கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்

பெரம்பூரில் வளர்ந்த எனக்கு விதுஷி சீதா நாராயணனைக் கேட்க இளமையில் நிறைய வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு கர்நாடக இசையில் பெரிய ஈடுபாடு இல்லை. எனக்கு ஈடுபாடு வந்ததும் நான் துரத்தித் துரத்திக் கேட்டவர்களில் அவர் இல்லை. 2014-ல்தான் அவரை நான் கேட்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு கச்சேரியில் அவர் வெளிப்படுத்திய புதுமைகளும் அளவு மீறாத கற்பனைகளும் ஆர்பாட்டமில்லாத அலங்காரங்களும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.

2016-ல் இவருடைய அகாடமி கச்சேரியைக் கேட்ட அனுபவத்தை என் வலைப்பூவில் எழுதியிருந்தேன்.

அதில், ”இவரைப் பற்றி இன்னும் விவரங்கள் திரட்டி 2017-ல் நிச்சயம் எழுதுகிறேன்,” என்று எழுதியிருந்தேன்.

2017-ல் எழுதுகிறேன் என்று சவடால்விட்டாலும் அவரைச் சாவகாசமாகச் சந்திக்க முடிந்தது 2018-ல்தான். சந்திப்புக்குப்பின் பலமுறை எழுத நினைத்து, ஒவ்வொரு முறையும் பேச்சுக்கு நடுவில் அவர் பாடுவதைக் கேட்டபோதெல்லாம், ‘என்ன எழுதினாலும் இந்தக் குழைவையும் இனிமையையும் எழுத்தில் கொண்டுவராமல் – எழுதி என்ன பயன்?’ என்கிற கேள்வி மனத்தில் உதித்து என்னைத் தொடர முடியாமல் செய்துவிடும். அவர் சொன்ன விஷயங்கள் நிச்சயம் பதியப்பட வேண்டியவை என்பதும் என்னை உறுத்திக் கொண்டே இருந்தன. சற்றே நீளமான நேர்காணல் என்றபோதும் அவர் சொன்ன விஷயங்கள் செறிவானவை என்பதால் எதையும் குறைக்காமல் அப்படியே தந்துள்ளேன்.

படம்: எஸ்.ஹேமமாலினி


17 மார்ச் 2018
சென்னை

உங்களுடைய இளமைக்காலத்தில் இருந்து பேட்டியைத் தொடங்கலாம்.

நான் பிறந்தது ஜெம்ஷட்பூரில். எட்டாவது/பத்தாவது தேறினாலே வேலை கிடைக்கும் என்றிருந்த நாள்களில் என் அப்பா பரோடாவில் கலா பவனில் பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். அவர் காலத்திலேயே எங்கள் குடும்பம் பாலக்காட்டில் இருந்து ஜெம்ஷட்பூருக்குக் குடிபெயர்ந்துவிட்டது. என் தமக்கையரும் நானும் பிறந்ததே ஜெம்ஷட்பூரில்தான்.

நீங்கள் பிறந்த வருடம்?

1941. கேரளத்தில் உள்ளது போன்ற இயற்கைச் சூழலும் பசுமையும் ஜெம்ஷட்பூரில் காணக் கிடைக்காது. அங்கு கிடைக்கும் (அல்லது கிடைக்காத) பொருட்கள், பாஷை போன்றவை தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்களுக்குத் தங்கள் ஊரைப் பற்றிய ஏக்கத்தைக் கொடுத்தன.

கர்நாடக சங்கீதம் இருந்ததா?

நான் பிறப்பதற்கு முந்தைய காலத்திலும் சரி, இப்போதும் சரி அங்கு கர்நாடக சங்கீதம் கற்க வாய்ப்பு இருந்ததாக/இருப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய பாக்யம் – நான் சிறுமியாக இருந்தபோது, செம்மங்குடியுடன் தங்கி அவருக்குச் சிஷ்ருஷை செய்து குருகுலவாசம் செய்த ஒருவர் ஜெம்ஷட்பூருக்கு வந்தார். என்னுடைய முதல் குரு அவர்தான்.


அவர் பெயர்?

காசி விஸ்வநாத பாகவதர். அவர் ஸ்வாதித் திருநாள் அகாடமியில் படித்தபடியே செம்மங்குடி சீனிவாச ஐயரிடமும் குருகுலவாசம் செய்தவர். அவருடைய மனைவியின் உறவினர்கள் ஜெம்ஷட்பூரில் இருந்ததால் அங்கு வந்தார். அதனால் நல்ல தரமான வழியில் ஆரம்பப் பாடம் முதல் கிட்டத்தட்ட கச்சேரி செய்யும் நிலை வரை கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.


நீங்கள் எப்போது அவரிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள்?

ஏழெட்டு வயசிருக்கும். அதற்கு முன்னாலேயே கொஞ்சம் பாடமுண்டு.  அங்கு பாலக்காட்டிலிருந்து சில குடும்பங்களும் தஞ்சாவூரில் இருந்து சில குடும்பங்களும் அப்போது இருந்தன. அவர்களுக்குத் தங்களுடைய வேர்களைப் பற்றிய ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது.  தொழிலுக்காக அவர்கள் ஜெம்ஷெட்பூரில் இருந்தாலும் அவர்கள் எண்ணமெல்லாம் எப்போது கரஹரப்ரியாவைக் கேட்போம், எப்போது ராஜரத்னம் பிள்ளையை அழைப்போம் என்றே ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் தொடங்கிய சபாவுக்குச் சமீபத்தில்தான் நூற்றாண்டு விழா நடந்தது. நானும் கலந்துகொண்டு பாடிவிட்டு வந்தேன். அதனால் அங்கு அரியக்குடி, பட்டம்மாள், எம்.எஸ். போன்ற கலைஞர்கள் வந்து கொண்டிருப்பார்கள்.  அப்போது ஹோட்டலில் தங்க வைக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. எங்கள் மாமா கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர் என்பதால் அவர் வீட்டில் வித்வான்கள் தங்குவார்கள். அப்போது வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்குச் சில பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். ஜெம்ஷெட்பூரில் சொல்லித்தர ஆளில்லை என்று ஆந்திரத்திலிருந்து சிலர் வந்து பாட்டு சொல்லிக் கொடுப்பதுண்டு. அவர்கள் எல்லாம் நெடுநாள்கள் தங்கவில்லை. இவர்களிடமிருந்து கொஞ்சம் சங்கீத அறிமுகமிருந்தாலும் முறையாகக் கற்றது காசி விஸ்வநாத பாகவதரிடம்தான்.

Parents – Shri. Vaidhyanatha Iyer & Smt. Seethalakshmi


ஜெம்ஷட்பூரில் நூறாண்டு தாண்டி நடக்கும் சபை எது?

மதராஸி சம்மேளனி என்று அதற்குப் பெயர். 1917-ல் தொடங்கப்பட்ட சபை. தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த குடும்பங்களில் உள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து இந்த சபையின் ஓர் அங்கமாய்த் தக்ஷிண பாரத மஹிலா சமாஜ் என்று ஓர் அமைப்பைத் தொடங்கி அவர்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களிடம், குறிப்பாகக் குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டனர். தமிழ்ப் பள்ளிகூட தொடங்கினார்கள். அடிப்படையாய்ப் பேச, எழுதத் தமிழ் கற்றதோடு, அப்போதே தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றோடு அறிமுகம் பெறவும் அது வழி வகுத்தது. இப்போது அந்தச் சபை செழித்து வளர்ந்து கல்வித் துறையில் பல சாதனைகளைப் புரிந்துவருகிறது. தென்னிந்தியாவில் பிறந்து ஜெம்ஷட்பூருக்குச் சென்றவர்கள் பெரும்பான்மையாக இருந்த சபையில் நிலை இன்று மாறியுள்ளது. இந்நாளில் ஜெம்ஷெட்பூரிலேயே பிறந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் முந்தைய தலைமுறையைப்போல கர்நாடக சங்கீதத்தின்மேல் ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.

சகோதரிகளுடன்உங்கள் இளமைக் காலப் பயிற்சிக்கு மீண்டும் வருவோம்.

நான் முன் சொன்னது போல எங்கள் குடும்பமே – குடும்பம் என்றால் அத்தை, மாமா போன்ற உறவுகளையும் சேர்த்து – பாலக்காட்டில் இருந்து ஜெம்ஷெட்பூருக்குப் பெயர்ந்துவிட்டது. அதனால் கல்யாணம் முதலான விழாக்களுக்குக்கூட நாங்கள் தென்னிந்தியாவுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அன்றைய நாளில் இப்போதுபோல அடிக்கடிப் பயணம் செய்வது என்பதும் முடியாத காரியம். எங்கிருந்தாலும் நம்முடைய கலாசாரத்தை  விட்டுவிடக்கூடாது என்பதில் நிறைய அக்கறை எடுத்துக்கொண்டார்கள். ரேடியோவில் எத்தனையோ இடர்களுக்கிடையில் இரவில் சன்னமாக ஒரு கல்யாணியோ காம்போதியோ கேட்டால் அப்படிப் பரவசமடைவார்கள். இந்தச் சூழலில் வாத்தியார் வந்ததும் எங்களுக்கெல்லாம் மிகவும் உதவியாகயிருந்தது. நிறைய பேர் அவரிடம் கற்றுக் கொண்டோம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் அவரிடம் கற்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது என் பேறுதான்.

உங்களுக்கு முன்னால் உங்கள் குடும்பத்தில் யாரேனும் சங்கீதத் துறையில் இருந்திருக்கிறார்களா?

அம்மாவுக்கு நல்ல குரலும் இசையில் ஈடுபாடும் இருந்தது. கச்சேரி செய்ய வேண்டும் என்கிற எண்ணமோ, அதற்கான பயிற்சியோ அவருக்கு இல்லை என்கிறபோதும் எது நல்ல சங்கீதம் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு ஞானம் இருந்தது. என் மாமாவுக்கும் சங்கீதத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. என் பெரிய அக்காவுக்கும் நல்ல குரல்வளம் இருந்தது. கச்சேரி செய்யும் நோக்கத்தோடு யாரும் பயிற்சி எடுக்கவில்லை.

சிறு வயதிலிருந்தே உங்களுக்கு ஈடுபாடு இருந்ததா?

மூன்று வயதிலிருந்தே கேட்டதை ஸ்ருதி விலகாமல் பாடுவேன் என்று அம்மா சொல்லுவார். நான் கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கு முன்னாலேயே, அக்காள்கள் கற்றுக்கொள்வதைக் கேட்டோ என்னமோ, இயற்கையிலேயே கேட்பதை ஸ்வரப்படுத்தக்கூடிய ஆற்றல் எனக்கு இருந்தது. இதைச் சொல்லும்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு பெங்காலி நடன நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதைப் பார்க்க என் சகோதரிகளோடு நான் சென்றிருந்தேன். திரும்பி வந்ததும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பாடல் நன்றாக இருந்தது என்று பேச்சு வந்தது. ‘என்ன பாடல் அது?’ என்று அம்மா கேட்டபோது பாஷை தெரியாததால் எங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அப்போது நான் வேண்டுமானால் ஸ்வரமாகப் பாடிக் காட்டுகிறேன் என்று பாடிக் காட்டியுள்ளேன். பயிற்சியே இல்லாதபோது, மூன்றரை வயதில் எப்படி ஸ்வரமாகப் பாடினேன் என்று இன்றும் புரியவில்லை.

படம்: எஸ்.ஹேமமாலினிஅந்த வயதில் நீங்கள் மேடையில் பாடிய அனுபவம் ஏதும் அமைந்ததா?

