…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி

‘மனித இனத்துக்குச் சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை. யாரையும் எதிலிருந்தும் காப்பாற்ற நான் வரவில்லை!’  என நிர்தாட்சண்யமாகக் கூறும் ஒரு மனிதரை, எப்படி ஒரு சிந்தனையாளராக, தத்துவ ஞானியாகக் கருதுவது? அல்லது ஒரு குருவாகக் கொள்வது? அவரோடு பழக வாய்த்தவர்களின் ஆன்மீக, மத, கலாசார நம்பிக்கைகளை நொறுக்கித் தள்ளியவர். ஆனால் அதனிடத்தில் நிரப்ப,  எதையும் தந்ததில்லை! தன்னை எதுவுமாக, யாருமாக அவர்  வெளிப்படுத்திக்கொண்டதில்லை. ‘நான் சாதாரணமானவனே’ என்பார். ’என்னை ஒரு பீடத்தில் உட்காரவைத்து, விதம் விதமாக லேபிள் ஒட்டிப் பார்க்கிறீர்கள்..’ என விமரிசிக்கிறார், தன்னை ‘ஜீவமுக்தர்’ என்றும்,  ‘பிரும்மஞானி’ என்றும் வர்ணிக்க முயன்ற ஒரு மதநம்பிக்கையாளரை. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல பயணங்கள் மேற்கொண்டவர் எனினும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், பிரசங்கங்களைத் தவிர்த்தவர். தன் பெயரில் எந்த ‘அமைப்பு’ம், ’யாரும்’ செயல்பட அனுமதித்தது கிடையாது. அவருக்கென்று ஒரு நிரந்தர முகவரி இருந்ததில்லை. அவருடைய உடைமையாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. சின்ன சூட்கேஸில் சில துணிமணிகளுடன் சுற்றியவர். எந்த ஒரு வகைமையின் கீழும் வராத ஒரு மனிதர்.  

அறிந்துகொள்ளும் ஆவலில்,  ’முக்திநிலை’ அல்லது ‘ஞானநிலை’ அடைந்ததற்கு முந்தைய அவரது வாழ்க்கை பற்றி யாராவது துருவினால்,  பதில் இப்படித்தான்: ”என் வாழ்க்கை அற்பமானது. அதைப் பற்றித் தெரிந்துகொண்டு உங்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.” என்னதான் தன்னைச் சந்திக்க வந்தவர்களை அனுமதித்து,  உரையாடினாலும் தொடர் கேள்விகளுக்கிடையே, முகத்தில் அடிப்பதுபோல பலருக்குச்  சொல்லியிருக்கிறார்: ”என் மூலமாக உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என நினைத்து இங்கு வந்திருந்தால், ஏமாற்றமே மிஞ்சும். போய்விடுங்கள்!” கிளம்பும்போது யாராவது ”சரி, நாளைக்குப் பார்க்கலாம்..” என்றால், ”திரும்பி வராதீர்கள்” என்றும் சில சமயங்களில் அவரிடமிருந்து பதில் வந்திருக்கிறது. கேள்வி கேட்பவரைப் பின்னுக்குத் தள்ளும் காரசாரமான, எதிர்மறை பதில்கள். மனிதரோடு உரையாடல் நிகழ்வதே சாத்தியத்திற்கு அப்பாற்பட்டதாகத் தெரியும் நேரங்கள். இந்த மனுஷனைப் பார்க்க ஏன் மெனக்கெட்டு வந்தோம் என சிலருக்கு அலுப்போ, எரிச்சலோ தோன்றியிருக்கும்.  அதே சமயம், ஏற்கெனவே தெரிந்தவர்களோடு, புதிதாக வந்தவர்களிடமும் ஒரு நண்பனைப்போல் சரளமாக அரட்டை அடித்துக் கழித்த பொழுதுகளும் உண்டு. 

விசித்திரமானவர், இருந்தாலும் ’ஒரு ஞானி’ என அறியப்பட்டிருந்த அவரைப் பற்றி மேலும் அறியும் துருதுருப்பில் சிலர் இருந்தார்கள். அறிவிக்கப்படாத, அவரது  நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த அவரது இந்திய வருகைகளை எப்படியோ முகர்ந்து, தேடி வந்து பார்த்திருக்கிறார்கள்.  அடிக்கடிச் சந்திக்க, அவர் முன் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க என ஆசைப்பட்டவர்களும் உண்டு. பேச்சுவாக்கில் ஆன்மீகம், மெய்யியல்  எனப் புரிகிறமாதிரி, இதமாக ஏதும் சொல்லமாட்டாரா என்கிற எதிர்பார்ப்பில்.  அத்தகைய ‘உரையாடல்’களின்போதும் அவர் குறிப்பாக எதையும் சொல்லவந்தாரில்லை. தன் வார்த்தைகளின் மூலம் யாரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவோ, எவரையும் மாற்றவோ, நம்பவைக்கவோ முயன்றதில்லை. ”நாயின் மீது கல்லெறிவதுபோல என்மீது கேள்விகளை எறிகிறார்கள். நாய் குரைக்கிறது. நானும் குரைக்கிறேன்! அவர்களோ என் குரைப்பிலிருந்தும் ஏதேதோ அர்த்தம் காண்கிறார்கள்’ என்கிறார். போக்கில்லாத ஒரு போக்கு, இயல்பாக வியாபித்த ஒரு வெறுமை. இப்படியான சூழலிலும்  ஏதோ புரிந்துகொண்டார்கள் சிலர். அல்லது புரிவதாக எண்ணினார்கள். ஒன்றும் நடக்காவிட்டாலும் அவர் எதிரே உட்கார்ந்திருந்ததில், கொஞ்சநேரம் அவர் பேசுவதைக் கேட்டுவிட்டு வந்ததில் ஏதோ ஓர் அமைதியையும்,  விசித்திரத் திருப்தியையும் அனுபவித்ததாகச் சொன்னார்கள். தொடர்ந்தார்கள். இப்படி ஒரு வட்டம் அவரைச் சுற்றி உருவாகி,  கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் பெரிதாகிவந்தது. 

’யூ.ஜி.’ என்று நண்பர்களால், அபிமானிகளால் அழைக்கப்பட்ட யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி (Uppaluri Gopala Krishnamurti) எனும் மனிதர் உண்மையில் யார்? புகழ்பெற்ற சமகாலச் சிந்தனையாளரும், தத்துவஞானியுமான ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு உறவினர் அல்லர். இருவரும் பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் மாகாணத்தில் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்) பிறந்தவர்கள். ஒரு காலகட்டத்தில் மதராஸில் சந்தித்துச் சில வருடங்கள் பழகியிருக்கிறார்கள்.  இந்தியாவில் பலருடையதைப் போலவே, யூ.ஜி.யின் ஆரம்ப வாழ்க்கை மரபுவழி ஆன்மீகத்தின் பின்செல்வதாகவே தோன்றியது. இவருடைய  தாய் தன்  கர்ப்பத்தில் இவரைக் கொண்டிருந்த சமயம் வீட்டுக்கு வந்த ஒரு துறவி, ‘வயிற்றில் வளரும் பிள்ளை வருங்காலத்தில் பெரிய ஞானியெனப் போற்றப்படுவான்’ எனச் சொல்லிச் சென்றார்.  இவர் பிறந்த ஏழாவது நாள், தாயார் விஷஜுரத்தில் காலமானார். இறக்குமுன் அவர் தன் அப்பாவிடம் தன் பிள்ளைபற்றி அந்தச் சாமியார் சொன்னதைத் தெரிவித்து, மிகுந்த கவனத்துடன் குழந்தையை வளர்க்குமாறு வேண்டிவிட்டுச் சென்றார். 

