சுடோகுயி – பாகம் 2

          சுடோகுயி - பாகம் 1

[4]

[4]

”இரண்டாவது இருண்டகாலத்திற்கு பிறகு சுடோகுயி வெறும் கணினி விளையாட்டாக சுருங்கியது. 81×81 கட்டங்களில் விளையாடுவது சிறிய திரை கொண்ட கைபேசிகளில் சிரமாக இருந்ததால் 9×9 கட்டங்களில் எண்களை மட்டும் வைத்து விளையாடும் ’சுடோகு’ எனும் எளிய விளையாட்டு புழக்கத்திற்கு வந்தது.”

”சில ஆண்டுகள் கழித்து அதன் அடுத்த வடிவமாக எண்களுக்கு பதில் எழுத்துக்களை வைத்து ஆடும் விளையாட்டு அறிமுகமாகியது.”

“ஆனால் இம்முறை வந்தது பழைய விளையாட்டு அல்ல என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்”.

“’சுடோகு மற்றும் சுடோகுயி போன்ற விளையாட்டுகள் அனைத்தும் நோய்க்கிருமியை போன்றவை. மிகவும் ஆபத்தானவை. நாட்டின் தலைவிதியையே தலைகீழாக மாற்றிவிடும்’ -என்று முன்னாள் பிரதமர் ஒருவர், பிரதமர்கள் மட்டுமே வாசிக்க அனுமதியுள்ள பிரதமர்களின் நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். மறுபடியும் பிரபலமாகி வருவதால் கண்காணிக்கப்பட வேண்டிய விஷயங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டு சுடோகு விளையாட்டு தொடர்பான நடமாட்டங்கள் அனைத்தும் மத்திய பாதுகாப்பு துறையின் நேரடி புலனாய்வின் கீழ் இருந்தது. இந்த விளையாட்டை தரவிரக்கம் செய்யும் நபர்கள், கணினிகள், தொடுதிரைகள், கைபேசிகள் அனைத்தும் ஜி.பி.எஸ் கோணங்களின் நடமாட்டம் வழி ரகசியமாக கண்காணிக்கப்பட்டு பிரதமரின் அலுவலகத்திற்கு அன்றாடமும் அறிக்கை அளிக்கப்பட்டது. கைபேசியில் இந்த விளையாட்டை வைத்திருந்த சுமார் முப்பது நபர்கள் தங்களுக்குள் சங்கேத பாஷையில் உரையாடிக்கொள்வதையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கூடியிருந்ததையும் கண்காணித்த நிரலி அதைப்போன்ற ஒருசம்பவத்தின் சாத்தியம் தற்செயலின் சாத்தியத்தின் நிகழ்தகவை விட அதிகமாக இருக்கும் காரணத்தை குறிப்பிட்டு ”அவசரம், கவனம்!” என செய்தி அனுப்பியது.”

”இந்த விளையாட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் சிறிது சிறிதாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக அதை தடை செய்யும்படி நான் தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சருக்கு செய்தி அனுப்பினேன்” என்றார் பிரதமர்.

”உங்களின் அச்சம் நியாமானது, பிரதமரே. ஆனால் தற்போதுள்ள புதிய விளையாட்டு வேறுமாதிரியானது. ஒன்பது வரிசையிலும் அடுக்கிலும் சரியான எழுத்துகளை கண்டுபிடித்து எழுதினால் அதற்கு வெகுமதியாக கிடைப்பது ஒரு சொற்றொடர் மட்டுமே. அடுத்து வரும் வரி என்னவாக இருக்கும் என்பதை அறியும் உந்துதல்தான் விளையாடுபவரை தொடர்ந்து இயக்கும் விசை. அடுத்து வரும் வரிகளை கண்டுபிடித்து படிக்கத்தான் இளைஞர்கள் இப்படி மெனக்கெடுகிறார்கள்.”

”ஒரு வரியை படிக்கவா இத்தனையும்? என்ன வரி அது?”

”அதை இங்கு பகிர அரசின் சிறப்பு அனுமதி வேண்டும். ஏனென்றால் அது அரசால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஒரு புத்தகத்தில் வருவது.”

பிரதமர் செயலரை பார்த்து ’ஆம்’ என்பது போல தலையசைத்தார்.

”பிரதம அலுவலக முத்திரையின் பேரில் தடை செய்யப்பட்ட புத்தகத்தின் பகுதிகளை பகிர மனிதவளத்துறை அமைச்சருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதை பிரதம அமைச்சரவையின் குறிப்பேட்டிலும் பதிகிறேன்” என்று அறிவித்த செயலர் கணினித்திரையில் குறித்துக்கொண்டார்.

”நன்றி. இந்த விளையாட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை துப்பு துலக்கம் நானும் சேர்ந்து விளையாடினேன். அப்போது எனக்கு கிடைத்த வரிகள் இவை.’”

ஒளிர் திரையில் பெரிய எழுத்துக்களில் ஆங்கில வரிகள் தோன்றின:

#################################################################################################################

 1. It was said that a new person had appeared on the sea-front: a lady with a little dog.
 1. Dmitri Dmitritch Gurov, who had by then been a fortnight at Yalta, and so was fairly at home there,

had begun to take an interest in new arrivals.

 1. Sitting in Verney’s pavilion, he saw, walking on the sea-front, a fair-haired young lady of medium height, wearing a beret a white Pomeranian dog was running behind her.

#################################################################################################################

”இந்த வரிகளின் பொருள் என்ன? இவை எந்த புத்தகத்தில் வருகின்றன?”

“சுடோகு விளையாட்டில் கிடைப்பவை வெறும் வரிகள் அல்ல, கதைகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை ’குறுங்கதை’ எனும் ஏழு வரிகளில் எழுதப்படும் புனைவு ரோம் மக்களிடையே புழக்கத்தில் இருந்தது. ரோமின் இரண்டாவது இருண்டகாலத்தின்போதும் சிறு குழுக்களுக்குள் பரிமாறப்பட்டு குறுங்கதைகள் வாசிக்கப்பட்டன.”

”அவற்றுள் சில கதைகள் புலனாய்வு அதிகாரிகள் பயன்படுத்தும் பொருள்கூட்டும் நிரல்களையும் தாண்டி சங்கேத குறியீடுகள் கொண்டிருந்ததால், புரிந்துகொள்ள முடியாத இன்னும் தீர்வு செய்யவேண்டிய தரவுகளில் ரகசிய பட்டியலில் அவற்றை அதிகாரிகள் நெடுங்காலம் வைத்திருந்தார்கள்.”

”நிதி நெருக்கடி காரணமாக புலனாய்வுத்துறை ஆட்குறைப்பு செய்தபோது இது போன்ற விஷயங்களை கண்காணிக்கவும் பதிவு செய்து பராமரிக்கவும் போதுமான மனிதவளம் இல்லாமல் ஆகி, வேறு வழியில்லாமல் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான தகவல் பரிமாற்றங்களை ஒரு அவசரச்சட்டத்தின் ஆணை வழி அரசு தடை செய்தது. ஆகவே குறுங்கதை வடிவமும் இல்லாமல் ஆகியது.”

”குறுங்கதையின் மூல வடிவம் பலநூற்றாண்டுகள் பழையது. இலக்கிய வடிவங்களுள் இறுதியாக எஞ்சிய ஒன்று. முற்காலத்தில் ’சிறுகதை’ என்று பெயரில் அழைக்கப்பட்டது. ரோம் நிர்மாணிக்கப்பட்ட புதிதில் இங்கும் சிலர் சிறுகதைகளை எழுதிப்பார்த்திருக்கிறார்கள். சுடோகு விளையாட்டில் எனக்கு கிடைத்த வரிகள் 1899 ஆம் ஆண்டு The Lady with the Dog என்ற தலைப்பில் ஆண்டன் செகாவ் என்பவர் எழுதியவை. ஏதோ ஒரு தேவையின் காரணமாக அது இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டு மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கிறது”

”ஆனால் கதைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு குறைந்தது இருநூறாண்டுகள் இருக்கும் இல்லையா. தடைசெய்யப்பட்ட புத்தகம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது?”