ஜெம்ஷட்பூரில் வருடாவருடம் சங்கர ஜெயந்தியை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். பெரிய வித்வான்களின் உபன்யாசம், கச்சேரிகள் எல்லாம் இடம்பெறும். ஒருநாள் உள்ளூர்த் திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்பும் வழங்கப்படும். அங்கிருந்த குடும்பங்களில் இருந்து பலர் பாடுவார்கள். எனக்கு மூன்றரை வயதிருக்கும்போது நடந்த சங்கர ஜெயந்தியில் எனக்குப் பாட வாய்ப்புக் கொடுத்தாக வேண்டும் என்று அடம்பிடித்துள்ளேன். இவளுக்கு கொடுக்காவிட்டால் யாரையுமே பாடவிடமாட்டாள் என்று என்னை மேடையேற்றிவிட்டனர். அப்போது பிரபலமாக இருந்த ஒரு சினிமா பாடல் ‘அப் தேரே சிவா கவுன் மேரா கிருஷ்ண கண்ணையா’ (இனிமையைக் குழைத்துப் பாடிக்காட்டுகிறார்), அதை முழுமையாய்ப் பாடிவிட்டுதான் இறங்கியுள்ளேன். பல காலம் கழித்தும் அன்று அதைக் கேட்டவர்கள் அந்த நிகழ்வை என்னிடம் நினைவுகூர்வதுண்டு.

சம்மேளனியில் தைப்பூசம், ராமநவமி, நவராத்ரி என்று ஒவ்வொரு விழாவையும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போதெல்லாம் பாடும் வாய்ப்பும் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தன. 1947-ல் சுதந்திரம் வந்தபோது கொடியேற்றத்துக்குப் பாடியது இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் உள்ளது. ஆந்திராவில் இருந்து ராவ் ஒருவர் அப்போது சிறுவர்களுக்குப் பாட்டு சொல்லிக் கொடுப்பார். அவர் என் அக்காவையும் அவள் வயதை ஒத்த சிலரையும் வைத்து ஒரு பாடல் பாட தயார் செய்தார். அக்கா எங்கு சென்றாலும் நானும் உடன் செல்வேன். அதனால் நானும் கூட நின்றிருந்தேன். பாட ஆரம்பித்ததும் ஒரே குழப்பம். மேடையில் பாட வேண்டிய அழுத்தத்தினாலேயோ, அல்லது வரிகள் மறந்துவிட்டதனாலேயோ – பாடுவதைப் பாதியில் நிறுத்திவிட்டனர். நான் தைரியமாக அவர்கள் விட்ட இடத்திலிருந்து எடுத்துப்பாடி பாடலை முடித்தேன்.

இது காசி விஸ்வநாத பாகவதரிடம் கற்பதற்கு முன்பா?

ஆமாம். அவர் வரும் வரையில் அவ்வப்போது யார் யாரோ சொல்லிக்கொடுக்க வருவார்கள். சில மாதங்களில் ஊரைவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர் வந்தபோது, ‘இப்படி ஒரு தரமான வாத்யார் வந்திருக்கிறார்,’ என்பது பெரிய பேச்சாக இருந்தது. அவர் காலையில் நாலு மணிக்குத் தொடங்கினால் இரவு வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவ்வளவு பேர் அவரிடம் கற்க வருவார்கள். என் வயது ஒத்த பத்துப் பதினைந்து பேரோடு நானும் சம்மேளனிக்குச் சென்று கற்க ஆரம்பித்தேன். மற்றவர்களுக்கு அவர் கற்பிப்பதைக் கேட்டே என் முறை வரும்போது ஆரம்பப் பாடங்களை எல்லாம் நான் பாடிவிடுவேன்.

அலங்காரங்கள் தொடங்கிய தினம், ஒரு பேப்பரில் ஏழு அலங்காரங்களின் முதல் வரிசையை மட்டும் அவர் பேப்பரில் எழுதி, அடுத்த வாரம் இதைப் பார்ப்போம் என்று கொடுத்தார். நான் வீட்டுக்கு வந்ததும் அந்தந்த வரிசைகளின் அடுத்தடுத்த வரிகள் என்னவாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடிந்தது. அதை எழுதிக்கொண்டு அடுத்த வகுப்புக்குப் போனபோது ஆச்சர்யப்பட்டார். ’இதற்கு முன்பாகவே உனக்கு இதெல்லாம் பாடமா?’ என்று கேட்டார். ‘இல்லை. முதல் வரியைப் பார்த்து மற்றதை எழுதினேன்’, என்றேன்.  அப்போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதன்பின் வர்ணங்கள் ஆரம்பித்தார். பத்துப் பதினைந்து வகுப்புகள் போனதும் ஒருநாள் வீட்டுக்கு வந்தார்.

‘இவளை சம்மேளனிக்கு அனுப்ப வேண்டாம். அங்கு சொல்லிக் கொடுப்பவற்றை இவள் சீக்கிரம் கற்றுக் கொண்டுவிடுகிறாள். மற்றவர்கள் கற்கும் வரை சும்மா உட்கார்ந்திருக்கிறாள். நான் வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுக்கிறேன். இவளுக்கு நல்ல திறமை இருக்கிறது,’ என்றார்.

இதற்கு வேறு தனியாகச் செலவாகுமே என்று என் வீட்டில் சிறிது தயங்கினார்கள். ‘பிறகு பார்க்கலாம்,’ என்று அவர்கள் சொன்னாலும் அவர் தொடர்ந்து வந்து கேட்டுக்கொண்டார். ஒரு கட்டத்தில், ‘பணம் எல்லாம் கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவளுக்குக் கற்றுக்கொடுக்க அனுமதியுங்கள்,’ என்றார். அவர் அவ்வளவு முனைந்து கேட்டதால் தட்ட முடியாமல் சொல்லிக் கொடுக்க அனுமதித்தனர். அவருக்கு ரொம்ப சந்தோஷம். ’எந்தரோ மஹானுபாவுலு’ மாதிரி பெரிய கிருதிகள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.

Best Lady Vocalist Prize – Music Academy Year, 1991.சின்ன வயதிலேயே அந்தப் பெரிய கிருதிகளெல்லாம் ஆரம்பித்துவிட்டாரா?


ஆமாம். சிறு வயதில்கூட என் குரல் நல்ல பதமான நிலையில் இருந்தது. மழலையாகவோ, குழந்தைக் குரலாகவோ நான் பாடியதில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னமோ பைரவி ஸ்வரஜதி போன்றவற்றைக்கூட அவர் அப்போதே கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார். என்னுடைய பன்னிரண்டாவது வயதுக்குள் ’ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’, ‘ஸ்ரீ காந்திமதிம்’, பஞ்சரத்னங்களில் வராளியைத் தவிர்த்து மற்றவை என்று கிட்டத்தட்ட நூறு உருப்படிகளுக்குமேல் சொல்லிக் கொடுத்தார்.

இப்போது நான் சொல்லிக் கொடுக்கும்போது, அவர் சொல்லி வைத்த வழிதான் சரியென்று தோன்றுகிறது. நான் குழந்தைகளுக்கென்று தனி விதமாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. ‘சாம்ப சிவாயனவே’ என்பது ஆரம்ப பாடம் என்றாலும் அதைக் கமாஸில் உள்ள நெளிவு சுளிவுகளோடுதான் சொல்லிக் கொடுப்பேன். குழந்தைக்கு வந்த வரைக்கும் வரட்டும். வரவில்லை என்பதற்காக எளிமையாக்கி சொல்லிக் கொடுத்துவிட்டு, பிறகு மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.

அம்மா வாத்யாரிடம், ‘இவள் நீங்கள் போனபின் சாதகமே செய்வதில்லை,’ என்று புகார் சொல்வார். ‘எனக்கு எந்தக் குறையும் இல்லை. அவள்தான் எல்லாவற்றையும் நான் சொல்லி வைத்தது போலப் பாடிவிடுகிறாளே!’ என்பார்.  இயற்கையாகக் கிடைத்த வரத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்டிராமல் இன்னும் சிரத்தையாக இருந்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.

Gana Kala Bharathi – Narada Gana Sabha, Karur, 1982.


பாடம் முடிந்ததும் சாதகம் செய்யவில்லையா?

அவர் சொல்லும்போதே எனக்குப் பாடமாகிவிடும். ஜாகீர் ஹுஸைன் வந்திருந்தபோது ஒருவர் கேட்டார், ‘வட இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 மணி நேரமெல்லாம் சாதகம் செய்வார்களாமே,’ என்று. அதற்கு அவர், ‘அப்படி எல்லாம் செய்தால் அவர் செத்தே போய்விடுவார். சாதகம் ஒன்றிரண்டு மணி நேரம்தான் என்றாலும் மற்ற நேரமெல்லாமும் இசையை அசை போட்டுக்கொண்டே இருப்பேன்,’ என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. என் அக்கா சம்மேளனியில் சென்று கற்பார் என்பதால் நானும் உடன் சொல்வேன். அங்கு வாத்யார் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைக் கேட்பேன். திட்டமிட்டுச் செய்யவில்லை என்றாலும் இசை எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது என்று சொல்லலாம்.  

இசை ஒரு விளையாட்டாகவே உங்களுக்குள் வளர்ந்திருக்கிறதல்லவா?

ஆமாம். எனக்குச் சின்ன வயதிலேயே மெட்டமைத்துப் பாடப் பிடிக்கும். ராகத்தின் ஆரோகணம் அவரோகணம் தெரியாத போதும், இந்தப் பிரயோகம் சரியா தவறா என்று தெரியாத நிலையிலும் மெட்டமைக்க எனக்கு ஆவல் இருந்தது.

Dasa Kala Rathna – Purandaradasar Bhakta Samajam Year, 2012.


இள வயதில் நீங்கள் அமைத்த மெட்டு ஏதும் நினைவில் உள்ளதா?

இருக்கிறது. பள்ளியில் பல்வேறு போட்டிகள் இருக்கும். அதில் பஜன்களுக்கென்று ஒரு போட்டியில், கேட்காமலேயே என் பெயரைக் கொடுத்துவிட்டார்கள். அப்போது பாடத்தில் வந்த சூர்தாஸ் வரிகளை எனக்குத் தெரிந்த அளவில் தேஷ் ராகத்தில் மெட்டமைத்தேன். (பாடுகிறார்) இப்படியெல்லாம் சங்கதிகள் போட்டு அன்று பாடியிருப்பேனோ தெரியவில்லை. ஆனால் அடிப்படை அமைப்பு இதுதான். அதற்கு முதல் பரிசு கிடைத்தது.

இன்னொரு மெட்டு நினைவுக்கு வருகிறது. பள்ளியில் பிரார்த்தனைக் கூட்டங்களில் பாட ஒவ்வொரு வகுப்புக்கும் வாய்ப்பு வரும். மூன்றே பாட்டுகளைத்தான் மாறிமாறிப் பாடுவார்கள். பாடுவதும் ஒருங்கிணைப்பில்லாமல் மோசமாக இருக்கும். எங்கள் வகுப்புக்கு வாய்ப்பு வந்தபோது, நாலைந்து பேரைக் கூட்டிக்கொண்டு நானே சில வரிகள் எழுதி மெட்டமைத்து ஒரு பிரார்த்தனைப் பாடல் தயார் செய்தேன். நாங்கள் பாடியபோது அது பெரிய வரவேற்பைப் பெற்றது. இதை நான் எழுதினேன் என்று சொன்னபோது யாரும் நம்பவில்லை.

இது நடந்த பத்து நாள்களில் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு ஜைன ஆலயம் இருந்தது. அங்கு ஸ்வேதாம்பர சன்யாஸி ஒருவர் தினமும் பிரசங்கம் செய்வார். பிரசங்கத்துக்கு முன்னால் ஒரு பிரார்த்தனைப் பாடல் பாடுவதுண்டு. எங்கள் தெருவில் இருந்த குஜராத்திகள் என்னை அங்கு அழைத்துச்சென்று பாடச் சொன்னார்கள். நான் முன்சொன்ன பாடலைப் பாடினேன். அதில் ஒரு வரி,

’இஸ் ஜீவன்கி யாத்ரா மே – தும் பனோ ஹமாரி சஹ யாத்ரி’, என்று எழுதியிருந்தேன்.

