திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!

பெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக.

அம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் சொற்களுமாம். எல்லாச் சொல்லும் பொருளுடைத்தனவே என்றால் மெத்தப்படித்த கவிஞர்கள் அசைச் சொல்லுக்குப் பொருளுண்டா என்பார்கள்.

திருக்குறளில் அம்மா, அம்மே, அம்மை, அம்ம எனும் சொற்கள் எதுவும் இல்லை. ஈன்றாள் உண்டு, தாய் உண்டு. சங்க இலக்கியங்கள் பாட்டும் தொகையும் எனப் பதினெட்டில் அம்ம பல பாடல்களில் உண்டு. அம்மா, அம்மை, அம்மே எங்கும் இல்லை. ஈன்றவள், ஈன்றோள், தாயர், தாய் உண்டு. திருவாசகத்தில் அம்ம, அம்மா, அம்மை காணலாம். திருநாவுக்கரசர் தேவாரம், அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ என்னும். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் அம்மாவும் அம்மையும் பேசுகிறது. கம்பனிடம் கணக்கற்றுக் கிடைக்கும்.

எனவே அம்மையைப் பற்றியது இந்தக் கட்டுரை.

சைவத்திருமுறைகள் பன்னிரெண்டு என்பதறிவோம். பன்னிரு திருமுறைகள் என்பார். அவற்றுள் முதல் மூன்றும் ஞானசம்பந்தர் தேவாரம். அடுத்த மூன்றும் அப்பர் அல்லது திருநாவுக்கரசர் தேவாரம். ஏழாம் திருமுறை சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும். திருவிசைப்பா பாடியவர் ஒன்பதின்மர். திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காட நம்பி, கண்டரர் சித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்த நம்பி, சேதிராயர் என ஒன்பது பேர். திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார்.

பத்தாம் திருமுறை திருமந்திரம், பாடியவர் திருமூலர். பதினோராம் திருமுறையினுள் நாற்பத்தொன்று நூல்கள் அடக்கம். பாடியவர்கள் பதினோரு பேர். திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவ நாயனார், கல்லாட தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டர் நம்பி என்போர்.

பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம். சேக்கிழார் அருளியது.

மேற்சொன்ன ஞானியர், தெய்வப்புலவர், அருளாளரில் நாம் பேசப் புகுவது காரைக்கால் அம்மையார் குறித்து. இந்தக் கட்டுரையை வாசிக்கத் துணிந்தவர்களுக்கு காரைக்காலம்மையின் கதை தெரிந்திருக்கும். விரும்பினால் கே.பி. சுந்தராம்பாள் நடித்த காரைக்கால் அம்மையார் திரைப்படம் பார்க்கலாம். எப்படியானாலும் நானிங்கே கதை சொல்லப் போவதில்லை.

அம்மையார் தமிழுக்குத் தந்த கொடை திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்ற நான்கு. முதல் இரண்டு அம்மை பேயுருவம் கொண்டபின் அருளியது. பிந்திய இரண்டும் அம்மை கயிலை சென்று திரும்பி திருவாலங்காடு வந்தபின் அருளியது. முந்திய இரண்டும் பதிகம் அமைப்பு. பிந்திய இரண்டும் அந்தாதித் தொடையில் அமைந்தது.

காரைக்கால் அம்மையார் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் பாடப்பெற்ற அடியாருள் ஒருவர். அவரது தெய்வத்தன்மை உணர்ந்த கணவன் அவரைத் துறந்து பக்தியுடன் ஒழுக, இறைவனிடம் பேய்வடிவம் வேண்டிப் பெற்றவர். அவரே தன்னைக் காரைக்கால் பேய் என்கிறார்.

ஏழாம் திருமுறை எனக் கொள்ளப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் திருத்தொண்டத் தொகை என்றொரு பகுதி. அறுபத்து மூன்று அடியார்களின் பெயரையும் பட்டியலிடுகிறார் சுந்தரர். சுந்தரரின் திருத்தொண்டத்தொகையை ஆதாரமாகக் கொண்டே பின்னர் சேக்கிழார் பெரியபுராணம் பாடினார். சுந்தரர் அம்மையைக் குறிப்பிடும்போது பேயார்க்கும் அடியேன் என்பார். அம்மையே தம்மைப் பேய் என்று அவரது பாடல்களில் மூன்று இடங்களில் சொல்கிறார்.

காரைக்கால் அம்மையாரின் காலம் கி.பி. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு என்கிறார்கள்.  திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். திருவாலங்காட்டுப் பதிகத்தின் பதினோராவது பாடலில் – காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே!” என்பார். மூத்த திருப்பதிகத்தின் பதினோராவது பாடலில் – காரைக்கால் பேய் தன் பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே!” என்பார்.

