
இந்துக்களின் வழிபாட்டில் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் சூரியன்(ஆத்மகாரகன்), சந்திரன் (மனோகாரகன்), செவ்வாய் (பூமிகாரகன்), புதன்(புத்திகாரன்), வியாழன்(குரு) வெள்ளி(சுக்கிரன்), சனி(மந்தாகரன்), ராகு (யோகக்காரகன்), கேது(ஞானகாரகன்) ஆகிய ஒன்பது கிரகங்களும் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஒன்பான் கிரகங்கள் தமிழில் கதிரவன், சோமன், நிலமகன், அறிவன், சீலன், கங்கன், காரி, கருநாகன், செந்நாகன் என்று வழங்கப்படுகின்றன. இந்த ஒன்பது கிரகங்களும் மனித வாழ்க்கையின் போக்கினை நிர்ணயிக்கின்ற ஆற்றல் கொண்டவை என்பது காலம் காலமாக இந்துக்களிடம் இருந்து வரும் நம்பிக்கையாகும். சூரியன் ஆத்மாவையும், சந்திரன் மனதையும், செவ்வாய் மற்றும் ராகு வாக்கு வன்மையையும், வியாழன் அறிவையும் சுக்கிரன் காம இச்சை மற்றும் இந்திரியங்களையும், சனி துக்கம், நரம்பு, தசை மற்றும் மரணத்தையும் என ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்களே இயக்கிக் கொண்டிருக்கின்றன என்று கருதப்படுகிறது. நவக்கிரகங்களில் சூரியன் ராஜாவாகவும், சந்திரன் ராணியாகவும், செவ்வாய் தளபதியாகவும், புதன் இளவரசராகவும், குரு மதி நிறைந்த அமைச்சராகவும் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடக் கலைக்கு ஆணிவேராக இருப்பது நவக்கிரகங்களே. ஒருவருக்கு, ஒன்பது கிரகங்களில் ஏதேனும் ஒன்றின் பாதிப்பு ஏற்பட்டாலும், கிரகங்களுக்குரிய பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய் விடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. எனவே நவக்கிரகங்களின் அருள் வேண்டி பரிகார வழிபாடுகள் தொன்றுதொட்டு பாரதம் முழுவதும் பரவலாக நடந்தேறி வருகின்றன. தமிழ் பக்தி இயக்க நாயகரான திருஞான சம்பந்தரும்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்ற தனது திருப்பதிகத்தை ஓதும் சிவனடியார்களுக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையையே புரியும் என்று கட்டியம் கூறுகிறார்.
கோள்களை வழிபடுவது பழைய மரபாயினும் கோள்கள் ஒன்பதையும் ஒருங்கே பீடமேற்றி, ஒன்றாக வழிபடும் முறைமை பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் நவக்கிரக சன்னதிகள் பல்வேறு நிலைகளில், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகள் அமைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி முதலான ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன. ஆதலால், இந்தக் கிரகங்களை பக்தர்களும் இடமிருந்து வலமாகவே சுற்ற வேண்டும் என்றும் ராகு, கேது ஆகிய இரு கிரகங்கள் வலமிருந்து இடமாகச் சுற்றுபவை ஆதலின் கடைசி இரண்டு சுற்றுகளை வலமிருந்து இடமாகச் சுற்ற வேண்டும் என்று சிலர் கூறுவர். இது ஒரு தவறான கருத்து என்று கூறப்படுகிறது. இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றினாலே போதுமானது என்றும் அதே போல ஆலயத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பின்னர் கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவது முறையாகும் என்றும் எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது. ஒன்பது கிரகங்களில் கடைசி மூன்று கிரகங்களான சனி, ராகு, கேது மூன்றும் தீய பலன்கள் அளிப்பதில் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது. நவக்கிரக வரிசையில் உள்ள குரு பகவான், தேவர்களின் குரு. அவர் குருவுக்கெல்லாம் குரு. ராஜகுரு. இந்த ராஜகுருவுக்கு அதிதேவதையாகத் திகழ்பவர் ஞான குரு தட்சிணாமூர்த்தி. அதனால்தான் குருப்பெயர்ச்சி முதலான தருணங்களில், தென்முக கடவுளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதாய் உள்ளது.
நவக்கிரகத் தலங்கள்
நவகிரகங்கள் சிவபெருமானை வழிபட்டு நலம் பெற்ற திருத்தலங்களே நவக்கிரக பரிகாரத் தலங்கள். நவக்கிரகங்களின் எதிர்மறை தாக்கத்தால் மக்கள் துன்பத்தை அனுபவிப்பது போன்று, நவக்கிரகங்களும் துன்பம் அனுபவித்து, சிவனை வழிபட்டு, தங்கள் பாவம் நீங்கப் பெற்ற தலங்கள் என்று தமிழ் நாட்டில் ஏராளமாக சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றுள் ஒரு சிலவாக, தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில், திருநெல்வேலி பாபநாசம் பாபநாச நாதர் கோயில் மற்றும் சென்னை கொளப்பாக்கம் (சென்னை போரூர் சந்திப்பிலிருந்து 5 கி.மீ. தூரம்) அகத்தீஸ்வரர் கோயிலில் சூரியனும், திருவாரூர் தியாகராஜர் கோயில், திங்களூர் கைலாசநாதர் கோயில், மற்றும் சேரன்மகாதேவி அம்மையப்பர் கோயிலில் சந்திரனும், வைத்தீஸ்வரன் கோவில், மற்றும் பழநியில் செவ்வாயும், மதுரை மற்றும் திருவெண்காட்டில் புதனும் திருச்செந்தூர் மற்றும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருவும், கஞ்சனூர் சுக்கிரபுரீஸ்வரர் கோயில் மற்றும் மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில். சுக்கிரனும், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், பொழிச்சலூர் (சென்னை பல்லாவரத்திலிருந்து 4 கி.மீ. தூரம்) திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், மதுரை அழகர்கோவில் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காசி விஸ்வநாதர் கோயில்களில் சனீஸ்வரனும், திருநாகேஸ்வரத்தில் ராகுவும், திருக்காளத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் கீழப் பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலில் கேதுவும் சிவனை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. இத்தளங்கள் நவக்கிரக தல வரிசையில் இடம் பெறுகின்றன.
பொது அமைப்பு
அனைத்து சிவாலயங்களிலும், ஈசானிய(வடகிழக்கு) மூலையில் நவக்கிரகங்கள் மேற்கு திசை முகமாக அமைக்கப்பட்டிருக்கும். நடுவில் சூரியன் கிழக்கு முகமாகவும்,, சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரன் கிழக்கு முகமாகவும், மேற்கில் சனி மேற்கு முகமாகவும், வடக்கில் குரு வடக்கு முகமாகவும், தெற்கில் செவ்வாய் தெற்கு முகமாகவும், வடகிழக்கில் புதன் வடக்கு முகமாகவும், தென் கிழக்கில் சந்திரன் மேற்கு முகமாகவும், வட மேற்கில் கேது தெற்கு முகமாகவும் தென் மேற்கில் ராகு தெற்கு முகமாகவும் இடம் பெற்றிருக்கும். சிவாலங்களில இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை ஒவ்வொரு கிரகமும் தனித் தலத்தில் தான் தத்தம் வாகனத்துடன் காட்சியளிக்கின்றன.

