ம்ருத்யோ மா

“க்ளிங்” – சற்றே வேகமாக மதுக் கோப்பைகள் இடித்துக்கொண்டது போலத்தான் சத்தம் கேட்டது. வரிசையின் முன்னே எட்டிப்பார்த்தேன். பெர்லின் செல்லும் இந்த விமான கேட்டின்முன் உருவாகியிருக்கும் வரிசையில் இரண்டாவதாக நின்றுகொண்டிருந்த தாத்தாவின் கையிலிருந்த டியுடி ஃப்ரி ஷாப் பையிலியிருந்து தரையெங்கும் இரத்தச்சிவப்பு உற்சாகமாக எல்லா திசைகளிலும் பரவியது.

அவர் சற்று வேகமாக அந்தப் பையை தரையில் வைத்திருக்க வேண்டும். முன்வரிசை இலக்கில்லாமல் சட்டென அசைந்து கலைந்தது. தாத்தாவும் அவருடன் இருந்த பாட்டியும் பதறி ஒருவரையொருவர் பார்த்துத் தோள் குலுக்கிக்கொண்டனரே தவிர அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் தடுமாறுவது தெளிவாகத் தெரிந்தது.

வரிசையிலிருந்த மற்றவர்கள் கண்களில் எரிச்சலுடன் காலணிகளை தூக்கிப் பார்த்துக்கொண்டனர்.

நான் விருட்டென வரிசையிலிருந்து விலகி, சுற்று முற்றும் பார்த்து அருகிலிருந்த கழிவறைக்குள் சென்று சில கணங்களில் கைகளில் டாய்லெட் ரோல்களுடன் திரும்பி, அந்தத் தம்பதியினரிடம் வேறு பேப்பர் துவாலைகள் இருக்கின்றனவா? என்று கேட்டுக்கொண்டே டாய்லெட் பேப்பர் துண்டுகளை வைன் சிவப்பின் மேல் போர்த்தினேன். வைனில் ஆர்வமாகப் பேப்பர் துண்டுகள் ஊறிக்கொண்டதைச் சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்

பாட்டி, நன்றியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் நிமிர்ந்து புன்னகைத்து முடிந்தவரை கால்களால் அழுத்தி துடைத்தேன். வைன் பாட்டில் கண்ணாடித் துண்டுகளை எப்படி எடுப்பது என்று சுற்றும் முற்றும் பார்க்க முற்பட்டபோது சற்றே தூக்கக் கலக்கக் கண்களுடன் அந்த ஹோஸ்டஸ் தோன்றினார்.

“மிக்க நன்றி, துப்புரவாளர்களை அழைத்திருக்கிறேன்” என்று அதிகம் சிரிக்காமல் திரும்பிப்போய்விட்டார்.

வரிசை, அந்த சிறு சிவப்பு வைன் குட்டையை வளைத்துக்கொண்டு மறுபடியும் அமைந்துகொண்டது. நான் மெதுவாக வரிசையின் கடைசிக்குச் சென்றேன். மறுபடியும் வாயிலை நோக்கினேன். பெஞ்சமினை இன்னும் காணவில்லை.

வழக்கம்போல் தாமதம். இரு தோள் பட்டைகளில் பொருந்தியிருந்த வார்ப் பட்டைகளை இறுக்கமாகப் பற்றித் திருகினேன். வாட்ச்சைப் பார்த்துக்கொண்டேன். ஏற்கெனவே விமானம் 30 நிமிடங்கள் தாமதம். இறுதிப் பரிசீலனைக்கான அழைப்பு சற்று முன்புதான் வந்தது. வந்து தொலைக்கிறாரா இந்த பெஞ்சமின், ராஸ்கல்…

இந்தப் பயணம் முடிந்ததும் எப்படியாவது இவருக்கு மாற்று ஆள் பார்க்க வேண்டும்…

இன்றில்லை, கடந்த இரு வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று, இந்த எண்ணம் தீவிரமாகிக்கொண்டிருந்தது. நாளைக் காலை பெர்லின் ரெய்னருடன் முக்கியமான கூட்டம். லண்டன் ஹீத்ரோவிலிருந்து பெர்லின் போய்ச்சேர இரண்டு மணி நேரத்திற்குச் சற்றுக் குறைவாகவே ஆகும். கைக்கடிகாரத்தை மறுபடியும் பார்த்துக்கொண்டேன். மாலை நான்கு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பினாலும் உள்ளூர் நேரம் எட்டரை மணி அளவில் பெர்லினை அடைந்துவிடுவோம். அடுத்த நாள் காலை கூட்டத்திற்குத் தயாராவதற்கு எப்படியும் நேரமிருக்கிறது.

என் கம்பெனியின் முதல் ஜெர்மன் வாடிக்கையாளர் தொடர்பு இது. எப்போதுமே முதல் தொடர்பு மிக முக்கியமானது – என் இத்தனை வருட வியாபார வாழ்க்கையில் உணர்ந்துகொண்ட, அதிக விலை கொடுத்து உணர்ந்து கொண்ட முதல் பாடம். அதுவும் நேரில் சந்திப்பது என்பது இன்னும் முக்கியமானது. வீடியோ, இணையத் தொடர்புகள் என்று வேறு எந்த வழிகளும் நேரில் சந்திப்பதற்கு இணையாகாது. முடிந்தவரை தவிர்த்துவிடுவேன்.

காலை 9 மணிக்கு வாடிக்கையாளருடன் கூட்டம் எனில் என்னைப் பொருத்தவரை எட்டு மணிக்கெல்லாம் அந்த கட்டிடத்தின் அருகில் போய்விடுவேன். முந்தின நாளே பார்த்து வைத்திருக்கும் அருகாமை கபேயில் எதையாவது சாப்பிட்டுவிட்டு நிதானமாக மனதில் போட்டுவைத்திருக்கும் நேரக் கணக்குப்படி சரியாக 8:45 மணிக்கு வரவேற்பறையில் இருப்பேன். என்றுமே பரபரப்பாகக் காட்டிக்கொள்ளமாட்டேன்.

முந்தின நாளன்று போட்ட திட்டப்படியே கூட்டம் போகும். போக வைப்பேன். கூட்டம் எப்படி ஆரம்பித்தாலும் முடியும்போது என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்…

இப்படி நினைத்தவுடன் மெலிதாகப் புன்னகைத்திருப்பேன் போலிருக்கிறது. சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த அந்தப் பாட்டியும் தாத்தாவும் பெரிதாய்ச் சிரித்துத் தலையாட்டினர்.