அம்மையாரின் பாடல்கள் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று. திருவெண்காட்டு மூத்த திருப்பதிகம் பதினோரு பாடல்கள். இந்தளப் பண்ணில் அமைந்த மூத்த திருப்பதிகம் பதினோரு பாடல்கள். திரு இரட்டை மணிமாலை இருபது பாடல்கள். அற்புதத் திருவந்தாதி நூற்றொரு பாடல்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பதினோரு பாடல்களில் சிவனடியார்களை அறிமுகப்படுத்தும் விதம் ஓசை நயமும் பொருட்சிறப்பும் தமிழ்வளமும் கொண்டதாக இருக்கும்.

‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்’

எனத் தொடங்கும் பாடல்கள் பதினொன்று. சுந்தரர் அடியார்களை அறிமுகம் செய்யும் விதம் தனிச்சிறப்புடையது.

‘இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்’
‘மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்’
‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’
‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’
‘நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்’
‘பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்’
‘முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்’
‘திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்’

என்று பலவாறும் அடியார்களைப் பணிகிறார்.

காரைக்கால் அம்மையைக் குறிப்பிடும்போது, ‘பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்’ என்கிறார். பேயார் என்றது அம்மையை. பன்னிரண்டு சருக்கங்கள் கொண்ட, பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில், இருபத்து நான்காவது புராணம் காரைக்கால் அம்மையார் புராணம். சேக்கிழாரின் சொற்களில், பொங்கிய பேரழகு மிகப் புனிதவதியார், தணிவில் பெருமனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார். விடையவர் பால் அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்!

புனிதவதியார் துறவறம் பூண்டு காரைக்காலம்மையார் ஆகிய கதை இங்கு நாம் பேசப்புகவில்லை. ‘மானுடம் இவர்தாம் அல்லர் நற்பெரும் தெய்வமாதல் நானறிந்து அகன்ற பின்பு’ என்று கணவன் கூறியபின்பு, அம்மை, ‘மெய்யில் ஊனுடை வனப்பை எல்லாம் வணங்கு பேய் வடிவம் ஆனார்’. மேற்கோள் குறிக்குள் இருப்பவை சேக்கிழாரின் வரிகள்.

காலின் நடையினைத் தவிர்ந்து பார்மேல் தலையினால் நடந்து கயிலைசெல்கிறாள் அம்மை. சங்கரன் இருக்கும் வெள்ளிப்பனிமலையின் மேல் ஏறும்போது, இளம் திங்கள் கலையும் நெற்றிக்கண்ணும் உடைய உமையொரு பாகன் அன்பு பொங்கப் பார்க்கிறான். பாகத்தில் இருக்கிறாள் வில் போன்ற நெற்றியை உடைய இமயவல்லி. திருக்கண்களால் நோக்கிய இமயவல்லி அம்பிகை தன் திருவுள்ளத்தில் அதிசயித்து எம்பெருமானை நோக்கிக் கேட்கிறாள் – தலையினால் நடந்து இங்கு ஏறும் எம்பெருமானோர் எற்பின் யாக்கை அன்பென்னே!’ என்று. எம்பெருமான் மறுமொழியாகச் சேக்கிழார் பாடுகிறார்,

“வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்;உமையே!

மற்று இப் பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்”

என்று தான் வணங்கும் கயிலாய நாதனால், அம்மை என்று விளிக்கப் பெற்றவள் பண்டு புனிதவதியாக இருந்த காரைக்கால் பேய்.

அங்கணன் அம்மையே என்று அருள் செய, அப்பா என்று பங்கயச் செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார். சங்குகளால் ஆன வெண் குழை அணிந்திருந்த சிவனார் எதிர்நோக்கி, நம்மால் இங்கு வேண்டுவது என்ன? என்கிறார்.

இறைஞ்சி நின்று அம்மை இயம்புகிறார் –

“பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி,
அறவா! நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க”

என்கிறார்.

“ குலவு தென்திசையில் என்றும்

நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்

ஆடுமா நடமும் நீ கண்டு ஆனந்தஞ் சேர்ந்து எப்போதும்

பாடுவாய் நம்மை”

என்கிறார் அப்பன். மேற்சொன்னவை சேக்கிழாரின் பாடல் வரிகள்.