”தொழிநுட்பம், விஞ்ஞானம் தொடர்பான மேனுவல்கள் தவிர மீதி புத்தகங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு இலக்கிய பிரதிகளே இல்லாமல் ஆனபோது, அப்புத்தகங்களின் மின்வடிவங்கள் அடங்கிய மைக்ரோசிப்புகள் ரகசியமாக விற்பனைக்கு வந்தன. கருப்புச்சந்தையில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலரின் கைவசம் இருந்த மைக்ரோசிப்புகள் புலனாய்வின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டபின் அவற்றையும் அரசு தடை செய்தது.”

”அதற்கு ஒரு வாரம் கழித்து சட்டவிரோதமாக ரோமின் எல்லையை தாண்டிச்சென்ற ஒருவர் தன் கைவசம் இருந்த மைக்ரோசிப்பின் உள்ளடக்கத்தை இணையத்தில் ரகசியமாக கசியவிட்டதாக சொல்லப்படுகிறது. அது எங்கோ எப்படியே படியெடுக்கப்பட்டு அதை எவரோ ஒருவர் அகழ்வாராய்ச்சி செய்து மீள்கண்டுபிடிப்பு செய்திருக்க வேண்டும்”

”ஆச்சரியம். ஒரு கதைக்காக இளைஞர்கள் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?”

”இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கேள்வி பிரதமரே! எனக்கு அளிக்கப்பட்ட நேரம் ஏற்கனவே முடிந்து விட்டது. விரிவாக சொல்லாவிட்டால் சிக்கலின் உள்மடிப்புகள் விளங்காது என்பதால் நீண்ட வரலாற்றை கோட்டுருவமாக சொல்லவேண்டியதாயிற்று. ஆனால் இதை விவாதித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இன்னும் சில விஷயங்களையும் சொல்லியே ஆகவேண்டும். ஆகவே அரைமணி நேரம் கூடுதலாக அனுமதிக்க வேண்டுகிறேன்”

”சுடோகு விளையாட்டை தடைசெய்து தவறு – என்று தலைப்பிட்டு நீங்கள் அனுப்பிய அறிக்கையை பார்த்தேன். ஏன் தவறு என்று விளக்கவே இங்கு அழைக்கப்ட்டிருக்கிறீர்கள். ஆகவே உங்களின் அறிக்கையில் உள்ளவற்றை நீங்கள் தொடர்ந்து விரிவாகவே சொல்லலாம்”

”நன்றி. இப்போது நான் சொல்பவை நான் கண்டுபிடித்த உண்மைகள் அல்ல. இவைகளை வாசித்து அறிந்து இங்கே சொல்கிறேன்.

“2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாஸசூசட்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறையில் சுமந்தன் என்பவர் ஆராய்ச்சியாளராக இருந்தார். பெரும் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், இசைக்கலைஞர்கள் ஆகியவர்களுக்கு ஏற்படும் மூளைச்சோர்வுக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மனித மூளை இயங்குவதற்கான மொத்த மின்தூண்டல்களும் மூளையின் ஒரு சிறு பகுதியில் இருந்து தோன்றுவதை கண்டார்.”

”……இதயம் இயங்குவதற்கான மின்தூண்டல்கள் இதயத்தின் பேஸ்மேக்கர் என்ற பகுதியில் உண்டாகிறதல்லவா… அதைப்போல. ……அதாவது சுமந்தன் கண்டுபிடித்தது மூளையின் மூளையை.”

“வெளிப்புற தூண்டல்களுக்கு ஏற்ப துலங்குவதை கொண்டு அப்பகுதி இரு பகுதிகளாக இயங்குவதை அறிந்து அதன் இருமையை குறிக்கும் விதமாக அந்த உறுப்புக்கு ”நியுமரோமோட்டஸ்” அதாவது எண் (numero) உணர்ச்சி (motus) ஆகிய இரண்டுக்கும் உரிய ஆதாரமான பகுதி, என்று பெயரிட்டார்.”

“அதாவது, கணிதம் எந்திரவியல் போல தர்க்கத்தின் கட்டுப்பாடுடன் தொடர்புடைய மின்தூண்டல்களின் பகுதி நியுமரோ. இசை, நாடகம் போல உணர்வெழுச்சியுடன் தொடர்புடையவற்றின் பகுதி மோட்டஸ்.”

”நியூமரோமோட்டஸ் சீராக இயங்க தேவையான புறத்தூண்டல்களை ’பார்ஸிபஸ்’ (pars =பகுதி; cibus =உணவு) அதாவது ”மூளைக்கென்று தேவைப்படும் உணவு” என பெயரிட்டு அவைகளை பட்டியலிட்டு வகைப்படுத்தி விரிவாக ஆராய்ந்தபின் அவர் இந்த முடிவுக்கு வந்தார்.”

”அவர் முன்வைத்த தியரியை எளிமைப்படுத்தி சுருக்கமாக இப்படிச்சொல்லாம். நியுமரோமோட்டஸ் நியூமரோ- மோட்டஸ் என இரண்டாக பிளவு பட்டிருந்தாலும் இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. இரண்டில் இது முக்கியம் இது முக்கியமில்லை என்று ஒன்றை மற்றதிலிருந்து பிரித்து வரையறுக்க முடியாது. ஒன்றால் தூண்டப்பட்டு மற்றது இயங்குவதால் மூளையின் சீரான இயக்கத்திற்கு இரண்டு பகுதிகளையும் தூண்டும் புறத்தூண்டல்களும் தேவைப்படுகின்றன. அதாவது நியுமரோமோட்டஸ் அதன் உட்சபட்ச திறனுடன் தொடர்ந்து சீராக இயங்க பார்ஸிபஸ்கள் தேவையாகின்றன.”

”கணித நிபுணர்களின் நியூமரோ சரிவர இயங்க அவர்களின் மோட்டஸின் செயல்பாடு மிகவும் அவசியம், இசைக்கலைஞர்களின் மோட்டஸின் இயக்கம் நியுமரோவை பெரிதும் சார்ந்துள்ளது என்று எளிமையாக சொல்லலாம். புதிய விஷயங்களை உருவாக்கும் மையம், அதாவது படைப்பாற்றலை நேரடியாக கட்டுப்படுத்தும் பகுதி நியுமரோமோட்டஸ் என்பதால் போதுமான அளவு பார்ஸிபஸ்கள் இல்லாமல் போகும்போது நியுமரோமோட்டஸின் செயல்பாடு குறைந்து புதிதாக எதையும் படைப்பதற்கான விசையும் ஆற்றலும் மட்டுப்படுகின்றன.”

”இது கூட பெரிய விஷயமில்லை. இதற்கு அடுத்ததாக அவர் கண்டுபிடித்துதான் அவருக்கே பெரும் அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. அதன் பிரம்மாண்டத்தை எண்ணி பீதியில் மனம் பிறழ்ந்து சிலமுறை மூர்ச்சையாகி விழுந்தார். மனஎழுச்சியில் பல நாள்களை அவர் உறக்கமின்றி கழிக்கவேண்டி வந்தது. மனிதகுலத்தின் நுட்பமான ஒரு ரகசியத்தை, பெரும் கலைஞர்களின் வீழ்ச்சியின் மர்மத்தை, வரலாற்றில் சுடர்விட்டு எரிந்த பெரும் ஆளுமைகள் ஒளிகுன்றி அணைய ஆரம்பிப்பதன் காரணத்திற்கான ஆதாரமான ஒரு புள்ளியை, அவர் அறிந்துவிட்டிருந்தார். நியூமரோமோட்டஸ் என்பது அதன் அளவில் ஒரு தானியங்கி உறுப்பு. பார்ஸிபஸ்களின் தேவை மற்றும் அளவு ஆகியவற்றை கண்காணிப்பது மட்டுமல்ல, தேவைப்படும்போது அவற்றை ஆணையிட்டு பெற்றுக்கொள்ளவும் நியூமரோ மோட்டஸுக்கு ஆற்றல் உண்டு என்பதுதான் அது.”

”பசிக்கும்போது உணவு தேடுவது போல, பார்ஸிபஸ்கள் இல்லாமல் ஆகும்போது அவைகளை தேடிப்பெறுவதற்கான தூண்டலை நியூமரோ மோட்டஸ் உருவாக்கி மூளைக்கு அனுப்புகிறது. மனிதன் என்பவன் மூளையின் அடிமை அல்ல, என்ற கூற்று எல்லா சூழல்களிலும் உண்மை அல்ல. வயிற்றுக்கான பசியும் மூளைக்கான பசியும் வேறு வேறல்ல’ என்பதையும் அவர் தன் ஆராய்ச்சிக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.”