பெஞ்சமின்… இன்னுமா இந்த ஆள் வரவில்லை… இந்த ஆளின் ஜெர்மன் மிக முக்கியமாகத் தேவைப்படும் நேரத்தில் இருக்கமாட்டார் போல இருக்கிறதே… எப்போதுமே இவர் தாமதம்தான். எதற்குமே தயக்கம்தான். தினமும் வேலை பார்க்கும் அலுவலகம்தான், அறைதான். இருந்தும் தயங்கிக்கொண்டே உள்ளே நுழைவது போலிருக்கும். அப்புறம் முதல் வார்த்தையே, “மன்னிக்கவும்”. பின், அதைத் தொடர்ந்துவரும் வார்த்தை, பெரும்பாலும் “இனிமேல் இப்படி நடக்காது. உறுதியாகச் சொல்வேன்” என்று இருக்கும்.

கடந்த இரு வருடங்களில் தொடர்ந்து கேட்டு வருகிறேன். வேலையில் சேர்ந்த முதல் மாதத்திலேயே இவரை வெளியே அனுப்பியிருப்பேன். ஆனால் அனுப்பவில்லை.

என் கம்பெனியின் முக்கிய மென்பொருள் எக்லிப்ஸ் சந்தையில் கடந்த சில வருடங்களிலேயே இத்தனை முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு இவரின் துறை அறிவு ஒரு முக்கியக் காரணி. இதனை, இவரின் இத்தனை தயக்கங்களுக்கு மத்தியிலும் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே கண்டுகொண்டுவிட்டேன்.

பெசிலிடிட்டி மேனேஜ்மெண்ட்டில் மொபைல் அப்ளிகேஷன்களின் தேவைகளுக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிய இவரது ஆய்வு அறிக்கையைப் படிக்க ஆரம்பித்தவுடனேயே என்னுள்ளே என்றுமிருக்கும் வியாபாரச் சுடர் விழித்துக்கொண்டது. கிட்டத்தட்ட எல்லாத் துறைகளுக்கும் இருக்கக்கூடிய பொதுவான தேவைகள் மட்டுமே. ஆனால் சந்தையில் பொதுவான தீர்வு, முக்கியமாக மொபைல் மற்றும் அனைத்துக் கணிணிகளுக்கும் பொதுவான தீர்வு இதுவரை இல்லை. ஆச்சரியம். ஆனால் இது போன்ற இடங்களே என் இலக்கு.

அடுத்து இரண்டே மாதங்களில் மூன்று வாடிக்கையாளர்களை குறித்து வைத்துக்கொண்டோம். எவருமே பெரிய வாடிக்கையாளர்கள் கிடையாது. அவர்களை அணுகி உள்ளே செல்வது என்பது இன்னொரு பெரிய ப்ராஜக்ட். இப்போது அதைச் செய்யக்கூடாது. அவர்கள் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் திரும்பிப்பார்க்க வைக்கவேண்டும். இந்த ஜெர்மன் பயணம் அதற்கான முக்கிய கண்ணி…

இன்று ஆளைக் காணோம். வழியில் M25 மோட்டார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருப்பாரா? எங்கள் அலுவலகம் ஹீத்ரோவிற்கு அருகில் இருக்கிறது. தரையடி இரயிலைப் பிடித்திருந்தாலும் எப்போதோ வந்திருக்கலாமே? நான்கே நிறுத்தங்கள்தான் ஹீத்ரோ டெர்மினல் 5 நிறுத்தத்திற்கு வந்து சேர…

வரமாட்டார் என்ற சாத்தியத்தின் அடுத்த விளைவுகளை யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் நிலைமையை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

இப்படி நினைத்ததுமே என்னுள் நிதானம் பரவ ஆரம்பித்ததை உணர்ந்துகொண்டேன். அடுத்த பெர்லின் விமானம் இன்றிரவுக்குள்… ஹீத்ரோவிலிருந்து இருக்காது. ஸ்டான்ஸ்டட், சவுத் எண்ட், வேறு எந்த லண்டன் ஏர்போர்ட்டிலாவது ஃப்ளைட் பிடித்து வரச்சொல்லவேண்டும். இல்லையெனில்…

நிலைமை என் கட்டுக்குள் வந்துவிட்டால் போதும், நிதானம் வந்துவிடும். எப்போது இதை உணர ஆரம்பித்தேன்… தீபாவளி சமயங்களில் பட்டாசுக் கடைகள் போட்ட திருச்செங்கோடுக் கல்லூரி நாள்கள் நினைவிற்கு வந்தன.

மாலையில் சரக்குத் தீரத்தீர அடுத்த ஸ்டாக்கை ஈரோடு, சேலம் என்று இரவோடு இரவாக வரவழைத்துக் காலையில் கடை திறக்கும்போது முழுவதும் நிரம்பி வாங்க வருபவர்களை எதிர்கொள்ளத் தயாராக நிற்கும்போது நிதானமாகிவிடுவேன். அங்கு கற்றுக்கொண்டது, இன்று வரை… பட்டாசுக் கடைகளிலிருந்து வன்பொருள், இன்று மென்பொருள் வரை…

சூழலை எதிர்கொண்டு என் கட்டுபாட்டிற்கு கொண்டுவந்துவிட முடியவேண்டும்… முடியும். அவ்வளவுதான்…

பெஞ்சமினைக் கண்டுகொண்டேன். பதட்டமாகப் பொருத்தமே இல்லாத ஆரஞ்சு ஸ்வெட்டருக்குள் பொதிந்து மூச்சிரைத்தவாறே பருமனான கைப்பெட்டியை உருட்டிக்கொண்டு என்னை நோக்கி வந்தார்.

அருகில் வந்து தயங்கி “மன்னிக்கவும்…!”

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அப்பழுக்கற்ற, துல்லிய சதுர முகம். அதுவும் நெற்றியோ கச்சித செவ்வகம். அதற்குக்கீழ் இன்னமும் கச்சிதமான கரும் பட்டைக் கண்ணாடி…


லண்டன் ஹீத்ரோ டெர்மினல் ஐந்தில் உள்ளூர் மற்றும் ஐரோப்பிய நகரப் பயணங்களுக்கான கேட்கள் பெரும்பாலும் நிலையத்தின் வெகு ஓரமாக, ஒரு பத்து பதினைந்து நிமிட நடையின் இறுதியில் இருக்கும்.

ஒவ்வொரு பரிசோதனைகளாக நிதானமாக முடிந்து, பின் படிகளில் இறங்கி மெல்லிய இருட்டு வழியில் நடந்து திடுக்கென வெளியே வந்தோம். ஐம்பது கால்பந்து மைதானங்களை இணைத்து வைத்தது போன்ற ஏகாந்த வெளி. தரையெங்கும் பற்பல வண்ணங்களில் கோடுகள் நெளிந்து, நேராகப் பின் வளைந்து சென்றன.

அக்டோபர் நாளிற்கே உரித்தான இருண்ட வெளி. காற்று பெரும் விசையுடன் மீண்டும் மீண்டும் ஆயிரம் ஊசி விரல்களால் துளைத்தபடியே இருந்தது. என் இலையுதிர்காலக் கோட்டை கழுத்துப் பகுதியில் இழுத்துவிட்டுக்கொண்டேன்.

