மின்னல் சங்கேதம் – 1

This entry is part 1 of 12 in the series மின்னல் சங்கேதம்

தமிழில்: சேதுபதி அருணாசலம்

பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா எழுதிய ‘ஆஷானி சங்கேத்’ நாவலின் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் – 1

ஆற்றங்கரையில் பனைமரத்தாலான படித்துறை அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு பெண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். ஒருத்தி இளையவள். முப்பது வயதுக்குக் குறைவாக இருக்கலாம். இன்னொருத்தி நடுவயதினள்.

மூத்தவள் கத்தினாள்: “பாமுன் தீதி (’பிராமண அக்கா’), நதியிலேருந்து வெளிய வா. முதலைங்க ஆத்துல இறங்க நேரம்.”

இளையவளுக்கு தண்ணீரை விட்டு வெளியே வர மனமேயில்லை. கழுத்தளவு மூழ்கியபடி, பதில் சொல்லாமலே இருந்தாள்.

“இனிமே பாமுன் தீதியோட நதிக்கு வரப்போறதில்ல” என்று முணுமுணுத்தாள் மூத்தவள்.

“கோவப்படாத புந்திமா! தண்ணில இறங்கிட்டா வெளிய வரனும்னு எனக்குத் தோன்றதேயில்லை”

“ஏன் அப்படி பாமுன் தீதி?”

“நான் முந்தி இருந்த கிராமத்துல ஒருமுறை கடும் பஞ்சம் வந்திருச்சு. நீ அப்படியொரு பஞ்சத்தைப் பார்த்திருக்கவே முடியாது. ஒரேயொரு சதுப்புநிலம் இருந்துது. அதுவும் கோடையில் வறண்டுரும். ஒரேயொரு வாளி தண்ணிலதான் நாங்க குளிக்கனும். ஆனா அதுக்குப் பேரு ‘தாமரைக் குளம்’”

மேலும் சிரித்தபடியே சொன்னாள், “சித்திரை மாசம் தண்ணி இருக்காது, ஆனால் பேரோ ‘தாமரைக் குளம்’”

அப்போது ஒரு சிறுமி அங்கே வந்து, “அனங்கா தீதி, எண்ணெய்க்காரர் உன் வீட்டுக்கு எண்ணெய் கொண்டு வந்திருக்காரு. உன் வீட்ல காத்திருக்கிறார். நான் உன்னை ஆற்றங்கரையில் பார்த்து சொல்றேன்னு சொல்லீட்டு வந்தேன்” என்றாள்.

அனங்கா இன்னும் சிரித்தபடியே சொன்னாள், “நான் முந்தி இருந்த கிராமத்தோட தாமரைக்குளத்தைப் பத்தி சொல்லிட்டிருந்தேன். கோடையில் தண்ணி இருக்காது, பேரென்னவோ ‘தாமரைக்குளம்’”

“அது எங்க இருக்கு தீதி?”

”நான் இங்கே வரதுக்கு முந்தி இருந்த கிராமம்”

“அது எங்க இருக்கு?”

“அந்த ஊருக்குப் பேரு ‘பாட்சாலா’. அம்பிக்பூருக்கு அருகில் இருக்கிறது.”

“உன் மாமியார் ஊரா?”

“இல்லை, அவங்க இருக்கறது நாடியா மாவட்டத்தில ஹரிஹரபூர் கிராமம். அங்க இருக்கறது ரொம்ப கஷ்டமா இருந்ததால தாமரைக்குளம் இருந்த கிராமத்துக்கு இடம்பெயர்ந்தோம்.”

“அப்புறம்?”

“அங்கேயிருந்து இங்கே வந்துட்டோம்”

அனங்கா ஆற்றைவிட்டு வெளியேறி வீட்டுக்குப் போனாள்.