“சுமந்தனின் ஆய்வு முடிவின்படி இசை, சிறுகதைகள், பாடல்கள் அனைத்துமே ”பார்ஸிபஸ்கள்” என கருதத்தக்கவை. போதைப்பொருளான டெஸ்மிதைல்புரோடினின் வேதிஅமைப்பு நியுமரோ மோட்டஸின் செயலில் பங்கெடுக்கும் ஆதாரமான மூலக்கூறு ஒன்றின் வடிவத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை வைத்துப்பார்க்கும்போது டோபமின் நியூரான்களின் மீது செயல்படும் போதைப்பொருள்கள் அனைத்துமே பார்ஸிபஸ்கள்தான் என்று கருத இடமிருக்கிறது. ஒரு அரிய பழம்பெரும் போதைப்பொருளைப்போல இந்த இளைஞர்கள் பலநூற்றாண்டுகளுக்கு முன் தடைசெய்யப்பட்ட சிறுகதைகளை கண்டுபிடித்திருப்பதை பார்த்தால் இலக்கியம் ஒருவகையான பார்ஸிபஸ் என்ற கூற்று சரியானதுதான் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.”

”இதை இன்னொரு முக்கியமான விஷயத்துடன் இணைத்து புரிந்துகொள்ளலாம். சற்று கவலை அளிக்க கூடியது என்றாலும்”

”கடந்த அறுபது வருடங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப சாதனைகள் ஆகியவற்றை ரோம் மக்களின் மூளையின் நரம்பியல் மின்வேதி அமைப்புடன் தொடர்புறுத்தி தொடர்ந்து தகவல் சேகரித்து ஆராய்ந்துவரும் குவாண்டம் கணினி கொடுத்த ரகசிய அறிக்கையில் உள்ள பீதியான விஷயங்களில் இதுவும் ஒன்று. நேற்று மனிதவளத்துறை அமைச்சருடன் பேசியும் இதை உறுதிசெய்துகொண்டேன்.”

”மாபெரும் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்ப பாய்ச்சல்கள், சாதனைகள் என்று சொல்லும்படி கடந்த ஐம்பது வருடங்களில் எதுவுமே நிகழவில்லை. வெறுமனே இருப்பதை அப்படியே வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.”

”நம் பொறியியல் வல்லுநர்களும் மருத்துவர்களும் மேனுவல்களில் இருப்பதை உள்ளது உள்ளபடியே பின்பற்ற பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேனுவல்களுக்கு வெளியே அவர்களால் புதிய ஒன்றை சிந்திக்கவே முடியவில்லை. புதிய கருவிகள் தொழில்நுட்பங்கள் ஆகிவற்றை உருவாக்க தேவைப்படும் படைப்பாற்றலை கணித்து அவற்றை சமகால மனிதர்களின் மூளையின் படைப்பாற்றலுடன் ஒப்பிட்டு சமன்பாடுகளின் வழி ஆராய்ந்த குவாண்டம் கணினியின் இறுதி எண்கள் எதிர்மறையான எண்களில் முடிகின்றன.”

”எதாவது ஒரு காரணத்துக்காக இன்று நடைமுறையில் உள்ள தொழில் நுட்பங்கள் எதையாவது ஒன்றை முற்றிலுமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது பெரும் ஆபத்தில் முடியும். எந்த துறையிலும் அப்படி ஒன்றை செய்துமுடிக்க தேவையான மூளை ஆற்றல், தற்போது நம்மிடம் இல்லை.”

பிரதமர் அசையாமல் அமர்ந்திருந்தார்.

இறுகி உணர்ச்சிகள் அற்றுப்போய் ஒரு பழைய நூற்றாண்டின் வெண்கல சிலையைப்போல.

முகத்தின் தசைகள் மட்டும் அசையும்படி, சன்னமான வேதனையான குரலில் பேசினார்.

”பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் போதையையும் விளையாட்டையும் தவிர வேறு எதையும் அறியதவர்களாக இருக்கிறார்கள். வேறு எதையும் அறிவதற்கான ஆர்வம் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. பூமியிலிருந்து விண்கப்பலேறி மார்ஸுக்கு நிரந்தரமாக குடியேறிய சாதனையாளர்களின் வம்சாவழிகள் நாம். இப்படி ஒரு நிலைக்கு எப்படி வந்தோம்? என்னதான் ஆனது?”

அறையில் கடும் குளிரைப்போல மெளனம் நிறைந்திருந்தது.

கண் இமைப்பது தவிர அவையினரிடம் வேறு ஒரு சலனமும் இருக்கவில்லை.

”ஒன்றரை மணிநேரமாக நான் பேசியவற்றின் அச்சு இந்த கேள்விதான் பிரதமரே!” இந்தக்கேள்விக்கான பதில்தான் ரோமின் வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டது.”

“நம் பள்ளி, கல்லூரிகளில் தொழில்நுட்பம் தவிர வேறு எதுவுமே கற்பிக்கப்படுவதில்லை. தேவையற்றது என நாம் கற்பதுமில்லை. வரலாறு பற்றிய மேனுவல்களே எங்கும் தற்போது கைவசம் இல்லை என்பதால் நம் வரலாறு நமக்கே தெரிவதில்லை. நான் இங்கு வைத்த தகவல்கள் அனைத்தும் பிரதமரின் அலுவலகத்தின் முத்திரையை பயன்படுத்தி நிலவறையில் உள்ள ஆவணக்காப்பகத்தில் பலமாதங்கள் ஆய்வு செய்து, தேடி சேகரித்தவை.”

[5]

”2113ஆம் ஆண்டு நிகழந்த பிரம்மாண்டமான கதிரியக்க விபத்தின் காரணமாக பூமி மனிதவாழ்வுக்கு தகுதியற்றதாக ஆகியது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியால் திட்டமிட்ட காலத்துக்கும் சில ஆண்டுகள் முன்னதாகவே பூமியை விட்டு மார்ஸுக்கு கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொண்டுவர வேண்டிய சரக்குகளின் பட்டியலில் அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், தற்காலிக குடில்கள், கட்டுமானப்பொருள்கள், கணினிகள், வாகனங்கள், எரிபொருள்கள் இவைகளே முதலிடம் பெற்றன. புத்தங்கள் என்றால் அறிவியல் பாடநூல்கள், தொழில்நுட்ப பாடநூல்கள் இவைகளே அதிகமிருந்தன.”

“செவ்வாயில் வந்து இறங்கியதும் உணவு தயாரிக்கும் பசுங்கூடங்கள், நீர்ச்சாலைகள், மருத்துவக்கூடங்கள், மருந்து தயாரிக்கும் சாலைகள், உதிரிபாகங்களிலிருந்து வாகனங்களை கூட்டும் கூடங்கள், கால்நடை நிலையங்கள், தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள், மருத்துவப்பள்ளிகள், தொழிற்பள்ளிகள், ஆகியவயையே முழுக்கவனம் பெற்றன. இவை அனைத்திற்கும் தேவையான சாஸ்திரநூல்களும், பாடநூல்களும் கொண்டுவரப்பட்டதால் குடியேறி பல வருடங்களுக்கு வேறு நூல்கள் எதுவுமே தேவைப்படவில்லை. இவை அல்லாத வேறு நூல்களை வாசிக்க அவகாசமும் இருக்கவில்லை.”

”தற்காலிக குடில்களில் வாழ்வது பெரும் போராட்டமாக இருந்தது. சூரியப்புயலாலும், மின்காந்த சூறைக்காற்றிலும் முதல் மாதத்திலேயே நூற்றுக்கணக்கானோர் மடிந்தனர். மார்ஸில் மனித இனம் நிலைபெற்று வாழ முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.”

”அதற்கு பிறகுதான் நிரந்தரகூரை அமைக்கும் திட்டம் பெரும் ஆவேசத்துடன் முன்னெடுக்கப்பட்டது. மிகவும் அபாயகரமான இந்தப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் மாண்டனர். சூரியப்புயலுக்கு எதிரான நிரந்தர தடுப்பாகவும் அதே சமயம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திறனும் உடைய மேற்கூரையை நிரந்தரமாக பொருத்தி நிர்மாணித்து முடிக்கவே இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.”

