குரூப்ல கும்மி

அநேகமாக நாம் அனைவரும் ( அது என்ன, அநேகமாக, கண்டிப்பாகவே) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அலைபேசி தகவல் பரிமாற்ற செயலிகளில் (வாட்ஸ்அப், டெலிகிராம்) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்புகளில் இணைக்கப்பட்டிருப்போம்.(நாமாக எங்கே சேர்ந்தோம்). தாமாக கேட்டு இணைந்த தியாகிகளும் உண்டு.

இதில் இரண்டு மொபைல் போனுடண், மேற்படி செயலி, குரூப் …. இவர்கள் தனி ரகம்.
நான் எம்.பி.ஏ படித்த ( அப்பாடா இப்போதான் கட்டின ஃபீஸ்க்கு பலன் கிட்டியது. எங்கதான் சொல்றதாம்) பேட்சைக்கொண்டு ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கப்பட்டது. கவனியுங்கள் மக்களே, கொரானா அலையில் துவங்கப்பட்ட நேற்று முளைத்த காளானல்ல எங்கள் குரூப். அதற்கு முந்தைய மூன்று வருட வரலாறு கொண்டது.

இந்த குரூப் துவங்கப்பட்டதில் ஒரு நாலு பேருக்கு( இந்த நால்வரும் அதிகப்படியான வேலை இல்லாதவர்கள். இதை விட நாசூக்காக சொல்ல முடியாது) முக்கிய பங்கு உண்டு.
குரூப் துவங்கியதிலிருந்து செய்யப்பட்ட ஒரே சாதனை, பேட்சில் படித்த அறுபது பேரில் நாற்பத்து ஏழு பேரின் மொபைல் எண்கள் சேகரிக்கப்பட்டு வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்கப்பட்டதே. மற்றபடி தினமும் எப்படியும் ஐந்து பதிவுகளையாவது இந்த நால்வரும் பதிவிடுவார்கள். அது எங்கள் உள்ளூர் மாரியம்மன் கோவில் பொங்கல் அட்டவணை, அமாவாசைக்கு எந்த வார்டில் மிண்சாரம் தடை செய்யப்படும், என்பதில் தொடங்கி இப்போது 108 வகை கொரோனா தொற்று எதிர்ப்பு கசாயத்தில் வந்து நிற்கிறது.

அவசரகால செய்திகயாக, வார இறுதி நாட்களில் லாக்டவுண் அறிவிக்கப்பட்ட போது எந்த ஏரியா கறிக்கடை எத்தனை மணி நேரம் செயல்படும் என்ற தகவல் அதிகமாக பகிரப்பட்டது.
முதலில் இந்த நால்வர் அணி பற்றி கூறி விடுகிறேன்.

வாசு தான் குரூப் அட்மின். பார்பதற்கு இன்றும் சின்னப்பையன் மாதிரி (மாதிரி மட்டும் தான்) இருக்கும் உடல்வாகு ஏதோ அவனுக்கு அமைந்துவிட்டது. அதற்கு, தான் தினமும் மேற்கொள்ளும் நடைபயிற்சிதான் காரணம் என்று கூறிவிட்டு நிறுத்தினால் கூட பரவாயில்லை, நடைபயிற்சி செய்யாதவர்கள் எல்லாம் குடும்பத்திற்கே ஆகாது என்ற ரீதியில் ஒரு சொற்பொழிவு ஆற்றுவான். சொற்பொழிவின் இறுதி பகுதி தான் அவன் நம்மை வாய்பிளக்க வைக்க உபயோகிக்கும் அஸ்திரம். இருக்கையில் இருந்து எழுந்து கிளம்ப எத்தணித்து, விரல் விட்டு எண்ணிக்கொண்டே சொல்வான், ” காலைல வாக், சாயந்திரம் வொய்ஃவோட யோகா, மாசத்துல ஒரு நாள் பெருமாள் மலை ஏறுவேன் ( எங்கள் ஊரில் மேலே பெருமாள் கோவில் உள்ள உயரமான மலை), இதுல என்னிக்காவது மழை வந்துட்டா வீட்லயே ஸ்கிப்பிங், ” என்று அவன் அடுக்கும் போது நம்மை அறியாமல் நாம் வாய் பிளந்தால், அதை ஓரக்கண்ணால் உறுதிப்படுத்திக்கொண்டு “சரி கிளம்பறேன், வீட்டுக்குள்ளயாவது நட” என்று “இனிமேலாவது குடிக்றத நிறுத்து “என்ற தொனியில் அறிவுரை கூறிவிட்டு செல்வான்.