அம்மை பாடியது 143 பாடல்கள். அவற்றின் சைவ சமயச் சிறப்பைப் பேச என்றுமே நான் ஆளில்லை. சைவத் திருமுறைகளில் வாசிப்பும் பயிற்சியும் இல்லை. மதப்பிரசங்கி ஆகும் மனநிலையும் தன்னூக்கமும் திரைகடல் ஓடித் திரவியம் தேடும் நாட்டமும் இல்லை. சைவ நெறிகளில் நின்று ஒழுகுகிறவனும் இல்லை. நெற்றியில் பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் இல்லை. கைவல்ய நவநீதம் என்ற நூலின் பெயர் மாத்திரமே அறிவேன். நாமிறந்து போனால் நாம் வாங்கியிருந்தால் அல்லவா சிவ தீட்சை இழக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கியச் சந்தையில் மதிப்பூட்டப்பட்ட மாத இதழ் ஒன்றில் யுவ இலக்கியவாதி ஒருவர் எழுதினார், நாஞ்சில் நாடன் முறையாக சைவ இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்த வம்சா வழியில் வந்தவர் என்று. எனக்கு உடுத்திருக்கும் நாலு முழ வேட்டியையும் உரிந்து போட்டுவிட்டு ஓடலாம் எனும் அளவுக்கு நகை பெருகியது. என்னைப் பெற்ற அப்பா ஐந்தாம் வகுப்பு தோற்ற ஓர்நேர் சம்சாரி. பாட்டம் பயிரிட்டு ஏழு பிள்ளைகளை வளர்த்தவர். அம்மா கல்யாணமாகி நாஞ்சில் நாட்டுக்கு வந்தபிறகு தமிழ் எழுத்துக் கூட்டி வாசிக்கப் பழகினார். ஆனால் நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்! நாம் ஏதோ மிராசுதார் – ஜமீன்தார் – பண்ணையார் பரம்பரை தலைமுறை தலைமுறையாக என்று. சைவத் திருமுறைகளை எழுத்தெண்ணிக் கற்றிருப்போம் என்று. கடவுளே! நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் எங்கப்பன் பட்டபாடு! வீட்டு வாசலில் பூடம் போட்டு அமர்ந்திருந்த புலைமாடனும் புலைமாடத்தியும் சாட்சி. எவனோ ஒருத்தன் எழுதுகிறான், எவனோ ஒருத்தன் வெளியிடவும் செய்கிறான், வெட்கமில்லாமல்.

எலி நீட்டினால் எத்தனை முழம் நீட்டும் என்பது எனக்கான தெளிவு. என்றாலும் அன்னா, அன்னா என்று காரைக்கால் அம்மை வரைக்கும் வந்து சேர்ந்தாயிற்று. சர்வ நிச்சயத்துடன் சொல்வேன், சன்னஞ் சன்னமாக என்னைக் கொண்டுவந்து சேர்த்தது சைவம் அல்ல, தமிழ். இரண்டும் ஒன்றுதானே என உரைப்பாரும் உளர் என்பதறிவேன்!

காரைக்கால் அம்மை அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் இறுதிப்பாடலான பதினொன்றாம் பாடலில் சொல்கிறார், ‘‘காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே!’ என்று. செப்பிய என்றால் முறையாகப் பயின்ற, வாசித்த, சொன்ன எனப் பொருள் கொளலாம். அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். அதனால், அணங்கு காட்டில் அனல் கை ஏந்தி ஆடும் அழகன் என்று போற்றுகிறார். சிவத்தைப் பாடினாலும் அவர் தமிழை மதக்கண் கொண்டு காண இயலாது. அணங்கு என்பது அற்புதமான தமிழ்ச் சொல். திருவள்ளுவர் மூன்று குறள்களில் ஆள்கிறார்.

‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு’

என்பது காமத்துப்பாலின் முதற்குறள். வனப்பு மிகுந்த இவள் வான்மகளோ, மாமயிலோ? காதில் கனங்குழை பூண்ட அழகுக் கன்னியோ? மயங்கும் என் நெஞ்சம் என்பது பொருள். அணங்கு எனும் சொல்லுக்கு பதினைந்து பொருள் காணப்படுகிறது பேரகராதியில். தெய்வம் என்றும், தெய்வமகள் என்றும், தெய்வத்துக்கு ஒப்பான மாதர் என்றும், அழகு என்றும், வடிவு என்றும், இவற்றுள் ஒன்று திருவள்ளுவர் சொல்லும் பொருள். வெறியாட்டு என்று ஒரு பொருள். பேய் என்றும் ஒரு பொருள். இவற்றில் ஒன்று காரைக்கால் அம்மை கொள்ளும் பொருள்.

தத்தம் தெய்வங்களைப் பணிந்து வணங்குபவரும், இறைமறுப்பு பேசுபவரும் அம்மையின் தமிழை அலட்சியப்படுத்திவிட ஏலாது. தங்கள் சமய நூலன்றி வேறு எதையும் வாசிப்பது அனுமதிக்கப்படாத மதத்தவரும் கூட அம்மையின் தமிழை அறிந்து கொள்ளலாம். நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டியது, அம்மையின் தமிழ் நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுத் தமிழ் என்பது. மேலும் அது ஐயாயிரம் சொற்களுக்குள் நின்று நவ கவிதை அம்மானை ஆடுவது போல் அல்ல. தமிழ்ச் சொற்களின் இனிமைச் சாற்றினை, சந்த வாசனையைப் பிழிந்து கொட்டிவிட்டு, சொற்சக்கையைத் தின்னத் தருவதும் அல்ல.