”அதைத்தவிர பயிர்கள் காய்கறிகள் பழங்கள் ஆகியற்றை பசுங்கூடங்களில் வளர்ப்பது, பராமரிப்பது, அறுவடை செய்வது, பதப்படுத்துவது என அனைவரும் இரவுபகலாக உழைக்க வேண்டி வந்தது. அத்தியாவசிய தேவைகள், தொழிற்பள்ளிகள், எரிபொருள் நிலையங்கள், தொழிற்சாலைகள், புதிய வாழ்க்கைக்கு தேவைப்படும் பல்வேறு தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த தேவையான ஆய்வுகள் என ஏராளமாக வேலைகள் இருந்தன.”

“ஆனால், அவ்வளவு வேலைகளையும் செய்து முடிக்க போதுமான மனிதவளம் இருக்கவில்லை.”

”ஆகவே பல வேலைகள் முடிக்கப்படாமல் ஆகி நிலுவையில் உள்ள வேலைகளுக்காக தனியாக ஒரு புது அட்டவணை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் அனைவரும் கூடுதலாக உழைப்பதற்கான நேரம் குறிக்கப்பட்டு புதிய அதிகப்படியான பொறுப்புகளிலும் கவனம் செலுத்தும்படியும் மேலும் கடுமையாக உழைக்கும்படியும் கோரப்பட்டதால் மக்களின் ஒய்வுநேரம் குறைந்தது. இளைப்பாறவும் உறங்கவும் மட்டுமே அவகாசம் கிடைத்தது. ஆகவே இசை, இலக்கியம் ஆகியவற்றை ’அவசியமற்றவை’ என கருதும் மனநிலை ஏற்பட்டது.”

”அன்றாடமும் தேவைப்படும் அத்தியாவசியமான தொழில்நுட்ப கையேடுகள் அவற்றை விளக்கி பாடமாக கற்பிக்கும் புத்தகங்கள் ஆகியவை ’மேனுவல்’ என அறியப்பட்டன. கதை கவிதை போன்ற அவசியமற்றவற்றை உள்ளடக்கியவை ’புத்தகம்’ என அழைக்கப்பட்டன. தேவை காரணமாக மேனுவல்கள் ஆயிரக்கணக்கில் படியெடுக்கப்பட்டு எப்போதும் புழக்கத்தில் இருந்தன. எவ்வித தேவையும் இருக்கவில்லை என்பதால் புத்தகங்களை எவருமே தேடவில்லை. அதைப்போன்ற அவசியமற்ற விஷயங்களுக்கு நேரமே இருக்கவில்லை.”

”திருட்டுத்தனமாக மேனுவல்களுக்கிடையே புத்தகங்களை மறைத்து வைத்து படிக்கும் வழக்கம் சிலரிடம் இருந்தது. ஒரு முறை எரிபொருள் கிடங்கில் வேலைசெய்து கொண்டிருந்தவர்களுள் அப்படி ஒளித்து வைத்து ’புத்தகம்’ படித்துக்கொண்டிருந்த ஒருவரின் கவனக்குறைவால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. எரிபொருள் நிரப்பும் பெரும் கொள்கலனை உடனே அடைத்து மூடாததால் வழிந்த எரிபொருள் தீப்பற்றி எரிய ஆரம்பித்து கட்டுக்கு அடங்காமல் சென்றது. அப்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று ஆகாயகப்பல்களின் பெரும் சரக்கு கிடங்குகள், இருபெரும் கணினிநிலையங்கள், மூன்று தகவல் மையங்கள் அனைத்தும் கருகி அழிந்தன. விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு இருவருக்கும் அதுவரை அளிக்கப்பட்டதிலேயே அதிகபட்சமாக பத்து வருடங்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.”

”அதற்குப்பிறகு புத்தகங்களை வைத்திருப்பதே பெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டு புத்தகங்கள் அனைத்தும் கைப்பற்றி அகற்றப்பட்டு அரசின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன.”

”அதையும் மீறி திருட்டுத்தனமாக ’புத்தகங்கள்’ வாசிப்பவர்கள் சிலர் அப்போதும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் பிடிபட்டு மனித உழைப்பை வீணடிக்கும் நாட்டுப்பற்று அற்ற தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்டு கடுமையான தண்டனையை அனுபவிக்கும்படி ஆகியது. ஆகவே புத்தகங்களை தொடவே மக்கள் கூசி அஞ்சும் நிலை உருவாகியது.”

”மார்ஸூக்கு வந்து சேர்ந்து முப்பது வருடங்கள் கழித்துத்தான் இலக்கிய புத்தகங்களையும் நூலகங்களில் சேர்க்கலாம் என்ற யோசனை கல்வி அமைச்சருக்கு ஏற்பட்டது. தேடிப்பார்த்தபோது கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என வகைப்படுத்த சுமார் ஆயிரம் புத்தகங்களே கிடைத்தன. அவற்றை வாசித்தவர்கள் விளக்கிச்சொல்ல முடிந்தவர்கள், விவாதிக்க தெரிந்தவர்கள் என அனைவருமே ஏறக்குறைய ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருந்தார்கள். சில இளைஞர்களால் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களின் பெற்றோர்கள் சொல்லிய கதைகளை நினைவுகூர முடிந்தது. இருபத்தைந்து வயதுக்கு குறைவானவர்களுக்கு நாவல், சிறுகதை, குறுநாவல் இவையெல்லாம் என்னவென்றெ தெரியவில்லை.”

”அப்போதுதான் இன்னொரு முக்கியமான விஷயம் மக்களின் கவனத்துக்கு வந்தது. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதால் பூமியிலிருந்து கொண்டுவரப்பட்ட இலக்கிய நூல்கள் எங்கே? என்பது பெரும் கேள்வியாக எழுந்தது. அதிகாரிகள் எவரிடமிருந்தும் திருப்தியான பதில் கிட்டாததால் இது பற்றி ஆராய்ந்து சொல்லும்படி அரசு ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கும்படி ஆகியது. ஒருவருடம் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தும் விசாரணை கமிஷனின் அறிக்கையில் சில யூகங்களை தவிர வேறு பயனுள்ள தகவல்கள் எதுவும் இருக்கவில்லை.”

”மார்ஸில் வந்து இறங்கிய மூன்றாவது வருடம் எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆகாயக்கப்பல் கொள்ளக்கூடிய மாபெரும் சரக்கு கிடங்குகள் எரிந்து சாம்பலாயின. அவை முழுக்கவும் புத்தகங்களாக இருக்கலாம் என்பது முதலாவது யூகம்.”

”மக்கள், அத்தியாவசிய பொருள்கள், கட்டுமானப்பொருள்கள் அனைத்தும் வந்து சேர்ந்தபின் அடுத்து இறங்க வேண்டிய சரக்குகளை ஏற்றிய ஆகாயகப்பல்களுள் ஒன்று வரும் வழியில் விண்கல்லால் தாக்கப்பபட்டு எரிந்து அழிந்தது. அது புத்தகங்கள் ஏற்றியதாக இருக்கலாம் என்பது இரண்டாவது யூகம்.”

”பூமியை விட்டு கிளம்பவேண்டிய ஆகாயக்கப்பல்களுள் கடைசி இரண்டு தயார் நிலையில் இல்லாதால் கிளம்பமுடியாமல் பூமியிலேயே தங்கும்படி ஆனது. அவற்றில் புத்தகங்கள் இருந்திருக்க முடியும் என்ற சாத்தியத்தையும் அறிக்கை குறிப்பிடாமல் இல்லை. பூமியிலிருந்து மார்ஸில் வந்து இறங்கிய சரக்குகள், ஆகாய கப்பல் பற்றிய ஆவணங்கள், கணினி நிலையங்கள் அனைத்தும் தீ விபத்தில் எரிந்து அழிந்துவிட்டதால் வந்து இறங்கிய சரக்குகள் அவற்றின் பட்டியல்கள் பற்றி உறுதிப்படுத்தவே ஆவணங்கள் இல்லை. ஆகவே இதுபற்றி மேலும் அறுதியிட்டுக்கூற முடியவில்லை -என்று கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது”

”இவ்வாறாக இலக்கியம் என்ற வகைமையில் எஞ்சிய ஆயிரம் நூல்களும் மிகவும் அரிய புத்தகங்கள் என்பதால் அரசு தன் கருவூலத்தில் கடும் பாதுகாப்பில் வைக்க வேண்டியதாயிற்று. பாதுகாப்பில் உள்ள நூல்களுக்காக அனுமதி பெற விண்ணப்பிப்பதும் காத்திருப்பதும் அவைகளை வாசிப்பதும் விவாதிப்பதும் முதியவர்களின் பொழுதுபோக்காக கருதப்பட்டது. அதைப்போல் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமில்லாத இலக்கிய புத்தகங்களை நேரம் செலவழித்து படிப்பவர்களும் பேசுபவர்களும் இளைய தலைமுறையால் ’புக்கீஸ்’ என கேலியாக அழைக்கப்பட்டனர்.”

