காதலும் அந்த பைத்தியக்காரனும்

நபரூன் பட்டாச்சார்யா

(தமிழில்: உஷா வை.) 

எங்களைப் போன்ற பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்வுக்கு ஒரு தனிப்பட்ட தாளம் உண்டு. யுவதிகளுக்கும் இருக்கலாம் ஆனால் இந்தத் திகிலூட்டும் கதையில் வரும் ஒரே யுவதி எத்தகைய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. அவள் இந்த உலகத்தினவளாகவே இல்லாதுகூட இருக்கக்கூடும். இதுபோன்ற அபாயகரமான பெண்கள் குளிர்காலத்தில் பனி, புகை, சூனிய வித்தை எல்லாவற்றையும் கலந்து உருவாக்கப் படுகிறார்களோ என்னவோ. இந்த நினைப்பே அந்த உறையவைக்கும் பருவ நிலையிலும் எங்கள் சருமத்தில் வியர்வை மணிகளைத் தோன்றச் செய்தது. அதே சமயம் மல்லி சித்தப்பாவின் தொடர் சிரிப்பை போர்வைக்கும், கொசுவலைக்கும் வெளியே கேட்க முடிந்தது.

நாங்கள் பயத்தில் குப்புறத் திரும்பிப் படுத்தோம், எங்கள் மூக்குகளை பூப்போட்ட தலையணை உறைகளில் புதைத்தபடியே. மெதுமெதுவே கரைந்து மறைந்து போய்க்கொண்டிருந்த பாச்சை உருண்டைகளின் வாசனை மட்டுமே எங்களுடைய ஒரே நம்பிக்கை. கோடைக்கால மாலை நேரங்களில் பணியாரங்களையும், கேக்குகளையும், பாலாடை நிரம்பிய சுருள்களையும், இனிப்புகளையும் உண்டபின் சூடான பாலையும் குடித்து அவற்றை உள்ளே தள்ளிய பின் எங்கள் வயிற்றில் கலக்கம் உண்டாகும். எங்களுக்கெல்லாம் சிறிய தொந்திகள் இருந்தன – பணக்கார வீட்டுப் பிள்ளைகள், பன் போன்ற தொப்பைகள் என எங்கள் வீட்டில் பணி செய்யும் பெண்கள் சொல்வார்கள். வயிற்றுக் கலக்கத்துக்கு வேறு காரணங்களும் இருந்தன. சூடான பாலை எங்களுக்குக் கொடுப்பதற்கு முன்பு நாங்கள் ஜாக்கெட்கள், ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கம்பளி ஸாக்ஸ். கையுறைகள் எல்லாம் அணிந்திருப்போம். எங்களுடைய ஷட்டில் பாட்மின்டன் விளையாட்டுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் இதே நடைமுறைதான். பிறகு நாங்கள் ஷட்டில் மட்டைகளை எடுத்துக் கொண்டு. எங்கள் பாதங்களை கோணல்மாணலாக, மிதித்துக் கொண்டு வெளியே போவோம். ஒவ்வொரு பாதமும் நடைபாதையிலோ வீதியிலோ பட்டதும் எங்களுடைய குண்டான கன்னங்கள் நடுங்கும். வயிற்றுக் குமட்டல் இன்னும் இருக்கும். இந்நிலையில்தான் நாங்கள் நாய்கள் குரைக்கும் சத்தம் எதிரொலிக்கும் எங்கள் நண்பர்கள் வீட்டுக்கு வருவோம். 

பல சமயங்களில் இதற்கு முன்பே அகஸ்மாத்தாக சந்தித்துவிடுவோம், ஒரு பெரிய நுழைவாயிலின் முன்பு. கேட்டுக்கு அடுத்தாற்போல் எங்கள் வீடுகள் அனைத்திலும் தோட்டமும், புல்வெளியும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தோட்டக்காரர்கள் குளிர்கால மாலைவேளைகளுக்காக பாட்மின்டன் களங்களைத் தயார் செய்திருப்பார்கள். நாங்கள் ஒரு கிரமப்படி ஒவ்வொரு நாள் ஒரு வீட்டில் விளையாடுவோம். சில சமயம் அருகாமையில். சிலசமயம் சற்று தூரத்தில். தூரமாக இருக்கையில் காரில் அழைத்துச் செல்லப்படுவோம். திரும்ப அழைத்தும் வரப்படுவோம். பாட்மின்டன் களங்களில் கண்ணைப் பறிக்கும்படியாய் விளக்குகள் போடப்பட்டிருக்கும். ஷட்டில்காக் அதன் மூக்கில் ஒளிக்கற்றைகளை தாங்கியபடி வலையைத் தாண்டி முன்னும் பின்னும் போகும். சிலசமயங்களில் அது வலையில் சிக்கிக் கொள்ளும். சமயங்களில் அந்த ஒளியிலும், நிழலிலும் அது தாழ்ந்த மரக்கிளைகளிடையேயோ இலைகளிடையேயோ தொலைந்து போகும். மரத்துக்குக் கீழே சிதைந்த ஷட்டில்காக் இறகுகளைக் காண்போம். இப்போதெல்லாம் இத்தகைய காட்சியை கோழிக்குஞ்சுகள் விற்கும் கடைகளில் காணலாம். எங்கும் சிதறியிருக்கும் வெண்ணிற இறகுகள். சொல்லப்போனால், இதெல்லாம் ஒன்றும் புதிதானதல்ல.

