ருருவின் பிரம்மத்வாரா

மகாபாரதக் கதை

முனிவர் ஸ்தூலகேசரின் வளர்ப்பு மகள் பிரம்மத்வாரா தனது தோழிகளுடன்  நந்தவனத்திற்கு பூப்பந்து விளையாடச்சென்றாள். இன்று, அவளுக்கு   விளையாட்டில் ஆர்வம் எழவில்லை. அவள் மனம், அவள் அதிகாலையில் கண்ட கனவில் அவளை பொதிந்து பந்தென வானுக்கும் மண்ணுக்கும் அடித்து விளையாண்டது.  

அறியா ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்ற படபடப்பு நெஞ்சுக்குழிக்குள் நீர்க்குமிழிபோல் தோன்றி தோன்றி ஒலியின்றி உடைந்து கொண்டிருந்ததன் வலி அவள் கண்களில்.  தோழிகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு கடம்ப மரத்தடியில் அமர்ந்து இருந்தவள்,  அங்கு இருக்கவும் மனம் கொள்ளாமல், எழுந்து  பூக்களைச் சேகரிக்கத் தொடங்கினாள். 

அன்னம் நீந்தும் தடாகத்தில் தண்ணீர் அருந்த வந்த மான்கள்  அவளைப்பார்த்து “நம்மைபோல் சாயல்,  ஆனால் இரண்டுகாலில் நடக்கிறாள்.  “முன்னங்கால்கள் எப்படி கையானது?“ என்று தவித்து தனது முன்னங்கால்களை தண்ணீரில்  நோக்கி, பெரு மூச்சுவிட்டு தண்ணீர் ஒழுகும் வாயோடு தாவி ஓடியது. 

பவழத்தையும் முத்தையும் அள்ளித்தெளித்ததுபோல   மண்ணில் சிந்திக்கிடந்த பவழமல்லிகை மலர்மீது கால்படாமல் தாவித்தாவி நடந்து மல்லிகை பந்தலுக்கு சென்றாள்.  பவழமல்லிமரம் மாலையில் அலங்கரித்து ஆடிவிட்டு, காலையில் அணிகலைந்து எறிந்துவிட்டு   துயிலப்போகும் ஒரு இராத்திரிராணிபோல் நின்றது. அவள் அணிமணிகள் உதிர்ந்துகிடக்கும் இடமே அழகென்றால். அவள் அலங்காரத்தில் வாசப் பேரழகி. 

பிரம்மத்வாரா மல்லிகை பந்தலில் இருந்து ஒவ்வொரு மலராய் இதழ் கசங்கிவிடாமல் கொய்தாள்.  வழக்கமாக பூக்கொய்யும்போது மலர்களின் மணம் அவளுக்குள் ஏற்படுத்தும் ஆனந்தம் உற்சாகம் அவளையும் ஒரு மலரென மலர செய்துக்கொண்டே இருக்கும். அது அவளும் மலரும் ஒன்றென்று  உருகியிணையும் கணம். இன்று மலர்வேறு தான்வேறு என்பதுபோல் மலர் கொய்துக்கொண்டிருந்தாள். 

பிரம்மத்வாரா ஒரு மலரை கொய்து  அதனை தூக்கி தனது முகத்திற்கு முன்புப்பிடித்து    பெருமூச்சு விட்டாள். உடம்புசோர்வாக இருந்தது, மனம் கனத்ததில் மலரும்கனத்தது. என்ன செய்கின்றோம் என்ற நினைவின் தொடர் அறுந்து சூனியத்தில் நிற்கும் பதட்ட உணர்வு. தன்னை திரட்டி மீண்டும் பூக்கொய்யத் தொடங்கினாள். 

இன்று காலையில் கண்ட கனவு அவள் நெஞ்சில் தோன்றி தோன்றி கண்ணில் வந்து மோதிமோதி உலுக்கியது. ஏதெதோ எண்ணங்கள். விண்ணுக்கும் மண்ணுக்குமென ஆடும் கயிறற்ற ஊஞ்சல்.  அவள் இதயம் துடித்து நெஞ்சுவழியாக துள்ளிக்குதித்துவிட  விம்மி தணிந்தது. அந்த கணத்தின் கனம் பெரும் மலையென அவளை அழுத்த அருகில் இருந்த மகிழமரக்கிளைக்கொம்பில் பூக்கூடையை மாட்டிவிட்டு மரத்தடியில் தவிப்பொடு   உட்கார்ந்தாள்.   மகிழமரத்தில் இருந்து வழிந்த பூங்காற்று வாசவலைபோல விரிந்து  அவளை மீனென மூடி நெளிந்தது.   அவள் காலையில் தான் கண்ட கனவிற்குள் மூழ்கி ஆழ்ந்தாள்.

———–  

ஆதவனை வரவேற்க கீழ்வானத்தை வண்ணங்கள் அலங்கரிக்கும்   பிரம்மமுகூர்த்த வேளை. தனது குடிலில் பிரம்மத்வாரா துயில்விலகி கோரைப்பாயில் இருந்து எழாமல் மலர்க்குவியலென மனம்தெளிந்து கிடந்தாள். குடிலின் அருகில் ஓடும் நதியின் மெல்லிய நடையொலி அவள் செவியில் வந்து சினுங்கி செல்லமாய் பேசியது,   அவள் தாய் அவளை ஈன்று எறிந்தபோது    அன்னைமடியென தாங்கிய கரைகொண்ட நதி அது, அதன்சொல், கொஞ்சல்,பேச்சு, நகைப்பு, மந்தஹாசம், அட்டகாசம் சிலுசிலுப்பு சிரிப்பு எல்லாம் அவளுக்குள் நிரம்பி ததும்பி இருக்கிறது. அந்த நதியின் ஒவ்வொரு  ஓசைக்கும் அவள் பொருள் அறிந்திருந்தாள்.  

நதிக்கரையில் உள்ள மூங்கில்காடுகளில் காற்று நுழைந்து செல்லும் இசைஜாலம் .  குடிலைச்சுற்றி உள்ள சோலைகளில் இருந்து துயில் எழுந்த புள்ளினங்கள், கதிரோன் எழப்பாடும்  சந்தியாராகம். புள்ளினங்கள் சிறகு உதறி மொழிதெளித்து அருணனை ஆதவனை அனைத்திற்கும் மூலமான ஆதிமூலத்தை அலுக்காமல் ஒற்றை சொற்களால் அழைக்கின்ற கந்தர்வகானம். ஒற்றைச்சொல்லையே திருப்பித்திருப்பிச் சொல்லி   மந்திரமென ஆக்கும் ஆனந்த இசை.  

மயிலை. குயிலை சேவலை, மைனாவை, நீலக்குருவியை, கிளியை, செம்போத்தை, அன்றிலை  அதன் மொழிகளின் வழியாக மனதில் கண்டுக்கொண்டு இதழ்களில் புன்னகைவிரித்தாள். வண்ணமாய், மணமாய், யாழென முரலும் பொன்வண்டுகளை மனவிரல் நீட்டித்தொட்டு மகிழ்ந்தாள்.  நினைவில் எழுந்து அசையும் அவைகளின் விழிமணி அழகில், அவள்  விழிமலர் விரிந்து மலர்ந்து படபடத்தது. படுக்கையை விட்டு எழ மனமின்றி   கோரைப்பாயில் புரண்டு படுத்தாள்.  

நதியின் நடையும், காற்றின் இசையும், புள்ளினங்களின் கொஞ்சலும், வண்டுகளின் யாழோசையும்,   திருப்பள்ளி எழுச்சியென உள்ளத்தை நீவி, கன்னத்தைகிள்ளி,  இதழ் முத்தம் தாவென்றது.   இவை எல்லாம் அவளின் கானாத தாயின் திருப்பள்ளி எழிச்சிதானோ?. பெற்றத்தாயின் முகம் தெரியாததால் பெறாத பல்லூயிர் தாய்களின் துயில் எழுப்பல் கோலாகலம். 

