்துக்கொண்டு போவது அத்தனை ஆரோக்கியமானதில்லை என்று தோன்றி, மனத்தை வேறுபுறம் திருப்ப முயன்றேன்.

            பொன்னியின் செல்வனில் என் மனத்தைப் பிசைந்த துயரக் கட்டம் அது. காலங் காலமாகத் தீராத மர்மமும் இணைந்தே இருப்பது.  ரகசியம் திறந்துவிடும் வாய்ப்பு கையருகில் வந்தும் சட்டென்று நழுவிவிட்டதே என்று ஒரு கணம் ஏக்கமாய் இருந்தது.

            சரி, போய்த் தொலைகிறது, ராஜாங்கத்தின் உயர்மட்டத்தில் நிகழும் படுகொலை களுக்கெல்லாம் நிஜமான காரணங்கள் தெரியவருவதோ, நிஜமான கொலையாளிகள் பிடிபடுவதோ எப்போதாவது நடந்திருக்கிறதா என்ன…

அடுத்த சிகரெட்டையும் முடித்து, படுக்கையறையில் சென்று படுத்தபோது இன்னொரு வியப்பு எழுந்தது. ஆமாம், அந்தத் தொடர்கதைக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் உண்டல்லவா, அவர் சித்தரித்த ஆழ்வார்க்கடியானின் சாயல் தத்ரூபமாய் இருந்தது மாதவ ராவுக்கு. தானாய் விதிர்த்தது எனக்குள்.

மறுநாள் காலையில் அந்த அம்மாள் எங்கள் போர்ஷனுக்கு வந்தார். நெய் தீர்ந்து விட்டதாம். ஒரு கரண்டி வாங்கிப் போக வந்தார். வாங்கிக்கொண்டு திரும்பியவர், ஏனோ, என் எதிரில் இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஏதோ என்னிடம் பேச விழைவது முகக்குறிப்பில் தெரிந்தது. தழைந்த குரலில் சொன்னார்:

நேத்து நெல்லவேள, சீக்ரமே முடிஞ்சிட்டாங்க. சில சமயம் மணிக்கணக்காக் கஸ்டப்படுவாங்க.           

’அப்படியா’ என்கிற மாதிரித் தலையாட்டினேன். அந்த அம்மாள் தொடர்ந்து பேசினார்.   முதன்முதல் தடவை ராவுக்கு  மேற்படித் தாக்குதல்  நேர்ந்தபோது, அவசரத்துக்கு இரும்புப் பொருள் எதுவும் அகப்படவில்லையாம்.  சமையல் மேடையில் இருந்த கத்தியைக் கணவரின் கையில் திணித்திருக்கிறார். மூடிய உள்ளங்கைக்குள்  கத்தியின் வெட்டுப் புறம் சிக்கிவிட்டது. ராவ் சுமார் அரைமணி நேரம், ஆரஞ்சுப் பழம் பிழிகிற மாதிரி கத்தியை இறுக்கிப் பிடித்திருந்திருக்கிறார். விடுபட்ட பிறகு,  உள்ளங்கைத் தோலில் சிறு கீறல்கூட இல்லையாம்…

            இன்னொன்றும் சொன்னார் அந்த அம்மாள். என்னால் கிரகித்துக்கொள்ளவே முடியவில்லை. தேதி வருஷம் கிழமை வேளை உள்ளிட்ட சகலத்தையும் துல்லியமாய்ச் சொன்னார். ராவுக்கு அப்போது நாற்பத்திச் சொச்சம் வயது. இதேபோலப் பீடிப்பு நேர்ந் திருக்கிறது. இந்த அம்மாள் திகைத்துப்போய்ப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். ராவ் மன்றாடுகிறார்:

ஸார், வேணாம் ஸார். இந்த எலக்ஸன் போனாப் போவுது ஸார். இன்னம் எவ்வளவோ காலம் இருக்கு. பாத்துக்கிறலாம் ஸார். சுத்திலும் கொலைகாரங்களா நிக்கிறாங்க ஸார். அந்தப் பிள்ளையக் கிட்ட வர விடாதீங்க ஸார். அய்யோ, அவ இடுப்புலெ என்ன கட்டியிருக்கான்னு ஒங்களுக்குத் தெரியாது ஸார். அய்யோ, கொஞ்சம் நில்லுங்க ஸார். இப்பிடிப் போய்க்கிட்டே இருக்கீங்களே ஸார். அய்யய் யோ, போய்ட்டீங்களே… அமுக்கிட்டாளே, வெடிச்சிருச்சே…

உடல் வெகுவாக முறுக்கியிருக்கிறது. நிலை மீண்ட பிறகு, கிட்டத்தட்ட அரைக்குடம் தண்ணீரை மாந்தினாராம்.

