பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி

மதராஸ் ஐ.ஐ.டி.யில் சி.வி.ராமனிடம் பரிசு பெறல் (1966)

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா?

என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம்.  என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி,  கிண்டி பொறியியல் , மதராஸ் ஐ.ஐ.டி., அமெரிக்காவில் யேல் பல்கலைக் கழகம் ஆகியவற்றில்.  என் முதல் முப்பத்திரண்டு வருடங்களில் நான் சந்தித்த பல்வகை நண்பர்கள், ஆசிரியர்கள், அனுபவங்கள், விவாதங்கள்— தமிழ்நாடு, இந்தியா, உலகம் என்று பலவிடங்களிலும் இருந்து வந்தவர்கள் தந்தவை —- டொராண்டோ பல்கலைக் கழகத்தில் நான் இருந்த முப்பத்தைந்தாண்டு  ஆசிரியப் பணியிலும், ஆய்வுப் பணியிலும் உறுதுணையாக இருந்தன.   இந்த வாழ்க்கைப் பயணம் என் மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள், எந்த வித ஐயங்கள் இருக்கும் என்பதெல்லாம் எனக்கு மிக எளிதாகக் கற்றுக் கொடுத்தது. இந்த அனுபவங்கள் பணியில் மட்டுமா? பணிஓய்வுக்குப் பின் நான் ஒரு யாப்பிலக்கண நூலை, அதைப் படிப்பவர்களை மனத்தில் வைத்து எழுதுவதற்கும்,  சொற்பொழிவாற்றுவதற்கும், கட்டுரைகள் எழுதுபவதற்கும்  அதுவே துணை!          

2. தற்போது நடக்கும் கோவிட் அமளி துமளிகளுக்கு நடுவே உங்களின் வாசிப்பு எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது?

கோவிட்டுக்கு முன், நூலகத்திற்குச் சென்று சில தமிழ் இதழ்களைப் புரட்டி வாசிப்பேன். இப்போது, கோவிட்டால் அது முடியவில்லை.  
படிப்பதை விட,  பார்ப்பதும் கேட்பதும் அதிகமாகி யிருக்கிறது.

3. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது?

பள்ளியில் கல்கண்டு, அம்புலிமாமா போன்ற சிறுவரிதழ்களில் தொடங்கியது விரைவில் கல்கி, ஆனந்த விகடன், ஆங்கில நாவல்கள் என்று வாசிப்பு மாறியது.

4. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன? பள்ளிப் பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது?

வீட்டில் “வால்மீகி ராமாயணம்” “மஹாபக்த விஜயம்”, “விக்ரமாதித்தன் கதைகள்” போன்றவை இருந்தது நினைவுக்கு வருகிறது. சின்ன அண்ணாமலையின்  “தமிழ்ப்பண்ணை”யிலிருந்து  பல தமிழ் நூல்கள் வாங்கியும் (வியாசர் விருந்து, பாரதி பிறந்தார்) , இரவலாகவும் படித்துள்ளேன். அருகில் இருந்த ராஜாங்கம் நூலகத்தில் இருந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், Edgar Rice Burroughs, Arthur Conan Doyle, Jeffery Farnol, Maurice LeBlanc,  Sapper, John Buchan, Rafael Sabatini, Leslie Charteris,  Edgar Wallace, Alexander Dumas… என்று  (  மேலும்) பலர் எழுதிய மர்ம, சரித்திர, சாகஸ, துப்பறியும் நாவல்களை நூற்றுக் கணக்கில் படித்தேன்! மூர்மார்க்கெட்டிலும், நடைபாதைக்கடைகளிலும்  இருந்து பழைய Saturday Evening Post இதழ்கள்  , பிரிட்டிஷ் காமிக்ஸ் இதழ் Beano,  விகடன்,கலைமகள் தொகுப்புகள், நாவல்கள்…   சேகரிப்பு.

டொராண்டோ நூலகத்தில் மனைவி, மகளுடன் “பாரதியும் இசையும்” என்ற இசைப் பேருரை (1987)

5. உங்களின் தற்போதைய சிந்தனையையும் இலட்சியங்களையும் எவ்வாறு கண்டடைந்தீர்கள்? அந்தப் பயணம் குறித்து சற்றே வெளிச்சம் பாய்ச்சுவீர்களா?

இப்போது யோசிக்கும்போது, என்னை அறியாமல் சிறுவயதிலிலேயே நான் செய்தவை என் தற்போதைய போக்குகளுக்கு முன்னோடிகளாய் இருப்பதாகத் தோன்றுகிறது. சிறுவயதிலேயே நான் வாசித்து, எனக்குப் பிடித்த இதழ்களில் வந்த படைப்புகளையும், கதைகளையும் சேகரிக்கத் தொடங்கினேன். இந்த வாசிப்பு அப்போதே என்னை எழுதத் தூண்டியது. ‘அசோகா’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைச் சில காலம் பள்ளிக் காலத்தில் நடத்தினேன். ஒரு சில “கவிதைகளை”க் கூட எழுதினேன்!