பிரம்மாதியின் மகன் ருரு அவளுக்கென்று கட்டிக்கொடுத்த அழகிய மயிலிறகு விசிறி அவள் நெஞ்சருகில் கிடந்து அவள் கனிமுலைகளைப் தன் நீலக்கண்ணால் பார்த்தது. மயிலிறகு கண்களால் ருருவே அவளைப்பார்ப்பதுபோல்   நாணங்கொண்டாள். கைகளை நெஞ்சுக்கு குறுக்காகக் கட்டி ஆடைக்குள் கனக்கும் தாமரைமொட்டுகளை மறைத்து விசிறியைப்பார்த்து வெட்கமாய் புன்னகைத்தாள். விசிறியின் கைப்பிடியென அலங்கரித்த வெட்டிவேர் வாசம்   வாசத்துகில்போல் அவள் கூர்நாசியை வந்து வந்து கிள்ளித் தடவின. வாசலில் நிற்கும் மகிழமரம் பூவாசத்தை அள்ளி அள்ளி அவள் குடிலிக்குள் தெளித்து, ஆடைக்கு வெளியில் தெரியும் அவள் பாதத்தை தொட்டுத்தொட்டு  சிலிர்த்தன. விசிறியை எடுத்து இதழ் குவித்து முத்தமிட்டவள், விசிறியால் தனது முகத்திற்கு விசிறினாள். குளிர்விரல் தீண்டல். விசிறியின் நீலக்கண்கள் ருருவின் ஆயிரம் கண்கள் என அவள்முன் அசைந்தாடியது. விசிறியில் தன்  நுனியில் பவழம்பதிந்த சந்தனவிரலால் ருருவின் முகத்தை வரைந்து “நீலக்கண்ணா!“ என்று சிரித்தாள். 

தந்தை  அவளுக்கென்று உருவாக்கிய  தடாகத்தில் இருந்து இரவெல்லாம் மணம் வடித்த குமுதமலர்கள் முகம் மூடும் நேரம். கமலங்கள் மலர்ந்து வானுக்கு வாசம் முகம் காட்டும் பொழுது. 

அவள் துயிலும்போது அவள் கூந்தல் மண்ணில் புரளாமல் இருக்க, அவள் கூந்தல் துயில, ஒரு சக்கரவடிவ தலையணை செய்து தந்திருந்தான் ருரு. அவ்வளவு கூந்தல் அவளுக்கு. அதில் மல்லிகைப்பூச்சரம், மலை அருவி வழியும் ஓவியம்.  மலைக்குளத்தில் தேங்கிய நீலநீர் நிரம்பி ததும்பி அருவியென வழிவதுபோல அவள் கூந்தல் அவிழ்ந்து தலையணையில் இருந்து வழிந்து அவள் பாதத்தை பார்த்துவிடவேண்டும் என்ற பேராசையோடு ஓடியது. அவள் கோபுரக்கொண்டை போடும்போது பீடத்தில் நிறுத்தினாள். அவள்தான் ஆலவாய் அம்பிகை.  பார்த்தவிழிகள் கைகுவிக்கும், அவள் அழகில்,  குணத்தில், பண்பில், பெண்களில் பெரியநாயகி.

எழுந்திருக்கலாம் என்று நினைத்து எழுந்தவள், கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, மேலாடையை சரிசெய்துக்கொண்டு, மற்றொரு இறகு மெத்தையை இழுத்து அணைத்தபடி மீண்டும் படுத்தாள்.  இடையாடையை இழுத்து தொடையிடுக்கில் செருகிக் கையிரண்டையும் தொடையிடுக்கில் கும்பிட்டபடி வைத்து குட்டிமுயல்போல தோள்குறுக்கி  விழிமூடினாள். 

வானில் நகரும் கருமேகத்தின் குளிர் மூங்கில்கழி கதவிடுக்கில் வந்து அவள் தலைக்கோதி அவள் கூந்தல்கண்டு “நான் எப்படி இங்கு?“ என்று ஐயுற்று சுழன்று தெளிந்து “தூங்கடி என் கண்மணிச்செல்லம்“ என்று போனது.

பாயில் படுத்ததும் பிரம்மத்வாரா தூங்கிப்போனாள். அப்படி ஒரு தூக்கம் வருமா? மந்திரம் செய்து  தூக்கத்தில் ஆழ்த்தியதுபோல அந்த கனவைக்காணவே தூங்கிப்போனாள். அந்த கனவு அவளை தூங்கவைத்து தான் எழுந்துக்கொண்டது. கனவுப்போலவே இல்லை. விழிமுன் நிஜங்கள்  நின்று நடிப்பதுபோன்ற காட்சிகள். 

தாமரைக்குளக்கரையில் பொன்பூக்கள் மலர்ந்த விருட்சத்தின் அடியில்  பிரம்மத்வாரா தோழிகள் உடன் பூப்பந்தாடிக்கொண்டு இருக்கிறாள். அவள் அடித்த பூப்பந்து எழுந்து வான்னோக்கிச் சென்றுக்கொண்டே இருந்தது. “வானில் இருக்கும் என் தாயைப்பார்த்து திரும்பி வரும்“ என்று அவள் தோழிகளைப்பார்த்து கைக்கொட்டி சிரித்தாள். அருகில் இருந்த வாசமலர்களைப்பறித்து மெத்தையென இட்டு அதில் படுத்து துயிலத்தொடங்கினாள். 

தோழிகள் வேறு ஒரு பூப்பந்தை உருவாக்க பூப்பரிக்க சென்றார்கள்.   மலரில் தேன்தேடிய தும்பி ஒன்று அவள் இதழருகே வந்து வட்டமிட்டு அமரப்போனது. அவள் மூச்சுக்காற்று பட்டதும்  தும்பி சிலிர்த்து சித்தம் நின்று உழல சிறுகண்ணால் மலரையும் அவள் இதழையும்  நோக்கி நோக்கி ஒரு குட்டிக்கரணம் அடித்து “எது பூ? எது அவள் இதழ்?“ என்று அறியாமல் மயங்கி. இங்கு இருக்கவே கூடாதென்று பறந்து காணாமல் போனது.  

துயிலும்போதும் அவளால்  நன்றாக பார்க்கமுடிந்தது. தோழிகள் அவளைச்சுற்றி நின்றுக்கொண்டு “பந்து கிடைத்துவிட்டது, எழுந்துவா விளையாடுவோம், எழுந்துவா“ என்று கூச்சல் இடுகிறார்கள். அவள்  இதழ்களில் புன்னகை மலர்ந்தபடி இருந்தது. அவள் படுத்தப்படியே மலர்மரக்கிளையைப் பார்த்தாள். 

கிளைமுழுவதும் பொன்வண்ணப்பூக்கள். அவைகள் ஆண்டாண்டு காலமாய்  வாடாத உதிராதப்பூக்கள். அவள் கணுக்காலில் பூவெரும்பு ஒன்று கடிக்கும் சுரீர் வலி. அவள் வலியை பொருட்படுத்தாமல் அந்த மரக்கிளை மலர்களையே பார்த்து படுத்துக்கிடக்கிறாள். பித்தேறும் மலர்மணம் அவள் நாசியில் நுழைந்து அவளை மயங்கவைக்கிறது. மரக்கிளையில் இருந்து பொன்னிதழ் மலர் ஒன்று அதன் காம்பில் இருந்து கழன்று அவள் காலடியில் பொத்தென்று மண்ணில் விழுந்துவிட்டது.    

