இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு

லூயிஸ் க்ளிக் – (1943- )

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசு, அமெரிக்கப் பெண் கவிஞர் லூயிஸ் க்ளிக்கிற்கு [Louise Gluck (pronounced Louise Glick)] வழங்கப்பட்டிருக்கிறது என்றறிந்து இணையத்தில் அவர் கவிதைகளைத் தேடினேன். இணையத்தில் பல கவிதைகளை வாசிக்க முடிந்தது. லூயிஸ் க்ளிக்கின் (77) கவிதைகள், மேற்போக்காய் வாசிக்கையில் எளிமையாகத் தெரிகின்றன. ஆனால்  நெருங்கி வாசிக்கையில், எப்படி எளிமை,  செறிவாயும் உள்ளது உள்ளபடியான நடையிலும் (matter-of-fact style), அறிவார்த்தமாகவும் அமையும்போது  கூடுதலான வாசிப்பைக் கோரும் ஆழமாகின்றன என்பதை அவை உணர்த்துகின்றன. அப்போது அவர் கவிதைகள் அலங்காரமற்ற அழகு பெறுகின்றன. (austere beauty.) லூயிஸ் க்ளிக்கின் கவிதைகளோடு ஏற்படும்  நெருக்கம்  கவிதை மொழியால் மட்டுமன்று; அவை பேசும் பாடுபொருளாலும்கூட. பெரும்பாலும் அவை தனி மனித இருப்பின் வலிகளைப் பேசுகின்றன. தனிமை, அவநம்பிக்கை, ஞாபகம், மரணம், விதவைமை, விவாகரத்து, ஆணாதிக்கம், பாலுறவுச் சிக்கல்கள், முதுமை, நிலையாமை, இழப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இவ்வலிகளை, வாசிப்பில் தனிமனித அனுபவத் தளத்திலிருந்து அனைவரையும் தைக்கும் பொதுமனித அனுபவத் தளத்திற்கு வாசிப்போரின் மனதில் லூயிஸ் க்ளிக்கின் கவிதைகள் கடத்துகின்றன. இதில்தான் அவரின் கவிதைகள் வாசிப்போருக்கு கூடுதல் நெருக்கமாகின்றன. இந்த நெருக்கத்தைக் கடத்தவே அவரின் கவிதைகள் பற்பல வடிவங்களை , சொல்லும் உத்திகளை எடுத்துக்கொள்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் கிரேக்க, ரோமன் தொன்மங்களினூடேயும் நிகழ்கின்றன. நோபெல் குழு தன் அறிவிப்பில், அலங்காரமற்ற எளிமையுடன் தனி மனித இருப்பை அனைவருக்கும் பொதுவாக்கிய தீர்க்கமான குரல் அவருடையது என்று பாராட்டுகிறது. ( for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal.)

லூயிஸ் க்ளிக் இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் Ararat (1990) என்ற கவிதைத் தொகுப்பை நோபெல் குழு குறிப்பிடும்போது, குடும்ப உறவுகள் பற்றிய கருத்தாக்கம், அலங்காரமற்ற எளிமைகூடிய அறிவார்த்தம் (austere intelligence), திருத்தமான படைப்பாக்கம் என்ற மூன்று கூறுகளும் ஒன்றிய ஒரு முழுமையான படைப்பு என்று சிலாகிக்கிறது. குடும்ப உறவுகளின் வலிகளின் இரககமற்ற நேரடியான படிமங்களை இத்தொகுப்பு முன்னிறுத்துகிறது. பல்வித கவிதைகளின் தொகுப்பாய் அமையாமல், மரணத்தைப் பற்றிய கவனம் குவிந்த தொடர்ந்ததோர் அவதானிப்பு இத்தொகுப்பில் நிகழ்கிறது.  The  Wild Iris (1992) லூயிஸ் க்ளிக்கிற்குப் பெரும் புகழையும் புலிட்சர் பரிசையும் பெற்றுத்தந்த கவிதைத் தொகுப்பு. ஒரு தோட்டத்தில் வசந்தத்திலிருந்து கோடை முடிவுவரை தொடரும் நிகழ்வினைப் பின்தொடரும் 54 கவிதைகள் உள்ளடங்கிய தொகுப்பு இது. இதைப் பத்து வாரங்களில் லூயிஸ் க்ளிக் எழுதி முடித்துள்ளார். இத்தொகுப்பில், இழப்புணர்ச்சியின் பிடியிலிருந்து லூயிஸ் க்ளிக் விடுபடும் பெரும்பாய்ச்சல் நிகழ்வதாகக் கூறும்  நோபெல் குழு , அதற்கு அவரின்  Snowdrops என்ற கவிதையில், குளிரிலிருந்து ஆச்சரியகரமாகத் திரும்பும் வாழ்க்கையை விவரிக்கும் பகுதியை எடுத்தாண்டு சான்று சொல்கிறது.

