பைய மலரும் பூ…

அது ஒரு வெள்ளி இரவு… அலைபேசியில் தொலையாமல், சமூக ஊடகங்களின் சந்தடியில் சிதறாமல்‌, வானில் நகரும் வெள்ளியை ரசித்திட நேரம் கிட்டிய எண்பதுகளில் எழுந்த‌ ஒரு வெள்ளிக்கிழமை இரவு… அருகிருந்த வீடுகளில் ஓடும் ஒலியும் ஒளியும் கூட நம் வீட்டிற்குள் கேட்கும்படி ஊர் அமைதி கொண்டிருந்த காலத்தில் எழுந்த ஒரு வெள்ளிக்கிழமை இரவு…எங்கிருந்தோ எழும்பி மெல்ல எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இறங்கி என் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியது “பொத்துகிட்டு ஊத்துதடி வானம்…”. மிகச் சாதாரணமான பாடல். வயது சற்றே முதிர்ச்சியடைந்தால் இதெல்லாம் ஒரு பாட்டா என்று மனது விட்டு விலகக் கூடிய, செவிக்கோ மனதுக்கோ நீண்டகால இன்பம் கொடுக்கும் சங்கதிகள் ஏதுமற்ற ஒரு வெற்றுப் பாடல். இந்தப் பாடலில் “பையப் பைய கையளக்க” என்றொரு வரி உண்டு. “பைய” என்னும் சொல் “மெதுவாக” என்ற பொருளில் மதுரையிலும், மதுரைக்கு தெற்கேயும் சாதாரணமாக புழங்கும் ஒரு சொல். மேடுபள்ளங்கள் நிறைந்த குறுகிய மதுரை சந்துகளில் நீங்கள் தடுக்கி விழப்போனால் “பையப் போங்க” என்று அருகிருப்போர் சொல்லும் சாத்தியம் நிறையவே உண்டு. என் பால்யம் முழுவதும் “பைய” என்பதை வட்டார வழக்கு போன்றே நினைத்திருந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், “பாயும் புலி”க்கு பாட்டெழுதிய‌ கவிஞர் மதுரையில் “ரூம் போட்டு யோசித்து” அப்படத்தின் பாடல்களை எழுதியிருப்பாரோ என்று தோன்றியதும் உண்டு. ஏனெனின் இதே படத்தில் வரும் மற்றொரு வெற்றுப் பாடலான “ஆடி மாசம் காத்தடிக்க”வில் “மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தையிலே” என்னும் வரியும் உண்டு. எனவே, ஒரு வேளை கவிஞர் மதுரையில் ரூம் போட்டு தங்கி பாட்டை உருவாக்க யோசித்து மேலமாசி வீதியில் கவனமின்றி நடக்கையில் எவர் மீதேனும் இடறி, “பையப் போய்யா” என்று அவர் சொல்லியிருந்து, இரண்டு பாடல்களில் இரண்டு வரிகளை நிரப்பி விட்டாரோ என்ற ஐயம் நீண்ட நாளாய் இருந்தது.  என்னடா ஏதுமற்ற பாடல் என்று சொல்லிவிட்டு அதனை சுற்றி இத்தனை வரிகளா என்று தோன்றுகிறதா?

சிற்றின்பத்திலிருந்து பேரின்பம் நோக்கி நகரும் பயணம்தான் வாழ்க்கை என்றால், கிளர்ச்சியூட்ட்டும் வெற்று சினிமா பாடல்களிலிருந்து பேரின்பம் பயக்கும் இலக்கியத்திற்கு நகரும் பயணமும் வாழ்க்கையின் அங்கம்தானே? அப்படித்தான், ஏதுமற்ற பாடலிலும் எப்படியோ சிக்கிவிடும் ஒரு சொல்லையோ வரியையோ பிடித்துக் கொண்டு இலக்கியத்திற்குள் இறங்கும் வாய்ப்பு நமக்கு கிட்டுகிறது. இப்படித்தான் “பையப் பைய கையளக்க”  பைய எனக்குள் ஏறிக் கொண்டது.