இந்தப் பாடலை யார் உனக்குத் தந்தது என்று ஸ்வாமிஜி கேட்டார். நானேதான் எழுதினேன் என்றபோது அவர் நம்பவில்லை. ‘வாழ்க்கை என்னும் பயணத்தில் நீ ஒரு சக பயணியாய் வா’ என்று இறைவனை அழைக்க ஒரு பதிமூன்று வயது பெண்ணுக்குத் தோன்றும் என்று அவரால் நம்பமுடியவில்லை. எனக்குத் தோன்றிய வரிகள்தான் என்று அடித்துச் சொன்னதும், இன்றைய பிரசங்கம் இந்த வரிகளைப் பற்றித்தான் என்று கூறினார். எங்கள் தெருவில் இருந்து வந்திருந்தோர் எல்லாம் மிகவும் பெருமையடைந்தனர். வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்னதும் வீட்டில் இருப்பவர்களும் ஆச்சர்யப்பட்டனர்.  அதுவரை நான் இப்படி எழுதி மெட்டமைப்பேன் என்று அவர்களுக்கும் தெரியாது.

சுவாரஸ்யம்தான். பாடல் புனைவதை வளர்ந்த பின்னும் தொடர்ந்தீர்களா?

இல்லை. குழந்தைகளுக்கான போட்டிகளுக்கு உதவியாய் அவ்வப்போது ஏதேனும் எழுதி மெட்டுப் போட்டுக் கொடுத்தேனே தவிர, பெரியதாய் இதில் இறங்கவில்லை.

படம்: எஸ்.ஹேமமாலினிமீண்டும் நீங்கள் இசை கற்றதற்கு வருவோம். உங்கள் வாத்யார் கீர்த்தனைகள்தான் சொல்லிக் கொடுப்பாரா?

இல்லை. மனோதர்ம சங்கீதமும் சொல்லிக் கொடுப்பார். ஓரளவு பெரிய வித்வத் உள்ளவர்கள் ஜெம்ஷெட்பூருக்கு வரமாட்டார்கள். அங்கு கச்சேரி வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆழ்ந்து கற்க வேண்டும் என்று கற்றுக் கொள்பவர்களும் குறைவு. அந்தச் சூழலில் எங்கள் வாத்யார் ஒரு விதிவிலக்காக அங்கு வந்தார். ஒரே ‘பதநிஸா’-வை சரியாக வர பதினைந்து முறை மல்லுக்கட்டுவதற்கிடையில் – அவர் சொல்லிக் கொடுப்பதை உடனடியாக நான் பாடியதால் அவர் மிகவும் ஆர்வமாக ராகம் பாடுவது, நிரவல், ஸ்வரம் பாடுவது ஆகியவற்றில்கூட எனக்குப் பயிற்சியளித்தார். அவர் கல்லூரியில் பயின்று வந்தவர் என்பதால் அடிப்படை தியரியும் சொல்லிக் கொடுத்தார். தியாகராஜ உத்சவம் போன்ற நிகழ்ச்சிகளில் நான் பாடவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

உங்கள் முதல் கச்சேரி நினைவில் இருக்கிறதா?

பன்னிரெண்டு வயதில் பாடினேன். ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்கள். மாயவரம் கிருஷ்ணமூர்த்தி என்று அங்கேயே ஒரு வித்வான் இருந்தார். அவர் வயலின் வாசித்தார். அதைப் பற்றிய ஒரு குறிப்புகூட கல்கியில் வெளியானது.

அதன் பிறகு நிறைய கச்சேரி நடந்ததா?

அப்படிச் சொல்வதற்கில்லை, அவ்வப்போது வந்த வாய்ப்புகளில் பாடி வந்தேன்.

Sangita Kala Praveena – Charubala Trust Year, 2011பல கலைஞர்கள் தாங்கள் சிறு வயதில் கேட்ட கச்சேரிகளின் தாக்கத்தைப் பெரியதாகக் கூறுவது உண்டு.  நீங்கள் சிறு வயதில் நிறைய கச்சேரி கேட்டிருக்கிறீர்களா?

சின்ன வயதில் அதிகம் கேட்கும் வாய்ப்பிருக்கவில்லை. எப்போதேனும் கல்கத்தாவுக்கு வரும் கலைஞர்கள் ஜெம்ஷட்பூரிலும் வந்து பாடுவதுண்டு. தென்னிந்திய வீட்டுக் கல்யாணங்கள் முதலான நிகழ்ச்சிகளில் அப்போதெல்லாம் நாகஸ்வரம் ஏற்பாடு செய்ய வசதியில்லை. அந்த விழாக்களில் கிட்டத்தட்ட 20 கிராமபோன் ரிக்கார்டுகளைத் திரும்பத் திரும்ப வைப்பார்கள். அதில் எம்.எஸ், பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, என்.சி. வசந்தகோகிலம் பாடிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு நுணுக்கங்களோடு எனக்குள் பதிவாகின. திருமணத்துக்குப்பின் பம்பாய் சென்றுதான் ஷண்முகானந்த சபாவில் நிறைய கச்சேரி கேட்க முடிந்தது. அங்கு அரியக்குடி, செம்மங்குடி, ஆலத்தூர், எம்.எஸ். போன்றவர்களின் பெரிய கச்சேரிகள் கேட்டிருக்கிறேன்.

நீங்கள் எப்போது பம்பாய்க்கு குடிபெயர்ந்தீர்கள்?

1958-ல் என்று நினைக்கிறேன். எனக்குச் சீக்கிரமே திருமணமாகிவிட்டது. என் கணவர் மேற்கிந்திய ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

பம்பாயிலும் உங்கள் இசைப் பயிற்சி தொடர்ந்ததா?

இல்லை. அங்கிருந்த பதிமூன்று வருடங்கள் நான் இசை கற்கவில்லை. இருந்தாலும் இசையிலிருந்து விலகியிருந்தேன் என்று சொல்ல முடியாது. கற்றது மறக்காமல் இருக்க தினமும் தம்புராவைக் கூட்டி வைத்துப் பாடுவேன்.

பதிமூன்று ஆண்டுகள் பெரிய இடைவெளி இல்லையா?

இப்போது அப்படித் தோன்றலாம். சிறு நகரத்திலிருந்து வந்து பம்பாய் போன்ற பெருநகரத்துக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளவே கொஞ்ச காலம் பிடித்தது. குடும்ப வாழ்க்கை, குழந்தைகளை வளர்த்தல் போன்ற காரியங்களைப் பார்க்கவே சரியாக இருந்தது.  அந்த நாள்கள் ஓடியதே தெரியவில்லை.

கணவர் ஜே.நாராயண ஐயருடன்உங்கள் கணவருக்கும் கர்நாடக இசையில் ஈடுபாடு இருந்ததா?

ஆரம்பத்தில் அவ்வளவு இருந்தது என்று சொல்ல முடியாது. நான் தினமும் பாடுவதைக் கேட்டுக்கேட்டு வளர்ந்தது என்று சொல்லலாம். என்னை நிறைய உற்சாகப்படுத்துவார். என் வளர்ச்சிக்காக என்ன கற்க வேண்டுமானாலும் ஏற்பாடு செய்து கொடுப்பார். சாமா மாதிரி ராகங்களை மிகவும் விரும்பிக் கேட்பார். காலப்போக்கில் கேள்வி மூலமாகவே நிறைய தெரிந்துகொண்டார். ‘இது சியாமா சாஸ்திரி  கிருதி அன்று, சுப்பராய சாஸ்திரியின் கிருதி’ என்று சொல்லுமளவுக்கு வளர்த்துக் கொண்டார்.

குரு நாகர்கோயில் ஹரிஹர ஐயருடன்


பம்பாயிலிருந்து சென்னைக்கு வந்ததும்தான் மீண்டும் இசைப் பயிற்சி தொடர்ந்ததா?

ஆமாம். 1970-ல் என் கணவரின் வேலை சென்னைக்கு மாற்றலானது. அவருக்கு ராவ் என்று ஒரு மேலாளர் இருந்தார். நாங்கள் பம்பாயிலிருந்து கிளம்பும்முன் ஒருநாள் ராவ் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். நான் தினமும் ராகம், நிரவல், ஸ்வரம் எல்லாம் பாடி கச்சேரிபோல வீட்டிலேயே பாடுவது வழக்கம். ராவ் வந்தது தெரியாமல் நான் உள்ளே அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறேன். வீட்டு வேலை செய்யும் அம்மாள் கதவைத் திறந்து அவரைக் கூடத்தில் உட்கார வைத்துள்ளார். அவரும் பொறுமையாக நான் பாடி முடிக்கும்வரை காத்திருந்திருக்கிறார். ‘நீ இவ்வளவு நன்றாகப் பாடுவாய் என்று எனக்குத் தெரியாதே!’ என்று ஆச்சரியப்பட்டார். பிறகு நாங்கள் சென்னைக்கு வந்ததும் ஒருநாள் காலையில் நாகர்கோயில் ஹரிஹர ஐயரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார். ‘நான் என் பணி ஓய்வுக்குப்பின் இவரிடம் கற்றுக் கொள்கிறேன். இவரை உனக்குச் சொல்லிக் கொடுக்கச் சொல்லியுள்ளேன். நன்றாகக் கற்று அடுத்த வருடம் என் வீட்டில் உன் கச்சேரி நடக்க வேண்டும்,’ என்றார். அவர் சொன்ன முகூர்த்தம், சில மாதங்களிலேயே எனக்கு வானொலியில் கிரேடிங் கிடைத்தது. அவர் கேட்டுக் கொண்டதுபோல அவர் வீட்டில் கச்சேரியும் செய்தேன். அப்போதுதான் சங்கீதத்தை இன்னும் வளர்த்துக்கொண்டு அறிந்து கொள்ளவும், பாடவும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அதுவரை சின்ன வயதில் கற்றதை மறக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர, கச்சேரி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

ஹரிஹர ஐயர் நாகர்கோயில் கணேச ஐயரின் சகோதரர் அல்லவா?

ஆமாம். கணேச ஐயர் மிருதங்கம் வாசிப்பார். இவர் வயலின் வாசிப்பார். அரியக்குடி, எம்.எஸ். போன்ற பெரிய வித்வான்களுக்கு எல்லாம் வாசித்திருக்கிறார். நன்றாகப் பாடவும் செய்வார். அவர்தான் எனக்கு நுணுக்கங்களைக் காட்டினார். ராகம் பாடுவது, கோர்வை வைப்பது, குறைப்பு பாடுவது எல்லாம் அவர்தான் பயிற்றுவித்தார். ’சண்முகப்ரியா பாடும்போது சிம்மேந்திர மத்யமம் கலந்துவிடுகிறது. நிரவல் இன்னும் கட்டுக்கோப்பாகச் செய்ய வேண்டும்,’ என்றெல்லாம் நான் பாடும்போது வந்த பிழைகளைச் சுட்டி எனக்கு வழிகாட்டினார். ’சஹஜகுண ராமசந்திரா’, ‘இந்த கன்னானந்த மேமி’, ‘கொலுவம ரெகதா’, ‘தனயுனி ப்ரோவ’, ‘காண கண் கோடி’  முதலாக கிட்டத்தட்ட நாற்பது பாடல்கள் அவரிடம் கற்றுக்கொண்டேன்.  அவர் அப்பாவிடமோ தாத்தாவிடமோ கற்றார் என்று சொன்ன நினைவு. ஆனால் அவர் மானசீக குருவாய் அரியக்குடியை நினைத்து, அந்தப் பாணியை உள்வாங்கி இருந்தார். அதனால் எனக்கு காசி விஸ்வநாத பாகவதரிடம் செம்மங்குடி பாணியைத் தெரிந்துகொள்ள முடிந்ததுபோல, ஹரிஹர ஐயரிடம் அரியக்குடி பாணியைப் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

Senior Musician’s Award Maharajapuram Viswanatha Iyer Trust Year 2013ஒருவகையில் நீங்கள் ராகம் பாடும்போது, ஸ்வரம் பாடும்போது சாரமாகவும் சுருக்கமாகவும் பாடுவதற்கு அரியக்குடி பாணி ஒரு காரணம் என்று சொல்லலாமா?