77 வயதில் இப்போது உள்ள லூயிஸ் க்ளிக், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும்  தம் கவிதைப் பயணத்தில், ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் இன்னொன்றிலிருந்து வித்தியாசமானது என்று குறிப்பிடுகிறார். நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் அளித்த தொலைபேசி மூலமான நேர்காணலில், முதலில் வந்த தொகுதியிலிருந்து அவர் கவிதைகளை அணுகுவதற்குப் பதிலாகப் பின்னர் வெளிவந்த Averno அல்லது Faithful and Virtuous Night – என்ற   தொகுதியிலிருந்து ஆரம்பிப்பது உசிதமானது என்று கருதுகிறார். இந்த நேர்காணல் இரண்டு நிமிடங்களுக்குச் சரியாக நடந்தது. பிராபல்யத்தை விரும்பாத அவரின் அகவய ஆளுமை அதில் தெரியாமல் இல்லை.

எமிலி டிக்கின்ஸன் (Emily Dickinson) இவரை பாதித்திருக்கிறார். இதனைத் தனக்கே உரித்தான தீவிரத்திலும் இறை நம்பிக்கையின் எளிய கருத்தாக்கங்களில் சம்மதிப்பதில் விருப்பமின்மையிலும் லூயிஸ் க்ளிக், எமிலி டிக்கின்ஸனை ஒத்திருக்கிறார் என்று நோபெல் குழு கவனமாக ஓர் அம்சத்தை மட்டுமே எடுத்துக்காட்டிக் கூறுகிறது.

லூயிஸ் க்ளிக் நியூயார்க்கில் பிறந்தவர். தன் பதின்பருவத்தில் பசியின்மை நோயால் (anorexia) பாதிக்கப்பட்டார். அதற்காகப் பல ஆண்டுகள் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். தாய் தந்தையரோடு சுமுகமற்ற உறவுகளே அவருக்கு அமைந்திருந்தன.  இக்கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் அவரின் கவிதையுலகைப் பாதித்திருக்கின்றன. குறிப்பாகத் தனிமனித இருப்பின் அபூர்வமான உளவியல் கணங்களை அவதானிப்பதற்கு ஏதுவாய் இருந்திருகின்றன. அவரின் பல கவிதைகளில் சுயசரிதைக் கூறுகள் தென்படுகின்றன என்ற ஒரு விமர்சனம் உண்டு. அதற்காக அவரை ஓர் ஒப்புதல வாக்குமூலக் கவிஞர் (confessional poet) என்று சொல்லிவிட முடியாதென்று நோபெல் குழு அறுதியிடுகிறது.

அமெரிக்காவின் எல்லா இலக்கிய விருதுகளையும் வென்று அந்நாட்டில் மிகவும் அறியப்பட்டவராக இருக்கும் லூயிஸ் க்ளிக் நோபெல் பரிசுக்குப் பின்னர் உலகெல்லாம் அறியப்பட்டவராக ஆகிவிட்டார்.

