அபத்த நாடகத்தின் கதை

  • நாவல்: பொம்மலாட்டம்
  • ஆசிரியர்: மாணிக் பந்தோபாத்யாய
  • தமிழாக்கம்: த.நா.குமாரஸ்வாமி
  • வெளியீடு: சாகித்திய அக்காதெமி

புதுல் நாச்சேர் இதிகதா என்ற வங்கநாவலின் தமிழாக்கம் பொம்மலாட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பத்தாண்டுகள் நாவலின் காலம். சுதந்திரத்திற்கு முன்பான வங்கக் கிராமமான காவுதியா என்ற ஊரின் கதை.

ஆங்கில மருத்துவம் பயின்று தன் கிராமத்தில் மருத்துவம் பார்க்கத் தொடங்கும் சசி என்ற இளைஞன் மையக் கதாபாத்திரம். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் மிக்க லட்சியக் கனவுகளும், நேர் வாழ்க்கை அதனுடன் முரண் நிற்கும் களமாக மாறுகிறது. நடைமுறை வாழ்வில் நுழையும் சசியின் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும் மாற்றங்கள், அவனுடன் தொடர்புடைய குடும்பங்களின் அமைப்பு, தனிமனிர்கள், அவர்களின் வாழ்க்கை முறை என்று நாவல் விரிகிறது.

ஹாருகோஷ் என்ற விவசாயி இடி விழுந்து ஊரின் பெரிய வாய்க்கலுக்கு அருகில் குறுங்காட்டில் இறப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. கிராமத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்க்கும் சசி அவர்களின் வாழ்வை நெருங்கி அறிபவனாகவும், அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளில்கூட அவனிடம் ஆலோசனை கேட்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஹாருகோஷின் மரணத்தை நிதானமாகக் கையாளும் சசி ஒரு சிறுவனின் இறப்பிலிருந்து மனப் போராட்டங்கள் நிறைந்தவனாக மாறுகிறான். மழைக் காலத்தில் மலேரியா பரவுகிறது. ஹாருகோஷின் மகள் மதிக்கு மருத்துவம் பார்க்க செல்கிறான். தினமும் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்த்து அவளைக் காப்பாற்றுகிறான். 

மதியின் அண்ணி குஸீமாவின் குணாதிசயம் நாவல் முழுவதுமே வசீகரிகக்கூடியதாக உள்ளது. நாவலில் அவள் அறிமுகமே அதைச் சொல்லும். அடுப்பிலிருந்து கொள்ளிக்கட்டையை எடுத்து அந்தி விளக்கேற்றுவாள். அவளுக்கும் சசிக்குமான உறவைச் சொல்லவேண்டும் என்றால் இன்று சொல்லப்படும் பெஸ்ட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். அந்த உறவு நாவல் முழுதும் வளர்ந்து வரும் விதத்திலேயே அது புலனாகும். நாவல் துவங்கும்போது எளிதில் உணர்ச்சிவசப்படுபவளாக, உடல்வலிமையும் தைரியமும் துடுக்கும் நிறைந்தவளாக இருக்கும் குஸீமா இறுதியில் நிதானித்து முடிவெடுப்பவளாகப் பக்குவமாக நிறம்மாறுவது படிப்படியாக நாவலில் நிகழ்கிறது. மதிமேல் சசிக்கு உள்ள அன்பும் அக்கறையும் கிராமத்து மனிதர்களிடையே உள்ள இயல்பான பிணைப்பைக் காட்டுகிறது. 

சசியின் தந்தை கோபால்தாஸ் ஒரு தரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியைப் பயன்படுத்தித் தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரிய வியாபாரியை மகளுக்குத் திருமணம் செய்விக்கிறார். தந்தைமேல் உள்ள கோபத்தால் அவன் அவளைக் கல்கத்தா அழைத்துச்சென்று ஒதுக்குப்புறமாக குடிவைக்கிறான். கிராமத்துப் பேதைப்பெண்ணின் வாழ்க்கையில் குடி, நடனம் போன்றவற்றைப் பலவந்தமாகத் திணிக்கிறான். சசி அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்தும் அவளால் இருக்க முடிவதில்லை. குடிக்கு அடிமையான அவளுக்குச் சகோதரனே குடிக்கத்தருவது நாவலின் முக்கியமான தருணம். நந்தலால் தன் தவறை உணர்ந்து அவளைக் குடும்பத்தில் சேர்க்க விழையும்போதும் அவளால் அது முடிவதில்லை.