”ஒருகாலத்தில் பூமியில் இருந்த பெரும் நூலகங்களையும் மார்ஸில் எஞ்சிய ஆயிரம் புத்தகங்களையும் இணைக்கும் பாலமாக ’புக்கீஸ்கள்’ மட்டுமே இருந்தனர். சிறுபான்மையினர் என அரசிடம் கோரி தேவையான சலுகைகளை பெற்றனர். இலக்கிய பட்டறைகள் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர். இலக்கியத்தின் தேவை, அவசியம் பற்றியும் இதர பல நூல்கள் பற்றியும் புக்கீஸ்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்டன. புக்கீஸ்களின் உருவங்கள் கணினியில் ஒற்று எடுக்கப்பட்டு எதிர்காலத்தின் ஹாலோகிராம் சொற்பொழிவுகளுக்காக பாதுகாக்கப்பட்டன.”

”பயிற்சிப்பட்டறைகள் முடித்த ’ஜுனியர் புக்கீஸ்’ எனும் இளைய வாசகர்களுள் பலர் கவிதைகள், நாவல்கள் எழுத தலைப்பட்டனர். சிலர் அப்புத்தகங்களை ஒட்டி விவாதிக்கவும் எழுதவும் செய்தனர்.”

”ஆனால் காலப்போக்கில் சில இளைஞர்கள் மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தினார்கள். பெரும்பாலானோர் கணினி தொடுதிரை விளையாட்டுகளிலும் விர்ச்சுவல் ரியாலிட்டி கேஜ் எனும் நிகர்மெய் கூண்டுகளுக்குள் அடைந்து கொள்வதிலும் மட்டுமே ஆர்வமாக இருந்தனர்”

“புக்கீஸ்கள் வயதாகி இறந்த பிறகு இளைய புக்கீஸ்களால் அவர்களைப்போன்ற அடுத்த வாரிசுகளை உண்டாக்க முடியவில்லை. காரணம் எளிமையானது. மிகச்சிலரைத் தவிர மூன்றாம் தலைமுறையினருக்கு எதிலுமே ஆர்வம் இருக்கவில்லை. ஆகவே புதிய இலக்கிய படைப்புகளே இல்லாமல் ஆகி, ஒரு சில தவிர அநேகமாக புதிய புத்தகங்களே வெளிவருவதில்லை எனும் நிலை ஏற்பட்டது. தங்கள் வேலைக்கு வெளியே எவருமே எதையுமே வாசிப்பதில்லை, நூலகங்களுக்கும் செல்வதில்லை… குறிப்பாக இளைஞர்கள்”

”இளைஞர்களை நூலகத்திற்கு வரவைக்க அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. இளைஞர்களை கவர்வதற்காக நூலகத்தின் ஒரு பகுதியில் இலவச சித்திரான்னங்கள், பானங்கள், உணவுகள் வழங்கப்பட்டன. இன்னொரு பகுதியில் விர்ச்சுவல் ரியாலிட்டி கேஜ் எனப்படும் நிகர்மெய் கூண்டுகள் அமைக்கப்பட்டன.”

”ஆனால் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படவில்லை. கதையில் ஒரு பாத்திரமாக மாறி உடற்பயிற்சிகள், வீர விளையாட்டுகள் சாகசங்கள் கொண்ட விர்சுவல் ரியாலிட்டி டிஸ்குகளுடன் அதற்குரிய தலைக்கவசங்களை அணிந்து நிகர்மெய் கணினிக்கூண்டுகளில் அடைந்துகொள்ள கூட்டம் பெருகியதே தவிர புத்கங்களின் பக்கம் எவரும் செல்லவில்லை.”

”நூலகத்தில் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என கேட்கப்பட்ட பின்னூட்டங்களுக்கு ஏற்ப சேவையை மாற்றி அமைத்ததில் மேலும் நூற்றுக்கணக்கில் விஆர்டிக்கள் குவிந்தன. வாசிப்பு பழக்கத்தில் குறிப்பிடும்படி பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆகவே இலக்கிய புத்தகங்கள் அரியனவையாகவும் அதே சமயம் எவருக்கும் பயனற்றவையாகவும் ஆயின.”

”பயனற்று இருளடைந்து அடைந்து கிடப்பதால் பல ஆண்டுகளுக்கு பிறகு அப்புத்தகங்களை தனிநபர்களுக்கு ஏலமிட அரசு முன்வந்தது.”

”அரியவை என்பதால் பெரும் செல்வந்தர்கள் அவைகளை மிகப்பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுத்து உடைக்கமுடியாத கண்ணாடியால் சட்டமிட்டு வரவேற்பறைகளில் அலங்காரமாக வைத்திருந்தனர். பெரும் முதலீடு என்பதால் சிலர் அவற்றை வீட்டுக்குள் கொண்டுவரவே அஞ்சி, வங்கியின் நிலவறையில் கருவூலத்தின் பாதுகாப்பில் வைத்திருந்தனர். இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது, எவருமே அந்த புத்தகங்களை வாசித்திருக்கவில்லை என்பதுதான்.”

”இந்நிலையில் மின்நூல்கள் அடங்கிய பழைய கணினி ஒன்றின் நினைவுத் தட்டு ஒன்றை கண்டெடுத்து, அதில் இருந்த மின்பிரதிகளை முப்பரிமாண அச்சின் மூலம் அச்சடித்து அவற்றை அசல் புத்தகங்களின் பிரதிகளாக மீட்டுருவாக்கம் செய்ய ஜூனியர் புக்கீஸ்கள் சிலர் முயன்றனர். அவர்கள் படியெடுத்த பிரதிகள் மிகவும் விலை உயர்ந்த அவற்றின் மூலப்பிரதிகளைப்போலவே இருந்ததால் வேறு சிலரால் களவாடப்பட்டு கள்ளச்சந்தையில் அசல் பிரதிகள் என விற்பனைக்கு வைக்கப்பட்டன. இது புத்தகங்களின் மூலப்பிரதிகள் வைத்திருந்தவர்களை கோபமடையச்செய்தது”

ஏலத்தில் பெரும் தொகைக்கு எடுத்திருப்பதாலும் சிரமங்களுக்கு மத்தியில் அவற்றை பெரும் கவனத்துடன் நெடுங்காலம் பாதுகாத்து வருவதாலும் புத்தகங்களின் முதல் உரிமையாளர்கள் நாங்களே. புத்தகங்களும் அவற்றின் உள்ளடக்கமும் எங்களுக்கு மட்டுமே சொந்தம். ஆகவே பிறர் அவற்றின் உள்ளடக்கத்தை பயன்படுத்தவோ உரிமை கொண்டாடவோ முடியாது, கூடாது -என வழக்கு தொடர்ந்தனர். அசல் பொருளைப்போலவே போலிப்பொருள் தயாரிப்பது இருப்பதிலேயே ஆகப்பெரிய மோசடி என அவர்களின் சார்பாக வழக்கறிஞர்கள் வாதிட்டு வழக்கை வென்றனர்.”

”அப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களின் சந்ததியினர் எதிர்த்து வழக்கு தொடுக்கவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லாத நிலையில் அதுவே சட்டமாக ஆகியது. பழைய புத்தகங்களின் மின் நூல் வடிவங்களை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் சட்டவிரோதமாக்கப்பட்டது. மீறி வைத்திருப்பவர்கள் காப்பிரைட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றனர்.”