இருப்பின் இருண்மையையே அவர் கவிதைகள் அதிகம் பேசுவதால்,  ஓர் அவநம்பிக்கைக் கவிஞர் (A poet of despair) என்று அவர் முத்திரை குத்தப்படுகிறார். ஆனால் கூர்ந்து அவதானித்தால், அவர் கவிதைகள் இருப்பின் இருண்மையைப் பேசாது தப்பித்துப் போகாமல், அதைப் பேசுவதால் அதை எதிர்கொண்டு  அதை மறுத்துக் கடப்பவையாய், நம்பிக்கை வெளிச்சத்திற்கு நகர்வதாய் அமைகின்றன.  இதை அவரின்  இருண்மை உள்ளவையென்று  கருதப்படும் பல கவிதைகளில் தொனிக்கும் ஆக்ரோஷத்திலும் ஆதங்கத்திலும் முரண்படுதலிலும் எள்ளலிலும் குகைப்பாதையின் முடிவில் காட்டும் நம்பிக்கை ஒளிக்கீற்றிலும் உய்த்துணரலாம். லூயிஸ் க்ளிக் தன் நேர்காணலொன்றில் குறிப்பிடுகிறார்: அவருக்கு எழுதுவது துரதிர்ஷ்டம், இழப்பு, வலி சூழ்ந்த சூழ்நிலைக்கெதிரான ஒருவகை பழிவாங்குதலென்று. ( For her, writing is a kind of revenge against circumstance- bad luck, loss, pain.) இங்கு கவனிக்கத்தக்கது சூழ்நிலையின் இருண்மைக்கு அடங்கிப் போகாமல் அதற்கு எதிராக அவர் எழுப்பும் அடங்கிய கலகக் குரல் – பழிவாங்குதல். லூயிஸ் க்ளிக்கின் கவிதைகளை முழுமையாக வாசித்தாலே அவரின் கவிதையுலகை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். அவரின் கவிதையுலகைச் சிறிதாவது உணர்ந்துகொள்ள அவரின் பன்னிரண்டு கவிதைகள் இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இக்கவிதைகளை வாசிக்கையில், நோபெல் குழுவினுடைய லூயிஸ் க்ளிக்கின் கவிதைகளைப் பற்றிய அவதானிப்பு சரியா என்பதையும் தேர்ந்துகொள்ளலாம்.

காட்டு ஐரிஷ் மலர்கள்*

என் துன்பத்தின் இறுதியில்

ஒரு கதவிருந்தது.

கேள்:  நீ அதை மரணமென்று அழைத்ததாய்

எனக்கு ஞாபகம்.

தலையின் மேல் சப்தங்கள், ஃபைன் மரங்களின் கிளைகள் சலனித்து.

பிறகு ஒன்றுமில்லை. பலவீனமான பகலவன் வறண்ட

மேற்பரப்பின் மீது மினுக் மினுக்கென்கிறான்.

இருண்ட மண்ணுக்குள்

பிரக்ஞை புதையும் போது

பிழைத்திருத்தல்  திகிலாய் இருக்கிறது.

பிறகு முடிவுக்கு வந்தது:  ஓர் ஆன்மாவாய்ப்

பேச முடியாது, சட்டென்று முடிந்து போனதாய் நீ பயந்தது.

இறுக்கமான மண் சிறிது குனிந்தது.

நான் பறவைகளென்று எண்ணியவை

குட்டையான புதரின் மேல் துள்ளிக் குதிக்கின்றன.