எங்களைக் குழப்புவதற்காக பரிச்சயமற்ற காட்சிகளுடன் பரிச்சயமான படிமங்கள் தொடுக்கப்பட்டன. அவற்றுக்குப் பெயர் கொடுக்க இயலவில்லை. நாங்கள் பதைபதைப்புடன் இருந்தோம். வழக்கமாய் இதெல்லாம் வயிற்றுக் கலக்கலுக்கு முன்பே ஆரம்பித்துவிடும்… அதனால் என்ன! அப்போது கல்கத்தாவில் கார்கள் நிறைய புகையை கக்கிக் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான புகை அடுப்புகளிலிருந்து வந்தது. ஆனால் எங்கள் வீடுகளில் குழாய்கள் வழியாய் வந்த எரிவாயும், மின்சார அடுப்புகளும் இருந்தன.

அத்தகைய புகையும் பனியும் கூடிய ஒரு குளிர்கால மாலைபொழுதில்தான் நாங்கள் சுமிதேஷின் வீட்டுக்கு எங்கள் ஆட்டத்துக்காகப் போயிருந்தோம். நாங்கள் ஆடத் தொடங்கியிருந்த அதே நேரம் முதல் மாடி பால்கனியிலிருந்து யாரோ ஒரு குலைக்கும் நரியைப் போல சிரித்தார்கள். ராஜுவும் சுமிதேஷும் வலைக்கு ஒரு பக்கம் இருந்தார்கள், நானும் மோஹனும் மறுபக்கத்தில். அந்தச் சிரிப்பு ஆட்டத்தில் பயத்தைப் புகுத்தி எங்கள் கவனத்தை சிதறடித்தது. பந்தை செர்வ் செய்யும்போது கோர்ட்டை மாற்ற மறந்தோம். மற்ற மாலைகளைக் காட்டிலும் அன்று அதிகம் வியர்த்தோம். இது பருவநிலையால் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கவில்லை. காலந்தப்பிய, லேசான, குளிர்காலத் தூறல் தொடங்கியது. நாங்கள் கையில் மட்டைகளுடனும், ஷட்டில் குழாய்களுடனும் சுமிதேஷின் வீட்டுக் கீழ்தளத்திலிருந்த வரவேற்பறைக்கு ஓடினோம். மழை வலைகளையும், விளக்குகளையும் நனைத்தது. காற்றும் அவ்வப்போது அடித்தது. அறையில் ரெக்ஸினால் மூடப்பட்டிருந்த நாற்காலிகளில் நாங்கள் அமர்ந்தோம். ப்ளம் கேக் துண்டுகளும், ஓவல்டீனும் எங்களுக்காகக் கொண்டுவரப் பட்டன. பருகி அருந்தி கொண்டே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

‘முதல் மாடியிலிருந்து யார் சிரிச்சாங்க சுமிதேஷ்?

பேய்கள்!

யார் அது, தயவு செய்து சொல்லேன்.

ஓ அது மல்லி சித்தப்பா. அவருக்குப் பைத்தியம். அப்பப்போ இப்படி சிரிப்பார்.

நாம விளையாடுவதைப் பார்த்து சிரித்தார் என்று நினைத்தேன்.

நாம விளையாடாதபோதும் அவர் சிரிப்பார்.

அவர் ஏதாவது தமாஷான கதை அல்லது லாரல் ஹார்டி படம் எதையாவது நெனச்சு சிரிக்கறாரோ என்னவோ.

எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆனால் என்ன தெரியுமா – மல்லி சித்தப்பா பைத்தியமானது ஒரு பெண்ணுக்காக.

உனக்கு எப்படித் தெரியும்?

எனக்கு எப்படித் தெரிஞ்சதோ அப்படியே நீங்களும் தெரிஞ்சுக்கலாம். அதெல்லாம் ஒரு படத்தில் இருக்கு. ஆனால் ஒலி இல்லாமல். பார்க்கணுமா?