மூலஸ்தானமாக
சூரியனார் கோவில்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்திலும், ஆடுதுறையில் இருந்து 3 கி.மீ. தொலைவிலுமுள்ள சூரியனார் கோயில் தேர் வடிவில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களை ஒரு சேர வழிபடும் தனித்துவக் கோயிலாக கி.பி 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற வரலாற்றுப் பெயரில் அமைக்கப்பட்டதாகும்.இன்று சூரியனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையின் மேலே உள்ள விமானத்தின் நான்கு மூலைகளில் குதிரை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விமானத்தைச் சுற்றி பன்னிரு சூரியர்கள் அமர்ந்த நிலையில் உள்ளனர். ஆகம விதிப்படி ‘சூரியனின் இரு கைகள் தாமரை மலரை ஏந்தி இருக்க வேண்டும்; ஏந்தப்பட்ட தாமரை சூரியனின் தோள் வரையிலும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்; தலையின் பின்பகுதியில் ‘காண்டி மண்டலம்’ என்ற ஒளிவட்டம் அமைந்திருக்க வேண்டும்; தலையில் கரண்ட மகுடத்துடன், காதுகளில் குண்டலங்களும், கழுத்தில் ஆரமும், மார்பில் யக்ஞோபவீதமும் அமைக்கப்பட வேண்டும்; சூரியனின் இடது மற்றும் வலது புறங்களில் அவரது தேவியர் பிரத்தியுக்ஷா மற்றும் உஷா இருக்க வேண்டும்; சூரியன் வலம் வரும் தேர் ஒற்றைச் சக்கரத்துடன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு அருணன் என்ற தேரோட்டி தேரினை ஓட்டுவது போல் காட்டப்பட வேண்டும்’ என்று கூறுகிறது. அந்த விதிப்படி, இங்கு சூரிய பகவான் வலது பக்கம் பிரத்யுஷா தேவியுடனும் இடதுபக்கம் உஷாதேவியுடனும், இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற மற்றும் திருமணக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். நவக்கிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்திலும் நவக்கிரகமே மூலஸ்தானமாக அமைந்ததுமான கோயில் இது. மற்ற நவக் கிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே அமைக்கப் பெற்றிருக்கும். ஆனால், இங்கு ஒன்பான் கோள்கள் தனித்தனி கோவில்களில் அவர்களுக்குரிய திசைகளில் அமைந்துள்ளன. இங்கு நவக்கிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது. இங்கு வாகனங்கள் இல்லாது நவக்கிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர். தமிழ்நாட்டில் சூரியனுக்கென்றே தனிக்கோயில் கொண்ட ஒரே தலம் இது. அதுமட்டுமல்லாது நவக்கிரகங்களுக்கும் தனித்தனி கோவில் அமைந்துள்ள ஒரே தலமும் இதுவே.

தனிச் சன்னிதியாக
திங்களூர்- கைலாயநாதர் (சந்திரன்): திருவையாறு- கும்பகோணம் சாலையில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பழனத்திற்கு வடக்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தல இறைவனை திங்கள் வழிபட்டு சாபம் நீங்கப்பட்டு அருள் பெற்றமையால் திங்களூர் எனப் பெயர் பெற்றது. சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார். சந்திரனின் சாபம் போக்கி அருளிய பங்குனி முழு நிலவு நாளில் பிரதமையில் சந்திரனின் ஒளி இறைவன் திருமேனியில் விழுவதை காண முடிகிறது. இத்தலத்து சந்திர பகவானை திங்கள் கிழமை முழு நிலவு நாளன்று வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சந்திரன் உள்பட அனைத்துக் கிரங்களும் சூரியனைப் பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத திங்கட்கிழமையின், சந்திரனை வழிபடுவது உகந்ததாக கருதப்படுகிறது.
வைத்தீஸ்வரன் கோயில் -செவ்வாய்: பொதுவாக, சிவாலயங்களில் சிவ சன்னதிக்கு முன் இடது பக்கமாக நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயிலில் நவக்கிரகங்கள்
நேர்க்கோட்டில்
வக்கிரமில்லாமல், வரிசையாக ஈஸ்வரன் சன்னதிக்கு பின்புறம் தத்தம் நோய் தீர ஒரே வரிசையில் நேர்க்கோட்டில் நின்று வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாயிற்று. அங்காரகன் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். குஷ்ட நோயினால் அவதியுற்ற அங்காரகனுக்கு சிவ பெருமான் வைத்தியராக வந்திருந்து, நோய் நீக்கிய தலம் என்பதால் இக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்றாயிற்று.செவ்வாய் தோசத்தால் பாதிக்கப்பட்டு திருமணம் தடைப்பட்டவர்கள் இங்கு அருள்பாலிக்கும் அங்காரகனை வழிபட்டால் வரன் கிடைக்கப் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
திருவெண்காடு-புதன்: சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்ம வித்யா நாயகி அம்பாள் சன்னதிக்கு முன் இடது பக்கத்தில் புதன் தனி சன்னதியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார். புதன் பரிகாரத் தலங்களில் முதன்மை தலம். ஒவ்வொருவரது வாழ்விலும் புதன் திசை 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவே தான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து, 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது நலம் பயக்கும் என்பது ஐதீகம். கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கவும் நரம்பு தொடர்பான நோய்கள் நீங்கவும் திருவெண்காடு புதன் பகவானை வழிபடலாம்.
ஆலங்குடி-திருஇரும்பூளை: நவக்கிரகத் தலங்களில் குரு தலம். கும்பகோணம்- மன்னார்குடி (நீடாமங்கலம் வழி) சாலையில் 19 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருவுக்கான முதன்மை தலங்களுள் ஒன்றாகும். தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இத்தலம் ஆலங்குடி என பெயர் பெற்றது. குருவான தட்சிணாமூர்த்தியே குருவாய் இருந்துனகாதிச முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது இததலத்தில் மட்டும்தான்.
கஞ்சனூர் -சுக்கிரன்: சூரியனார் கோயிலிலிருந்து 3 கி.மீ. மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இங்குள்ள அக்னீஸ்வரர் திருக்கோயில் சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் ஒன்று. பிற நவக்கிரகங்களைப் போன்று இத்தலத்தில் சுக்கிரனுக்குத் தனி சன்னதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். இங்கு சுக்கிரன் சிவனிடம் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். கஞ்சனூர் போன்று திருநாவலூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களும் சுக்கிரன் வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.
திருநள்ளாறு-சனி: இத்தலத்தில் சனி பகவான் தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றார். கோயிலில் சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றார். இவ்வழிபாட்டுத் தலத்தில்
திருநள்ளாறு சனி பகவான்
சனி பகவான் துணைக் கோயில் கொண்டும் எழுந்தருளியுள்ளார். சனீஸ்வரன் நளனை துன்புறுத்திய சூழலில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். சனி கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாக இது கருதப்படுகிறது. காரைக்காலிலிருந்து 5 கி.மீ. மற்றும் பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருநாகேஸ்வரம்-ராகு: கும்பகோணத்திற்கு தென் கிழக்கில் காரைக்கால் செல்லும் சாலையில் 6 கி.மி. தொலைவில் அமைந்துள்ள தலம். தன் தவறுக்கு வருந்தி ராகு இறைவனை வேண்டி நிற்க, இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாக ஆக்கியத் தலம். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு இங்குள்ள நாக நாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக் கன்னி ஆகிய தன் இரு தேவியருடன் மங்கள ராகுவாக தனிக்கோயில் கொண்டு காட்சி அளிக்கின்றார். பொதுவாக, மனித தலை பாம்பு உடலுடன் காட்சி தரும் ராகு இத்தலத்தில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் பொழுது, பால் அவருடைய திருமேனியில் பட்டு வழியும் வேளையில் நீல நிறமாக மாறிவிடுகிறது.