அந்த கிராமத்தில் அவர்கள் ஒரு குடும்பம்தான் பிராமணர்கள். மற்றவர்களெல்லாம் கோனார்களும், காபாலிகள் என்ற விவசாய ஜாதியினர்களும். நதிக்கு அருகிலிருந்த அந்த கிராமம் சமீபத்தில் உருவானது. பன்னிரண்டு பதிமூன்று வருடங்களுக்கு முன் உப்பு நீர் வெள்ளம் ஏற்பட்டு பஸீர்ஹாட் கிராமத்தின் விளைச்சல் நிலங்களைப் பாழாக்கியபோது, விவசாயிகள் இங்கே இடம்பெயர்ந்து, குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி, இந்த கிராமத்தை உருவாக்கியிருந்தார்கள். அதனால் இந்த ஊர் இன்னும் ’நதுன்காவ்ம்’ – ‘புது கிராமம்” என்றே அழைக்கப்பட்டது. சிலர் இந்த ஊரை “சோர் போட்லா” என்றும் அழைத்தார்கள். ஏனென்றால் இந்த ஊர் போட்லா நதிக்கரையில் இருந்தது.

அனங்காவின் வீடு கோனார்கள் குடியிருப்பின் இறுதியில் இருந்தது. களிமண்ணாலான இரண்டு அறைகளும், ஓலைக்கூரையும் கொண்டது. பப்பாளி மரங்களும், சேப்பங்கிழங்குகளும் முற்றத்தில் அழகாக நடப்பட்டிருந்தன. பரங்கிக்கொடிகள் மூங்கில் படல்கள் வழியே கூரை மேல் படர்ந்திருந்தன. வெண்டைக்காய், கத்திரிக்காய்ச்செடிகள் சமையலைறைக்கு வெளியே வளர்ந்துகொண்டிருந்தன.

அனங்கா தன் வீட்டு வாசலில், பத்யிநாத்-கோலு இரண்டரை சேர் கடுகு எண்ணெயுடன் காத்திருப்பதைப் பார்த்தாள். அதை அளந்து ஊற்றியபின், ”அம்மா, இன்னும் கடுகு எண்ணெய் தேவைப்படுமா?” என்றார்.

“வீட்டுக்காரர் வந்ததும் சொல்லியனுப்பறேன். இப்போதைக்கு இது போதும். இது ஒரு மாசத்துக்கு வரும்” என்றாள்.

”அப்புறம், ஆறு பைசா?”

“எதுக்கு? உங்களுக்குத்தான் புண்ணாக்கு கிடைக்குதே, அது போதாதா?”

”விதைகளை அரைக்கனுமேம்மா. கடுகு புண்ணாக்கில காசு கிடைக்கறதில்ல. நாங்களும் சாப்பிடனுமே?”

”சரி, அதையும் அவர்க்கிட்டையே கொடுத்தனுப்பறேன்.”

அனங்காவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவனின் செல்லப்பெயர் படோல் (Patol), பதினொன்று வயது. இளையனுக்கு எட்டு வயது. அவன் இளையவன் என்பதால் அவனை இன்னும் கோக்கா (Khoka – சிறு பையன்) என்றே அழைத்தார்கள். படோலுக்கு வீட்டு வேலைகள் செய்வதில் அதிக விருப்பம். காய்கறிகளை அவன்தான் நட்டுப் பயிராக்கியிருந்தான். அவன் ஒரு ஓரமாக உட்கார்ந்து வேலி செய்வதற்காக மூங்கில்களைப் பிளந்து கொண்டிருந்தான். அவன் அம்மா அவனை அழைத்து, “அதை ஒரு ஓரமாகப் போட்டுட்டு வா, படோல். பால்காரர் வீட்டுக்குப் போய், இன்னைக்கு ஏன் பால் கொண்டுவரலைன்னு பாத்துட்டு வா” என்றாள்.

மூங்கில்களைப் பிளந்துகொண்டே படோல், “மாட்டேன்” என்றான்.

”நீ போகலைன்னா வேற யார் போறது? கேஷ்டோதா வீட்டு வரைக்கும் நான் போய்ட்டு வர முடியுமா?” என்றாள்.

”இன்னும் அவ்வளவு நேரமாகலையே. இந்த வேலியைச் செஞ்சு முடிச்சிட்டுப் போறேன்.”