எங்களுக்கான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை நோக்கி வரிசையாக நடந்தோம். மேற்பகுதி வெண்ணிறத்தின் நடுவில் நீலம் மற்றும் சிவப்புப் பட்டைகள் அக்குவாப்ரெஷ் டூஸ்பேஸ்ட் பிதுக்கி வைத்திருந்தைப் போலிருந்த விமானம், நெருங்க நெருங்க எங்களையே விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

தூரத்தில், எனக்கு இடது பக்கத்திலிருந்து கடும் விசையுடன் ஒரு விமானம் தவ்வி ஏறி தலையை நிமிர்த்தி மிதந்து மறைய ஆரம்பித்தது.

அது முழுவதும் மறைவதற்குள் இன்னொன்று இடது பக்கத்திலிருந்து சீறிச்சென்றது.

விமானத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஏறுபடிகள் பொறுத்தப்பட்டிருந்தன. நான் ஆரம்ப ஏறுபடிகளில் ஏறினேன். சற்று தயக்கத்துடன் பெஞ்சமின் என்னைத் தொடர்ந்தார்.

ஏறிக்கொண்டிருந்தபோதே பக்கவாட்டில் திரும்பி ஓடுகளங்களைப் பார்த்தேன். அவற்றைத்தாண்டி வான ஓரத்தில் கரிய பிரமாண்ட மலை. மலை?

நான் சட்டென ஏறுவதை நிறுத்திவிட்டு கூர்ந்து நோக்கினேன். கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கெங்கினும் பரந்திருந்த கரிய மேகம், சற்று அசையாமல் அழுத்தம் திருத்தமாக அமர்ந்திருந்தது…

விமானத்தின் உள்ளே சுருங்கிய வழியில் விமானச் சுவரில் சற்றே சாய்ந்திருந்த பணிப்பெண்ணின் உடல் மொழியில் களைப்புத் தெரிந்தது. புன்னகை முயற்சியிலும் தெரிந்தது. பம்மெனக் கருஞ்சுருட்டைக் கூந்தல் பின்னுக்கு தள்ள அவசியமில்லாமல் சிக்கனமாக இருந்தது.

நான் உள்ளே நுழைந்து அவர் அருகில் நின்றபோது அவர் கழுத்தில் அமர்ந்திருந்த நீல, சிவப்பு ஸ்கார்ப் என் தலைக்குச் சற்று மேலிருந்தது.

என் கைப்பெட்டியை இருக்கைக்குமேல் உள்ள இடத்தில் சிரமமில்லாமல் வைத்தேன். முதல் வரிசையில் ஜன்னலை ஒட்டிய இருக்கையில் சவுகரியமாக அமர்ந்து கொண்டேன். பெஞ்சமின் அவரது பெட்டியை வைக்கத் தடுமாறினார். பின்னர் இருக்கை பெல்ட்டை போடுவதற்கும் தடுமாறினார். என் பக்கம் திரும்பாமல் இருக்க முயற்சி செய்வது அப்பட்டமாகத் தெரிந்தது.

நான் சற்றே பின்னால் சாய்ந்துகொண்டேன். இது போன்ற குறுகியப் பயண விமானங்களுக்கே உரிய அம்சங்களை உள்ளே நுழைந்ததுமே உணர்ந்துவிடலாம். நெருக்கி அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள், சிடுசிடுப்பான அல்லது சிரிக்காத விமானப் பணிப்பெண்கள் / ஆண்கள். தலைக்குமேல் இருக்கும் பெட்டி வைப்பதற்கான இடங்களின் மிகச் சிக்கனத் தன்மை, விமானத்தில் முன்னும் கடைசியிலும் மட்டும் இருக்கும் கழிவறைகள்…

சீக்கிரத்தில் விமானம் நிறைந்துவிட்டது. மூன்று அல்லது நான்கு பணிப்பெண்கள்தான் மொத்தமே.

என் எதிரில் இருக்கைக்கு நேராகப் பணிப்பெண் அமரும் இருக்கை மடக்கி சுவரை ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. அதற்குப்பின் காக்பிட்.

அந்த சுருட்டைக் கூந்தல் பணிப்பெண், அதன் அருகில் நின்றவாறே சுவரை ஒட்டிய இண்டர்காமில் முதலில் தன் பெயரைச் சொன்ன கையோடு வேகமான ஆங்கிலத்தில் அறிவிக்கத் துவங்கினார்.
சுருக்கமான அறிவிப்பு. பயணிகள் அனைவரும் சீக்கிரம் பட்டிகளைப் பூட்டி ஒத்துழைத்தால் நல்லது எனும் அறிவிப்புதான்.

சட்டெனப் ஃபோனைப் பொருத்திவிட்டு விருட்டென என்னைத் தாண்டிச் சென்றார். திரும்பிப் பார்த்தேன். தலைக்குமேல் பெட்டிகளை வைத்துவிட்டு அந்தக் கதவை அழுத்தி முயற்சி செய்து கொண்டிருந்த ஓர் பிரமாண்டவரை விலகச் சொல்லிவிட்டுக் கதவை நன்கு திறந்து உள்ளே பெட்டிகளை எப்படியோ அடுக்கிவிட்டு கதவை அழுத்தி மூடினார். கதவு எந்த எதிர்ப்பும் இல்லாமல் உள்சென்றது.

நான் பெஞ்சமினைப் பார்த்தேன். அவர் என்னவோ சொல்ல வருவதுபோல் தெரிந்தது. இருந்தும் கவனம் செலுத்தாமல் ஜன்னலை வெறித்தேன். கரு நீல மேகங்களா, வானமா என்று சற்றே சந்தேகமாக இருந்தது. ஆரம்ப விசை ஷவர்போலத் தூறல் ஆரம்பித்துவிட்டிருந்தது. விமானம் தன் அசையா மவுனத்திலிருந்து சற்றே விழித்துப் பின்னர் நகர்ந்தது. இடது கையை உயர்த்தினேன். மணி 17:00. 20:00 மணிக்கெல்லாம் பெர்லின் அறையில் இருக்கலாம். மதியம் இரண்டு மணிக்கு ஏர்போர்ட் செல்ல ஆரம்பித்த படலம். களைப்பு மொத்தமாக பொங்கிக்கொண்டு வந்தது. மெல்ல கண்களை மூடி இருக்கைக்குள் ஆழ்ந்தேன்…


விழிப்பு வந்தபோது அப்போதுதான் கண்களை மூடினது போலிருந்தது. பெர்லினை அடைந்துவிட்டோமா? இடது கையை மெல்ல உயர்த்தி நோக்கினேன். மணி 17:45. விமானம் நகர்வதுபோல் தெரியவில்லையே? ஜன்னலில் வெளியே பார்த்தேன். தூங்கப்போவதற்குமுன் வைத்த பொருட்கள் எல்லாம் அதனதன் இடங்களில் அப்படியே இருப்பதுபோல் தெரிந்தன. தூறல் மட்டும் வலுத்துத் தரையில் தெறிக்கும் வேகம் அதிகரித்திருந்தது.