“ஆ” என்று திடுக்கிட்டு பதறுகின்றார்கள் பார்த்தவர்கள். வாடாத உதிராத அழகிய மலர்   விழுந்துவிட்டதே என்று   ஏங்குகின்றார்கள் சிலர். என்ன செய்வது என்று அங்கும் இங்கும் ஓடி  தவிக்கிறார்கள் சிலர். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லாம் அந்த மரத்தடியில் கூடி  கண்ணீர் சிந்துகிறார்கள். 

பிரம்மத்வாராவிற்கு மட்டும் கண்ணீர் வரவில்லை, ஆனால் எதையோ இழந்ததுபோல் தவிக்கிறாள். யாரையோ கூவி அழைக்கிறாள். தான் அங்கு இருந்தாலும் அங்கு இல்லாததுபோல் தோன்றியது.     

ஒரு சிறு வெண்புழு உயிர் உருகும் வலியோடு  அங்கு வந்தது.  அவளுக்கு அதன் பெயர் தெரியும். பெயர் சொல்லி  அழைக்கிறாள். அவள் வார்த்தைகள்  சத்தமாக ஒலிக்கிறது. ஆனால் யாருக்கும் அவள்   குரலோசைக் கேட்கவில்லை. 

புழு அந்த பூவைப்பார்க்கிறது. அந்த பூவிருந்த மரத்தைப்பார்க்கிறது. மரத்தில் பூ இல்லாத  காம்பைப்பார்க்கிறது.  எல்லோரும் அந்த பூவை நினைத்து ஏங்கி அழுகிறார்கள். புழு ஏதோ சொல்கிறது. எல்லோரும் திகைக்கிறார்கள். சிலர் விழிவிரிய சிலையாக நிற்கிறார்கள். சிலர் பூவைவிட்டுவிட்டு அந்த புழுவுக்காக  பரிதாப்படுகிறார்கள். 

வெண்புழு துள்ளித்துள்ளி நகர்ந்து நகர்ந்து பெரும் காட்டின் இருட்டுக்குள் மூழ்கி மறைந்தது.   தனிமையை நாடி ஓடும் அந்த புழுவை  அவள் தொண்டை வலிக்கும் அளவுக்கு பெரும்சத்தமிட்டு பேர்சொல்லி அழைத்தாள்.  அதன் காதில் அவள் அழைப்பு விழவேயில்லை. 

அவளுக்கு தெரிந்துவிட்டது. அது புழுவல்ல அவளுடைய இதயம் கவர்ந்த ருருதான்.  “ஒ! என் உயிரே! ருரு!   என் மணவாளா!  நான் இங்கே, நான் இங்கே, நீ எங்கே?. என்னைவிட்டுவிட்டு எங்கே போகின்றாய்“ என்று புலம்புகின்றாள்.    

நதியில் நீராடி, முதல் கதிர் எழும்வேளை, கதிரவனை நற்சொல்தூவி வாழ்த்தி வணங்க துயில் எழுந்த   பிரம்மத்வாராவின் தந்தை முனிவர் ஸ்தூலகேசர் குடில் வாசலில் நின்று, மகளின் துயிலில் உளறும் ஒலிக்கேட்டு “மகளே! என் பிரிய மகளே!  பிரம்மத்வாரா, துயில் எழம்மா, ஏதேனும் கனா கண்டாயா?“ என்றார் பரிவுடன். 

பிரம்மத்வாரா திடுக்கிட்டு எழுந்து. கனவில் போட்ட சத்தத்தை நினைத்து வெட்கப்பட்டு “ எழுந்துவிட்டேன் தந்தையே“ என்றாள். அந்த குளிரிலும் அவள் முகத்தில் பன்னீர் துளிகள். 

தாயால் கைவிடப்பட்ட அவளைத் தூக்கிவளர்த்த முனிவர் ஸ்தூலகேசரே   அவளின் தாயும், தந்தையும், குருவும், தெய்வமும். அவர் பாதத்தை நோக்கி தனது கைகளைகுவித்து அதில் மனதால் தலைவைத்து வணங்கியவள், தனது முகத்தை முந்தானையால் ஒற்றியபடி எழுந்து கடமையை செய்யத் தொடங்கினாள். 

“எனக்கு என்ன? ஏன் என் பிரிய ருரு என்னைவிட்டு புழுழுவாக மாறி ஓடுகின்றான். இந்த கனவின் அர்த்தம்தான் என்ன? யாரிடம் கேட்பேன்“  அவள் பயத்தால் தவித்தாள். காரணம் இன்றி கண்கள் அடிக்கடி நனைந்தது.  காலையில் இருந்து அந்த கனவு அவளை அலைகழிக்கிறது. தோழிகளிடம் சொல்ல கூச்சமாக இருந்தது. “அர்த்தமில்லா கனவுக்கு அர்த்தம் தேடி. பெரும்பாலையில் அலைகிறேனோ?“ கனவை உதற முயற்சித்தாள், அவளால் முடியவில்லை. கனவு அவளை வாகனமாக்கி பயணம்போனது. “தந்தையிடம் கேட்டாள் என்ன?“ கனவின் நினைவில் இருந்து விடுபட்டு,  தந்தையின் ஞாபகத்தில் ஆழ்ந்தாள். 

இல்லறம் பந்தத்தை உருவாக்கும், பந்தம் பிரமத்தை அறிய தடையாக நிற்கும் என்பதை விவேகத்தால் உணர்ந்து,  வைராக்கியத்தால் துறவறத்தில் நிற்கும் தந்தைக்கு தான் பந்தத்தை உருவாக்கிவிட்டதை நினைத்து வருந்திய பிரம்மத்வாரா, ஒருநாள் “தந்தையே! என்னால் அல்லவா உங்கள் துறவறம் இல்லறமாக இருக்கிறது“ என்று கண்ணீர் சிந்தினாள். 

பிரம்மத்வாராவை கனிவுபொங்க தனது சுடர் விழிகளால் பார்த்த முனி தந்தை “அன்பு மகளே! அதோ அது என்ன?“ என்றார். 

தந்தையின் விழி ஒளிமங்கி பார்வை பழுதுபட்டுவிட்டதோ என்று ஐயுற்ற அவள், கணநேரத்தில்  தெளிந்து, தந்தை கேட்பதில் ஏதோ பொருள் இருக்கும் என்று உணர்ந்தவளாய், குடிலுக்கு அருகில் ஓடும் நதியைத்தாண்டி, மதயானைக்கூட்டம்போல் நிற்கும் அந்த மலையைப் பார்த்து  “நற்தந்தையே! அது மலை“ என்றாள். 

“மலை எதனால் ஆனது, என் அன்பு மகளே“

“கல்லால் ஆனது தந்தையே“

“கல்லில் விதை முளைக்குமா?“

அவள் மெல்ல இதழ்மலர “கல்லில் எப்படி விதை முளைக்கும் தந்தையே? என்றாள் குரல் குழலாக. 

“அதுதான் இயற்கை, இயற்கைக்கும் இயற்கையான இறைவன் எதுவும் செய்வான். கல்லில் விதைமுளைக்காது. ஆனால் மலையில் புல் முதல்     வான்தொடும் பெரும்மரங்கள்வரை முளைக்கும்” என்றார் விழி அகல்விழி அன்னையென சுடர்உருகொள்ள.

அவள் உள்ளம் பொங்க, மீண்டும் மலையை விழி விரியப்பார்த்து, ஆனந்தம் ததும்ப, கைகளை விரித்து தட்டுதுவதுபோல கொண்டுவந்து தந்தையை கும்பிட்டப்படி இருந்தாள். 