”இந்த சமயத்தில்தான் ‘நியோ-புக்கீஸ்’ என தங்களை அழைத்துக்கொண்ட வித்தியாசமாக ஆடைகளும் சிகையலங்காரமும் கொண்ட முப்பது இளைஞர் குழு ஒன்று தோன்றியது. சட்ட விரோதமாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்களுடன் உலவுவதாக அவர்களைப் பற்றி கூறப்பட்ட வதந்தியை அவர்கள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. ஒருமுறை ரோமின் பாதுகாப்பு கூரையின் எல்லையை தாண்டிசென்று தற்காலிக குடிகள் அமைத்து தங்கிய நியோ புக்கீஸ் உறுப்பினர்கள், பாதுகாப்பு துறையால் கைது செய்யப்படுவதற்கு முன் கொண்டு வந்த புத்தகங்கள் அனைத்தையும் எப்படியாவது மனனம் செய்துவிடவேண்டும் என முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பரிதாபகரமான தோல்வியில் முடிந்தது.”

”பெருந்திரைகள், கணினிகள், தொடுதிரைகள், கைபேசிகள், ஒலிபெருக்கிகள் ஆகிய அனைத்திலும் மேனுவல்களும் தகவல்களும் எந்நேரமும் எளிதாக கிடைத்து வந்ததால் அவை எதையுமே மனனம் செய்ய எவருக்கும் அவசியமே இருக்கவில்லை. ஆகவே அப்படி ஒரு பழக்கமே இல்லாமல் ஆகிவிட்டிருந்த காலம் அது. புத்தகங்களை மனனம் செய்வதற்குரிய பயிற்சியோ ஆற்றலோ நியோ புக்கீஸ்கள் எவருக்கும் துளியும் இருக்கவில்லை.”

“பதினாறு நாட்கள் முயன்றும் இரண்டு பக்கத்திற்கும் மேல் அவர்களால் எதையுமே நினைவில் நிறுத்த முடியவில்லை. ஒருவர் மட்டும் வெண்ணிற இரவுகள் என்ற புத்தகத்தின் நான்கில் ஒரு பகுதியை மனனம் செய்திருந்தார். போதிய கவனமும் உழைப்பும் செலுத்தவில்லை என்று அவர் தன் சக நண்பர்களை கடிந்து குற்றம் சாற்றவும் அவர்களுக்குள் சண்டை மூண்டு தாக்குதலில் இரண்டு நியோ புக்கீஸ்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். புத்தகங்களுடன் தப்பி ஓடிய சுமந்தன் என்பவர் காவலர்களிடமிருந்து தப்பி ஒரு மலைக்குகைக்குள் சென்று பதுங்கினார். மன அழுத்தங்களாலும் குழப்பங்களாலும் பாதிக்கப்பட்டு மனநலம் குன்றி ஆற்றாமையில் கைவசம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் அவர் தீயில் இட்டு எரித்ததாக சொல்லப்பட்டது. பாதுகாப்பு துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட நியோ புக்கீஸ்கள் இதை தங்கள் வாக்குமூலத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள்.”

“புத்தகங்கள் எவையுமே தீயிட்டு அழிக்கப்படவில்லை அவை அனைத்துமே சுமந்தனின் சந்ததி ஒருவரின் ரகசிய கருவூலத்தின் பாதுகாப்பில் இருப்பதாக ஒரு வதந்தியும் உண்டு.”

”எங்கேயோ ஆரம்பித்து வேறெங்கோ வந்து விட்டோம் இல்லையா? இப்படி பலவிதமான மாற்றங்கள் எதிர்பாராத சம்பவங்கள் வழியாக காலப்போக்கில் இலக்கியமே படித்திராத ஒரு தலைமுறை உருவாகியது என்பதுதான் மானுட வரலாற்றின் எதிர்பாராத துர்ப்பாக்கியம்.”

”அதற்குப்பிறகு நடந்தது நாம் அனைவரும் அறிந்ததே.”

”அப்படியானால், கதைப்புத்தகம் படிப்பதும், எழுதுவதும் இல்லாமல் ஆனதுதான் ரோமின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமா? கதைப்புத்தகங்கள் புழக்கத்தில் இல்லாததால் புனைவுகளை படிக்காத காரணத்தினால்தான் நம் இளைஞர்களின் மூளை ஆற்றல் மங்கி விட்டதா?”

”ஆம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏனென்றால் இந்த தொடர்புறுத்தலை நிராகரிப்பதை விட ஏற்கத்தான் நம்மிடம் அதிகப்படியான ஆதாரங்கள் உள்ளன.”

”நாம் பொதுவாக நினைப்பது போல கதை என்பவை ”வெறும் கதைகள்” அல்ல. ஒரு மானுடன் தனிமனிதனாகவும் சமூகத்தின் உறுப்பாகவும் பல்வேறு படிநிலைகளில் இயைந்தும் முரண்பட்டும் செல்லும் பாதையை, தனி மனிதனின் சமூக வரலாற்றின் இயங்கியலை படமாக்கி நிலைப்படுத்தும் ஆவணங்கள். மானுட மனம் தன்னைத்தானே உற்றுநோக்கி உருப்பெருக்கி மூலம் அவதானித்து செதுக்கி வைத்த சிற்பங்களும் ஓவியங்களும் போன்றவை இலக்கியப்படைப்புகள்.”

”மனிதன் மனம் மிருகத்தின் மனதை போன்றதல்ல. அவன் அகம்தான் இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையே கற்பனை செய்து அவனுக்கு காண்பிக்கிறது. எத்தனை ஆயிரம் கோடி கண்டுபிடிப்புகள்? எத்தனை தொழில் நுட்பங்கள்? எத்தனை ஆயிரம் சாதனங்கள்?”

”ஆனால் மனிதன் மிகவும் எளியவன். தொலைநோக்கி நுண்நோக்கி போல இன்னும் எத்தனை ஆயிரம் கருவிகள் துணைக்கு இருந்தாலும் ஐந்து புலன்கள் மட்டுமே ஆயுதங்கள். ஆயிரம் பிம்பங்களை உருவாக்க முடிந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு அறையில் ஒரு நாற்காலியில் மட்டுமே அவனால் அமர முடியும்.”

”ஆனால் மனித மனத்தின் பாய்ச்சல் ஒருபோதும் உறைந்து நின்று விடுவதில்லை. அது கற்பனையில் இயங்கும் ஆலாபனையை தொடர்ந்து கனவு கண்டபடியே இருக்கிறது. அவன் உலகின் ஏதோ ஒரு கோடியில் இருந்தாலும் அவன் மனம் பிரபஞ்சத்தின் இன்னொரு கோடியில் இன்னொரு காலத்தில் சஞ்சரிக்க முடியும். ஒரு சராசரி மனிதனுக்கு சராசரியாக குறைந்த அளவிலாவாவது தன் மனத்தை கற்பனையின் வழி ஆலாபனை செய்ய வேண்டிய அவசியம் என்பது உள்ளுறையாகவே எப்போதும் அவனுக்குள் இருப்பது. எரிமலையின் எரிகுழம்பைபோல தொடர்ந்து பீறிட்டு கொப்பளிக்க முயன்றபடி, அதன் ஆகச்சிறந்த சாத்தியத்திற்குரிய புள்ளியை தொடர்ந்து தேடியபடியே இருக்கிறது மனித மனம். அதை பயிற்சியின் மூலம் ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி திறப்பதே அறிவார்ந்த மனிதன் செய்யக்கூடுவது.”

”கற்பனையை ஒரு பயிற்சியாக மேற்கொள்ள அனுமதிக்கும், அதை பல படிகளில் பெருக்கும் புனைவுகளும் இசையும் இதர கலைகளும் அதற்கு மிகவும் உதவிரமானவை. அவைகள் தான் மனித அகத்தின் பிராணவாயு, எரிபொருள், உணவு எல்லாமே. இவை மூளையின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு ஆதரமாக இருக்கின்றன, ஒன்றுடன் ஒன்று எவ்வாறு பிணைந்துள்ளன என்பதைத்தான் சுமந்தன் கண்டறிந்தார்.”