பெஞ்சமினை நோக்கித் திரும்பினேன். “வெல்…” என்று இழுத்தார். சற்று செருமிக்கொண்டார்.

“நாம் இன்னும் ஹீத்ரோவில்தான் இருக்கிறோம்! விமானம் நகர ஆரம்பித்தவுடனேயே எல்லா விளக்குகளும் அணைந்துவிட்டன. விமானி, ஏதோ எலக்ட்ரிக் கோளாறு என்று அறிவித்தார். பழுது பார்க்கும் அணி வந்துகொண்டே இருக்கிறது என்று ஐந்து முறை, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொண்டிருந்தார்…

நீங்கள் விழிப்பதற்குச் சற்று முன்தான், அணி வந்துவிட்டது, பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிவிப்பு வந்தது” என்றார்.

என்னையே பார்த்தார் – எரிச்சல்படுவேன் என்று எதிர்பார்த்தார்போல. நானும் கூடதான். ஆனால் என்னவோ நிதானமாக இருந்தேன். ஆழ்ந்த உறக்கம் காரணமாக இருக்கலாம். எப்படியும் இன்றிரவு பெர்லினை அடைந்துவிடுவோம், நாளை கூட்டம் நிச்சயம் என்று தெரிந்துவிட்டதால் இருக்கலாம்.

நன்றாக இருக்கையில் பின்னால் சரிந்து முழுவதுமாக நிரப்பிக்கொண்டேன். சற்று நேரம் கழித்து, நிதானமானத் தூக்கக் கலக்கக் குரலில் “பெஞ்சமின், உங்கள் தகப்பனார் ப்ராங்க்பர்ட்டில் வளர்ந்தார் இல்லையா?” என்றேன்.

பெஞ்சமின், அவரது முழங்கையைப் பக்கவாட்டுக் கைப்பிடியில் ஊன்றி மோவாயைத் தடவிக்கொண்டே “பெர்லின்” என்று மட்டும் சொன்னார்.

“ஓ, ஆம்… பெர்லின்… முன்னர் சொல்லியிருக்கின்றீர்கள்” என்றேன்.

ஓரிரு முறைகள் சொல்லியிருக்கிறார்.

சற்று இடைவெளிவிட்டு… ”மன்னிக்கவும்…” என்றேன்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புன்னகைத்தோம்.

“இந்த மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருப்பதெல்லாம் அவரிடமிருந்துதான் எனக்கு வந்திருக்கும்” என்றார்.

“இனிமேல் இப்படி நடக்காது. உறுதியாகச் சொல்வேன் – இதுவும் அவரிடமிருந்துதானா?”

“ஆமாம்!” சற்று அதிகமாகப் புன்னகைத்துக்கொண்டார்.

சிறிய இடைவெளிக்குப்பின், “பெர்லின் வதை முகாமிலிருந்த ஒவ்வொரு நாளும் மன்னிப்புக் கேட்பாராம்…”

நான் மெதுவாக முன் இருக்கையில் செருகி வைக்கப்பட்டிருந்த தாள்களை எடுத்தேன். அவசர காலத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றிய குறிப்புகள்.

பெஞ்சமின் நேரே இருக்கும் இருக்கையைப் பார்த்தவாறே, “தப்பிப் பிழைத்தவர்கள் பொதுவாக வதை முகாம் அனுபவங்களைப் பற்றி அதிகம் பேச மாட்டார்கள், முக்கியமாக அவர்களின் குடும்பத்தினரிடம்…”

“என் தந்தையும் அப்படித்தான். ஆனால் ஓரிரு முறைகள் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்…”

நான் மெல்லிய கொட்டாவியை அடக்கிக்கொண்டே வெளியே பார்த்தேன். நின்று பெய்து கொண்டிருந்த மழையைக் காற்று அலை அலையாய் வந்து உதறிக்கொண்டே இருந்தது.

திருச்செங்கோடு நாள்களில் இருந்துகொண்டிருந்த தின நாள்காட்டி கிழிக்கும் பழக்கம் நினைவிற்கு வந்தது. அதில்தான் அன்றைய பல்பொடியைக் கொட்டிக்கொள்வேன்.

அந்தத் துண்டுத்தாளில் தினமும் ஏதாவது செய்தி – கோவில் குடமுழுக்கு, சதுர்த்தி விரதம், பிரதமை என்று ஏதாவது இருக்கும்.

பிரிட்டனில் இது போன்று தின நாள்காட்டி இருக்குமானால் தினமும் ஏதாவது உலகப் போர் விஷயங்களே இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

முதல் உலகப் போரோ, இரண்டாவதோ, ஏதோ ஒன்று. இன்று பிரஞ்சு கரைகளில் நேசப்படைகள் இறங்கின, பிஸ்மார்க் கப்பல் வீழ்ந்த தினம் இன்று, ஆயிரம் விமானங்கள் கோலோன் நகரத்தின்மேல் குண்டுகள் வீசின தினம், இப்படி ஏதாவது தினமும் தொலைக்காட்சியில், தினப் பத்திரிக்கையில் இருந்துகொண்டே இருக்கும்.

கேட்டு, பார்த்துப் பழகிவிட்டது. பசி கொஞ்சம்போல் ஆரம்பித்தது.

பெஞ்சமினும் இன்று நிதானமாக இருந்தார் என்று தோன்றியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலே கிளம்பாத விமானத்திலிருந்தாலோ என்னவோ. பொதுவாக தனிப்பட்ட விஷயங்களை அவராகச் சொல்லமாட்டார். நாமாகத்தான் கேட்டு வாங்கவேண்டும்.

பெரும்பாலான மதியக் கூட்டங்களுக்குச் சற்றுத் தாமதமாக வருவதைக் கவனித்து எங்கள் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் ஓர் அறையைப் பிரார்த்தனை கூடமாக மாற்றிக்கொடுத்தேன். அதன்பின், மதியக் கூட்டங்களுக்குப் பிரார்த்தனை அறையிலிருந்து கையில் கிப் தொப்பியுடன் ஒழுங்காக வர ஆரம்பித்தார்.

