தேகயாத்திரை

Soul – Movie Review

வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்?

இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் ஷொஷோனி (Shoshoni) பிரிவினரிடம் புழங்குகிறது:

ஒரு ஊரில் ஓநாயும் நரியும் வசித்து வருகின்றன. ஓநாயின் பேச்சை எப்போதுமே குள்ளநரி கேட்காமல் நடந்து கொண்டிருந்தது. ஓநாய் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே குள்ளநரி செயல்படும். குள்ளநரியிடம், “இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வித்தை உனக்குத் தெரிய வேண்டுமா? அவர் வீழ்ந்த இடத்திற்கு அடியில் பூமியைத் துளைத்துச் செல்லும் அம்பை விட்டால், மாண்டவர் மீள்வார்!”, என ஓநாய் சொல்கிறது.

ஓநாய் என்ன சொன்னாலும் சிவப்புக் கொடி தூக்கும் குள்ளநரி, “அதெல்லாம் வேண்டவே வேண்டாம். செத்தவர் செத்தவராகவே இருக்கட்டும். இறந்தவரையெல்லாம் இப்படி உயிர்ப்பித்தால், பூமி பாரம் தாங்காது.” என்றது. அப்போதைக்கு அதற்கு “சரி” என்று தலையாட்டி வைக்கிறது ஓநாய். எனினும், தனிமையில் சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டுகிறது ஓநாய். குள்ளநரியின் மகனை முதல் பலியாகக் கொல்ல முடிவு செய்கிறது. இரவோடிரவாக கொன்றும் விடுகிறது.

காலையில் மகனின் மரணத்தைப் பார்த்த குள்ளநரி அரற்றி பிழற்றிக் கொண்டு ஓநாயிடம் கதறிக் கொண்டே வந்தது. “என் மகன் அகால மரணம் அடைந்துவிட்டான். அவனை உயிர்ப்பித்துத் தர முடியுமா? அவன் வீழ்ந்த நிலத்திற்கடியில் பாணத்தை விட்டு அவனை மீண்டும் நடமாட வைப்பாயா?” என்று இறைஞ்சுகிறது நரி. ஓநாய், “அதெப்படி? எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்று நீதானே நேற்று சொன்னாய்! உனக்கு மட்டும் எப்படி தனி நியாயம்?” எனக் கேட்க, சாவுத்துயரில் தோய்ந்த நரி, அன்றைய நாளில் இருந்து அந்த வித்தையை பலிக்காமல் போக சபிக்கிறார்.

டிஸ்னி நிறுவனத்தின் பிக்ஸார் கிளையின் அடுத்த படம் இது போன்ற இரு மாந்தரை மையமாக வைத்து “சோல்” (Soul – ஆன்மா) படத்தை வெளியிட்டு இருக்கிறது. வெள்ளித்திரைகளில் படம் வெளியாகவில்லை. சின்னத்திரையான டிஸ்னி+ மூலமே இதைப் பார்க்க முடியும். பியானோ வாசிப்பாளர் பெயர் ஜோ. சிறுவர்களுக்கு வாத்தியங்களைக் கற்றுத் தருகிறார். ஒரு பக்கம் பள்ளிக்கூடத்தில் நிரந்தர வேலை உறுதியாகும் வாய்ப்பு. இன்னொரு பக்கம், ஷ்ரேயா கோஸல் போன்ற ஆதர்ச + புகழ்பெற்ற பாடகியின் பக்கவாத்தியமாக விரும்பியதை வாசித்து ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளும் வாய்ப்பு. சாலை விபத்தில் கிட்டத்தட்ட இறக்கிறார். மரணத்தின் வாயிலில் அவ்வுலகம் செல்கிறார். அங்கே பல்வேறு உயிர்களையும் இன்ன பிற ஆன்மாக்களையும் சந்திக்கிறார்.