”இதை இப்படி விளக்கலாம். மனிதன் இப்பிரபஞ்சத்தை அறியும் வழிகள் தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு என மூன்றாக பிளவுபட்டுள்ளன. நாம் அறியும் அனைத்து தொழில்நுட்பங்களும் அறிவியலை அடிப்படையாககொண்டுள்ளன. அறிவியலின் அடிப்படை விதிகளாக சந்தேகத்திடமின்றி நிரூபிக்கபட்ட தர்க்கங்கள். இத்தர்க்கங்களை உள்ளுணர்வு மற்றும் கற்பனை வழி நீட்டி, அறியாததை யூகித்து உருவகித்து அறிய முயலும் முயற்சிகள் கருத்தாக்கங்கள், இவை வழியாகத்தான் அறிவியல் இயங்குகிறது, இல்லையா?

“நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து தொழில் நுட்பங்களுக்கும் ஆதாரமாக உள்ள அறிவியல் தர்க்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளதுதான். ஆனால் தர்க்கத்தின் சரத்தில் எப்போதும் கற்பனையும் உள்ளுணர்வும் கோர்ந்தே இருக்கின்றன. வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருந்தாலும் கற்பனையே தர்க்கத்தின் வழிகாட்டும் நூலிழையாக உள்ளது. சிந்தனையைத் தொகுப்பது என்பதே கற்பனையின் சக்தியினால்தான் சாத்தியப்படுகிறது, என்பதால் கற்பனையே அறிதல் முறைகளின் இதயத்துடிப்பாக உள்ளது. இமானுவேல் கண்ட் என்பவர் 1700ஆம் ஆண்டுகளிலேயே இதை விவாதித்திருக்கிறார்.”

”இன்னும் நேரடியாக சொல்வதானால், ஒரு விஷயத்தை மனதில் கற்பனை செய்யமுடிவதால்தான் சிந்தனை சாத்தியப்படுகிறது என்பதால் மனித இனம் இதுவரை அடைந்த அனைத்து சாதனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது கற்பனை செய்யும் ஆற்றலே என்று வாதிட முடியும். ஆகவே நாம் குழந்தைகளுக்கு நாம் அளிக்க வேண்டிய ஆகப்பெரிய கல்வி என்பது அவர்களுக்கு கற்பனை செய்யும் பழக்கத்தை புகட்டுவதுதான்.”

”வாசிப்பதன் வழியாக வரிவடிவில் உள்ள உலகத்தை மனக்கண்ணில் காட்சிகளாக உருவகித்து அறியும் பயிற்சி என்பதால் கற்பனையை வளர்ப்பதிலும் செழுமைப்படுத்துவதிலும் கதைகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதைப்போன்ற பயிற்சிகள் இல்லாத மூளை, பயிற்சி இல்லாத தசையைப்போல் நாளடைவில் சிறுத்து சூம்பி மங்கிவிட முடியும் என்ற புரிதலையே நம் சம காலத்தை பார்க்கும்போது அடைகிறோம்.”

”சட்டத்திற்கு எதிரான செயல் என்பதால் இன்று பலர் புத்தகங்களை தொடவே அஞ்சுகிறார்கள். குற்றம் செய்வது போல புத்தகங்களை திருட்டுத்தனமாக ஒளித்து வைத்து வாசித்து வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.”

”ஆகவே…பிரதமரே, என்னுடைய பரிந்துரையும் வேண்டுகோளும் இதுதான்.”

”புத்தகங்களின் மீதுள்ள எல்லா தடையையையும் நீக்க உடனடியாக ஆணையிடுங்கள்.”

“இரண்டாவது, அரசின் ஆவணக்காப்பகத்தில் உள்ள மின் நூல்களின் மீதுள்ள தடையை நீக்கி அவை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும்படி செய்யுங்கள்.”

“மூன்றாவது… தயவு செய்து புதிய சுடோகுயி விளையாட்டின் மீதுள்ள தடையையும் உடனடியாக நீக்க உத்தரவிடுங்கள். இன்று இளைஞர்களுக்கு அது தேவைப்படுகிறது. அதன் வழியாக கதைகளை ஒவ்வொரு வரியாக வாசித்தாவது புனைவு வாசிக்கும் பழக்கம் பரவி நிலை பெறட்டும்”

பிரதமர், ”அப்படியே ஆகட்டும்!” என்றார் .

அவையில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பினர்.

[6]

கோப்புகளில் கையெழுத்திடும் வேலைகளை முடித்தபின் அலுவலகத்திற்குள் நுழைந்து அறையை தாழிட்டுக்கொண்ட பிரதமர் காதில் பொருத்திய குமிழை ஆள்காட்டி விரலால் தொட்டு, ரகசியமான குரலில்,

”கோம்ஸ்…?

சொல்லியபின் மறுமுனையின் குரலை கவனமாக கேட்டார்.

“சரி. நிலவறையின் அலமாரியில் இருந்து நீ எடுத்த வெண்ணிற இரவுகள் புத்தகம் மேலே வரவேற்பறையிலேயே இருக்கட்டும். அதை பூட்டி வைப்பதற்காக மூட்டு வலியோடு திரும்பவும் சிரமப்பட்டு படியிறங்கி நீ கீழே போக வேண்டாம்”

“ஆமாம். அதைத்தான் சொல்கிறேன்.”

”பயப்படவேண்டாம். தைரியமாக என் மேசை மேலேயே வைத்துவிடு. அதை ஒளித்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை”

பிரகாசமான முகத்துடன் பிரதமர் சொன்னார்.

”ஆமாம். அதேதான்.”

”இனிமேல் புத்தகங்களை யாரும் ஒளித்து வைக்க வேண்டியதில்லை”

(முற்றும்)

முந்தைய முதல் பகுதி

4 Replies to “சுடோகுயி – பாகம் 2”

 1. 2113- ல் Republic of Mars (ரோம்) ல் நடக்கும் அருமையான, விறுவிறுப்பு அறிவியல் புனைகதை. கதைநெடுகிலும் நல்லத் தமிழாக்க வார்த்தைகளை வாசிக்க சந்தோசமாக இருக்கிறது.

  பிரபஞ்ச விளக்கம் மிக அருமை, இந்த மனித உடலில் இருக்கும் நுண்ணுயிருக்கான பிரபஞ்சம், அதற்குஎவ்வளவு பிரமாண்டாக இருக்குமென கற்பனை செய்துப் பார்க்கவே பிரமிப்பா இருக்கு.

  சுடோகு விலிருந்து சுடக்கோயி (சுடோகு இன்பினிட்டி) மாற்றம், இந்த விளையாட்டுச் சிறப்பம்ச விவரணைகள்அபாரம். சுடக்கோயி செஸ் விளையாட்டை பெரிய விளையாட்டு மைதானத்தில் ரோபோக்களால்நடத்தப்படுவதென்பது அருமையான கற்பனை. சமகால பிரச்சினையான மொபைல் விளையாட்டு அடிமை, ஐபில்விளையாட்டு அரசியல், வைரஸ் தாக்குதல், வீட்டடைப்பு யென பலகாரணிகளால் ஒரு நாட்டின் பொருளாதாரச்சீரழிவென கதை நகர்ந்து செல்வதை நம்மால் நன்றாக உள்வாங்க முடிகிறது. ஆனால், 2113 லிலும் இதேபிரச்சினைகள்தானா என ஆச்சரியமா இருக்கு 🙂

  ரோமில் இலக்கியம் என்பது அரிய விஷயமா, எங்கும் இலக்கிய வாசிப்பு நிகழாமல், இலக்கிய புத்தகங்களேகாண்பது அரிது அல்லது வாசிப்பவர்கள் அரசாங்கத்தால் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலை வேதனைக்குரியது. நாட்டு மக்கள் எந்த மூளை உழைப்பும் இல்லாமல், மேனுவல் மூலமாக எல்லாவேலைகளையும் செய்யப் பழக்கப்பட்டிருப்பது கொடுமை. எனது முகநூல் நண்பர் ப்ரொபைல் படத்திற்க்குகிடைக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸில் 10 சதவிகிதம் கூட தன் கதைகளுக்கு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டுபதிவிட்டு இருந்தார். இலக்கிய வாசிப்பு, கொண்டாட்ட நிலை இங்கேயும் இந்த நிலைதானே!

  இலக்கிய வாசிப்பின் முக்கியத்துவத்தை கதைசொல்லி பெரும் ஆராய்ச்சியின் முடிவாக பிரதமருக்கு, அமைச்சர்களுக்கு எடுத்துரைத்து, நாட்டை, நாட்டின் இளைஞர்களை மீட்டெடுக்க எடுத்து சொல்வது அருமை.