தாத்தா ஒரு பிரபல வக்கீல். செல்வாக்குள்ளவர். ஆன்மீகவாதி. பூஜை புனஸ்காரங்களில் திளைத்த தாத்தாவினால் வளர்க்கப்பட்டார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. தாத்தாவைப் பார்க்கவென, பூஜைகள் நடத்தவென அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த சாமியார்கள், புனிதர்கள், அவர்களது கம்பீரம், கவர்ச்சி.. தாத்தாவே இவர்களைக் கண்டு பயப்படுகிறாரே! சின்னப் பையனான யூ.ஜி. சிந்திக்கலானான்: ’இதில் ஏதோ இருக்கிறது, நாமும் ஒருநாள் இப்படி ஆகவேண்டும்!’ ஒரு பிரமிப்புக் கலந்த ஆர்வம் அவனுள் முளைவிட்டிருந்தது. ஆனால் தாத்தாவின் முன்கோபம், கெடுபிடியான ஆன்மீக ஆசாரங்கள், சிறுவயது கிருஷ்ணமூர்த்திக்கு எரிச்சலையே அளித்தன. அவரோடு அவ்வப்போது முரண்பட்டான். வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சிடுசிடுக்க வைத்தான். ஒரு நாள் பூஜை, தியானம் என உள்ளே அமர்ந்திருந்தார் தாத்தா. வெளியே ஒரு இரண்டு-மூன்று வயதுக் குழந்தையின் விடாத அழுகை அவரது தியானத்தைக் கெடுத்தது. பூஜை முடிந்ததும், கோபத்துடன் வெளியேவந்த தாத்தா அந்தக் குழந்தையின் முதுகில் நாலு வைத்தார். பயத்தாலும், வலியாலும் மேலும் அது வீரிட்டுப் பதற, பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கிருஷ்ணமூர்த்தி வெகுண்டான். ‘ஒன்றும் தெரியாத குழந்தையைக் கண்மண் தெரியாமல் அடிக்கிறீர்கள்.. உங்களது தியானம் அவ்வளவு உயர்ந்ததென்றால், அது உங்களை சாந்தமாக்கி இருக்கவேண்டும்.. ஆனால் அப்படி இல்லையே.. மோசமான மனுஷனாக அல்லவா உங்களை ஆக்கியிருக்கிறது!’ எனக் கத்திவிட்டான். அரண்டுபோனார் தாத்தா. ஏதோ திருப்பிக் கத்திச் சமாளித்தார். பாட்டியோ,  ”கொலைகார மனம் இதுக்கு, பிள்ளையா இது!” எனக் கரித்துவிட்டு உள்ளே போனார். 

தன் மகளுக்குக் கொடுத்த வாக்கின்படி, பேரனை ஹிந்து ஞானமரபின்படி முறையாக வளர்க்கப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டார் தாத்தா. பால்ய வயதில் சாஸ்திரங்கள்,  மந்திரங்கள், ஸ்லோகங்கள் என தினம் முறையாகக் கற்றுவிக்கப்படுகிறார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. பதினான்கு வயதுக்குள் பல மந்திரங்கள், ஸ்லோகங்கள் தனக்கு மனப்பாடம் என்கிறார் பின்னாளில். வடக்கே இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் சென்று, சிவானந்தா ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். சுமார் எட்டு வருடகாலம் யோக முறைகளைக் கற்றுக்கொண்டார். ஸ்வாமி சிவானந்த சரஸ்வதியின் ஆசியுடன் முக்திக்கான வழிகாட்டல் கிடைக்குமோ என ஏக்கம். கழிந்தது காலம். திருப்தி இல்லை. இவரால் எனக்கு சமாதி நிலையைத் தரவோ, வழிகாட்டவோகூட முடியாது என ஒரு கட்டத்தில் தோன்ற, விலகி வந்தார் யூ.ஜி. இனி யாரிடம் போவது?  எந்த குரு அல்லது ஸ்வாமி.. யார்தான் தருவார் ‘இதை’?

மனமெலாம் முக்தி, மோக்ஷம் பற்றிய இடைவிடாத சிந்தனை பெருகினாலும்,  மதப் பிரசாரகர்கள், புனிதர்கள் பலரிடம் தென்பட்ட பொய்மையை அவ்வப்போது இனம் கண்டுகொள்ள நேர்ந்தது. மரபு சார்ந்த வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீது அவநம்பிக்கை வளர்ந்தது. மதம், கலாசாரம் ஆகியவற்றின் பிடி நாளுக்குநாள் தளர ஆரம்பித்தது. மதராஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய, மேற்கத்திய தத்துவம், உளவியல் என முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் பாதியைத் தாண்டவில்லை. அங்கேயும் பிரச்னை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன. ஒருநாள் தன் உளவியல் பேராசிரியரைத் தனியே சந்தித்தார் யூ.ஜி. ஏதோ பரீட்சை சம்பந்தமாகக் கேட்க வந்திருக்கிறான் பையன் என அவர் நினைக்க, யூ.ஜி.யிடமிருந்து வெளிவந்த கேள்வி: ”மனம், மனம் என்று எப்பொழுதும் சொல்லி வருகிறீர்களே, படித்து வருகிறோமே.. இந்த உடம்பில் எங்கே இருக்கிறது அது எனச் சொல்லமுடியுமா!” திடுக்கிட்ட பேராசிரியர் சமாளித்துக்கொண்டு, புத்தி சொன்னார். ”தர்மசங்கடமான, ஆபத்தான கேள்வியெல்லாம் வேண்டாம்! படிப்பில் கவனம் செலுத்து, பாஸ் பண்ணப் பார்!” ஆனால் முரண்டுபிடித்த அவர் மனதில் படிப்பின் சுவாரஸ்யம் போய்விட, அவரது மேற்படிப்பு முக்தி அடைந்தது. 

தாத்தா நெருக்கமான தொடர்பில் இருந்த மதராஸ் தியஸாஃபிகல் சொசைட்டியில் (The Theosophical Society, Adyar, Madras) வேலைக்குச் சேர்கிறார் யூ.ஜி. அவரிடமிருந்த  சாஸ்திரங்கள், புராணங்களின் மீதான அறிவு, மொழித்திறன் ஆகியவை அவரை வெளிநாடுகளுக்கு ஹிந்து மதப் பேச்சாளராக அனுப்பி வைத்தன. அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் மதப் பிரசங்கங்கள் தந்துவிட்டு இந்தியா திரும்புகிறார். 

மனம் மட்டும் எதிலும் அவரை லயிக்கவிடாமல் அடம்பிடித்தவாறு இருந்தது. ’ புத்தர், யேசு, ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்களெல்லாம் ’இருந்த’தாகக் கூறப்படும் அந்த ‘நிலை’தான் என்ன? எங்கே அது? ஏன் எனக்கு நிகழவில்லை?  ஆனால், இவர்களின் போதனைகளுக்கும், வாழ்வின் நிதர்சனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஏதாவது சொன்னால் ‘கோபப்படாதே!’ என்கிறார்கள். கோபம்தான் எனக்குள் எப்போதும் இருக்கிறது. ஆசை கூடாது, அஹிம்சை முக்கியம் என்கிறார்கள். எப்படி? மனம் பூராவும் கோபமும், வன்மமுமாகத்தான் இருக்கிறது. உண்மையை மறைத்து, போலியாகக் காட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். நிஜத்தை எப்படி மறைக்கமுடியும்? ஏன் நிராகரிக்கவேண்டும்? நான் பேராசைக்காரன், கோபக்காரன், வன்மமானவன், முரடன். இதுதான் நிஜம். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, வேறொருவன்போல், ஒரு போலியாக நான் வாழ்வதா? முடியாது’ எனக் கலவரமானது அவர் மனம்.

ஆன்மீக மாயமான் வேட்டை  தொடர்கிறது. ஆன்மீக மரபுவழி நம்பிக்கைகள் உதிர்ந்துவந்த நிலையில், நண்பர் ஒருவரின் உந்துதலினால், தன் 21-ஆவது வயதில் ஒருநாள் திருவண்ணாமலை வருகிறார் யூ.ஜி. ’அருணாச்சலத் துறவி’, ’பகவான்’ என்றெல்லாம் பலரால் போற்றப்பட்ட ரமண மகரிஷியைப் பார்ப்பதற்காக. அங்கே அவரைப் பார்க்க நேர்கையில், காமிக்ஸ் படித்துக்கொண்டோ, ஆசிரமத்துச் சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டோ சாதாரண மனிதராகத் தெரிகிறார் மகரிஷி. எதிலும் சந்தேகமும், அவநம்பிக்கையுமாக இருந்த யூ.ஜி.யின் மனம், “ஹ்ம்… இவரா ஞானி?” என்றது. மகரிஷி பொதுவாக  யார், யாரோ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்பவரில்லை. போதிப்பவருமில்லை. அபூர்வமாகவே வாயிலிருந்து வரும் வார்த்தைகள். அவரைத் தயக்கத்துடன் நெருங்கிய யூ.ஜி., தன்னைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்விகளை முன்வைக்கிறார். 

