கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்

இன்றைய கோவிட் தாக்கத்தினால், வாழ்க்கை பலருக்கும் பல விதமாக மாறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது 2020 ஆண்டில் உலகின் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கும் என்று சொல்லியிருந்தால் அவர்களை நம்பியிருக்க மாட்டோம். 

பல்வேறு நாடுகள் இந்தத் தீநுண்மிச் சூழலை வெவ்வேறு விதமாக கையாள்கின்றன. குடும்பங்களிலும் நாம் எப்படி எதிர்நோக்குகிறோம் என்பது வீட்டுக்கு வீடு மாறுபட்டுக்கொண்டு இருக்கிறது. 

இந்தக்கட்டுரையின் நோக்கம் நாம் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டிருக்கும் தீநுண்மிச் சூழலை, எப்படி அது  நம் குடும்பத்தினுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் சமாளிப்பது என்பதை சிந்திக்க வைப்பதுதான்.

தீநுண்மிகளின் சந்ததியோடு வாழவேண்டி வந்தாலும் வரலாம். அவை நம் வாழ்க்கையில் இருக்கும் அரிய விஷயங்களைப் பறித்துப் போகாமல் இருக்க நாம் தெளிவாக இருப்பதும் அவசியம் ஆகிறது.

வாழும் ஊர், அங்கு நிலவும் பருவநிலை, அந்நாட்டின் அரசியல் சூழல், சுதந்திரம் பற்றிய புரிதல், மக்களின் வாழ்வாதாரம் என்று பலவற்றோடும் தொடர்புடையதாய், வாழ்க்கையை, இன்று மட்டுமல்ல, எதிர்வரும் ஆண்டுகளிலும் சேர்த்துப் பல்வேறு வழிகளில் பாதிப்பதாக இந்தத் தீநுண்மியின் தாக்கம் இருக்கிறது.

“கப்பல் வரல அக்கா! அதான் காய் எல்லாம் விலை அதிகமா இருக்கு” என்று சாக்குப்போக்குச் சொல்லும் இந்தியப் பொருட்களை விற்கும் கடையிலுள்ள தம்பியில் தொடங்கி, பல வழிகளில் கண்ணுக்குத் தெரியாத தீநுண்மி தன் வேலையைக் காட்டிக்கொண்டிருக்கிறது.

முதலில் சிங்கப்பூரில் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன், மக்கள் அதிக பயத்தோடு வாங்கிக் குவித்தவை, கை சுத்திகரிப்பான்களும் முகக் கவசங்களும்தான். இப்போது அரசே பலமுறை முகக் கவசங்களை விநியோகம் செய்தாகிவிட்டது.

சென்னையிலிருந்து தில்லிக்கு ரயில் மார்க்கமாகச் செல்லும்போது, நாக்பூர் தாண்டியபிறகு மாலை நேரத்தில், எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள் தெரியும். திடீரென்று கும்மிருட்டுப் படியும்;  ரயில் சுரங்கப் பாதையில் சென்று மீளும். மறுபடி அடுத்த சுரங்கப் பாதை.

இப்போது வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. நாம் மீள்வோம் என்று ஒரு சில நாடுகளும் மீண்டும் மீண்டும் ஊரடங்கு என்று தவிக்கும் பல நாடுகளுமாக இன்று உலகம் இருக்கிறது. தடுப்பூசி எல்லாருக்கும் போட்டபிறகு, வாழ்க்கை முற்றிலும் முகக் கவசம் இல்லாமல் முகம் பார்த்துப் புன்னகைக்கும் ஒன்றாக மாறினால் நன்றாகத்தான் இருக்கும்.

இந்த இடைப்பட்ட நாள்களில் நாம் எல்லோரும் அவரவர் குடும்பங்களில் சந்திக்கும் பல சவால்களைப்பற்றிச் சிந்திக்க முனைவதே இக்கட்டுரையின் மையப்புள்ளி.

“எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்” என்ற நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படப் பாடலைப் பாடிக்கொண்டே எப்போது சுபம் போட்டுக் கோவிட் 19 தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று எல்லாரும் காத்திருக்கிறார்கள்.

முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று சுனாமி அலைகளைப் போல தீநுண்மியையும் அலையாகச் சொல்லவேண்டிய நிர்பந்தம்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை, பெர்த், பெனாங், கோலாலம்பூர்,  மணிலா, பாலி, பாங்காக், கிராபித்தீவு என்று பலவும் விமானப்  பயணத்தில் நான்கு மணிநேரத்துக்கு உள்ளேயே அடங்கிவிடுபவை என்பதால் சிங்கப்பூரில் வாழும் யாரும் வருடத்திற்கு இரண்டு பயணங்களாவது எப்போதும் செய்திருப்போம். ஆனால் இப்போது ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்ட பயணச் சீட்டுகள் கிடப்பில் கிடக்கின்றன. “நீ எப்போ வருவ?” என்ற பதில் தெரியாத கேள்விகளுக்கு, மௌனமே பதிலாக இருக்கும் தொலைபேசி அழைப்புகள் இந்நாள்களுக்குரியன.

என் தோழிகள் பலருக்கும் சிங்கப்பூர் என்ற நகர நாட்டைவிட்டு எங்கும் செல்ல முடியவில்லை என்பது ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.

அண்டை நாடான மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில், என்னோடு வேலை செய்யும் நண்பர் ஒருவரின் மகள், இந்தியாவின் மணிப்பாலில் மருத்துவம் படிக்கிறாள். கோவிட்19 தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்த மாதங்களில் தன் ஒரே மகள் தனியாக இருப்பதை எண்ணிப் பதறிக்கொண்டிருந்தார்.

கல்லூரிகள் மூடப்பட்டு மகள் மலேசியாவிற்கு வந்தபிறகு, நிலைமை மலேசியாவில் தலைகீழ். அவருக்கு தன் உடன்பிறந்த சகோதரியை மருத்துவமனையில் கோவிட் 19 தொற்றுக்காகச் சேர்ந்திருந்தாலும் வேலைக்கு வந்தே ஆகவேண்டிய கட்டாயமான பணிச்சூழல்.

குழந்தைகள்

எங்கள் மகனுக்கு ஒன்பது வயது. சிங்கப்பூரில் தொற்றுகள் அதிகமாக இருந்த ஏப்ரல் மே (2020) மாதங்களில் கோயில்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பள்ளிகளை இணையவழியில் ஒரு மாதம் மட்டுமே சிங்கைக் கல்வி அமைச்சு நடத்தியது. மீண்டும் குழந்தைகளை முகக் கவசத்தோடு பள்ளிக்கு அனுப்பிவிட்டோம். மற்ற நாடுகளைப் பார்க்கையில் கல்வி ஆண்டை எந்தக் குறையுமின்றி சிங்கப்பூர் அரசாங்கம் கையாண்டது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.

குழந்தைகளை இந்தக் கிருமி அதிகம் பாதிக்கவில்லை என்ற ஆய்வின் முடிவை நம்பி, அதிக முன்னெச்செரிக்கையோடு சூழலைக் கையாண்டு வருகிறார்கள்.

இணையவழியில் பியானோ , குமோன் போன்ற வகுப்புகள் தொடர்ந்தாலும் பிள்ளைகளுக்கு உளவியல் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. நண்பர்கள் பட்டாளத்தோடு சேர்ந்து விளையாட முடியவில்லை என்ற ஆதங்கத்தைக் குழந்தைகள் பல வழிகளில் காட்டினார்கள். 

“எனக்குக் கொரோனோ வருமா?” என்று அவ்வப்போது எங்கள் மகன் கேட்கும் கேள்விக்கு மாற்றாக, அவனையே, வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் யார் வந்தாலும் கைகால் கழுவ நினைவுறுத்துமாறு பணித்தோம். 

முகக் கவசம் அணியவைத்து, சிற்றுந்து நடத்தும் தளத்தை, யாரும் எங்கும் செல்லாததால் நடக்கவென்று எங்கள் மகனைப் பயன்படுத்த வைத்தோம். 

குடும்பத்தோடு துள்ளலான திரையிசைப் பாடல்களுக்கு அவ்வப்போது குழு நடனங்களும் ஆடினோம். குழந்தைகளுக்கான திரைப்படங்கள், சுலபமான மூச்சுப் பயிற்சிகள், தேவாரப் பதிகங்கள் என்று மனதினை மாற்றும் வழிகளைக் கையாண்டோம். இவை மனதளவில் அவனை உற்சாகத்தோடு வைத்திருக்க உதவின. சில நாட்கள், அவனது பூட்டியிருந்த  பள்ளிவரை சென்று நடந்து திரும்பி வந்தோம்.