இன்று என்ன ஆயிற்றோ… நான் கவனிக்கிறேனா என்று கவனிக்காமலேயே சொல்ல ஆரம்பித்தார்…

தினமும் sachsenhausen வதை முகாமிலிருந்து அருகிலுள்ள கிராமத்திற்கு நடை. அவர்கள் கட்டிட வேலை செய்த இடத்தை ஒட்டி, அதன்பின் பெரும் காடு இருந்தது. கண்களுக்கு எட்டியதூரம் வரை காடுதான். இருபது வயதுகூட நிரம்பியிராத ஷ்னெய்டர், தினமும், முடிவே தெரியாத வதை வேலைகளுக்கு நடுவே, சகதிகளுக்கு நடுவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த ஊசி நுனி அடர் நெடு மரங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார். அசையா மரங்களின் உச்சி நுனிகள் சில சமயங்களில் அலைபோல் நெளியும். கூடவே உச்சிகளில் அமர்ந்திருக்கும் மேக்பைகளும் நெளியும். அது ஒன்றுதான் அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. தினமும் அத்தனை குளிரிலும் பசியிலும் களைப்பிலும் வசைகளிலும் தண்டனைகளிலும் அவரை ஏதோ ஒன்று தாங்கிப்பிடித்தது எனில் அது இதுவாகத்தான் இருக்கும். மாலை, அன்றைய வேலை முடிந்து முகாமிற்குத் திரும்பும் சித்திரவதைப் பயணம் ஆரம்பிக்கும். அதுவும் இலையுதிர்காலத்தில் ஆரம்பிக்கும் கடுமையான குளிர்காற்றில், பனிக்காலத்தைப் பற்றிய திகிலை அளிக்கும் காற்றின் நடுவே பயணம் ஆரம்பிக்கும்முன் அந்தக் காட்டின் தொடு மூலையை, நெளியும் மேக்பைகளை கண்களைச் சுருக்கி முடிந்தவரை பார்த்து இப்படித்தான் நினைத்துக்கொள்வாராம்.

“எப்படியாவது நாளைக் காலை உயிரோடு இருக்க வேண்டும். இதை மட்டும் எனக்கு சகாயம் பண்ணிவிடு கடவுளே. இதைத் தவிர நான் வேறு எதுவும் வேண்டுகோள் வைக்கமாட்டேன், உன்னிடம்” என்பாராம்.

அடுத்த நாள் மாலை, மறுபடியும் இதே வேண்டுகோள்…

45 ஏப்ரலில் முகாமைவிட்டுக் கிளம்பின இறுதிப் பயணத்திலும் இதே வேண்டுகோள்தான்…

பெஞ்சமினின் குரல் நிதானமாக இருந்தது. இவர் என் நிறுவனத்தில் சேர்வதற்கு ஓரிரு மாதங்கள் முன்னர்தான் அவரது தந்தை ஷ்னெய்டர் கான்சரில் இறந்து போனார். நேர்முகத் தேர்வில் சொன்னது இப்போது நினைவிற்கு வந்தது.

உரையாடலின் போது எதற்காகவோ இதைச் சொன்னார் – அது நினைவிற்கு வரவில்லை.

நான், புழுக்க அறையில் மெல்ல அசைந்த ஜன்னல் திரைபோல், “ அவரது வேண்டுகோள் பலித்திருக்கின்றதே… விடுதலைக்குப்பின் வேறு எந்த வேண்டுகோளும் வைக்கவில்லைதானே?” என்று கேட்டேன்.

பெஞ்சமின், ஹக் எனச் சிரித்தார்… ”நானும் இப்படிக் கேட்டிருக்கிறேன்!”

அப்பா, ஹக் என சிரித்தவாறே, “அதெப்படிக் கேட்காமல் இருக்க முடியும்?! ஒவ்வொரு தடவை வேண்டுகோள் வைக்கும்போதும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுவிடுவேன்” என்றார்.

“ஹஹ… மன்னிப்பு என்பது இப்போது வெறும் சொல்!”

பெஞ்சமின் சற்று அமைதியாக இருந்தார்… பின், “வாழ்க்கையில் மன்னிக்க முடியாத ஒன்று இருக்கிறதா என்ன…?”

“அதற்காக எதையும் மன்னித்துவிடலாம், மன்னிப்பு கேட்டுவிட்டால் போதுமா என்ன?”

… தெரியவில்லை… அப்பாவிடம் கேட்க முடியாது. அவர் இப்போது அந்தப் பக்க உலகிற்குப் போய்விட்டார். காட்டின் அந்தப் பக்கம் போய்விட்டார். இங்கிருந்து குரல் எழுப்பிப் பார்க்கலாம். ஆனால் அவருக்குக் கேட்டதா என நமக்குத் தெரியாது” என்றார்.

ஆம்… அவருக்குக் கேட்டதா என நமக்கும் தெரியாது” என்றேன். முடிந்தவரை குரலில் கேலி தொனிக்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னபின்தான் நினைத்துக்கொண்டேன்.

“அவர் பதில் சொன்னாலும் நமக்கு கேட்காது”…

“அப்பா எவ்வளவு காலம் முகாமில் தாக்குப்பிடித்தார், பெஞ்சமின்?”

“இரு குளிர்காலங்கள்… நம்புவீர்களா… இரண்டு குளிர்காலங்களை அந்த Sachsenhausen முகாமில் தாக்குப்பிடித்தார்…”

எனக்கு இப்போதுதான் சற்று ஆர்வம் ஏற்பட்டது என நினைக்கிறேன்.

“அப்படியா? இரண்டு குளிர்காலங்களா?”

“ஆம்…நம்புவதற்கு சிரமம்.”

சிரமம்தான். மவுனமாக இருந்தேன்.

“அப்பா அந்த வாழ்க்கையைப் பற்றி வேறு எதையும் எங்களிடம் சொன்னதே இல்லை. கான்சர் சிகிச்சை பெற்றுவந்த காலத்தில்கூட எதுவும் சொன்னதில்லை.”

என்னை அறியாமலேயே கேட்டேன் – “அந்த முகாமிற்குப் போய்ப் பார்த்திருக்கிறீர்களா, பெஞ்சமின்?”

இல்லை என்ற பதிலை எப்படியோ எதிர்பார்த்தேன், ஏன் என்று தெரியவில்லை.

“ஒரு முறை போனேன். அந்த முகாமை அருங்காட்சியகமாக இப்போது வைத்திருக்கிறார்கள். மத்திய பெர்லினிலிருந்து  S1 பான் பிடித்து Oranienburg நிறுத்தத்தில் போய் இறங்கினேன். வழிகாட்டிகள் என்ற சிறு சின்னம் குத்தப்பட்ட கோட்டுகளில் சிலர் தென்பட்டார்கள். நான் ஓர் வயதான வழிகாட்டியைத் தேர்வு செய்தேன்.”

“அப்புறம்?”

ஏர் ஹோஸ்டஸ்கள் சற்றுப் பரபரப்பாகச் சென்று வந்தார்கள்.

“அந்த வழிகாட்டியுடன் சென்றது தவறு. நாம் இப்போது சென்ற வழியில்தான் Sachsenhausen முகாமிற்கு முதலில் வரும் கைதிகளை நடத்திச் செல்வார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு தடவை சொன்னால் பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு பத்து அடிகளுக்கும் முடிவில்…ஹ!”