இந்த அறிவுரை எல்லாம் நேரில் கிடைக்கும் பாக்யம் பெற்றவள் நான் மட்டும் தான் ஏனென்றால், நானும் வாசுவும் வசிப்பது ஒரே தெரு. அதனால் தான் குரூப்பில் ஏதாவது அவன் பதிவிட்டால், உடனடியாக இல்லாவிட்டாலும் அன்று மாலைக்குள் நேரில் வந்து “பாத்தயா” என்று, எப்போதுமே சுருக்கமாக பேசுபவன் போல ஆரம்பித்து, போன முறை அவன் நேரில் வந்து போனதற்கும் இப்போதைக்கும் இடையே வந்த நாட்களில் யார் யார் என்ன என்ன பதிவிட்டார்கள் என்பதை “ஆமா பார்த்தேன்” என்று நான் சொல்வதை நன்றாக கேட்ட பின்னரும், “நீ பாத்தன்னு சொன்னா, நான் ஒரு பெரிய மனுசன் அப்புறம் என்னத்துக்கு, வேலையில்லாமையா வர்றேன்” என்று நினைப்பானோ என்னவோ. அத்தனை பதிவுகளையும் பரீட்சை ரிவிசன் மாதிரி என்னை ரிவைஸ் பண்ண வைத்துவிட்டு தான் செல்வான்.

இந்த ரிவிசன் காட்சியை யாராவது பார்த்தால் ” இந்த மக்குக்கெல்லாம் (லேறு யார், நான் தான்) இவர் எப்படி தான் அலைபேசியிலேயே கணக்கு சொல்லிக்கொடுக்கிறாரோ பாவம்” என்று நினைப்பார்கள்.

அவன் அலைபேசியை அவன் மடி மீது வைத்துக்கொண்டு, என் அலைபேசியை வாங்கி ஒவ்வொரு பதிவாக நகர்த்திக்கொண்டே வருவான். தப்பி தவறி நான் எந்த பதிவையாவது நீக்கி இருந்தால் ” அது எதுக்கு அழிப்ப” என்று கேட்டுக்கொண்டே அவன் அலைபேசியிலிருந்து மறுபடி அந்த பதிவை அனுப்புவான். கேட்கும் போதே மூச்சு முட்டுதா, எனக்கும் தான்.

இப்போது நீங்கள் கேட்க வேண்டும், அவ்வளவு நேரமிருக்கா அவருக்கு என்று. இருக்கிறதே. அவன் அப்பா கட்டிக்கொடுத்திருந்த எட்டு வீட்டு வாடகை, கோடவுன் வாடகை, வட்டி என்று வருமானத்திற்கு குறைவில்லாதவன். அவனுக்கு இருக்கும் பெரிய வேலை, பள்ளி ஆசிரியையான அவன் மனைவிக்கு காலையில் ஜூஸ் போட்டுக்கொடுப்பது, பள்ளி வாகனத்தில் அவர் ஏறும் வரை உடன் நிற்பது, மாலையில் அழைத்து வருவது, இவை மட்டுமே. அதனால் இந்த குரூப் என்று மட்டுமில்லை, அவன் படித்த பள்ளி குரூப், வாக்கிங் குரூப், அடுத்தது தான் முக்கியமான குரூப் – அவன் மனைவி பணிபுரியும் பள்ளியின் சக பெண் ஆசிரியைகளின் கணவர்களை ஒன்று சேர்த்து ஒரு குரூப் (இந்த குரூப்புக்கு என்ன பெயர் வைத்திருப்பார்களோ தெரியவில்லை) என்று விரல் தேய சேவையாற்றுபவன்.