அவருக்கோ மீண்டும் பூமிக்குள் வந்துவிட ஆசை. இப்பொழுதுதான் வாழ்நாள் லட்சியம் சாத்தியம் ஆகப் போகிறது. காலையில் நிரந்தர வருமானம். மாலையில் கனவு உத்தியோகம். ஒவ்வொரு நாளும் விதவிதமாக இசையில் மூழ்கலாம். பியானோ வாசிப்பில் லயிக்கலாம். கேட்போரையெல்லாம் சொக்க வைக்கலாம். அந்த நேரம் பார்த்து மரணம். ஆசையில் மண்.

இன்னொரு பக்கம் அவ்வுலகத்தில் “22” என்னும் ஆன்மாவிற்கு மீண்டும் பூமிக்கு வரப் பிடிக்கவே பிடிக்கவில்லை. மனிதராகப் பிறந்து உண்டுண்டு உறங்குவதை வெறுக்கும் ஜீவன். மாயாப் பிறவி மயக்கம் அறுத்த அகவுயிர். ஓயாமல் இரவு பகலாய் உழைத்துக் கொட்டி, அதில் அர்த்தம் தேடுவதை ஒதுக்கும் ஆவி – “22”.

பிக்சர் படம் என்றால் குழந்தைகள் படம். என்றாலும், அதில் சினிமாவில் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் என் போன்றோருக்கு நிறையவே சரக்கு இருக்கும். சடாரென்று தூக்கத்தில் எழுப்பினால் கூட “அப்”, “இன்சைட் அவுட்”, “மான்ஸ்டர்ஸ் இன்க்” என்று அடுக்கி, அதன் தத்துவங்களை விலாவாரியாக ஆர்வமாக விளக்குவேன். ஒரு தடவைக்கு பல தடவை பார்த்தாலும் அலுக்காதவை.

அலுக்காத தன்மைக்கு அந்த அனிமேஷன் லாவகத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த “சோல்” படமும் நாக்கில் கரையும் மைசூர்பா என கண்ணில் கரையும் புத்திசாலித்தனமான காட்சிகள் கொண்டது. தொழில்நுட்பம் ஆகட்டும்; கலாபூர்வம் ஆகட்டும். இரண்டும் பார்ப்போரை ஏகாந்த நிலைக்குக் கொண்டுபோகிறது. அதுவும், இறப்பு, வாழ்க்கையின் பூரணத்துவம் போன்ற எசகு பிசகான கேள்விகளை எழுப்பும்போது கூட அந்த இருட்டு தெரியாமல் ரம்மியமாக செல்கிறது. காட்சிக்கேற்ற பரவச இசை; தத்ரூபமான இசை சபா மேடை; ஜோதியில் ஐக்கியமாவது; எல்லாமே சரியான பதத்தில் வந்திருக்கிறது. பியானோவும் ட்ரம்பெட்டும் எக்காளமிட்டு ஒன்றோடன்று போட்டி போடும் இசையமைப்பிற்கு என்னால், ‘பேஷ்’ மட்டுமே வைக்க இயலும். அதில் தோய்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரார்களாலேயே அதன் ஆலாபனைகளை உணர இயலும்.

எனவே, படத்தில் நான் உணர்ந்த தொன்மவியலுக்குள் சென்று விடுகிறேன்.

ஒரு கிளையில் உள்ள இரு பறவைகளாக ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சில உபநிஷத்துகள் காண்கின்றன. இங்கேயும் அந்த மாதிரி ‘22’ம் ஜோ என்னும் வாத்தியக்காரரும் வருகிறார்கள். ஜீவாத்மா என்னும் பறவை, மரத்தின் கனிகளை உண்கிறது. அதில் சில பழங்கள் இனிக்கும்; சிலது கசக்கும் – மாணாக்கர்களின் சேஷ்டை ‘ஜோ’ என்னும் இசை வாத்தியருக்கு வெறுக்கிறது; அதே சமயம் இசையை ரசித்து வாசிக்கும் மாணவரின் ஆர்வம் இனிக்கிறது. கச்சேரி வாய்ப்பிற்காக, ஒவ்வொரு சபா ஆக சென்று, வாய்ப்பு கேட்டு, மறுக்கப்படுவது வெறுக்கிறது; அதே சமயம் கிடைத்த வாய்ப்பில் பரிமளிக்கும் போது, கிடைக்கும் பார்வையாளர்களின் கைதட்டல், சந்தோஷம் – இனிக்கிறது. பரமாத்மாவிற்கோ இதில் எல்லாம் அபிலாஷை இல்லை. அது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும். இந்தப் பழங்களை, “சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்”, என்று ஒதுக்கும். இது ‘22’