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் -கேது: மயிலாடுதுறை-பூம்புகார் பாதையில் தர்மகுளம் என்ற சிற்றூருக்கு தெற்கே 2 கி.மி. தொலைவில் கீழப்பெரும்பள்ளம் உள்ளது. இறவா வரம் பெற தேவரும், அசுரரும் திருப்பாற்கடலில் மந்திரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு அமிர்தம் பெற கடைந்த சமயத்தில் வாசுகி வலி தாங்காமல் நஞ்சை கக்கியது. நஞ்சை கண்டு அஞ்சிய அசுரர்களும், தேவர்களும் ஈசனிடம் முறையிட, சிவன் நஞ்சை உட்கொண்டார். தன் நஞ்சை சிவபெருமான் உண்ணுமாறு ஆயிற்றே என வருந்திய வாசுகி, ஈசன் அருள் பெற வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தது. இதைக்கண்ட சிவபெருமான் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று வாசுகிக்கு காட்சியளித்து அருள்பாலித்தார் என்பது இத்தல தொன்மமாம். இறைவன் கிரகப் பதவியையும் கேதுக்கு வழங்கினார். இவ்வாலயத்தில் கேது பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாம்பு தலை மற்று மனித உடலுடன், சிம்ம பீடத்தில் இரு கரம் கூப்பி சிவனை நோக்கி வணங்கிய கோலத்தில் கேது காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் கேதுவே பிரதானம் ஆகையால் நவக்கிரக சன்னதி கிடையாது.
பிற தலங்கள்
தென்குடித் திட்டை-குரு: தஞ்சையிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திட்டை என்று அழைக்கப்படும் தென்குடித் திட்டை அமைந்துள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக
மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலங்குடி, பட்ட மங்கலம் போன்ற குரு தலங்களில், குருவின் அதி தேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாகப் பாவிக்கப்பட்டு வழிபடப்படுகிறார். ஆனால், இத்தலத்தில் எங்கும் இல்லாத சிறப்போடு, நவக்கிரக குரு தனி சன்னதியில் தனி விமானத்துடன் அபய ஹஸ்த முத்திரையுடன் ராஜ குருவாக வணங்கப்படுகின்றார். குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அவர் இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
குருவித்துறை-குரு: மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தானுக்கு சுமார் 12 கி.மீ. தொலைவில் வைகை நதிக் கரையில் உள்ள குருவித்துறையில் அமைந்துள்ள சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தின் வெளியே தென்முக கடவுளான குரு பகவானுக்கென்று தனி சன்னதி உள்ளது. சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது பொதுவானது. ஆனால்,
வைணவத் தலம் ஒன்றில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது, சற்று வித்தியாசமானதாக உள்ளது. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரைத் தரிசிக்கும் கோலத்தில் ஞான குரு மேற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் யோக குருவாக அவர் காட்சி தருகின்றார்.
குச்சனூர்-சனி: சிவாலயங்களில் சனி பகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் திருநள்ளாருக்கு அடுத்து சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பது குச்சனூரில் தான். தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் குச்சனூர் அமைந்துள்ளது. தமிழகத்தில் தனக்கென தனிக் கோயில் கொண்டு சனி பகவான் எழுந்தருளியிருக்கும் ஒரே தலம் குச்சனூர் மட்டுமே.
நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனீஸ்வர பகவான் அரூபி வடிவ லிங்கம் பூமியில் இருந்து வளர்ந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளதாகக் கூறுகின்றனர். சனீஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் நீங்கிய தலம் இது என்று கருதப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருள் அடக்கம் என்பதால் 3 ஜோடி கண்களும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என்ற தாத்பரியத்தில் நான்கு கரங்களும், இரண்டு பாதமும் உள்ளன.
சென்னையைச் சுற்றி
சென்னையைச் சுற்றிலும் நவக்கிரகப் பரிகாரத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சூரியனுக்கு போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயமும், சந்திரனுக்கு குன்றத்தூருக்கு அருகில் உள்ள சோமங்கலம் சோமநாதீஸ்வரர் கோயிலும், செவ்வாய்க்கு பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவிலும், புதனுக்கு போரூருக்கு அருகில் உள்ள கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலும், குருவுக்கு போரூரில் உள்ள இராம நாதேஸ்வரர் கோயிலும், சுக்கிரனுக்கு மாங்காட்டில் உள்ள திருவல்லீஸ்வரர் (வெள்ளீஸ்வரர்) ஆலயமும், சனிக்கு பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் இருக்கும் அகஸ்தீஸ்வரர் கோயிலும், ராகுக்கு குன்றத்தூரில் இருக்கும் திருநாகேஸ்வரர் கோயிலும், கேதுவுக்கு போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயமும் நவக்கிரக பரிகாரத்திற்கு உரியனவாக கூறப்படுகின்றன. கலிபோர்னியா சான் டிகோ கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பீகாரில் கிடைக்கப்பெற்ற 10ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு நவகிரகங்கள் சிற்பம், பீகார்
சான் டிகோ கலை அருங்காட்சியகம், கலிபோர்னியா
நவக்கிரக சிற்பம் நின்ற கோலத்திலும் ஒரே நேர்கோட்டிலும் அமைந்துள்ளது.
லிங்க வடிவில்
தஞ்சை பெருவுடையார் கோயில்: சிவாலயம் எனினும், இங்கு நவக்கிரககங்களுக்குத் தனியாக சன்னதி இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், பிற கோயில்களைப் போல்
தஞ்சை பெருவுடையார் கோயிலில்
நவக்கிரகங்கள் அவைகளின் உருவில் இல்லாமல், கோயிலின் மேல் புற வட பகுதியில் லிங்க வடிவிலேயே காட்சி தருகின்றன. தமிழ்நாட்டில் கிரகங்கள் லிங்க வடிவில் காட்சி அளிப்பது இக்கோயிலில் மட்டுமே. மக்கள் தங்கள் குறைகளைக் களைய நவக்கிரகங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை இங்கு நவ லிங்கங்களுக்கு செய்து வழிபடுகின்றனர்.(அஸ்ஸாம் கௌகாத்தி சித்ராசல் மலையில் உள்ள நவக்கிரகக் கோயிலில் கிரகங்கள் லிங்க வடிவிலேயே அமைக்கப் பெற்று அந்தந்த கிரகத்திற்குரிய வண்ண ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
லிங்க வடிவில் நவக்கிரகங்கள்
ஆகம முறையில்
சைவ ஆகம முறைப்படி, சுப கிரகங்களான சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய நான்கும் நேர் திக்கிலும் பாவக் கிரகங்களான புதன், சனி, ராகு, கேது ஆகிய நான்கும் கோணத் திசையிலும் நடுவில் சூரியனும் அமைந்திருக்கும். அன்பில், ஆலந்துறை போன்ற தலங்களில் இவ்வமைப்பிலான நவக்கிரகங்களைத் தரிசிக்கலாம்.
சிவ லிங்கத்தை வழிபட்டவாறுள்ள நவக்கிரகங்கள் அஜந்தா சிற்பங்களில் காணக் கிடைக்கின்றன.
நவக்கிரகங்கள் லிங்கத்தை வழிபடும் காட்சி, அஜந்தா சிற்பம்
தூண் வடிவில்
தேவிபட்டினம்: இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது தேவிபட்டினம். நவக்கிரகங்கள் கடலுள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரே இடம். இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க வந்த இராமபிரான் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார். அந்த ஒன்பதும் `நவ பாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்பட்டு வருகிறது. நவக்கிரகங்கள் கடலில் ஒரே இடத்தில் சங்கமித்துள்ளதால் இக்கடலும் நவ பாஷனம் என்று அழைக்கப்படுகிறது. கடலின் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்து
தேவிபட்டினம் நவபாஷாணம்
அற்புத காட்சி அளிப்பதாக உள்ளது. இங்கு வழிபட வரும் அனைவரும் நவக்கிரகங்களை தொட்டு தத்தம் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் சிறப்பாகும்.