என் அக்காவும் ஆசிரியைதான் ஆனால் வாசுவின் மனைவி பணிபுரியும் பள்ளி அல்ல. எனக்கு குரூப் பதிவுகளின் ரிவிசன் நடத்தும் நாட்களில், என் அக்காவிடம், “இந்த வாரம் தமயந்தின்னு புது மேத்ஸ் டீச்சர் உங்க ஸ்கூலுக்கு வந்திருக்காங்க, இந்த வருசம், (வேறு ஒரு பள்ளியின் பெயரைச் சொல்லி)….அந்த ஸ்கூல்ல சம்பளம் ஏத்தல, தமிழ் டீச்சர் இருந்தா சொல்லுங்க இங்க கேட்கறாங்க (அவன் மனைவி வேலை பார்க்கும் பள்ளியைக் குறிப்பிட்டு) என்று 96 படத்தில் அன்னிக்கு நீ கட்டியிருந்தது ராமர் பச்ச கலர் புடவை, நீ எடுத்தது தமிழ், உங்க அப்பா உன்ன சேர்த்தது பிஸிக்ஸ்ல என்று விஜய் சேதுபதி த்ரிஷாவிடம் அடுக்குவது மாதிரி அடுக்குவான். கடுப்பாகி என் அக்கா வாசுவை பார்க்க, டெக்னாலஜி புரியாத என் அம்மா, “ஏப்பா சுமதி தான ஸ்கூல்ல வேல பாக்குது” என்று குழம்பிப்போய் கேட்பார்.(சுமதி, வாசுவின் மனைவி)

அடுத்து குரு. இவர் தான் எங்கள் பேட்சில், பொறியியல் படித்துவிட்டு எம்.பி.ஏ வில் சேர்ந்த இருவரில் ஒருவர். இவர் பொறியியல் படித்தது அ…..என்று துவங்கும் (கல்லூரியின் பெயரைப்போட்டால் எனக்கு தர்ம அடி நிச்சயம்) பல்கலைகழகத்தின் கீழ் ஒரு கல்லூரியில், ஆனால் ” என்னத்த போ அண்ணா யனிவர்சிட்டியில படிச்சுட்டு இங்க வந்து மாட்டிகிட்டேன் என்று சொல்லும் வாய்ப்பு இல்லாததால்,. ஏய் பட்டதாரி பொடுசுகளே, பொறியியல் படித்துவிட்டு எம்.பி.ஏ படிக்கும் நானும் கலை அறிவியல் படித்துவிட்டு வந்த நீங்களும் ஒன்றா” என்ற ரீதியில் இன்றுவரை கெத்துகாட்டுபவர். படிக்கும் காலத்தில் குழு விவாதங்களிலும், அது மார்க்கெட்டிங் வகுப்பில் நடக்கும் குழு விவாதம் என்றாலும், பொறியியலை நுழைத்து, கோட்லர் ( இவர்தான் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் புத்தகத்தை எழுதியவர். ஞாபகத்தில் எனக்கு இருக்கும் ஒரே பெயர் இதுதான்) எப்படி பொறியியலுக்கும் மார்க்கெட்டிங்க்கும் உள்ள தொடர்பை நிறுவுகிறார் ( சத்தியமாக கோட்லரே ஒப்புக்கொள்வார், தான் அப்படி எதையும் நிறுவ முற்படவில்லையென்று) என்று தானே ஒரு தலைப்பை உருவாக்கி, விரிவுரையாளருக்கும் தலைப்பு யோசிக்கும் சிரமத்தை தராமல் , எங்களை பேச சொல்லுவார். ரஜினிகாந்த் பற்றி பேச சொன்னாலே இரண்டு வரிக்கு மேல் ஆங்கிலத்தில் பேச முழிக்கும் எங்களுக்கு இப்படி தலைப்பு கொடுத்தால், குருவிற்கு அடிக்கும் லக். நாங்கள் அவர் வாயையே பார்க்க அவர் ஏதேதோ பேசி குழு விவாதத்தை சோலோவாக நிறைவு செய்வார்.எங்கள் விரிவுரையாளரும் பலமாக தலையாட்டுவார் இல்லையென்றால் அடுத்த தலைப்பிற்கு குரு செல்லவிடமாட்டார்.