“இல்லை, இப்போவே போ”

“வேண்டாம்மா, அப்பா வந்தப்புறம் என்னை வேலி செய்ய விடமாட்டார். பார், ஆடு நம்மோட கத்திரிச்செடிய எப்படித் தின்னுட்டுது!”

“நான் போறேம்மா, அண்ணன் வேலி செய்யட்டும்” என்றான் கோக்கா.

அனங்கா அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. “கோக்கா, அந்தச் செடியிலிருந்து ரெண்டு மிளகாய்களைப் பறிச்சிட்டுவா. உனக்கு மிளகாய் போட்ட அவல் செய்து தரேன்” என்றாள்.

கோக்கா விடாமல் கேட்டான், “அப்போ பால்?”

”வேண்டாம்”

“ஏன், என்னால் முடியாதுன்னு நினைக்கறியா?”

”உன்னை நம்ப முடியாது. பூராத்தையும் கீழே சிந்திடுவே”

”ஒருமுறை அனுப்பிப் பாரேன். என்னால் முடியலைன்னா, அடுத்த முறை கேட்கவே வேண்டாம்”

”அடுத்த முறையா? அப்போ இன்னிக்கு ஆற்றங்கரைல கொட்டின ரெண்டு சேர் பால்? ஏன் எப்போ பார்த்தாலும் எல்லாத்துக்கும் முன்னாடி முன்னாடி வந்து நிக்கற? போய் சொன்னமாதிரி ரெண்டு மிளகாய் கொண்டு வா, போ”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே படோலின் அப்பா கங்காசரண் சக்கோத்தி (சக்ரவர்த்தின் என்பதன் மரூஉ) வீட்டுக்கு வந்தார். “எல்லாரும் எங்கே போய்ட்டீங்க? இந்த இந்த மீனைப் பிடி. டினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல? ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க? காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா?”

”காலங்காத்தலயா? கிட்டத்தட்ட மதியமே ஆயாச்சே?”

”என்னவோ! பிராமணப் பசங்க நாள் பூராவும் மூங்கிலையும், கரும்பையும் வச்சு இப்படி விளையாட மாட்டாங்க.”

”ஆனா, நம்ம கத்திரிக்காய்ச் செடிகளையெல்லாம் ஆடுகள் தின்னுடுதே?”

”சாப்பிடட்டுமே. இதோ பார், பிராமணப்பசங்க காபாலிப் பசங்க மாதிரி கத்தி கபடாலெல்லாம் வேலை செய்யறதில்ல”

அனங்கா, “ஏன் அவன் பின்னாடியே நிக்கறீங்க? அவன் அந்த வேலியைத்தான் செஞ்சு முடிக்கட்டுமே, இன்னிக்கு லீவுதானே”

கங்காசரண் சக்கோத்தி கேட்கவில்லை. “வேண்டாம், இதெல்லாம் கெட்ட பழக்கம். அவன் ஒரு பிராமணப் பையன்.”

படோல் அரைமனதாக வேலியைத் தள்ளிவைத்துவிட்டு எழுந்தான்.

அனங்கா கணவனிடம், “ஹரிஹர் சந்தைக்குப் போய்ட்டு வாங்களேன்” என்றாள்.

“ஏன்?”

”புதுசா வெல்லம் வந்திருக்கான்னு பாத்துட்டு வாங்க”

”கவலைப்படாதே. அதை நான் இங்கேயே வாங்கித்தரேன். காசு கொடுத்து வாங்கவே வேண்டாம், இங்கே என் மேல மக்கள் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்காங்க”

யாரோ வெளியேயிருந்து அழைத்தார்கள், “சக்கோத்தி மஷாய், வீட்ல இருக்கீங்களா?”

கங்காசரண், “யாரு லாம்லாலா? ஒரு நிமிஷம் இரு, வந்துட்டேன்” என்றார்.

வந்தவர் மலேரியாவால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஆளைப் பார்த்தாலே அது தெரிந்தது. கங்காசரணைப் பார்த்ததும் கைகளை நீட்டி, “பார்த்து சொல்லுங்க” என்றார்.