ஜீவாத்மாவிற்கு எப்பொழுது பரமாத்மாவின் மகத்துவம் புரிகிறதோ, அப்போது இவ்வுலகின் துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுதலை அடைந்து முக்தி பேறடைகிறது. படத்திலும் ‘ஜோ’ அடைகிறார். இறுதியில் எல்லா பிக்ஸர் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் மோன நிலையை அடைந்துவிடும். அது பெரிய விஷயமேயில்லை. எப்படி, எவ்வாறு, எந்தப் பாதையில் சென்று உய்யலாம்? அந்தப் பாதையை, பரிணாம மாற்றத்தை, இந்தப் படம் சுவாரசியப்படுத்திச் சொல்லியிருக்கிறது.

இந்தப் பாதை அடையும் வழி என்ன என்று உபநிஷத்துகள் என்ன சொல்கிறது? கடனே என்று காரியத்தை, கருமங்களை செய்யாதே என்கிறது. எளிதானவற்றையும் பிரயாசையின்றி செய்வதையும் விட்டுவிடு; சரியானதையும் ஷ்ரேயஸானவற்றையும் செய் என்கிறது. ஆன்மாவை நோக்கி உள்முகமாக பயணி என்கிறது. அனைவரிடத்தும் அன்பு செலுத்து; அவர்களிடம் அக்கறை கொள்; பொருத்தமான ஆன்மிக குருவைத் தேர்ந்தெடு; அவரிடம் கேள்விகளை முன் வை; அவரிடம் சந்தேக நிவர்த்தி பெறு என்கிறது.

அனுபூதி அடைவது எளிதல்ல. குருவின் சோதனைகளை செவ்வனே முடிக்க வேண்டும். கடைசியில் அவரவர்க்கு அவரவர் ஆத்மாவே குருவாகிறது. மனிதப் பிறவியில் ஞானமும் (சிரவண மனனம்) யோகமும் (நித்தியாசனமும்) அடையப்பெற்ற விவேகர்கள், தன்னை சர்வ சக்தியுள்ளவர் என்று அறிந்து கொள்கின்றார். (மேலும் வாசிக்க – பின் – இணைப்பு: யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை)

மீண்டும் “சோல்” திரைப்பட பார்வைக்கு திரும்புவோம்.

இறந்தோர் செலும் வரிசையில் ஜோதியில் ஐக்கியமாவதற்காக ஜோ என்னும் கதாபாத்திரம் காத்திருக்கிறது. அப்பொழுது, அந்த வரிசையில் இருந்து எகிறி குதித்து, இன்னொரு இடமான திரிசங்கு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த இடம் Defending Your Life என்னும் படத்தை நினைவூட்டியது. அதில் மரணித்த ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை மீண்டும் பார்ப்பார்கள். அதில் சிற்சில மாறுதல்களை செய்ய விரும்புகிறார்களா அல்லது தற்காப்பாக அவர்களின் முடிவுகளை ஆதரித்துப் பேசுவார்களா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட பயணம் அமையும்.