இதுதான் காரணம் என்று ஒன்றைச் சொல்ல எனக்குத் தெரியவில்லை. சிறுவர்கள் லீகோ விளையாடும்போது, அடுக்குகளை வளர்த்துக்கொண்டே போவதைப்போலப் பாடுவதை நான் விரும்பவில்லை. சிறியதாய்ப் பாடினாலும் கச்சிதமாய் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ஹரிஹர ஐயரிடம் நெடுநாள்கள் கற்க முடிந்ததா?

3-4 வருடங்கள். 1974-ல் அவருக்குச் சிங்கப்பூருக்கு செல்ல வாய்ப்பு கிடைத்துச் சென்றுவிட்டார்.

அவருக்குப்பின் யாரிடம் கற்றீர்கள்?

நாரயணசாமி என்றொரு குடும்ப நண்பர் இருந்தார். அவர் எதைச் செய்தாலும் பாடிக்கொண்டே செய்வார். அவ்வளவு சங்கீதத்தில் ஈடுபாடு. அவர் சொன்னார், ‘உன் குரல் நன்றாக இருக்கிறது. பாடுவதில் பிழையில்லாமல் பாடுகிறாய். ஆனால் மியூசிகாலஜி உனக்குத் தெரியவில்லை. ஒரு விதுஷியாகப் பரிமளிக்க அதுவும் அவசியம். குடத்திலிட்ட விளக்கு மாதிரி பி.கே. ராஜகோபால ஐயர் இருக்கிறார். அவரிடம் சென்று கற்றுக்கொள்,’ என்றார்.

அவர் எங்கு இருந்தார்?

அம்பத்தூரில் இருந்தார். தினமும் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுப் பேருந்தில் அம்பத்தூருக்குச் சென்று வருவேன். அவர் டைகரின் சீடர். அவர் மேடைக் கச்சேரிகள் செய்யவில்லை. ஆனால் சங்கீத சாஸ்திரத்தில் ஆழம் பொதிந்தவர். அவர் வீட்டில் எண்ணற்ற அரிய புத்தகங்கள் இருந்தன. அவர் வீட்டில் வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதர் கைப்பட கடுக்காய் மசியில் எழுதிய தியாகராஜ கிருதி நோட்டுப்புத்தகம் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ‘வாசஸ்பத்யம்’, ‘பாணினீயம்’ போன்ற அரிய புத்தகங்கள் இருந்தன.

படம்: எஸ்.ஹேமமாலினி


ம்யூசிகாலஜி கற்பது என்றால் எதைச் சொல்கிறீர்கள்?

எம்.ஏ. சிலபஸில் அட்டவணை இட்டுவரும் பாடங்களைச் சொல்லவில்லை. ஒரு கிருதியை எடுத்துக்கொண்டால், அதை எழுதியவர் யார், அவர் சரித்திரம் என்ன, இந்தப் பாடலைப் பற்றிய விசேஷம் என்ன, எந்தத் தருணத்தில் புனையப்பட்டது, இந்த ராகத்தின் வரலாறு என்ன, அது உபயோகப்படுத்திய விதத்தில் ஏதேனும் தனித்துவம் உண்டா? என்றெல்லாம் சொல்வார். இன்னும் குறிப்பாகச் சொன்னால் நான் கற்றது அப்ளைட் ம்யூசிகாலஜி என்று சொல்லலாம். எனக்கு அடிமனதில் ஏற்கெனவே நிறைய நேரத்தை இழந்துவிட்டோம் என்று தோன்றியதால் புத்தகங்களில் மட்டும் இருக்கும் தியரி பக்கம் நான் அதிகம் செல்லவில்லை. நான் பாடுவதற்கு உபயோகமான தியரியில்தான் நான் கவனம் செலுத்தினேன்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

உதாரணமாகக் கனகாங்கி, ரத்னாங்கி, கானமூர்த்தி என்று மேளகர்த்தா ராகங்கள் இருக்கின்றன. கனகாங்கிக்கு எந்தெந்த ஸ்வரங்கள் வரும், அவற்றின் பெயர்கள் என்ன என்பது வரை என் எல்லை. “அந்த காந்தாரத்தில் அதிர்வெண் என்ன? கமகங்களின் கணித அளவு என்ன?”  என்பதைத் தெரிந்துகொள்வதில் நான் ஈடுபடவில்லை.

அவருடைய வகுப்பு எப்படி இருக்கும்?

வகுப்பு என்று கட்டுக்கோப்பாக இருக்காது. பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் தன்னிச்சையாய்ப் பேசுவார், நான் கேட்டுக்கொள்வேன். அவர் வீட்டிலிருந்து மீண்டும் உப்பு, புளி ராஜ்யத்துக்கு வரும்போது வெறோர் உலகத்துக்குள் நுழைவது போலத் தோன்றும். (சிரிக்கிறார்.) சில நாள்கள், ஒரு கீர்த்தனையைச் சொல்லிக்கொடுத்து அதைப் பற்றிச் சொல்வார். காம்போஜியில் ‘கொனியாடின’ அவரிடம்தான் கற்றேன். அவர் மூன்று ராகங்களை உருவாக்கியுள்ளார். அதில் அவர் செய்த பாடல்களைக் கற்றுக்கொடுத்துள்ளார்.

Best Carnatic Guru Award – VDS Arts Academy, 2001.அவர் செய்த ராகங்கள் எவை?

ஆனந்தவல்லி , ஸ்கந்தமனோரமா, கற்பூரபரணி ஆகிய மூன்று ராகங்கள். அன்றெல்லாம் அவ்வளவு சாதாரணமாகப் புதிய ராகங்களை உருவாக்கிவிட முடியாது. அவற்றைப் பற்றி அகாடமியில் விவாதித்துதான் ஒப்புக்கொள்வார்கள். இவருடைய ராகங்களுக்கு அந்த அங்கீகாரம் உண்டு.

அந்த ராகங்களைப் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்.

கற்பூரபரணி, ‘ஸ ரி க ப ம ப த ஸ – ஸ த ப ம ப க ரி ஸ’ என்று ஆரோகணம் அவரோகணம். கிட்டத்தட்ட விஜயநாகரி மாதிரி இருக்கும்.  அதில் ஒரு வர்ணம் செய்துள்ளார். இப்போது புழக்கத்தில் உள்ள ஹம்ஸநாதத்தில் தைவதம் இல்லை. ஆதியில் அது தைவதத்துடன்தான் இருந்தது. இப்போது புழக்கத்தில் உள்ள ஹம்ஸநாதத்தைதான் அவர் ஸ்கந்த மனோரமா என்று சொன்னார்.  அம்பத்தூரில் மௌனஸ்வாமி என்று இருந்தார். அவர் பெயரில் ஆனந்தவல்லி ராகத்தில் ஒரு கிருதி அமைத்துள்ளார். இது சிம்மேந்திர மத்யமத்தில் ஜன்யம்.

எம்பி3-யில் கேட்க:


அவர் பாடல்களைப் பற்றிச் சொல்லும்போது அவருடைய கம்பீர நாட்டைக் கிருதி நினைவுக்கு வருகிறது. ‘ஸ்ரீ கம்பீர நாட்ய கணபதே’ என்ற கிருதியில் சிட்டை ஸ்வரங்கள் அமைத்துள்ளார். அந்தச் சிட்டை ஸ்வரங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டால் 1,2,3,4 என்று பாடினாலும் 4,3,2,1 என்று பாடினாலும் ஒரே அமைப்பாக வரும். கச்சேரியில் பாடும்போது, ‘இதில் குருகுக வரவில்லையே, அனால் தீட்சிதர் கிருதிபோல இருக்கிறதே?’ என்று கேட்பார்கள்.

காஞ்சிப் பெரியவர் பெயரில் சதுஸ்ர அட தாளத்தில் சக்ரவாகத்தில் ‘சந்திர சேகரேந்திர சரஸ்வதி’ என்று ஒரு கிருதி செய்துள்ளார். அதை நான் பெரியவரிடமே பாடி ஆசி பெற்றுள்ளேன்.

அவரிடம் கற்ற இன்னொரு முக்கியமான பாடத்தைச் சொல்ல வேண்டும். பல்லவி பாடும்போது திஸ்ரம் செய்வது போன்ற அம்சங்கள் சற்றுக் கடினமாக இருந்தன. அடிப்படை வரிசைகளை ஒன்றாம் காலம், இரண்டாம், மூன்றாம் காலம் பாடி சாதகம் செய்கிறீர்கள். ஆனால் அதையே திஸ்ரத்தில் பாடிப் பழகுவதில்லை. திஸ்ரத்தில் அடிப்படை பழகுங்கள் அது பல்லவி பாடும்போது உபயோகப்படும் என்றார். அது எனக்குப் பெரிய உதவியாக இருந்தது.அப்போது கச்சேரிகளும் செய்து கொண்டிருந்தீர்களா?

ஆமாம். அப்போது என் கணவருக்கும் மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. அதனால் நிறையக் கச்சேரிகள் கேட்கப் போவோம். எனக்கு கே.வி.என். அவர்களின் நிரவல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் கச்சேரி எங்கு நடந்தாலும் செல்வோம். என்னுடைய கச்சேரிகளும் ஓரளவுக்கு நடந்தன. ஐ.சி.எஃப்-ல் ஒரு ஷண்முகானந்த சபை இருந்தது. அங்கு எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. பெரம்பூர் சங்கீத சபா, கோயில் கச்சேரிகள் என்று வந்த வாய்ப்புகளில் பாடிக்கொண்டிருந்தேன். ரேடியோவில் பாட ஆரம்பித்ததும் வேறு ஊர்களில் இருந்தும் வாய்ப்புகள் வந்தன. பெங்களூர், ராய்ச்சூர், குண்டக்கல், ஹூப்ளி, கேரளத்தில் பல இடங்களில் இருந்தும் வாய்ப்புகள் வந்தன.

என்.வி.சுப்ரமணியமும் ரயில்வேயில் இருந்தார். அவர் நடத்திய சரஸ்வதி வாக்கேயகார அறக்கட்டளையில் சில வாய்ப்புகள் கொடுத்தார். திருவையாறு குருமூர்த்தி என்ற மிருதங்க வித்வான் ரயில்வேயில் இருந்தார். அவருக்குச் சுரேஷ் என்று ஒரு மாணவன் இருந்தான். நன்றாக வாசிப்பான். சாதகம் செய்ய எங்கள் வீட்டுக்கு வருவான். அவனுடைய அப்பா அறநிலையத் துறையில் இருந்தார். அவர் மூலமாக பழனி தங்க ரதம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்ரி விழா போன்று பல கோயில்களில் பாட வாய்ப்புகள் ஏற்பாடு செய்துகொடுத்தார்.

Son: Ravi / Daughter: Naliniகுடும்பத்தையும் பார்த்துக்கொண்டு பல ஊர்களுக்கும் சென்று பாட முடிந்ததா?

கச்சேரிகளை வார இறுதிகளில்தான் வைத்துக் கொள்வேன். என் சங்கீதத்தினால் குழந்தைகளுக்கோ, குடும்பத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

அதிகம் கேட்கக் கிடைக்காத பஜன்களைப் பற்றி நீங்கள் பேசியும் பாடியும் வருகிறீர்கள். அவற்றை எப்போது தொடங்கினீர்கள்?

குரு – திரு.ராமமூர்த்தி ராவ்

நாங்கள் வடக்கிலிருந்து வந்ததாலோ என்னமோ, ரயில்வே குடியிருப்பில் பலர் என்னை அணுகிப் பஜன் சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். எனக்கு அப்போது சில மீரா பஜன்கள் தெரியும். அதை வைத்து நான் என்ன சொல்லித்தர முடியும்? அப்போது என் தாயார், ‘பின்னிக்கு அருகில் ராமமூர்த்தி ராவ் என்று ஒருவர் இருக்கிறாராம். பஜன்கள் எல்லாம் அசாத்யமாய் பாடுகிறாராம்,’ என்று சொன்னார். உடனே அவரை அணுகினோம். அவருக்கு கர்நாடக இசை, இந்துஸ்தானி – இரண்டிலும் அப்படியொரு தேர்ச்சி. அவர் பாடினால் கும்மிருட்டில் பளீரென்று ஒரு மத்தாப்பு கொளுத்தினதுபோல இருக்கும். பாடப் பாட அவருக்குக் கற்பனை பெருகிக்கொண்டே இருக்கும். ஒரு சிக்கல் என்னவென்றால் அவர் பாடுவதை வாங்கிப் பாடமுடியாவிட்டால் அவருக்குச் சலிப்புத் தட்டிவிடும். ரயில்வே குடியிருப்பில் பொழுதுபோக்குக்காக கற்க வந்தவர்களுள் எத்தனை பேரால் அவருக்கு ஈடுகொடுக்க முடியும்?