” ‘முக்திநிலை’, ’சமாதிநிலை’ என்றெல்லாம் சொல்கிறார்களே.. அப்படி ஒன்று நிஜத்தில் இருக்கிறதா?”

”ஆம். உண்டு” என்றார் மகரிஷி.

”ஒரு சமயம் முக்திநிலையிலும், மறு சமயம் வேறுவிதமாகவும் இருக்கமுடியுமா?”

”முடியாது. ஒரே நிலைதான். ஒன்று அதில் நீ இருக்கிறாய். அல்லது இல்லை.” -மகரிஷி.

கேட்கிறார் யூ.ஜி.: “உங்களிடம் இருக்கும் ’அதை’, எனக்குத் தரமுடியுமா?”

சில கணங்கள் மௌனம். கேள்வியைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையோ? சற்று குரலை உயர்த்தி மீண்டும் கேட்கிறார். மகரிஷி திரும்புகிறார். யூ.ஜி.யின் முகத்தைப் பார்த்துச் சொல்கிறார்:

”என்னால் தர முடியும். உன்னால் பெற்றுக்கொள்ள முடியுமா?” 

திடுக்கிட்டார் யூ.ஜி. இப்படி ஒரு பதிலா? ’என்ன ஒரு கர்வம்!’  என்று எரிச்சல்படுகிறார். மேற்கொண்டு ஏதும் கேட்கப் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் மகரிஷியின் அந்தக் கேள்வி தொடர்ந்தது, மனதை அரித்தது. ‘என்னால் ஏன் முடியாது? எத்தனைக் கட்டுப்பாட்டுடன் வருஷக்கணக்கில் ’யோக’ங்கள், ‘சாதனா’க்கள் செய்திருக்கிறேன். என்னால் முடியாதென்றால், வேறு யாரால் முடியும்?’ என முசுடான மனம் எதிர்க்கேள்வியை தனக்குள் கேட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப மகரிஷியின் கேள்வி யூ.ஜி.யைப்போட்டுப் பிராண்டியது. ’அது என்ன அது.. என்னால் பெற்றுக்கொள்ள முடியாதது! என்னால் முடியும். நான் அந்த நிலைக்கு வருவேன்’ என சத்தம் போட்டது சீண்டப்பட்டுவிட்ட அவரது மனம். அதற்குப்பின் ரமண மகரிஷியை அவர் சந்திக்கவில்லை. பின்னாளில் இந்த நிகழ்வுபற்றிக் கேட்கப்பட்டபோது, மகரிஷியின் அந்த பதில் அப்போது கோபத்தை விளைவித்தாலும், சரியான பாதையில் தன்னைத் திருப்பிவிட்டதாகச் சொல்லுகிறார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. ’இனி யாருடைய உதவியும் வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்பதாக மனம் இறுக, இலக்கை நோக்கிய ஆபத்தான பாதையில் தனியே பயணிக்கலானார். 

இன்னொரு பிரச்னை வேறு. பதின்ம வயதிலிருந்தே செக்ஸ் சம்பந்தமான உணர்வுகள் அவரைத் தொந்தரவு செய்துவந்தன. இதைக் கட்டுப்படுத்த முடியாது போலிருக்கிறதே. ஆனால், இது உடம்பின் தேவை, இயற்கையானதே எனவும் தோன்றியது. தப்புத்தண்டா செய்ய வேண்டியதில்லை, சமூகம்தான் இதற்கு ஒரு வழி செய்துவைத்திருக்கிறதே எனத் தீர்மானித்தார். அவருடைய 25-ஆவது வயதில் ஒரு தெலுங்கு பிராமணப் பெண்ணுடன் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்திக்குக் கல்யாணம். அடுத்த நாளே, தான் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறார்! இத்தனைக்கும் அந்தப் பெண் குஸுமா அவருக்கு மென்மையான, அன்பான மனைவியாகவே இருந்தார்.  யூ.ஜி.க்குக் குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஓர் இடத்தில் கொஞ்சநாள் உட்காரவிடாதே அவரது மனம்! மண வாழ்விலும் மனம் படிய மறுத்தது. ஆன்மீக உச்சம் நோக்கிய அந்த ஒரே தேடல்,  அவரைத் தொடர்ந்து எத்திக்கொண்டே இருந்தது. 

தியஸாஃபிகல் சொசைட்டியில் மீண்டும் வந்து சேர்ந்தபோது, அங்கே ஜே. கிருஷ்ணமூர்த்தி இருந்தார். அவரது மாலை நேரத்துப் பிரசங்கங்களைக் கேட்க நேரிடுகிறது. ஜே.கே.யுடன் நேரடி உரையாடல்களும் பின்னாளில் நிகழ்கின்றன. அவர் மனதைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்த முக்திநிலை பற்றிய (realisation, enlightenment) சந்தேகங்களை ஜே.கே.யிடமும் போட்டுப் பார்க்கிறார் யூ.ஜி. நேரடியாக, சரியாக எந்த பதிலும் கிட்டாததால் கோபமாகிறார். ”இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன் நான்.. ஆனால் பூனையோ அங்கில்லை!” எரிச்சலில் சொன்னார் யூ.ஜி. ஒருநாள் ஜே.கே.யிடம். ”பூனை அங்கேதான் இருக்கிறது!” என்றார் ஜே.கே. கோபமும், பதற்றமுமாக இருந்த யூ.ஜி.யைக் கவனமும் கண்ணியமுமாக, மென்மையாக நடத்துகிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ”உங்களால் இதைப்பற்றி எனக்கு ஏதும் சொல்ல முடியாதென்றால், நானும் உங்களிடமிருந்து எதையும் பெற முடியாதென்றால், எதற்காக நான் உங்கள் பேச்சைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்?” எனப் படபடத்துவிட்டு வெளியேறிவிடுகிறார் யூ.ஜி. 

தன் மூத்த மகனின் போலியோ நோய்க்குச் சிறந்த மருத்துவம் தரவென, மனைவி குழந்தைகளுடன் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்கா வருகிறார். வெளிநாட்டு உயர் மருத்துவத்தில் கையிலிருந்த பெரும் பணமும் வேகமாகக் கரைந்ததே ஒழிய, பையன் குணமாகவில்லை.  விட்டுவிட்டு அமைந்த மதச் சொற்பொழிவுகளில் ஏதோ சம்பாதித்தார். மனைவியும் கொஞ்ச நாள் அங்கு வேலை பார்க்கிறார்.  ஆனால் அமெரிக்காவில் காலத்தை அமைதியாக ஓட்டமுடியவில்லை. மணவாழ்வும் முறிந்துவிடும் விரக்தியான சூழலில், மனைவியையும், குழந்தைகளையும் இந்தியா திருப்பி அனுப்பிவிடுகிறார், தான் பின்னர் திரும்புவதாகச் சொல்லிவிட்டு லண்டன் வருகிறார். கையில் ஒன்றுமின்றி லண்டனின் தெருக்களில் போக்கற்று அலையுமாறு ஆனது. கொஞ்ச காசுக்காக, சில இடங்களில் இந்திய உணவு வகைத் தயாரிப்பைச் சொல்லிக் கொடுத்த சம்பவங்களும் உண்டு. ஆனால் இந்தியா திரும்ப விரும்பவில்லை. குடும்ப வாழ்க்கை மீதான பிடிப்பு போய்விட்டிருந்தது. காலமோ கவலையற்று நகர்ந்து கொண்டிருந்தது. திக்கற்றுத் திரிந்த மனிதரின் மனதில் வாழ்க்கையின் ஈர்ப்புகள், தாக்கங்கள் வலுவிழந்திருந்தன. லண்டனில் சுமார் மூன்று வருட காலம் சரியான ஊண் உறக்கமின்றிப் பெரும்பாடுபட நேர்ந்தது. இதைத்தான் ‘ஆன்மாவின் கருத்த இரவு’ (the dark night of the soul) என்கிறார்களோ என சில மதநம்பிக்கையாளர்கள் பிற்காலத்தில்  கேட்டதற்கு, ’வாழ்க்கையின் ஈர்ப்புகள், ஆசாபாசங்களோடு ஆன்மாவின் பெரும்போராட்டம் என இதைச் சொல்லமாட்டேன். ஆனால், ஆசைகள், நம்பிக்கைகள் போன்ற பிடிப்புகளெல்லாம் மரத்திலிருந்து விலகும் காய்ந்த இலைகளாக வெளியேறின’ என்கிறார் யூ.ஜி.