”அப்படியெல்லாம் பார்க்க முடியாது. வந்து உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வெடு. அவ்வளவு தூரம் நடந்து வந்திருக்க, நாடி ரொம்ப வேகமா இருக்கும். இது களை கொத்தற மாதிரி இல்ல. மருத்துவப் பரிசோதனைன்னா கவனமா, அவசரப்படாம செய்யனும். நேத்திக்கு எப்படி இருந்தே?”

“ராத்திரி காய்ச்சல் இருந்தது. உடம்பெல்லாம் பாரமா இருந்துது.”

“ராத்திரி என்ன சாப்பிட்ட?”

”கொஞ்சம் சோறுதான் சக்கோத்தி மஷாய், வேற என்ன? ஆனா அதைச் சாப்பிடக்கூட பசி எடுக்கல”

”அதானே பார்த்தேன், அரிசிச் சாப்பாட்ட எதுக்கு சாப்பிட்ட? காய்ச்சல் எப்படிப் போகும்?”

“இனிமே சாப்பிடமாட்டேன்.”

“அது இருக்கட்டும். ஆனா ஏற்கனவே சாப்பிட்டதுக்கு இப்போ கஷ்டப்பட்டுத்தான் ஆகனும். இந்த ரெண்டு மாத்திரைய தேன், பாரிஜாத இலையோட சேத்து சாப்பிட்டுப்பாரு, பார்க்கலாம்”

ராம்லால் மருந்தை வாங்கிக்கொண்டு கிளம்பினார், ஆனால் கங்காசரண் அவரை மீண்டும் கூப்பிட்டார். “ராம்லால், புதுசா கடுகு சாகுபடியானதா கேள்விப்பட்டேனே? ரெண்டு காதா (katha) எனக்கு அனுப்பிவை. எனக்கு சந்தைல கிடைக்கற எண்ணெய் பிடிக்கறதில்லை. நான் எப்போவுமே எனக்கு வேணுங்கறதை அரைச்சு எடுத்துக்குவேன்”

”கண்டிப்பா. சாயந்திரம் மகன்கிட்ட கொடுத்து அனுப்பறேன். இந்த வருஷம் விளைச்சல் அவ்வளவு நல்லா இல்ல சக்கோத்தி மஷாய். கார்த்திகை மாசத்து மழையால புழு வந்திடுச்சு.”

அவர் போனதும் கங்காசரண் மனைவியிடம், “பார்த்தியா, எனக்கு என்ன வேணுமோ அதைக் கேக்கலாம், யாரும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்க”

அனங்கா கங்காசரணைப் பெருமையாகப் பார்த்தாள். அவரை அன்போடு, “சரி, நேரமாகுது குளிச்சிட்டு வாங்க. காலையில வெறும் பட்டாணியும், வெல்லமும் சாப்பிட்டதோட சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்ககிட்ட படிக்கிற பசங்கள்லாம் வந்திடுவாங்க. எண்ணெய் வேணுமா?” என்றாள்.

நதியில் குளித்தபின் கங்காசரண், ஊறவைத்தை பட்டாணியும், ஒரு சிறுதுண்டு வெல்லமும் சாப்பிட்டான். முகம் திருப்தியாக இருந்தது. அனங்கா, “பிஸ்வாஸ் மஷாயிடம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கறதப் பத்தி பேசினீங்களா?” என்றாள்.

”அதெல்லாம் நடக்கும். அவங்களே கட்டித்தரதா சொன்னாங்க”

“எத்தனை பேர் படிக்க வருவாங்க?”

”ரெண்டு கிராமத்திலேருந்து பசங்க வரப்போறாங்க. அதில்லாம ஏற்கனவே ‘ப்ரைபேட்’ (private) வேற இருக்காங்க. இந்தப் பகுதியில என்னை மாதிரி ஒரு படிச்ச ஆள எப்படி எதிர்பார்க்கமுடியும்? எல்லாரும் என்னை இங்கேயே வச்சிக்கப் பார்க்கறாங்க”

“அது நல்லதுதான். ஒரு ஊர்லேருந்து இன்னோரு ஊர்னு அலைஞ்சிட்டே இருக்க முடியுமா? நாம இங்கேயே தங்கீடலாம். எனக்கு இங்கே பிடிச்சிருக்கு. இங்கே கிடைக்காததே இல்ல. நாம வாய்விட்டு கேட்டாப் போதும்.”