வேறு உலகத்திலிருந்து வரும் பாதை ஞாபகமில்லாத உனக்கு,

மறுபடியும் நான் பேச முடியுமென்று

உனக்கு நான் கூறுகிறேன்:

மறக்கப்பட்டதிலிருந்து திரும்பும் எதுவும்

திரும்புகிறது கண்டடைய ஒரு குரலை:

என் வாழ்வின் மையத்திலிருந்து

ஒரு மகத்தான நீரூற்று கிளம்பியது,

அடர் நீலம் ஆகாயநீலக் கடல் நீரின் மேல் நிழலிடுகிறது.

* குறிப்பு: கண் கவரும் பல் வண்ணங்களில் பல்வகைகளில் பூக்கும் எழில் மலர்கள் இவை. கிரேக்கத் தொன்மத்தில் ஐரிஷ் வானவில்லின் பெண் கடவுள். இத் தொன்மத்தோடும் இம்மலர்கள் பொருத்திப் பார்க்கப்படுகின்றன.  வட அமெரிக்காவின் காட்டு நிலப்பரப்புகளில் காணக் கிடக்கின்றன. தோட்டத்தில் பரவலாகக் கண்கவர் அழகுக்காவும் வளர்க்கப்படுகின்றன.

வெண்பனிப் பூக்கள்*

உனக்குத் தெரியுமா நான் என்னவாயிருக்கிறேன், எப்படி நான் வாழ்கிறேனென்று?

அவநம்பிக்கை என்னவென்று உனக்குத் தெரியும்

பின் குளிர்காலம் உனக்கு அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டும்.

மண் என்னை அழுத்த 

பிழைத்திருப்பேனென்று எதிர்பார்த்ததில்லை நான்.

மறுபடியும் விழித்தெழுந்து

ஈர நிலத்தில் என்னுடலை உணர்ந்து

எதிர் வினையாற்ற முடிந்து

மிக முன்கூட்டி, வசந்தத்தின் குளிரொளியில்

எப்படி மறுபடியும் திறப்பிப்பதென்று வெகுகாலம் கழித்து

நினைவு கூர்வேனென்று எதிர்பார்த்ததில்லை நான்-

அச்சமுற்று, ஆம், ஆனால் உங்களின் மத்தியில் மறுபடியும்,

அழுது  கொண்டு ஆம் ஆனந்தத்தை இழக்கும் ஆபத்தில்

புத்துலகின் குளிர்க்காற்றில்.

* குறிப்பு:  பனியிலிருந்து விடுவித்துக்கொண்டு, வசந்தத்தில் முதன் முதலாய்ப் பூக்கும் சிறு வெண்பூக்கள்.

பேரோடோஸ்*

வெகுகாலத்திற்கு முன்பு, நான் புண்படுத்தப்பட்டேன்.

எதிர்வினையாற்றியும்

உலகினின்று விலகியிருந்தும்

உயிர்  வாழ்வதை கற்றுக் கொண்டேன்.

கவனிக்கின்ற ஒரு கருவியாய்

ஜடமாயல்ல: நிச்சலனமாய்,

ஒரு மரத்துண்டாய், ஒரு கல்லாயாகிப் போவதைப் பற்றி

என்ன கருதினேனென்று

கூறுவேன் உனக்கு நான்.

விவாதித்தும் தர்க்கித்துக் கொண்டும்

என்னை நான் ஏன் களைப்படையச் செய்து கொள்ள வேண்டும்?

எந்த ஒரு கனவும் போல கட்டுக்கடங்காமல் இருப்பதால்

மற்ற படுக்கைகளில் மூச்சு விடும் அந்த மனிதர்கள்

அரிதாகவே புரிந்து கொள்ள முடியும்.

திரையினூடே இரா  வானில்

நிலவு தேய்வதையும் வளர்வதையும் கவனித்தேன்.

ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:

மகத்தான மர்மங்களுக்கு

சாட்சியாய் இருக்க.

இப்போது நான்

பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.

இருண்ட இயல்புக்கு

இவை ஆதாரங்கள்

மர்மங்களல்ல என்றறிகிறேன்.