“இருபது நிமிடங்கள் நடந்திருப்போம். பின் ஒரு தெருமுனையில் திரும்பினோம். இருநூறு அடிகள் தொலைவில் தெருவின் எதிர் முனையில் முகாமின் வளைவுகள் தென்பட்டது. வழிகாட்டி இடது பக்கமிருந்த வீட்டின் வாசலில் நின்றுவிட்டார்.

இது முகாமின் கமாண்டர் தன் குடும்பத்துடன் வாழ்ந்த வீடு என்றார்.

கொஞ்சம் மெதுவாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. படக்கென வீட்டின் முன்கதவு திறந்து ஒரு வயதானவர் உரத்த சப்தத்தில் திட்டிவிட்டுக் கதவை வேகமாகச் சாத்திவிட்டார்” என்று மெல்லச் சிரித்தார்.

“பின்ன… தினமும் வழிகாட்டிகள் நீங்கள் இருக்கும் வீட்டின்முன் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்!”

சற்று நேரம் கழித்து… ”ஆம், முகாமினுள் சென்றேன்” என்றார்.

“என்ன மாபெரும் வெட்டவெளி… ஐந்து ஹீத்ரோ விமான நிலைங்களை இணைத்து வைத்தாற்போல். திகைத்துவிட்டேன். ஆன்மா இல்லாத வெளி அது…”

பளிச்சென விமானத்தினுள் விளக்குகள் எரிந்தன. அப்போதுதான் நாங்கள் இவ்வளவு நேரம் இருந்திருந்த இருளின் கருமை உறைத்தது.

மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தேன். முள் ஏழைத் தொட்டுவிடும் தூரத்தில். என்னது?!

வெடுக்கென இருக்கையைவிட்டு எழுந்து நின்று ஏர்ஹோஸ்டஸ் யாராவது அகப்படுகிறார்களா என்று தேட ஆரம்பிப்பதற்கு தேவையே இல்லாமல் கப்டன் கரகரத்த குரலில் அறிவித்தார்.

எல்லா எலக்ட்ரிக் பிரச்சனைகளும் சரியாகிவிட்டன. விமானக் கண்ட்ரோல் அனுமதிக்காக காத்திருக்கிறோமாம்.

வெளியே எட்டிப்பார்த்தேன் – ஒரு காற்று அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் அசையாமல் மழை உறுதியாகப் பெய்துகொண்டிருந்ததை நிலைய மஞ்சள் வெளிச்சத்தில் கவனிக்க முடிந்தது. விமானத்தினுள் தலையைத் திருப்பியபோது இருக்கையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பொன்னிறக் கூந்தல் ஏர் ஹோஸ்டஸை சற்றுச் சத்தமாகவே கூப்பிட்டுவிட்டேன்.

நான் கேட்ட கேள்விக்குஸ் சலிப்பாகப் பதில் அளிக்க ஆரம்பிக்கையில் மறுபடியும் தலைக்கு மேல் விமானி கரகர குரலில் உயிர் பெற்றார். ஏர் ஹோஸ்டஸ் தன் ஆள்காட்டி விரலை மேலுயர்த்தி சிறு புன்னகையோடு நிறுத்திக்கொண்டு எங்கள் இருக்கைக்கு எதிரான அவரது இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

பெல்ட்டை அணியும்முன் சாய்ந்திருந்த என் இருக்கையை நிமிர்த்தி வைக்குமாறு கண்களாலேயே சுட்டிக்காட்டினார்.

விமானம் அசைவதறியாமல் அசைந்து நீண்ட மீட்டிங்கிற்குப்பின் அனைவரும் மெல்ல உயிர் பெறுவதுபோல் முதலில் பின்னால் நகர்ந்து பின்பு முன்னால் நகரத் தொடங்கியது.

மிக மெதுவாகத்தான் சென்றது. அருகில் ஒரு சைக்கிளில் ஏறி மிதித்தால் விமானத்தை வென்றுவிடலாம்.

சைக்கிள்…என் முதல் வாகனம். முதல் வியாபார வெற்றியின் முதல் பரிசு…

பின்னிருக்கைகளில் குழந்தைகளின் சிணுங்கல் கேட்டது.

முடிவே இல்லாத நீண்ட மென்மையான ஊர்தலுக்குப்பின் வலது பக்கம் வளைந்து, பின் மறுபடியும் வளைந்து சென்றது. ஜன்னலின் ஓரத்தில் சற்று நெருங்கிப் பார்த்தாலே எங்கள் விமானத்தின் பின்னால் குறிப்பிட்ட இடைவெளியில் வேறு விமானங்கள் டேக்ஸி வேயிற்கு தொடர்ந்து வந்துகொண்டிருப்பது தெரிந்தது. வேறு ஒரு சூழ்நிலையில் இருந்திருந்தால் எந்தெந்த ஊர்களுக்கு இவை செல்ல இருக்கின்றன என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்திருப்பேன்.

ஆனால் இன்று இங்கிருந்து எப்படியாவது தவ்வித் தாண்டி பெர்லினில் போய் விழுந்தால் போதும் என்று இருந்தது.

எந்த கணத்தில் போய் விழுவோம் என்று எண்ணினேனோ தெரியவில்லை…

ஒரு கட்டத்தில் விமானம் நின்றுவிட்டது. டேக்ஸி முனையில் அனுமதி துப்பாக்கி ஒலிக்காக ஓட்டப்பந்தய வீரனின் காத்திருப்பில் உறுமிக்கொண்டிருந்தது.

அந்த எதிர்ப்பார்ப்பு நிமிடங்களில் மழையின் சத்தம் சட்டென ஒரு புள்ளியில் அதிகரித்ததை உணர்ந்தேன்.

பின்னிருக்கைகளில் குழந்தைச் சிணுங்கல் வளர்ந்து அழுகைக் குரலாக வளர்ந்துவிட்டிருந்தது. இப்போது குறைந்தது இரு குழந்தைகளாகவது இருக்கும் என்று ஊகித்தேன்.

விமானம் விலுக்கெனப் பலம் பெற்று உக்கிரமாக கிளம்பும்போது மழைச் சத்தம் இன்னும் பலமாக மோதியது.

தடதடவென விமானம் அதிர்ந்துகொண்டே முன்பகுதி நிமிர்ந்து ரன் வேயிலிருந்து பிரிந்துகொண்டாலும் பிற்பகுதி சிரமப்பட்டுத் தார்ச் சாலையிலிருந்து பிய்ந்து எழுவது போன்று தோன்றியது.

மெல்ல மெல்ல மேலெழுந்து ஏறியது. அப்படித்தான் நினைத்தேன். ஆனால் தலையை நிமிர்த்த மிக சிரமப்படுவது தெரிந்தது. தலையில் கனமாய் அறைந்துகொண்டிருக்கும் அருவியை நிமிர்ந்து பார்க்க முயற்சிப்பது போல் இருந்தது.