“இரு, அவசரப்படாதே. இவங்கள எல்லாப் பக்கமிருந்தும் சுத்தி வளைக்கனும். இது விவசாய கிராமம். பருப்பு, காய்கறி, என்ன வேணுமோ அதெல்லாம் கேட்டா கிடைக்கனும். இந்த ஊர்ல வேற பிராமணனும் இல்ல. பூசாரியும் இல்ல. என்னை லக்ஷ்மி பூஜை, ஏன் மானஸா பூஜையெல்லாம் கூட செய்யச் சொல்லி இருக்காங்க.”

”அப்படின்னா எனக்கு வேண்டாம்”

“ஏன்? ஏன்?”

”தாழ்ந்த ஜாதி காபாலிகளோட பூசாரியாகப் போறீங்களா? எல்லாரும் என்ன சொல்லுவாங்க!”

“யாருக்குத் தெரியப்போகுது? இது மாதிரி தூரப்பிரதேசத்தில யாரு வந்து சோதனை செய்யப்போறாங்க? நீ தேவையில்லாம கவலைப்படற.”

“ஆனா அந்த சடங்கெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? இந்த தாழ்ந்த ஜாதிக்காரங்களோட கடவுளெல்லாம் ரொம்ப உக்கிரமா இருக்கும். எனக்கு பயமா இருக்கு. நமக்குச் சின்ன பசங்க இருக்காங்க.”

“அப்படி பயந்தா வாழ்க்கைய நடத்த முடியுமா? ஷஷ்டி, மஹாகாளி பூஜையெல்லாம் பஞ்சாங்கத்துல இருக்கு. அதைப் படிச்சுப் பாத்தா போதும்.”

“ஏதோ, நீங்க சொன்னா சரி.”

“பயப்படறத்துக்கு ஒண்ணுமே இல்லை பெள. நீயே பாரு, இவங்க எல்லாத்துக்கும் நம்மள சார்ந்து இருக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா, நம்ம ஜீவனத்தப்பத்தி நாம கவலையே பட வேண்டாம்.”

அனங்காவுக்கும் அது தெரியும். அவளுக்குத் தன் கணவன் மீது அளவில்லாத நம்பிக்கை இருந்தது. ஆனால் அவள் கவலை அதைப் பற்றியது அல்ல. அவள் கணவனின் நிலையற்ற தன்மையைப் பற்றி அவளுக்குத் தெரியும். அவனால் ஒரு இடத்தில் ஒரு வருடத்துக்கு மேல் இருக்க முடியாது. முன்பு இருந்த வாசுதேவ்பூர் அவ்வளவு மோசமான ஊர் ஒன்றும் இல்லை. அவர்கள் காலூன்றத் தொடங்கிய நேரத்தில், “வேற எங்கெயாவது போலாம் பெள. இந்த இடம் எனக்கு இப்பல்லாம் எனக்குப் பிடிக்கல” என்றான்.

அப்படி இடம்பெயர்வது ஒரு குடும்பத்துக்கு ஆகக்கூடிய காரியமல்ல. உண்மைதான், அவனுக்கு வாசுதேவ்பூரில் எட்டோ பத்தோ ரூபாய்தான் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர சம்பளமாகக் கிடைத்தது. இங்கே எல்லாரிடமிருந்தும் இலவசமாக நிறைய கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், இங்கே இருந்தால்தான் முடியும். இந்த ஊரில் அவன் நிலையாகத் தங்கினால்தான் அது நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

கொஞ்சநேரம் கழித்து நான்கைந்து சிறுவர்கள் கங்காசரணிடம் பாடம் கற்க வந்தார்கள். ஒவ்வொருவரும் சிலேட்டு, புத்தகம், நூல் கட்டிய மைக்குடுவையைக் கொண்டுவந்திருந்தார்கள்.

“நான் இப்பதான் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் தூங்கப்போறேன். முந்தி சொல்லிக்கொடுத்த பாடங்களைப் படிச்சிட்டு இருங்க. அது சரி, நோஷு, உங்க தோட்டத்துல கத்திரிக்காய் விளையுதா?” என்றான் கங்காசரண்.