“துறவறம் என்பது கல்லாவது, கல்லென்பது ஒரு துளிதான், இறைவன் என்னை மலையாக்க உன்னை என்னில் வளரவைத்து மலரவைக்கிறான். நீ என்வாழ்வில் வரவில்லை என்றால் கனியா மரமென நின்று இருப்பேன், மரம் எரிந்தும், மண்ணுக்குள் எரியாத வேர்போல பாதி தவத்தில் முட்டி முறிந்திருப்பேன். நீ வந்ததால் அறுவடை செய்தாலும் வாசம்வீசும் வெட்டிவேராக ஆகின்றேன். வெறும் ஞானம் செமிக்கமுடியாத பறவைகள் விழுங்கிய விதைபோன்றது, அது எங்காவது முளைக்கலாம், ஆனால் அமுதாகாது.   பிரேமையும் சேர்ந்த ஞானம்தான்  அமுதம். நீ என்னை  அமுதமாக்க வந்தவள்“ என்று சற்று மௌனமாக இருந்து, தூரதுரம் விழியின் ஒளிபடர நோக்கி, பின் வானம்பார்த்தவர். “நீ என்னை தாயுமானவன் என்று ஆக்கியவள்“ என்று நெஞ்சில்வழியும் வெண்தாடி அலையடிக்க சிரித்தார். அந்த கணத்தில் அவள் தன்னை தாயாக உணர்ந்தாள். அமுதுபடைக்க எழுந்தாள். 

அவள் வளர்க்கும் வெண்பசு   மயிலைகன்று ஈன்றது. அந்த கன்று தாயை   விட்டு அகலும் ஒவ்வொரு கணமும், அந்த தாய் உடல் அதிர, உயிர் உருகியோடும் வலியென தவித்தது, அடிவயிறு முதுகொடு ஒட்ட, வயிற்றை காற்று ஊதியென சுருக்கி சுருக்கி, மடியை எக்கி எக்கி, காம்பு விறைக்க,   ஈரல்கொத்து கொதிக்க, உலைமூச்சு விட்டு, உலகத்தையே முட்டி புரட்டிவிடுவதுபோல கயிற்றை அறுக்க கொந்தளித்து,  தறியை புழுதிப்பறக்க அதிர மிதித்தது. அது தாய்பாசம். தாயிக்கு மட்டுமே உரிய வாச்சல்யம். அது தாயிக்கே உரிய ரௌத்ரம். அதைப்பார்த்த அன்று நெஞ்சு கொதிக்க கண்கள் சிவக்க கண்ணீரோடு “தந்தையே!  என்தாய் என்னை நாதியின்றி நதிகரையில் விட்டுப்போனாள். வற்றாதநதியின் கரையில் அவள் நெஞ்சு வறண்டுபோன மாயம் என்ன?“

ஸ்தூலகேசர் எரிந்தபின்னும் தடியென இருக்கும் வைரக்கோல்போன்ற தனது கரத்தால் அவள் விழிநீரைத்துடைத்துவிட்டு வெகுநேரம் மௌனமாக இருந்தார். அவளும் மௌனமாக இருந்தாள். அந்த மௌனமே அரும்பெரும் வார்த்தைகளாக அர்த்தங்களாக பொருளாக அந்த இடத்தில் மலர்ந்தது. மனம் லேசாகி பிரம்மத்வாரா “மன்னியுங்கள் தந்தையே!“ என்று எழுந்து பசுவுக்கு   தண்ணீர் காட்டி புல்வைக்கப்போனாள். 

“மகளே! பிறரை மயக்க நினைப்பவர்கள் தானே மயங்கிப்போகிறார்கள், மயக்கம் தெளியும்போது பரிசுகள் சுமைகளாகி, புதிய பயணத்திற்கு தடையாகிவிடுகின்றன, அதனால் பரிசுகளை குப்பையென தூர எரிந்துவிடுகிறார்கள்.  உன் தாய்கூட மயக்கவந்து மயங்கிப்போன மேனகைதான். அந்த மயக்கத்தின் பரிசு நீ. அவளுக்கு குப்பை, எனக்கு வைரம்“ என்றார். 

பிரம்மத்வாரா நெஞ்சுவலிக்க,  உள்ளம் தவிக்க, சிலைபோல நின்றாள், அவள் கைகால்கள்  நடுங்கியது, உணர்வு வர உடல் அதிர்ந்து, முகதசை இழுபட, உலைமூச்சு ஒன்றை வெளியேற்றி, இமைகள் படபடக்க முகம் திருப்பி தந்தையைப்பார்த்தவள் மெல்ல சிரித்தாள். அந்த சிரிப்பில் ஜீவன் இல்லை. நன்றி இருந்தது. அவர் கண்களால் மகளை வருடி “அன்பு மகளே! போய் கடமையை செய்“ என்பதுபோல் தலையசைத்தார். 

தாயை விட்டு பிரிந்து தூரத்தில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த   கன்று தாயின் காலில் வந்து படுத்திருந்தது. உயிரை நக்கி நக்கி சுவைப்பதுபோல தாய் கன்றை நக்கிநக்கி சுவைத்து கண் சொக்கியது. தாயின்  அடிவயிறு பாசத்தில் எம்பி எம்பி நீர் நிறைந்த தோல்பையின் அலைபரப்பென அதிர்ந்துகொண்டிருந்தது. பசுவின்  பால்மடிக்காம்புகள் சுரந்து பெருத்து நீண்டன.

———————-

செவ்வரலிச்செடியில் மலர்கொய்துக்கொண்டு இருந்த தோழி மீனலோட்சனியின் அழைப்புக்குரலால் நினைவலை இழுப்பில் இருந்து விடுபட்ட பிரம்மத்வாரா தனது பூக்கூடையை எடுத்துக்கொண்டு அவள் அருகில் போனாள்.  காற்றில் அசையும் தென்னஞ்சோலையில் அமர்ந்திருந்த ஜோடிக்கிளிகள் தங்கள் மரகத மூக்குகள் உரச கொஞ்சும் காட்சியை சுட்டிக் காட்டி “ எங்கே உன் இதயக்கிளி?“ என்றாள். 

பிரம்மத்வாராவின் சந்தனமேனியில் தங்கத்தாதுக்கள் வெடிப்பதுபோல மினுமினுப்பு. கன்னம் சிவக்க, மூக்கு விடைக்க, கண்கள் மயங்க, கால்கள் தள்ளாட, அருகில் இருந்த பூங்கிளையை பற்றிக்கொண்டு  பொய்க்கோபத்துடன் “இறைவனுக்கு பூப்பறிக்கும்போதும் இதுதான் நினைப்பா?“ என்று முறைத்தாள்.  

அந்த கண்களில் அத்தனை கோபத்திற்கு பின்பும் காதல்தான் இருந்தது.  மீனலோட்சனி அதைக்கண்டு, உதடு குவித்து, அவளுக்கு அழகு காட்டி“உலகு முழுதும் இதுதானே நிறைந்து இருக்கிறது, இது உயிர்களின் சிவசக்தி நடனம். அதோ பார்” என்று சிரித்தபடி அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் ஆண்மயில் தோகைவிரித்து ஆடி, தனது பேடையை உடல்சிலிர்க்க வைத்தது. அங்கிருந்த ஆலங்கிளையில் வால்தொங்க உட்கார்ந்திருந்த மந்தி தனது மடியில் கிடக்கும் துணைக்கு பேன்பார்த்தது. விலாமரத்தில் வந்து அமர்ந்த கருங்குயில் கூவியதும் அதன் துணை தூரத்தில் இருந்து உயிரை கரைத்து பதிலுக்கு இசைத்தது.   வனத்தையே தன்பழ வாசத்தால் நிறைத்து, வான்தொட வளர்ந்து நின்ற பலாமரத்தில் பழுத்திருந்த கனிகளை உண்ணவந்த   பிடியின் தும்பிக்கைக்கு எட்டாத கனியை, கொம்பன் மரத்தை இடித்து உலுக்கி உதிர்த்தது. தனது காலுக்கு கீழே கொட்டிக்கிடக்கும் பழங்களில் ஒரு  பெரிய பழத்தை, தனது தும்பிக்கையை நீட்டி ஒரு  இனிப்பு உருண்டையென     எடுத்து  பிடியின் வாயில் வைத்து ஊட்டியது.   