நான் ஒரு திட்டம் செய்தேன்.  ‘அவர் பாடுகிறபடி பாடட்டும். அவர் பாடியது வராவிட்டால் அவரைத் திரும்பப் பாடச் சொல்லி அவரை பொறுமையிழக்கச் செய்யவேண்டாம்.  தனியாக நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்,’ என்றேன். அந்தத் திட்டம் நன்றாகச் செயல்பட்டது.

சௌந்தர்ய லஹரியின் ஸ்லோகங்களை நூறு ராகங்களில் கர்நாடகம்/ஹிந்துஸ்தானி இரண்டும் மாறி மாறி வரும்படி அவர் அமைத்து எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதில் கோரக் கல்யாண், பஞ்சமஸ்ரீ, கலாஸ்ரீ போன்ற அரிய ஹிந்துஸ்தானி ராகங்களை எல்லாம் உபயோகப்படுத்தியிருப்பார்.

காம்போதியில் ஒரு ஸ்லோகம் பாடிக் காட்டுகிறார்

எம்பி3-யில் கேட்க:

பஸந்தில் ஒரு ஸ்லோகமும் பாடிக் காட்டுகிறார்

எம்பி3-யில் கேட்க:தும்ரி பாணியில் பஜன்கள் பாடச் சொல்லிக் கொடுத்துள்ளார். ஸ்லோகங்களை எப்படி இசையாக்கிப் பாட வேண்டும் என்று அவர்தான் எனக்கு வழிகாட்டினார். இப்போது கச்சேரிகளில் ஒரு கிருதிக்குமுன் அது சம்பந்தமாய் ஒரு ஸ்லோகம் பாட மிகவும் பயன்படுகிறது. பாடல்களைச் சிட்டையாக மட்டும் பாடாமல் அர்த்தபாவங்களை (expressions) எப்படி வெளிப்படுத்துவது என்று அவர் காட்டிக் கொடுத்தார்.

பஜன்களை மட்டும் வைத்து உரையோ அல்லது நிகழ்ச்சியோ எப்போது செய்யத் தொடங்கினீர்கள்
?

நாங்கள் சென்னை வருவதற்குமுன் டி.எஸ். பார்த்தசாரதி ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மதுரையில் ஒரு சபா வெளியிட்ட மலரில் ‘Bhajans – bridging North and South’ என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டுப் பார்த்தசாரதி மாமா என்னை அழைத்தார். இதைப்பற்றி அகாடமியில் ஒரு லெக்டெம் செய்யமுடியுமா என்று கேட்டார்.

முதன்முதலில் அகாடமியில் நுழைந்தது லெக்டெம்-காகத்தான். அந்த வருடச் சங்கீத கலாநிதி கே.வி.என். தலைமையில் அந்த லெக்டெம் நடந்தது. அந்த வருடம் ஒரு புதுவிதமான ஒளியமைப்பை அகாடமியில் பரிசோதித்துப் பார்த்தார்கள். மேடையில் மட்டும் வெளிச்சம் இருக்கும், மேடையிலிருந்து பார்த்தால் யார் கூட்டத்தில் இருப்பார்கள் என்றே தெரியாது. அதனால் பெரியவர்களுக்கு முன்னால் தைரியமாகப் பேசி/பாடிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

அதிகம் தெரிந்த மீராபாய், சூர்தாஸ் போன்றவர்களைத் தவிர கிருஷ்ணபக்த கவி, ராமபக்த கவி, இஸ்லாமியக் கவிஞர்கள் எழுதியதை எல்லாம் கொண்டு அந்த நிகழ்ச்சியைச் செய்தேன். நல்ல வரவேற்பைப் பெற்றது. வடக்கிந்திய பஜன்களைப் பற்றி நிறைய நிகழ்ச்சிகள் செய்துவிட்டேன். இதற்காகத்தான் இறைவன் என்னை ஜெம்ஷெட்பூரில் பிறக்கவைத்தானோ என்று தோன்றுகிறது.நீங்கள் ஒருவேளை சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தால் மற்ற கச்சேரி வித்வான்கள்போல ஆகியிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?

இப்போதும் மற்றவர்களைப்போல நான் இல்லை என்று நினைக்கவில்லை. ஆனால், நானாகக் கச்சேரி வாய்ப்புகளைத் தேடிச் சென்றதில்லை.

ஓர் இடத்தில் 4 மணிக்கு என் கச்சேரி. அது முடிந்ததும் செம்மங்குடி அவர்களின் கச்சேரி. நான் பாடிக் கொண்டிருந்தபோதே அவர் வந்துவிட்டார். அன்று அவருக்கு லால்குடியும், ராமபத்ரனும் பக்கவாத்தியம் வாசித்தார்கள். அவர்கள் கிரீன் ரூமில் இருந்தனர். நான் பாடி முடித்ததும் என்னை அழைத்தனர். செம்மங்குடி, “நீ யாரும்மா? இவ்வளவு நாள் எங்க இருந்த?” என்று கேட்டார். நான் பாடிய சாமா ராகத்தை மிகவும் பாராட்டினார்.

அப்படி ஒரு நிகழ்வு ஆனதும் அடுத்த நாள் அவர் வீட்டுக்குச் சென்று, எனக்குக் கற்றுக் கொடுங்கள் என்றோ எனக்கு வேறு கச்சேரி சிபாரிசு செய்யுங்கள் என்றோ கேட்பது உலக வழக்கம் என்று நினைக்கிறேன். நான் அப்படிச் செய்ததே இல்லை. நான் கேட்டு ஒருவேளை அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அது அவமானம் என்று நினைத்தேனோ என்னமோ. இதுநாள் வரை வந்த கச்சேரி வாய்ப்புகளில்தான் பாடி வருகிறேன். நானாக ஒரு வாய்ப்பைத் தேடிச் சென்றதில்லை.

எனக்குத் தெரிந்த பிரபல வித்வான் ஒருவர் ஓர் இளைஞனிடம் ‘நிறைய கச்சேரி கேட்கிறாயா?’, என்று கேட்டார். ’எல்லா சபைகளுக்கும் சென்று கேட்கிறேன்’, என்றார் அந்த இளைஞர். அதற்கு அவர், “அந்தக் கேட்பதைச் சொலவில்லை. என்னைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று கச்சேரி வாய்ப்புகளைக் கேட்கிறாயா?” என்றார். அப்படித்தான் இருக்கிறது சங்கீதச் சூழல்.

(சிரிக்கிறார்)

நிறையக் கச்சேரி செய்பவர்களுக்கு  அசைபோட்டுப் பரிசீலனை செய்ய நேரமிருக்குமா என்ற சந்தேகம் எனக்குண்டு.

சங்கீதத்தைப் பற்றித் தினமும் இத்தனை மணிக்கு உட்கார்ந்து யோசிக்கப் போகிறேன் என்று யோசிக்க முடியாது. பால் காய்ச்சும்போது ஒரு கீற்று தோன்றும். எனக்கென்னமோ நல்ல பாடாந்திரத்தில் கற்பதுதான் முக்கியம் என்று தோன்றுகிறது. நல்ல பாடாந்திரத்தில் ஒரு பாடல் கற்றால் அது மனோதர்மத்துக்கு ஒரு பெரிய தூண்டுதலாய் அமைய முடியும். தெரிந்த ஒரு பாடல் எதிர்பாரா சமயமொன்றில் புதிய திறப்பை ஏற்படுத்தக்கூடும்.

குரு – திரு.பி.கே.ராஜகோபால ஐயர்மீண்டும் நீங்கள் கற்றதற்கு வருவோம். ராஜகோபால ஐயரிடம் எவ்வளவு காலம் கற்றுக் கொண்டீர்கள்?

அவரிடமும் 3-4 ஆண்டுகள் சென்றிருப்பேன். பிறகு அவருக்கு முடியவில்லை.

அதற்குப் பின் எஸ். ராமநாதனிடம் சென்றீர்களா?

சங்கீத கலாநிதி டாக்டர் எஸ்.ராமநாதன்


ஆமாம். கச்சேரி அனுபவமும் உள்ள ஒருவரிடம் சென்றால் எனக்கு அனுகூலமாக இருக்கும் என்று தோன்றியது. பக்க வாத்யத்துடன் எப்படி இணைந்து பாடுவது, ரசிகர்களின் தேவை அறிந்து பாடுவது போன்ற நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று தோன்றியது. யாரிடம் செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ண கான சபையை நடத்தி வந்த யக்ஞராமனின் தங்கை சியாமளா என்னுடைய சினேகிதி, ‘நாங்களெல்லாம் ராமநாதன் சாரிடம் கற்றுக் கொள்கிறோம். நீயும் வாயேன்,’ என்றார். அப்போதுதான் ராமநாதன் சார் வெஸ்லியனில் இருந்து திரும்பி வந்திருந்தார். அதைப் பற்றி நிறைய செய்திதாள்களில் வந்திருந்தது. Musician’s musician – என்று அவருக்கு  பெரிய பெயர் இருந்தது. அவ்வளவு பெரியவர் எனக்குச் சொல்லிக் கொடுப்பாரா என்று நான் தயங்கினேன். ‘எங்களுக்கே சொல்லித் தருகிறார். உனக்கு ரேடியோ கிரேடேஷன் எல்லாம் இருக்கிறது. நிச்சயம் சொல்லித் தருவார்,’ என்று சியாமளா சொன்னதும் கொஞ்சம் தைரியம் வந்தது.

இது எந்த வருடம்?

1981 என்று நினைக்கிறேன். அவர் வீட்டுக்கு முதல் முறை போனது பசுமையாக நினைவில் உள்ளது. மாடியில் உட்கார்ந்து அவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி மாணவர்கள். உட்கார இடமில்லாமல் மாடிப் படிகளில்கூட மாணவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவரை நான் கற்ற வகுப்புகளில் குரு எனக்கு மட்டும்தான் சொல்லிக் கொடுப்பார். இப்படி ஒரு சூழல் எனக்குப் புதியதாக இருந்தது.

அன்றைய வகுப்பு முடிந்ததும், கீழே இறங்கி வந்தார். என்னை ஏதேனும் பாடச் சொன்னார். ‘எவருரா’ (மோகனம்) பாடினேன். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ’நாளையிலிருந்து வந்துவிடு,’ என்றார். அவரிடம் சேர்வது இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அன்று தொடங்கி அவர் இருந்த காலம் வரை அவரிடம் சென்று வந்தேன்.

அவருடைய கற்பிக்கும் முறை எப்படி இருக்கும்?

என்னுடன் இன்னும் 7-8 பேர் என் வகுப்பில் இருந்தார்கள். தினமும் 10-லிருந்து 11-வரை எங்களுக்குப் பாடம். அவர் வழி என்னவென்றால், நிரவல் என்று எடுத்தாலோ, ராகம் என்று எடுத்தாலோ, தங்கு தடையின்றி மணிக்கணக்கில் அவர் பாடிக்கொண்டே இருப்பார். நாம் கூர்ந்து கவனித்து, நம்மால் ஆனதைக் கிரகித்துக் கொள்ளவேண்டும்.