கண்டிப்பாக. ஆனால் யாராவது வந்துவிட்டால்?

வரட்டும். நான் அதை அடிக்கடி பார்ப்பேன். ஆனால் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். மல்லி சித்தப்பா இந்த பெண்ணை விரும்ப ஆரம்பிப்பதற்கு முன்னால், அவருடைய நேரம் முழுவதும் பறவைகளுடன் கழிப்பார்.

என்ன பறவைகள்?

எல்லா வகையும். மொட்டை மாடியில் பறவைகளுக்காகவே வலையிடப்பட்ட முழு அறைகள் இருந்தன. புறாக் கூண்டுகளும்கூட. அது தவிர பால்கனிகள் எல்லாவற்றிலும் கூண்டுகள். கொண்டைக்கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், காதல்பறவைகள், நேபாளி கிளிகள், காதற்கிளிகள் – மேலும் மேலும் எக்கச்சக்கமான பறவைகள். அந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை. நான் அவர்களின் உதட்டசைவை பலமுறை படித்திருக்கிறேன் அதனால் படத்திற்கான உரையாடலை நான் கொடுக்கிறேன்… நீங்கள் எளிதாய் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.

அறையின் ஒரு மூலையில் துணியால் மூடப்பட்ட ஒரு ப்ரொஜெக்டர் இருந்தது. அதில் இரண்டு உருளைகள் பொருத்தப்பட்டிருந்தன ஒன்றில் படச்சுருள் இருந்தது, ஒன்றில் இல்லை. மானின் கொம்புகளால் அலங்கரிக்கப்பட்ட சுவரொன்றில் சதுரமான ஒளித் துண்டு விழுந்தது. இதுதான் படத்திரை. ப்ரொஜெக்டரிலிருந்து வந்த ஒளிக் கீற்றில் தூசித் துகள்களும் பூச்சிகளும் தெரிந்தன. முதலில் சில க்ளிக் சத்தங்கள் கேட்டன. பிறகு 1,2,3 என்ற எண்கள் திரையில் தெரிந்தன. ஆரம்பத்தில் பிம்பங்கள் சற்று நடுங்கினாலும், விரைவில் எங்களுக்குத் தெரிந்தது:

ஓரு கூண்டு முழுவதும் சச்சரவிட்டுக் கொண்டிருந்த காதற்கிளிகள். சுமிதேஷ் சண்டையிடும் பறவைகளைப் போல சத்தம் செய்தான். பின்பு தானியங்கள் நிறைந்த ஒரு கிண்ணமும், தண்ணீர் நிரம்பிய இன்னொன்றும் கூண்டின் தரையில் காணப்படுகின்றன. காமெரா பின்னே நகர்ந்து அரை பேண்டும், இறுக்கமான பனியனும் அணிந்த ஒரு மனிதர் தலையை திரும்பத் திரும்ப அசைத்துக் கொண்டு மேலும் கீழும் நடந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது… சுமிதேஷ்: அது மல்லி சித்தப்பா. அந்தப் பெண்ணுக்காக பொறுமையின்றி காத்துக் கொண்டிருக்கிறார். கூண்டில் நான்கே பறவைகள் மீதம் இருக்கின்றன… மற்றவை எல்லாம் விடுவிக்கப்பட்டு விட்டன.

மல்லி சித்தப்பா இப்போது அருகாமையில் இருக்கிறார். ஒரு தட்டையான டர்கிஷ் சிகரெட்டை அவர் லைட்டர் கொண்டு பற்ற வைக்கிறார்… புகையை வெளியே விட்டு, லைட்டரை பாக்கெட்டில் திரும்ப வைக்கிறார். கூண்டு. முத்தமிட்டுக் கொள்ளும் இரண்டு பறவைகள். சண்டையிடும் இரண்டு பறவைகள்.

சுமிதேஷ் இரண்டு ஒலிகளையும் செய்தான்.

மாடிக்கு வரும் மேல் படியில் அந்தப் பெண் காணப்படுகிறாள். பெடல் புஷர் பாண்ட், பெரிய பொத்தான்களும், பஃப் கை வைத்த மேல்சட்டையும், கருப்புக் கண்ணாடிகளும் அணிந்திருக்கிறாள். ஒரு காலத்தில் சாய்ரா பானு, ஆஷா பாரேக், இதர கதாநாயகிகள் இப்படி உடை அணிவார்கள். குறிப்பாக படத்தின் முதல் பகுதியில். பின்னர் நடந்த உரையாடல் முழுவதும் சுமிதேஷால் பேசப்பட்டது.