கடும் சோதனைக் காலகட்டத்தில், லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று: யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை. தங்க இடமுமில்லை. அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்த யூ.ஜி. இரவில் ஒரு பார்க் பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார். பார்த்துவிட்ட ஒரு போலீஸ்காரர் வந்து வெளியே போகச்சொல்கிறார். தன்னால் பிரச்னை இராது எனவும், தான் வீடில்லாதவன் என்பதால்,  தூங்கத்தான் வந்ததாகவும் இவர் சொல்ல, போலீஸ்காரர் மசியவில்லை. ’பார்க்கில் தங்க, தூங்க அனுமதியில்லை, கிளம்பு’ என விரட்டிவிட்டார். வந்தார் வெளியே. எங்கே போவது? லண்டனின் ஒரு பகுதியில் இருந்த ராமகிருஷ்ண ஆசிரமம் நினைவில் மின்னலடிக்க, இருக்கிற சில்லரைக்கு கொஞ்சம் ரயிலிலும், மிச்ச தூரத்தை நடையுமாகக் கடந்து,  இரவு பதினோரு மணிவாக்கில் ஆசிரம வாசலை அடைகிறார். கதவு சாத்தப்பட்டுவிட்டது. வெளிக்கதவை நெருங்கிய ஊழியர் ஒருவர் இந்த நேரத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை என விரட்டப் பார்க்கையில், உள்ளே இருந்து வெளிவந்த ஸ்வாமிஜி பார்த்துவிடுகிறார்.  அருகில் வந்து என்ன விஷயம் என விசாரிக்க, யூ.ஜி. தன் பையில் வைத்திருந்த சில காகிதங்களை எடுத்துக் காண்பிக்கிறார். அமெரிக்காவில் அவர் அளித்த ஆன்மீகப் பேச்சுகள் தொடர்பாக அவருடைய படத்துடன் நியூயார்க் டைம்ஸில் வந்த கட்டுரை, சான்றிதழ்கள் சில இருந்தன.  தன்னைப்பற்றி அறிமுகம் செய்துகொள்கிறார். ’இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்’ எனக் கேட்கிறார் ஸ்வாமிஜி. ஆசிரமத்தில் இருக்கும் தியான மண்டபத்தில் இரவைக் கழிக்கவேண்டும் என்கிறார் யூ.ஜி. இந்த நேரத்தில் தான் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாத நிலை எனக்கூறிய ஸ்வாமிஜி மனமிறங்கி,  ”பக்கத்தில் ஒரு ஹோட்டலில் ரூம் வாடகைக்கு எடுத்துத் தருகிறேன். இரவைக் கழித்துவிட்டு நாளைக்கு வாருங்கள்” என்கிறார். அவ்வாறே ஹோட்டலில் தங்கிவிட்டு யூ.ஜி. மறுநாள் மதியம் ஆசிரமத்தில் நுழைகிறார். ஸ்வாமிஜி இவரை உள்ளே போய்ச் சாப்பிடச்சொல்கிறார். 

யூ.ஜி. யைப் பின்னர் சந்தித்த ஸ்வாமிஜி, அவர் அங்கேயே தங்கலாம் என்றார். ஆசிரமத்துப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் பொறுப்பு காலியாக இருப்பதைக் கூறி, அவரைப் போன்ற ஹிந்து சாஸ்திர ஞானம் உடையவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் சொல்லி அழைக்கிறார். ‘தான் ஒரு காலத்தில் இந்த மாதிரி வேலைகள் செய்ததுண்டு என்றும், இப்போது அத்தகைய மனநிலையில் இல்லை எனக் கூறி யூ.ஜி. மறுக்கிறார். ”தங்குவதற்கு ஒரு ரூம் தாருங்கள். சாப்பிட்ட தட்டுகளைக் கழுவுகிற வேலையைச் செய்கிறேன். அல்லது அந்த மாதிரி வேலை ஏதாவது செய்கிறேன்” என்கிறார் யூ.ஜி. ஸ்வாமிஜி “இல்லை, இல்லை, அப்படியெல்லாம் இல்லை. நாம் இருவரும் சேர்ந்து இந்த இதழைக் கொண்டுவருவோம். முதலில் நீங்கள் ஓய்வு எடுங்கள். பிற்பாடு பேசலாம்” என்கிறார். வேறுவழியின்றி தங்குகிறார். ஒத்துழைத்து அடுத்த சில இதழ்கள் பிரசுரமாக உதவிசெய்கிறார் யூ.ஜி.  

ஒரு மதியம் ஆசிரமத்திலுள்ள தியான மண்டபத்துக்கு மாலையில் வருகையில், அங்கு பலர், குறிப்பாக இளைஞர்கள் பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கிறார் யூ.ஜி. மனம் கலங்குகிறது. ’அடடா.. இதைத்தானே நான் இத்தனைக் காலம் செய்திருந்தேன். இதுதான் இந்த நிலைக்கு என்னைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. முக்தி, மோக்ஷம் என்றெல்லாம் ஒரு மண்ணுமில்லை. எல்லாம் பித்தலாட்டம் என இவர்களுக்குச் சொல்லிவிடலாம். ஆனால் நம்பமாட்டார்களே.. தானாகத் தெரிவதற்குள்  வாழ்க்கையை முழுதுமாகப் பாழாக்கிக்கொள்ளப் போகிறார்கள், பாவம்..’ என்பதாக யூ.ஜி.யின் அடிபட்டிருந்த மனம் அவர்களது பரிதாபநிலை கருதி அழுதது. ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு, கையறுநிலையில் அவர்களைக் கனிவோடும்,  இரக்கத்தோடும் பார்க்கலானார். திடீரென, அது நிகழ ஆரம்பித்தது.  அவரது உடம்பு எதையோ குறிப்பாக உணரந்தது. முதுகின்  கீழ்ப்பகுதியில் .. என்ன மாதிரியான அதிர்வு அது? உள்ளே ஏதோ நகர்கிறதா.. 

முன்பெல்லாம் தனது ‘சாதனா’க்களின் விளைவாக, விதவிதமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ நிகழும்போதெல்லாம், அதை அவர் பொருட்படுத்தியதில்லை. சந்தேகம்கொண்டே அவைகளை அவதானித்தார். நம்மைத் திசை திருப்ப ’மனது நடத்தும் பித்தலாட்டம், ஏமாற்று வேலை’ என அலட்சியம் செய்திருந்தார். இப்போதும் மனம் ஏதாவது விஷமம் செய்கிறதா? ’சீன்’ போட்டுக் காண்பிக்கிறதா? இல்லையே. நிஜமாகவே அசைகிறதே ஏதோ, முதுகில் தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில். உள்ளே ஏதோ திடீரெனக் கலைந்து எழுவதுபோல, உயர்வதுபோல.. நிகழ்கிறதே. உன்னிப்பாகக் கவனிக்கிறார். முதுகெலும்பின் கீழ்நுனியிலிருந்து அலை, அலையாக, வளையம் வளையமாகக் கடிகாரத்திசை இயக்கமாகவும், எதிர்த்திசையிலுமாக மாறி, மாறி ஏதோ மெல்ல மேலெழுவதை உணரமுடிகிறது. இது நிச்சயம் உடல் சார்ந்தது. மனம் சார்ந்ததல்ல. மறுப்பதற்கில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சக்தி அலைகள் மேலே, மேலே எழுவதை அனுபவிக்கிறார் யூ.ஜி. கொஞ்ச நேரம் நிகழ்ந்த அது அடங்கியதுபோல் தெரிய, ஆச்சரிய உணர்வுடன் அங்கிருந்து வெளியே வருகிறார். 