அந்தச் சிறுவன் பயந்தபடியே, “ஆமாம், குரு மஷாய்” என்றான்.

“மறுபடியும் குரு மஷாய்னு கூப்டறயே! ‘ஸார்’னு கூப்பிடுன்னு முன்னாடியே சொன்னேனே, எங்க சொல்லு?”

“ஆமாம், ஸார்”, என்று முனகினான் அந்தச் சிறுவன்.

“சரி, போய் எழுதப்பழகு. நாளைக்கு கத்திரிக்காய் கொண்டுவரனும், சரியா?”

“சரி ஸார்.”

சிறுவர்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து சத்தம் போட்டுப் படிக்கத் தொடங்கினார்கள். வீட்டில் எவரும் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ இயல்வது சாத்தியமேயில்லை. அனங்கா அவள் கணவனிடம், “தயவுசெஞ்சு, அவங்கள சத்தம் போடாம இருக்கச் சொல்லுங்க. என் காது கிழிஞ்சு போய்டும் போல இருக்கு.” என்றாள்.

கங்காசரண் மாணவர்களிடம், “படிச்சது போதும். பெருக்கல் வாய்ப்பாட்டை சிலேட்டுல எழுதிப்பழகுங்க. நான் தூங்கி எழுந்ததும் சரி பார்க்கறேன்.” என்றான். பின் தன் மனைவியிடம், “இன்னிக்கு இவங்க ஆறு பேரு. நாளைக்கு ஏழெட்டு பசங்க கிழக்குப் பக்கத்துலருந்து வரப்போறாங்க. பீம்கோஷ் என்ன சொன்னான் தெரியுமா? ‘பாபா-தாக்கூர், இந்தப் பக்கத்துல இருக்க எல்லா பசங்களையும் உங்கிட்ட பாடம் கத்துக்க அனுப்பப் போறேன். நேதா காபாலி இந்தப் பசங்களுக்கு எதுவும் சொல்லித்தர முடியல. பிராமணர்கள் படிச்சவங்க. அதனாலதான் ‘ப்ராஹ்மிண்-பண்டிட்’னு சொல்றாங்க’ன்னான்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னான்.

கங்காசரண் மாணவர்களுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுத்தான். தூங்கி எழுந்ததும் ஒவ்வொரு மாணவனுடனும் நிறைய நேரம் செலவிட்டான். ஒருவன் கணித வாய்ப்பாட்டை மனனம் செய்துகொண்டிருந்தான். இன்னொருவன் முதல் முறையாக ஆங்கிலப்புத்தகத்தைப் பயின்று கொண்டிருந்தான். யாரும் கங்காசரணை அக்கறையில்லாத வாத்தியார் என்று சொல்லிவிடமுடியாது. மாலை மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கைத்தடியை எடுத்துக்கொண்டு மாலை நடைக்குக் கிளம்பினான். “ஏதாவது சாப்பிட்டுட்டுப் போங்க. பக்கத்துவீட்டுக்காரங்க பால் தந்தாங்க. பாயசம் செஞ்சேன்.”

அவன் மாலைச் சிற்றுண்டி சாப்பிட்டு வெகு நாட்களாகின்றன. கடந்த மூன்று வருடங்களில் ஏகப்பட்ட கஷ்டங்களும், மாற்றங்களும் உண்டாகியிருந்தன. அதனால் மனைவியின் வேண்டுகோள் அவனுக்குப் புதிதாக இருந்தது.

“பசங்களுக்குக் குடுத்தியா?” என்று மனைவியிடம் கேட்டான்.

”அவங்களப் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிடுங்க.”

“இந்த ஊர்ல நமக்கு எவ்வளவு வசதியா இருக்கில்ல?”

அனங்கா ஒப்புதலாகப் புன்னகைத்தாள். ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. லக்ஷ்மி கடாட்சத்தைக் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது முறையல்லவே! அது லக்ஷ்மியைக் கோபப்படுத்தும் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

கங்காசரண் பாத்திரத்தில் கொஞ்சம் பாயசத்தை மிச்சம் வைத்து, “இது உனக்கு.” என்றான்.

