ரத்தப் பாசம்

மாணிக் பந்தோபாத்யாய

தமிழில்: ராஜேஷ் சந்திரா

மாலை ஏழு மணி.

தெருக் கோடியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டவுடன் டாகடர் தாஸும், அவர் உதவியாளன் நபீனும்  மருந்தகத்தின் கதவுகளை அவசரமாக மூடினார்கள்.

நபீன் நடுங்கும் குரலில் விசனத்துடன்  “வைத்தியசாலையை நாம திறந்திருக்கக் கூடாது…” என்றான்.

தாஸ், “நீதான் கவலைப்படவேணாம் , கலாட்டா நடக்காதுன்னியே?” என்று கேட்டார்.

நபீன், “நான் கலாட்டா நடக்காதுன்னுசொல்லலே.  கவலைப்பட வேண்டாம்னுதான் சொன்னேன். இப்பவும்  நாம் மூடியிருக்க வேண்டாம்,  தெருவில் கலாட்டா நடந்தால் நாம ஏன் பயப்படணும்?” என்று மறுத்தான்.

 நபீனின் இளம், உறுதியான முகத்தைப் பார்த்த டாக்டர் தாஸ் சொல்லவந்ததை விழுங்கி “அதனால் என்ன, யாரும் இப்போது வரப்போறதில்லை.  நானும் திறக்கச் சொல்லலே. இப்ப மூடிடறது நல்லது,” என்றார்.

இந்தக் கலாட்டாவினால் வைத்தியசாலை மாலையின் மீதி நேரத்துக்கு மூடப்பட்டதில்   நபீன் திருப்தி அடைந்தாற் போல் தெரிந்தான்.  

இவர்கள் எதில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்கள் இரத்தத்தில் என்ன ஓடுகிறது? தாஸ் வியந்தார்.

நபீன் “அப்ப நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டான்.

தெருவில் என்ன கொடூரங்கள் நடக்கிறது என்று தெரியவில்லை.  இந்த இளைஞன் பாதுகாப்பான இடத்தைவிட்டு வெளியேறத்  துடிக்கிறான்.  ஏதோ தெருவில்  வேடிக்கை நடந்துகொண்டிருப்பதைப் பார்க்காமல்  இழக்கப் போவதைப்போல்.  என்ன  வகையான வித்தியாசமான கூறுகள் இவர்கள் இரத்தத்தில் ஓடுகிறது? மருத்துவப் பரிசோதனையில் தெரியுமோ? தாஸ் யோசித்தார்.

“நபீன் என் வீட்டில் சொல்லிடறயா? நான் வரத் தாமதமானாலும் அல்லது வராமலே போனாலும் கவலைப்பட வேண்டாம்.   நான் இங்கே கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்னு சொல்லிடு.”

“நான் வரத் தாமதமானாலும் அல்லது வராமலே போனாலும் கவலைப்பட வேண்டாம்!” நபீன் குழம்பினான்.  இந்த மருத்துவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கத்திகள்,  ஊசிகள்,  எலும்புகளை அறுக்கும் அரங்களை  நோயாளிகளின்மேல் உபயோகித்திருப்பார், ரத்தம் சிந்துவதை, இறப்பதைப் பார்த்திருப்பார்.   தன் தவறான சிகிச்சைகளால் சிலரை மேலே அனுப்பியிருக்கவும் வாய்ப்புண்டு.  இவரா இந்தத் தெரு முனைக் கலவரத்துக்கு பயப்படுகிறார்.  கலவரம் ஓயும்வரை இவர் இந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை.  

டாக்டர் தாஸின் வீடும் அருகில் ஒரு சந்தில்தான்  இருந்தது.  நபீன்  வெளியேறியதும் தாஸ்  கனமான கணக்கு வழக்குப் புத்தகத்தைப் பிரித்தார்.  எப்போது கலவரம் அடங்கும்? ஓய்ந்தவுடன் வீட்டுக்குப் போகலாம்.

வீடு அருகில் இருந்தாலும் எதற்கு அனாவசியமாக இப்போது வெளியேபோய்  ஆபத்தை வரவழைக்க வேண்டும்.

ஏறக்குறைய அரை மணி நேரம் சென்றிருக்கும்.  லாப நஷ்டக் கணக்கில் ஆழ்ந்திருந்த தாஸ் கதவு பலமாகத் தடடப்படும் சத்தத்தில் திடுக்கிட்டார்.

“கதவைத் திறங்க டாக்டர்”  நபீனின் குரல் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

ஆனாலும் நடுக்கம் நீங்கவில்லை.  கலவரம் இங்கும் வந்துவிட்டதா?  வெளியேபோன நபீன் கலவரம்  தீவிரமானதில்  மருந்தகத்தில்  பாதுகாப்பாக இருக்கலாம் என்று வந்துவிட்டானா?  அப்படித்தான் இருக்கவேண்டும்.