(உள்படம்: சிங்கப்பூர் நூலகம்)

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில், அனு தைலம் என்ற ஒன்று கிடைக்கிறது. மூச்சு இழுப்பு (Wheezing), அதிகப்படியான தும்மல் (Allergic Rhinitis), மூக்குக்குள் குடைச்சல், அடிக்கடி தலைவலி (Sinus Issues) என்று அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்து இது. மூக்குக்குள் ஓரிரு சொட்டுகள் விட்டுவிட்டால், சளித் தொல்லை ஏற்படாமல் காப்பாற்றிவிடுகிறது. 

அதேபோல, நீச்சல் முடிந்து வரும் குழந்தைகளுக்கு, உச்சந்தலையில் தாசனாதி எனப்படும் சாம்ப்ராணிப் பொடி, சளி வராமல் காப்பாற்றுகிறது.

இதுவும் தீநுண்மிக் காலம் சொல்லித்தந்த அனுபவப் பாடங்கள்தான்.

ஒரு மாதம்வரை நீண்ட டிசம்பர் மாத விடுமுறையில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், பெரிய டைனோசர் வைத்துக் குழந்தைகளுக்குக் குதூகலம் ஏற்படுத்தும் சில முயற்சிகளை முன்னெடுத்தார்கள். உள்ளூர்ப் பேருந்து நிலையத்தில் கடையடைப்பு நாளில் நிறுத்தப்பட்ட பேருந்துகளைப்போல வரிசையாக விமானங்கள் நகராமல் நிற்கும் காட்சி, மனதைப் பிசைந்தது.

மூத்தோர்

இந்தியாவிலிருந்து ‘மூன்று மாதத்திற்கு மகன் அல்லது மகள் வீட்டுக்கு வருகிறேன்’ என்று பேரக் குழந்தைகளைப் பார்க்க வந்த பலருக்கு, ஊருக்குத் திரும்ப முடியாத சூழல் உருவானது. வந்தே பாரத் விமானங்களில் (VBM) திருப்பி அனுப்ப முடிந்தாலும் சென்னையிலிருந்த அதிக அளவிலான தொற்று மரணங்களினால் கிலி அடைந்தவர்கள் அநேகம்.

எழுபது வயதுக்குமேல் ஆனவர்களுக்கு உடல் உபாதைகளோடு, கொரோனா வந்தால் என்ன ஆகுமோ என்ற மரண பயமும் சேர்ந்து,  அதிக சவால் ஆகிறது. அவர்களுக்குத் தெரிந்தவர்கள், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்படப் பலரும், கொரோனாத் தொற்றுக்கு ஆளானது ஒருவித மன அமைதியின்மையைக் கொணர்ந்தது.

ஒரு பக்கம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், பாதுகாப்பாக இருக்கிறோம் என்று ஆறுதல் அடைந்தாலும், நாள்பட்ட கட்டுப்பாடுகள்- முகக் கவசத்தோடுகூடிய பேருந்து / ரயில் பயணங்கள், தன் வயதொத்த மனிதர்களைப் பார்க்காமல் இருப்பது போன்றவை, அவர்களின் மனநலனில் பெரிய சறுக்கலை ஏற்படுத்திவிடுகின்றன.

வாரம் ஒரு முறை, லிட்டில் இந்தியா வட்டாரத்திற்குச் சென்று காபி குடித்து, துக்ளக் பத்திரிகையும் இடியாப்பமும் வாங்கி வரும் என் அப்பா போன்றவர்களுக்கு, வெளியில் எங்கும் செல்லமுடியாத நாள்கள், கடத்த முடியாதவையாகத்தான் இருந்தன.

தீநுண்மித்தொற்றுக் காலத்தைப் பொருத்தவரை, அதுவரை என்ன மனநலனில் மூத்தோர் இருந்தார்களோ, அதைக் காப்பாற்றிக்கொள்ளவே அரும்பாடுபட வேண்டியதாக இருக்கிறது. அதிக வாழ்க்கைச் சவால்களையும் உறவுச் சிக்கல்களையும் சந்தித்த மூத்தவர்கள் என்றால், அவர்களுக்கு இது பெரும்பாலும் பேசிக் கடக்கும் விஷயமாக இல்லை.