அணங்கு எனும் ஒரு சொல் சான்றுரைக்கும் அம்மையின் தமிழ்ச் செழுமைக்கு. அணங்காடுதல் என்றால் கோமரம் வந்து, ஆராசனை வந்து சாமியாடுதல். To dance under the influence of a deity. தெய்வம் ஆவேசித்து ஆடுதல். பேயாடுதலும் ஆகும். அணங்காடுதல் எனும் சொல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், திருவாய்மொழி பாடிய நம்மாழ்வார் ஆள்கிறார். அணங்கு எனும் சொல்லைப் பேய் எனும் பொருளில் பெரும்பாணாற்றுப்படை பயன்படுத்துகிறது.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் அம்மை ஏழு சுரங்களையும் அன்று புழக்கத்தில் இருந்த இசைக்கருவிகளையும் நிரல்படப் பாடுகிறார்.

‘துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
      உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரி தக்கை யோடு
      தகுணி தந்துந்தபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
      தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
      அப்பன் இடம் திருவாலங் காடே!’

என்று. சப்த சுரங்கள் என இன்று அறியப்படும் ஏழு இசைச்சுரங்கள் என்று அம்மை குறிப்பிடுவது – துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை. இந்த சுரங்களுடன் பண் கெழுமப் பாடுகிறார்கள். வாத்தியங்களாவன சச்சரி, கொக்கரி, தக்கை, தகுணி, துந்தபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழவு, மொந்தை என்பனவற்றைப் பேசுகிறார். சுரத்துடனும், பண்ணுடனும், தாளங்களுடனும் அத்தனை இசைக் கருவிகளும் இசைக்க ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே என்பது பாடலின் பொருள்.

நாம் மேற்கோள் காட்டிய பாடலின் சுரங்கள், பண்கள், வாத்தியங்கள் பற்றி ஐயமிருப்போர் இசையறிஞர் நா. மம்மது அவர்களை அணுகலாம். அல்லது அவரது, தமிழிசைப் பேரகராதி’, 2010-ம் ஆண்டு வெளியானது, வாங்கிப் பயிலலாம். A 4 அளவில் 475 பக்கங்களில் அமைந்த அற்புதமான சொற்களஞ்சியம் அது.

எடுத்துக்காட்டுக்காக, அம்மை பாடலில் பயன்படுத்தப்பட்ட கொக்கரி எனும் சொல்லுக்கான தமிழிசைப் பேரகராதியின் பதிவைக் கீழே தருகிறேன்.

கொக்கரி :  கொக்கரை, கொருக்கலி.

காணிக்காரர்களால்  இறைச்சடங்கில் இசைக்கப்படும், விட்டிசைக்கும் இசைக்கருவி.

‘விட்டிசைப்பா கொக்கரை – தேவாரம்

‘கொக்கரையோடு பாடல் உடையான்’ – தேவாரம்

குடமுழவம் கொக்கரை வீணை குழல் யாழ் – ஆதிஉலா

தாளமலி கொக்கரை’ – தேவாரம்

‘கொக்கரையுடையான் குடமூக்கிலே – தேவாரம்

உருள் வாய்க் கொக்கரை உம்பர் நாட்டு ஒலிக்க – கல்லாடம்

கொக்கரை : கொக்கரி

பேரகராதியில் தேடினால் கொக்கரி எனும் சொல்லுக்கு Shouting, vaunting, கர்ச்சனை என்று பொருள் இருக்கிறது. மேற்கோள் திருப்புகழின்  பாடல் வரி, குருதி குடி காளி கொக்கரி செய் என்பது. கொக்கரித்தான் என்று புழங்குகிறோம் இன்றும். To shout in triumph, ஆரவாரித்தல் என்று பொருள். கொக்கரை எனில் A kind of musical instrument, வாத்திய வகை என்கிறது பேரகராதி.

நாம் மேற்கோள் காட்டிய காரைக்காலம்மையின் பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் எழுதினால் அதுவே தனி நூலாகிவிடும். அம்மை குறிப்பிடும் குடமுழா என்ற குடமுழவு எனும் தோல் இசைக்கருவியைக் காணவேண்டுமானால் யாழ்ப்பாணம் அருங்காட்சியகம் போகவேண்டும். நல்லவேளை போரில் எரிக்கப்படவில்லை மாபாவிகளாலும் மாபாவிகளுக்கு அடப்பம் தாங்கியவர்களாலும். அம்மை குறிப்பிடும் தக்கை எனும் கருவியை வாசித்துக் கொங்கு நாட்டில் ஒரு புலவர் தக்கை இராமாயணம் பாடி இருக்கிறார். இன்று அது பதிப்பில் இல்லை. தமருகம் என்பது சிவன்கை வாத்தியம். அவை கிடக்கட்டும், நமக்கின்று உடுக்கு, எடக்கா, செண்டை, மகுடம், உருமி, முரசு, பறை, தப்பு தெரியுமா? யாவற்றுக்குமாக Drum எனும் ஒற்றைச் சொல் போதும்தானே! ஒருவேளை இசைக்கச்சேரிகளில் வாசிக்கப் பெறும் தவில், மிருதங்கம், கஞ்சிரா, தபலா, டோலக், கடம் தெரிந்திருக்கலாம்.

செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் பாடிய போர்க்களக் காட்சிகளுக்குத் தடம் போட்டவர் காரைக்கால் அம்மையார்தானோ என்று தோன்றும்படியாகப் பாடல்கள் உண்டு மூத்த திருப்பதிகத்தில். இந்தப்பதிகத்தில் அம்மை குறித்துச் செல்லும் சுடுகாட்டுத் தாவரங்கள் எட்டி, இலவம், ஈகை, சூலை, காரை, முள்ளி, முளரி, கள்ளி, தாளிப்பனை, வேய் முதலியன. பறவைகள், விலங்குகளோ எனில் நரி, ஆந்தை, சிறு கூகை, ஊமன், ஓரி, உழைமான், கடுவன், அரவம் என்பன. இவை யாவுமே பதினோரு பாடல்களில். அதற்காக இந்தத் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் தென்படும் இடம் யாவும் சுடுகாடு எனக் கொள்ள வேண்டா!

பெரியபுராணத்துக்கு உரை எழுதிய சிவக்கவிமணி C.K.S. முதலியார் அவர்களின் நூல்களில் ஒன்று சேக்கிழார் செம்மணித் திரள் 1960-ல் வெளியிடப்பட்டது. இந்நூல் Pearls of Shakespeare எனும் நூல் போன்று சேக்கிழாரின் முத்துக்களில் இருந்து தேர்ந்தவற்றால் கோர்க்கப் பெற்றது. அதில் ஒரு தகவல், சேக்கிழார் பாடிய நாயன்மார் அறுபத்து மூவரில் மூன்று நாயன்மார் பெண்கள். காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயரான இசைஞானியார், மங்கையர்க்கரசியார் என்பவர்கள். இன்னொரு தகவல் தாயுமிலி தந்தையுமிலி ஆகிய இறைவனாலேயே அம்மையே என்று விளிக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தலையால் நடந்த இடம் திருவாலங்காடு என்பதால், திருவாலங்காட்டைக் காலால் மிதிக்கக் கூசி, ஞானசம்பந்தர் அந்நகருக்குப் புறம்பே தங்கினார் என்பது.

மறுபடியும் மூத்த திருப்பதிகத்துக்குத் திரும்பினால், சிவனார் ஆடுவதைச் சொல்லும் அம்மையின் வடிவான அடிகள் தமிழ் சிறப்பும் செழுமையும் கொண்டவை.

‘அணங்கு காட்டில் அனல் கையேந்தி அழகன் ஆடுமே!’

‘பித்த வேடம் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே!’

‘கூளிக் கணங்கள் குழலோடு இயம்பக் குழகன் ஆடுமே!’

‘மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே!’

‘வெண்துடியும் பறையும் இறங்கப் பரமன் ஆடுமே!’

‘மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே!’

என்பன சில. அணங்கு – பேய், நட்டம் – நடம், நாட்டியம். கூளிக்கணங்கள் – கூளிப் பேய்கள், குழகன் – விரிந்து தாழ்ந்த சடைமுடியான், மலயான் மகள் – உமை, மருண்டு – திகைத்து, வெண்துடி – துடி எனப்படும் தோல் வாத்தியம், கறங்க – சுழல, மிண்டி – அடர்ந்து, மிளிர்ந்த – ஒளிவீசிய.

அம்மையின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் பதினோரு பாடல்கள் என்றால், மூத்த திருப்பதிகமும் பதினோரு பாடல்கள் என்றால், திரு இரட்டை மணிமாலை இருபது பாடல்கள். திறத்தால் வேறுபட்ட மணியும் பவளமும் கோத்து அமைக்கப்படுவது போல, வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அந்தாதித் தொடரில் அமைக்கப் பெறுவது இரட்டை மணிமாலையின் இலக்கணம் ஆகும்.

கட்டளைக் கலித்துறை என்றால் என்ன என்ற அறிந்து கொள்ள சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), எழுதிய கட்டளைக் கலித்துறை என்னும் நூலுண்டு. முதற்பதிப்பு 1872. சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழிலக்கியத்துறை பேராசிரியர் முன்கையெடுப்பில் பாரதி புத்தகாலயம் மூலமாக 2014-ம் ஆண்டில் ஒரு பதிப்பு வந்துள்ளது. கட்டளைக் கலித்துறை பற்றி அறிய விரும்புவோர் அந்த நூலை வாசிக்கலாம்.

நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, குறளடி வெண்பா, சிந்தடி வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா பற்றியெல்லாம் அறிய விரும்புவோர் வெண்பா இலக்கணம் அறிந்தவரை அணுகலாம். நவ கவிதை எழுதுவோர் இலக்கணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?