மல்லி! மல்ல்…லீஈஈஈ…!

இல்லை, என் அருமை மல்லிநாத் சன்யால்.

மல்லி சித்தப்பா தேவ் ஆனந்த் அல்லது ஒரு குறுபடிவ க்ரெகரி பெக் போல இருக்கிறார்.

அந்தப் பெண்ணின் முகம். அவளுடைய உதடுகள் அசைகின்றன. சுமிதேஷின் உரையாடல் சற்று தாமதமாய் வந்தது. ஒத்திசைக்காவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. இன்னும் இந்தப் பறவைகளை விடுவிக்கவில்லையா? இதற்குள் அவை காட்டை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். இதோ பார், இவை காட்டுப் பறவைகள் அல்ல. ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் தலைமுறைகளாய் இவை கூண்டுகளில் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஓ மல்லி! அதே வாதம், பழைய சப்பைக்கட்டு. புதிதாய் ஏதாவது சொல்லேன். அவற்றை விட்டுவிடு மல்லி. தயவு செய்து விடுதலை செய்துவிடு. அவற்றை சிறைப்பட்ட நிலையில் என்னால் பார்க்க முடியவில்லை. நான் அதை விரும்பவில்லை. உனக்கு நூறு முறை சொல்லியிருக்கிறேன்.

கடைசி நான்கு காதற்கிளிகளை வைத்திருப்பதில் என்ன தீமை வந்து விடும்? மூன்று மஞ்சள் ஒரு நீலம்.

அப்போ உனக்கு நான் வேண்டாமா?

வேண்டும். கண்டிப்பாய் நீ எனக்கு வேண்டும் ஆனால் எனக்கு இந்த நான்கு பறவைகளும் வேண்டும்.

அது சாத்தியமில்லை… பறவைகள் அல்லது நான். நீ ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் மல்லி.

இதன்பின் உடனேயே சூரியன் அஸ்தமிப்பது காட்டப்படுகிறது… சுமிதேஷின் வீட்டைச் சுற்றி இருக்கும் மரங்களின் மேல் நிழல்கள் கூடுகின்றன. அஸ்தமனச் சூரியனுக்கு எதிரில் நிழல்படமாய் மல்லியின் முகம்.

தேர்ந்தெடுத்து விட்டேன், அப்படியானால் என் தேர்வை செய்து விட்டேன்.

யாரைத் தேர்ந்தெடுத்தாய் மல்லி, பறவைகளா நானா?

நீ.

மல்லி கூண்டின் கதவைத் திறக்கிறார். அந்தப் பெண்ணின் முகம் காணப்படுகிறது. புன்னகை ததும்பியவண்ணம். மீண்டும் கூண்டு. சுமிதேஷ் அந்தச் சூழலை உருவாக்கத் தன் கைகளை அசைத்து பறக்கும் ஒலிகளை எழுப்பினான்.

பறவைகள் கூண்டை விட்டு வெளியேற பயப்படுகின்றன. மல்லிநாத் அவற்றை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்து விடுவிக்கிறார்.

அந்தப் பெண் கைதட்டி நடனமாடுகிறாள். மல்லிநாத்தின் உதடுகளிலிருந்து அந்த டர்கிஷ் சிகரெட் உடைந்து தொங்குகிறது. நான்கு பறவைகளும் தம் சிறகுகளை அடித்துக் கொள்கின்றன ஆனால் அவற்றிற்கு பறக்கும் அனுபவம் இல்லாததினால் ஒரு குப்பலாக கவிழ்ந்து விழுகின்றன, பிணைத்த இறக்கைகளுடன், இறகுகளைச் சிதறியபடி. 

வெற்றுக் கூண்டு. மல்லிநாத்தின் முகம். அவர் ஏதோ சொல்கிறார் ஆனால் சுமிதேஷ் அமைதியாக இருந்தான். அதனால் எங்களுக்கும் அந்த வசனம் சொல்லப்படாமல் விடுபட்டது,

பறவைகள் கீழே இருந்த புல்லிலும், புதர்களிலும் விழுந்த உடனேயே, வேறு சில பறவைகளும், விசித்திரமான பறவை போன்ற உயிரினங்களும், அந்திப்பொழுதில் அந்தக் கிளிகளுக்காககவே காத்திருந்தவை போல திடீரென்று வெளிவருகின்றன. அவற்றில் சிலவற்றிற்கு இறகுகள் இல்லை, ரோமம் இருக்கிறது. சில பறக்கும் பல்லிகளைப் போல இருக்கின்றன. மற்றவற்றிற்கு விரிந்த உதடுகளுக்கிடையே அரம் போன்ற பற்கள். நான்கு கிளிகளையும் அவை கிழித்தன, அவற்றின் சதையைத் தின்று, ரத்தத்தைக் குடித்து, உடல்களை சிதைக்கின்றன.