மூன்று மாதம் எப்படியோ அங்கே தாக்குப்பிடிக்கிறார். ’நான் முடிந்துபோனவன். இப்போதுபோய் எனக்குள் ஏதோ நடக்கிறதா? இதை நம்புவது பைத்தியக்காரத்தனம் என்ற சிந்தனை. மறுபக்கம் ‘யாரோ எனக்கு உதவிசெய்கிறார் என்று ஏதேதோ வேலை செய்துகொண்டு இப்படியே தொடர்வது சரியில்லை’ எனவும் தோன்றுகிறது. மேற்கொண்டு ஆசிரமத்தில் தங்குகிற மனநிலை இல்லை. ஸ்வாமிஜியிடம் சொல்லிவிட்டு வெளியேறுகிறார். விவரிக்க இயலாத வெறுமை நிலையில் அலைகிறார் யூ.ஜி.

அப்போது அவருக்குத் தன் பையில் இருக்கும் இந்தியாவுக்கான டிக்கெட் நினைவுக்கு வருகிறது. இந்தியாதான் போக விருப்பமில்லை. பாரீஸுக்குப் போகலாமே! டிக்கெட்டை மாற்றிக் கொள்கையில் கொஞ்சம் மிச்ச பணமும் அதிலிருந்து கிடைக்கிறது. பாரீஸில் சில நாள்கள் தங்கிவிட்டு, பின்னர் என்ன தோன்றியதோ, ரயில் பிடித்து ஜெனீவா  போகிறார்.

மிச்சமிருந்த ஸ்விஸ் ஃப்ராங்குகளைக்கொண்டு ஜெனீவா ஹோட்டல் ஒன்றில் சில நாள்கள் தங்குகிறார். காசு தீர்ந்துபோக, விரக்தி வீரியம் காட்டுகிறது.  இந்தியா போகக்கூடாது என்கிற வைராக்யம் உடைய, இந்திய கான்ஸுலேட்டுக்கு சென்று நாடு திரும்ப உதவி கேட்கவேண்டியதுதான் என விரக்தியான முடிவு. இந்திய தூதரக அலுவலகத்திற்கு வந்து வைஸ்-கான்ஸலைச் (Vice Consul) சந்திக்கிறார். வேலை வெட்டியில்லாமல், கையில் காசோ, தங்கும் இடமோ ஏதுமின்றி அலையும் ஓர் இந்தியரா ஜெனீவாவில்?  விஜாரித்த அதிகாரிக்குத் தன் பேப்பர்கள் சிலவற்றைக் காட்டுகிறார். “One of the most brilliant speakers that India has ever produced” என்பதாக நார்மன் கஸின்ஸ் (Norman Cousins), ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் புகழ் வார்த்தைகள் அவற்றில். அந்த அதிகாரி ஆச்சரியத்துடன் யூ.ஜி.யை ஏறெடுத்துப் பார்க்கிறார். இத்தகைய ஒரு மனிதரை ’வாழ வழியில்லாத ஆள்’ என முத்திரை குத்தி, சர்க்கார் செலவில் இந்தியாவுக்குத் திருப்புவதா? நோ! “வேறு விதமாக உதவி செய்யலாம், அதுவரை நீங்கள் என்னுடன் தங்குங்கள்” என அவர் யூ.ஜி.யைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறார். சில நாள்கள் கழித்து மீண்டும் அவர் இந்தியத் தூதரகத்துக்கு யூ.ஜி.யை அழைத்துவந்து, மேற்கொண்டு இவருக்கு எப்படி உதவுவது என சகாக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.  அங்கே ’ரிஸப்ஷ’னில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்விஸ் பெண்ணோடு உரையாடிய யூ.ஜி. தன் கதையை அவரிடம் சொல்ல நேர்ந்தது. அந்தப் பெண் அறுபதை நெருங்கிக் கொண்டிருந்த வாலண்டைன் டி கெர்வன் (Valentine de Kerven). இந்தியத் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளர். ரிஸப்ஷனிஸ்ட் அன்று விடுப்பிலிருந்ததால் அந்த இடத்தில் வாலண்டைன் உட்கார நேர்ந்தது. வாழ்வின் அதிர்ச்சிகள், முரட்டுத் திருப்பங்களையெல்லாம் அனுபவித்து, மனதளவில் ஓரமாக ஒதுங்கியிருந்தவருக்கு, யூ.ஜி. யின் கதை ஆச்சரியமாக இருந்தது. ”இந்தியா திரும்ப தனக்கு விருப்பமில்லை” என்றார் யூ.ஜி. ”ஸ்விட்ஸர்லாந்தில் தங்க விரும்பினால் நான் ஏற்பாடு செய்கிறேன். இந்தியா போக விருப்பமில்லையென்றால் போக வேண்டாம்.” என்றார் சாதாரணமாக வாலண்டைன். யூ.ஜி. ஆச்சரியத்துடன் சம்மதித்தார். 

ஒரு மாதம் வரை யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தியை  இந்தியத் தூதரகம் கவனித்துக்கொண்டது. அதற்குள் வாலண்டைன் தங்க ஏற்பாடு செய்திருந்தார். தன் பொறுப்பில் யூ.ஜி. இருப்பார் என அலுவலகத்தில் சொல்லிவிட்டு, அவரை அழைத்துச் சென்றார். சில மாதங்களில் வேலையையும் ராஜினாமா செய்தார் வாலண்டைன். அவரது பென்ஷன் பணமும், சேமிப்புகளும், சிறிய வீடும்  இருவர் வாழ்விற்கும் போதுமானதாக இருந்தன. யூ.ஜி.யோடு பழகப் பழக, என்ன ஓர் அபூர்வமான மனிதர் என ஆச்சரியப்படலானார் வாலண்டைன். இருவருக்குமிடையே நட்பு உருவாகி, வளர்ந்தது. யூ.ஜி.க்காக ஒரு வங்கிக் கணக்கு திறந்து அதில் அவர் செலவுக்கென 10000 டாலர்களை உடனே போட்டவர் வாலண்டைன். இவர்தான் யூ.ஜி.யோடு ஒரு  தோழியாக கிட்டத்தட்ட 30 வருடங்கள்கூட இருந்து, யூ.ஜி.யின் இந்திய மற்றும் ஏனைய நாட்டுப் பயணங்களிலும் அவரோடு பயணித்தவர்.  வாலண்டைனிடம் மத நம்பிக்கைகள், ஆன்மீகத் தேடல் என்பதெல்லாம்  என்றும் இருந்ததில்லை. தன் இயல்புப்படி, வாய்த்தபடி வாழ்ந்தவர். இறை நம்பிக்கை இல்லாத, ஆனால் மென்மையான மனமுடைய அப்பாவிப் பெண்.  