வெண்பா அகவல் கலி வஞ்சி யென்னும் நாற்பாவினுள் ஒன்றாகிய கலிப்பாவுக்கு இனமாய் வரும் கலித்துறை விருத்தக் கலித்துறை எனவும் கட்டளைக் கலித்துறை எனவும் இருவகைப்படும் என்கிறார் சி.வை.தா. அம்மையின் திருவிரட்டை மணிமாலை, கட்டளைக் கலித்துறையில் தொடங்கி அடுத்தது வெண்பா எனும் அமைப்பில், அந்தாதித் தொடரில் பாடப் பெற்றுள்ளது.

திரு இரட்டை மணிமாலையில் ஒரு பாடல் –

“உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்தமரம் அடுக்கித் தீயாமுன் – உத்தமனாம்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து”

என்பது. பாடலின் பொருள் – உத்தமராய்  வாழ்ந்தவர் கூட உலர்ந்து விழுந்து இறந்தால், உற்றார்கள் கூடிப் பட்டமரம் அடுக்கித் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்குமுன் கடல்போல் ஆழமுள்ள நெஞ்சத்தவரே கேளுங்கள்! நெடிய ஆழ்கடலின் விடம் வாரியுண்ட நெய்யாடி, கங்கையும் கொன்றையும் இளமதியும் பொங்கரவும் பூண்டவனின் திறம் பாடக் கேட்பீராக!

பிற்றை நாளில் திருமூலர் பாடுவதும் அதுவேதான். ‘பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு, ஊரினைக் கூட்டி ஒலிக்க அழுதிட்டு, சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு, நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!’ என்பார்.

காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியின் நூற்றொரு வெண்பாக்களும் தமிழ்ப் பாக்கடல்.

‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’

என்று தொடங்குகிறார் அந்தாதியை. இங்கு காதல் எனும் சொல் சினிமாக்கள், நவ யுவர்கள் சொல்லும் Love you என்பதல்ல பொருள். அன்பின் மிகுதி என்று பொருள். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று தேவாரமும், காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் என்று திருவாசகமும் பேசும் காதல். தீராக் காதலன் ஆகும் என்று குகனை இராமனும், நின் காதல் திருமகன் என்று கோசலையிடம் பரதனைக் குறித்து இராமனும் மொழியும் காதல். பாடலைத் தொடர்ந்து –

“ நிறந்திகழும்
மெஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்”

என்று பாடலை முடிக்கிறார். விடமுண்ட கண்டத்து வானோர் தலைவனே!  எமது இடர் என்று தீர்க்கப் போகிறாய் என்பது பொருள்.

அற்புதத் திருவந்தாதியின் ஏழாவது பாடலில்,

“யானே தவமுடையேன்! என் நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்”

என்கிறாள் அம்மை. நாலாம் நூற்றாண்டுத் தமிழில் ஒரு சொல்லுக்கும் பொருள் சொல்ல வேண்டாம். இருபத்தோராவது பாடலில் எல்லாமும் எல்லாமும் என்கிறார்.

“அவனே இருசுடர் தீ ஆகாயம் ஆவான்
அவனே புவி புனல் காற்று ஆவான்”

என்பது பாடலின் இரு வரிகள். சொல் பிரித்து எழுதி இருக்கிறேன், அவ்வளவே! பொருள் சொல்ல வேண்டுமா? இறைவனாகிய அவனே சந்திர சூரியராகிய இருசுடர். அவனே தீ, விசும்பு, புவி, புனல், காற்று எனும் ஐம்பெரும் பூதங்கள். இங்கு அவன் என்பவன் தென்னாடுடைய சிவன் மட்டுமா? பிறவா நெறிப் பெற்றியான் மட்டுமா? பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் மட்டுமா?

அம்மை சிவனைப் பாடினாலும் சிவன் என்பது பெயர், அடையாளம் மட்டுமே! எந்த சமய நூலையும் அந்த மொழியின் உன்னத இலக்கியமாகவும் படைப்பதே ஞானியர் தொழில்.

“அறிவானும் தானே! அறிவிப்பான் தானே!
அறிவாய் அறிகின்றான் தானே”

என்பார் மற்றொரு பாடலில். சொல்லிச் செல்லலாம் நிறைய!

கவிதை என்பது ஞானத்துக்கும், ஞானம் என்பது இறைவனுக்கும் அண்மையில் இருப்பது என நம்புபவன் நான். எம்மொழியின் கவிஞருக்கும் ஞானியருக்கும் பொருந்தும் அது. அவரவர் சமயத்துக்கு ஏற்றாற்போல அவரவர் இறைவன். இதில் வழக்கு எங்கே வருகிறது?

“பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்
இறைவர் எமக்கு இரங்காரேனும் – கறைமிடற்ற
எந்தையார்க்கு ஆட்பட்டேம் என்றிருக்குமே!
எந்தையா உள்ளம் இது!”