திரும்பவும் வெற்றுக் கூண்டு. அதனருகே மல்லிநாத்தின் முகம். அவருடைய கண்கள் புடைத்துக் கொண்டு. அந்த இளம்பெண் படிகளை நோக்கி நடந்து போகிறாள். மல்லிநாத்தின் கண்கள், மீண்டும்.

சுமிதேஷ் சொன்னான்: இதுதான் அந்த நேரம், இப்போதுதான் மல்லி சித்தப்பா பைத்தியம் ஆனார். இந்தப் படமும் இங்கே முடிகிறது.

ஆனால் அந்த நான்கு பறவைகளைத் தாக்கி அவற்றைத் தின்றவை? அவையும் பறவைகளா?

பறவைகள், ஆனல் முற்றும் பறவைகள் இல்லை. எல்லாம் வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பறவைகள். அதுபோன்ற பறவைகள் இப்போது இல்லை.

அவற்றின் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியாதா?

கண்டிப்பாக முடியும். ஆர்கெயொடெரிக்ஸ், அப்டோர்னிஸ், பேலியோகார்ஸொனிஸ், ஹெஸ்பெரோர்னிஸ், ஸைனோசஸாரோடெரிக்ஸ், ப்ரைமா, டேரோடேக்டைல்.

டேரோடேக்டைலைத் தவிர மற்றவற்றை நாங்கள் கேட்டதே இல்லை.

மீண்டும் கேக்கும், கோக்கோ போட்ட பாலும் எங்களுக்காகக் கொண்டு வரப்பட்டன. நாங்கள் பருகி அருந்தினோம்… எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் குமட்டல் இருந்தது.

வளர்ந்து பெரியவர்களாகி விட்டபின் நாங்கள் எல்லோரும் இன்னும் பருத்திருந்தோம். இப்போது பால் அல்ல, மது அருந்தினோம். இன்னமும் எங்கள் வயிற்றில் கலக்கம் இருந்தது.

பின்பு சுமிதேஷ் அந்த பிலிமை டிஜிடலாக மீட்டு, சூழொலியுடன் ஒலித்தடம் ஸ்டீரியோவில் ஒலிக்கும்படி செய்திருந்தான். முதலில் காணொலிப் பேழையாகவும் பின்பு குறுவட்டு வடிவத்திலும்.

அந்தப் படம் பலமுறை காண்பிக்கப்பட்டது. வெவ்வேறு அலைவரிசைகளில். ஸ்டார் மூவீஸ், டிசிஎம், எச்பீஓ, எம்ஜீஎம் இத்தியாதி. அந்தப் படத்தை எப்பொழுது பார்த்தாலும் எங்களுக்கு மல்லி சித்தப்பாவின் சிரிப்பு நினைவுக்கு வரும். பயத்தால் குத்தப்பட்ட உணர்வும் வரும்.

ஆனால் அதை நாங்கள் யாரிடமும் காட்டிக் கொண்டதில்லை.

***

நபரூன் பட்டாச்சார்யா (1948-2014) புரட்சிகர மற்றும் தீவிரமான அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியவர். புகழ்பெற்ற நடிகரும் நாடக ஆசிரியருமான பிஜோன் பட்டாச்சார்யாவின் ஒரே மகன் அவர். எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் மகன். திரைப்படகர்த்தா ரித்விக் கடக் இவரின் மாமா. இவர் எழுதிய நாவல்களில் ஹார்பார்த் புகழ் பெற்றது. தீவிர இடதுசாரி அனுதாபங்கள்கொண்ட இவர், கவிதைகளும் வடித்திருக்கிறார்.

ஆங்கில மொழிபெயர்ப்பு அருணவா சின்ஹா.

அருணவா சின்ஹா பண்டைய. நவீன மற்றும் சமகால வங்காள புனைவு மற்றும் அபுனைவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர். இதுவரை நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட இவருடைய மொழிபெயர்ப்புகள் பதிப்பில் வந்துள்ளன. க்ராஸ்வர்ட் மொழிபெயர்ப்பு விருதை இருமுறை வென்றிருக்கும் இவர் ம்யூஸ் இந்தியா விருதையும் வென்றிருக்கிறார். சௌரிங்கீ என்ற புதினத்தின் மொழிபெயர்ப்பு 2009ல் இண்டிபெண்டன்ட் ஃபாரின் ஃபிக்ஷன் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.