ரசிக’மணி’கள்

கான கலாதரர் மதுரை மணி ஐயர்.

 கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் பெயர் தெரிந்திருக்கும்.

கர்நாடக சங்கீதத் துறையில் பல விசேஷமான பட்டங்களுண்டு. அந்தப் பட்டங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேலான கலைஞர்களை கௌரவிக்கப் பயன்பட்டிருக்கும். ஆனால் ‘கான கலாதரர்’ என்கிற பட்டம் மணி ஐயருக்கு மட்டுமே உரியவொன்று.

ஏன் அந்தப் பட்டம் பிரத்யேகமான ஒன்றாய் இருந்தது என்கிற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்துள்ளது. எதேச்சையாக ஒருமுறை பேராசிரியர்  பசுபதியின் வலைப்பதிவில் அதற்கான விடை கிடைத்தது. 1943-ல் வெளியான சுதேசமத்திரனிலிருந்து ஒரு செய்திக் குறிப்பை அவர் பகிர்ந்திருந்தார்.

அந்தக் குறிப்பில், ‘தஞ்சைவாசிகள் சார்பாக’ வழங்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. மணி ஐயருக்கு, மணி ஐயரின் ரசிகர்களால் வழங்கப்பட்ட பட்டத்தை இன்னொருவர் எப்படிப் பெற முடியும்?

இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் துலக்கிப் பார்த்தால், மணி ஐயருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் இருந்து வரும் தனித்துவமான உறவை உணர்ந்துகொள்ள முடியும்.

மேற்சொன்ன வரியில் ‘இருந்து வரும்’ என்கிற சொல்லாட்சியை அதன் அர்த்தமுணர்ந்துதான் சொல்லியுள்ளேன்.

தன் இளமைக் காலத்தைப் பற்றி மணி ஐயரே பேசியுள்ள வானொலி நேர்காணலொன்று அதிர்ஷ்டவசமாய் இன்றும் கேட்கக் கிடைக்கிறது. அதில் தன் தொழில் முன்னேற்றத்தைப் பற்றி சொல்லும்போது (நினைவிலிருந்து எழுதுகிறேன்), “என்னுடைய சித்தப்பா மதுரை புஷ்பவனம் என்பதால், என் பெயரை யாராவது சிபாரிசு செய்தாலே எனக்குக் கச்சேரி வாய்ப்பு கொடுக்க சபைகள் முன்வந்தன. வந்த வாய்ப்புகளில் ஒழுங்காகப் பாடினால் மட்டுமே போதுமானதாக இருந்ததால் தொழிலில் முன்னேற அவ்வளவு சிரமமிருக்கவில்லை.”, என்று கூறியுள்ளார்.

அவர் சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்வதைவிட, அவருடைய தன்னடக்கத்துக்கான எடுத்துக்காட்டு என்று கொள்வதே சரியென்று எனக்குப்படுகிறது. முதலில், கிடைத்த வாய்ப்புகளில் “ஒழுங்காகப்” பாடுவது அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன? அதைக் கூட தள்ளுபடி செய்தாலும், வரலாற்றுப்பூர்வமாக அணுகும்போது இன்னொரு விஷயமும் புலப்படுகின்றது.

மணி ஐயர் வளர்ந்து வந்த சமயங்களில் வாழ்ந்த ரசிகர்களின் நினைவுப் பதிவுகளையும், அந்தச் சமயத்தில் வெளியாகியுள்ள பத்திரிகை குறிப்புகளையும் வைத்துப் பார்க்கும் போது – சிறு சிறு துண்டுகளாய் ராகத்தை வளர்த்து, கச்சேரியில் நிறைய அபூர்வ ராகங்களுக்கு இடமளித்து, மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர் பாணியில் விஸ்தாரமாய் ஸர்வலகு ஸ்வரங்கள் பாடிய மணி ஐயரின் பாணி பண்டிதர்களைப் பெரிதும் கவரவில்லை என்றே தெரிய வருகிறது.

பண்டிதர்களைக் கவரவில்லையே தவிர 1920-களின் கடைசியிலிருந்தே ரசிகர்களை அந்தப் பாணி கட்டிப்போட்டது. மணி ஐயரை நினைவு கூர்ந்து சங்கீத கலாசாரியர் எஸ்.ராஜம் என்னிடமொருமுறை, “கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் வீட்டில் நடந்த விழாவில் (மகனின் பூணல் என்று சொன்னதாய் நினைவு) நிறைய பெரிய கச்சேரிகள் ஏற்பாடாகியிருந்தன. தெருவை அடைத்து பந்தல் போட்டு ஆயிரக் கணக்கில் ரசிகர்கள் குழுமி கச்சேரிகள் கேட்டனர். அந்த வரிசையில் இளம் மணி ஐயரின் கச்சேரியும் ஏற்பாடாகியிருந்தது. அன்று அந்தக் கச்சேரியில் மணி ஐயர் பாடிய ஸ்வரங்களுக்கு ரசிகர்கள் ஓயாமல் கைதட்டிக் கொண்டே இருந்தனர். அன்று ரசிகர்களுக்கு மத்தியில் உயர்ந்த மணி ஐயரின் கொடி கடைசி வரை இறங்கவேயில்லை.”, என்று கூறியிருக்கிறார்.

சபைகள் பண்டிதர்களுக்காக நடத்தப்படுபவையல்ல. அங்கு ரசிகர்களின் ஆதரவுக்கே முதலிடம். 1930-களில் மணி ஐயரின் புகழ் வளர வளர,  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இத்தனை ரசிகர்கள் குழுமும் ஒருவரின் கச்சேரியை பண்டிதர்கள் அமர்ந்து தயாரிக்கும் கச்சேரி அட்டவணையிலிருந்தும் விலக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. காலப்போக்கில் பண்டிதர்களும் மறுக்க முடியாத நிலை ஏற்பட்டது என்பது வேறு விஷயம்.

இவை எல்லாம் சேர்ந்து மதுரை மணி ஐயருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமிடையில் ஒரு விசேஷமான பந்தத்தை உருவாக்கியது. கச்சேரிக்குக் கச்சேரி அவரைத் தொடர்ந்து வந்த ‘கபாலி’, ‘காண கண்கோடி’, ‘வெள்ளைத் தாமரை’, ‘கந்தன் கருணை’ சீட்டுகளைக் கண்டு அலுக்காமல் பாடியதும் இந்த உறவின் ஒரு வெளிப்பாடே (இது தொடர்பாக சுப்புடு கணையாழியில் எழுதியுள்ள கட்டுரை நினைவுக்கு வருகிறது). இன்னொரு வகையில், மணி ஐயரின் கச்சேரிகளில் அவருடைய வித்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய தருணங்களில் கூட தன் ரசிகர்களையும் கையோடு இழுத்துச் சென்று உயரங்களை அவர்களும் தரிசிக்க வேண்டுமென்பதையும் முக்கியாமாகக் கருதினார் என்பதை அவர் இசைப் பதிவுகளும், அவருடன் பழகியவர்களின் பதிவுகளும் தெரிவிக்கின்றன.