பள்ளியிலிருந்து பருவத்தின் மேலேறி, இருபதுகளில் இறங்கி இளமையை கடக்கையில், இலக்கியம் நுகர்தலில் நாட்டம் கொண்டது மனது. பாரதியின் தழல் நம் மீது படியாமல் இலக்கியத்தில் இறங்குதல் சாத்தியமா என்ன? அத்தகைய‌ பொழுதொன்றில் தான் அவரின் “பொருட் பெருமை” பாடலில் “பையப் பைய ஓர் ஆமை குன்றேறல்போல்…” என்ற வரியை கண்டடைந்தேன். ஆஹா பாரதியே பயன்படுத்திய சொல்லையா நாம் சாதாரணமாக எடை போட்டோம் என்று அதிர்ந்தேன். ஆனால் அது ஆச்சரியங்களின் துவங்கமே என்று பின் வந்த வருடங்கள் சொல்லின. பழந்தமிழ் இலக்கியத்தின்பால் ஈடுபாடு அதிகரித்தபோது திருமங்கையாழ்வார் ஒரு நாள் என்னை திடுக்கிட வைத்தார். “பொத்துகிட்டு ஊத்துதடி” போன்றவற்றிலிருந்து என்னை விடுவித்து பெரியதிருமொழியில் “பைய”ச் சேர்த்து விட்டிருந்தது காலம்.

“கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே”

என்பது பெரிய திருமொழியில் வரும் அற்புதமான பாடல்.  கண்பார்வை மங்கி, மூச்சிரைப்புடன் கூடிய முதுமை வந்து தடுமாறி, “பார்த்து மெதுவா நடந்து போங்க…” [பைய நடமின்] என்று இளம்பெண்கள் சொல்லும் காலம் வரை காத்திருக்காமல் இப்போதே இறையை வணங்க புறப்படு நெஞ்சமே என்கிறார் திருமங்கையாழ்வார்.  

“பைய” என்பது எப்பேர்ப்பட்ட சொல், எத்தனை நூற்றாண்டுகள் தொன்மையான சொல், எத்தகையோரெல்லாம் பயன்படுத்திவிட்டு நம்மிடம் விட்டுப்போன சொல் என்று புரியத் துவங்கியது எனக்கு. அன்றிலிருந்து “மெதுவா போ” “பார்த்துப் போ” என்பதற்கு பதில் “பைய” என்று சொல்லும் பொழுது உள்ளே ஒரு உவகை பொங்குவதை உணர முடிந்தது.

திருஞானசம்பந்தர், தேவாரத்தில், சமணர் சைவ மடத்திற்கு இட்ட தீயை மன்னனிடம் கொண்டு சேர்க்க,  

“செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே…” என்று பாடுகிறார்.  

பரஞ்சோதி முனிவர் “பைய” என்னும் சொல்லை திருவிளையாடற் புராணத்தில் எத்தனை நுட்பமாய் பயன்படுத்துகிறார் பாருங்கள்:

“கையெறி யுங்குழற் கற்றைசோ ருந்திரி காறுளி
நெய்யெனக் கண்புனல் கொங்கைமுற் றத்துக நெஞ்சுகும்
பையவாய் விடும்…” என்பது பாட்டு.

அதாவது, விளக்கின் திரியிலிருந்து மெல்லச் சொட்டும் நெய்யின் துளி போல் கண்களிலிருந்து வழியும் கண்ணீருடன் மெல்ல வாய்திறந்து புலம்புவாள் என்பது பொருள். இதை சற்றே மாற்றி மெல்ல விழும் நெய்யின் துளி போல் சத்தமின்றி வாய்திறந்து புலம்புவாள் என்று பொருள் கொண்டாலும் பாதகமில்லை. கற்பனையை கட்டிப்போடுவதா இலக்கியம்?

முத்தொள்ளாயிரத்தில் ஒரு வித்தியாசமான பாடலுண்டு. “எப்படி ஐயா இப்படியெல்லாம் யோசித்தீர்கள்” என்று புலவரைப் பார்த்துக் கேட்கலாம் என்று தோன்றவைக்கும் பாட்டு. முத்தொள்ளாயிரத்தை யார் எப்போது எழுதினார்கள் என்று தெரியவில்லை.

“எலாஅ மடப்பிடியே எங்கூடல்க் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன், உலா அங்கால்ப்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவது உடைத்து”

என யானையை நோக்கிப் பாடுகிறாள் ஒரு பெண். பிடியின் மீதேறி நகர் உலா வருகிறான் பாண்டிய மன்னன். பிடி என்றால் பெண் யானை. யானையோ வேகமாக நடந்து போகிறது. மன்னன் மீது மையல் கொண்ட அவளோ, யானை மெதுவாக நடந்தால் இன்னும் சற்று நேரம் அவனைக் காணலாமே என்ற ஏக்கத்தில், ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண் அறிவார்,  ஆனால் என் மனதறியாமல் நீ வேகமாக நடப்பதால் உன் பெண்மை மீது சந்தேகம் வருகிறது என்று யானையிடம் கோபிக்கிறாள்!