நான் இன்று கற்றுக் கொடுக்கும்போது எல்லாப் பாடல்களையும் ஸ்வரப்படுத்தி எழுதி வைத்து, அதைக் கொடுத்துதான் சொல்லிக் கொடுக்கிறேன். அப்படியெல்லாம் அவர் எழுதி வைத்துக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. யார் எந்தப் பாடலைக் கேட்டாலும் தடையின்றி கேட்ட மாத்திரத்தில் சொல்லிக் கொடுப்பார். அவரிடம் நூறு கிருதிகளுக்கு மேல் கற்றுக் கொண்டேன். மனோதர்ம சங்கீதம் என்றால் என்ன என்று ஓரளவு புரிந்தது அவரிடம்தான். காம்போதி எப்படிப் பாடுவாரோ அதே போல வசந்தாவை அவரால் பாட முடியும். ராகம் எப்படிப் பாடுவது, பாடலில் சங்கதிகளை எப்படி ராக பாவம் ததும்ப வளர்ப்பது (இந்த சௌக்ய பாடிக் காண்பிக்கிறார் – அதில் ஸ்வரங்களாக எழுதினால் ஒரே அமைப்பில் வரும்படி – இரண்டு விதமாகப் பாடுகிறார். முதலாவது சாதாரணமாகவும் இரண்டாவது ராமநாதன் பாணியில் ராகபாவம் நிறைந்தும் பாடிக் காட்டுகிறார்), நிரவலில் ஒரு சங்கதிக்கும் அடுத்த சங்கதிக்கும் தொடர்ச்சி கெடாமல் எப்படிப் பாடுவது என்றெல்லாம் அவர் பாடுவதைக் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம், யார் எப்படிப் பாடினாலும், ‘நீ சரியாகப் பாடவில்லை. உனக்கு இது வரவில்லை,’ என்று எதிர்மறையாக ஒரு வார்த்தைகூடச் சொல்லமாட்டார். ஆனால் நாம் பாடுவது சரியாக இல்லயென்றால், ‘இது சரியல்ல’, என்பதையும் புரியவைத்துவிடுவார்.

ஒருநாள் சிந்துபைரவியில் ஒரு பாடல் சொல்லிக் கொடுத்தார். ‘பவபய ஹரம்’ என்கிற வரியில் நிறைய துரித கால சங்கதிகள். அதை நாங்கள் பாடும்போது ஒரு பெண்மணியைப் பார்த்து, ‘அம்மா! ஜிமிக்கியையெல்லாம் இவ்வளவு ஆட்டினால்தான் இந்தச் சங்கதி வருமா?’ என்று கேட்டார். ’சங்கதி இங்கு இருக்கிறது அம்மா’, என்று அவர் தொண்டையில் கையை வைத்துச் சொன்னது எனக்கு பெரிய பாடமாக அமைந்தது.

நிரவல் ஸ்வரமெல்லாம் வகுப்பில் அவர் பாடுவார். அடுத்து ஒவ்வொருவராக வாங்கிப் பாடுவோம்.  ‘அடுத்தவர் பாடும்போது என் முறைக்கு நான் என்ன பாடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால் உங்களால் கேட்டு உள்வாங்கிக் கொள்ள முடியாது. சங்கீதத்துக்கு முதலில் நன்றாகக் கேட்கத் தெரியவேண்டும்’, என்று சொல்லுவார். பாலகோபால-வில் ‘மாணிக்ய மகுட வலயதார’-வில் உள்ள சங்கதியைப் பாருங்கள். (பாடிக் காட்டுகிறார்.) இந்த வல்லினம், மெல்லினம் எல்லாம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள முடியும். கேட்கத் தெரியவில்லை என்றால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. எனக்கு அந்தச் சங்கதியை இன்று சொல்லிக் கொடுக்கவே தயக்கமாக இருக்கிறது. எனக்கு அவர்கள் சங்கதி வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. (சிரிக்கிறார்).


பொதுவாக இசையை ஆய்வு செய்தவர்களுக்குத் தமிழ் அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றில்தான் ஆழ்ந்த தேர்ச்சி இருக்கும். இவர் இரண்டிலும் ஆழக்கால் பதித்தவர். மேடைப் பாடகராகவும் இருந்தவர் என்கிற வகையில் கர்நாடக இசை உலகில் தனித்துவம் வாய்ந்தவர் இல்லையா?

ஆமாம். எவ்வளவோ தெரிந்தவர் என்றாலும் தனக்கு அதெல்லாம் தெரியும் என்று அவர் காட்டிக்கொள்ளவே இல்லை.  அவரிடம் இன்னும் எவ்வளவோ தெரிந்துகொண்டிருக்கலாம். கேட்டதை எல்லாம் சொல்லிக் கொடுப்பார். கேட்கத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. அவர் இவ்வளவு கீர்த்தனைகள் செய்திருக்கிறார் என்று அவர் போனபின்தான் தெரிந்துகொண்டேன். அவர் அங்கயர்கண்ணி வர்ணம் கேட்டிருக்கிறீர்களா? (பாடிக் காட்டுகிறார்)

நீங்கள் பாடும்போது இந்தக் கேள்வி தோன்றுகிறது. பெரும்பாலான கர்நாடக இசைப் பாடகர்களிடம் முறையாக வளப்படுத்தப்பட்ட குரல் (cultured voice) இல்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. ஸ்ருதி சுத்தமும், சங்கதிகளில் தெளிவும் இன்று கேட்க அரிதாகிவிட்ட மந்திர பஞ்சமம் போன்ற ஸ்வரங்கள்கூட கனமாய்க் காதை நிரப்புவதும் உங்கள் குரலின் அம்சங்களாகக் கேட்டவர்கள் உணர முடியும். எதைப் பாடினாலும் துருத்தித் தெரியாமல், அநாயாசமாக உங்களால் பாட முடிகிறது. குரல் வளத்துக்காக ஏதேனும் நீங்கள் பயிற்சிகள் செய்வதுண்டா?

இறையருள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 1964-ல் இருந்து 1968-வரை என் குரலை நான் சுத்தமாக இழந்திருந்தேன். அப்போது நான் பம்பாயிலிருந்ததால் கச்சேரிகள் செய்யவில்லை என்றாலும் மிகவும் கஷ்டப்பட்டேன். கொஞ்சம் பாடினாலே தொண்டை கட்டிக்கொள்ளும். பாடினால் குரலே வெளியில் வராது. ஈ.என்.டி. மருத்துவர்கள் பார்த்துவிட்டு ஒன்றும் செய்யமுடியாது என்றுவிட்டனர். கல்கத்தா, ஜெம்ஷெட்பூர் போன்ற இடங்களில் எல்லாம் ஹோமியோபதி மருத்துவ முறையை மக்கள் விரும்புவார்கள். எங்கள் குடும்பத்தில் யாரோ சொல்ல நாங்கள் ஒரு மருத்துவரைப் போய்ப்பார்த்தோம். அவர், ‘மங்களூருக்கு அருகில் ‘ஃபாதர் முல்லர் ஹாஸ்பிடல்’ என்று இருக்கிறது. அவர்களுக்கு உங்கள் நிலையை எழுதுங்கள். அவர்கள் தபாலில் மருந்து அனுப்புவார்கள்,’ என்றார். நான் எழுதியதும் மருந்து வந்தது. மூன்று மாதங்கள் சாப்பிட்டும் எந்தப் பலனும் இல்லை. இதுவும் தோல்விதான் என்று நினைத்தபோது, அதிசயமாய் குரல் திரும்பக் கிடைத்தது. அப்போது நான் பாதுகாப்பாக மூன்று கட்டை ஸ்ருதியில்தான் பாட ஆரம்பித்தேன். ‘பெண் குரலுக்கு இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடினால் நன்றாக இருக்கும்,’ என்று யாரோ சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக முயன்று நாலரை/ஐந்து கட்டையில் பாடிப் பார்த்தேன். தடையில்லாமல் பாட முடிந்தது.

நான் குரலுக்கென்று எதையும் பிரத்யேகமாகச் செய்யவில்லை. குரலை உபயோகித்தேன், துஷ்ப்ரயோகம் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். மூன்று மணி நேரம் பாடியபின் இன்னொரு மூன்று மணி நேரம் பாடு என்றால்கூட என்னால் பாட முடியும். ஆனால் பத்து நிமிடங்கள் பேசினாலே குரல் தளர்வடைகிறது. கத்திப் பேசினாலோ, சத்தமாகச் சிரித்தாலோகூட அது குரலைப் பாதிக்கும் என்று தோன்றுகிறது. நமது சங்கீதத்தில் ராகங்களைக் கையாளும்போதும், சாஹித்யங்களைக் கையாளும்போதும் அழுத்தம் கொடுத்துப் பாட வேண்டியிருக்கிறது. அதுவே குரலுக்குச் சிரமமளிப்பதுதான். ஹிந்துஸ்தானியில் பாருங்கள் – தான் பாடும்போது தொண்டையிலிருந்தும் நாபியிலிருந்தும் பாடுவதைவிட வாயால் பாடுவது அதிகம். அப்படி நாம் பாட முடியாது. ஜண்டை வரிசை பாடும்போது தொண்டையில் கையை வைத்துப் பார்த்தால் இரண்டாது ஸ்வரம் இங்கிருந்து (தொண்டையில் கையை வைத்துக் காட்டுகிறார்) கேட்க வேண்டும்.

உணவு முறையில் ஏதேனும் பிரத்யேக கவனம் எடுத்துக் கொள்கிறீர்களா?

சங்கீத கலா ஆசார்யா செங்கல்பட்டு ரங்கநாதன்

வயிற்றில் அமிலம் இருந்தால் குரலை பாதிக்கும் என்று சொல்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி அதிகம் தெரியவில்லை. 2012-ல் உடல்நலக் குறைவால் ஆஞ்சியோ செய்துகொள்ள வேண்டியிருந்தது. அப்போது ஸ்ருதியை 4 கட்டைக்கு குறைத்துக் கொண்டேன். கொஞ்சம் காலம் ஆனதும் ஐந்து கட்டையில் பாட ஆரம்பித்தபோது, வயலின் வித்வான் முல்லைவாசல் சந்திரமௌலி, ‘நான்கு கட்டையில் கேட்க மதுரமாக இருக்கிறது. இதை ஏற்ற வேண்டாம்’ என்று சொன்னார். இப்போது நாலில்தான் பாடி வருகிறேன். கர்நாடக சங்கீதத்தில் கீழ் பஞ்சமத்திலிருந்து மேல் பஞ்சமம் வரை சுலபமாகப் போக எந்த ஸ்ருதி வசதியாக இருக்கிறதோ அதுதான் ஸ்ருதி இல்லையா?

செங்கல்பட்டு ரங்கநாதன் சொல்வார், ‘மைக்கெல்லாம் முன்னாலேயே வந்திருந்தால் பழைய கால மேதைகள் இன்னும் நிறைய நாள்கள் இருந்திருப்பார்கள்,’ என்று.

நீங்கள் அவரிடமும் கற்றுக்கொண்டீர்கள் அல்லவா?

ஆமாம். இராமநாதன் சார் மறைவுக்குப்பின் அவரிடம் கற்றுக் கொண்டேன். ரேடியோவில் அவர் கச்சேரியைக் கேட்டுவிட்டு அவரிடம் கற்க வேண்டும் என்று தோன்றியது. அவரும் உடனே சொல்லித்தரச் சம்மதித்தார். ‘பல்லவி என்றால் கொஞ்சம் நடுக்கமாக இருக்கிறது. உங்களிடம் தெரிந்து கொள்ளவேண்டும்’, என்றேன். அதற்கு அவர், ‘பத்து பல்லவிகள் ஆயுசுக்கும் கச்சேரி செய்யப் போதும் என்கிற வகையில் டேப்பில் எடுத்துக்கொண்டு உருப்போட்டுக் கொள்ளலாம். அல்லது பல்லவி என்றால் என்ன என்று ஆழ்ந்து தெரிந்துகொண்டு எந்தப் பல்லவியும் நிர்வகிக்கும்படி தெரிந்து கொள்ளலாம். உனக்கு எது வேண்டும்?” என்று கேட்டார்.