குரு எப்போதும் க்ரூப்பில் தன் சொந்த கருத்து எதையும் பதிவிடமாட்டார். எங்கள் யாருக்கும் பெரிதாக நாட்டமில்லாத அட்டகட்டியில் மட்டும் காணப்படும் பழுப்பு நிற வாய் கொண்ட குரங்கு பற்றியோ, மைக்கேல் ஷூமேக்கரின் கார் என்ஜின் திறன் பற்றியோ பகிரப்பட்ட (அவருக்கு அனுப்பும் ஸ்லீப்பர் செல் யாரென்றுதான் தெரியவில்லை.) தகவலை பதிவிடுவார்.
நாங்கள் யாரும் வாயே திறக்கமாட்டோம் ஆனால் ரகு மட்டும் ” மச்சி அந்த காரோட ரேட் என்ன” என்று மைக்கேல் ஷூமேக்கரின் கார் விலையை கேட்பான்..
குரு, துணிபதனிடும் தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படும் மாசு கட்டுபாட்டு இயந்திரங்களை விற்பனை செய்யும் கம்பெனியில் பணிபுரிகிறான். இன்று வரை அக்கம்பெனி குறித்தோ, தன் பணி குறித்தோ எதுவமே கூறியதில்லை. அதைப்பற்றி எவ்வளவு முயன்றும் என்னால் துப்பு துலக்கமுடியவில்லை.

இனி ரகுவிற்கு வருகிறேன்.

இவர் தான் அணியின் மூன்றாமவர். இவருக்கு குரு என்று பெயர் இருந்திருக்கலாம். இவர் ஆணைப்படிதான் வாசு இயங்குவான். காரணம் ரகு ஒரு தொழிலதிபர். கோயமுத்தூரில் உள்ள ஒரு பெரிய ஐவுளி உற்பத்திக் குடும்பத்தில் வாக்கப்பட்டு போனவன்.

மொத்த க்ரூப்பிலேயே, இவன்தான் கொஞ்சம் (கொஞ்சம்னா கொஞ்சமில்லை, எனக்கு இருக்கற துளியூண்டு பொறாமையில் சொல்லப்படும் கொஞ்சம் அது) வசதியான வீட்டில் வாக்கப்பட்டவன்.
வாசுவின் ரகு விசுவாசத்திற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். எங்கள் பேட்ச் ரவியின் தந்தை சமீபத்தில் காலமானார். ரவி இருப்பது எங்கள் ஊரில், ஆனால் கூட்டம் சேரக்கூடாது என்று கூறப்பட்டதால் இரண்டு நாள் கழித்து துக்க வீட்டிற்கு நானும் வாசுவும் சென்றோம். என் வீட்டில் இருந்து இருவரும் சேர்ந்து கிளம்பினோம். ” சீக்ரம் வா, உள்ளூர்ல இருந்துகிட்டு போக மாட்டீங்ளாடானு ரகு சத்தம் போடறான்” என்று என்னிடம் சொல்லிவிட்டு, குரூப்பில். “கிளம்பிட்டோம்” என்று ஒரு பதிவும் போட்ட பின் தான் வண்டியை எடுத்தான். ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் தான் ரகு வசிக்கிறான் என்றாலும் அவன் வரவில்லை. தன் மகளுக்கு வாங்கப்பட்ட தாய்வாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் தொட்டியை பொருத்த அன்று ஆட்கள் வருவதால் அவனால் வர முடியவில்லை என்ற தகவலை துக்க வீட்டில் எல்லாருக்கும் சொல்லிவிட்டோமா என்பதை தலைகளை எண்ணி கனக்கு பார்த்துவிட்டுதான் வாசு அமர்ந்தான்.
இங்க வெளிச்சம் இருக்கா, அங்க நகரு என்று இங்கும் அங்கும் மாறி மாறி உட்கார்ந்து பார்த்தவன் அடுத்து போட்டது ரகுவிற்கு வீடியோகால்.