லண்டனில் குண்டலினி அனுபவத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக தன் உடம்பில் ஏதேதோ நிகழ்ந்துகொண்டிருந்ததாக உணர்கிறார் யூ.ஜி. ’வெளியே ஒன்றையும் காண்பிக்காமல், உள்ளிருந்து கனன்று எரியும் உமிக் குவியல் போன்றிருந்தது என் உடம்பு’ என்கிறார். இதுவரை அவரில் இருந்துவந்த ’தேடல்’ இப்போது காணப்படவில்லை. எதைப் பற்றிய அக்கறையும் மனதில் இல்லை. குறிப்பாக, அவருடைய 49-ஆவது வயதிற்கு முந்தைய சில வருடங்களில் தனக்குள் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்ததாகக் கூறுகிறார். தலையின் மூளை இருக்கும் பகுதியில் விட்டுவிட்டு வலி. சகிக்கமுடியாத வலி. அதன் தாத்பர்யம் புரியாததால், தான் அடிக்கடி ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டதாகவும், ஒரு நாளைக்கு 15-20 கப் காப்பி குடித்துக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார் யூ.ஜி. ஆனால் ’அந்த வலி’ இதனாலெல்லாம் குறையவில்லை. தானாகத் திடீரென வந்து உக்கிரம் பெறுவதும், சில மணிநேரத்துக்குப்பின் சட்டெனப் போய்விடுவதுமாயிருந்தது. தனக்குள் சில அமானுஷ்ய சக்திகள் (ESP -Extra Sensory Perception போன்றவை) இயங்கியதை அவரால் உணரமுடிந்திருக்கிறது. குறிப்பாக, அவரைப் பார்க்க வருபவர் அறைக்குள் நுழையும்போதே, அவரின் கடந்த காலமும்,  எதிர்காலம் பற்றியும் தெளிவாகத் தெரிந்தது. ஒருவரின் கைரேகையைப் பார்த்து அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் துல்லியமாகச் சொல்லிவிட முடிந்தது. தன்னை அறியாமல் தான் சொன்னது நடந்துவிடுகிறது. ஏன் அப்படிச் சொல்ல நேர்ந்தது எனத் தெரியவில்லை. சில சமயங்களில், அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகளால் சிலருக்கு இடைஞ்சல்களும் ஏற்பட்டதால், சங்கடத்துக்குள்ளாகியதாகச் சொல்கிறார். ஆனால் தன்  ‘தேடல்’ பற்றியோ, ’இறுதி உண்மை’பற்றியோ, தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் வினோத சக்தி பற்றியோ, தன்னோடு வசித்த வாலண்டைனிடம் வாய் திறந்ததில்லை.  ஏன், யாரிடமும் எதையும் சொன்னதில்லை என்கிறார் யூ.ஜி. 

தனது 49-ஆவது வயதில் ஒருநாள் வீட்டில் ஒரு சோஃபாவில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தபோது திடீரென தாங்கமுடியாத அதிர்வைத் தன் உடம்பு எதிர்கொண்டதாகக் கூறுகிறார். உடம்போடு சோஃபாவும், தான் இருந்த இடமும் ஏன், இந்த பிரபஞ்சமுமே குலுங்குவதாக உணர்ந்த ஒரு பயங்கர அனுபவம் என்கிறார். வேறொரு நாளில், ஒரு சமயம் தன் உடம்பை அவரால் ‘பார்க்கவே முடியவில்லை’. திடுக்கிடுகிறார். வாலண்டைன் சமையலறையிலிருந்து வந்தவுடன் ’என் உடம்பைக் காணவில்லை, உனக்குத் தெரிகிறதா’ என அதிர்ச்சியுடன் கேட்கிறார். அந்தப் பெண்ணிற்கு இவருடைய நடவடிக்கைகள் பொதுவாகவே ஒரு மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது! ’என்ன கேள்வி இது யூ.ஜி., இதோதான் இருக்கிறதே உன் உடம்பு!’ என அவர் தொட்டுக் காண்பித்த பின்பும், தொட்ட இடத்தின் லேசான தொடு-உணர்வைத் தவிர, முழு உடம்பு  அவருக்குத் ‘தெரியவில்லை’. இன்னொரு நாள் ..  வாலண்டைன் வெளியே சென்றபின்,  ஓய்வுக்காகப் படுக்கையில் படுக்கிறார். உடனே அதே பிரம்மாண்ட அதிர்வு, குலுக்கல். ஒரு நிலையில் உடம்பினால் தாங்கமுடியாத அளவுக்குப்போய், நினைவை இழந்துவிடுகிறார். நினைவு மீள்கையில் 48 நிமிடம் ’அது’ நீடித்திருந்ததாக அறிகிறார். அதை நிகழ்ந்த ’மரணம்’ (clinical death) எனவே சொல்கிறார் யூ.ஜி. 

அதன்பின் இத்தகைய ‘மரணம்’ அவருக்கு அடிக்கடி நிகழ்வதும், மீண்டு வருவதும் தொடர்ந்திருக்கிறது. முதல் நிகழ்வுக்குப்பின், ஒவ்வொரு நாளும் அவரது உடம்பில் ஒரு  மாற்றம் தெரிய வந்திருக்கிறது. கழுத்தின் முன்புறம், நெற்றி, மார்பு, தொப்புளுக்கருகில் என விசித்திர வடிவங்களில் ஒரு ’புடைப்பு’ அல்லது வீக்கம் தெரிந்தது. கண்கள் தன்னிச்சையாக சிமிட்டுவதை நிறுத்திவிட்டன. அவை ‘பார்க்கும்’ விதத்திலும் மாற்றம். உடம்பில் தோலில் ஒரு மினுமினுப்பு வந்திருந்தது. எந்த சத்தத்தைக் கேட்டாலும், அது வெளியிலிருந்தன்று, தனக்குள்ளிருந்தே வருவதாக உணர்கிறார். இதுவரை செயலற்றிருந்த, உடம்பின்  நாளமில்லாச் சுரப்பிகள் (குண்டலினி யோகாவில் வரும் நாடிச்சக்கரங்கள்) உயிர்ப்பிக்கப்பட்டு முழுச் சக்தியுடன் இயங்க ஆரம்பித்திருப்பதை அவரால் உணர முடிந்திருக்கிறது. உடம்பின் உள்ளே நிகழ்ந்திருப்பது ஒவ்வொரு உயிரணுவிலும் (cell) ஒரே கணத்தில் நிகழ்ந்த ஒரு ’பிரம்மாண்ட வெடிப்பு’ என்கிறார்.  தன் உடம்பினால் பொறுத்துக்கொள்ள முடியாத கடும் அதிர்வுகளும், வலியும் அப்போது ஏற்பட்டன.  அந்த ‘நிலை’யைத் தோற்றுவித்தன எனக்  கூறுகிறார் யூ.ஜி. 

முக்தி, மோக்ஷம், சமாதி (realisation, enlightenment) – என்றெல்லாம் காலங்காலமாக மனிதனால் பேசப்பட்டு,   உத்வேகமாகத் தேடப்படும்,  ஆனால் தீவிர ’தேடல்’ உடையவர்களாலும் அடையமுடியாத, மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதென பிரமிக்கப்படும் ஒரு ’நிலை’. ‘எத்தனையோ பேர் எப்படி எப்படியோ என்னிடம் பக்தி செலுத்தினாலும், கோடியில் ஓரிருவரே எனை அடையக்கூடும்’ எனக் கீதையில் கிருஷ்ணன் சூட்சுமமாகக் கோடிகாட்டும் ஆன்மீக உச்ச ஸ்தானம்.  ’அப்படி ஒன்று உங்களுக்கு நிகழ்ந்ததா?’ என்று பிற்பாடு கேட்கப்படுகையில் ”ஆம். என் 49-ஆவது வயதில்” என்கிறார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி. 

’Enlightenment’ அல்லது ‘உள்ளொளிபெற்ற நிலை’ என்கிற வார்த்தையை அவர் உபயோகிக்க விரும்பவில்லை. ஆனால் இதனைப் பற்றிச் சொல்வதற்கு வேறொரு வார்த்தை கிடைக்காததால், தான் அடைந்திருக்கும் ‘நிலை’பற்றி  கேட்போரிடம் இப்படியான வார்த்தையைச் சந்தித்துப் பதில் சொல்வதாய்க் கூறும் யூ.ஜி., இது தன்னாலேயே,  ‘காரணமற்று விளைவது’ (acausal) என்கிறார்.  மேலும்.  இத்தகு ’சமாதி’ அல்லது ’முக்தி’நிலை, நரம்பியல்-உடலியல் (neuro-biological state) சார்ந்த நிலைதான். மதம், ஆன்மீகம், உளவியல் சார்ந்ததாக, மர்மமான ஒன்றாக இதனைப் பார்க்க வேண்டியதில்லை என அடிக்கடிக் கூறுகிறார். அவருடைய வார்த்தைகளில் இது ஓர் ”இயற்கைநிலை’ (Natural State). அவ்வளவுதான். 