அந்த இடைப்பட்ட இடத்தில்தான் ஜோ கதாபாத்திரம் “22”ஐ சந்திக்கிறது. பல்வேறு பெரிய கைகளை பார்த்து பழம் தின்று கொட்டை போட்ட கதாபாத்திரம் “22”. மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், அன்னை தெரசா, கொபர்னிகஸ், மேரி ஆன்டொனெட், கார்ல் யொங் என்று பலர் “22”ஓடு கலந்துரையாடி, பூலோகத்திற்கு தயார் செய்ய முயன்று, பலரும் தோற்றோடியிருக்கிறார்கள். அந்த 22ன் வாயினாலாயே சொல்வதானால், “தெரஸாவையே அழ அழ ஓட்டியவளாக்கும் நான்!” அந்த ஆசிரியர்களால் முடியாததை ஜோ செய்கிறார். தன் உருவத்தில் 22ஐ சில மணித்துளிகள் நடமாட விடுகிறார். அதன் மூலமாக வாழ்வின் அற்புதத்தை உணர்த்துகிறார்.

ஆன்மாக்களின் ஆளுமைகளை உருவாக்கும் பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் கண்டறியும் இடம் தான் இந்த “கால்கோள் சந்தி” எனப்படும் The Great Before. ஆன்மாக்கள் இன்னும் முழுமையடையவில்லை. இரண்டும்கெட்டான்களாக அலைகிறது. அங்கிருக்கும் குருவானவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆன்மாக்களை, பக்குவப்படுத்திய பிறகு, பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதன் பின் அந்த ஆசிரியர்கள் “மகா உம்மை” எனப்படும் Great Beyondக்கு சென்று பிரும்மாண்ட பிரகாச ஒளியில் ஐக்கியமாகி விடுவார்கள்.

“கால்கோள் சந்தி”யில் குணாதிசயங்களைப் பொருத்தலாம்; விருப்பங்களை உருவாக்கிக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உந்து சக்தி வேண்டாமா? உங்களை இயக்க, உங்களின் ஒவ்வொரு நாளையும் உத்வேகமிக்கதாக ஆக்க, ஆற்றலின் முழு வீச்சையும் உணரவைக்கும் ஜீவாதாரம் எது? அதை அடையாளம் காண்பிக்க வேண்டியது குருவின் பொறுப்பு.

மனிதன் மீண்டும் ஜனனம் ஆவதை பஞ்சாக்னி வித்தை எப்படி சொல்கிறது என்று பார்க்கலாம். மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். அது வரும் பாதை:

  1. தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் ஜீவன் தயாராகிறது.
  2. ஜீவாத்மா மேகத்திற்குள் நுழைகிறது. நெருப்பை அணைக்கும் சக்தி மழை நீருக்கு இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி எனப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
  3. பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
  4. பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறது. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறது.
  5. ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் மனிதரும் அக்னி. அவரது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவர்களது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது. 

திரைப்படத்திலும் இந்த மாதிரி ஒவ்வொரு ஜீவனுக்கும் ஐந்து பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் பொருத்துகிறார்கள். ஆனால், விந்து என்பது எது என்பதை அந்த ஜீவனே கண்டறிய வேண்டும். அதைக் கண்டறிவதற்கு, குருவின் துணை தேவை என்பதை வலியுறுத்துகிறது.

பிரபஞ்சம் என்பது 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது என்று ஸாங்கியம் சொல்கிறது.

பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கர்மேந்திரியம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மஹாபூதங்கள் என்று மொத்தம் 24 இருக்கின்றன.

ஞானேந்திரியங்கள் என்பவை

  1. சப்தம் (காது)
  2. ஸ்பரிசம் (சர்மம்) / தோல்
  3. ரூபம் (கண்)
  4. ரஸம் அல்லது சுவை (வாய்)
  5. கந்தம் என்ற வாஸனை (மூக்கு)

ஜீவனே நேராகக் காரியம் செய்ய உதவுபவை கர்மேந்திரியங்கள்.