* குறிப்பு: கிரேக்கத் துன்பியல் நாடகத்தின் தொடக்கத்தில் குழுவாய்ப் பாடப்படும் முதல் பாட்டு.

உருவப்படம்

ஓர் உடலின் வெளிக்கோட்டுருவைக் குழந்தை வரைகிற.

அவளால் என்ன வரைய முடியுமோ அதை வரைகிறாள் அவள்.

ஆனால் அது முழுதும் வெள்ளையாய் இருக்கிறது.

அங்கு உள்ளது என்னதென்று அவள் அறிகிறதை

அவளால் நிரப்ப முடியவில்லை. முட்டுக்கொடுக்காத கோட்டுக்குள்

அவளுக்குத் தெரியும் வாழ்வு தொலைந்துள்ளதென்று.

அவள் ஒரு பின்புலத்தை மற்றொன்றிலிருந்து கத்திரிக்கிறாள்.

ஒரு குழந்தை போல தாயை நோக்கித் திரும்புகிறாள்.

அவள் உருவாக்கியிருக்கின்ற வெறுமைக்கெதிரே

நீ இதயத்தை வரைகிறாய்.

தாலாட்டு

ஒரு விஷயத்தில் கைதேர்ந்தவள் என் அம்மா:

தான் நேசிப்பவர்களை வேறோர் உலகத்திற்கு அனுப்புவதில்.

குட்டிகள், குழந்தைகள்- இவர்களைத் தாலாட்டுவாள் அவள்.

குசுகுசுத்தபடியும், கேட்காதபடி பாடிக் கொண்டும்.

சொல்ல இயலேன் நான், என் தந்தைக்கு அவள் என்ன செய்தாளென்று;

எதுவாயிருந்தாலும், நிச்சயமாய்ச் சொல்கிறேன், அது சரியாகத் தான் இருந்தது.

ஒருவரை உறக்கத்திற்கு தயார்படுத்துவதும்  மரணத்திற்கு தயார்படுத்துவதும் உண்மையிலே ஒன்று தான்.

தாலாட்டுப் பாடல்கள்- அவை எல்லாமே சொல்வது:

நடுக்குற வேண்டாம்; இப்படித் தான் அம்மாவின் இதயத்துடிப்பை அவை பொழிப்புரைக்கின்றன.

ஆக உயிருள்ளவர்கள் மெதுவாக அமைதியாகிறார்கள்.

அமைதியாக முடியாது மறுக்கிறவர்கள் இறந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே.

இறந்து கொண்டிருப்பவர்கள் பம்பரங்கள் போல, சுழற்பொறிகள் போல- நிச்சலனமாய்த் தாங்கள் தோன்றும்படி அவ்வளவு வேகமாக அவர்கள் சுழல்கிறார்கள்.

பிறகு சிதறிப் பொடியாகிறார்கள்:

என் அம்மாவின் கைகளில் இருந்த என் சகோதரியோ அணுக்களின், அணுத்துகள்களின் திரளாய் – அது தான் வித்தியாசம்.

ஒரு குழந்தை ஆழ்ந்துறங்குகையில், அது  இன்னும் முழுமையாயுள்ளது .

என் அம்மா மரணத்தைக் கண்டிருக்கிறாள்;

ஆன்மாவின் முழுமையைப் பற்றி பேசுவதில்லை அவள்.

ஒரு குழந்தை, ஒரு கிழவர், இருவரையும் இருள் சூழ்ந்து இறுகி, இறுதியில் மண்ணாய் மாறுவதாய்,

ஒப்பிடுகையில்  கருதுகிறாள் அவர்களை அவள்.

அனைத்துப் பருப்பொருள்கள் போன்றதே ஆன்மா.

ஏன் அது சிதறிடாது முழுமையோடு இருக்க வேண்டும்,

ஏன் அதன் ஒரு வடிவத்திற்கு அது உண்மையுள்ளதாய் இருக்க வேண்டும்,

அதனால் சுதந்திரமாக இருக்க முடியும்போது?