பிரம்மத்வாரா அவளை அடிப்பதுபோல் கையை நீட்டியாட்டிவிட்டு, தூரத்தில் இருந்த நாகலிங்க மரத்தை நோக்கி வேகமாக நடந்தாள், ஆனால் கால்கள் ருருவின் ஞாபக்தில் கனமாகி மெதுவாக நடக்கவைத்தது. தோழி இன்னும் ருருவைப்பற்றி ஏதேனும் பேசமாட்டாளா? என்று ஏங்கியபடியே போனாள்.   அவள் மலர்ச்செவி   அவளைப்பின்னுக்கு மீனலோட்சனியிடம் இழுத்தது.  கண்களில் மெல்ல ஈரம்படிய முந்தானையால் துடைத்துக்கொண்டாள். அவள் நெஞ்சுக்குள் ருரு  எழுந்து அமர்ந்து கனத்தான்.

பிரம்மாதியின் மகன் ருரு தந்தையிடம் கற்றுப்பெற்ற வேதப்பாட வைரங்களை ஸ்தூலகேசரை குருவாகக்கொண்டு பட்டைத்தீட்டி ஞானாரண்யத்தின் ஒளிதீபமென சுடர்விட வைத்தான். குருவின் இதயபீடத்தில்  நின்று ஒளிரும் முதன்மைசீடன் அவன். அழகும் நற்பண்பும் உயர்குணமும் கொண்ட பிரமத்வாராவை  முதல்முறைப் பார்த்ததும் “என்னுயிரே!“ என்று காதலில் விழுந்தான்.   

பிரம்மத்வாராவிற்குள் பிரியம் பிரியமாக தன்னை பதியம்போட்டு பிரேமை வனமாகி  பூத்து நிற்பவன்.  பிரம்மத்வாராவிடம் சொல்லவில்லை. குருவிடம் சொல்லவில்லை. தன் தந்தையிடமும் சொல்லவில்லை. ருருவின்   அகநக   நட்பு செய்யும் நண்பர்கள், அவன் அகம் அறிந்து அவன் தந்தையிடம் சொன்னார்கள். அவரும் ருருவிற்கு பிரம்மத்வாராவை மணம்பேசி முடிக்க  ஸ்தூலகேசரிடம் நடையாக நடந்தார்.  ஏனோ ஸ்தூலகேசர் மௌனம் சாதித்தார். 

பிரம்மாதி நூறுமுறை சென்றும் சம்மதம் பெறமுடியாமல் திரும்பினார். “ஆயிரம் முறைப்போய் சொன்னால் இந்த திருமணம் நடக்குமோ?“ பிரம்மாதியும் மகனுக்காக நடந்துக்கொண்டே இருந்தார்.  

ருரு பிரம்மத்வாராவிடம் பழகுவதை குரு தடுக்கவில்லை. அவள் மீது அவன் கொண்ட அளவற்ற காதலை அறிந்தே இருந்தார். மகளிடமும் அவர் கோபம் கொள்ளவில்லை. ருருவைவிட நல்லதொரு மணமகனை அவர்  தேடவும் இல்லை.   ஏன் இந்த மௌனம்?

குருவின் பாதம்பணிந்த ருரு, தன்னையும் தந்தையையும் மன்னிக்கும்படி வேண்டினான். அவர் பாதத்தில் கண்ணீர் துளிகள் சிந்தி, அவரின் மௌனத்திற்கு காரணம் கேட்டான். “வேறு நல்ல பெண்ணை தேடி மணம்முடித்து சிரஞ்சீவியாக வாழ்க“ என்று அவன் முகம்பார்க்காமல் ஆசிவழங்கினார். அதை சொல்லும்போது அவரின் தொண்டை நரம்புகள் ஏறி இறங்கின. கண்களில் பனிநுண் துகள்கள். தலையை வான்னோக்கி உயர்த்திக்கொண்டார். 

குடிலுக்குள், நெய்யில் வறுத்த பருப்புகளை திணைமாவில் தூவி,  காச்சிய கருப்பஞ்சாற்றை  அதில் ஊற்றி, தேன் பெய்து  பிசைந்து, திணைமாவை  உருண்டையாகப் பிடித்துக்கொண்டிருந்த பிரம்மத்வாரா கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. கண்ணீர் திணைமாவில் விழாமல் இருக்க முகத்தை திருப்பிக்கொண்டாள். 

“குருவே! காரணம் இல்லாமல் நீங்கள் மௌனம் கடைபிடிக்கமாட்டீர்கள். தயவு செய்து எளிய என் மனம்தெளிய மௌனம் கலையுங்கள்“  என்றான். அவர் பாதத்தில் அவன் முகம் புதைந்தபடி இன்னும் இருந்தது. 

குனிந்து அவன் தோளை தொட்டு எழுப்பி உட்காரச்சொன்ன குரு“மைந்த! நீ என் சீடன் மட்டும் அல்ல மகனும்கூட, மகன் கருவில் இருந்து பிறக்கிறான். சீடன் கல்வியில் இருந்து பிறக்கிறான். மகன் உடம்பால் உருவானவன்.   சீடன் அகத்தால் உருவானவன்.  பிரம்மத்வாரா என்வளர்ப்புமகள் அதனால் நீ அவளை   மணக்க தடையில்லை. ஏதோ ஒன்று நீ அவளை மணக்க தடை செய்கிறது, அது உனக்கு விடைகொடுக்க என்னை விடவில்லை மைந்தா!“ என்றார். அவர் கண்களிலும் கண்ணீர். மனிதனாகப்பிறந்தால் ஞானியையும் காலம் கண்ணீர் குடிக்க வைக்குமோ?

“மன்னிக்கவேண்டும் குருநாதா! நான் அடம்பிடிப்பதாய் எண்ணி முனிந்துவிடாதீர்கள். உங்களுக்கு காரணம் தெரியும். தயவு செய்து சொல்லுங்கள். காரணம் தெரியாவிட்டால் என்னால் முழுமையை நோக்கி பயணப்படமுடியாது.  பிரம்மத்வாரா தவிர என்வாழ்வில் இல்லறத்துணையென இடம்பெற இன்னொரு பெண்ணுக்கு இடம் இல்லை. பிரம்மத்வாராவை மணந்து தந்தைபோல் இல்லறம் செய்ய நினைத்தேன். முடியவில்லை என்றால் உங்களைப்போல துறவறத்திலேயே நின்றுவிடுகின்றேன். தயைகூர்ந்து காரணத்தை மட்டும் சொல்லுங்கள்“ மீண்டும் அவர் பாதத்தில் தலைவைத்தான். 

ஸ்தூலுகேசர் தொடுவானத்தை நோக்கியபடி மௌனமாக உட்கார்ந்து இருந்தார். ருருவும் அவர் மௌனத்தை கலைக்க முயலவில்லை. எழுந்து செல்லவும் மனம் இல்லை. அங்கு மௌனம் சொட்டிச்சொட்டி அவர்களுக்கு இடையில் பெரும் சுவரென எழுந்தது. குடிலின் கூரையில்  உட்கார்ந்து இருந்த ஆண்மயில் அகவல் ஒலி உயிரை சுண்டியது.  