” கவலப்படாத ரவி, வாசு பாத்துக்குவான்” என்று முப்பது விநாடியில் ரவியிடம் துக்க விசாரிப்பை ரகு முடிக்க, அதற்கப்புறமும் பத்து நிமிடம் வாசு ரகுவிடம் தாய்லாந்து மீன் தொட்டி பத்திரமாக இறக்கப்பட்டதா என்று உறதி செய்து கொண்டபின் இணைப்பை துண்டித்தான்.
துக்க வீட்டில் இருந்த ஆச்சி ” ரவி கூட படிச்ச பசங்க வெளிநாட்ல இருந்து எல்லாம் விசாரிக்கறாங்க பாரு” என்று ரவியை பெருமையாக பார்த்துக்கொண்டு இன்னொரு ஆச்சியிடம் கூறினார். வழக்கம்போல அதற்கும் நான் திரு திரு என்று விழித்து வைத்தேன்.

நான்காம் தூண் தாசில்தார் மகன் சுப்பு. யாராவது ” அப்புறம் நீங்க என்ன செய்றீங்க” என்று கேட்டால், “எங்க அப்பா தாசில்தாருங்க” என்பான்.படிக்கும் காலத்தில் சுமாராகப் படிப்பான் ஆனால் ஒரு கலாச்சார காவலன். நாங்கள் படிக்கும் சமயத்தில் நெற்றியில் சிறிய பொட்டு வைப்பதே பேஷன். வகுப்பிலிருந்த நான்கு பேக்கு, சின்ன சைஸ் பொட்டுகளை, (என்னையும் தான்) அழைத்து நாங்கள் சின்னதாக பொட்டு வைப்பதால் தமிழ் கலாச்சாரம் எப்படி கெடுகிறது என்று உரை நிகழ்த்தியவர். கல்லூரி இறுதி நாளன்று நடந்த பிரிவு உபசார விழாவில் லைட்டாக சரக்கை அடித்துவிட்டு ( அது கலாச்சாரத்தில் சேராது) ஆங்கிலத்தில் இரண்டு வருடங்களாக வகுப்பு நடத்திய விரிவுரையாளர்களை சரமாரியாக திட்டிய தூயவர்.

குரூப்பில் யாரையாவது திட்டும் தொனியில் மட்டுமே பதிவிடுவார். அவரை விட்டு விட்டு வாசு எந்த நிகழ்வையும் ஏற்பாடு செய்ய முடியாது.செய்தால் அதற்கும் வசை உண்டு.

இப்படி குறைந்தபட்ச பரபரப்புடன் ஏதோ போய்க்கொண்டிருந்த எங்கள் குரூப்பில், சென்ற வருட துவக்கத்தில், கொரோனா தீவிரம் அடையும் முன்பு,

முதல் முறையாக எல்லோரும் நேரில் சந்திக்கலாம் என்று ஒரு பேச்சு துவங்கியது.

ஆரம்ப உற்சாகம் வெகு அமர்க்களமாக இருந்தது.

சந்திப்பு நடத்தப்படும் இடம், ஒநு நாள் சந்திப்பா அல்லது இரண்டு நாள் சந்திப்பா என்பதற்கான வாக்கெடுப்பு, எங்கள் ஹெச்சோடிக்கு ஏதாவது சிறப்பு பரிசு கொடுக்கலாமா (வேண்டாம் என்றவர்களே அதிகம்) என்று ஒரு நாளுக்கு இருபது முப்பது தகவல் பரிமாறப்படும்.

இறுதியில் பொள்ளாச்சியில் ஒரு ரிசாட்டில் இரண்டு நாள் சந்திப்பு என்று முடிவு செய்யப்பட்டது.
அதில், இரண்டு நாள் என்பதால் தத்தம் மனைவி, கனவர், குழந்தைகளையும் அழைத்து வரலாமா – கருத்தை தெரிவியுங்கள் என்று வாசு பதிவிட்டவுடன் அடுத்த நொடி, யாரும் “ஆம் அது தான் பரவாயில்லை” என்று சொல்லிவிடுவார்களோ என்று “இது நம் பேட்ச் மீட், பேமிலி எதுக்கு” என்று முந்திக்கொண்டு நான் பதில் பதிவிட்டேன். யாராவது இப்படி சொன்னால் நாமும் சொல்லலாம் என்று காத்திருந்த அனைவரும் “ஆமாம் அது தான் பரவாயில்லை” என்று என்னைக் காப்பாற்றினார்கள்.