”வேண்டாம், வேண்டாம். மிச்சம் வைக்காதீங்க”

“அப்போ உனக்கு?”

”நான் ஏற்கனவே தனியா எடுத்து வச்சிட்டேன். நீங்க கவலைப்படாதீங்க.”

”இருந்தாலும் எனக்குப் போதும். இப்போ போய் பிஸ்வாஸ் மஷாயைப் பார்த்து எல்லாத்தையும் முடிவு செய்யனும்”

“சீக்கிரம் வந்துடுங்க. இருட்டானதும் காட்டுப்பன்றிகள் வெளியே வரும்னு சொல்றாங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”

கங்காசரண் நிழல்படர்ந்த தெரு வழியே சந்தோஷமான குடும்பச்சூழலைக் கற்பனை செய்தபடியே நடந்து சென்றான். இந்த வெற்று நிலங்களெல்லாம் விவசாயம் செய்ய ஏற்றவை. எப்படியாவது நிலச்சுவாந்தார் பேனர்ஜியிடமிருந்து கொஞ்சம் நிலத்தையும், பிஸ்வாஸ் மஷாயிடமிருந்து கலப்பையையும் கடனாகப் பெற்றுக்கொண்டால், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பற்றிக் கவலையேபட வேண்டாம்.

அவன் அதைப் பற்றி பல வருடங்கள் கவலைப்பட்டிருக்கிறான்.

ஒருவேளை இந்தமுறை கடவுள் அவனை சரியான இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறாரோ, என்னவோ!

பிஸ்வாஸ் மஷாயும் அவனை அந்த ஊரிலேயே தங்கவைத்துக் கொள்ள உற்சாகம் காட்டினார். ”நீங்க எங்கள் மணிமுடியில் ஒரு ரத்தினம். எல்லா ஏற்பாட்டையும் நான் பாத்துக்கறேன்” என்றார்.

”நீங்க ஒரேயொரு சின்ன பள்ளிக்கூடத்தை மட்டும் கட்டீட்டா…”

“எல்லாம் செஞ்சிடலாம். அதுவரைக்கும் உங்க வாழ்க்கைப்பாட்ட நாங்க பாத்துக்கறோம். குடும்பத்துல எத்தனை பேர்?”

“நானும், மனைவியும், ரெண்டு பசங்களும் மட்டும்தான்”

பிஸ்வாஸ் மஷாய் மனதுக்குள் கணக்குப்போட்டுவிட்டு, “மாசம் பதினைஞ்சு காதா அரிசி இருந்தா போதுமா?”

“ஓ! அது போதும்”

“அது போக, வழக்கம்போல பருப்பு, மிளகாய், எண்ணெய்… அப்புறம், உங்களுக்குப் புரோகிதத்தில இருந்தும் கொஞ்சம் வரும்படி கிடைக்குமே?”

“ஆமா, அதைப் பத்தி ஏற்கனவே முடிவு செஞ்சுட்டேன். அதனாலதான் சமஸ்கிருதம் கத்துக்கிட்டேன். அது அவ்வளவு சுலபம் கிடையாது. எல்லாரும் அதை சரியாப் பேச முடியாது. இதைக் கேளுங்க, ‘த்யாயே நித்யம் ரஜத்கிரிநாபம் சாருசந்த்ரபதங்ஸம் – ம் – பரஷும்ரிகபரபிதிஹந்த – ம் – ரத்னகல்பஜ்வலன்ங்…’”

“ஆஹா, பிரமாதம்! பிரமாதம்!”

“இதுக்கு அர்த்தம் என்ன சொல்லுங்க?”

“எனக்கு எப்படி ஸ்வாமி அர்த்தம் தெரியும்? நான் வெறும் சாதாரண விவசாயி. ஆரம்பப்பாடம் படிச்சதோடு சரி, ஞாபகம் இருக்கா?
‘பறவைகள் கீச்சுகின்றன, ராத்திரி முடிகின்றது
தோட்டத்தில் பூக்கள் மலர்கின்றன’
பாத்திங்களா, பல வருஷமாச்சு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு”

”நல்லது, ரொம்ப நல்லது” என்று கங்காசரண் உற்சாகப்படுத்தினான்.