கச்சேரி மேடையைத் தாண்டியும், “நம்ப மணி ஐயர்” என்று உரிமையுடன் அவரை ரசிகர்கள் அணுகக் கூடியவராகவும் மணி ஐயர் இருந்துள்ளார். ரசிகர்களின் வீட்டு விசேஷங்கள், ஊரில் நடக்கும் தேங்காய் மூடி கோயில் கச்சேரிகளென்று எதற்கும் தயங்காது அவரை அணுக முடியுமென்பதால் அவருடைய கச்சேரி நடக்காத ஊரே தென்னகத்தில் இல்லை என்று கூட சொல்லலாம். (இந்த விஷயத்தை ‘நானும் மதுரை மணி ஐயரும் பாடாத கோயில்களே இல்லை’ என்று மதுரை சோமு ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார்.)

கடந்த இருபது ஆண்டுகளில் நான் பல மணி ஐயர் ரசிகர்களைச் சந்தித்துள்ளேன். அந்த அனுபவங்களைத் திரட்டிப் பார்க்கும்போது, மணி ஐயரால் இணைந்தவர்களை ’ரசிகர்கள் கூட்டம்’ என்று குறிப்பிடுவதைவிட ‘மணி ஐயர் குடும்பம்’ என்று குறிப்பிடுவது சரியாக இருக்குமோ என்று தோன்றியது. (திருச்சியில் மணி ஐயரின் நண்பர்கள் கூடும் இடத்தை ‘மணி மண்டபம்’ என்று திருவாலங்காடு சுந்தரேச ஐயர் பெயரிட்டது போல).

பாடகர்/ரசிகர் உறவைத் தாண்டி மணி ஐயரால் வேலைவாய்ப்பு, வீடு வாங்க உதவி, சிக்கலான சூழலில் பண உதவி என்று பெற்ற ரசிகர்களை நான் சந்தித்ததுண்டு. இதுவொரு வகையில் நான் எதிர்பார்த்தவொன்றுதான். இந்தக் குழு இயங்கும் விதத்தில் நான் எதிர்பாரா தளமும் ஒன்றுள்ளது. மணி ஐயரின் நேரடி தொடர்பில்லாமலேயே, அவரிடைய ரசிகர்கள் ஒருவருக்கொருவர் நல்ல குடும்ப உறவினர் (நல்ல என்பதை அழுத்திச் சொல்லிக் கொள்கிறேன்) போல அன்யோன்யத்துடன் – மணி ஐயர் இருந்த போதும்/ இன்று இல்லாத போதும் – பழகி வந்ததே/வருவதே அந்த எதிர்பாரா விஷயம்.

கரோனாவுக்கு முந்தைய சமயங்களில் சென்னையில் மாதம்தோரும் நடந்து மணி ஐயர் ரசிகர்கள் கூட்டத்துக்கு நீங்கள் ஒருமுறை சென்றிருப்பீர்களெனில் நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள். ரசிகர்களே தங்கள் கைக்காசை செலவு செய்து, ஓர் அரங்கத்தை வாடகைக்கு எடுத்து, குழுமும் நூற்றுக்குக் குறையாத ரசிகர்களுக்கும் தேநீரும், சிற்றுண்டியும் ஏற்பாடு செய்து – இரண்டு மணி நேரத்துக்கு நல்ல ஒலிபெருக்கியில் கச்சேரிப் பதிவுகளை மாதம் தவறாமல் கேட்டு மகிழும் வைபவம் வேறு எந்த கர்நாடக சங்கீத வித்வனுக்கும் நடப்பதாக (எனக்குத்) தெரியவில்லை.

இந்த மாதாந்திர நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் எனக்கு சிலமுறை வாய்த்துள்ளன. அப்போதெல்லாம் அங்கு மணி ஐயர் அமர்ந்து பாடுகிறார் என்று எண்ணம் தோன்றியதுண்டு. க்ஷண நேரத்தில் தோன்றி மறையும் மாயத் தோற்றமாக இதைச் சொல்லவில்லை. நல்ல விழிப்புடன் உணரக்கூடிய ஆத்மார்த்தமான அனுபவமாகவே இதைச் சொல்கிறேன். அதற்குக் காரணமும் அங்கு குழுமும் ரசிகர்களே என்று தோன்றுகிறது. அவர்கள் ஆதர்ச நாயகனின் குரலைக் கேட்டதும் காலச் சக்கரத்தைப் பின் நோக்கி நகர்த்தி தாங்கள் நேரில் களித்ததை மீண்டும் வாழக்கூடிய மாய சக்தி அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் உடல்களில் வழிந்தோடும் ரசிகானுபவமென்னைப் போன்ற  மணி ஐயரைப் பார்த்தேயிராத தலைமுறையினரைக் கூட அவரை தரிசிக்க வைக்கிறது.

1960-ல் தொடங்கி 1970 வரையிலான காலகட்டத்தில் சங்கீதப் பேராளுமைகள் என்று கருதத்தக்க பல வித்வான்களை கர்நாடக சங்கீத உலகமிழந்தது. அந்தக் கலைஞர்களின் பதிவுகளில் நமக்கு அதிகம் கிடைத்திருப்பது மணி ஐயரின் பதிவுகள்தான். சென்னை, திருச்சி, திண்டுக்கல், ஜெம்ஷட்பூர், பம்பாய், கல்கத்தா என்று பல ஊர்களில் மணி ஐயர் பாடிய பதிவுகள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. பொதுவாக கச்சேரிகளைப் பதிவு செய்வதை கலைஞர்கள் அதிகம் விரும்பாத காலமது. விதிவிலக்காக மணி ஐயர் பதிவுகள் செய்ய தாராளமாக அனுமதித்ததும்,அவருடைய ரசிகர்கள் சிரமத்தைப் பார்க்காமல் பெரிய ஸ்பூல் ரிக்கார்டர்களை கச்சேரிக்குத் தூக்கிச் சென்றதுமே இன்று இத்தனை பதிவுகள் நமக்குக் கிடைப்பதற்கு முக்கிய காரணங்கள். இன்று யுடியூபில் தேடினாலே புழக்கத்திலிருக்கும் மணி ஐயர் பதிவுகளில் 90% பதிவுகளை ஒருவர் கண்டடைந்துவிடக் கூடும். அதனைக் கண்டு வளரும் தலைமுறைக்கு, இருபது வருடங்களுக்கு முன்னால் கூட – கிராமஃபோன் பதிவுகளல்லாத முழுக் கச்சேரி பதிவுகள் கிடைப்பதற்கு (மணி ஐயர் என்றில்லை – அவர் தலைமுறை வித்வான் எவராகயிருந்தாலும்) நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது என்பதே புதிய செய்தியாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.