நற்றினையில் வரும் ஒரு பாடலில், பிரிவுத் துயர் தாளாமல் தவிக்கும் தலைவிடம் தோழி, நீ “பைஇப் பையப் பசந்தனை பசப்பே” என்கிறாள்.

“….நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்
புன்னை ததைந்த வெண்மணல் ஒரு சிறைப்
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே
பொம்மல்படு திரை நம்மோடு ஆடி
….தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி
பைஇப் பையப் பசந்தனை பசப்பே”

என்பது அப்பாடலின் சில வரிகள். வாசனைமிக்க புன்னையின் பெருமலர்கள் விழுந்த வெண்மணல் கொண்ட அலைகள் ததும்பும் கரையிலேதான் அவன் என்னை முதன்முதலாய் தழுவினான். அதை நினைக்க நினைக்க‌ உருகி  மெல்ல மெல்ல மேனி எழில் மங்குகிறதே… என்பது சுருக்கமான பொருள்.

ஓரம்போகியார் என்றொரு சங்கப் புலவர் உண்டு. மிகுந்த ரசனைக்காரர். இவர் “பைய” என்பதை எங்கு எப்படி பயன்படுத்துகிறார் என்று பாருங்கள். ஐங்குறுநூறு பாடல் இது. தலைவி மருத மரத்தின் மீதேறி நதியில் குதிக்கிறாள். பொன் நகைகள் பூண்ட அவள் நீரினுள் விழும் போது அதன் ஒளி பிரதிபலிக்கும் கூந்தல் மெல்ல‌ப் படர்ந்து நீரின் மேல் விரிகிறது. எப்படி விரிகிறது? வானத்திலிருந்து இறங்கும் மயிலொன்றின் தோகை மெல்ல விரிவது போல் அவள் கூந்தலின் இழைகள் நீரில் விரிகிறதாம்!. பாட்டைப் படியுங்கள். பின் ஓரம்போகியார் நம்மால் ஓரம் கட்ட முடியாத புலவர் என்பது புலப்படும்.

“விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்றக்
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே”

நான்கு வரிகளுக்கு மேலிருந்தால் படிக்கச் சோம்பல்படும் சமூகம் பின்னாளில் உருவாகக்கூடும் என்று ஒளவை யோசித்திருக்கலாம். எனவே சங்கப் புலவர்கள் போல் நீட்டாமல் நறுக்கென்று “பையச் சென்றால் வையம் தாங்கும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாம் தான் இந்த நான்கு சொற்களுக்குக் கூட பொருள் விளங்காத வகையில் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

“பொத்துகிட்டு ஊத்துதடி வான”த்தையும் மேல மாசி வீதியையும் சொல்லி காதல் பாட்டில் ஆரம்பித்து விட்டு குறுந்தொகையை தொடாமல் விட்டால் தமிழ் கோபம் கொள்ளாதா? உதவிக்கு மதுரைக்காரரையே பிடிப்போம். மூச்சை இழுத்து விட்டுக் கொள்ளுங்கள். இப்பாடல் “பொது ஆண்டுக்கு முன்” “பொ.ஆ” பின்னரோ, மதுரை அளக்கர் ஞாழார் என்பவரின் மகன் மள்ளலார் என்பரால் எழுதப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் வாசிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது தமிழ்!

“படரும் பைபயப் பெயருஞ் சுடரும் 
என்றூழ் மாமலை மறையு மின்றவர் 
வருவர்கொல் வாழிதோழி நீரில் 
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை 
குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக் 
கொடுவரி யிரும்புலி காக்கும் 
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே”

பாடலை படித்தவுடன் முதலில் உங்களுக்கு ஒரு கேள்வி வரும். இந்தப் பாடலில் “பைய” என்பதே இல்லையே அல்லது “பைபய” என்று தவறுதலா நான் தட்டச்சு செய்திருக்கிறேனோ என்று. கொஞ்சு தமிழ் நுணுக்கத்தில் அதற்கு விடையிருக்கிறது. “பையப் பைய” என்பதன் மரூஉ சொல்லே “பைபய”. இப்போது, “படரும் பையப் பைய பெயருஞ் சுடரும்…” என்று வாசித்துப் பாருங்கள்… வற்றிய குளத்தில் நீர் தேடி துழாவும் ஆண் யானை தன் விருப்பதிற்குரிய பெண் யானையை பாறைகளுக்கிடையில் தழுவி நின்றி புலியிடமிருந்து பாதுகாக்கும் பெரிய மலையில் அமைந்திருக்கும் காட்டின் வழியே போன தலைவன் இன்று திரும்புவான். அந்த பெரிய மலையின் பின் சூரியன் மெல்ல மெல்ல மறைவது போல் உன் துன்பமும் விலகும். இதுவே இப்பாடலின் நயமிகு அர்த்தம்.