யாமினிகவிராஜ் என்ற நாட்டு மருத்துவரின் மனைவி ஸேன்திதிக்கு பெரியம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இரவு பகலாக சசி அவளைக் கவனித்துக் காப்பாற்றினாலும் பேரழகியான அவள் தன் அழகை இழந்து ஒரு கண்ணை இழக்கிறாள். என்னை எதற்கு இப்படிக் காப்பாற்றினாய், சாகவிட்டிருக்கலாமே என்று அவள் கேட்கும்போது மீண்டும் சசி மனக் குழப்பத்திற்கு ஆளாகிறான். ஒவ்வொரு மனிதரிலிருந்தும் அவன் கேள்விகள் அதிகரித்தபடியே இருக்கின்றன.

நாடக நடிகனும் சசியின் நண்பனுமான குமுதன் கிராமத்திற்கு ஜாத்ரா என்னும் நாடகம் நடிக்க வருகிறான். மதியும் அவனும் காதல் கொள்கிறார்கள். சசியே பேசித் திருமணம் செய்துவைக்க வேண்டியதாகிறது. வாழ்க்கை பற்றிய எந்தப் பொறுப்புமின்றித் தன் விருப்பம்போல நாளைப்பற்றியக் கவலையின்றி நாடோடியாகத் திரியும் அவனுடன் தன் காதலால் கிராமத்து அறியா இளம்பெண்ணான மதியும் அவ்வாறே மாறுவது நாவலில் கவித்துவமான பகுதி. பிரவீரனை கண்டுகொண்ட மதனமஞ்சரி அவள்.

காயஸ்த தெருவில் யாதவ் என்ற யோகசாதகர் சசிக்கு நெருக்கமானவராக இருக்கிறார். அவர் சசியைத் தன் யோகப் பாதைக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் சசியிடம் பேசும்போது தன் இறப்பு தனக்குத் தெரியும் என்று சொல்லிவிடுகிறார். ஊர் முழுவதும் அந்தச் செய்தி பரவிவிடுகிறது. சொல்லிய சொல்லிற்காக அதை நிறைவேற்றுகிறார். 

யாதவின் சொத்துகள் அனைத்தையும் சசியின் பெயரில் எழுதிவைத்து கிராமத்தில் ஒரு மருத்துவமனை கட்டும்படி உயில் எழுதிவிடுகிறார். யாதவ் நினைவு மருத்துவமனையைக் கட்டிமுடித்து சசி மருத்துவம் பார்க்கிறான்.

சசி மீண்டும் மீண்டும் கிராமத்திலிருந்து வெளியேற விழைகிறான். ஆனால் கிராமத்தின், அதன் மக்கள்மீதான பிணைப்பு அவனை விடாமல் பற்றுகிறது.

குஸீமா ஊரைவிட்டுத் தகப்பனர் ஊருக்கே செல்வதிலிருந்து சசியின் வெறுமை தீவிரமாகிறது. தன் பேரழகை இழந்த ஸேன்திதி காலம்தாழ்ந்த பிள்ளைப் பேற்றில்  தன் மகனை அதே அழகுடன் பெற்றுவிட்டு உயிர் நீக்கிறாள். அந்தக் குழந்தை தன் தகப்பனாருடையது என்பதை அறியும் நேரத்தில் சசி தன் ஊரைத் துறக்க முடிவுசெய்கிறான்.

மருத்துவமனையை வேறொரு மருத்துவரிடம் ஒப்படைக்கும்போது மனச் சஞ்சலம் அடைந்தாலும் மன உறுதியைப் பிடித்துக்கொள்கிறான். ஆனால் அதற்குமுன் தகப்பனார் காசிக்குக் கிளம்பிவிடுவதால் மறுபடியும் சசி ஊரில் பெரிய குடும்பத்திற்கும் அழகிய குழந்தைக்கும், மருத்துவத்திற்கும் பொறுப்பேற்கத் தள்ளப்படுகிறான்.

இந்த நாவலில் பெண்கள் மனநிலை தடுமாற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள். குஸீமா முதல் யாதவின் மனைவி வரை. யாதவின் மனைவி பைத்தியக்கார அக்கா என்றே நாவல் முழுதும் சொல்லப்படுகிறாள்.

குஸீமாவின் கணவன் பரான் போன்ற கடின உழைப்பாளிகள் மண்ணில் கிடந்து உழைப்பைத் தவிர ஏதும் அறியாத அப்பாவிகளாக, வாழ்க்கைப் பற்றிய எந்தக் கேள்விகளும் அற்றவர்களாக வாழ்கிறார்கள்.