இப்போதும் அது போன்ற “வாசிப்பு, சேகரிப்பு, எழுத்து”… தொடர்கிறது!  (ஆனால், இணையம் என்று ஒன்றின் மூலம் என் சேமிப்பைப் பகிரமுடியும் என்று அப்போது தெரியாது!) சிறுவயதில் பரிசாகப் பெற்ற பல இலக்கிய நூல்களை இப்போதுதான் நான் ஆழமாகப் படிக்கிறேன். இத்தகைய கட்டுரைகளால்  தூண்டப்பட்டு , அவ்வப்போது பல துறைகளில் கட்டுரைகளை எழுதுகிறேன்.  

6. சிறந்த கட்டுரையாளர்களாக, அபுனைவு எழுத்தாளர்களாக எவரை எல்லாம் பட்டியல் இடுவீர்கள்?

 முப்பத்தைந்து வருடங்களுக்கு மேல் பொறியியல் துறைசார்ந்த , ஆசிரியப் பணிக்கேற்ற, ஆய்வுக்கு வேண்டிய கட்டுரைகளைப் படிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்ட நான், இப்போது பணிஓய்வுக்குப் பின்தான்  தமிழில் மட்டும் சில அபுனைவு எழுத்துகளைப் (பழம் இலக்கியம்  தான் அதிகம்) படித்து வருகிறேன்.  இவர்களுள்  என்னைக் கவர்ந்தவர்கள் உ.வே.சாமிநாதையர், வையாபுரி பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், அ.ச.ஞானசம்பந்தன், கல்கி,  பி.ஸ்ரீ., மு.அருணாசலம், மீ.ப.சோமு, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்  இப்படிச் சிலர்.  ஆங்கிலத்தில் அறிவியல் சார்ந்த நல்ல கட்டுரைகளை IEEE  என்ற நிறுவனத்தின் பல இதழ்களில் படித்திருக்கிறேன்; மற்றபடி அதிகமாக மற்ற அபுனைவு எழுத்துகளை ஆங்கிலத்தில் படித்ததில்லை, இப்போது படிக்க நேரமும் இல்லை!  

டொராண்டோ பல்கலைக் கழகத்தில் ஒரு வகுப்பு

7. உங்களுக்குப் பிடித்த புனைவு எழுத்துக்கள் என்ன? எவரின் நாவல்கள் உங்களைக் கவர்கிறது? யாரின் கதைகளை ரசித்து வாசித்திருக்கிறீர்கள்?

 எனக்குப் பிடித்த  எழுத்தாளர்கள்; கல்கி, தேவன், நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், பி.எஸ்.ராமையா. சிறுவயதில் நான் படிக்காத மௌனி, சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம்  போன்ற  பலரின் எழுத்துகளை இப்போதுதான் என் வலைப்பூவில் இடும்போது  படித்து வருகிறேன்.

8. இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்களில் எது உங்களை ஈர்த்தது? எந்த நூலை (நூற்களை எல்லாம்) குறிப்பிடத்தகுந்ததாகச் சொல்வீர்கள்?

இப்போது நான் பெரும்பாலும் கட்டுரைகளைத்தான் படிக்கிறேன். ஈர்த்த ஒரு நூல்: சாமிநாதம் (உ.வே.சா. முன்னுரைகள்), இன்னும் படித்து முடிக்கவில்லை!  

9. இன்றையச் சூழலில், உங்களின் வாசிப்பு எவ்வாறு மாறி இருக்கிறது? எப்பொழுது வாசிக்கிறீர்கள்? எதில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம் என்று பழக்கங்கள் இருத்திருந்திருக்கிறதா?

என் சூழல் வேறு. பணிஓய்வுக்குப் பின் உடல்நலம் அதிக நேரத்தை விழுங்கும் சூழல், கட்டுரைகளைப் படிப்பதைவிட, இணையம் மூலமாகக் கட்டுரைகளைக் கேட்பதுதான் அதிகமாய் உள்ளது! அவற்றின் முழுப் பயன் அடைய, பலமுறை முன்னேற்பாடாக அந்தந்த உரைதொடர்புள்ள கட்டுரைகளை ஓரளவிலாவது  படிக்க நேரிடுகிறது. மேலும், என்னைப் பேசச் சொல்லியோ, என் கருத்துகளை எதிர்பார்த்தோ நடக்கும் இணைய நிகழ்வுகளுக்கேற்பக் “குறிபார்த்த படிப்பு” (targeted reading and preparation) அதிகமாய் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு இளங்கலை தமிழ் மாணவனைப்போல் நான் சிறுவயதில் படிக்காத சில இலக்கியம், இலக்கணம், இசைசார்ந்த கட்டுரைகளை இப்போது படித்து வருகிறேன்,   பகலிலும், இரவிலும் ஓரிரு மணிகள் படிப்பது தான் அதிகம்.