பல்லவிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன், ‘உனக்கு மோகன வர்ணம் தெரியுமா?’ என்று கேட்டார். தெரியுமென்றதும் அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கு வகுப்பு முழுவதும் மோகன வர்ணம்தான் பாடம். ஓர் இடம், இரண்டு இடம், நான்கு இடம் தள்ளி எடுத்துப் பாடுவது என்று விதவிதமாய் அதே வர்ணத்தை பாடிப் பழகினேன். நாலு களை தாளம் எனக்கு இன்றும் அவர் சொல்லிக் கொடுத்ததுபோல நான்கு களைகளுக்கும் சேர்த்து ஒரே தட்டில் போடத்தான் வருகிறது. நான்கு களை தாளத்தைப் போட்டுக்கொண்டு வர்ணத்தில் திரிகாலம் திஸ்ரம் செய்வது என்று ஆறு மாதங்களுக்கு அதுதான் பாடினேன்.

நீங்கள் அகாடமியில் பாடிய நாசிகாபூஷணி பல்லவி இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. விதுஷி கன்யாகுமரி சங்கீத கலாநிதி வாங்கிய வருடம் என்பதால் அவர் பெயர் வரும்படி அந்தப் பல்லவியைப் புனைந்தீர்களா?

இல்லை. சில வருடங்களுக்கு முன்னால் டி.ஆர்.எஸ்-ன் சிஷ்யை ராதா வெங்கடாசலம் அழைத்து, ‘நாங்கள் ஏற்பாடு செய்திருந்த வித்வான் வரமுடியாத சூழல். இரண்டு நாள்களில் நீங்கள் பாட முடியுமா?’ என்று கேட்டார். அது பல்லவிக் கச்சேரி. நாசிகாபூஷணி ராகத்தில் பல்லவி பாட வேண்டுமென்றார்கள். நான் அந்த ராகத்தில் கிருதியும் எனக்குத் தெரிந்த பல்லவியும் பாடுகிறேன். புதியதாகப் பல்லவி தயார் செய்யப் போதுமான நேரமில்லை என்றேன். அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஃபோனை வைத்துவிட்டுப் பத்தடி நகர்வதற்குள் இந்தப் பல்லவி கச்சிதமாக மனத்தில் தோன்றியது. நான் அவர்களை திரும்ப அழைப்பதற்குள் அவர்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டனர். அன்று தோன்றிய பல்லவியை நீங்கள் சொன்ன அகாடமி கச்சேரியில் உபயோகித்துக் கொண்டேன்.

எம்பி3-யில் கேட்க:அந்தக் கச்சேரியில், யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாகத் தோன்றும் பல விஷயங்களை யோசிக்காமலே அனுபவித்து ரசிக்கும்படி வழங்கினீர்கள்.

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரங்கநாதன் சார் சொல்வார். ‘எவ்வளவு க‌ஷ்டமான காரியத்தைச் செய்தாலும் கேட்பவருக்குச் சுலபமான ஒன்றாகத் தோன்ற வேண்டும்,’ என்பார். பல்லவிக்கான பயிற்சியோடு நிறைய கீர்த்தனைகளும் அவரிடம் பாடம் செய்தேன்.

ஆலத்தூர் பாணி கீர்த்தனை அமைப்பும் தனித்துவம் வாய்ந்தது அல்லவா?

ஆமாம். பாடல்களில் அடுக்கடுக்காய்ச் சங்கதிகள் மலர்வது அவர்களுடைய சிறப்பு. சீராகச் சென்று கொண்டிருக்கும்போது நாம் எதிர்பாரா சங்கதி ஒன்று மலரும். அது அந்தக் கிருதியை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடும். (கிருபயா பாலயவில் ‘ஸரஸிஜ லோசனவில்’ ஒரு சங்கதியைப் பாடிக் காண்பிக்கிறார்.) ’ராம நீ சமான’ பாட்டு எனக்கு ஹரிஹர ஐயர், ராஜகோபால ஐயர், ரங்கநாதன் சார் – மூன்று பேரிடமும் பாடமுண்டு. ரங்கநாதன் சாரின் சங்கதிகள் பிரத்யேகமானவை.

பல்லவி, கீர்த்தனைகள் தவிர – நிரவலில் எனக்கு ஒரு பிடிப்பு அவரிடம் கற்றதில்தான் கிடைத்தது. நிரவல் வரி எங்கிருக்கிறதோ அங்கிருந்து எடுத்து எப்படிப் படிப்படியாய் வளர்ப்பது என்கிற அமைப்பு அவரிடம்தான் கற்றேன். நிரவலில் முதல் காலமும் மூன்றாம் காலமும் அதிகம் கேட்கலாம். இரண்டாம் கால நிரவலை அரிதாகத்தான் கேட்க முடியும். மூன்று காலத்திலும் சரளமாகப் பாடப் பயிற்சியளித்தார். (கண்டிகி சுந்தர-வில் மூன்று காலத்தையும் வேறுபடுத்திப் பாடிக் காட்டுகிறார்.) அதிலும் அந்த அனுமானிக்க முடியாத ஒதுக்கல்கள் அவருக்குத்தான் வரும்.

எம்பி3-யில் கேட்க:அவரிடம் எத்தனை காலம் பயின்றீர்கள்?

1988-ல் தொடங்கி 2008-வரை சென்று கற்றுக் கொண்டிருந்தேன்.  சில நாள்கள் முன்னால் நோட்டுப் புத்தகங்களை எடுத்துப் பார்த்தபோதுதான் அவரிடம் மட்டுமே கிட்டத்தட்ட 500 கிருதிகள் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தது.  அவர் 35 தாளங்களிலும் தில்லானாகள் செய்துள்ளார். அவற்றை எனக்குச் சொல்லித் தந்துள்ளார்.நீங்கள் கற்றதைப் பற்றி விவரமாகச் சொன்னீர்கள். நீங்கள் எப்போது சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தீர்கள்?

என் கணவர் ரயில்வேயில் இருந்தவரை சொல்லிக் கொடுப்பதில் ஒரு தயக்கம் இருந்தது. அரசு வேலையில் உயர் பதவியில் இருப்பவர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. அவர் இறுதியாக சித்தரஞ்சனில் வேலை பார்த்து விருப்பஓய்வு எடுத்துக்கொண்டதும் சென்னைக்கு வந்தோம். அப்போது நிறைய பேர்  என்னை அணுகினார்கள். அப்போதிலிருந்து சொல்லிக்கொடுத்து வருகிறேன்.

இன்றைய சூழலில், குறிப்பாக வாய்ப்பாட்டில் – ஆண் கலைஞர்களைவிட பெண் கலைஞர்கள் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது. உங்களுக்கு முந்தைய தலைமுறையில் பாரம்பர்ய வழிக் கலைஞர்களைத் தவிர மற்ற பெண்கள் கச்சேரி செய்வது ஏளனமாகப் பார்க்கப்பட்ட நிலை இருந்தது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர் என்கிற வகையில் இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது போன்ற மாற்றங்கள் திடீர்த் திருப்பங்கள் அல்ல. மெதுமெதுவாக நடப்பவை. திரும்பிப் பார்த்தால்தான் இவ்வளவு மாறியிருக்கிறது என்று தெரியவரும். எனக்கு முந்தைய தலைமுறைக்கும் இப்போதைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதில் இதுவும் ஒரு முக்கியமான மாற்றம். வரவேற்கத்தக்கதும்கூட.

அந்நாளுக்கும் இந்நாளுக்கும் உள்ள வித்தியாசங்களை இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

அன்று இவ்வளவு கீர்ததனைகள் புழக்கத்திலில்லை. பாடாந்திரம் நிறைய இருந்தால்கூட அவர்களுக்கென்று ஒரு கிருதிகளை வைத்துக் கொண்டு பாடினார்கள். இன்று நிறைய பாடல்கள் வெளி வந்திருக்கின்றன. சஞ்சய் சுப்ரமண்யத்தைப் பாருங்கள். எவ்வளவு புதிது புதிதாய் பாடல்களைக் வெளிக்கொண்டு வருகிறார்! அந்நாளில் சாஹித்யத்துக்கும் அவ்வளவு முக்யத்வம் கொடுத்ததாகத் தெரியவில்லை. பாடுபவர்கள் அந்நாளில் தியரியைத் தெரிந்துகொள்ள இப்போதுபோலப் பாடுபட்டார்களா என்பது சந்தேகம்தான். அதற்காக அவர்கள் தப்பாகப் பாடினார்கள் என்று சொல்லவில்லை. தியரியில் ஈடுபாட்டைச் சொல்கிறேன். குருகுலவாச முறை போய் சங்கீத சிட்சையும் முறைமைப் படுத்தப்பட்டிருப்பதால் (institutionalize) இந்த மாற்றம் இருக்கலாம். இன்று கேட்க வருபவர்களும் நிறையத் தெரிந்துகொண்டு வருகிறார்கள். நிறைய கேள்வி கேட்கிறார்கள்.

இன்று ஸ்வரம் பாடும்போது கல்பனை ஸ்வரம் கல்பிதம் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. சிட்டையாக வீட்டில் பாடிப் பழகிய குறைப்புகளே நிறையக் கேட்கக் கிடைக்கின்றன. கச்சேரியில் ஒவ்வொரு அம்சத்துக்கான பங்கீடும் சரியான கலவையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கீர்த்தனை இரண்டு நிமிடங்கள் பாடி, அதற்கு ஸ்வரம் 25 நிமிஷங்கள் பாடுவதும் நிறைய நடக்கிறது. எப்படி ஸ்வரம் பாடினார் என்பதைவிட எவ்வளவு நேரம் ஸ்வரம் பாடினார் என்பது ஒரு அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. ஆரோகண அவரோகணத்தில் ஏறிஏறி இறங்குவது அதிகமாகிவிட்டது. என்னிடம் கற்றுக்கொள்ளும் ஒரு சிஷ்யன் கேட்டான், “எனக்கு எப்போது கரிஸநித, ரிஸநிதப சொல்லித் தருவீர்கள்?” என்று. (சிரிக்கிறார்.) ராகபாவம் இல்லாமல் வாய்ப்பாடுபோல ஸ்வரம் பாடுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

ராமநாதன் சார் சொல்லுவார், ‘விவாதி பாடும்போது ரொம்ப நேரம் அந்த ஸ்வரங்களிலேயே நிற்கக் கூடாது,’ என்று. இன்று நிறைய விவாதி ராகங்கள் பாடப்படுகின்றன. விவாதி ஸ்வரங்களே நியாச ஸ்வரங்களாகப் பாடப்படுகின்றன.

கச்சேரியினுடைய நேரமும் இரண்டு மணி நேரம் என்று ஆகிவிட்டது. எட்டு மணி ஆனால் வீட்டுக்குச் சென்றாக வேண்டும் என்கிற கவலை ரசிகர்களுக்கு வந்துவிடுகிறது. குறைந்தபட்சம் நான்கு களையில் பாடினால்தான் பல்லவி என்பார் ரங்கநாதன் சார். இரண்டு மணி நேரக் கச்சேரியில் நாலு களை பல்லவி எப்படிப் பாடுவது?

அதற்காக, எல்லாமே இன்று மோசம் என்று நான் சொல்ல வரவில்லை. இருபது வயதில் நமக்குப் பிடிக்கும் விஷயம் நாற்பது வயதில் மாறும். இன்றைய இளைஞர்களுக்கும் இன்று பெரியதாகத் தெரியும் விஷயம் அவர்களுக்கே அனுபவம் கூடக்கூட மாறும். அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. தியாகராஜரே அவருடைய காலத்தில் பல புதுமைகளைப் புகுத்தியவர்தான். மீரா ஒரு பஜனில் சொல்வதைப்போல நாம்தான் ஒரு சல்லடையாக இருந்து கொள்ளவேண்டும். சலித்து நல்லதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அல்லதை விட்டுவிட வேண்டும்.

உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது நன்றியுணர்ச்சியே மேலெழுகிறது. இந்த ஊரைத்தான் ‘Mecca of Carnatic Music’ என்கிறோம். நான் இங்கு வந்ததே கிட்டத்தட்ட எனது முப்பதாவது வயதில்தான். சங்கீதத்தில் ஈடுபடுவதற்காக, வீட்டைப் பார்ப்பதிலோ அல்லது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதிலோ நான் எந்தச் சமரசமும் செய்து கொள்ளவில்லை. அப்படியிருந்தும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஈடாக என்னையும் மதிக்கும் வகையில் நான் இன்றிருப்பது எனக்குத் திருப்தியளிக்கிறது.