  1. வாய் பேசுவது
  2. பல காரியங்களைச் செய்ய உதவும் கை
  3. நடக்கிற கால்,
  4. மலஜல விஸர்ஜனம் செய்கிற அவயவம் / உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்)
  5. ஜனனேந்திரியம் / பிறப்புறுப்புக்கள் 

அருவத்தின் உருவ மாற்றமே தன்மாற்றம். நிலை மாற்றம் அலை. தன்னிலை மாற்றம் தன்மாற்றம். தன் தன்மையின் மாற்றம் தன்மாத்திரை. பஞ்ச தன்மாத்திரைகள்;

  1. சப்தம் / ஓசை
  2. ஸ்பர்சம் / தொடுதல்
  3. ரூபம்
  4. ரசம்
  5. கந்தம் / ஒளி

எல்லாவற்றுக்கும் ஆதாரமான – ஆத்மாவைப் ‘புருஷன்’ என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்வது ஸாங்கியம். அதுபோல், இந்தப் படம் ‘புருஷன்’. அதில் இருந்து கிடைப்பது ப்ரக்ருதி. திரைப்படம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. வாழ்வதைப் போலவே, இந்த அனுபவத்தை தவறவிட வேண்டாம்.

Dattatreya and the 24 gurus

யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை

முன்பொரு சமயம் யது மகாராஜன் எங்கும் அச்சமின்றித் திரியும் ஓர் அவதூதரிடம், “உலக சுகபோகங்களில் ஈடுபாடு இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறதே எதனால்?” என்று கேட்டார். அதற்கு அவதூதன் கூறலானான், நான் பலரை எனது குருவாகக் கொண்டு அவர்களிடமிருந்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்களை ஆச்ரயித்து தெரிந்து கொண்டவை பல.

1. ப்ருத்வி – பொறுமையும் மன்னித்தருளும் குணமும் விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் கற்போம். பூமியை எங்கு வேண்டுமானாலும் தோண்டலாம். மூத்திரம் அடிக்கலாம். மலஜலம் கழிக்கலாம். அல்லது வீடுகள் கட்டலாம். மண்ணில் இருந்து புதையல் எடுக்கலாம். பூமியிலுள்ள அனைத்தும் எப்படிப் பிறருக்குப் பயன்படுகிறதோ அவ்வாறு சாதுக்கள் தான் பிறருக்கு உரியவன் என்று உணர வேண்டும்.

2. வெற்பு – பிறரின் நன்மைக்காக வேலை செய்வது எப்படி என்பதை மலைகளிடம் இருந்து கற்கலாம். மலைகளில் இருந்து மரங்களும் மூலிகைகளும் நதிகளும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மற்ற விலங்குகளுக்குப் பயன்படுகின்றன. உன் வாழ்க்கை பிறருக்காக இருக்கட்டும். மேலும், மலைகள் என்பவை தனிமையை அடையாளப்படுத்துபவை. அமைதியாக இறை சிந்தனையில் ஈடுபட மலைகள் உதவுகின்றன.

3. காற்று போல யோகியானவன் குண தோஷங்களால் கறைபடாதவனாக அதாவது பற்றற்றவனாக இருக்க வேண்டும்.

4. ஆகாயம் போல் ஆத்மா பிரபஞ்சமெல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமரை இலை நீர் போல இருக்க வேண்டும்.

5. நீரைப் போல் யோகி தூயவனாய், குணமுற்றவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிமையாகப் பழகுதல் வேண்டும். பார்ப்பது, பேசுவது, தொடுப்பது ஆகியவற்றால் அண்டினவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

6. அக்கினியைப் போல் அழுக்கற்றவனாய் ஒளியுடன் விளங்க வேண்டும்.

7. சந்திரனில் தேய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுபோல் ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடையாது.

8. சூரியன், கடல் நீரைக் கிரகித்து மழையாகப் பொழிவதைப் போல் யோகி இந்திரியங்களால் விஷயங்களைக் கிரகித்து அதைத் தகுதி உள்ளவன் கிடைக்கும் போது அவனிடம் கொடுத்து, கொடுத்ததை மறந்துவிட வேண்டும்.