10. எந்த சஞ்சிகைகள், பத்திரிகைகள், நாளிதழ்களை இன்றும் வாசிக்கிறீர்கள்? அவற்றின் எந்த பகுதிகள், பத்திகள் – உங்களை ஈர்க்கின்றன?

அமுதசுரபி (இலக்கியம், நினைவலைகள், கலை) , தினமணி (தலையங்கப் பக்கக் கட்டுரைகள்).  

11. இது வரை ஆயிரக்கணக்கான பதிவுகள் போட்டிருக்கிறீர்கள். இருபத்தைதாண்டுகளுக்கு மேலாக வலைப்பதிவுகள், இணையக் குழுமங்கள் என்று செயல்படுகிறீர்கள். உங்களின் மனதில் பெரிய இடம் பிடித்த பதிவு எது? எந்தப் பதிவு, பதில் / குறிப்பு – வாசகர்களை அதிகம் ஈர்த்தது? புள்ளிவிவரப்படி பார்த்தால் எது இன்றும் பார்வையாளர்களை அள்ளுகிறது?

ஒரு பதிவு என்று தேர்ந்தெடுப்பது கடினம்! ஒரு தொகுப்பாகச் சொல்லலாம்.

பசுபதிவுகள்” என்ற என் வலைப்பூவில் என் படைப்புகளில் மிகச் சிலவும், பழந்தமிழ் எழுத்தாளர்கள், ஓவியங்கள், பத்திகள் ஆகியவற்றை அதிகமாகவும் தான் இடுகிறேன்.  
முதல் வகையில், பல வருடங்களுக்கு முன் நான்  “மன்ற மைய”த்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில்   “கவிதை இயற்றிக் கலக்கு” என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய,  50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகளை இன்றும் பலர்  “யாப்புலகம்” என்ற என் வலைத்தளத்தில் படித்து, பயன்பெறுவதாக அறிகிறேன்.

என் மனத்தில் இடம் பெற்ற இன்னொரு தொகுப்பு, ” சங்கச் சுரங்கம்” என்ற தலைப்பில் “திண்ணை”, “இலக்கியவேல்” “இருவாட்சி” என்ற இதழ்களில் நான் எழுதிய 60-க்கு மேற்பட்ட  கட்டுரைகள்.  இவற்றில் சில என் வலைப்பூவில் உள்ளன.

என் வலைப்பூவில் உள்ள,  இசை சார்ந்த பழங்காலக் கட்டுரைகள் , புள்ளி விவரங்களின்படி, அதிகமாகப் படிக்கப் படுகின்றன என்று தெரிகிறது.

12. கனடாவில் பல்வேறு தமிழ் நிகழ்வுகளை முன்னின்று நடத்தி இருக்கிறீர்கள். பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்று உரையாற்றி இருக்கிறீர்கள். மனதில் நின்ற ஒன்றுகூடுதல் நிகழ்வையும், பேச்சையும் நினைவு கூர்வீர்களா?

மனத்தில் நின்ற நிகழ்வு ஒன்று; டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், “நாயன்மார்கள்” என்ற தலைப்பில்  நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தது.  திருப்தி கொடுத்த ஓர் உரை: டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் என் மனைவி, மகள் பாடல்களுடன் நான் நிகழ்த்திய  உரை/ lec-dem.  

13. வாழ்க்கை வரலாறு, நாடகம், நகைச்சுவை – போன்ற பகுப்புகளில் உங்களின் ரசனையைப் பகிர இயலுமா?

வாழ்க்கை வரலாறு: நான் அடிக்கடி படிக்கும் நூல்கள், என் சரித்திரம்( உ.வே.சா.),  பொன்னியின் புதல்வர் ( கல்கியின் வரலாறு, “சுந்தா”).
நாடகம் ; ஏனோ எதுவும் என்னைப் பெருமளவில்  ஈர்க்கவில்லை.
நகைச்சுவை: எனக்குப் பிடித்த பல எழுத்தாளர்கள்: கல்கி, தேவன், எஸ்.வி.வி., சாவி, நாடோடி, பாக்கியம் ராமசாமி. ஜே.எஸ்.ராகவன்.

14. எதற்காக இலக்கியத்திலும் வாசிப்பிலும் நேரம் செலவிடுகிறீர்கள்? உங்களுக்கு அது எதை வழங்குகிறது?

இலக்கியமும், வாசிப்பும் என்னை எழுதத் தூண்டும்  உந்துசக்திகள். இவை என்னை இலக்கியம், பழந்தமிழ்க் கவிதைகள், யாப்பிலக்கணம் ஆகியவற்றில் புதிய சில படைப்புகளைச் செய்யும் ஆர்வத்தைக் கொடுக்கின்றன.

6 Replies to “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”

  1. நான் “பசுபதிவுகள்” விடாமல் படிப்பவன். பசுபதி அவர்களைப் பற்றி இந்தப்பதிவு மூலம் மேலும் தெரிந்துகொண்டேன். இந்த அறிஞரைத் தமிழ்நாடு என்றாவது பாராட்டியது உண்டா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.