            அடுத்த நாள் காலைத் தினசரிகளில், வெண்ணிற ஸ்போர்ட்ஸ் ஷு அணிந்த கால் தனியாய்க் கிடக்க, குப்புற வீழ்ந்து கிடந்தவரின் முகம்  சிதைந்திருந்ததும், சுற்றிலும் பரந்திருந்த ரத்தக் குளமும் கண்டு, ஒட்டுமொத்த இந்தியாவும், ஏன் உலகமே அதிர்ந்த தைச் சொல்லும்போது அந்த அம்மாளின் முகத்தில்தான் எவ்வளவு பீதி.  எல்லாரையும் போலவே, புதிதாக அந்தப் படத்தையும் செய்தியையும் ராவ் பார்த்தார் என்று சொல்லும் போது பீதி பலமடங்கு அதிகரித்திருந்தது.

பின்னே, இவருக்கு அது நடக்கம்போதே தெரியும்ன்னு வெளியெ தெரிஞ்சிருந்தா சும்மா விட்ருப்பாங்களா? ரண்டு பேரயும் தள்ளீட்டுப் போயி முட்டிக்கி முட்டி தட்டீருக்க மாட்டாங்க? ஆரு கண்டா, இன்னவரைக்கி ரண்டு பேரும் ஜயில்லெ கெடந்துருப்பமோ என்னமோ…

என்று பேசிக்கொண்டே எழுந்து போனார்.

            அது சரி, இப்படி அடிக்கடி நடக்கும் விஷயம் என்றால், ஏன் அப்படி அலறினீர்கள் என்று கேட்கத் தோன்றியது; ஆனால், கேட்கவில்லை. விஷயங்கள் நமக்குப் பழக்கமாகிற மாதிரியே எல்லாருக்கும் ஆகுமா என்பது ஒன்று. இதுமாதிரி ஒரு பீடிப்பு வரும்போது எதுவரை போய் நிற்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்று எனக்கே இன்னொரு சமாதானமும் தோன்றியது. வழக்கமாகப் பிடிக்கும் சிகரெட்தான். ஒவ்வொரு முறை புகை மணத்தோடு நான் வீட்டுக்குள் வரும்போதும் ரமா முகத்தைச் சுளிப்பதில்லை?

கிட்டத்தட்ட, ராவ்  பேசிய அதே வாக்கியங்களை அதே ஏற்ற இறக்கத்துடன் ஒப்பித்தார் அந்த அம்மாள் என்றே பட்டது.  பானுமதி குரல் அந்த அம்மாளுக்கு. பாடத் தெரியுமா என்று கேட்கவேண்டும். தெரியும் என்றால், ‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா’ பாடச் சொல்லி வேண்ட வேண்டும்… தானாக வளர்த்துக்கொண்டு போன மனம், வேறு பக்கம் திரும்பியது.

செல்ஃபோனில் யாரிடமாவது பேசினால்கூட, என் பக்கத்தில் வந்து நின்று, ’யாரு’ என்று பார்வையாலேயே துளைத்தெடுக்கும் ரமா, அந்த அம்மாள் என்னுடன் உரையாடுவதைப் பார்த்தும் எங்கள் பக்கமே வரவில்லை என்பது கொஞ்சம் அசாதாரணமாய்ப் பட்டது எனக்கு. 