9. மாடப்புறா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது போல் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளுவான்.

10. மலைப்பாம்பு போல் தன் முயற்சி இன்றி கிடைத்ததைப் புசித்து உதாசீனனாய் இருக்க வேண்டும்.

11. பாம்பு – நாகம் தனியே வாழும்; தனியே பயணிக்கும். சில சமயம் எலிப் பொந்துகளில் வசிக்கும்; எங்கோ, எப்படியே, யார் வீட்டிலோ வாழும். நாகம் மிகவும் பாதுகாப்பாக தன் அடிகளை எவரும் அறியாவண்ணம் எடுத்துவைக்கும். உங்களின் இமைத்துடிப்பே, பாம்பிற்கு, உங்களை அடையாளம் காட்டிவிடும். அது போல், நீயும் மாயை குறித்து எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வுடன் இரு.

12. குளவி – கூட்டில் இருக்கும் பூச்சியானது, சதாசர்வ காலமும் குளவியையே நினைத்துக் கொண்டிருக்கிறது. குளவியைக் கண்டு பய உணர்ச்சியையும் விரோதத்தையும் வளர்த்துக் கொள்கிறது அந்தப் பூச்சி. அதன் பின், முழுதாக வளர்ந்த பின், அது குளவியாகவே மாறி விடுகிறது. அதே போல் நித்தியத்துவத்தையும் சத் அறிவையும் பேரின்பத்தையும் (சச்-சித்-ஆனந்த-விக்ரஹ) சொரூபமாகக் கொண்டவரை உள்ளத்தில் நிலை நிறுத்தியவர், பாவங்களில் இருந்து விடுதலை அடைகிறார்கள்.

13. கடலைப் போல், பகவானிடம் மனதைச் செலுத்தி ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், இல்லாத போது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது.

14. விட்டில் போல் அழியாமல் இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும்.

15. தேனீயைப் போல் முனிவன் கிரகஸ்தர்களைச் சிரமப்படுத்தாமல் தேவையான அளவே பெற்று உண்ண வேண்டும். அடுத்த வேளைக்கு என்று சேர்த்து வைத்தால்  கூட்டில் தேன் போல் அழிவு ஏற்படும். மேலும் சாஸ்திரங்களுடன் சாரத்தை மட்டும் அறிந்து வாழ வேண்டும்.

16. பிடியின் (பெண் யானை) காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆண் யானை போல் ஸ்திரீ பந்தத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது.

17. இனிய கானம் கேட்டு மயங்கிய மான் வேடனால் பிடிபட்டு அவதியுறுவதுபோல் பகவத் குணங்களை மட்டுமே கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய நேரக்கூடும்.

18. தூண்டில் மீன் உணவை விரும்பி முள்ளில் சிக்கிக் கொள்வதுபோல் நாவடக்கம் (சுவையின் மீது ஆசை) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவனே.

19. திருமணமாகாத பெண் வீட்டில் தனியே இருந்தபோது, அவளின் வருங்கால மாமனார் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் சில காய்கறிகள் மட்டுமே இருக்கின்றன. சோறு பொங்க அரிசி இல்லை. பெற்றோரும் இல்லத்தருகில் இல்லை. சாதம் வடிப்பதற்காக பிச்சை கேட்டு வீடு வீடாகச் செல்கிறாள். அவள் கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். அந்த சத்தத்தை உணரும் அவள், “இந்த வளையல் ஒலி கேட்டால் எங்களின் ஏழ்மை நிலை புகுந்த வீட்டாருக்குத் தெரிந்துவிடும். சோற்றுக்காக பிச்சை எடுப்பது அறிந்துவிட்டால், தன் மகனுக்கு இந்த வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.” என நினைத்து, எல்லா வளையல்களையும் அகற்றிவிடுகிறாள். ஜன-சங்க-த்யாக அத்வைத-தியாக: கடவுளை ஒப்புக் கொள்ளாதவரிடமிருந்து தூர இருப்பாயாக. அபவாதம் பேசுவோருக்கு நீ குழந்தையாகத் தென்படுவாய். அவர்களிடம் விரிவாக விவாதித்தோ விளக்கியோ யாதொரு பயனுமில்லை. மாமனாருக்குத் தெரியக் கூடாது என்று வளையலை நீக்கியது போல் பக்தியில் நாட்டம் இல்லாதோரிடம் இருந்து உன் பக்தி ஆபரணத்தை அபவாதிகளிடமிருந்து விலக்கி கொள். ஒரே ஒரு வளையலைக் கையில் கொண்ட பெண்ணைப் போல், துறவி ஆனவன் தனிமையாகவே இருக்க வேண்டும்.