நாற்சந்தி

என் உடலே, இணைந்து நாம்

மிக வெகுகாலமாகப் பயணிக்க மாட்டோம்.

இளமையாய் இருந்த போது

அன்பைப் பற்றிய என் நினைவு என்னவோ அது போல,

மிகவும் அனுபவமில்லாததாகவும் அறிமுகமற்றதாகவும்

புதியதோர் மிருதுவை உன்னிடம் நான் உணரத் தொடங்குகிறேன்.

தன் குறிக்கோள்களில்

மிக அடிக்கடி முட்டாள்தனமாக ஆனால்

அதன் தேர்வுகளிலும், தீவிரங்களிலும் அப்படி இல்லாத,

முன் கூட்டியே மிக அதிகமாய்க் கோரி,

மிக அதிகமாய் வாக்குறுதி கொடுக்க முடியாத அனபு அது.

என் ஆன்மா மிகவும் அச்சமுற்றும், மிகவும் கிளர்ச்சியுற்றும் இருக்கிறது;

அதன் மிருகத்தன்மையை மன்னித்து விடு.

ஏதோ அதனின் ஆன்மா போல என் கை

உன் மீது எச்சரிக்கையாய் நகர்கிறது,

புண்படுத்தும் விருப்பத்திலல்ல, ஆனால்

கடைசியாய், உணர்ச்சி வெளிப்படுத்தலை

அர்த்தமுள்ளதாய்ச்  சாதிக்கும் ஆவலில்.

இந்த மண்ணல்ல நான் இழப்பது,

நான் இழப்பது நீ.

ஆடை

என் ஆன்மா வறண்டு விட்டது.

ஓர் ஆன்மா நெருப்பில் வீசி எறியப்பட்டது போல, ஆனால் முழுமையாயல்ல,

அழிவுக்கல்ல. அதிதாகமுற்று,

அது தொடர்ந்தது. உடையக் கூடியதாய்,

தனிமையினாலல்ல ஆனால் அவநம்பிக்கையால்,

வன்முறையின் பின்விளைவு.

ஆன்மா, உடலை விட்டுப் போவதற்கு அழைக்கப்பட்டு,

ஒரு கணத்தில் அம்பலப்பட்டு –

நடுநடுங்கி, முன்பு போல்

தெய்வத்திற்கு உன் முறையீடு-

கருணயின் உறுதிமொழியில்

தனிமையிலிருந்து கவர்ந்து ஈர்க்கப்பட்ட ஆன்மா,

மற்றுமொரு மனிதனின் அன்பை மறுபடியும்

எப்படி இனி எப்போதும்  நீ நம்ப முடியும்?

என் ஆன்மா வாடிச் சுருங்கி விட்டது.

உடல் அதற்கு அதி அகலமான ஓர் ஆடையாகி விட்டது.

நம்பிக்கை என்னிடம் திருப்பித் தரப்பட்டபோது போது

அது முழுக்க இன்னொரு நம்பிக்கையாய் இருந்தது.

நிச்சலன வாழ்வு

அப்பாவின் கை டீரேஜைச் சுற்றி வளைத்திருக்கிறது.

அவள் ஓரவிழியால் பார்க்கிறாள். என் கட்டைவிரல்

என் வாயினுள் உள்ளது. என் ஐந்தாவது இலையுதிர் காலம்.

செப்பு வண்ண பீச் மரத்தின் அருகே

ஸ்பேனியல்* நிழலில் அரைத் தூக்கம் போடுகிறது.

எங்களில் ஒருவர் கூட அவரின் விழிகளைத் தவிர்க்கவில்லை.

புல்வெளியின் குறுக்கே, முழு வெயிலில், என் அம்மா

அவளின் காமெராவின் பின்னால் நிற்கிறாள்.