உலகின் பல்வேறு இடங்களில் தனிப்பட்ட ரசிகர்களிடம் சிதறுண்டு கிடந்த மணி ஐயர் பதிவுகளைத் துரத்திப் பிடித்துத் தொகுத்த பெருமை மூவரைச் சேரும். எக்மோர் பாலு என்று ரசிகர்களிடையே பிரபலமாய் அறியப்படும் திரு.பாலசுப்ரமணியன், திரு. ஏ.ஆர்.எஸ்.மணி, திரு ஆர்.ஸ்ரீராமன் ஆகிய மூன்று ரசிகர்களே அந்தப் பெருமைக்குரியவர்கள்.

சங்கீதத் துறையில் இத்தகு ஆளுமைகளும் இவர்கள் எடுத்துக்கொண்ட சிரமங்களும் அதிகம் பேசப்படாத பொருட்கள் என்பதால் அவற்றை விஸ்தாரமாக இல்லையென்றாலும் கொஞ்சம் கோடி காட்டும் படியாவது பதிவு செய்யலாமென்று தோன்றியது.

எனது நண்பரும் மணி ஐயர் ரசிகர் குழுமத்தில் முக்கிய அங்கத்தினருமான விஷ்ணுராம்பிரசாதின் உதவியுடன் மேற்சொன்ன மூவரையும் தொடர்பு கொள்ள முடிந்தது. விஷ்ணுவைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், “இன்று கிடைக்கும் மணி ஐயர் பதிவுகளில் எந்தெந்த பதிவுகளில் எந்தெந்த பாடல்களுக்கிடையில் எத்தனை முறை தொண்டையைச் செருமிக் கொண்டார்”, என்று யாரேனும் கேட்டால் அந்தக் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்வதோடன்றி எந்த ஸ்ருதியில், எந்தெந்த ஸ்வரங்கள் வருமாறு செருமினார் என்றுகூட சொல்லிவிடக்கூடியவர் என்று சொல்லலாம். விஷ்ணுவும் மணி ஐயரைப் பார்த்தேயிராத தலைமுறைதான் என்றாலும் அவருக்கும் மணி ஐயருக்குமான பந்தத்தை எழுதினால் தொடர் கட்டுரைகளாக பல மாதங்களுக்குத் தொடர வேண்டியிருக்குமென்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன் மேற்சொன்ன மூவருடன் விஷ்ணுவும் நானும் வாட்சாப் குழு அழைப்பின் மூலம் இரண்டு மணி நேரம் பேசினோம். அந்தச் சுகமான சங்கீத அரட்டையின் சிலபகுதிகளை இங்கு கொடுக்கிறேன்.

திரு. ஸ்ரீராமன்

“தேவநாதன் தெருவில் அரியக்குடியின் வீட்டுக்குப் பக்கத்து வீடு எங்கள் வீடு. அவர் ஊஞ்சலில் அமர்ந்து பாடுவது, சங்கீத சம்பந்தமாய் அவரைச் சந்திக்க வருபவர்களுடன் பேசுவதெல்லாமென் வீட்டிலிருந்தே கேட்கும். அதனாலோ என்னமோ எங்கள் வீட்டுச் சூழலில் கர்நாடக சங்கீதத்துக்கு பெரிய மதிப்பு இருந்தது. என்னுடைய சித்தப்பா மணி ஐயரின் தீவிர ரசிகர். சிறு வயதில் கபாலி கோயிலில், ஆபட்ஸ்பரியில் நடந்த ஒரு திருமண கச்சேரியில் என்று மணி ஐயரை நேரில் கேட்டிருக்கிறேன் என்றாலும் அதிகம் நினைவிலில்லை. அவர் பாடியதில் ’சபாபதிக்கு’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வருடா வருடம் தமிழிசைச் சங்கக் கச்சேரியில் சபாபதிக்கு பாடாமல் இருக்கமாட்டார். வானொலியில் கச்சேரி நேரலைக்கு இடையில் செய்திகளுக்கு உரிய நேரத்தில் கச்சேரி ஒலிபரப்பு நின்றுவிடும். என் அனுபவத்தில்,  மணி ஐயர்  சபாபதிக்கு ஆரம்பிப்பதற்கும் வானொலியில் நேரலை தடைபடுவதற்கும் சரியாக இருக்கும். எட்டாத உயரத்தில் உள்ள ரேடியோவை ஏறி எடுத்து கொரகொர சத்தத்துக்கு இடையில் ஷார்ட் வேவில் சபாபதிக்கு கேட்டு ரசித்த நினைவுகள் பசுமையாக உள்ளன.”, என்று உற்சாகமாய் பேச ஆரம்பித்தார் ஸ்ரீராமன்.

திரு. ஏ. ஆர். எஸ். மணி

”1970-களில் திங்கட்கிழமைகளில் ஆங்கில செய்திகளுக்குப் பின் ‘ரசிகரஞ்சனி’ என்கிற பெயரில் நேயர் விருப்பமாக கர்நாடக இசைப் பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மணி ஐயர் பாடிய ‘இங்கிலிஷ் நோட்’, ‘வெள்ளைத் தாமரை’, ‘எப்ப வருவாரோ’ ஆகிய மூன்றிலொரு பாடல் நிச்சயம் இடம் பெரும். பின்னாளில் நான் டேப்ரிக்கார்டர் வாங்கியதும் தி.நகரில் ஒரு கடையில் சொல்லி மணி ஐயரின் பிரபல கிராமஃபோன் பதிவுகளை காசெட்டுகளாக பதிவு செய்து வாங்கிக்கொண்டேன்.1986-ல் ஸ்ரீராமனைச் சந்திக்கும் வரை நானறிந்த மணி ஐயர் பதிவுகள் இவைதான்”, என்று சேர்ந்து கொண்டார் ஏ.ஆர்.எஸ்.மணி.