ஆவுடையார் கோயில்: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக, மாணிக்கவாசகர் சன்னிதானத்தில் நவக்கிரகங்களுடன், 27 நட்சத்திரங்களும் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். முதல் தூணில் ராகுவும் கேதுவும், இரண்டாவது தூணில், சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகியவையும், மூன்றாவது தூணில் உஷா மற்றும் பிரத்யூஷாவுடன் சூரியன், புதன் மற்றும் நான்காவது தூணில் சந்திரனும் இருக்கின்றனர்.
துவாரங்களாக
உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இறைவனை ஒன்பது துவாரங்கள் கொண்ட சிறிய சாளரம் வழியாக தரிசிக்கலாம். அங்ஙனம் தரிசிப்பவர்களுக்கு நவக்கிரகங்களின் அருள்
நவக்கிரக கிண்டி
கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவக்கிரக கிண்டி என்று இச்சாளரம் வழங்கப்படுகிறது.
பெண்வடிவில்
தர்மபுரியில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாப்பாரப் பட்டியில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் வேறு எங்குமே காண இயலாத வகையில், நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சியளிக்கின்றன.
அமர்ந்த நிலையில்
பிள்ளையார்பட்டி: பொதுவாக, விநாயகரின் உடல் பகுதியில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கிரகம் வீதம் நவக்கிரகங்கள் வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே விநாயகர் முதன்மை கடவுளாக உள்ள இத்திருக்கோவிலில் சொந்த வீட்டில் இருப்பது போல நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றன.
நத்தம்: மதுரையில் இருந்து 37கி.மீ. தூரத்திலுள்ள நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அமர்ந்த நிலை நவக்கிரகங்கள் வரிசையில் இக்கோயில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
அமர்ந்த நிலையில்
கொடுங்குன்றம்(பிரான் மலை): மதுரை-பொன்னமராவதி சாலையில் உள்ள பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலய நவக்கிரக சந்நதியில் அனைத்துக் கிரகங்களும் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
நேர்க்கோட்டில்
திருவாரூர் தியாகராஜர், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர், திருக்குவளை கோளிலிநாதேஸ்வரர் கோயில், திருவாய்மூர் வாய்மூர்நாதர், வேதாரண்யம் வேதநாதர் கோயில், கோடியக்கரை குழகர், வைத்தீஸ்வரன் கோயில், சிவகங்கை மாவட்டம் பிரான்மலை உமாமகேஸ்வரர் கோயில்களில் நவக்கிரகங்கள், தங்களது திசையில் இல்லாமல் நேர் வரிசையில் காட்சி அளிப்பது அபூர்வமானது. அம்பாளின் திருமணக் கோலத்தினை காணவே இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.
நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒன்றாக வந்து வழிபட்ட திருவாரூர் தியாகராசர் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமாக இல்லாமல் நேராக வரிசையாக உள்ளன. பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால், இங்குள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நேர்க்கோட்டில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. அந்த நவக்கிரகங்கள் அனைத்தும் தென் திசையில் உள்ள தியாகராஜ சுவாமியை நோக்கியபடி அமைந்திருப்பது மேலும் சிறப்பானது. தியாகராஜராக சிவபெருமானே வீற்றிருப்பதால், நவக்கிரகங்களும் தனித்தனியே ஆதிக்கம் காட்டாமல் சிவ பெருமான் கீழ் அடங்கி இருப்பதாக ஐதீகம்.
பந்தணை நல்லூர் (பந்த நல்லூர்): கும்பகோணம்-சென்னை சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் அமைந்துள்ளன. இறைவனின் திருமணக்
ஒரே வரிசையில்
காட்சியை கண்டு களிக்கும் பொருட்டு நவக்கோள்களும் இத்தலம் வந்ததால் சிவன் பசுபதீஸ்வரர் ஆனார் என்றும், சுவாமியின் திருமணத்தை நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன என்றும் கூறப்படுகிறது. கிரகங்களின் அமைப்பு வழக்கமாக காணப்படும் சதுர வடிவில் இல்லை. நேர்வரிசைக் கோள்களை வழிப்பட்டோர்க்கு சகல துயரமும் தீரும் என்பது நம்பிக்கை.
திருக்குவளை(திருக்கோளிலி): திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் பாதையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள திருக்குவளை தலத்தில் நவக்கிரகங்கள் வழிபட்ட சிவன் என்பதால் கோளிலி நாதர் என்று இறைவன் அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன் நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால், வழக்கமாக வெவ்வேறு திசைகளை பார்த்தபடி வீற்றிருக்கும் நவக்கிரகங்கள், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஒரே நேர்கோட்டில் ஒரே திசை நோக்கி வீற்றிருக்கின்றன.
திருவாய்மூர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாய்மூர் மற்றும் திருவெண்காடு திருத்தலக் கோயில்களில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளது.
வேதாரண்யம்: இங்குள்ள திருமறைக்காடர் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் தனித்தனி விக்ரகமாக சுவாமி அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.
கோடியக்கரை: நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரை(கோடியக்காடு) அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் நேர் கோட்டில் நின்று, சுவாமி – அம்பாள் திருமணக்காட்சியைக் காண்பது போல் அமைக்கப்பட்டுள்ளன.
திருவெண்காடு
பஞ்சேஷ்டி: கோயம்பேடு-செங்குன்றம்(காரனோடை வழி) தடத்திலுள்ள பஞ்சேஷ்டி கோயிலின் இராஜகோபுர நுழைவாயில் சிற்பத்தில் அம்பாளை நோக்கியவாறு நவக்கிரகங்கள் ஒரே நேராக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு அம்பாளின் பார்வையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதால் அம்பாள் ஆனந்தவல்லியை வழிபாடு செய்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
குன்றக்குடி: இங்குள்ள குன்றத்து முருகன் கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை, அதாவது மூலவரான முருகனை நோக்கியவாறு அமைக்கப்பெற்றுள்ளன.
கொனார்க்: கொனார்க் சூரியனார் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள நவக்கிரகக் கோயிலில் 20 அடி நீளமும் 4 அடி உயரமும் 7 அடி கனமும் உள்ள கற்பலகையில் நவக்கிரகங்கள் அழகான வடிவில்
கொனார்க் நவக்கிரக கோயிலில்
செதுக்கப் பெற்றுள்ளன.அவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.
வாகனங்களில்
பாரிமுனை சென்னை பாரிமுனை லிங்கி செட்டித் தெருவில் அமைந்துள்ள மல்லிகார்ஜுனர் கோயிலில், நடுநாயகமாக சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செந்தாமரை மலரில் அமர்ந்திருக்க, அருணன் தேரினை ஓட்டுவது போலவும், வெண்தாமரையில் சந்திரனும், அன்ன வாகனத்தில் செவ்வாயும், குதிரை வாகனத்தில் புதனும், யானை மேல் குரு பகவானும், கருட வாகனத்தில் சுக்கிரனும், காக்கை வாகனத்தில் சனி பகவானும், ஆட்டுக் கடா வாகனத்தில் ராகுவும், சிம்ம வாகனத்தில் கேதுவும் என அவரவருக்கான வாகனங்களில் காட்சி தருகின்றனர்.