அதன்பிறகு பலதடவை அதேவிதமாய் நடந்தது. ராவுக்கு வலிப்பு வரும். அவர் மனைவி குரல் கொடுப்பார். நான் மட்டும் மாடிக்கு ஓடிச் செல்வேன். அட, நான் ஓடுவதையாவது யாரேனும் பார்த்துத் தொலைக்க மாட்டார்களா? மற்றவர்களெல்லாம் வேறு காலத்தில், வேறு வேகத்தில் இருக்கிற மாதிரியும், நான் ஓடுவது சாதாரண நடைமாதிரி அவர்களுக்குத் தெரிவதாகவும் அனுமானித்துக்கொள்வேன். வாய்விட்டு யாரிடமும் கேட்கத் தயக்கமாய் இருந்தது. குறிப்பாக, ரமாவிடம். ஆறுதலும் தைரியமும்  சொல்வதற்கு பதிலாக, டாக்டரிடம் கூட்டிப் போகிறேன் என்று ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது!

            சிலசமயம், இது எதுவுமே நிஜத்தில் நடக்கவில்லை; நானாகக் கற்பனை செய்து கொள்கிறேன் என்று தோன்றும். அல்லது, தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறதோ. அதன் எதிர்ச் சிறகாக, விழித்திருக்கும்போதே கனவு காண்கிறேனோ. கனவில் நடப்பவற்றை நிஜம் என்று குழப்பிக்கொள்கிறேனோ…

            இன்னொரு சந்தர்ப்பத்தைச் சொல்கிறேன்.

            அந்த முறை, புதிதாக ஒரு அம்சம் சேர்ந்துகொண்டது. வழக்கமாக ராவின் குரலில் இருக்கும் நிதானம் கொஞ்சம்கூட இல்லை. சாதாரண நிலையில்கூட அவரிடம் தென்படவே செய்யாத வன்மமும் குரோதமும் கிளுகிளுப்பும் அந்தக் குரலில் நிரம்பியிருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் பேசிக்கொண்டே போனார்:

அண்ணாச்சி, எம்புட்டுப் பேரு எம்புட்டுத்  தடவெ எடுத்துச் சொன்னோம். கேட்டீயளா. எப்பயோ சுதாரிச்சிருக்கலாமல்ல. இப்பப் பாருங்க, வளைக்குள்ளெ எலி கணக்காப் போயிச் சிக்கிட்டீயளே! நீங்க சிக்குனது பத்தாதுன்னு, அந்தப் புள்ளைய வேறே… பாவம் நீங்க இளுத்த இளுப்புக்கெல்லாம் வந்துச்சு. இப்போ சாவெப் பாத்து இளுத்துட்டுப் போறிய. செரி, அதுதாம் எளவு ஒங்ககூடச் சேந்து இருந்துச்சு; சேந்து சாவுது. ஒங்க சேக்காளிக சாவுறதும் நாயந்தான். கொத்துக்கொத்தா சனங்களெப் போட்டுத் தள்ளுனவுகல்லெ? ஒங்குளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். ஆனாக்கே,  சேக்காளிய வீட்டுப் பொம்பளையாளுக, அவுக பெத்தெடுத் த சின்னஞ்சிறுசுக… அதுகல்லாம் என்னா பாவம் பண்ணுச்சுக, பாவம்?…

முதலில் ராவ் யாரிடம் பேசுகிறார், எந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் எதுவுமே புரியவில்லை. உண்மையில் மேற்படிச் சம்பவம் நிகழ்ந்து முடிந்த பிறகும்  அந்த வசனங்கள் என்னைப் பல நாட்கள் பீடித்திருந்தன. முந்தைய சந்தர்ப்பம் ஒவ்வொன்றிலும்   ஒவ்வொரு குரலில் பேசிவந்த மாதவ ராவ், இந்த முறை வீ கே ராமசாமி  குரலில் பேசினார். எங்கள் தெருவில் மளிகைக்கடை போட்டிருந்த தெற்கத்திக்கார செவத்தையா அண்ணாச்சிபோல இருந்தது உச்சரிப்பு. தொனியில் இருந்த ஏளனத்துக் கும் இளக்காரத்துக்கும் உதாரணமே சொல்வதற்கில்லை.