* குறிப்பு: Spaniel – சுடப்பட்ட பறவைகளைத் தேடிப்பிடித்துக் கொணரப் பயன்படுத்தப்படும் ஒருவகை வேட்டை நாய்;  நீள் முடியும், தொங்கும் நீள் காதுகளும் உடையவை.

மாக் ஆரஞ்சு*

நிலவல்ல, சொல்கிறேன் கேள்,

இந்த மலர்களே

முற்றத்தை வெளிச்சமாக்குகின்றன.

அவற்றை வெறுக்கிறேன்.

கலவியை,

ஆணின் வாய்

என் வாயை இறுக்க மூடிச்

செயலற்றதாக்கும் அவன் உடலை –

எப்போதும் தப்பித்துச் செல்கிற ஓலத்தை

தாழ்ந்த, அவமானகரமான சேர்க்கையென்ற கருத்தினை

வெறுப்பது போல

அவற்றை வெறுக்கிறேன்.

இன்றிரவு என் மனதில்

கேள்வியும் பின் துரத்துகின்ற பதிலும்

கூடிக் கொண்டே இருக்கும்

ஒரு விநாடியில் கூடிப் பிறகு

பழைய சுயங்களாய்,

களைத்துப் போன முரண்பாடுகளாய்ப்

பிளந்து போவதைக் கேட்கிறேன். உங்களுக்குப் புரிகிறதா?

நாம் முட்டாளாக்கப்பட்டோம்.

மாக் ஆரஞ்சின் வாசம் ஜன்னலினூடே அலைந்து செல்கிறது.

எப்படி நான் சும்மா இருக்க முடியும்?

அந்த நாற்றம் உலகில்

இன்னும் இருக்கும் போது

எப்படி நான் நிறைவடைய முடியும்?

* குறிப்பு: ஆரஞ்சு அல்லது எலுமிச்சை மலர்கள் போன்று முதல் பார்வையில் தோன்றுவதாலும், ஆரஞ்சு மற்றும் மல்லிகைப் பூக்களின் மணமுடையதாலும் இப்பெயரால் குறிக்கப்படுகின்றன.

வீடு திரும்புதல்*

முற்றத்தில் ஓர் ஆப்பிள் மரம் இருந்தது-

அது நாற்பது வருடங்களுக்கு முன்பாக இருக்கும்.-

பின்புறம, புல்வெளிகள் மட்டும்.

கிராகஸ் பூக்களின் அலைவுகள் பதத்த புற்களிடையே.

அந்த ஜன்னலிடம் நின்றேன் நான்:

ஏப்ரல் கடைசி. வசந்த காலப் பூக்கள்

பக்கத்து வீட்டுக்காரரின் முற்றத்தில்.

என் பிறந்த நாளில்,

சரியாக, முன்னுமல்ல பின்னுமல்ல,

எத்தனை முறை உண்மையாக அந்த மரம் பூத்தது?

மாறிக் கொண்டிருப்பதின் பரிணாமமாகிக் கொண்டிருப்பதின் இடத்தில் மாற்றாக மாறாதது.

தொடர்ந்து கொண்டே இருக்கிற புவியின் இடத்தில் மாற்றாக பிம்பம்.

இந்த இடத்தைப் பற்றியும்,

ஒரு போன்சாய், டென்னிஸ் மைதானத்திலிருந்து எழும்

குரல்கள் எடுத்துக் கொண்ட

பல தசாப்தங்களாக இருந்த மரத்தின் பங்கினைப் பற்றியும்

எனக்கென்ன தெரியும்?

வயல் வெளிகள். புதிதாக வெட்டப்பட நெடும்புற்களின் மணம்.

ஓர் இசைக்கவிஞரிடமிருந்து ஒருவர் எதிர்பார்ப்பது போல,

உலகை ஒருமுறை மட்டும் தான் காணுகிறோம்,

குழந்தைப் பருவத்தில்.