குடும்ப குத்து விளக்கு வாசு “பேமிலி கெட்டுகெதர் தனியாக ஏற்பாடு செய்யப்படும் ” என்று அறிவித்தான். செலவு தொகையை ஒட்டி எல்லோரும் பணம் அனுப்பியபின் தான் வந்தது கொரோனா, பிசுபிசுத்தது சந்திப்பு.

இங்கு தான் நால்வர் அணி தங்கள் கடன் பணி செய்து கிடப்பதே என்று களமிறங்கியது. சந்திப்பு திட்டம் கைவிடப்பட்டதால் தூங்கி வழிந்த குரூப்பை உற்சாகப்படுத்த, தினமும்
வாசு. பால் வாங்கி வருகிறானோ இல்லையோ ஒரு ரோஜா பூ, சூரியன், பட்டாம்பூச்சி என்று அவனுக்கு அவன் பள்ளி குரூப்பிலிருந்து வந்த குட்மார்ணிங் மெஸேஜை காலை ஐந்தரை மணிக்கே தட்டி விடுவான்.(முதல் நாள் முதல் காட்சி போல, இது எல்லா நாளும் முதல் பதிவு வியாதி)
இது போதாதா. “வாசு திஸ் மெஸேஜ் வாஸ் ஏ புஷ் ஃபார் மை டே” என்று குரு ஆரம்பிக்க, “யெஸ் மச்சி” என்று அடிபொடிகள் அள்ளி விடுவார்கள்.

நாற்பத்தேழு பேரில் எப்படியும் ஒருவருக்காவது பிறந்தநாள் வநதுவிடும்.
கேக்கும் கேண்டிலுமாக பதிவுகள் பறக்கும்.
இது தினசரி நடப்பது. ஸ்பெஷல் எபிஸோட் சில உண்டு.

நம் தொழிலதிபர் ரகு ” என் தொழிலில் பத்து வருடம் நிறைவு செய்தமைக்கு எனக்கு நானே பரிசளித்துக்கொள்கிறேன்” என்று ஒரு மெர்சிடீஸ் பென்ஸ் கார் முன்பு நிற்கும் படத்தை குரூப்பில் தட்டிவிட, வயிற்றெரிச்சலை மறைத்துக்கொண்டு “கன்கிராட்ஸ்” என்று குரூப் குதூகலித்தது. பென்ஸ் கார் முன்பு நின்ற அந்த புகைப்படத்தில் அவன் அணிந்திருந்த வெல்வெட்டில் காலர் வைக்கப்பட்ட சட்டையைக்கூட மன்னித்துவிடுவேன் ஆனால் என்னால் அந்த குளிர்கண்ணாடியைத்தான் சகிக்க முடியவில்லை.

பென்ஸை மிஞ்சும் அடுத்த எபிஸோட் கேரளாவில் இருந்து வந்தது( எங்கள் பேட்ச்சில் பன்னிரண்டு கேரளா மாணவர்கள் உண்டு).

பிஜூ, கோர்ஸ் முடிவில் நாங்களே காசு போட்டு ப்ரிண்ட் செய்த ஒவ்வொருவரின் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, பிறந்த தேதி, முகவரி, ஹாபி இவை அடங்கிய புக்கை ஒவ்வொரு பக்கமாக படம் எடுத்து தினம் ஒருவரது என்று அறுபது நாள் படம் ஓட்டினான்.அந்த ப்ரிண்டே கொஞ்சம் சுமார், அதை மொபைல் ஃபோனில் படம் பிடித்துப்போட்டால் எப்படி இருக்கும். இந்திராவின் போட்டோ போட்ட அன்று, கவின், @பூங்கோதை என்று போட்டு “நீ இன்னும் அதே அட்ரஸ்ல தான் இருகுகிறாயா” என்று கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை.