கொட்டையூர்: கும்பகோணம்-திருவையாறு சாலையில் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயிலில் நவக்கிரக நாயகர்கள் தத்தம் வாகனங்களுடன், மண்டலம் பொருத்தி குடையுடன் காட்சியளிக்கின்றனர்.
வாகனங்களுடன்
திருப்பராய்த்துறை: திருச்சி-கரூர் சாலையில் உள்ள திருப்பராய்த்துறை சிவாலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனீஸ்வரனுக்கு மட்டும் வாகனம் உள்ளது.
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் உரிய வாகனங்கள் மீது அமர்ந்து உரிய திசைகளை நோக்கியிருக்கின்றன.
காளியின் காலடியில்
ஒவ்வொரு கோயிலிலும் வட கிழக்கு திசையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். ஆனால், கோயம்புத்தூர் ஸ்ரீ த்ரிநேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒன்பதும் காளியின் காலடியில் உள்ளது. இங்கு காளியை வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கி, காரியங்கள் வெற்றி உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
சூரியனை நோக்கி
லால்குடி: திருச்சியிலிருந்து சுமார் இருபது 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் சூரியனுக்கு முக்கியம் அளிக்கப்படும் வகையில் சூரியன் நடுவிலும் மற்ற கிரகங்கள் சூரியனை நோக்கியும் அமைக்கப் பெற்றுள்ளன.
திருக்கருகாவூர்: தஞ்சாவூர் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலய நவக்கிரக சன்னதியில் சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடியே அபய வரத முத்திரையுடன் காட்சி தருகின்றன.
சிவன்மலை: காங்கேயம்-திருப்பூர் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவன் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க எஞ்சிய கிரகங்கள் சூரியனை நோக்கி அமைக்கப் பெற்றுள்ளன. சூரியன் மூலவரைப் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமியை நோக்கி
நாகை காரோணம்: இக்கோயிலில் நவக்கிரகங்கள் சப்த விடங்கத் தலங்களில் காணப்படும் அமைப்பைப் போல, மேற்கு நோக்கி நேர் வரிசையில் அமைந்துள்ளன. நவக்கிரகங்களுள் சனீஸ்வரர் தனியே உள்ளார். இவருக்கு அருகில், நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் வரிசைக்கு மூன்றாக மூன்று வரிசைகளில் சுவாமியை நோக்கியவாறு அமைந்துள்ளன.
தேவியருடன்
நவக்கிரகங்கள் தங்களது தேவியருடன் இணைந்து காட்சியளிப்பது ‘ஜோடி நவக்கிரகம்’ என்று கூறப்படும். தேவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபடுவதால் உடனே திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. திருச்சி மாவட்டம் திருப்பளுவூர் ஈஸ்வரன் கோயில், சேலம் உடையார்பட்டி ஸ்ரீ கந்தாஸ்ரம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளம் மாதவ மார்த்தாண்ட ஈஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் நவக்கிரகங்கள் தத்தம் தேவியருடன் காட்சி தருகின்றன.
கந்தாஸ்ரமம்: சேலம் நகரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கந்தாஸ்ரம கோயிலில், முருகனைச் சுற்றி வந்தால் நவக்கிரகத் தோஷம் நீங்கும் என்ற அடிப்படையில் முருகனைச் சுற்றி தேவியருடன் கூடிய நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்: இங்குள்ள கோனியம்மன் கோயிலில் அம்மனுக்கு வலப் புறத்தில் நவக்கிரக சன்னதியிலுள்ள கிரகங்கள் தேவியருடன் காட்சி தருவது சிறப்பாகும்.. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வீற்றிருக்கிறார்.
உறையூர்: திருச்சி உறையூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வட கிழக்குப் பகுதியில் நவக்கிரகங்கள் தனி மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. பொதுவாக ஆலயங்களில் நவக்கிரகங்கள் தனியாகவோ, தம்பதியுடனோ அல்லது வாகனத்துடனோ காணப்படுவது வழக்கம். ஆனால், இங்கு நவக்கிரக நாயகர்கள் யாவரும் தம்பதி சமேதராய், தங்கள் தங்கள் வாகனங்களில் எழுந்தருளியுள்ளது ஓர் அற்புத அமைப்பாகும்.
வெள்ளவத்தை: ஸ்ரீலங்கா வெள்ளவத்தை இராம கிருஷ்ண தோட்ட வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி அம்பாளுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள தத்துவத் திருக்கோயிலில் மகா சக்தியின் பிரமாண்டமான சிலைக்கு முன்பாக சக்திகளுடன் கூடிய நவக்கிரகங்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பழமையான நவக்கிரக பரிவாரக் கோயில்களைப் போல் அல்லாமல், இங்கே, மகா சக்தியை நோக்கியபடி நடுவில் சூரியனும், அவரின் வலது பக்கத்தில் ஒளிக் கிரகங்களும், இடது பக்கத்தில் இருள் கிரகங்களும் இருக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளமை புதுமையானதாக உள்ளது.
திருநரையூர்: இங்குள்ள இராமநாத சுவாமி ஆலயத்தில் சனீஸ்வரர் தனது தேவியர் மந்தா தேவி, ஜேஷ்டா தேவி ஆகியோருடன் அருள் பாலிக்கிறார். நவக்கிரக மேடையின் நடுவில் இருக்கும் சூரியனும் தன் மனைவியர் உஷா தேவியுடனும், பிரத்யுஷா தேவியுடனும் காட்சி அளிக்கிறார். தம்பதி சமேதராய் மட்டுமல்லாமல் இவ்வாலயத்தில், சனீஸ்வரர் தனது மகன்களுடன் (குளிகன், மாந்தி) குடும்ப சமேதராய் அருள்புரிகிறார்.
திருக்கண்டியூர்: தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கண்டியூர் பிரம்ம சிரக்கண்டீசுவரர் ஆலயத்தில் நவக்கிரக சன்னதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தருகிறார்.
இரும்பை: புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள இரும்பையில் நவக்கிரகங்கள் தமது தேவியருடன் காட்சி தந்து அருள் பாலிக்கின்றன. சூரியன் தாமரை மலர் மீது,
தேவியருடன் நவக் கிரகங்கள், இரும்பை
தனது இரு கால்களையும் மடக்கி வைத்து, தன் மனைவியர் இருவரையும் தனது இரு மடிகளில் வைத்துக் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
சுற்றமுடியாத நிலையில்
கங்கை கொண்டசோழபுரம்: இங்குள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில், வான சாஸ்திர முறைப்படி தாமரைப் பூ வடிவில் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. தாமரை வடிவ பீடத்தின் நடுவில் சூரியனும், இதர கிரகங்கள் அதைச் சுற்றி இதழ் வடிவிலும் உள்ளன. சூரியனுக்குரிய யந்திர வடிவில் கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.தேரை சூரியனின் சாரதி அருணன் ஓட்டுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. சூரியனை தவிர்த்து பிற நவக்கிரகங்கள் யாவும் பூமியை சுற்றி வருபவை ஆதலின் அவற்றை சுற்றக் கூடாது என்ற அடிப்படையில் நவக்கிரக மண்டப அமைப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தாமரை வடிவ பீடத்தில்
தண்டாங்கோரை: தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் மானாங்கோரைக்கு அடுத்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தண்டாங்கோரை கைலாசநாதர் கோயிலிலும் தாமரை வடிவ பீடத்தில் நவக்கிரக சன்னதி அமைந்திருப்பது சிறப்பாகும்.