மூன்று மாதங்களுக்குக் கோயில்கள் யாவும் வெளியாட்கள் வர முடியாதபடி மூடப்பட்டு, உள்ளேயே பூஜைகள் நடந்தன. அந்நாட்களில் என் அப்பா, தினமும் ஒரு ஐந்து காசு நாணயத்தைப் படியில் வைத்துப் படிக்காசு என்று சொல்லி வணங்கிக்கொண்டிருந்தார். இந்தியாவிற்குச் சுதந்திரம் வந்த நாற்பத்தியேழாம் ஆண்டில் பிறந்தவர், இதுபோன்ற எதையும் பார்த்திருக்கவில்லை.

இப்போதுதான் இந்திய அரசாங்கம் எழுபது வயதைக் கடந்தவர்கள், வருமான வரி கணக்கைத் தாக்கல்செய்யத் தேவையில்லை என்று அறிவித்தார்கள். 2020ன் இறுதியில் அந்தத் தாக்கல் செய்து முடிக்கும்வரை அது என் அப்பாவுக்கு ஒரு மன உளைச்சல் ஆனது.

திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் முன்னெடுத்த QFR நிகழ்ச்சிகள் போன்றவை சற்றே மனத்தை மடைமாற்ற அவருக்கு உதவின. வீட்டிலிருந்து வேலை செய்யும் நாள்களில் அவ்வப்போது அப்பாவின் அனுபவங்களைக் கேட்கவும் தயாராகிக்கொண்டேன். 

என்னால் முடிந்தவரை நானும் கேப்பைக்கூழ், அரிசிப் பருப்புச் சாதம், தவா இட்லி என்று நாங்கள் அதுவரை செய்யாத புதிய உணவுகளாக சமைத்து, அதன்வழி ஒரு மகிழ்வை என் குடும்பம் அடைய முயற்சி எடுத்தேன்.

மத்திம வயதிலிருக்கும் வேலைக்கு செல்லும் தம்பதிகள்

வேலைக்குச் செல்லும் கணவன் மனைவிக்கு, வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் முதல் ஓரிரு மாதங்களில் அதிக குடும்ப நேரத்தைத் தருவதைப்போலத் தோன்றினாலும் அலுவலக வேலை வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப்பதைப்போல மாறுவதைத் தடுக்க முடியவில்லை.

நான் வேலை செய்யும் துறை, மின்னணுப் பொருட்களை உலகின் ஒரு கோடியில் உற்பத்தி செய்யவைத்து, மறு மூலைவரை விற்பனைக்குக் கொண்டுசேர்க்கும் வகையானது.

உலகமயமாக்கல் என்ற ஒன்று வந்தபிறகு நாம் எல்லோரும் பல் துலக்கும் தூரிகையில் தொடங்கி, இரவில் அருந்தும் பால்வரை பல பொருட்களுக்காகப் பல தேசங்களை நம்பியிருக்கிறோம் என்பதை இந்தச் சோதனைக் காலம் ஆழமாக நினைவுறுத்தியது.

ஒரு வேலையைக் குறைந்தபட்சம் முப்பது முறையாவது மறுஆய்வு செய்து  மாற்றிச் செய்யவேண்டிய அளவுக்கு, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு புதிய சவால் உண்டானது.

மலேசியாவில் அனைத்துத் தொழிற்சாலைகளும் மூன்று வாரங்கள் மூடப்பட்டன. அதற்குப்பிறகு வந்த நாள்களில், எந்த உபரிப்பொருள் கிடைக்கும் அல்லது உற்பத்திக்குத் தேவையான அளவில் கிடைக்காது என்ற தெளிவில்லாமல் நகர்ந்தன. நான் வேலை செய்யும் நிறுவனம், மலேசியாவில் உற்பத்தி செய்து உலகச் சந்தையில் விற்பனை செய்யும் ஒன்றாகும்.

ஒவ்வொரு நாளிலும் “இதுவும் கடந்து போகும்” என்று எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் உலகளாவிய குழு என்பதால், எல்லா மெய்நிகர் கூட்டங்களிலும் குழந்தைகளின் அழுகையும் மற்ற சத்தங்களும் எங்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டன.

நேரில் பார்க்காத சில பணியாளர்களைக்கூட , மனதால் புரிந்துக்கொள்ள இந்தச் சூழல் உதவியது. பணி நீக்கம் என்ற நிதர்சனமும் முன்னறிவிப்பு ஏதுமின்றித் திடீரென நடந்தது.