இதில் இந்திரா பற்றி சொல்லிவிடுகிறேன். ஒரு அரசியல் பிரமுகரின் மகள் அவர். முகநூலில் சமூக அக்கறை சார்ர்த கருத்துக்களாக பதிவிட்டு, தன் அரசியல், சமூக அறிவை உலகுக்கு உணர்த்திக்கொண்டு அரசியலில் அடி எடுத்து வைக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். முகநூல் பக்கத்தில் இருக்கும் புகைப்படத்தில் கூட கழுத்தை முழுவதும் மறைத்த, முழுக்கை வைத்த ஜாக்கெட் அணிந்த புகைப்படம் தான் காணக்கிடைக்கும். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த போதும்
இம்முறை அவரின் தந்தைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க படவில்லை. அந்த தகவலை சுப்பு ஒரு கேலிச்சித்திரம் போட்டு குரூப்பில் பதிவிட, இந்திரா குரூப்பில் இருந்து விலகினார்.

வாசு, இந்திராவிற்கும் சுப்புவிற்கும் சமாதானம் செய்து வைத்து மீண்டும் இந்திராவை இணைத்தபின்தான் தூங்கினான்.

இது போல பல விலகல்களும், இணைப்புகளும் அவ்வப்போது நடக்கும்.

முக்கால்வாசிப் பேருக்கு திருமணமாகி பள்ளி செல்லும் பிள்ளைகள் இருந்தார்கள்.
குரூப் என்னவோ எம்.பி.ஏ குரூப் தான் ஆனால் இந்த கொராணோ சமயத்தில் பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்பு போல அவர்களின் கதை, படம், பாட்டு, கராத்தே என்று சரமாரியாக பதிவிடப்பட்டு இன்னும் குடும்ப வாழ்வில் நுழைய காத்திருக்கும் சிலரின் “ஸ்ப்பபபபாபா” க்களை சம்பாதித்துக்கொண்டார்கள் எங்கள் பேட்ச் குடும்பத்தலைவிகள்.

பாதிக்கு பாதி குழந்தைகள் யூட்யூப்பில் சேனல் நடத்தினார்கள். தாய்மார்கள் அந்த சேனல் லிங்கை குரூப்பில் பதிவிட்டு வாரம் ஒருமுறை எத்தனை பேர் பதிவு செய்துள்ளோம் என்று வேறு கணக்கெடுப்பார்கள்

அது என்னவோ நான் பார்த்த காணொளி அனைத்திலும் முக்கால்வாசி பிள்ளைகள் உயரவாக்கில் வளர்வதற்கு பதில் அகலவாக்கில் வளர்ந்திருந்தார்கள்.

இது ஒரு புறம் நடக்க, தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பணி நிமித்தமாக வெளிநாட்டில் இருக்கும் சிலரும் குரூப்பில் அடக்கம்.இவர்கள் எப்போதுமே ” இங்கெல்லாம் ….” என்று ஆரம்பித்தே பதிவிடுவார்கள். அது பருப்பு குழம்பு வைப்பது பற்றி இருந்தாலும் கூட.
மூன்று தலைமுறைக்கு முன்னாடி தமிழ்நாட்டை விட்டுச்சென்றவர்கள் மாதிரி ” எந்த எந்த கட்சி போட்டி போடறாங்க”, “பணம் வாங்கிட்டு ஓட்டு போடக்கூடாது”, ” எந்த கட்சி வந்தாலும் இப்படிதான் இருக்கும்” என்று தேர்தல் நேர கருத்து கந்தசாமி ஆவார்கள்.

இதில் ஒரு படி மேலே சென்று, அமெரிக்க தேர்தல் நடைமுறை என்று ஒரு கட்டுரையை சுஜா பதிவிட, “வெரி இன்ஃபர்மேட்டிவ்” என்று ரகு பதில் போட, கட்டுரையை படித்தவன் படிக்காதவன் என்று வேறுபாடு இல்லாமல் பலரும் கட்டைவிரலை உயர்த்தினார்கள். ஏனென்றால் பதிவிட்டது சுஜாவாயிற்றே (மீரா ஜாஸ்மின் சாயலில் இருப்பார்). குரூப்பில் இருந்தவர்களில் பதினெட்டு பேர், படிக்கும் போது அவளுக்கு காதல் கடிதம் கொடுத்தவர்கள்.சுஜாவை குரூப்பில் இணைக்கும் முன் அவள், அந்த பதினெட்டு பேரும் குரூப்பில் உள்ளார்கள் என்பதை வாசுவிடம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்பே நம்பர் தந்தாள்.