பிஸ்வாஷ் மஷாய் சந்தோஷமாகத் தொடர்ந்தார். “நான் சின்னபிள்ளையா இருக்கும்போதே அப்பா போய்ச் சேந்துட்டாரு. நாங்க அண்ணன் – தம்பி ரெண்டு பேரு. எப்படியோ நிலம் சர்வே எடுத்தப்போ ஒரு தூரத்து சொந்தக்காரர் சொத்தையெல்லாம் சுருட்டிக்கிட்டாரு.”

“அது எங்கே?”

”டப்தோலி பக்கத்துல சித்ரங்கபூர். டப்தோலி மாட்டு சந்தை ரொம்ப பிரபலம். இந்தப் பக்கத்துலயே ரொம்பப் பெரிசு.”

”ஓ! அப்போ நீங்க அங்கதான் இருந்தீங்களா?”

”ஆமா, ஆனா அது ரொம்ப கஷ்டமான சந்தை. ஒண்ணு பூர்விக நிலத்தை மறந்திடனும் – இல்லை பசில சாகனும். நானும், என் பால்ய நண்பன் பிஷ்டு ஸாஹ் ரெண்டு பேரும் கிராமத்தை விட்டுக் கிளம்பி, விவசாயத்துக்குத் தோதான நிலம் தேடி அலைஞ்சோம். சில பேரு விவசாய நிலம் இங்கே சல்லிசா கிடைக்கும்னாங்க, சில பேரு ‘வேண்டாம், அங்கப் போகாதீங்க’ன்னாங்க. ரொம்ப கஷ்டகாலம். ஐம்பது ரூபாய்க்குக் குறைவா எங்கேயுமே எதுவும் கிடைக்கல.”

”விவசாய நிலமா?”

அந்த சமயம் பிஸ்வாஸ் மஷாய் வீட்டுக்குள்ளிருந்து சங்கொலி கேட்டது. சட்டென்று கங்காசரண் எழுந்து நின்றான். “அடடா! சாயங்காலமாச்சே. நான் கிளம்பறேன். சந்தியாவந்தனம் செய்யனும்” என்றான்.

உண்மையில் அவனுக்கு மனைவி சொல்லியிருந்த காட்டுப்பன்றிகளின் நினைவு வந்திருந்தது. இந்தப் புதிய கிராமத்தைச் சுற்றி இன்னும் நிறைய அடர்ந்த வனப்பகுதிகள் இருந்தன. முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பிஸ்வாஸ் மஷாய் சொன்னார், ”ஆமா, ஆமா. ஆனால், உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, இங்கே என் வீட்டு பூஜையறையிலேயே சந்தியாவந்தனம் செய்யலாம். கங்காஜலம் வச்சிருக்கோம். நாங்க தாழ்ந்த ஜாதியா இருந்தாலும், எங்க வீட்டுப் பெண்கள் வாய்ல குளிக்காம பச்சத்தண்ணி கூட படாது. எல்லாம் சுத்தபத்தமா இருக்கும். நீங்க இங்கே பூஜை செஞ்சா எங்க வீடும் புனிதமாகும்.”

”இருக்கட்டும் பரவாயில்லை. அதான் நாங்க இங்கேயே வந்துட்டோமே, அதெல்லாம் இன்னொரு நாள் நிதானமா செய்யலாம். நான் இப்போ கிளம்பறேன்.”

“என் கதையையாவது முழுசா கேட்டுட்டுப் போங்களேன்.”

”அதையும் இன்னொருநாள் கேட்டுக்கறேன். சந்தியாவந்தன நேரத்துல வேற எதுலயும் மனசு போகாது. பிராமணனாச்சே, தினப்படி அனுஷ்டாங்களை விட்டுட முடியாது.”

கங்கசரணனின் குரல் பக்தியில் கனிந்து உருகியதுபோல் ஒலித்தது.

(தொடரும்)

Series Navigationமின்னல் சங்கேதம் – 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.