…பச்சப் புள்ளையளுக்கு வெசத்தை வைக்கிறீயளேய்யா. சாகப் போற நேரத்து லெகூட அடுத்தவியளெ வாள வய்க்கணும்ன்னு புத்தி போக மாட்டங்கே. அய் யோ, எஞ்சாமீ, எப்பிடித் துடிச்சு அடங்குது புள்ளைய… இன்னா டுப்பாக்கிய எடுத்திட்டீருல்லெ. போருமய்யா. போய்ச் சேரும். மனுச எனம் ஒரு கெட்ட கெனாக் கண்டு அதயும் மறந்துருச்சூன்னு ஆகட்டும்… போடு ஒக்காளி, குருதைய அமுக்கு. டொப்பு டொப்புனு குருவி கணக்கா ஒம்மையே சுட்டுக்கிட்டீரேய்யா…

இதுவரை அவர் விஜயம் செய்த அத்தனை தருணங்களுமே மரணத்தை விவரித்தன என் று மட்டும்தான் திரும்பத் திரும்பத் தோன்றியது. மற்றபடி, இந்தக் கடைசிச் சம்பவத்தை இனம் காண்பதற்கு ஒரு தடயமுமே கிடைக்கவில்லை. முதல் தடவையாக, மாதவ ராவ் தொடர்பாக அதிகப்படியான மர்மம் சேர்ந்துவிட்டதாய்த் தோன்றியது.

            ஆனால், அவ்வளவு அதிகமாக நான் திகைத்துத் திணறியிருக்க வேண்டியதில் லை. ஓரிரு வாரங்கள் கழித்து,  புதிர் தானாகவே அவிழ்ந்தது. மாதவ ராவ்மீது எனக்கு ஒருவித சந்தேகம் உதித்ததும் அப்போதுதான். ராவ்  பலகுரல் கலைஞர்; தம் திறமையை சோதித்துப் பார்த்துக்கொள்ளப் பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்துகிறார்; அல்லது, தமது முதியவயதின் விளையாட்டுப் பொருளாக. அவருடைய மனைவியும் இதற்கு உடந்தை என்றெல்லாம் எனக்குள்ளேயே அடுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஏதோ, கொஞ்சம் கற்பனாசக்தி இருக்கிறது, அதற்கு அனுசரணையாக எளிதில் பயப்படும் மனமும் இருக்கிறது; அதற்காக என்னை முழுப் பைத்தியக்காரன் என்றோ, முழுமூடன் என்றோ நினைத்துக்கொண்டாரா இந்த ராவ்? ஆனால், இதை நேரடியாகச் சொல்லிச் சண்டை போட்டு விலக முடியாது. அப்புறம், மற்றவர்களும் என்னைப் பைத் தியம் என்றே முடிவுகட்ட வாய்ப்புண்டு; சான்றுகள் எதுவுமே இல்லையே…  பொறுத்திருக் கலாம் என்று முடிவெடுத்தேன்.

இவ்வளவு பொருமலுக்கும் காரணமாய் அமைந்தது, என் அலுவலக நண்பர் சாஜன் கொடுத்த டிவிடி. Downfall என்ற படம்.  ஜெர்மனில் வேறேதோ பெயர். ஆங்கில சப் டைட்டில் கொண்டது. சும்மா சொல்லக்கூடாது, அதில் ஹிட்லராகப் பாத்திரம் வகித்தவர் மகா நடிகர். பின்புறம் கோத்த கைகள், வலது மணிக்கட்டுக்குக் கீழே சதா உதறிக் கொண்டே இருக்கும் உள்ளங்கை, சிடுசிடுத்த முகபாவனைகள், கீறிய குரல் என்று சகல மும் அசாத்திய நம்பகத் தன்மையுடன் இருந்தன.

ஆக, வீ க்கே ராமசாமி எனக்கு வர்ணித்தது பெர்லினில் இருந்த நிலவறை ஒன்றைத்தானா!

அடுத்து சுருளிராஜன் குரலிலோ, கவுண்டமணியின் குரலிலோ ஒரு வசனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்கினேன்.  அது வெறும் வசனம்தான்; இனியும் நான் ஏமாறுவதாய் இல்லை என்று அந்தக் கிழத் தம்பதியிடம் ஆணித்தரமாகத் தெரிவிக்கப்  போகிறேன்…

மேற்சொன்ன சம்பவத்துக்குப் பிறகு, இதுவரை நான் சொன்ன சம்பவங்கள் அத்தனைக்கும் ஒருவித நகைச்சுவைப் பரிமாணம் சேர்ந்துவிட்டது.  எனக்கே உள்ளூற ஒரு விதமாய் சிரிப்புப் பொங்கிக்கொண்டுதான் இருந்தது.   