மீதம் ஞாபகம்.

* குறிப்பு: பண்டைய கிரேகக இலக்கியங்களில் காவியத் தலைவன் கடல்வழி வீடு திரும்புதலைக் குறிப்பது. வீடு திரும்பப் பத்தாண்டுகளுக்குப் போராடும் ஒடிசஸைப் பாடும் ஹோமரின் ஒடிசியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தொலைநோக்கி

நீ உன் உன் விழிகளை அப்பால் நகர்த்திய பிறகு

நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதால்

எங்கு நீ இருக்கிறாய் என்பதை நீ மறக்கிற போது,

வேறெங்கோ, இரா வானின் நிசப்தத்தில்,

ஒரு கணம் நிகழ்கிறதென்று தோன்றுகிறது.

இவ் வுலகில் இருப்பதை நீ நிறுத்தி விட்டுள்ளாய்.

இருக்கிறாய் நீ வேறோர் இடத்தில்,

மனித வாழ்க்கைக்கு அர்த்தமில்லாத இடத்தில்.

ஓருடலுக்குள் இருக்கும் ஓருயிரி அல்ல நீ.

நட்சத்திரங்கள் நிலவுவது போலவே நிலவுகிறாய் நீ,

அவற்றின் நிச்சலனத்திலும், பிரம்மாண்டத்திலும்

பங்கெடுத்துக் கொண்டு.

பிறகு மறுபடியும் இவ் வுலகின் கண் நீ.

இராவில், குளிர்க் குன்றின் மேல்,

தொலைநோக்கியை பிரித்துப் போட்டு.

அதன் பிறகு நீ புரிந்து கொள்கிறாய்

உருவம் பொய்யென்றல்ல

உறவு பொய்யென்று.

நீ காண்கிறாய் மறுபடியும் எப்படி ஒவ்வொரு பொருளும்

மற்ற ஒவ்வொரு பொருளிலிருந்து எவ்வளவு தொலைவிலுள்ளதென்று.

தங்க லில்லி

நான் அவதானிக்கும் வேளையில்

இப்போது நான் இறந்து கொண்டிருக்கிறேன்.

மீண்டும் நான் பேசேன்,

மண்ணில் பிழைத்திருக்க மாட்டேன்,

மண்ணிலிருந்து மறுபடியும் வெளிவரப் பணிக்கப்பட மாட்டேன்

என்றறிவேன்.

இன்னும் ஓர் பூவாயல்ல,

பச்சைமண் என் விலா எலும்புகளைப் பற்றிக் கொண்டு

ஒரு முள்ளந்தண்டாய் மட்டுமல்ல

தந்தையே, தலைவரே

உன்னை அழைக்கிறேன்:

என்னைச் சுற்றி என் சகதோழர்கள் தவறுகிறார்கள்,

நீ காண்பதில்லையென்று நினைத்துக் கொண்டு.

நீ எங்களைக் காப்பாற்றினாலன்றி

எப்படித் தெரியும் அவர்களுக்கு

நீ காண்கிறாயென்று?

கோடையின் அந்தி வேளையில்,

உன் குழந்தையின் நடுக்கத்தைக் கேடபதற்கு

போதுமான நெருக்கத்தில் இருக்கிறாயா நீ?

அல்லது என்னை வளர்த்தெடுத்த தந்தையில்லையா நீ?


கவிதைகளின் மூலத் தலைப்புகள் வரிசைக் கிரமமாக:

 1. The  Wild Iris
 2. Snowdrops
 3. Parados
 4. Portrait
 5. Lullaby
 6. Cross roads
 7. The Garment
 8. Still Life
 9. Mock Orange
 10. Nostos
 11. Telescope
 12. The Gold Lily

இங்கிலிஷ் மூலம்: லூயிஸ் க்ளிக்

தமிழாக்கம்: கு. அழகர்சாமி

One Reply to “இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.