சொல்லாமல் கொள்ளாமல் ஒரு வெள்ளிக் கிழமையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு வேலை இல்லை. நாம் அடுத்ததாக இருப்போமோ என்ற பயமும், இந்தத் தீநுண்மி சூழலில் வேறு வேலை வாய்ப்பு இல்லையென்றால் எப்படி இதிலிருந்து மீள்வது என்ற யோசனைக்கு எல்லாரும் ஆளானோம்.

இங்குதான் எனக்கு வீட்டுச் சூழலும் வேலைச் சூழலும் சவாலான மாதங்களில் தினசரி தியானம் கைகொடுக்கக் கண்டேன்.

அதிக எதிர்மறையான சூழல் உண்டாக்கும் மன அழுத்தத்தில் தினமும் இரவில் இருமுறையாவது தூக்கம் தொலைவது வாடிக்கை ஆனது. வீட்டிலிருந்து வேலை செய்வதால், கழுத்துவலி போன்ற பிற உபரிப் பிரச்னைகள். நாற்பதுகளில் இருப்பவர்களுக்குக் குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோரின் ஆரோக்கியம், குடும்பப் பொருளாதாரம் என்று பல சிக்கல்கள். எல்லாம் ஒன்றாகச் சேர்த்து அழுத்தும்போது, மொத்தமும் சிக்கலாகும் அபாயம் இருக்கிறது.

நான் வாழும் கலை (Art of Living) என்ற அமைப்பின் யூடூப்பில் உள்ள காணொளிகளைப் பயன்படுத்தத் தொடங்கினேன். கண்ணீராக எதிர்மறை எண்ணங்கள் தொலைய, மன ஆரோக்கியம் மீண்டது.

வீட்டிலிருந்து வெளியே செல்லாவிட்டாலும் தினமும் பத்தாயிரம் அடிகள் நடப்பது என்பதை வழக்கமாகக் கைகொள்ள ஆரம்பித்தேன்.

சமையல் என்பது எனக்கு ஒரு மனசோர்வை நீக்கும் வழி. உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காக நேரம் ஒதுக்குவதும் மனசோர்வை மீட்கும் வழிதான்.

வழக்கமாகச் சிங்கப்பூரில் எப்போதும்  செடிகளை அழகாக பராமரித்திருப்பார்கள். ஊரடங்கு மாதங்களில், முற்றாக விளைந்த நெல் வயலைப்போல, ஆங்காங்கே பூங்காக்கள் இருந்தன. தினமும் முடிந்தவரை நடைப்பயிற்சி செய்வதும் ஒரு வழக்கம் ஆனது.

வீட்டுவேலைக்கென இல்லத்தில் தங்கும் பணிப்பெண்கள்

வீட்டுவேலைக்கென இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த பணிப்பெண்கள், அவர்களது வேலைக்கானக் காலக்கெடு முடிந்தாலும் அவர்களால் ஊருக்குத் திரும்பமுடியாமல் சில மாதங்கள் சென்றன.

வேலைக்காலம் மீதமிருக்கும் பெண்களால் ஓய்வு நாள்களில் எங்கும் போகமுடியாத நிலையும் இருந்தது. பல மாதங்கள் நீண்ட கட்டுப்பாடுகளினால் வீட்டுக்குள் இறுக்கமான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு அவருடைய உறவினர்களில் சிலர், கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்த விடுதிகளில் இருந்தது, உயிர்ப் பயத்தை உண்டாக்கியது. அறைக்குள் அடைந்திருக்கும் அவர்களின் நிலை யாரும் எதிர்பார்த்த ஒன்று அன்று. பேசிப் பகிர்ந்து, ஆறுதல் சொல்லிக் கடந்த நாள்கள் அவை.

தீநுண்மிக் காலம் இறந்த காலம் ஆகிவிடும். நாம் இந்தச் சூழலில் இழக்கும் ஆரோக்கியம் நமக்குத் திரும்பக் கிடைக்காத ஒன்றாக ஆகும் வாய்ப்புகள் அதிகம். இதை நினைவில் கொள்வது முக்கியம். ஊர் கூடித் தேர் இழுப்பதைப்போல, எல்லோருடைய கூட்டு முயற்சியால்தான் மீண்டும் நம் நினைவில் வாழும் பயணங்கள் நிஜமாகும். அதுவரை சகிப்புணர்வும் சுகாதாரம் பற்றிய புரிந்துணர்வும் பொறுமையும்தான் நமக்கான மீட்சியைத் தரும் வழிகள்!

One Reply to “கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.