இப்படியாக இலக்கியத்தில் நுனிப்புல் மேய்ந்த மகிழ்ச்சியில், “பைய” என்பதன் பொருள் விளங்கிவிட்டது என்று நினைத்திருந்த வேளையில், “பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி” என்றாள் ஆண்டாள். இங்கு “பைய” என்னும் சொல் “மெல்ல” என்ற பொருளில் பொருந்தாதே… அப்படியெனின் “நல்ல” “ஆழ்ந்த” “மென்மையாய்” போன்ற பொருளும் இருக்கக்கூடுமோ என்ற எண்ணம் தோன்றியது. நக்கலாய் சிரித்த தமிழ் என் தலையில் குட்டி நீ இன்னும் நுனிப்புல்கூட மேயவில்லை “பையனே”, மேலும் முயற்சி செய் என்று ஆண்டாள் வழியே சொல்லிவிட்டுப் போனது!

நீண்ட வருடங்களுக்குப்பின், சமீபத்தில் டிவியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு சேனலில் “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” என்று ரஜினி ராதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நினைவின் பாதையில் பையப் பைய பல வருட தூரம் நடந்து எங்கள் வீட்டு மொட்டை மாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தேன் நான்.


5 Replies to “பைய மலரும் பூ…”

  1. அருமையான கட்டுரை. நாஞ்சிலாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எழுதப்பட்டதோ எனக் கேட்கத் தோன்றுகிறது. எப்படியாயினும், பல அருமையான கருத்துக்களையும் எடுத்துக் காட்டுக்களையும் கொண்டு அமைந்துள்ளது படிக்க மேலும் மேலும் உவப்பாக உள்ளது. நன்றி!!

    1. மீனாக்ஷி:
      “நாஞ்சிலாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எழுதப்பட்டதோ”ன்னு கேட்டுட்டேளே !! பாவம் இந்த குமரன் கிருஷ்ணன். இவர் ஒரு தமிழ்ச்சொல்லை எடுத்து ஆய்வுரை செய்திருக்கிறார்; ஆனால், நாஞ்சிலார் ஒரு ஆங்கில மருந்தின் பேரில் உள்ள சிலபுள்களின் (syllables) ஒலியை எப்படி தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்று ஆய்வுரை எழுதியிருக்கிரார்.

      “ஆய்”வுரை என்னும் சொல்லின் முதல் சீர் (syllable) ஒரு தமிழ் மழலைச் சொல். ஆங்கில மழலையில் இதை “பூ” என்பார்கள். Poo/பூ ரெண்டுக்கும் வாசனை தூக்கும்!! இந்த மாதிரி சொல் ஆராய்வு மனவோட்டத்தில Shakespeare-கூட ஞாபகம் வரும்: “A rose by any other name would smell as sweet”. ஃபைல்-ஆப்-பூ என்னும் சொல் வரிசைக்கு ஒரு எமோஜியும் இருக்கு: 💩

  2. அரங்கன், திருமால் அறிதுயில் கொள்பவர்.அதாவது, துயில்வதைப் போன்ற தோற்றம், ஆனால்,தூங்குவதில்லை.தாமரைக் கண்கள் என்று சொல்லும் போதே தாமரை மலர் போன்ற கண்களென்றும், தாம் அரைக் கண்கள் என்றும் பொருள் சொல்வார்கள்.’பைய’ என்பது துயில்வது போல் துயிலாமை என்ற பொருளில் வந்துள்ளது.

  3. நானும் இந்தப் பைய பைய குறித்து எழுதியிருக்கிறேன். மதுரைக்காரர் ஒருவர், திருச்சியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்யும் போது 200 கொடுத்து பயணச்சீட்டு வாங்கினாராம். நடத்துனரிடம் மீதம் கொடுக்க கொஞ்சம் சில்லறைக் காசுகளோ இல்லையாம். நடத்துனர் அந்த மதுரைக்காரரிடம் பிறகு சிறிது நேரம் கழித்து தரேன் அய்யா ! என்றாராம். நம்ம மதுரையாரோ ! பைய கொடுங்க தம்பி ! என்றாராம். மிரண்டு போன நடத்துனர் பாக்கி சில்லறைக்காசுக்காக என் பையவா கேகுறதுங்க என்றாராம்.

Leave a Reply to ShreyaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.