என்று கேட்கிறார் ஒரு வெண்பாவில். பிள்ளை மதியும், கங்கைப் புனலும், அனல் உமிழும் அரவமும் சூடிய இறைவன்  எமக்கு இரங்காவிடினும் எமதுள்ளம் கண்டத்தில் விடம் கறையாகத் தங்கி இருக்கும் எந்தைக்கு ஆட்பட்டோம் என்றே இருக்கும். என்ன உள்ளம் ஐயா இது? இது அம்மையின் கேள்வி.

இறைத் தத்துவத்தை எளிமையாகப் பேசுகிறார் ஒரு பாடலில்.

“பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் – பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள்? என் போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க்கு எளிது”

என்பது ஒரு வெண்பாவின்  முழுவடிவம், அம்மையின் அற்புதத் திருவந்தாதியில்.

எம்பிரானைக் காட்டுகின்ற பெருநெறி பேணுகிறவர்கள், எம்பெருமான் அவனின் பேரருளை வேண்டுகிறவர்கள், எம்பிரான் அவனை எங்குளான் என்பீர்கள்! அவன் வேறெங்கும் இல்லை. என்போன்ற எளிய மனிதர்களின் சிந்தையினுள் இங்கு இருக்கின்றான் காண்பவர்க்கு எளியதாக!  இது பாடலின் பொருள். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழகிய தமிழ். சிலிர்ப்பாக இருக்கிறது. அதனையே எளிமையாகக் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடுவார் :

“உள்ளத்தில் உள்ளானடி அதை நீ உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாய் எனில் கோயில் உள்ளேயும் காண்பாயடி!”

என்று கவிமணி பாடலுக்குப் பொருள் வேண்டாம் அல்லவா!

அறுபத்து ஒன்றாம் அற்புதத் திருவந்தாதியில் பாடலில் அம்மை கேட்கிறாள் –

“அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது?”

என்று உரையென ஏதும் வேண்டாம். அத்தனை எளிமை. அணுகாதது நம் பலவீனமே அன்றிப் பாடலின் கடுமை அன்று. அப்படியே உரைநடையில் பாடலை எழுதலாம் உரையாக. அன்றும் உன் திருவுருவம் காணாமல் உனக்கு ஆட்பட்டேன். இன்றும் உன் திருவுருவம் கண்டேனில்லை. என்றும் என்னிடம் கேட்கிறார்கள், உன் பிரானின் உருவம் எவ்வுருவம் என்று. அப்படிக் கேட்பவர்க்கு என்னவென உரைப்பேன்? எவ்வுருவம் உன்னுருவம் என்று?

அப்படிப் பாடும் அம்மையேதான் நான்கு பாடல்கள் தாண்டிப் பாடுகிறார் –

“காலையே போன்று இலங்கும் மேனி! கடும்பகலின்
வேலையே போன்ற இலங்கும் வெண்ணீறு – மாலையின்
தாங்குருவே போன்றும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கு இருளே போலும் மிடறு!”

என்று. இலங்கும் – ஒளிரும். வேலை – கடல். சடைக்கற்றை – கற்றையான வார்குழல் சடை. மிடறு – கழுத்து, தொண்டை. பாடலின் பொருள்  தெரிய வேறென்ன மிச்சம் இருக்கிறது. இருந்தாலும் –

காலைபோல் பிரகாசமாக ஒளிரும் திருமேனி. நண்பகலின் கடல்போல் துலங்கும் வெண்ணீறு. மாலையில் தங்கும் இருளே போல் சடைக்கற்றையான தலைமயிர். அவனை நம்பாதவர்க்குத் தோன்றும் இருளே போன்று அவனது நஞ்சுண்ட கண்டம். இது சைவ நெறியாளர் எவரின் உரையல்ல. ஐந்தாம் வகுப்பில் தோற்றதொரு சாமான்யனின் மகனின் உரை.

மற்றவர்க்கு வீங்கு இருளே போலும் மிடறு என்கிறார் அம்மை. திருநீலகண்டன், விடமுண்ட கண்டன், நஞ்சுண்ட கண்டன், கறை மிடற்றன் என்று குறிக்கும் சைவத் திருமுறைகள், சிவனின் கழுத்தில் தங்கிநின்ற பாற்கடலில் அமுதம் தோன்றுவதற்கு முன்பு வந்த ஆலகால விடத்தை வாரி உண்டவனின் அடையாளம் அது. அந்த நீல நிறத்திலான கண்டம் மற்றவர்க்கு, பிற சமயத்தவர்க்கு, அல்லது சிவநெறிப்படாதவர்க்கு, வீங்கிக் கிடக்கும் இருள் எனத் தோன்றுமாம்.