திரு எக்மோர் பாலு

மூவரில் மூத்தவரான எக்மோர் பாலு, ”என் ஆண்டு நிறைவுக்கே மணி  ஐயர் கச்சேரிதான். எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் வீடு மாயவரத்தில் இருந்தாலும் கச்சேரிக்காக நிறைய ஊருக்கு போவதற்கு கும்பகோணம்தான் வசதி. அவர் கும்பகோணம் வந்தால் எங்கள் வீட்டில்தான் ஜாகை. அவர் பாட்டோடுதான் வளர்ந்தேன்”, என்று அலட்டிக் கொள்ளாமல் கலந்துகொண்டார்.

இந்த மூவர் கூட்டணி அமைந்தது எப்படி என்று நான் அடியெடுத்துக் கொடுத்தேன்.

”நானும் ஸ்ரீராமனும் ஒன்று விட்ட colleagues”, என்று புதிர் போட்டார் மணி.

“ஹைதராபாதில் நாகர்ஜுனா குழுமத்தில் வெவ்வெறு நிறுவனங்களில் நாங்கள் இருவரும் வேலை பார்த்து வந்தோம். எங்கள் இருவருக்கும் அறிமுகமிருந்ததே தவிர அதிகம் பரிச்சயமிருக்கவில்லை. 1986-ல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரி ஹைதராபாதில் நடந்தது. அதற்கு சென்றிருந்த போது கையில் ஒரு டேப் ரிக்கார்டருடன் ஸ்ரீராமன் வந்திருப்பதைப் பார்த்தேன். ‘பதிவு செய்கிறாய் என்றால் எனக்குமொரு பிரதி கொடேன்’, என்று கேட்டேன். உடனே ஒப்புக் கொண்டு அடுத்த வாரமே என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.

நான் சில காலி கேஸட்டுகளை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குச் சென்றேன். அவனிடம் நிறைய பதிவுகளிருப்பதைக் கண்டேன். பெரும்பாலும் கடைகளில் கிடைக்க கூடிய பதிவுகள்தான் என்றாலும் அவை என்னிடம் இல்லாதவையாக இருந்தன. அவன் சேகரத்தில் ஒரு கேசட்டின் அட்டைப்படத்தில் மதுரை மணி ஐயரின் படமிருந்தது. என்னிடம் இருந்தப் பாடல்களாகத்தான் இருக்குமென்று நினைத்து எடுத்துப் பார்த்தேன். அதில் ’சதானந்த தாண்டவம்’ முதலான நான் மணி ஐயர் பாடி கேட்டேயிராத பாடல்களிருந்தன. நான் எம்.எஸ் கச்சேரியை மறந்துவிட்டு எடுத்து வந்திருந்த கேசட்டில் இந்தக் கச்சேரியை பதிவு செய்து கொண்டேன். வீட்டுக்கு வந்ததும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கேயில்லை.

அடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்று ஸ்ரீராமனிடம் தொலைபேசி நான் அடைந்த பெருமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். அப்போது அவன், ”நம்மிடம் இருக்கும் ஒரு கச்சேரியே இத்தனை இன்பம் தருகிறதென்றால், தனிப்பதிவுகளாய் சிதறியிருக்கும் மற்ற  பதிவுகள் எல்லாம் கிடைத்தால் எவ்வளவு இன்பமாய் இருக்கும்.”, என்று கூறினான். இப்படிக்கூட கச்சேரி பதிவுகள் ரசிகர்களின் ரகசிய சேகரங்களில் இருக்கக்கூடுமென்றே எனக்கு அன்றைக்குத்தான் தெரியும்.”

மணி நிறுத்திய இடத்திலிருந்து ஸ்ரீராமன் தொடர்ந்தார்.

“கச்சேரிகள் இருக்கின்றன என்று தெரிய வந்தாலும், யாரைப் போய் பார்ப்பது, எப்படிச் சேகரிப்பது என்பதைப் பற்றி சுத்தமாய் தெரியாத நிலையில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஹிண்டு, கல்கி, மிரர் போன்ற நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும், “நாங்கள் மதுரை மணி ஐயர் கச்சேரிகளை சேகரிக்கிறோம். உங்களிடம் அவருடைய பதிவுகள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்”, என்று விளம்பரம் செய்தோம்.

எங்கள் விளம்பரத்துக்கு முதல் பதில் ஜி.என்.பி-யின் மகன் ஜி.பி.துரைசாமியிடமிருந்து வந்தது. அவர் ஜி.என்.பி-யின் பதிவுகளைச் சேகரிக்க பலவிதமாய் (பத்திரிகை விளம்பரங்கள் உட்பட) முயன்று வந்தார். அவரிடம் சில மதுரை மணி ஐயர் கச்சேரிகள் இருந்தன.

புதியதாக கச்சேரிகள் சேகரிக்கத் தொடங்கும் போது இரண்டு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

முதலாவது, முன்பின் அறிமுகமில்லாதவருக்குக் கச்சேரியைக் கொடுத்து அவர் அதை வைத்து என்ன செய்வார் என்று தெரியாத நிலையில் எதற்கு வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை.
இரண்டாவது, மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த அரிய பொக்கிஷத்தை தெரியாத ஒருவருக்கு சும்மா கொடுக்க மனது வராது. பெரும்பாலானவர்கள் பணத்துக்காக கச்சேரியைக் கொடுப்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள் (அன்றைய நிலையில் அவர்களுக்குக் கொடுக்க எங்களிடம் அதிக பணமும் இருக்கவில்லை என்பது வேறு விஷயம்). அவர்களிடம் இல்லாத ஏதாவது கச்சேரியை நாம் கொடுத்து அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

உதாரணமாக வி.ஏ.கே.ரங்கா ராவுடன் ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லலாம். உலகின் பெரிய கிராமஃபோன் ரிக்கார் சேகரிப்பாளர்களுள் ஒருவர் அவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவரிடம் இருந்த மதுரை மணி ஐயரின் 78 rpm ரிக்கார்டுகள் வேறு யாரிடமும் இல்லாதவை. அவரிடம் இல்லாத ஏதாவது கிராமஃபோன் ரிக்கார்டை கொடுத்தால் எங்களுக்கு மதுரை மணி ஐயர் பதிவுகளைத் தருகிறேன் என்றார். உலகின் தலைசிறந்த சேகரிப்பாளருக்கு ஒன்றுமேயில்லாத நாங்கள் என்ன தர முடியும்?