யாதவ், ஸேன்திதி போன்ற வயோதிகருக்கு வாழ்க்கைப்பட்ட பேரழகிகள் என்று சசி கடந்துவரும் மனிதர்கள் அவன் அகத்தைப் பாதிக்கிறார்கள். தந்தையின் குருவாக விளங்கும் பிரம்மச்சாரி என்பவருடனான விவாதத்தின்மூலம் தனக்கான பதில்களைத் தேடுகிறான்.

தன் தந்தை உள்ளிட்ட பலரின் எதிர்ப்பை மீறி ஸேன் திதியைப் பெரியம்மை நோயிலிருந்து சசி காப்பாற்றுகிறான். அவளே காலம் தாழ்ந்த பிள்ளைப்பேறில் உயிருக்குப் போராடும்போது அந்தக்குழந்தை தன் தந்தையுடையது என்று அறிந்ததும் மருத்துவம் பார்க்கச் செல்லாமல் தாமதிக்கிறான். 

அதட்டி உருட்டி மகனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசியின் தந்தை சிற்றின்பத்தின் விளைவாக ஓர் உயிரைக் காப்பாற்ற அவன்முன் பணிந்து நிற்கும் தருணம் அவர் வேறொரு ஆளாக மாறத்தொடங்குகிறார்.

யாதவ் என்ற யோகியை விழுந்து விழுந்து பணியும் மக்கள் கூட்டம் அவர் இறப்பிற்குப்பின் பணத்திற்காக இரவோடிரவாக அவர் வாழ்ந்த இல்லத்தைச் சிதைத்து அழிக்கிறார்கள்.

வாழ்வெல்லாம் பணம், ஏமாற்று, சிற்றின்பத்தில் கழித்த கோபால்தாஸ், மகனின் பொருட்டு அனைத்தையும் துறந்து செல்வதும், அவ்வளவு பெரிய குடும்பத்தில் தனக்கென ஒரு திருமண உறவை ஏற்படுத்த விழையாத சசியும் வினையும் விளைவுமாக இருக்கிறார்கள்.

இறப்பு, பிறப்பு, வாழ்க்கையின் பொருள் பற்றித் தேடித் தவிக்கும் இளம்மனம் ஒரு கட்டத்தில் மனிதத் திட்டங்களுக்கு எந்தப் பயனுமில்லை, இந்த வாழ்க்கை ஏதோ ஒரு சக்தி நடத்தும் பொம்மலாட்டம் என்று கண்டுகொள்கிறது.

நாவல் வாசித்து முடிக்கும்போது சாவகாசமாக வங்கத்தில் எங்கும் வழியும் நீரோட்டங்களைப்போல மனமும் எந்தச் சலசலப்பும் இன்றி அடங்கி அமைதியாகிறது. நமக்குமே சசியைப்போல வாழ்வின்மீது அபத்தமான ஒரு நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலாது. நான் வாசித்தவரை சிறந்த நாவல்கள் இந்த வெறுமை உணர்வை ஏற்படுத்த வல்லவையாகவே இருந்திருக்கின்றன.

ஆசிரியர் குறிப்பு:

இந்த நாவல் 1936ல்  ஆசிரியரின் இருபத்தெட்டாவது வயதில் எழுதப்பட்டிருக்கிறது.

 “என் எழுத்தில் கற்பனைக்கே இடமில்லை, கற்பனைக்கு உண்மை வடிவம் கிடையாது என்பது என் துணிபு. மனிதத் தன்மைக்கு எங்குமே மரியாதை இல்லை,”  என்று மனம்விட்டுப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் கடுமையாகப் போராடினார். உடல் நலிவால் வதைந்தார். பிடிவாதமான கொள்கைகள் உடையவர். மாணிக், கண்ணுக்கு நேராக உள்ளதை  நோக்குபவர். நாட்டுப்புற மண்ணையும் அதில் உழலும் மாந்தரையும் நோக்குபவர் என்று முன்னுரையில் ஸசீந்திரலால் கோஷ் குறிப்பிடுகிறார்.

மாணிக் நாற்பத்தெட்டாவது வயதில் வலிப்பு நோயால் மரணித்திருக்கிறார். இயற்பெயர் பிரபோத பந்தோபாத்யாய. 192 சிறுகதைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். நாவல்களுள் பொம்மலாட்டம் மற்றும் பத்மா ஆற்றுப் படகோட்டி என்ற இரண்டும் முதன்மையானவை. ஆறடி உயர வசீகரத் தோற்றமும் பேச்சும் பார்வையும் வாய்க்கப்பெற்ற ஆளுமை என்று இந்த நாவலின் ஆசிரியர் குறிப்பில் உள்ளது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.