இந்த சந்தர்ப்பத்தில் எனக்குக் கம்பன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. பால காண்டத்தில் உலாவியற் படலம். இராமனைக் கண்டு மகிழ மிதிலை நகரத்து மக்கள் வந்து கூடி மொய்க்கும்போது, இராமனின் மேனி அழகை எங்ஙனம் அனுபவித்தனர் என்பதைக் கம்பன் பேசும் இடம். யாவர்க்கும் அறிமுகமான பாடல்தான். இந்தப் பாடலின் நீர்த்து மலிந்த வடிவம் தமிழ் சினிமாவிலும் ஆட்சி செய்தது. இனி, பாடல் :

‘தோள் கண்டார், தோளே கண்டார்,
      தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்;
      தடக்கை கண்டாரும், அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே,
      வடிவினை முடியக் கண்டார்? –
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
      உருவு கண்டாரை ஒத்தார்’

இது முழுப்பாடல். இந்தப் பாடலில் ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் எனும் ஈற்றடியினை, அம்மையாரின் மற்றவர்க்கு வீங்கு இருளே போலும் மிடறு என்பதுடன் ஒப்புநோக்கற்பாலது. தமக்குத்தாமே ஒவ்வொரு முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் இறை வடிவங்களை நோக்காது, தம் வடிவங்களையே நோக்கியவாறு இருப்பதைப் போல என்று கம்பனின்  வரிக்குப் பொருள் கூறினார்கள், கோவை கம்பன் கழகத்துப் பதிப்பின் உரையாசிரியர்கள். ஒப்பு நோக்கி, உரையெழுதும்போது அவர்கள் எடுத்துக்காட்டாக நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரம் ஒன்றையும் தந்துள்ளனர்.

‘வணங்கும் துறைகள் பலப்பலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலப்பலவாக்கி அவையவைதோறும்
அணங்கும் பலப்பல ஆக்கிநின் மூர்த்தி பரப்பி வைத்தாய்’

என்பன பாடல் வரிகளில் மூன்று.

மற்றவரைப் பேசிய அம்மை, சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே என ஏத்துகிறார். அரனின் உருவை வியக்கிறார் மற்றொரு பாடலில்.

“இருளின் உரு என்கோ? மாமேகம் என்கோ?
மருளின் மணி நீலம் என்கோ?”

என்று இதே அடிகளை அப்படியே கார்வண்ணனைக் குறித்தும் ஆளலாம்.

அம்மையை எண்ணும்போதெல்லாம் நெஞ்சில் மணக்கும் பாடல் ஒன்று.

“அழலாட அங்கை சிவந்ததோ! அங்கை
அழகால் அழல் சிவந்தவாறோ! – கழலாட
பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்
தீயாடுவாய் இதனைச் செப்பு”

என்பதந்தப் பாடல்.

காலில் அணிந்திருக்கும் கழல்கள் ஆடும்படியாக, பேய்கள் ஆடும் கானகத்தில் எரிக்கும் அனல் கைகளில் ஏந்தித் தீயாடும் கார் உருவக் கண்டத்துக் கண்நுதலே! எனக்கு நீ இதனைச் சொல்வாயாக! தீயைக் கையில் ஏந்தி ஆடுவதால் உனது அழகிய கை சிவந்து காணப்படுகிறதா? அல்லால் உனது உள்ளங்கையின் சிவப்பால் அழல் – கனல் – தீ – நெருப்பு – தழல் –சிவந்து தோன்றுகிறதா?

இஃதோர் சைவநெறிச் சமயக் குரவரின் பாடலாக இருக்கலாம். ஆனால் எமக்கோர் உன்னதத் தமிழ்ப்பாடல் இது. எவர் குடும்பத்துச் சொத்துமல்ல. தமிழ்ச் சொத்து.

ஐவாய் நாகம் பூண்டவன் எதற்கு ஆடுகிறான் இந்த நடம்? செப்புப் போன்ற இளமுலையாள் உமையாள் காணவோ? அல்லது ஊழித் தீப்படும் காட்டின் பேய்க்கணங்கள் அவைதாம் காணவோ? – என்பாள் அம்மை!

“என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
தன்னை அறியாத தன்மையனும்”

என்பான் எம்மதத்தவரின் இறையின் கூறுகள்தாமே! ஆனால் காரைக்கால் அம்மை நமக்குக் காட்டும் இறை இது! தமிழ் இது!

“தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறந்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ”

என்று  கடுவன் இளவெயினனார் பரிபாடலில் பேசும் இறைத்தன்மையில் மனம் சென்று நிலை கொள்கிறது.

19 ஜுன் 2020

One Reply to “திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!”

  1. தங்களின் பக்தி கடந்தத் தமிழ் உணர்வுக் கட்டுரை “திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!” எனக்கு சேக்கிழாரேஅம்மையின் பக்தியைத் தமிழுடன் விரித்துரைத்தது போல் இருந்தது. மனதை நெகிழச் செய்தக் கட்டுரை. (சிறுதகவல் ஐயா.. குடமுழா என்றத் தோற்கருவி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இருக்கிறது. தினமும் சாயரட்சை பூசையில் இசைக்கப் பெறுகிறது.) சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    ம.கார்த்திகேயன்.நெய்வேலி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.