ஆனால், இப்போது யோசித்தால் புரிகிறது; அவ்வளவு எளிமையான சமன்பாடுக ளின் வழியாக வாழ்க்கை நகர்வதில்லை – குறைந்தபட்சம் என்னுடைய வாழ்க்கை. பின் னே, அடுத்த நாலாவது மாதத்தில் ஆவடிக்கு அருகில், அதாவது சென்னையின் மறு கோடி எல்லைக்கு, என் வசிப்பிடத்தை மாற்றுவேன்; பெரும்பாடு பட்டு, குழந்தைகளைப்  பள்ளிக்கூடம் மாற்றுவேன்; யார்யார் காலிலோ விழுந்து  ரமாவுக்கும் எனக்கும் பணி மாற்றல் வாங்கும்வரை இரண்டு மணிநேரம் பயணம் செய்து அலுவலகம் போய்வருவோம் என்றெல்லாம் கொஞ்சமாவது எதிர்பார்த்திருப்பேனா? அல்லது இவ்வளவு சிரமங்களையும் ஏன் மேற்கொண்டேன் என்பதையாவது மற்றவர்களிடம், குறிப்பாக ரமாவிடம், சொல்லிப் புரியவைக்க முடியுமா? வழக்கம்போலவே, காரணம் தெரியாத பிடிவாதத்துக்கு மடங்கினாள் அவள், பாவம்.

அந்த நாளும் தேதியும் பசுமையாய் நினைவிருக்கிறது. 2009 செப்டம்பர் 2-ம் தேதி. புதன் கிழமை.

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே அலுவலகம் செல்லவேண்டாம் என்று திரும்பத்திரும்பத் தோன்றிக்கொண்டிருந்தது. உடல் உபாதை என்றெல்லாம் ஏதும் இல்லை. ஏனோ, எனக்குள்ளிருந்து ஒரு குரல் ‘போகாதே, ப்ளீஸ், போகாதயேன்’ என்று இறைஞ்சிக் கொண்டிருந்தது. பள்ளி நாட்களில் பள்ளிக்கூடத்துக்கும், பட்டப்படிப்பு நாட்களில் கல்லூரிக்கும் போவதற்குக்கூட இப்படித்தான் அது முட்டுக்கட்டை போடும். அதை மீறித்தான் இதுநாள்வரை வண்டி ஓடியிருக்கிறது. அபூர்வமாக ஓரிரு நாட்கள்  இசைந்துகொடுத்து வீட்டில் இருந்துவிட்டால், முற்பகல் பொழுதில் தொடங்கி, மறுநாள் பழைய நியமத்துக்குத் திரும்பும்வரை குற்றவுணர்வு ஓயாமல் பிறாண்டித் தள்ளும். அந்தக் கொடூர வதைக்கு, கிளம்பிப் போய்விடுவதே உத்தமம் என்று தோன்றும்.

            ஆனால் அன்றைக்கு வேறுமாதிரி முடிவெடுத்தேன். போதாக்குறைக்கு ரமாவையும் வற்புறுத்தி  விடுப்பெடுக்க வைத்தேன்.

            காலை ஒன்பதரை மணி இருக்கும். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். வயிறு நிறைய இட்டிலிகளை அடைத்துக்கொண்டு, சுற்றுச் சுவரையொட்டியிருந்த தென்னைமரத்தின் அருகில் நின்று புகைத்துக்கொண்டிருந்தேன். வழக்கத்தைவிட, நாய்களின் கும்மாளமும் ஓட்டமும் அதிகமாய் இருந்தது. ஒன்றையொன்று துரத்திவிளையாடும் மும்முரத்தில், ஓரிருமுறை என்மீதே வந்து மோதி விழுந்தன. தங்களில் ஒருவனாக என்னை நினைத்துக்கொள்கிறார்களோ என்று தோன்றி எனக்குள் சிரித்துக்கொண் டேன். இதை ரமாவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சிகரெட்டில் இன்னும் இரண்டு இழுப்பு பாக்கி.