எட்டியத்தளி: அறந்தாங்கி எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் பத்ம பீடத்தில் அமைக்கப்பெற்று, அவற்றின் மீது மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தேரில்
இடைக்காடு: இங்கே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோயிலில் நவக்கிரக சன்னதி தேரில் செல்வது போல வடிவமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாக உள்ளது.
நவக்கிரக சன்னதி இல்லாமல்
திருக்கடவூர்: தமிழகத்தில் எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னதி உண்டு. விதிவிலக்காக பிரசித்தி பெற்ற திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நவக்கிரக சன்னதி கிடையாது.
நாகப்பட்டினம் நல்லாடை அக்னீஸ்வரர் கோயிலில் சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், இங்கும் நவக்கிரக சன்னதி கிடையாது.
மேல் விதானத்தில்
ஆழ்வார்குறிச்சி: இங்குள்ள வன்னியப்பர் கோயிலில் சுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் நவக்கிரக இயந்திரம் புடைப்பு சிற்பமாக செதுக்கப் பெற்றுள்ளது. சுசீந்திரம் கோயிலில் விநாயகர் சன்னதி முன் மண்டபத்தில் இது போன்ற அமைப்பு இருப்பினும், சிவனின் முன்னிலையில் நவக்கிரக இயந்திரம் வடிவமைக்கப் பெற்றிருப்பது இக்கோயிலில் மட்டுமே.
தருமபுரி: இங்குள்ள கோயிலின் மேல் விதானத்தில் ஒன்பது நவக்கிரகங்களின் உருவங்களும் அவற்றின் வாகனங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது.
சுசிந்திரம்: இங்குள்ள தாணுமாலயன் சுவாமி கோயில் நீலகண்ட விநாயகர் சன்னதி எதிரே உள்ள வசந்த மண்டபத்தின் மேல் விதானத்தில், நவக்கிரகங்கள் அவரவரது வாகனங்களுடன் காட்சி தருகின்றன. சிவனும் பார்வதி தேவியும் இக்கோயிலில் அமர்ந்து யாகம் செய்த போது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிப்பட்டதால் எல்லா நவக்கிரங்கங்களும் கீழ் நோக்கி பார்த்த வண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மோகனூர்: நாமக்கல் மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோயிலில் மேல் விதானத்தில் நவக்கிரக மர சிற்பங்கள் அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளன.
சேலம்: வீரபத்திரர் திருக்கோயிலில், நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார். சிவன் சன்னதி எதிரே மேல் விதானத்தில், 12 ராசிகளுடன் கூடிய ராசிக் கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.
மயிலாப்பூர்: ‘நவகிரகங்கள் தேவிக்கு கட்டுப்பட்டவை. அவை தேவி இட்ட கட்டளை நிறைவேற்ற தேவியின் காலடியில் காத்திருப்பவை’ என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்யலஹரியில் குறிப்பிட்டுள்ளார். எனவே இத்தலத்தில் உள்ள பச்சை பட்டுக் கோலவிழி பத்ரகாளி அம்மன் கோயிலில் நவக்கிரக சந்நதி இல்லை. கருவறையின் முன் உள்ள அர்த்த மண்டபத்தின் மேல் விதானத்தில் நவநாயகர்களும் தத்தமது வாகனங்களோடு தேவியை வணங்கிய வண்ணம் உள்ளனர்.
வேறுபட்ட அமைப்பினில்
திருநின்றியூர்: நாகப்பட்டினம் திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரக சன்னதியில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரை ஒருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.
கல்பாத்தி: கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்கள் ஆலயங்களில் ஈசான மூலையில் இருப்பதற்கு மாறாக, இங்கு கிழக்கு, தென்கிழக்கு திசைகளில் இருப்பதும் இவற்றின் மத்தியில் நவக்கிரகங்கள் ‘சக்தி’ சமேதராக காட்சி தருவதும் வித்தியாசமாக உள்ளது.
சூரியனார்கோயில்: பொதுவாக நவக்கிரகங்களை ஆயுதங்கள், வாகனங்கள் தேவியுடன் அமைப்பார்கள். இங்குள்ள நவக்கிரகங்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை. சாந்த ரூபியாக அருள் பாலிக்கின்றனர். பஞ்சலோக விக்கிரகங்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ள தலம் இதுவே. எல்லா விக்கிரகங்களும் தை மாத பிரமொத்சவத்தில் திருவீதி உலா வருவது இங்கு மட்டுமே.
குழிகள் வடிவில்
திருக்கண்டியூர்: தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கண்டியூர் பிரம்மசிரக் கண்டீசுவரர் ஆலயத்தில் நவக்கிரக சன்னதியில் தீபமேற்றி வழிபடுவதற்காகத் தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை உருவாக்கப்பட்டுள்ளது.
திருமழப்பாடி: பெரம்பலூர் மாவட்டம் அரியலூருக்கு அருகில் உள்ள திருமழப்பாடி வைத்தியநாதர் ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. சுவாமி சந்நதியில் ஒன்பது குழிகள் அமைந்துள்ளன. இவற்றை நவக்கிரகங்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
திருப்பைஞ்ஞீலி: திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோயிலில், நவக்கிரகங்களுக்கென்று தனி சன்னதி இல்லை. எமனுக்கு தனிச் சன்னதி இருக்கிறது. எமன் சனிக்கு அதிபதி என்பதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. இக்கோயிலில், சுவாமி
சன்னதிக்கு முன்னுள்ள நந்தியின் முன் அகல் விளக்கு அளவில் ஒன்பது குழிகள் உள்ளன. அதில் நல்லெண்ணையை ஊற்றி, தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
திசைகள் மாறி
மதுராந்தகம், சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் மற்ற நவக்கிரக தலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. மற்ற இடங்களில் சூரியன் கிழக்கு முகமாக இருக்கும். ஆனால் இங்கு சூரியன் மேற்கு நோக்கியவாறு உள்ளது. இங்குள்ள அம்பிகைக்க்கு வெளிச்சம் தருவதற்காக சூரியன் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், குரு தெற்கும், சுக்கிரன் மேற்கும், புதன் மேற்கும், சந்திரன் கிழக்கும், அங்காரகன் வடக்கும், ராகு தெற்கும், சனீஸ்வரர் கிழக்கும், கேது வடக்கும் ஆகிய திசைகள் நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
இடைக்காட்டூர்: சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோயிலில் நவக்கிரககங்கள் திசை மாறி காட்சியளிக்கின்றன. நவக்கிரககங்களின் மாறுபட்ட நிலையால் பஞ்சம் ஏற்படவே, அதை முன்கூட்டியே அறியப்பெற்ற இடைக்காடர் சித்தர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்தி பஞ்சத்தை சமாளித்தார். இது அறிந்து இடைக்காடரைக் காண நவக்கிரககங்கள் இங்கு வந்ததாகவும், இடைக்காடர் அவற்றிற்கு உணவளித்து விருந்தோம்பியதாகவும் மகிழ்ச்சியுற்ற நவக்கிரககங்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கையில் மழை தரும் வகையில் அவற்றின் திசைகளை மாற்றிவிட்டதாகவும் அதனால் மழை பெய்து பஞ்சம் நீங்கியதாகவும் கூறப்படுகிறது. மக்கள் நன்மை கருதி திசை மாற்றப்பட்ட கிரகங்கள் அவ்வண்ணமே அமையலாயின. சிவாலயத்தில் வடகிழக்கில் அமைய வேண்டிய நவக்கிரககங்கள் ஊரின் வடகிழக்கே அமைந்துள்ளன.
திருவக்கரையில் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கித் திரும்பியுள்ளன.