ஆனால் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. என்னுடைய அலுவலக நண்பன் வைசாகில் தன்வீட்டின் பரணில் நிறைய ரிக்கார்டுகள் போட்டு வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னதும் உடனே ஆளை அனுப்பி எடுத்துவரச் சொன்னோம். அதை எடுத்துக் கொண்டு ரங்கா ராவைப் பார்த்த போது அவர் பொறுமையாக ஒவ்விரு ரிக்கார்டாக பரிசீலித்தார். கிட்டத்தட்ட எல்லா ரிக்கார்டையும் பார்த்துவிட்ட நிலையில் எல்லாமே அவரிடம் இருந்த ரிக்கார்டுகளாகவே  இருந்தன. “எல்லா முயற்சியும் வீண்” என்று நினைக்கும் வேளையில் ‘Beatles’ குழுவின் ஒரு ரிக்கார்டை கையெலெடுத்தார். அவரிடம் இல்லாத ரிக்கார்டு அது. அடுத்த நாளே என்னை வரச் சொல்லி அத்தனை மதுரை மணி ஐயர் ரிக்கார்டுகளையும் பிரதியெடுத்துக் கொடுத்துவிட்டார்.

நாங்கள் ஓரளவு சேர்த்ததும் எங்களிடமிருந்து வாங்க வருபவர்களை,எங்களை ரங்கா ராவ் ஏவியதைப் போலவே நாங்களும் ஏவி கச்சேரிகள் சேர்த்த அனுபவமும் உண்டு.

‘கற்பகம் கல்யாண கச்சேரி’ என்று ரசிகர்களிடையே புழக்கத்திலிருக்கும் கச்சேரி அப்படித்தான் கிடைத்தது. வெங்கடரமணி என்கிற ரசிகர் என்னிடம் மணி ஐயர் கச்சேரி கேட்டு வந்தார். என்னிடம் இருப்பதையெல்லாம் காட்டி, அவற்றிலில்லாத ஒரு கச்சேரியை கொண்டு வந்தால் வேண்டிய கச்சேரிகளை தருகிறேன் என்று கூறினேன். “உங்களிடம் இருநூறு காஸெட்டுகள் உள்ளன. அவற்றில் இல்லாததை எப்படி நான் பிடிப்பது”, என்று முதலில் மலைத்தாலும் முயற்சி செய்வதாகச் சொன்னார். கொஞ்ச நாளில் இந்தக் கல்யாணக் கச்சேரியைக் கொண்டு வந்தார். “இதை யார் கொடுத்தது? அவரிடம் வேறு கச்சேரிகள் கிடைக்குமா?”, என்று நான் பரபரத்தேன். “அவரிடம் வேறு இல்லை. இது அவருடைய பெண்ணின் திருமணத்தில் மணி ஐயர் பாடிய கச்சேரி. அதனால் பதிவு செய்து வைத்திருந்தார்.”, என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு அவர் கேட்ட கச்சேரிகளை எல்லாம் சந்தோஷமாக பிரதியெடுத்துக் கொடுத்தேன்

மதுரை மணி ஐயருக்காகத்தான் கச்சேரி பதிவுகள் வைத்திருந்தவர்களை நாங்கள் தொடர்பு கொண்டோம் என்றாலும் கூட, எங்கள் நோக்கத்தை மீறியும் நல்ல உறவை தொடர்ந்து பழக்கத்தினால் ஏற்படுத்திக் கொள்ள எங்களால் முடிந்ததே எங்கள் பலம் என்று நினைக்கிறேன். காலப்போக்கில், எங்களிடமிருந்து எதுவும் பெற முடியாத நிலையில் கூட, நட்பின் காரணமாக எங்களுக்கு மணி ஐயரின் கச்சேரி பதிவுகள் கிடைக்க அது வழி செய்தது. அப்படித்தான் ஜி.பி.துரைசாமியிடமிருந்து சில கச்சேரிகளைப் பெற்றோம்.

நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கியதும், சங்கீதத்தில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட, அவர்களுக்குத் தெரிந்த யாரிடமாவது கச்சேரி இருந்தால் எங்களூக்குத் தெரியப்படுத்தினர். அப்படி எங்கள் அலுவலக அறிமுகங்கள் மூலமாக சென்னையில் கணேஷ், ராஜப்பா போன்ற ரசிகர்களைச் சந்தித்தோம். சென்னையைத் தவிர பம்பாய், அஹமதாபாத், பாலக்காடு, ஹைதராபாத் என்று பல ஊர்களில் இருந்தும் கச்சேரிகளைத் திரட்டினோம். அலுவலகப் பணிக்காக ஊர்களுக்குப் போகும் போது மணி ஐயர் கச்சேரி திரட்டும் வேலையையும் சேர்த்துச் செய்யும்படி திட்டமிட்டுக் கொள்வோம்.

கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான் எங்கள் விளம்பரத்தைப் பார்த்து பாலு சார் தொடர்பு கொண்டார்.”

நாங்கள் பேசிக் கொண்டிருந்த அழைப்பில் அதிகம் அமைதியாக இருந்தவர் எக்மோர் பாலுதான். ஆனால் சங்கீதப் புரவலராய் அதிகம் வெளியில் தெரிந்த பெயர் அவருடையதுதான். நான் ஒருவகையில் என்னை அவருடைய பேரப் பிள்ளை என்று கருதிக் கொள்வேன். 2002-ல் தொடங்கி நானும் பழைய கச்சேரிகளைத் தேடி அலைந்தவன் என்கிற முறையில் நான் பலரை சந்தித்து நூற்றுக்கணக்கான கச்சேரிகளைப் பெற்றுள்ளேன். அவர்களுள் கணிசமானவர்கள் எக்மோர் பாலுவின் கருணையில் குளிர் காய்ந்தவர்கள். நான் அவரை நேரிடையாகத் தொடர்பு கொண்டு கச்சேரிப் பதிவுகள் வாங்கவில்லை என்ற போதும், அவரிடமிருந்து பெற்றவர்கள் அவரைப் பற்றிக் கூறியதிலிருந்து எனக்குள் எழுந்த சித்திரத்தாலேயே அவரை நெருக்கமானவராக உணர்ந்தேன்.

“நீங்கள் மணி ஐயரின் கச்சேரியை நேரிலேயே சென்று பதிவு செய்திருக்கிறீர்களா?”, என்று கேட்டதும் பாலு பேச ஆரம்பித்தார்.