ருருவின் தந்தை பிரம்மாதி வந்து ஸ்தூலகேசரை வணங்கினார். ருரு எழுந்து குருவையும் தந்தையையும் வணங்கிவிட்டு, பிரம்மத்வாரா இருக்கும் குடிலை நோக்கி நடந்தான். குடிலின் வாசலில் நின்று, கண்ணீர் ததும்பும் அவள் முகத்தையே கண்ணீர்வழிய பார்த்தபடி  எதுவும் பேசாமல் சிலையெனநின்றான். மூங்கில் காடுகளில் பொறிக்கி எடுத்த முத்துக்களை கோத்து செய்த முத்துமாலையையும், அவளுக்காக அவன் எழுதிய கவிதை ஒலையையும் அவளிடம் கொடுத்துவிட்டு, அவள் கொடுத்த திணைமாவு உருண்டையை  வாங்க மனமின்றி, தனது குடிலுக்கு தாயைப்பார்க்க நடந்தான். பிரம்மத்வாரா நெஞ்சு உடையும் வலியோடு விசும்பினாள். 

ஸ்தூலகேசர் பிரம்மாதியிடம் “அன்பானவரே! நீங்கள் அறியாதது அல்ல, இருந்தும் ஏன் இந்த சிறுபிள்ளை அடம். தந்தையாக நீங்கள் ருருவிடம் சொல்லக்கூடாதா?“ என்றார்.

பிரம்மாதி தனது மடியில் வைத்திருந்த ஓலைச்சுவடி நூல் ஒன்றை எடுத்து ஸ்தூலகேசரிடம் கொடுத்துவிட்டு அவர் அருகில் இருந்த புல்லாசனத்தில் அமர்ந்தார்

மகன் பிரம்மத்வாராவிற்கு முத்துமாலையும், கவிதையும் கொடுப்பதைப்பார்த்தபடி “ஞானச்சுடரே! கழையின் கயிற்றில் நடப்பவன் பயணம் எந்த ஊருக்கும் செல்வதில்லை. ஆனாலும் அந்த பயணம் நடந்துக்கொண்டுதானே இருக்கிறது“ என்றார்.  

ஸ்தூலகேசர் மௌனத்தில் ஆழ்ந்தார்.

பிரம்மாதி அதிராமொழியில் “ஊழின் பெரும்நாடகத்தை சிறுதிரைப்போட்டு மூடிவிட நாம் யார்?. நீங்கள் மகள் பற்றால்தான் இத்தனை நாளாய் மௌனம் சாதிக்கின்றீர்கள் என்று நினைத்தேன். இல்லை. உங்களுக்கு சீடன் பற்று.   அந்த மாயத்திரையை அறுத்துப்போடுங்கள்“ என்றார்.   

“பெரியவரே! இ்ந்த திருமணம் நடந்தால் என்னைவிட இன்புறுபவர் வேறுயார்? பிரம்மத்வாரா..”  என்று  ஏதோ சொல்லவந்தவர் குடிலில் பிரம்மத்வாரா இருப்பதைப்பார்த்ததும் “தயவு செய்து என்னை பேசவைக்காதீர்கள்“ என்றார். 

“தனது நற்குணத்தாலும். அழகாலும், பண்பாலும் அனைத்து பெண்களிலும் மேலானவள் என்று பெயருக்கு தகுந்தபடி இருக்கும் பிரம்மத்வாராவைத்தவிர அவன் வேறு ஒரு பெண்ணை மணப்பானா?. அவன் இதயமும் உயிரும் அவனுக்கு உரியவளை கண்டடைந்து அதில் கலந்து கரைந்துவிட்டது, இனி நம்மால் அவனை தடுக்க முடியாது முனிவரே. அப்படிச்செய்தால் அவன்   உயிரற்றவன் மட்டுமே“ என்றார்.

“வருங்காலத்தில்” என்று ஸ்தூலகேசர் தொடங்கிய உடனே  “மன்னிக்கவேண்டும் நண்பரே! வருங்காலத்தில் நுழைய நாம் யார்?“ என்றார் பிரம்மாதி சற்று கடுமையாக.      

“நீங்கள் சொல்வது சரிதான். படைத்தவன் நடத்தும் நாடகத்தில், நாம் நடிக்கவந்துவிட்டு, நாடகத்தை திருத்திக்கொண்டு இருப்பது வீண்“ என்றவர்,   “வரும் பூராடம் விண்மீன் நாளில் ருருவிற்கும் பிரம்மத்வாராவிற்கும் திருமணம்செய்வோம்“ என்றார். 

இந்த நற்செய்தியைக் கேட்ட பிரம்மத்வாராவின் இதயம் ஆனந்தத்தில் துள்ளி மலர்ந்தது. வாசல்வழியே தொடுவானத்தைப்பார்த்து “தெய்வமே!” என்று விழிமூடினாள். விழிநீர் துளி அவள் கன்னத்தில் வழிந்து உதட்டில் இறங்கி தித்தித்தது.

கண்ணீரோடு நடந்த ருரு ஒரு பொன்கொன்றை மரத்தடியில் மனம்சோர்ந்து நிற்க, அக்கணம் பார்த்து மெல்ல வீசிய தென்றலில் அசைந்த பொன்கொன்றை சரம்,  அவன் சிரசில் பூவை உதிர்த்து மணத்தை தெளித்தன.  அவன் தன்னையும் மீறி மகிழ்ச்சியில் கண்ணீருடன் சிரித்தான். அப்பவே அவனுக்கு பிரம்மத்வாராவைப் பார்க்கவேண்டும்போல் தோன்றியது. அப்பாவின் நடைக்கு நிச்சயம் பயன்கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது. அப்பாவை     நன்றியோடு  மனதிற்குள் வணங்கி தனது குடிலுக்கு நடந்தான். தூரத்தில் கனிமரத்தில் இருண்டு மணிப்புறாக்கள் ஒன்றை ஒன்று கழுத்து வளைத்து அணைத்து மகிழ்வதைப்பார்த்து புன்னகைத்தான். 

அன்று இரவே பிரம்மாதி, ருருவுக்கும் பிரம்மத்வாராவிற்கும் திருமண  ஒப்பந்தவிழாவை சுவஸ்த்யதிரேயா, மஹாஜனா, கௌசிகா, சங்கமேகலா, உத்தாலகா, கதா, அனைவரும் அறிந்த ஸ்வேதா, பரத்வாஜா, கௌனகுத்ஸியா, அர்ஷ்டிசேனா, கௌதமா போன்ற சான்றோர்கள் ஆசியளிக்க, சுற்றமும் நட்பும் வாழ்த்த,  திருமண ஒப்பந்தவிழாவை ஊரறிய கலை இரவாகக் கொண்டாடினார். 

——————–

நாகலிங்க மரத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்த பிரம்மத்வாராவை தடுக்க நினைத்த மீனலோட்சனி “பிரம்மத்வாரா! அங்கே தனியாகப்போகதே, இங்கே வா“ என்று சத்தமாக அழைத்தாள். அவள் அழைப்பு அவள் செவியில் விழவில்லை. 

ஒட்டியாணம் கட்டிய நங்கைபோல்  மரத்தின் மத்தியில் மலர்ந்த நாகலிங்க பூக்களை தாங்கி நின்ற நாகலிங்க மரத்தின் அடியில் நின்ற பிரம்மத்வாரா, அந்த மலரின் அழகில் சிவசிந்தனை ஏற்பட்டு பரவசமானாள்.  .  அவள் காலில் சுரீர் என்று ஒரு முள் குத்திய வலி. கால்நரம்பு இடைவரை இழுத்து வலித்தது. வலியுடன் திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தவள் கண்களில்   புதருக்குள் நழுவி மறையும் அந்த பெரும்நாகம் பட்டது. 