படிக்கட்டுகளாக
திருநாராயணபுரம்: கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டம், திருநாராயணபுரத்தில் உள்ள மலைக்கோட்டையில் யோக நரசிம்மர் கோயில் சன்னதிக்கு செல்ல 9 படிக்கட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் நவக்கிரங்களாக பாவிக்கப்படுகிறது. நரசிம்மரை தரிசித்தவர்களுக்கு, கிரகங்களின் தோஷம் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
திருப்பைஞ்ஞீலி: மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோயிலில், நவக்கிரகங்களுக்கென்று தனி சன்னதி இல்லை. காரணம் இக்கோபுர வாயிலில் உள்ள ஒன்பது படிகளும் நவக்கிரகங்களான நவ நாயகர்களே என்றும் நவக்கிரக தோஷத்தால் துன்பப் படுபவர்கள் இப்படிகள் வழியாக இறங்கும் போதே, தோஷ நிவர்த்தியாகி விடுவதாக கூறப்படுகிறது.
தூண்களில்
ஆவுடையார்கோயில்: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில், மாணிக்கவாசகர் சன்னதியில் நவக்கிரகங்களுடன், 27 நட்சத்திரங்களும் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளது. முதல் தூணில் ராகு, கேது, 2ஆவது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், 3ஆவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், 4ஆம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். இக்கோயிலில் தனியே நவக்கிரக சன்னதி இல்லை.
நவக்கிரக கல்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் செல்லும் வழியில் தவசிப்பாறை குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரகங்களாகக் கருதி வழிபடுகின்றனர்.
‘ப’வடிவில்
திருக்கொள்ளிக்காடு: திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் ‘ப’ வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. நவக்கிரகங்கள் பொதுவாக ஒன்றை ஒன்று பாராமல் வக்கிர கதியில் தரிசனம் தரும். ஆனால் இத்திருக்கோயிலில் ‘ப’ வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றன. நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை நவக்கிரங்களுக்கு இல்லை. ஆதலின் நவக்கிரகங்கள் தமது மாறுபட்ட குணங்களை விட்டு ‘ப’ வடிவில் ஒருவரை ஒருவர் நோக்கிய வண்ணம் காட்சியளிக்கின்றன.
திருப்புள்ளமங்கை: கும்பகோணம்-திருவையாறு பேருந்து வழித் தடத்தில் உள்ள திருப்புள்ளமங்கை பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்திதேவர் அமர்ந்திருக்கிறார்.
நீடூர்: இங்குள்ள அருட்சோமநாதேஸ்வரர் கோயிலில் அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கும் வகையில் சன்னதிகள் அமைந்துள்ளன.
முருகனின் பார்வையில்: கரூர் மாவட்டம் குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் முருகப் பெருமானின் பார்வையில் படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சிறுகுடி: நன்னிலம் வட்டத்தில் திருச்சிறுகுடி சூக்ஷிமபுரீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனீஸ்வரனுக்கு கீழே “சனைச்சரன்” என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ‘மெதுவாக ஊர்ந்து செல்பவர்’ என்று பொருளாம்.
வைணவ ஆலயங்களில்
பொதுவாக, வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக அமைக்கப்படுவதில்லை. வைணவத்தில் மாலவனைத் தவிர வேறு யாருக்கும் முதன்மை கிடையாது. நவக்கிரகங்கள் இறைவனின் நேரடி உதவியாளர்கள். இறைவனின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை விருப்பு வெறுப்பின்றி தருபவர்கள்; அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு; ஆனால், வெளிப்படையாக முன்னிறுத்தப் படுவதில்லை; அவர்களுக்கும் சேர்த்து அவர்களை ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப் படுகிறார். அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள். பெருமாளை வணங்கி விட்டால் நவக்கிரங்கள் அடங்கிப் போகும் என்பதால், பெருமாள் கோயிலில் நவக்கிரக சன்னதி அமைக்கப் பெறுவதில்லை. நவக்கிரகங்களுக்குப் பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். திருமால் அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு. இராமனை சூரியனின் அம்சமாகவும், கண்ணனை சந்திரனின் அம்சமாகவும், நரசிம்மரை செவ்வாயின் அம்சமாகவும், கல்கியை புதனின் அம்சமாகவும், வாமனனை குருவின் அம்சமாகவும், பரசுராமனை சுக்கிரனின் அம்சமாகவும், கூர்ம அவதாரத்தை சனியின் அம்சமாகவும், வராக அவதாரத்தை ராகுவின் அம்சமாகவும், மச்ச அவதாரத்தை கேதுவின் அம்சமாகவும் நோக்குவதுண்டு.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டில் 18 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தாமிரபரணியாற்றின் வடகரையிலும் தென்கரையிலும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஒன்பது வைணவத் தலங்கள் உள்ளன. இவை நவத் திருப்பதிகள் என்று அழைக்கப் படுகின்றன. நவக்கிரகங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்த ஒன்பது தலங்களிலும் நவக்கிரகங்கள் பெருமாளின் காலடியில் இருப்பதால், தனியே நவக்கிரக சன்னதி கிடையாது. அவை. ஸ்ரீவைகுண்டம் (சூரியன்), நத்தம் (சந்திரன்), திருப்புளியங்குடி (புதன்), இரட்டைத் திருப்பதி (ராகு- கேது), பெருங்குளம் (சனி), தென்திருப் பேரை (சுக்கிரன்), திருக்கோளூர் (செவ்வாய்), ஆழ்வார் திருநகரி (வியாழன்) ஆகியன.
தஞ்சை: தஞ்சாவூர் தெற்கு வீதி கலியுக வரதராஜா பெருமாள் கோயிலில் நவக்கிரகங்களுக்கு சன்னதி உள்ளது. இங்கு சூரியன், சந்திரன் மேற்கு நோக்கி ஒரே திசையில் ஒன்றுக்கொன்று அருகில் அபூர்வமாக உள்ளது.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில்: திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரத்தில் அசுவமேத யாகம் செய்த போது, இந்திரன் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ததாக கூறப் படுகிறது. இக்கோயிலின் நுழைவாயிலில் கோபுரச் சுவரில் இந்த நவக்கிரகங்கள் புடைப்புச் சிற்பங்களாக, திருமாலை வணங்கும் நிலையில் அமைந்துள்ளன. நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வந்து, நவக்கிரகங்களை வணங்கினால், நவக்கிரக தோஷம் நீங்கும் என்கிறது ஸ்தலபுராணம். இந்த நவக்கிரகத்தை சுற்றிலும் 12 ராசிகளும் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.
மதுரை கூடலழகர் கோயில்: இக்கோயிலில் நவக்கிரக சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர.
உத்தமர்கோயில்: திருச்சி, உத்தமர்கோயிலில் பிரம்மதேவனான நான்முகனே குருபகவானாக எழுந்தருளியுள்ளார். இத்தலம் சப்த குருதலம் என போற்றப்படுகிறது.
கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில்: திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலணியில் உள்ள கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் நவக்கிரக சன்னதி உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் கோயில்களில் நவக்கிரக சன்னதிகள் அமைக்கப் பெறுவதில்லை. ஏனெனில் ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவான் குறுக்கிடமாட்டார் என்பது நம்பிக்கையாகும்.