”இல்லை. அப்போதெல்லாம் கச்சேரி கேட்பதில்தான் கவனம் இருந்தது. பதிவு செய்ய தோன்றவில்லை. என் அப்பா சில ரேடியோ கச்சேரிகளை பதிவு செய்து வைத்திருந்தார். திருச்சி வானொலியில் ஒலிபரப்பிய ஒரு கச்சேரியில் ‘கத்தனுவாரிகி’-யும், ‘நிரவதி ஸுகதா’-வும் பாடியிருந்தார். அதன் பதிவு எங்கள் வீட்டிலிருந்தது. மதுரை சோமு அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் இந்தப் பதிவைக் கேட்டுவிட்டு, தனக்கு வேண்டுமென்று வாங்கிக் கொண்டு போனார். அவரிடமிருந்து வாங்கி யாழ்பாணம் தட்சிணாமூர்த்தி இலங்கைக்குக் கொண்டுபோய்விட்டார் என்று தெரிய வந்தது. இன்று வரை அந்தப் பதிவு கிடைக்கவில்லை. எனக்கு வித்வான் லால்குடி ஜெயராமனிடம் பழக்கம் இருந்ததால் அவரிடமிருந்து சில பதிவுகள் கிடைத்தன. சென்னையில் இன்னும் சிலரிடமிருந்தும் கொஞ்சம் கச்சேரிகள் கிடைத்தன.

ஒரு வித்வான் வீட்டில் இரண்டு கச்சேரிகள் இருப்பது ஒரு நண்பர் மூலம் தெரிய வந்தது. அந்த நண்பர் அந்த வித்வானுக்கும் நண்பர். அந்த வித்வானை அணுகிய போது  அவர் பிரதிகள் தர மறுத்துவிட்டார். அந்த வித்வான் கச்சேரிக்காக வெளியூர் சென்ற போது நண்பர் மூலமாக அந்தப் பதிவுகளை எடுத்து வந்து பிரதியெடுத்துக் கொண்டு வித்வான் ஊருக்குத் திரும்புவதற்கு முன் திருப்பி வைத்த அனுபவமும் உண்டு.

அயர்லாந்து சங்கரன் என்று ஒருவர் இருந்தார். அவர் அயர்லாந்துக்குக் கிளம்ப ஒருமணி நேரம் இருந்த போதுதான் சந்திக்க முடிந்தது. அவரிடமிருந்த கச்சேரியை முழுமையாகப் பிரதியெடுக்க நேரமில்லாததால் பேகடா ராகம் தானம் பல்லவியை மட்டும் எடுத்துக் கொண்டேன்.  ஸ்ரீராமனையும், மணியையும் சந்தித்த பின்னால்தான் முழுக் கச்சேரியும் கிடைத்தது.”

ஸ்ரீராமன் இடைமரித்து, “இதே மாதிரி தவறவிட்டு இன்று வரை கிடைக்காமல் இருக்கும் பதிவு ஒன்றுள்ளது. கிருஷ்ணன் என்பவரிடம் ஒரு கச்சேரி இருந்தது. அவர் இலங்கைக்கு கிளம்பிக் கொண்டிருந்த நாளில்தான் அவரைப் பார்க்க முடிந்தது. எங்களிடம் இல்லாத பாடல்களில் ‘சபாபதிக்கு’ அல்லது‘மாமவ பட்டாபிராமா’ – இரண்டில் ஒன்றைத்தான் பிரதியெடுக்க முடியும் என்கிற நிலையில் எனக்குச் சிறு வயதிலிருந்து ஆதர்சமான ‘சபாபதிக்கு’ பாடலைத் தேர்வு செய்தேன். அதன் பிறகு வேறு சில கச்சேரிகளிலும் ‘சபாபதிக்கு’ பாடல் கிடைத்துள்ளது. ஆனால் இவ்வளவு தேடியும் இது நாள் வரை ‘மாமவ பட்டாபிராமா’ கிடைக்கவில்லை. அன்று மாற்றி எடுத்துக் கொண்டிருக்கக் கூடாதா என்று இன்று தோன்றுகிறது.”

நிறைய ஊர்களில் இருந்து குருவி சேர்க்கிறார் போலச் சேர்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரும் புதையலைக் கையில் கொடுத்தார்போல ‘கல்கத்தா மாமி’ என்று சங்கீத ஆர்வலர்களிடையே அறியப்படும் திருமதி. ஜெயலட்சுமி விஸ்வநாதனின் அறிமுகம் கிடைத்தது.

ஜெயலட்சுமியின் கணவர் விஸ்நாதன் வங்காளத்தின் மின்சார வாரியத்தில் பெரிய பதவியில் இருந்தவர். கல்கத்தாவில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். மதுரை மணி ஐயர் அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். கல்கத்தாவில் நடந்த நிறைய கச்சேரிகளின் பதிவுகள் ஜெயலட்சுமியிடம் இருந்துள்ளன. (அவர்கள் வீட்டில் மதுரை மணி ஐயர் ஜெயலட்சுமியிடம் சௌஜன்யமாய் பேசிய ஓர் அழகிய சம்பாஷணையைக் கூட பதிவு செய்துள்ளார்!) கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாத பலதரப்பட்ட முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் வானொலியில் வருவதை பதிவு செய்பவராக ஜெயலட்சுமி இருந்துள்ளார். கணவரின் மறைவுக்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்து மகனுடன் இருந்துள்ளார் ஜெயலட்சுமி. அவரைப் பற்றி அறிந்து ஸ்ரீராமனும், மணியும் எப்படியோ தொடர்பு கொண்டு சந்தித்த போது, ஜெயலட்சுமியிடம் இருந்த கச்சேரிகளை எல்லாம் அழகாக அட்டவணைப் படுத்தி எழுதி வைத்திருந்ததைப் பார்த்துள்ளனர். தங்களிடம் இல்லாத கச்சேரிகள் பல இருப்பதைப் பார்த்து பேருவகை அடைந்தாலும் அவற்றை பிரதியெடுப்பது பெரும் பாடாக இருந்திருக்கிறது.

“ஸ்பூல் டேப்கள் விலை அதிகமிருந்த காலத்தில், பிரத்யேகமான ஒருவகை டேப்களில் அந்தக் கச்சேரிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. வழக்கமான வேகத்தை விட மெதுவாக சுழலும் டேப்கள் என்பதால் வழக்கமாய் ஒரு மணி நேரம் பதிவு செய்யக்கூடிய டேப்பில் நான்கு மடங்கு அதிகம் பதிவு செய்து கொள்ள முடியும் என்கிற வசதி அந்த டேப்களில் இருந்தன. அதை சரியான வகையில் இயக்க சாதாரண ஸ்பூல் பிளேயர்களால் முடியாது. அதற்கென்று பிரத்யேகமான கருவி இருந்தால்தான் இயக்க முடியும். அந்தக் கருவி ஜெயலட்சுமி மாமியிடம் பழுதாகிப் போய்விட்டிருந்தது. நாங்கள் எங்கு தேடியும் அப்படியொரு கருவியை வாங்கமுடியவில்லை. என்னிடம் இருந்த ஸ்பூல் பிளேயரில் போட்டால் வழக்கமான வேகத்தைவிட நான்கு மடங்கு குறைவான வேகத்தில் கச்சேரி ஒலித்தது. என்ன செய்வதென்று தெரியாதிருந்த நேரத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