“பாம்பு கடித்துவிட்டது“ என்று குரல்கூட எடுக்கமுடியாமல் பிரம்மத்வாரா மயங்கி விழுந்தாள். அவள் கையில் வைத்திருந்த பூக்கூடையில் இருந்த மலர்கள்  அவள் மேலேயே சிந்தி அவளை பூவால் மூடியது. வலியால் துடிதுடித்து அவள் மெல்ல இறந்தாள். மீனலோட்சனி பதறி கண்ணிரோடு அலறி அழைக்க தோழிகள் ஓடிவந்தார்கள். ஸ்தூலகேசர் உடல்அதிர உயிர் உருக துடித்து வந்தார். பாறையில் நீர்வழியும் கோலம். அருகில் வசித்த குடிலில் இருந்தவர்கள்   எல்லாம் வேதனையில் வாடி வருத்தத்தோடு வந்தார்கள். 

பிரம்மத்வாரா இறந்தபின்பும், தனது அழகுபெருகிமிளிர தாமரை கொடிமலர்  கரையில் கிடப்பதுபோல இறந்து கிடந்தாள், பீடத்தில் இருந்து நழுவிய பொற்சிலை  புல்லில் கிடப்பதுபோல   தோன்றினாள். துயில்கின்றாளோ? 

சுவஸ்த்யதிரேயா, மஹாஜனா, கௌசிகா, சங்கமேகலா, உத்தாலகா, கதா, அனைவரும் அறிந்த ஸ்வேதா, பரத்வாஜா, கௌனகுத்ஸியா, அர்ஷ்டிசேனா, கௌதமா, மற்றும் அந்த ஆரண்யத்தில் வசிக்கும் அனைவரும் வந்து பிரம்மத்வாராவைக்கண்டு கண்ணீர் சாகரத்தில் மூழ்கினார்கள். 

பிரம்மாதி கண்ணீர்மறைக்கும் விழியோடு  ஓடிவந்தார். பிரம்மாதியின் தலைமுடியும் வெண்தாடியும்,வெள்ளுடையும்    வெண்மையை இழந்து பழுப்பேறிவிட்டது. 

பிரம்மாதி ஸ்தூலகேசரியின் நடுங்கும்கையை பற்றிக்கொண்டு நெஞ்சு துடிக்க மௌனமாக கண்ணீர்விட்டார். அவர் உதடுகள் கோணி இழுப்பட்டு நெளிந்தன. 

“இதற்குதான் மௌனம் சாதித்தேன் நண்பரே” என்று நடுங்கும் குரலில் விம்மினார் ஸ்தூலகேசரி. 

பிரம்மத்வாராவை பாம்புக்கடித்துவிட்டது என்ற சொல்லைத்தான் கேட்டான் ருரு. எப்படி வந்தான் என்று தெரியவில்லை. அவள் பாதத்திற்கு அருகில் இருந்தான்.  ருரு சொற்கள் அற்று கண்ணீர் வராமல், ஆற்றுநீரின் இழுப்பில் ஆழ  அடித்து நிறுத்திய ஒற்றை முளைக்கழிபோல காலநதியின் விதிஇழுப்பில் நடுங்கியப்படி பிரம்மத்வாராவைப் பார்த்தப்படியே இருந்தான். 

காலன் தனது நெஞ்சுக்குள் கைவிட்டு அதை  கொத்தாக பறித்து   எடுத்துக்கொண்டு போவதைபோல் துடித்தான் ருரு, எதுவும் செய்ய வழியற்றவனாய்,  அங்கிருக்க முடியாமல்  கானகத்தின் அடர் இருளுக்குள் ஓடி மூழ்கி மறைந்தான். தனது இதயத்தை களவாடிச்செல்லும் காலன் முன், கையும் காலும் இருந்தும் தான் ஒரு புழுவாகி  தரையில் நெளிவதுபோல உணர்ந்து கண்ணீர்வழிய தவித்தான். 

“நான் இரந்தவர்களுக்கு எல்லாம் ஈந்திருக்கிறேன் என்பது உண்மையானால். நான்  எனது எல்லாக் கடமைகளையும் சரியாக செய்திருக்கிறேன் என்பது உண்மையானால். நான் பெரியவர்களை மதிப்பவன் என்பது உண்மையானால்.  நான் உறுதிமொழிகளுக்குக் கட்டுப்பட்டன் என்பது உண்மையானால்.  என் அழகு தேவதை, என் உயிருக்கு நிகரான பிரம்மத்வாரா எழுந்து வரட்டும்“ என்று நெஞ்சம் கரையும் கண்ணீரோடு இதயம் வெடிக்கும் பிளிறலோடு வான்நோக்கி அலறினான். கானகத்தின் ஒவ்வொரு இலையும் அவன் வார்த்தைகளை பச்சை நாவென துடித்து எதிரொலித்தது. அந்த கானகத்தில் அடர் இருளில், அவனின் அழுகுரலின் ஓசையில், மரங்கிளையில்  வாழும் பறவைகள் பயந்து உணர்வு இழந்து, தங்கள் கூடுகளில் இருந்து   மயங்கி கீழே விழுந்தன.  

தன்னையே தனக்கு யார் என்று தெரியாத கானகத்தின் அடர் இருட்டில் தன்னை மறந்து உட்கார்ந்தான் ருரு. இருண்ட  கானகத்தின், அடர் இருட்டில் கண்துலங்கும் ஒளி எழ கிளைகள் பின்னிப் பிணைந்து நாகமென எழுந்தாடியது. நாகங்கள் ஆடும் ஆழத்தில் இருந்து பெருகும் நல்மணம்.   அந்த நல்லமணம்   உடல் எடுத்து அவன் முன் நிற்பதுபோல் ஒளி்யுடல் கொண்டு அசைந்தது. அவன் துயரில் தானும் பங்குகொள்வதுபோல் அந்த ஒளியசைவு  துடித்தது. பெண்ணை பரிக்கொடுத்த தந்தையின் தவிப்பது. அவரே பிரம்மத்வாராவின் பிறப்பு தந்தை. அவர் மணத்தால் ஆனவர்போன்ற நினைப்பு அவனுக்குள்.  

அவன் அழுகுரல் கேட்டு, ஒருபொன்வண்டு யாழின் இசையோடு, மேலிருந்து  அவனிடம் பறந்துவரும் ஓசைக்கேட்டது.  அந்த இசையே ஒரு உடலென ஆகி அவன் கண்முன் சிறகு அசைய நின்று  ஒலித்தது. அந்த ஒலியின் உட்பொருள் அவனுக்கு புரியத்தொடங்கியது.

“ஓ ருரு!, உனது துயரின் வலியால் நீ  பேசும் வார்த்தைகள் பயனற்றவை. நல்லவனே! இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு ஆயுள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை, மணத்தால் தன்னை நிறைத்துக்கொண்ட கந்தர்வனுக்கும், அழகால் தன்னை நிறைத்துக்கொண்ட தேவதைக்கும், பிறந்த இந்த அப்பாவிக்குழந்தையின் ஆயுள் முடிந்துவிட்டது, அதனால் மகனே, நீ உனது இதயத்தை துயருக்கு பறிகொடுக்காதே, ஆனால்“ என்று அந்த பொன்வண்டின் யாழிழை நின்றபோது அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து   உணர்வு சொற்கள் ஒலித்தன, அதன் உண்மை பொருளை தனக்குள் கண்டு அடைந்தான்.  அவன் ஆனந்தத்துடன் உலகம் அறிய அந்த ஆழ்காட்டின் இருளில் நின்று கூவினான். 