            தென்னைமீது சரசரவென ஏறிப்போன மரப்பல்லிகள் இரண்டும் சடாரென நின்றன. அனிச்சையாக நாய்களைப் பார்க்கத் திரும்பினேன். தத்தமது இடத்தில் சிலை போல அமர்ந்துவிட்டிருந்தன. ஒரே திக்கில் நோக்கின. மிகப் பரிச்சயமானதொரு உணர்வு என் முதுகுத்தண்டில் உதித்து மேலேறியது – உயிருள்ள பூச்சி ஊர்ந்து செல்கிற மாதி ரி.

            அடுத்த விநாடி நடந்ததை எளிதாக ஊகித்துவிட முடியும். வீலென்ற அலறல். என்னை மறந்து மாடிப்படிகளில் நான் தாவியேறுதல். நடுக்கூடத்தில் மல்லாந்து கிடக்கும் ராவ். உலகத்துத் துக்கம் அனைத்தையும் முகத்தில் ஏந்தி, புருஷனுக்குப் பணிவிடை செய்ய அருகில் அமர்ந்திருக்கும் அவர் மனைவி.

            ஆனால், ராவ் ஏமாற்றிவிட்டார். முற்றிலும் பரிச்சயமற்ற குரலில் பேசினார் என்பதல்ல – முழுக்க முழுக்கத் தெலுங்கில் பேசினார். எச்சரிப்பதும் மன்றாடுவதும் தோல்வியின் நிராசையும் ஏமாற்றமும் விரக்தியும் என தொடர்ந்து இறங்குமுகமாகவே தொனித்த பாவங்கள் நன்றாக விளங்கின. ஆனால், வாசகங்கள் புரியவில்லை.

            ராஜசேகர்காரு… எலிகாப்டரு… நல்லமலா… துஃபானு… ஐயய்யோ…

என்று சிற்சில சொற்கள் மட்டுமே வலைக்குத் தப்பிய மீன்கள்போல வெளியே குதித்து எனக்குள் சேர்ந்தன. தலைகுனிந்தபடி திரும்பிவிட்டேன்.

            படியிறங்கும்போது ஒரு விஷயம் உறுதிப்பட்டது – அது ஏதோ தெலுங்கு நடிகரின் குரலாகக்கூட இருக்கலாம்; மிகச் சிறந்த குணச்சித்திரக் குரல் அது.

விடுமுறை நாள் முழுக்கவும் இனிதே கழிந்திருக்க வேண்டும். குழந்தைகள் இல்லாத தனிமையை நானும் ரமாவும் ஆனந்தமாய்க் கொண்டாடி முடித்த பிறகு, இதமான அலுப்புணர்வோடு தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து காஃபி குடிக்க ஆரம்பித்தோம். திடீரென்று, சிறப்புச் செய்தி ஓடத் தொடங்கியது.

            ஆந்திர முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நல்லமலைக் காடுகளில் காணாமல் போனதாம். மும்முரமாகத் தேடிவருகிறார்கள்.

            அடடே…

என்று விசனம் தெரிவித்தாள் மனைவி.             அவளுக்குத் தொலைக்காட்சி சொல்லும் செய்தி மட்டும்தான் தெரியும்; எனக்கானால், அது காணாமல் போனபோதே  தெரியும் என்பதை, மறுநாள் அதிகாரப்பூர்வ அறி விப்பு என்ன சொல்லப் போகிறது என்பதுகூட இப்போதே தெரியும் என்பதை, அவளிடம்  எப்படிச் சொல்வது?


ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

2 Replies to “முன்னுணர்தல்”

  1. Extra sensory power. என்னும் முன்னுணர்தல் ஆற்றலை உணர்வுவயப்பட்ட மனிதர்களிடையே இப்போதும் உணரப்படுகிறது. இவ்வுணர்வை சுவையாக. சுய எள்ளலோடு யுவன்சந்திரசேகரன் கதையாக்கியுள்ளார். வாழ்த்துகள். இதுவரை நானறிந்ததெல்லாம் நடப்பதற்கு முன்னறியும் ஆற்றல்தான். எனினும் யுவன் சொல்லுவது முந்தைய நூற்றாண்டுகளில் நடந்ததெல்லாம் எப்படி சொல்ல முடிகிறது என்பது கேள்வியாகிறது.

Leave a Reply to jananesanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.