நல்ல குரல் வளமும், இசை ஞானமும் உள்ள உங்களுக்கு, ‘நான் இன்னும் பிரபலமாக அறியப்பட்டிருக்கலாமோ?’ என்ற எண்ணம் தோன்றுவதுண்டா?

வளர்ந்து வரும் சமயங்களில் அப்படிச் சில சமயம் தோன்றியதுண்டு. இப்போது என்ன தோன்றுகிறதென்றால் திறமை, வாய்ப்புகள், பிராபல்யம் மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாதவை. அவரவருக்கு விதித்ததற்கேற்ப இம்மூன்றின் அளவும் கிட்டுகின்றன. மிகுந்த பிராபல்யமுள்ளவர்கள்தான் திறமையானவர்கள் என்று சொல்வதற்கில்லை. திறமையுள்ள எல்லோருக்கும் அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.

எனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் நான் திருப்தியாகப் பாடியுள்ளேனா என்பதைத்தான் நான் பார்க்கிறேன். அரங்கில் நூறு பேர் இருந்தால் ஒரு மாதிரியாகவும், 10 பேர்தான் இருக்கிறார்கள் என்றால் வேறு மாதிரியாகவும் நான் பாடியதில்லை. இரண்டு பேர் வந்திருந்தாலும் நம்மை மதித்து வந்த அந்த இரண்டு பேருக்காக முழு மனதுடன் பாடவே நான் முயன்றுள்ளேன்.

நமக்குக் கிடைத்ததையெல்லாம் பிராபல்யம் என்னும் ஒற்றை அளவுகோலால் மட்டும் அளந்துவிட முடியாது.

ஓர் உதாரணம் சொல்கிறேன். என் அம்மா நூறு வயது வரை இருந்தார். அவருடைய கடைசிக் காலங்களில் அவருக்கு நினைவு தப்பியது. நெருங்கிய உறவுகளே யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் சங்கீதம் அவரைவிட்டுப் போகவில்லை. ஒருமுறை நான் ‘ஜன நினுவினா’ பாடினேன். ’லோக ஜனனி நினுவினா’ பாடிவிட்டு ‘திக்கெவரம்மா’ என்று பாடிவிட்டேன்.  அம்மா இடைமறித்து, “திரிலோக ஜனனி பாடு!” என்றார். பாட்டை புளகாங்கிதமடைந்து கேட்பார். அகாடமியில் பாடுவதைக்கூட அம்மாவுக்காகப் பாடியதற்கு இணையாகச் சொல்லமுடியாது. அந்தக் காலத்தில் அப்படித்தானே பெரியவர்கள் பாடி இருந்திருப்பார்கள். சில நூறு வருடங்களாகத்தானே கச்சேரி எல்லாம்?

The Divyadhwani School of Music was started in 1986 by Smt Seetha Narayanan to meet தெ need for quality Carnatic music training in Ayanavaramஉங்களுக்கு உங்கள் பயணம் திருப்தியான ஒன்றாக இருக்கலாம். ஒரு ரசிகனாய் உங்களிடம் பேசும்போது, இன்னும் உங்களைப் பற்றி பரவலாய்த் தெரிந்திருக்க வேண்டாமோ என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது.

பிராபல்யத்துக்காக நாம் நிறையச் செய்ய வேண்டியிருக்கும். அதையெல்லாம் நாம் செய்யத் தயாராக இருக்கிறோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். நான் எல்லாப் பெரிய சபைகளிலும் ஆளைப் பிடித்து ஒருமுறை பாடிவிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த வருடம் நான் நன்றாகப் பாடுவதாலேயே என்னை அவர்கள் மீண்டும் அழைப்பார்கள் என்று இல்லை. மக்கள் மத்தியில் பிரபலமாகும் வரை நான் மீண்டும் மீண்டும் பலரைச் சந்தித்து வாய்ப்புகள் பெறவேண்டும். பிரபலம் ஆகிவிட்டால், அதை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டுமே என்கிற அழுத்தம் சேர்ந்துவிடும். அதையெல்லாம்விட கூப்பிட்ட இடத்தில் திருப்தியாய்ப் பாடிவிட்டு வருவதே சுதந்திரம் என்று நினைக்கிறேன்.

நான் கற்றுக்கொண்ட குருகளும் இதே மனநிலையில்தான் சங்கீதத்தை அணுகினார்கள். எல்லாவற்றுக்கும்மேல் ஆண்டவனின் திட்டம் என்ன என்று யார் சொல்ல முடியும்?

ஓர் உதாரணம் சொல்கிறேன். கோவை உஷா என்று இன்று வயலின் வாசிக்கிறாரே, அவர் பெரம்பூரில் வளர்ந்தவர்தான். அயனாவரம் காசி விஸ்நாதர் கோயிலில் எனக்கு வருடா வருடம் பாட வாய்ப்பு இருந்தது. ஒரு வருடம் உஷாவை எனக்கு வாசிக்கச் சொன்னார்கள். அடுத்த நாளே அவளை என் வீட்டுக்கு அழைத்துவந்து, ‘நீங்கள் நன்றாகப் பாடினீர்கள். இவளுக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும். எங்கள் குடும்ப நிதிநிலை அவ்வளவு சரியாகயில்லை. இவளுக்குக் கண்பார்வையும் இல்லாததால் வேறு படிப்பும் சொல்லித்தர இயலவில்லை,’ என்றார்கள்.

நான் சொல்லித் தருகிறேன் என்று கூறியிருக்கலாம். எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. “நானே ராஜகோபால ஐயரிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் இவளை அவரிடம் அழைத்துச் சொல்லுங்களேன்,” என்றேன். அவர் உடனே அவளை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல், அவளை பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்துக் கல்வியும் கற்க வழிசெய்தார். கொஞ்ச நாளில் வித்வான் எம்.சந்திரசேகரனின் உறவினர் ஒருவருக்கு என் கணவர் உதவி செய்தார். அதற்காக அவர் தொலைபேசியில் பேசியபோது, உஷாவைப் பற்றிச் சொன்னோம். அவர் அவளை அழைத்து வாசிக்கச் சொல்லி கற்றுத்தர சம்மதித்தார். அதன்பின் அவளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பட்டப் படிப்பும் பெற்று, சங்கீதத்திலும் தேறி, பாண்டிச்சேரி வானொலி நிலைய வித்வான் வேலையும் அவளுக்குக் கிடைத்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரால் அனுமானித்திருக்க முடியும்?

நீங்கள் கச்சேரி செய்வதைவிட, கற்றுக் கொள்வதையும் கற்றுக் கொண்டதை அனுபவிப்பதையுமே அதிகம் விரும்புகிறீர்கள் என்று சொல்லலாமா?

அப்படிச் சொல்ல முடியாது. கற்றுக் கொண்டது மட்டும் போதுமென்றோ, நான் மட்டும் அனுபவித்தால் போதுமென்றோ நான் நினைக்கவில்லை. கற்றுக் கொண்டதை மேடையில் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு  நிறைய ஆர்வமுண்டு. அரிய விஷயங்களை நான் பாடினால் அதைப் பற்றிச் சொல்லிவிட்டுத்தான் பாடுவேன்.

ஒருமுறை தமிழிசைச் சங்கத்தில் ‘சபாபதிக்கு வேறு தெய்வம்’ பாடினேன். அதை ராமநாதன் சார் சொல்லிக் கொடுத்ததுபோல “ஒருதரம் சிவசிதம்பரம் என்றுரைத்தால் போதுமாம்,” என்று பாடினேன். “ஒருதரம் சிவசிதம்பரம் என்றுரைத்தால் போதுமே, என்று பாடுகிறார்களே, எது சரி?” என்று ஒருவர் கேட்டார்.

“என் குரு சொன்னதை நான் மாற்றுவதில்லை. அவர் ஏன் அப்படிப் பாடினார் என்று நான் கேட்டுக்கொள்ளவில்லை. யோசித்துப் பார்த்தால், ‘போதுமே’ என்றால் – அது கோபாலகிருஷ்ண பாரதி உரைக்கும் உண்மைபோல ஒலிக்கிறது. ‘போதுமாம்’ என்றால் தனக்கு முன் இருந்த ஞானியர் கூறவதை வினயத்துடன் தானும் கூறுவதாகத் தோன்றுகிறது. அதனால் இன்னும் பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது,” என்றேன். இதுபோல பகிர்ந்து கொள்வதும் எனக்கு மிகவும் திருப்தியளிக்கக்கூடிய விஷயம்தான்.’போதுமாம்’ சில பேரிடமும் ‘போதுமா?’ என்று கேள்வியாக மாறி அர்த்தமற்று ஒலிக்கிறதே.

அது ’ம்-காரத்துக்கு’ முக்கியத்வம் அளிக்காததால்கூட இருக்கும். ம்-காரம் பாடும்போது, வாயை மூடிப் பாடினாலும் அழுத்தமாய்க் கேட்கும்படிப் பாடிப் பழகவேண்டும்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. உங்கள் இசைப்பதிவுகள் இணையத்தில் கிடைக்கிறதே தவிர மற்ற விவரங்கள் ஏதும் கிடைப்பதில்லை. நீங்கள் இன்று சொன்னதை எழுதினால் அந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன். இணையத்தில்கூட சில பேரைப் பற்றிதான் விவரங்கள் கிடைக்கின்றன.

ஒரு சிலர் மட்டுமே நம் கண்ணில் படுவதற்குப் பின்னாலும் ஒரு சைக்காலஜி உண்டு. உதாரணமாக எனக்குத் தொண்டை கட்டினால் நான் ஸ்ட்ரெப்சில்ஸைத்தான் தேடுவேன். வேறு என்ன கிடைத்தாலும் பழகிப்போன ஒன்றைத்தான் நம் மனம் நாடுகிறது. அது மாதிரிதான் இதுவும்.

இவ்வளவு நேரம் என்னுடன் உரையாடியதற்கு மிக்க நன்றி.

எனக்கும் ரொம்ப சந்தோஷம்.


படம்: எஸ்.ஹேமமாலினி

குறிப்புகள்

இந்த நேர்காணலின் நடுவே வரும் ஒலித்துணுக்குகள் சொல்வனம் வாசகர்களுக்காகப் பிரத்தியேகமாக பதியப் பெற்றவை. தீபாவளி இதழுக்காக பேட்டி நடந்து முடிந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுத்தந்த லலிதாராமிற்கும் விதுஷி சீதா நாராயணன் அவர்களுக்கும் நன்றிகள்.

எஸ். ஹேமமாலினி அளித்த ஒளிப்படங்களைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் சீதா நாராயணின் 75-வது பிறந்த நாள் விழாவுக்காக அவர் சிஷ்யர்களால் தொகுக்கப்பட்டவை. அவற்றை பெற்றுத்தந்த விதுஷி ரஞ்சனி சிவகுமாருக்கு நன்றிகள்.

தனக்கு இந்த நேர்காணலை எழுத உந்துதல் இந்த அனுபவத்திலிருந்து வந்தது என்கிறார் லலிதா ராம்:

விரிவுரை-வழிமுறை

கீழேயுள்ள காணொளியில் சீதா நாராயணின் லெக்சர் – டெமான்ஸ்டிரேஷனும் உள்ளது (2:50 மணித்துளிகளில் துவங்குகிறது):

விதுஷி சீதா நாராயணின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டம்

வித்வான் செங்கல்பட்டு ரங்கனாதனின் சூலாதி சப்த தாள தில்லானாகள்

மாதா காளிகா – பஜன்

முழு கச்சேரி

7 Replies to “கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்”

  1. மிக அருமையான பதிவு. திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டுகிறது. ஒரு அருமையான இசைப்பயணம். புகைப்படங்கள் அருமை. சரளமான நடை. பாராட்டுக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.