“தேவர்களில் சிறந்தவரே! காலதேவனே! அறிக, நான் எனது வாழ்நாளில் பாதியை எனது துணையாகிய பிரம்மத்வாராவிற்கு இதய விருப்பத்துடன் அளிக்கிறேன். எனது அன்புக்குரியவளை மறுபடியும் அவளது பழைய உடைகளுடனே, அழகான அவள் தோற்றத்துடனே எழுப்பி அருள்க” என்று  வேண்டினான் ருரு. 

ருருவின் வேண்டுதல் கானகம் எங்கும் எதிரொளித்தது. கானகத்தின் ஒவ்வொரு இலையும் ருருவின் சொற்களை ஏந்தி தனது சொல்லென மொழிந்தது.  கானகத்தின் பச்சை நாக்குகள் ருருவின் வேண்டுதல் உடன் அசைந்துக்கொண்டே இருந்தன.  அவனை சூழ்ந்திருந்த நல்மணமும், யாழென ஒலிக்கும் வண்டும் அவன் வேண்டுதலை ஏந்தி வான்னோக்கிச்சென்று பிரம்மத்வாராவின் ஆயுளோடு செல்லும் காலன்முன் ஒளிஒலியாய் நிற்பதை அவன் ஒரு கனவென கண்டான். அது ஒரு துயிலா துயிலின் கனவு.

ருரு அடர்ந்த ஆழ்க்காட்டின் இருளின் தூக்கத்தில் இருந்து விழித்தவன்போல பிரம்மத்வாரா இருக்கும் இடத்திற்கு ஒரு பட்டாம்பூச்சிபோல பறந்துவந்தான். அவள் நெஞ்சில் தன் கைவைத்து அதில் தன் முகம் புதைத்து கண்ணீருடன் “என் உயிருக்கு உயிரான பிரம்மத்வாரா! நீ என் ஆயுளில் பாதியை எடுத்துக்கொண்டு எழுக” என்றான். கூடியிருந்தவர்கள் கண்ணீர்வழியும் விழியொடு திகைத்தனர். அவனைப்பார்த்து பரிதாப ஒலி எழுப்பினர்.  

பிரம்மத்வாராவின் ஆயுளைக்கவர்ந்து செல்லும் காலக்கடவுளை சூழ்ந்து ஒளிஒலியென நின்ற மணமும் இசையும்  அவரைப் பணிந்தது. அந்த இனிய ஒளிஒலி ஸ்பரிசத்தில் குளிர்ந்த காலக்கடவுள்  குனிந்து புவியை நோக்கினார். காடுமுழுவதும் ருருவின் வேண்டுதல் இலைநாக்குகளில் வழிந்து கூட்டுப்பிராத்தனை என எதிரொளித்து அவரை மனம்திரும்ப செய்தது. 

“மண்ணில் இதுவரை யாரும் செய்யாத பெரும் தியாகம், பெண்ணைப்போற்றும் ஒரு ஆணின் அன்பு இதயம் ஒளிவிடும் தருணம், பெண்ணை தனக்கும் தன் உயிருக்கும் சரிபாதியாக வைக்கும் ஆணின் ஆண்மைக்குணம்“ ருருவின் உள்ளத்தை உணர்ந்த   காலக்கடவுள் மகிழ்ந்தார்.  தன்னை சூழ்ந்திருக்கும் மணமும் இசையும் நிறைவுக்கொள்ள, ருரு வாழ்வுபெற,  அந்த தருமதேவதை ருருவின் வேண்டுதலை உறுதிசெய்யும் விதமாக “ருருவின் பாதி ஆயுளை எடுத்துக்கொண்டு பிரம்மத்வாரா எழட்டும்“ என்று தனது பாசம் சுழலும் அறம் வளர்க்கும் கரத்தை உயர்த்தினார்.  காலதேவனின் பெரும் குரலென வானம்முழங்க, வானையும் மண்ணையும் இணைக்கும் ஒரு ஒளிமாலை  பூத்ததுபோல அங்கு ஒரு மின்னல்வெட்டியது, முகில் திறந்து வான்வெண்பூக்கள் உதிர்ந்தது. 

பிரம்மத்வாரா துயிலில் இருந்து எழுந்து உட்காருவதுபோல எழுந்து உட்கார்ந்தாள். அருகில் விழிநீரோடு உட்கார்ந்து இருந்த ருருவை கட்டி அணைத்துக்கொண்டாள்.  நாகலிங்க மரத்திலிருந்த மழையில் குளித்த பூக்கள் அவர்கள் சிரசில் விழுந்து மடியில் நிறைந்தன.  அதிசயமான மணமும் இசையும் மழையும் அவர்களைச் சூழ்ந்தது. பிரம்மாதியின் மைந்தன் ருரு பிரம்மத்வாராவை அணைத்தப்படி  தனது கைகளை வான்னோக்கி குவித்தான். மணமும் இசையும் மழையும் அவர்கள் இருவரின் தலைதடவி காற்றென சுழன்றது.  

ஸ்தூலகேசர் பிரம்மாதியின் கைகளைப்பற்றிக்கொண்டு “இது படைப்பவன் நாடகம். நடிப்பதைவிட்டுவிட்டு அதை திருத்த நாம் யார்?“ என்றார். 

பிரம்மாதி மழைவழியும் வானத்தைப்பார்த்து சிரித்தார். 

“நண்பரே! ஏன் சிரிக்கின்றீர்கள்?“ என்றார் ஸ்தூலகேசர்

பிரம்மாதி “தினம் தினம் வளர்வதுபோல் காட்டி, நித்தம் நித்தம் நாள் என்னும் வாளால் ஆயுளை வெட்டும் காலம். ருருவின் பாதி ஆயுளை ஒரே நாளில்  வெட்டி பாதியாக குறைத்ததால், பாதி ஆயுளோடு நிற்கும் ருருவின் ஆயுளையும், பிரம்மத்வாராவின் ஆயுளையும் இனிவரும் நாளில் எங்கிருந்து தொடங்கி, எப்படி வெட்டுவது  என்று தெரியாமல் மயங்கி குழம்பி நின்றுபோனது. இந்த தடங்கலை சரிசெய்ய காலதேவன் சிவனின் பாதத்தில் மிதிபட அவர் பாதம் பணிந்து நிற்கிறான், அதைப்பார்த்தேன் சிரித்தேன்“ என்றார். 

ஸ்தூலகேசர் திடுக்கிட்டு விழிகள் விரிந்து அவரை உற்று நோக்கினார். விழியில் ஒரு கங்கு கன்று அணைந்தது. கைகள் நடுங்க,தலையை உதறிக்கொண்டு பிரம்மாதியை ஆழமாகப்பார்த்தவர். கணப்பொழுதில் தன்னை உதறி மீண்டு “எடுத்தாலும் மிதிபடனும், கொடுத்தாலும் மிதிபடனும், தருமத்தில் நிற்பவன் வாழ்வு இறக்கத்திற்கு உரியதுதான்” என்று சிரித்தார்.

ருருவும் பிரம்மத்வாராவும் ஒருவரை ஒருவர் அணைத்தப்படி மழையில் ஆடியபடி தூரத்தில் குடிலுக்கு போய்கொண்டு இருந்தார்கள். அதில் யார் ருரு? யார் பிரம்மத்வாரா?  எப்படிப்பார்த்தாலும் ஒருவர்தான் தெரிந்தார்.

ஆகஸ்ட்-02.2020

2 Replies to “ருருவின் பிரம்மத்வாரா”

  1. அற்புதமான சிறுகதை. தொன்மத்தைக் கட்டுடைத்துக் கேள்வி ஒன்றையும் எழுப்பிக் கதை முடிகிறது. தளவருணனைகள் அருமை; நாள் வாள் என்று திருக்குறளையும் போகிற போக்கில் கதை காட்டிச் செல்கிறது.

Leave a Reply to RAMARAJAN MANIKKAVELCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.