கதவு திறக்கப்பட்டவுடன் ஆறு நபர்கள் ரத்தம் ஒழுகும் உடலைக் கொண்டு வந்தார்கள்.

அந்த ஆறு பேரும் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட அனைவரும் இந்தத் தெருவின் அருகில் வசிப்பவர்கள்.

மூன்று, நான்கு பேர்களுக்குக்  காயங்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

நபீன் வெளியே சென்றபோது தூய வெள்ளையில் இருந்த சட்டை, அவன் இடது தோளில் சிவப்பாக மாறியிருந்தது.  அவனின் ரத்தமா இல்லை அவன் தூக்கிக்கொண்டு வந்தவனதா?

அவர்கள் கொண்டு வந்த பதினான்கு வயதினனை தாஸ் மிக நெருக்கமாகவே அறிவார்.

அவர்களோடு வந்த மூத்தவரான ஷிவ்ஷங்கர்  “நீங்களே டாக்டர்ங்கறதாலே உங்க மகனை இங்கே கொண்டுவரச் சொன்னேன்.  ரொம்ப மோசமாக அடிப்பட்டிருக்கான்.  மற்ற ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியில் போலீஸ் பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…” என்றார்.

அவர் மகனைப் பெஞ்சில் படுக்கவைத்தார்கள்.  அவன் உடலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நாடியைப் பரிசோதித்த தாஸ், “புத்திசாலித்தனம்தான்… அவனைக் கலவரத்தில்  தூண்டி, அடிபட்டவுடன், இவன் சாவுக்கு என்னைப் பொறுப்பாக்குறீங்க” என்றார்.

“இந்த நேரத்தில் கோபப்பட வேண்டாம்ப்பா…” என்றார் ஷிவ்ஷங்கர்.  

“யார் பேச்சைக் கேட்டு உன் மகன் அடிபட்டான்னு நினைக்கறே? இப்பதான் மருத்துவனாக நீ தைரியமாக  இருக்கவேண்டும்.  உன் மகனைக் காப்பாத்தப் பாரு, அவன் பிழைக்கலைன்னா நம்மால் ஏதும் செய்ய முடியாதுதான்.”

“எல்லாரும் இப்படி வாங்க… ஒவ்வொருத்தராக் கவனிக்கிறேன்.  நபீன் உன்னால் சட்டையைக் கழற்ற முடியுமா?” என்றார் தாஸ்.  

அவன் தலையசைத்து “என்னால் கையை அசைக்க முடியவில்லை” என்றான்.

“அப்பா… உன்  மகனை முதலில் கவனி… கோபப்படற நேரமா இது?… எல்லாரும் கலவரத்தில் குதிச்சாங்க… அவன்மேல் மட்டும் ஏன் பழிபோடணும்?  நான் என் வீட்டு மாடியிலிருந்து எல்லாத்தையும் பார்த்தேன்… இந்த  மாதிரி கோரத்தை இதுவரை பார்த்ததில்லை…” ஷிவ்ஷங்கர் கலக்கத்துடன் கெஞ்சினார்.

டாக்டர் தாஸ், ஷிவ்ஷங்கர் சொல்வதையும் கவனிக்கவில்லை, தன் மகனையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

பதிலாகப் பஞ்சு, மருந்து மற்றும் மருத்துவக் கருவிகளை எடுத்துக்கொண்டு, அவர்களில் இளையவனான கணேஷுக்கு சிகிச்சையை ஆரம்பித்தார்.

“உன் மகன் எப்படி இருக்கான்னு கூடவா பார்க்க மாட்டே?” ஷிவ்ஷங்கர் இப்போது ஏறக்குறைய அலறினார்: “இப்ப கவனிக்காவிட்டால் செத்துருவான்”

“அவன் ஏற்கெனவே செத்துட்டான்” என்றார் தாஸ்.  மற்றவர்கள் கலங்கிப் போனார்கள்.

“செத்துட்டானா?” ஷிவ்ஷங்கர் உடைந்தார்,  “நாங்க  கொண்டு வந்தபோது உயிரோட இருந்தான்.  எப்படி அவன் சாக முடியும்?”

“நீங்க கொண்டு வரும்போதே அவன் இறந்துட்டான்.  நான் பரிசோதனை செஞ்சதை நீங்க பார்க்கலை?”

நீண்ட மௌனத்திற்குப்பின்  “அப்படியானால் இன்னும் ஏன் ரத்தம் கசிஞ்சுக்கிட்டிருக்கு?”  என்று ஷிவ்ஷங்கர் கேட்டார்.

கணேஷின் காயத்தில் பாண்டேஜை கவனமாகக்  கட்டிக்கொண்டே டாக்டர் தாஸ் “இறந்த பின்னும் கொஞ்ச காலத்திற்கு ரத்தம் கசிஞ்சுக்கிட்டிருக்கும்” என்று பதில் சொன்னார்.

(Blood is Thicker – by Manik Bandyopadhyay)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.