”இதுதான் உங்களின் நிலையும்” எனவும் சொல்லி பேசிக் கொண்டிருப்பவரை ஆச்சரியப்படுத்துகிறார். ’என்னால் உணர முடியவில்லை, ஆனால் உங்களால் முடிகிறதே!’ – நம்புவதற்குக் கஷ்டப்படுகிறார் உரையாடிக் கொண்டிருந்தவர்.

யூஜி: ”அப்படியில்லை. உணர்வது, தெரிந்துகொள்வது என்பதன்று இது. ‘தெரிந்துகொள்ள’ முடியாதது. நீங்களாக இதைத் தெரிந்துகொள்ளவே முடியாது. இது தானாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. பிரக்ஞை என்பது இல்லாத நிலை… மேலும் எப்படி இதைச் சொல்வது எனத் தெரியவில்லை. என் பிரக்ஞையில் நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவன் என்கிற சிந்தனை வந்ததே இல்லை”. 

அவரைச் சந்திப்பவர்களில் பலருக்கு அவருக்கு ‘என்ன நடந்தது, ‘எப்படியானார் ’இப்படி’ எனத் தெரிந்துகொள்ளவே ஆர்வம். தனக்கு ’நிகழ்ந்த’தைப்பற்றி மேலும் விளக்க நேர்கையில், இது ஒரு ’பேரழிவு’ (calamity) என்கிறார். (இப்படியான வார்த்தைப் பிரயோகம் கேட்பவர்கள் அதன் முழுத் தாக்கத்தை, பரிமாணத்தைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக. பொதுவாக ஆன்மீக உலகில் கருதப்படுவதுப்போல் இது ஓர் ‘ஆனந்த அனுபவம்’ இல்லை எனத் தெளிவுபடுத்துவதற்காக.) இந்த ’பேரழிவின்’போது, இதுவரை அந்த ஜீவனால் என்னவெல்லாம் காலங்காலமாக அனுபவிக்கப்பட்டிருந்ததோ, நினவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ‘அனுபவ, கலாசாரக் கூறுகளாலான அறிவு’ என்பதெல்லாம் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு தூக்கிவீசப்பட்டது, அந்த ’நிலை’யில் ‘நான்’ என்பதாக, ‘சுயம்’ என்பதாக, ’மனம்’ என்பதாக எதுவும் இல்லை. அதனால்தான், இதைப் பேரழிவு என்று குறிப்பிட்டதாகச் சொல்கிறார். ’பேரழிவு’ என்பது எனக்கில்லை. ’அது ஒரு பேரானந்த அனுபவம்’ எனக் கற்பனை செய்து வைத்திருக்கும் உங்களுக்குத்தான்!’ எனச் சிரிக்கிறார் யூ.ஜி. 

”மனிதன் ஏன் ‘தான்’ என்றும், ’மற்றவன், மற்றது’ என்றும் பிரித்துப் பார்க்கிறான்? அதுதான் பிரச்னை எனில், இந்த ’இருமை’ (duality) எப்படி அவனில் வந்தது?” – கேட்கப்பட்டபோது யூ.ஜி. சொல்கிறார்: ”அப்படித்தான் நீங்கள் இயங்கமுடியும். இல்லாவிட்டால், ‘நீங்கள்’ என்பதான  உங்களது ‘கதை’ முடிவுக்கு வந்துவிடும்! (அதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.) ‘நான்’, ‘என்னுடைய’ என்பதாக நீங்கள் உங்களை உணர்வது, அனுபவிப்பது – அதுதான் உங்களின் அடையாளம். இப்படித் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் ’மனம்’ தன் ‘இருப்பை’ நிலைப்படுத்திக்கொள்கிறது. மனம் ’இல்லாத’ நிலை ஒருவேளை ’நிகழ நேர்ந்தால்’, அதாவது ‘நீங்கள்’ என்பது இல்லாத நிலையில் – என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அந்த ’நிலை’க்கு உங்களை வரவிடாமல், மனம் ’தன் இருப்பை’ எப்போதும் தக்க வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறது. கோடிக்கணக்கான வருடங்களாக இந்த ’மனம்’ தன்னைக் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. தன் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள, எல்லா தந்திரங்களும் அதற்குத் தெரியும்!”

தான் ஒரு குருவோ, ஆன்மீக போதகரோ அல்லர், யாருக்கும், எதையும் போதிக்க ’தன்னிடம் ஏதுமில்லை’ என்பதில் தெளிவாக இருந்த யூ.ஜி., குரு என்று ஒருவர் இருந்தால், அவர் எப்படி இருக்கவேண்டும் என ஒரு இடத்தில் சொல்கிறார். ’கைத்தாங்கல்கள் (crutches) வேண்டாம், தூக்கி எறிந்துவிடுங்கள்’ என உங்களிடம் சொல்பவராக இருக்கவேண்டும். ’எழுந்து நடங்கள்; விழுந்தால் நீங்களாகவே எழுவீர்கள், நடப்பீர்கள்’ என்று ஊக்குவிப்பவராக இருக்கவேண்டும், என்கிறார். ’இப்படிப்பட்ட ஒருவரைத்தான் உண்மையான குருவாக, நமது தொன்மையான கலாசாரமும் சொல்லியிருக்கிறது’ எனவும் அவர் ஓர் இடத்தில் சொன்னது ஆச்சரியம்!

பொதுவாகப் புத்தர், யேசு, ஆதிசங்கரர் என ஆதிகாலத்து ஆன்மீகத் தலைவர்களையும், தற்கால குருக்கள், புனிதர்களையும் கடுமையாக விமரிசிப்பவர் யூ.ஜி. ஆன்மீகம் என்கிற பெயரில் இப்போது நடப்பது சர்க்கஸ் என்கிறார். ”மதம், ஆன்மீகம் என்பதன்  பெயராலோ, சித்தாந்தம், அரசியல் கொள்கை என்றெல்லாம் சொல்லிக்கொண்டோ அலையும் மனித இனக் ’காப்பாளர்களிடமிருந்து’ (saviours of mankind) இந்த உலகம் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். தீராக் குழப்பங்கள், துன்பங்களிலிருந்து மனித இனத்திற்கு விமோசனம் கிடைக்க இது ஒன்றே வழி” எனும் கருத்துடையவர் யூ.ஜி.

மனித இனத்தின் கடவுள் மோகம் பற்றி இப்படிச் சொல்கிறார்: “கடவுள் என்பது உங்களுக்கு மிக உயர்ந்ததான ஓர் இன்பம். தங்குதடையற்ற ஆனந்தம். ஆனால் அப்படி ஒன்று இல்லை. எது இல்லையோ அதை விரும்புகிறீர்கள், நாடுகிறீர்கள் என்பதுதான் உங்கள் பிரச்னையின் வேர். முக்தி, மோக்ஷம், விடுதலை என்பவை, ’நிரந்தர ஆனந்தம்’ என்கிற ஒரே ’நோக்க’த்தின் வெவ்வேறு தோற்றங்கள்:” 

கடவுளைப் பற்றிப் பேச்சு தொடர்கிறது. கேள்வி கேட்பவர்களில் ஒரு பெங்களூர் விஞ்ஞானி: ”சார்! தொடர்பான  கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்”.

யூ.ஜி.: நானே தொடர்பறுந்தவன், இணைப்பில்லாதவன்..

கேள்வி: நாம் அறிவை (Knowledge) வளர்த்துக்கொள்வதில் குறியாக இருக்கிறோமே, ஏன்?  அறிவிற்காகவே அறிவா, இல்லை மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்காகவா, அல்லது வேறேதாவது காரணமா?

யூஜி.: அதிகாரத்துக்காக!  ’எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது!’ -என்பதில் தெரிவது அதிகாரம். அறிவிற்காக அறிவுவளர்ச்சி (Knowledge for the sake of knowledge), கலைக்காக கலை (art for art’s sake) என்பதெல்லாம் பேத்தல். நிச்சயமாக, மனித இனத்தின் நலத்திற்காக அறிவை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை.. 