முத்தாய்ப்பாக வாசு வேட்யாளர் பட்டியல், வாக்காளர் எண்ணிக்கை என்று தொகுதி வாரியாக விபரம் பதிவிட்டான்.

யாருக்காவது பூத் ஸ்லிப் இல்லையென்றால் அதையும் வாங்கி தந்திருப்பான்.
தேர்தலன்று, வேறு என்ன ஓட்டளித்தபின் மை தடவப்பட்ட விரல் புகைப்படம் தான். இதில் தன் ஆளின் விரல் மட்டும் கண்டு திருப்தியுராத ஒரு புண்ணியவான், ” ஏன் நாம் எல்லோரும் முழு புகைப்படம் பதிவிடக்கூடாது” என்று கேட்க மறுபடியும் மை விரல்கள் முழு உருவங்களாக வலம் வந்தது.

இபபொழுது லேட்டஸ்ட், கொரோனா வேக்சின். வாசு போட்ட பதிவின் தலைப்பு “வேக்சின் கிட்”
வேக்சின் போட போகும் போது நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை என்று அடையாள அட்டை, தண்ணீர் பாட்டில், மாஸ்க், டிஷ்யு, என்று ஒரு லிஸ்டை பதிவிட்டான். இதைப் பார்த்தால் சமூக இடைவெளி, முக கவசத்திற்கு அடுத்து அரசாங்கம் இந்த லிஸ்டையும் கொடுக்கலாம்.
முத்தாய்ப்பாக கடந்த ஞாயிறன்று ஜூம் செயலி வழி கூடுகை ஏற்பாடானது. அங்கு இங்கு தெரிந்த இளநரையை ( அட இளநரை தாங்க) மறைத்து, கூடுகையில் இணைவதற்கு முன் இரண்டு செல்பி எடுத்து பார்த்து, மற்றொரு முறை லிப்ஸ்டிக் த (ஏன் திரைப்பட இயக்குனர் தான் லுக் டெஸ்ட் எடுக்கனுமா) கண்ணாடியில் உறுதிப்படுத்திக்கொண்டு இணைந்தேன். புது வகை வணக்கம் மாதிரி “அப்டியே இருக்க” என்று எல்லோரும் ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டோம்.

இப்பதான் யோகா முடிச்சேன் என்று வாசு துவங்கினான், அரசாங்க பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்க தன் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தயாரித்த முப்பது துணி பைகளை ( முப்பதே முப்பது) வழங்க முடியாமைக்கு ஏதோ அவசரத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுக்க முடியாமல் போனது போல ரகு அங்கலாய்த்தான், “சும்மா உங்களுக்கு காட்றேன்” என்று ஒலி நாடா வெளியிடும் பாவணையில் பையைக் காட்டினான்.குழந்தைகளுக்கு இணையவழி நடத்தப்படும் வகுப்பு எப்படி கலாச்சாரந்நை பாதிக்கும் என்று சுப்பு துவங்கிய உடனேயே எனக்கு விழி பிதுங்கியது. அதே சமயத்தில் கையில் அவிச்ச ஒரு முழு முட்டையை வைத்து கடித்தபடியே கணினி திரைமுன் இந்திராவின் மகன் வர, முட்டையையும் பையனையும் சுப்பு ஏற இறங்க பார்க்க, இந்திரா ” சரி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு, அடுத்தவாட்டி பேசலாம்” என்று முதல் ஆளாக வெளியேறினார். இதற்குள் ஒரு மணி நேரம் ஓடி விட அவரவர் செய்யும் வேலை, குடும்பம் பற்றி ஒரு அலசு அலசி விட்டு சொல்லிவைத்த மாதிரி கூடுகையில் இணைந்த முப்பத்தேழு பேரும் கொரோனா சூழ்நிலை சற்று மாறியபின் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்து கலைந்தோம். இந்த முறை ராசி கருதி பொள்ளாச்சியை, கோவையாக மாற்றிக்கொண்டோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.