என்னிடம் இருந்த ஒரு பிளேயரில் வழக்கமான வேகத்தைவிட இரட்டிப்பான வேகத்தில் இயக்கக் கூடிய வசதி இருந்தது. இந்தக் கச்சேரிகளை இரட்டிப்பு வேகத்தில் இயக்கி இன்னொரு ஸ்பூல் டேப்பில் பிரதியெடுத்துக் கொண்டு. பிறகு இரடிப்பு வேகத்தில் பதிவான டேப்களை இன்னொரு முறை அதனினும் அதே முறையில் இயக்கி பிரதியெடுத்ததும், முதலில் இருந்த வேகத்துக்கு நான்கு மடங்கு வேகத்திலான பிரதி எங்களுக்குக் கிடைத்தது. அதை பிறகு ஆடியோ காஸெட்டாக மாற்றிக் கொண்டோம். ஜெயலட்சுமி மாமி ஒரு சமயத்தில் ஒரு டேப்பைத்தான் தருவார் என்பதால் கிட்டத்தட்ட 37 முறை அவரிடம் சென்று வாங்கி வந்து பிரதி எடுத்தோம்.”, என்று விவரிக்கிறார் பாலு.

”இன்று  டெர்ரா பைட் கணக்கில் நிமிடங்களில் எம்.பி3-கள் பிரதியெடுத்துக் கொள்ளும் தலைமுறைக்கு அவர் இப்படி விவரித்திருக்காவிடில் இந்தச் சேகரங்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் பொருமையும் விளங்குமா என்று தெரியவில்லை. மேலை நாடுகளில் பெரிய நிதி பெற்று பல்கலைகழகங்கள் வருடக் கணக்கில் செய்யக்கூடிய வேலை இவை. ”, என்றேன்.

“ஆமாம். ஒரு நல்ல குழுவாக நாங்கள் அமைந்தது அதிர்ஷ்டம்தான். எங்கெங்கு பதிவுகள் கிடைக்கின்றன என்று நானும் ஸ்ரீராமனும் அலைவோம். அந்தப் பதிவுகளை எல்லாம் பொறுமையாக ஆராய்ந்து சீர்படுத்தியது பாலு சார்தான். பல சமயம் வெறும் டேப் கிடைக்கும் அவற்றுள் என்ன இருக்கிறது என்றே தெரியாது. நம்மிடம் இருக்கின்ற கச்சேரி பதிவுக்கு இடையில் இல்லாத சில பாடல்கள் கிடைக்கும். எப்படிப் பட்ட பதிவையும் பிரதியெடுக்க உபகரணங்களை ஒழுங்கான நிலையில் வைத்துக் கொண்டு, பொறுமையாய் அலசி ஆராய்ந்து ஒழுங்கு படுத்த வேண்டிய பொறுமை அவருக்குத்தான் இருந்தது”, என்றார் மணி.

”இப்போது இருப்பதில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் 2000-க்கு முன்னாலேயே சேகரித்துவிட்டோம். அதன் பிறகு எங்கள் சேகரம் எப்போதாவது ஒருமுறைதான் வளர்கிறது. இருந்தாலும் இப்போதும் யாராவது கச்சேரி பதிவுகள் வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தால் அவர்களுடைய லிஸ்டை வாங்கிப் பார்த்துவிடுவோம்.

2007-ல் வேளச்சேரியில் இருந்த ஒருவர் வீட்டில் 1964-ல் அயோத்யா மண்டபத்தில் நடந்த கச்சேரி பதிவை கண்டுபிடித்தோம். அந்தக் கச்சேரியில் இருந்த பாடல்கள் எல்லாம் வேறு கச்சேரிகளில் மணி ஐயர் பாடி நமக்குப் பிரதியிருக்கும் பாடல்கள்தான். அதனால் அது புதுக் கச்சேரியா என்று உடனே புரிபடவிலை. ‘வாதாபி கணபதிம்’ பாடலில் மணி ஐயர் ஸ்வரம் பாடும்போது வழக்கமாக மிருதங்கம்தான் ஒலிக்கும். வயலினுக்குத்தான் கடமோ கஞ்சிராவோ வாசிப்பார்கள். இந்தப் பதிவில் அவர் ஸ்வரம் பாடும் போது உடன் கஞ்சிரா ஒலித்ததைக் கேட்டதும் இது புதிய கச்சேரி என்று தோன்றியது. ஷண்முகப்ரியா பல்லவியில் “ஹரே ராம கோவிந்த முராரே” என்று பாடியிருப்பதைக் கேட்டதும் துள்ளிக் குதித்தோம். வழக்கமாய் அவர் பாடும் பல்லவியல்ல அது.

எதற்குச் சொல்கிறேன் என்றால், நம் தேடலில் புதியதாய் ஒரு கச்சேரியைக் கண்டெடுக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை ஒருமுறை சுவைத்துவிட்டால் வாழ்நாளுக்கும் அதைவிடத் தோன்றாது.

இந்தச் சேகரிப்பு விஷயத்தில் மாத்திரம் திருப்தி என்பதேகூடாது. நம்மிடம் எல்லாமிருக்கிறது என்று நினைத்துவிட்டால் தேடல் ஓய்ந்துவிடும். ஏற்கெனவே வாங்கியவரிடம்கூட தொடர்புவிட்டுவிடாமல் பார்த்துக் கொள்வேன். நம்மைப் போலவே அவரும் தேடுவார்தானே? அவருக்கு ஏதாவது புதியதாகக் கிடைத்திருந்து நமக்குத் தெரியாமல் போய்விட்டால் நஷ்டம்தானே.

உதாரணமாக சென்னையில் சூளைமேட்டில் இருந்த ராஜப்பாவின் தொடர்பைச் சொல்லலாம். எங்களுக்கு முதலில் அறிமுகமானவர்களுள் ஒருவர். சென்ற வருடம் அவரைத் தொடர்பு கொள்ளலாமென்று தேடிய போது அவர் பெங்களூருக்கு மாறிவிட்டார் என்று தெரிய வந்தது. அவர் மகன் வைத்தி தொலைபேசி எண்ணை எப்படியோ பிடித்துப் பேசிய போது ராஜப்பா தவறிவிட்டார் என்று தெரிய வந்தது.