நவக்கிரக நவ நரசிம்மர்
மதுராந்தகம் சித்திரவாடி கிராமத்தின் அருகில் உள்ள சிம்மகிரி மலையடிவாரத்தில் “நவக் கிரக நவ நரசிம்மர் பீடம்’ உள்ளது. இங்கு நரசிம்மர் நவ நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
நவ கிரக நவ நரசிம்மர்
நவ நரசிம்மரும், நவக்கிரகங்களும் இணைந்து ஒரே பீடத்தில் அமைந்துள்ளது வேறுபட்ட அமைப்பாக உள்ளது. இந்த நவக்கிரக நவ நரசிம்மர்கள் கண்ணாடி அறையில் பிரமிடு வடிவமைப்பில் அமைக்கப் பெற்றுள்ளனர்.
வேறுபாடான அமைப்பில்
பிராண பைரவரின் உப சக்தியாக கருதி நவக்கிரகங்கள் வழிபடப்படுகிறது. ஸ்வர்ணாகர்ஷன பைரவர் பைரவி சூரியனாகவும், கபால பைரவர் இந்திராணி சந்திரனாகவும், சண்ட பைரவர் கௌமாரி செவ்வாயாகவும், உன்மத்த பைரவர் வராகி புதனாகவும்,அசிதாங்க பைரவர் பிராமகி குருவாகவும், ருரு பைரவர் மகேஸ்வரி சுக்கிரனாகவும், க்ரோதனபைரவர் வைஷ்ணவி சனியாகவும் சம்கார பைரவர் சண்டிகை ராகுவாகவும், பீஷ்ண பைரவர் சாமுண்டி கேதுவாகவும் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
பத்துமலை: மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தங்க முருகனுக்கு இடப்புறம் உள்ள சன்னதியில் மூலவராக சனி இருக்க, அவர் முன்னே உள்ள மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.
ஓலையூர் தேவி கோவில்: திருச்சி மாவட்டம் அருகில் ஆவூர் செல்லும் வழியில் ஓலையூர் என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. பொதுவாக, நவக்கிரகங்கள் சூரியனை மையமாக வைத்து சதுரமாக வைக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்த கோவிலில் மகிஷாசுர மர்தினி நடுவிலும் மற்ற கிரகங்கள் அதனை சுற்றியும் இருக்கும்.
ஓலையூர் தேவி கோவில் நவக் கிரகங்கள்
வட்டவடிவில்
பெரியக்குளம்: பெரியக்குளம் தென்கரையில் உள்ள வரம் தரும் விநாயகர் கோயிலில் வானில் நவக் கிரககங்கள் எப்படி உள்ளதோ, அதைப் போன்று சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் 45 டிகிரி கோணத்தில் வட்டவடிவமாக அமையப் பெற்றுள்ளது. இங்கு நவக்கிரககங்கள் தங்கள் தேவியருடன் காட்சி அளிக்கின்றன.
எண் கோண வடிவில்
திருவேற்காடு வேதபுரீசுவரர் ஆலயத்தில் உள்ள பத்ம பீடத்தில் எண் கோண வடிவில் நவக்கிரக சன்னதி உள்ளது.
விநாயகரே நவக்கிரகமாக
சூரியனார் கோயில்: சூரியனார் கோயில் தலத்தில் உள்ள விநாயகரை நவக்கிரகங்கள் வழிபட்டமையால் இந்த விநாயகர் கோள்(கிரகம்) தீர்த்த விநாயகர் என்று அறியப்படுகிறார்.
கும்பகோணம்: இங்குள்ள மடத்து தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோயிலில் உள்ள நவக்கிரக விநாயகர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும் சுக்கிரனை இடது கீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு அருள் பாலிக்கிறார். இவ்விநாயகரை வழிபடின் நவக்கிரககங்களை வழிபட்ட பலன் பெறலாம் என்று நம்பப்படுகிறது.
பிள்ளையார் பட்டி: இங்குள்ள கற்பக விநாயகரைச் சுற்றி ஒன்பது சர விளக்குகள் ஜொலித்த
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்
வண்ணம் உள்ளது. இந்த ஒன்பது விளக்குகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
திருத்தங்கூர்: திருவாரூரிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் உள்ள திருத்தங்கூர் வெள்ளிமலை நாதர் கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் வடிவமைக்கப் பெற்றுள்ளன. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரிய லிங்கம், சந்திர லிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ர லிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படும் இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களை ராகு கேது பெயர்ச்சி காலத்தில் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், பொதுவாக சிவாலயங்களில் அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது.
பரங்கிப்பேட்டை: சிதம்பரத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முத்து குமார சுவாமி கோயிலில் உள்ள நவக்கிரகங்களில் சுக்கிரன் பக்தனைப் போல் தரிசனம் தருவது சிறப்பம்சமாகும்.
காரிகைக் குப்பம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சந்தவாசல் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக் குப்பம் ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் சனீஸ்வரர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மூலவரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சி தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர்.
நவக்கிரக விநாயகர்
திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அமைந்துள்ள அமருதபுரி என்ற ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் பிரம்மாண்டமான 8 அடி உயர ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நவக் கிரக விநாயகர் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். தனது குருவான சூரியனை நெற்றியிலும், சந்திரனை வயிற்றிலும், பூமிக்கு அதிபதியான செவ்வாயை வலது தொடையிலும், மகா விஷ்ணுவின் அம்சமான புதனை வலது கீழ் தொடையிலும், உலகிற்கே குருவான வியாழனை
.
தலையிலும், அசுர குருவான சுக்கிரனை இடது கீழ் கரத்திலும், தெற்கு பார்த்திருக்கும் காகத்துடன் கூடிய சனி பகவானை வலது மேற்கரத்திலும், ராகுவை இடது மேற்கரத்திலும், கேதுவை இடது காலிலும் கொண்டு அருள் புரிகிறார்.
நவகிரக மந்திரம்
தோஷங்களை போக்கி வாழ்வை சிறப்பாக மாற்ற உதவுவது நவகிரக மந்திரமாகும்.
ஓம் ஹரீம் ஆதித்யாய ச சோமாய
மங்களாய புதாயச குரு
சுக்கிர சனிப்யச்ச
ராகவே கேதவே நமக.
இந்த மந்திரத்தை நாள்தோறும் 9 முறை பிரார்த்திப்பது நல்லது. அதன் மூலம் ஒரு சேர ஒன்பது நவக்கிரகங்களின் அருளை பெற முடியும். இதனை தொடந்து பிரார்த்தித்து வர இதன் பலனை உணரலாம். காரியங்கள் கைகூடும், வறுமை நீங்கும், உடல் சோர்வு மற்றும் மன சோர்வு நீங்கும், செல்வம் நிலைத்திருக்கும், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகலும். இப்படி இன்னும் பல பலன்களை இதன் மூலம் நாம் பெறலாம். அத்துடன் நவக்கிரங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
நவக்கிரக வழிபாடு மிகவும் தொன்மையானது. ஆரம்பத்தில் நவக்கிரகங்கள் தனித்தே வழிபடபட்டு வந்தன. தஞ்சையை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் சூரியனார் கோயில் என தற்போது அழைக்கப்பெறும் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற கோயில் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் அவ்வழிபாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தினை அது வெளிப் படுத்துகிறது. பல்லவர்கள் மற்றும் சோழர்களின் காலத்தில் உயரமமான மேடையின் மீது நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட வழக்கமே தற்போதும் பெரும்பாலான சிவாலயங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பெருங்கோயில்களில் வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரண்டு வடிவங்களில் நவகிரகங்களின் வரிசைகள் அமைக்கப்பட்டாலும் பிறக் கோயில்களில் பல்வேறு நிலைகளில் அமைக்கப்பெற்றுள்ளது.
*முன்னாள் முதல்வர், அரசு கலைக் கல்லூரி,சுரண்டை, தென்காசி மாவட்டம்.