’மனிதன் வாழும் லட்சணத்தைக் கவனியுங்கள்’ என்கிறார் யூ.ஜி. வேறொரு உரையாடலின்போது. ”ஒரு உயிரைப் பற்றிய உண்மையிலிருந்து மாறுபட்ட, எதிர்மறையான யோசனையில் (idea) அதைக் கொல்கிறான் மனிதன். தன் இனத்தின் இன்னொரு குழுவை தயவு தாட்சண்யமின்றித் தீர்த்துக் கட்டுகிறான். மிருகங்கள் மற்ற உயிரினங்கள் இப்படி திட்டமிட்டுக் கொல்வதில்லை. நமது கலாசாரம், நாகரீகம் என்பதெல்லாம் ’கொல் அல்லது கொல்லப்படு’ என்பதைச் சுற்றித்தான் நிறுவப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரிலோ, மத நம்பிக்கைகளினாலோ, அரசியல் கோட்பாடுகளுக்காகவோ இடையறாது கொல்கிறான் மனிதன்.”

மூளையின் பங்கு, நினைவாற்றல் என்பது பற்றிப் பேசுகையில் யூ.ஜி: ”நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உடலியல், நரம்பியல் நிபுணர்கள் நம்ப மறுக்கலாம். வருங்காலத்தில் நான் சொன்னது சரி என்கிற நிலைக்கு அவர்கள் வருவார்கள். உயிர் வாழ்வதில் மூளை என்பதன் பங்கு குறைவானது. மூளை ஒரு படைப்பு சக்தி அன்று. எதிர்வினையாற்றும் ஒன்றுதான் அது. நினைவாற்றல் (memory) என்பதென்ன? யாருக்கும் தெரியாது. நினைவு என்பதென்ன, நியூரான்களின் பணி என்ன என்பதற்கு நிபுணர்கள் சரியாகப் பதில் சொல்லவேண்டி இருக்கும். நான் சொல்வது என்னவென்றால், நினைவாற்றல்  என்பது உடம்பின் ஏதோ ஓர் இடத்தில் இருப்பதன்று. உடம்பின் ஒவ்வொரு ‘உயிரணு’வுக்கும் (cell) இதில் பங்குண்டு. மூளை, நினைவாற்றல் ஆகியவற்றை நாம் அதிகமாக,  தவறாகப் பயன்படுத்துகிறோம். அதனால்தான் உலகில் மனிதர்களின் நினைவு சக்தி குறைந்து வருகிறது, ‘அல்ஸாய்மர்’  (Alzheimer’s disease) போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன” என்கிறார் யூ.ஜி.

’இயற்கை நிலை’யை அவர் அடைந்தபின் உடம்பின் இயக்கம் அபூர்வமாக இருந்தது. நாடிச்சக்கரங்கள் இருந்த இடத்தில் புடைப்புகள் காணப்பட்டதோடு உடம்பில் சாம்பல் பூத்திருந்ததையும், கழுத்து சில நாள்கள் நீல நிறத்தில் காணப்பட்டதையும் நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். இதனால்தான் ஹிந்து புராணங்களில் சிவன் நீலகண்டன் என வர்ணிக்கப்பட்டிருக்கிறது போலும் என மேலும் சொல்லியிருக்கிறார் யூ.ஜி.. அவரது மார்பின் ஒருபுறம் சில நாள்களாகப் பெண்ணின் மார்பகம்போல் உருவெடுத்திருந்தது. அர்த்தநாரீஸ்வரக் கோலம்தான் இது என ஹிந்துமத நம்பிக்கையுள்ள நண்பர்கள் தெரிந்து ஆச்சரியப்பட்டுள்ளனர். விந்தைகள் பல காட்டிய அந்த உடம்பு வயோதிகத்திலும் டாக்டரிடம் அவரை அனுப்பியதில்லை. 

யூ.ஜி. மிகக் குறைவாகச் சாப்பிடுபவராக இருந்தார். தென்னிந்திய உணவு வகைகள் சிலவற்றோடு, மேற்கத்திய உணவு வகைகள் சிலவற்றையும் சமைக்கத் தெரிந்தவர். தன் வேலைகளைத் தானே செய்வார். தன் துணிகளைத் தானேதான் துவைப்பார். சின்ன வயதுப் பழக்கம் இது என்பார். தூக்கமும் பூனைத் தூக்கம்தான். பகலில்கூட அவ்வப்போது கொஞ்சம் படுத்துக் கிடந்துவிட்டு எழுந்துவருவார். 

88-ஆவது வயதில் அவருக்கு வயோதிகத்தினால் உடல் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்தவர், வலிகள், அசௌகரியங்கள் உடம்பில் இருந்தும் டாக்டரிடம் செல்ல மறுத்தார். ’ஆயுளை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. தன் முடிவைத் தானாகவே உடம்பு அடைய வேண்டும்’ என்றிருக்கிறார்.  இறப்பதற்கு இரண்டு வாரம் முன்பு நெருங்கிய நண்பர்களை அழைத்துக் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, எல்லோருக்கும் கைகூப்பி நன்றி சொல்லியிருக்கிறார். ஒரு சிலர்  போகாமல் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கையில் ‘அவரவர் தங்கள் ஊருக்குத் திரும்பி ஆகவேண்டிய வேலைகளைக் கவனியுங்கள்’ என்று வலியுறுத்தி அனுப்பிவிட்டாராம். அவர் இறந்தபின் அவரது உடலை என்ன செய்வது என மறைவிற்குச் சில நாள்கள் முன்பு கேட்டதற்கு, ’என்னைக் கேட்டால் இந்த உடம்பைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுங்கள் என்பேன்’ என்றவர் யூ.ஜி. கடைசி நாள்களின்போது சூஸன் என்கிற டாக்டர் நண்பரும், ஹிந்தி திரைப்பட இயக்குனரும் நீண்ட நாள் நண்பருமான மகேஷ் பட் (Mahesh Bhatt) மற்றும் இன்னொரு மேலைநாட்டு நண்பரும் மட்டுமே கூட இருந்தனர். மார்ச் 22, 2007 அன்று மதியம், இத்தாலியின் வாலக்ரோஸியா (Vallecrosia) நகரில், தான் தங்குவதற்காக நண்பர் ஒருவர் அளித்திருந்த வீட்டில் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார். சடங்கேதும் செய்யப்படாவிட்டாலும், அவரது பூத உடல் நண்பர்களால் தகனம் செய்யப்பட்டது. அஸ்தியை அவர்கள் ஒரு படகில் எடுத்துக்கொண்டுபோய் மத்தியதரைக் கடலில் கரைத்தார்கள். 

தொடர்புள்ள பதிவு: ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது – சொல்வனம் | இதழ் 200

— ஏகாந்தன் 

7 Replies to “…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி”

  1. மிகச் சிறப்பான ஒரு அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள். என்னைப் போல் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி அறியாதவர்களுக்கு அவரது வாழ்க்கையையும், ஆளுமையையும் பற்றிய ஒரு கோட்டுச் சித்திரமாகக் கட்டுரை அமைந்துள்ளது. நீண்ட கட்டுரை, என்றாலும் சரளமான மொழிநடை, அளவான தேவைக்கு அதிகமான சிடுக்குத்தன்மை இல்லாத வாக்கியங்களால் ஆன கட்டுரை என்பதால் வாசிப்பது எளிமையாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. அருமை!

  2. மிகவும் ஆழ்ந்து ஆர்வத்துடன் வாசித்தேன் ஏகாந்தன் அண்ணா, அது நீங்கள் எழுதிய விதம் தான் காரணமாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன், வாசிக்க வாசிக்க எனக்கு ஆச்சரியம், இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் கரு மற்றும் இதில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு சில விஷயங்களும் நான் சொல்லியிருக்கிறேன், ஆச்சரியமாக இருந்தது,

    இவரைப் பற்றி எங்கோ பெயர் மட்டும் கேட்டிருந்தாலும் இன்று உங்கள் பதிவின் மூலம் தான் இத்தனை விரிவாக அறிகிறேன்,

    நல்ல பதிவு

    கீதா

  3. யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியை பற்றி சிறப்பாக எழுதி உள்ளீர்கள். மிக்க நன்றி. நல்லோர்களைப்பற்றி அறியும்போது ஏற்படும் ஆனந்தம் பேரானந்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.