20. தன் எச்சிலில் இருந்தே சிலந்தி வலை பின்னும். வலையில் மாட்டிய பூச்சிகளை உண்ணும். வலையின் தேவை முடிந்தபின், அந்த வலையை விடுவித்து தன்னுள்ளேயே சேர்த்துக் கொண்டு விடும். அதே போல் கடவுள் தன் மாயவலையினால் உன்னை உலாவ விடுகிறார். பின் அவருள்ளே எல்லாமே ஐக்கியமாகிறது. அவரின் விருப்பத்திற்கேற்ப அவரின் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்துவார் என்பதை அறி. அதன் பின் அவருள்ளேயே உன்னை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.

21. மாமிசத்தைக் கொத்திச் சென்ற மீன்குத்தி மற்ற பறவைகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்தைக் கீழே போட்டவுடன் அப்பறவை நலம் பெற்று விடும். ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.

22. தனக்குத் தானே விளையாடிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குழந்தை போல் தன்னில் தானாகவே ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்றேன்.

23. பிங்களை என்ற வேசி தன் தொழிலில் வெறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாவையே அளிக்கும் அச்சுதனை நாடி அடையாமல், அந்திய புருஷனைத் தேடி ஓடுகிறேனே? என்று ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.

24. அம்பு தொடுக்கும் வில்லாளி இலக்கின் மீது கவனமாக இருப்பது போல், ஆத்ம சொரூபத்திலே ஒன்றி விட்டவன், வெளியிலே தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றையும், உள்ளே நடப்பவற்றையும் கூட அறிய மாட்டான். ஆகவே யோகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை அடக்கி, வைராக்கியத்தாலும் பகவத் தியானத்தாலும் வெற்றி பெறுவான்.

5 Replies to “தேகயாத்திரை”

  1. பாஸ்டன் பாலா, நான் உங்களை அமெரிக்காவில் இளையராஜா-ஜகத் கஸ்பர் விஜயத்தின் போது நண்பர் ராமசாமி (வி.ஜி.பி. மருகர்) அவர்கள் இல்லத்தில் சந்தித்திருக்கிறேன் என்று நினைவு. என் மகன் ஆக்டனில் இருக்கிறான். அவனுடன் வந்திருந்தேன்.
    உங்கள் பதிவு. மேலெழந்தவாரியாகப் படிக்கப்படும் பதிவல்ல. மிகுந்த ஆழமானது. கருத்துச் செறிவு, ஹிந்து தத்துவ ஞானம் பொதிந்த ஒன்று. இதைப் படித்ததில் நான் பல விஷயங்களை, நான் அறியாத தத்துவ ஞானத்தைப் படித்துப் புரிந்து கொண்டேன். பலரும் பயனடைத்திருப்பர். இதுவே உங்கள் பதிவின் வெற்றி.
    தங்கள் கருத்துச் செறிவுக்குப் பாராட்டுகள்.

  2. மிகவும் ஆழமான பதிவு ஆனால் மிக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. நன்றிகள் பல. நீங்கள் குறிப்பிடுள்ள படங்களை பார்க்க துவங்கியுள்ளேன். அதற்காக ஒரு தனிப்பட்ட நன்றி 🙏

Leave a Reply to VenkyCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.