பின் அதில் எதையாவது பிடித்துக்கொண்டு ஏற முயற்சிப்பது போல்…

பொதுவாக ஒரு ஐந்து நிமிடங்களுக்குள் வானில் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்து பின் சம மட்டத்திற்க்கு வந்துவிடும்.

இன்றென்னவோ பல நிமிடங்களாகவே மூச்சு முட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக செங்குத்தான நிலைக்கு மாறிக்கொண்டிருந்தது.

மழைச் சத்தமும் விமானச் சத்தமும் கலந்து பேரிரைச்சலாக உச்ச கட்டத்திற்குத் திருகி வைக்கப்பட்ட ஹெட்போனாக காதில் அறைந்ததன.

என்னை அறியாமல் இருக்கையின் இரு கைப்பிடிகளையும் உறுதியாகப் பற்றிக்கொண்டேன்.

என் எதிரில் அமர்ந்திருந்த ஹோஸ்டஸின் முகத்தை ஏறிட்டேன். விமானத்திற்குள் இருந்த குறைந்த வெளிச்சத்தில் அவரது முகத்தில் எதுவும் தெரியவில்லை.

பெர்லின் ஹோட்டலின் பெயரை, நாளைக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போகும் வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவுகூர முயன்றேன். ஜெர்மன் பெயர்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று முன்பே பயிற்சி எடுத்து வைத்துக்கொண்டிருந்தாலும் இன்னொரு முறை உச்சரித்து வைத்துக்கொள்ளலாம். இதை இன்றிரவு ஹோட்டல் அறையில் தூங்கப்போவதற்குமுன், நாளைக் காலை பாத்ரூமில் ஒருமுறை செய்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஏற்கெனவே முறை வைத்துக்கொண்டிருந்தேன்.

மேலே ஏறி, பெல்ட்களை தளர்த்திக்கொண்டபின் இன்னொரு முறை பெயர்களை உச்சரித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

மேலே இன்னுமா ஏறவில்லை…

வெளியே ஜன்னலில் மாபெரும் வெளிச்சம்… மின்னி மறையவில்லை… அல்லது அப்படித்திரண்ட வெளிச்சம் கண்களிலிருந்து மறையவில்லை. கருத்த மேகங்களை ஒரு கணம் வெளிச்சப்படுத்திக்காட்டியது. என்னை அறியாமல் கைகள் காதுகளுக்குப் போவதற்குள் எலும்பு, விமானம் எல்லாவற்றையும் ஊடுருவிய இடிச்சத்தம்…

விமானத்திற்குள் “ஓ” என தம்மை அறியாமல் குரல்கள் உயர்ந்தன. அடுத்த வெளிச்சத்தில் எதிர் ஏர் ஹோஸ்டஸ்ஸின் முகத்தைக் கண்டேன். வெளிறிப்போயிருந்தது.

பெஞ்சமின் பக்கம் மெல்லத் திரும்பினேன். புன்னகைக்க முயன்றார். மின்னலால் விமானம் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு என்று கிசுகிசுத்த குரலில் முடிந்தவரை கிண்டலாகச் சொல்லமுயன்றது எனக்கு புரிபட்டது.

அடுத்த வெளிச்சமும் இடியும் விமானத்தின் அந்தப் பக்கத்திலிருந்து வந்தன. இப்போது விமானம் கிட்டத்தட்ட செங்குத்தாக நிமிர்ந்து எழுந்துகொண்டிருந்தது. இந்தளவிற்குச் செங்குத்தாக இதுவரை போனதே இல்லையே என்று குழம்பினேன். அல்லது இதுவரை கவனிக்கவில்லையோ? மேலே ஏறிச் சம நிலைக்கு வரும் அந்த பத்து நிமிடங்களுக்கு வழக்கமாக நான் என்ன செய்வேன் என்று தலையை உதறிச் சிந்திக்க முயன்றேன்.

இப்போது இன்னொரு டிகிரி செங்குத்தாக விமானம் நிமிர்ந்தது என்று நிச்சயம் உணர்ந்தேன். விமானத்திற்குள் படாரென ஒரு சத்தம். முடிந்தவரை கழுத்தைத் திருப்பிப்பார்த்தேன். தலைக்கு மேல் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்த ஒரு சிறு கதவு திறந்துகொண்டது. சரியாக மூடித்தொலைக்கவில்லை போல. உள்ளிருந்த பெட்டிகள் வெளிச்சிதறின. நிச்சயம் ஒரு மண்டையிலாவது விழுந்திருக்க வேண்டும். இப்போது என்ன என்னவோ மொழிகளில் கூக்குரல்கள் அதிகமாயின. குழந்தைகளின் கதறல்களுடன் கலந்து வீறிட்டன.

விமானத் தரையெங்கும் விளக்குகள் வரிசைக் கோடுகளாக ஒளி பெற்றன. இது எப்போதுமே டேக் ஆஃப் ஆகும்போதெல்லாம் நடக்கும் விஷயம்தானா? அல்லது இன்று மட்டும்தானா?

முந்தைய பயணங்களை நினைவு கூற முயன்றேன்… முடியவில்லை…

திரும்ப, ஹீத்ரோவிற்கே போய்விட மாட்டோமா என்று முதன் முறையாக யோசித்தேன்.

இத்தனை மழையில் எப்படி டேக் ஆஃப் செய்ய அனுமதி கொடுத்தார்கள்… உலகின் அதிக பரபரப்பு ஏர்போர்ட்டாச்சே, ஹீத்ரோ… இதை எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள்… ஒருவேளை இந்த விமானத்திற்குப்பின் அடுத்தடுத்த விமானங்களை நிறுத்திவிட்டார்களோ, இந்த விமானம்தான் கடைசியோ…

அடுத்த வெளிச்சத்தில்தான் முதன்முறையாக நானில்லாத இவ்வுலகைப் பற்றி எண்ண ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். விமானநிலையக் கார் நிறுத்தத்தில் விட்டிருக்கும் காரிலிருந்து ஆரம்பித்து இன்னும் தாக்கல் செய்யாத சென்ற வருட நிறுவன வரவு செலவுக் கணக்குகள், கட்ட வேண்டிய வரிகள், செட்டில் ஆகாத இன்வாய்ஸ்கள், இன்னும் சொல்லத் திட்டமிருந்த பொய்கள், பெஞ்சமின் அப்பா எப்படி இரு குளிர்காலங்களுக்குத் தாக்குப்பிடித்தார், யூதர்கள் எல்லாரும் போலந்து எரி மனை முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருந்தார்களே… ஒருவேளை (kapo) கப்பாவாக மாறிவிட்டிருப்பாரோ, எனக்கு மட்டுமே தெரிந்த கடவுச்சொற்கள், எனக்கு அப்புறம் யார்… வரிசையின் நடுவில் உருவான சிவப்பு வைன் குளம்… மேலும் மேலும் பெரிதாகிக்கொண்டே, மேலும் அடர் சிவப்பாக… எண்ணங்கள் வரிசைக் கிரமமாக வராமல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் இந்த மின்னல்கள், இடிகள்போல் வந்துவிழுந்து, அறைந்து அடித்துச் செல்லப்பட்டு…

திடீரென விமான எஞ்சின் சத்தம் அப்படியே நின்றுவிட்டது. யாரோ சுவிட்சை அணைத்ததுபோல். இல்லை, மின் தடையான மின் விசிறிபோல்…

அந்தகாரத்தில் மின்னல்களுக்கும் ஆழி மழைக்கும் நடுவில் சிறு இலை போன்று எங்கள் விமானம் மிதப்பதை நிச்சயம் உணர்ந்தேன். நிச்சயம்…

இப்போது வெளிச்சங்களும் அதனைத் தொடர்ந்து வந்த இடிச் சத்தங்களும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் தோன்றின.