அவருடைய மகனிடம் பேசி அவருடைய சேகரத்தில் இருந்தவற்றின் விவரங்களை வாங்கி ஒப்பிட்டுப் பார்த்தோம். புதியதாய் ஒன்றும் சிக்கவில்லை. கடைசியில் விவரங்கள் எதுவுமில்லாமல் பதினைந்து காஸெட்டுகள் மட்டும் எஞ்சியிருந்தன. அவற்றை எனக்கு வைத்தி அனுப்பி வைத்தார்.

அவற்றில் என்னயிருக்கிறது என்று பார்க்கலாமென்றால் எங்கள் யாரிடமும் ஒழுங்காக வேலைபார்க்கும் டேப்ரிக்கார்டர் இல்லை. எப்படியோ தேடிப்பிடித்து ஒரு கருவியை வங்கிப் போட்டுப் பார்த்த போது பதினைந்தில் பதினாலு ஏற்கெனவே இருந்தவைதான். ஒரே ஒரு கேசட்டில் மட்டும் எங்களிடமில்லாத ராகம் தானம் பல்லவி இருந்தது.”, என்று மூச்சு விட்டுக் கொள்ள சற்று நிறுத்துனார் ஸ்ரீராமன்.

”இவ்வளவு பாடுபட்டு சேர்த்ததை எப்படி எல்லோருக்கும் கொடுக்க மனது வந்தது?”, என்று கேட்டேன்.

“மதுரை மணி ஐயரே காசைப் பார்க்காமல் கேட்ட இடத்தில் எல்லாம் போய் தேங்காய் மூடிக் கச்சேரியானாலும் மனமுவந்து பாடியவர்தானே. அவர் கச்சேரியைப் பகிர எதற்கு யோசிக்க வேண்டும்?”, என்றார் பாலு.

“பாலு சார் முதலில் இருந்தே அப்படித்தான். ஆனால் நானும் மணியும் முதலில் எல்லோரிடமும் பகிரத் தயங்கினோம். புதிய கச்சேரிகள் இருப்பவரிடம் கொடுத்து வாங்க நம்மிடம் ஏதாவது இருக்க வேண்டுமே என்ற கவலைதான் – வேறு காரணமில்லை. இப்போதைய சூழலில் யாருக்கும் கொடுப்பதற்குத் தயங்கத் தேவையில்லை. மணி ஐயரின் பாட்டைக் கேட்டு அந்த தெய்வீக அனுபவத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

நான் பூனா சங்கீத சபாவின் நிர்வாகிகளில் ஒருவன். இங்கு கச்சேரிக்கு வரும் வித்வான்கள் பெரும்பாலும் என் வீட்டில்தான் தங்குவார்கள். அவர்களுக்கு மணி ஐயரின் கச்சேரிகளைப் போட்டுக் காட்டி அவர்கள் அதில் திளைப்பதைப் பார்ப்பதில் எனக்கு அலாதியான மகிழ்ச்சி. அவர்கள் அனுபவத்தை என் டைரியில் எழுதித் தருமாறு கேட்டு பதிவு செய்து பொக்கிஷமாக வைத்துள்ளேன்.”, என்றார் ஸ்ரீராமன்.

இப்படியே இரண்டு மணி நேரம் போனது. இன்னும் இருபது மணி நேரமென்றாலும் பேச விஷயமும் அதைச் சொல்ல உற்சாகமும் அந்த மூவருக்கும் இருக்குமென்று தெரிந்தாலும் வேறு வேலைகள் அழைத்ததால் சம்பிரதாயமாய் நன்றி தெரிவித்து அழைப்பைத் துண்டிக்கப் போனேன்.

அவசர அவசரமாய் விஷ்ணு, “பாலு மாமா! மணி ஐயருக்காக பரிட்சைல ஃபெயிலானதைச் சொல்லாம விட்டுட்டீங்களே”, என்றார்.

சிரித்தபடி பாலு பேசத் தொடங்கினார்.

“நான் ப்ரீ யுனிவர்சிடி சென்னையில் தங்கியபடி படித்தேன். மணி ஐயர் கச்சேரி எங்கு நடந்தாலும் போய்விடுவேன். பரிட்சைகள் ஆரம்பித்ததும்தான் எனக்கு கவலை வந்தது. பரிட்சைகளில் தேர்வானதும் ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டுமே. அப்படிச் சென்றால் மணி ஐயரை எப்படிக் கேட்பது என்கிற கவலை!

தமிழ்ப் பரிட்சைக்கு முதல் நாள் பெரம்பூரில் மணி ஐயர் பாடினார். அதற்குச் சென்றுவிட்டு திரும்பி நடந்தே வீட்டுக்கு வர இரவு ஒன்றரை மணி ஆகிவிட்டது. அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பரிட்சைக்கு நாளை போகாமல் இருந்துவிட்டால் இன்னும் ஒரு வருடத்துக்கு இங்கேயே இருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. பரிட்சையும் சுலபமான ஒன்றுதான். அடுத்த முறை எழுதினால் தேர்வாகிவிடுவேன் என்று தெரியும். அதனால் அடுத்த நாள் பரிட்சைக்குப் போகவில்லை. முடிவுகள் வந்ததும், ‘பரிட்சையில் தோல்வி’ என்று மட்டும் வீட்டில் சொல்லிவிடேன்.

அடுத்த முறை மணி ஐயரைப் பார்க்கும் போது பரிட்சை என்னாச்சு என்று கேட்டார். ஃபெயிலாகிவிட்டேன் என்றதும், ஏன் அப்படியானது என்று விசாரித்தார்.

அவரிடம் மறைக்காமல், பெரம்பூரில் வந்து கச்சேரி கேட்ட சமாசாரத்தைச் சொல்லிவிட்டேன்.

”நான் உங்க அப்பா கிட்ட சொல்றேன் இரு! நீ உருப்பட மாட்ட”, என்று கடிந்துகொண்டார்.”

எனக்கு அது மணி ஐயர் உலகத்துக்குச் செய்த ஆசிர்வாதமாகப்பட்டது. எங்காவது எல்லோரையும் போல பாலுவும் ‘உருப்பிடுபவராக’ இருந்திருந்தால் இத்தனை பொக்கிஷங்கள் தலைமுறைகள் தாண்டி சாஸ்வதமாகியிருக்குமா?

4 Replies to “ரசிக’மணி’கள்”

  1. எந்தரோ மகானு பாவுலு அந்தரிகி வந்தனமுலு. கலஞனும், இரசிகனும் ஒரு அருமையான உறவு, நல்ல பந்தம். மதுரை மணியின் மிகப் பெரும் இரசிகராக இருந்த தி. ஜா இன்று இல்லை. ஒருக்கால், அவர் குடும்பத்தினரிடம் அபூர்வமான சில செய்திகள்/பாடல்கள் இருக்கக்கூடுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.