விமானத்திற்குள் ஓலங்கள் அதிகமாயின.

இப்போது கைப்பிடிகளை இறுக்கிக்கொண்டிருந்தேன். விமானம் தலைகீழாக பாய்வதற்கு முன் பிடித்துக்கொள்ள வேண்டும். இன்னேரம் இங்கிலிஷ் கால்வாயை அடைந்திருப்போமா? அல்லது இன்னும் நிலத்தைத் தாண்டி முடிக்கவில்லையா… சவுத் எண்ட்டிற்கு அருகில் விழுந்து தொலைக்கப்போகிறோமா?

அடுத்த வெளிச்சத்தில் ஏர்ஹோஸ்டஸும் இப்படி பிடித்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். அவரது கண்கள் இறுக மூடியிருந்தாலும் வாய் சற்றே திறந்திருந்தது.

மொத்த விமானமும் பூகம்பத்தினும் சென்றுவிட்டதுபோல் உதறிக்கொண்டிருந்தது. உதறுதல் என்றால் அப்படி ஒரு கடும் உதறல். முன்னிருளைக் கிழித்துக்கொண்டு மேலும் கடுமையான இருளை நோக்கிச் செங்குத்தாகச் சென்றுகொண்டிருந்தது. எப்போது இந்த முடிவுறா இருள்காட்டைத் தாண்டித் தொலைப்போம்… விமானிகளின் முன்னால் கண்ணாடியில் காட்சிகள் இப்போது எப்படி இருக்கும்…

விமானம் செங்குத்தான நிலையிலிருந்து நிமிராமலேயே சட்டென வலதுப்பக்கம் திரும்பியது. ஏஏஏன்…

கைப்பிடியை இன்னும் இறுக்கிக்கொண்டேன்… அப்போது என்னால் செய்யமுடிந்ததெல்லாம் அதுதான்… அது ஒன்றுதான்…
……….

“இரவு உணவு?” என்ற கேள்வியுடன் என்னருகில் ஓர் பெரிய உணவுப்பெட்டிகளை நிறைத்துக்கொண்ட பெரிய ட்ரேயை தள்ளிக்கொண்டு நின்ற ஹோஸ்டஸை நிமிர்ந்து நோக்கினேன்.
கங்குல் விழிகள் மின்னின. மெல்ல இடம் வலமாக தலையசைத்தேன்.

“குடிக்க ஏதாவது? சிவப்பு அல்லது வெண் ஒயின்?” கணீரெனக் குரல் இருந்தது. விமானப் பயணங்களுக்கான சிக்கன அளவுகொண்ட சிவப்பு ஒயின் பாட்டில்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முக்கியமாக உடையாமல் இருந்தன என்று எண்ணிக்கொண்ட உடனேயே தலையசைத்திருப்பேன்போல. அவரது உதடுகளை ஒட்டி ஓர் சிறு கோடு நிழல்போல வந்து மறைந்தது. உணவு ட்ரேயை அடுத்த வரிசைக்கு எட்டித் தள்ளினார்.

ஹம் என்றொரு ஒலி ஒற்றைக் குரலாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஜன்னலுக்கு வெளியே, கிட்டத்தட்ட 35,000 அடிகளுக்கு மேல் கடும் இருண்ட அமைதி.

நிதானம் என்னுள் முழுவதும் நிரம்பி அமர்ந்திருந்தேன். கொஞ்சம் நகர்ந்தாலும் தளும்பிவிடும் போன்ற நிதானம்.

பெஞ்சமினைப் பார்த்தேன். திங்கள் கிழமை காலை, காலையுணவைத் திருப்தியாக முடித்துவிட்டு முதல் கூட்டத்திற்கு முதல் ஆளாக வந்து அமர்ந்திருப்பவரைப்போல் தெளிவாக இருந்தார். கையில் கிப்ப எனும் சிறு தொப்பி இருந்தது.

இருவரும் ஒருவரையொருவர் கூர்ந்து கவனித்தோம்.

“டேக் ஆஃப் ஆகி எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?” என்று கேட்டேன்.

நான் ஆரம்பிக்கக் காத்திருந்தவர்போல, பெஞ்சமின் “ என்ன ஒரு, பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்” என்றார்.

“உன் தந்தை எத்தனை வருடங்கள் வதை முகாமில் தாக்குப்பிடித்தார் என்று சொன்னீர்கள்? இரு குளிர்காலங்கள், இல்லையா?”

பெஞ்சமின் தலையை மெல்ல மேலும் கீழும் அசைத்தார்.
மவுனமாக இருந்தேன். பின் மெல்ல பக்கவாட்டில் திரும்பி ஜன்னல் அளவேயான அந்தகாரத்தை வெறித்தேன்.

சில கணங்கள் தாண்டி, “நானும் காட்டின் தொடுமூலையை தேடிப்பார்த்து வேண்டிக்கொண்டேன்” என்றேன். என் குரலின் ஒல்லித்தன்மை எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

பெஞ்சமினின் மெல்லப் புன்னகைக்க ஆரம்பித்து, “வெல்… இது நிச்சயம் கடைசி வேண்டுகோள் இல்லை… இல்லையா?” என்றார்.

நெளிந்துகொண்டிருந்த பிர்ச் மர உச்சிகளும் மேக்பைகளும் எதிர்பட்டன.

அவரிடம் வேறு என்னவோ கேட்க விரும்பினேன். செருமிக்கொண்டேன். ஆனால் முகத்தை ஜன்னலிருந்து விலக்காமல் சொன்னது என்னவோ, “பின்ன, விமானம் பத்திரமாக பெர்லினில் இறங்க வேண்டும் இல்லையா?”

பெஞ்சமின் நிச்சயம் பெரிதாய்ப் புன்னகைத்திருப்பார். ஆனால் நான் அவரிடம் வேறு என்னவோ கேட்க விரும்பினேன்.


2 Replies to “ம்ருத்யோ மா”

Leave a Reply to கிருஷ்ணன் சங்கரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.