  புத்தகங்கள் மீதான தடை நீங்கி, பிரதமருக்கு அவரிடமிருந்த வெண்ணிற இரவுகள் பிரதியை இனி ஒழித்துவைக்க அவசியமில்லை என முடிவது சிறப்பு.

  விறுவிறுப்பு பஞ்சமில்லா அறிவியல் புனைக் கதை, சூப்பர் வேணு!!

 2. ஒரு kaleidoscope க்குள் அடைக்கப்பட்டிருக்கும் வண்ணங்களின் எண்ணற்ற பிம்ப  பிரதி பிம்ப உருவங்களை உருவாக்குவது கை அசைவு. அதன் அர்த்தங்களை உருவாக்குவது அந்த கணத்தின் எண்ணங்கள். ஏதோ ஒன்றால் நாம் தடங்கலாகி  தேங்க அதை மீண்டும் ஓட வைக்கும் சிறிய உதவி எங்கிருந்தும் வரலாம். ஆனால் அப்படி வரும் போது அது வரை முறுக்கிக்கொண்டு முரண்டு பிடிக்கும் மனம், சட்டென்று குழந்தையென்று மாறி கைக்கொடுக்கும். இந்த பெயரிலி தொடர்பை அறிவியலால் அணுகலாம், தத்துவத்தால் விசாரிக்கலாம், கலையால் கரையலாம் அல்லது அதை கவனிக்காமல் சமூக வலைத்தளக்களத்தில் அட்டைக்கத்தி போரிடலாம்.

  சுடோகுயி – அறிவியல் புனைவு சட்டகத்தில் இலக்கியத்தின் அவசியத்தை சமகால நிகழ்வுகளின் தளத்தில் இருந்து எழுந்து சொல்கிறது. பூமி தவிர்த்து வேறு கிரகத்தில் வாழ்க்கை கொண்டாலும், தொழில்நுட்பம், உணவு, கேளிக்கையில் தன்னிறைவு கொண்டாலும் அந்த வாழக்கை மட்டுமே மனிதனின் முழுமை பசியை ஆற்றுவதில்லை. வாசிப்பு, இசை, இயற்கையோடு இயைதல் என்று கற்பனையின் முடிவிலியில், மெய்நிகர் மாய வாழ்க்கை அளிக்கும் சில மணித்துளிகளே நமக்கு முழுமையை காட்டுபவை. நகைமுரணாய், அதில் உள்ளே செல்ல செல்ல.. வந்த தூரத்தை விட போகும் தூரத்தை எண்ணியே பல நேரம் நாம் வருந்தக்கூடும். முடியாத திசையில் பயணித்து கொண்டிருப்பதே நம்மால் இயல்வது. 

  பிரபஞ்சத்தின் அகண்ட விரிவு நம் கற்பனையின் விரிவு என்ற வரி – வெள்ளத்தனைய மலர் நீட்டம் குறளை ஞாபகப்படுத்தியது.  குறிப்பாக நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவிற்கு நாம் பிரபஞ்சம்  என்ற வரி மிக சிறப்பு. அத்தகைய கற்பனையை வளர்க்க வேண்டிய தேவையை, வளர்க்க உதவும் கருவிகளை, கச்சா பொருட்களை சுட்டி காண்பிக்கிறது இக்கதை. அதே போல், சுடோகு infinity உருவாக்குபவர் சுமந்தன் என்றும், மூளையின் மூளையை கண்டுபிடிக்கும் மூலக்கூறு உயிரியல் துறையின் நிபுணராக சுமந்தன் என்பவர் வருவதும் – அழகான தொடர்புறுத்தல். நியூமோரோமோட்ஸ் தனக்கு தேவையான  பார்ஸிபஸ்  ஆணையிட்டு தேர்ந்து எடுக்கும் என்பது அறிந்த அறியாத உண்மை. ஆனால் எந்த உணவை நாம் எடுக்கிறோம் என்பதே நம்முடைய வாழ்வை தீர்மானிக்கிறது. அன்றாடத்தினதேவைகளை பூர்த்தி 
  செய்யும் கல்வியும் தொழிலும் இறுதியில் எந்திரத்திற்கும் கீழான ஒன்றாக தான் மாற்றும்.

  வேலை மட்டுமே தன் வாழ்வின் பிரதானமாய் கொண்டு, தரமான பொழுதுபோக்கு இல்லாத  பலர் தங்கள் ஒய்வு நாட்களை மிகுந்த சிரமத்துடன்கடத்துவதை  சாதாரணமாக காணலாம். அவர்களுக்கு அந்த வயதிற்கு மேல் ஒன்றின் மேல் ஆர்வம் ஏற்படுவது, ஏற்படுத்துவது சற்றே சிரமான விஷயம். அதுவும் Whatsapp, facebook என்று தாண்டி வர ஏழுக்கடல் வேறு. சிலர் அதையும் தாண்டி வருவார்கள். அங்கே அவர்கள் தங்கள் வாழ்வின் வேறொரு பரிணாமத்தை கண்டு ரசிப்பார்கள். தவறவிட்ட நாட்களுக்காக வருந்துவார்கள். அதிலேயே லயித்து நிறைவெய்தல் என்பது ஒரு தவம். அது ஒரு வரம்.

  பின்குறிப்பு: The Lady with the Dog  கதையும் இதன் வழியாக வாசித்தாயிற்று. மிக்க நன்றி  

 3. @⁨Venu Thayanithy⁩ – சுடோகுயி – மாபெரும்  கனவுப் பாய்ச்சல். அறிவியல் சிறுகதைகளுக்கு சில சட்டங்கள் உண்டு,  அறிவியலின் ஒரு பகுதியை எடுத்து கொண்டு அடிப்படை அறிவியல் விதிகளில் இருந்து மாறாமல் எழுதப்பட்டிருக்கும்.  பெரும்பாலும் விண் கோள்களுக்கு இடையே நடக்கும் போர்கள், இணையொத்த அண்டங்கள், கருத்துப்பாங்கன்ன தொழில்நுட்பம், காலப் பயணம், அதிபுத்திசாலி ரோபோட்கள்  என்று அறிவியலின்  துணை வகைகளில் நின்று கதையை  சொல்லி விடும்.  ஆனால் சுடோகுயி சற்று தலைகீழாக  இலக்கியத்தின் படிமத்தில் நின்று அறிவியலின் அடிப்படை சூத்திரத்தில் இருந்து மாறாமல் உயிர் வேதியல், வேதியல், குவாண்டம் கணினி, உயர் கணிதம், மனோத்தத்துவம், நரம்பியல், உயிரியல் என்று பலவகையான உள்மடிப்புகளுடன் செவ்வாய் கிரகத்தில் நடக்கும் மனிதர்களின் அடிப்படை உரிமைப் போராட்டம். ஒட்டு மொத்த ரோமே ஒரு கணித/வார்த்தை விளையாட்டுக்கான அனுமதிக்காக  போராடுகிறார்கள். விளையாட்டின் இறுதியில் சங்கேத குறியீடுகளாக  இருந்த வரிகளில்  இருந்து கதைகள்  கிடைக்கிறது.   அந்த  கதைகளின் உணர்வுகளில்  இருந்து  அவர்களுக்கு கிடைக்கப்பெறுவது மூலையில் இயங்கும் பார்ஸிபஸ்கள்,  நியூமரோ மோட்டஸ் சரியாக இயங்க பார்ஸிபஸ்கள் அவசியம். ஆம் பார்சிபஸ்கள் மூலையில் உருவாகும் ஒரு வித வேதியல் மாற்றம், அதை  தூண்டுவது கலை இலக்கியம் போன்ற அனுபவங்கள் என்ற கருத்து  மிகவும் ஆழமானது . வேற்று கிரகத்தில் குடியேறினாலும் மனிதர்கள் தங்களின் தொன்மத்தின் எச்சத்தில் இருந்து மாறாமல் (பொருட் கடத்தல், புத்தகத்  தடை, நீயோக்கள்  )  இருப்பது சந்தோசமாக  இருக்கிறது, கதையில் ரோபோட்டுகள் சண்டையிடாமல் இருப்பது கூடுதல் ஆறுதல்.  கதையின் இறுதியில் வரும் ஒரு அறிக்கை ஆராய்ச்சியின் முடிவாக , ரோம் நகரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக அமைச்சர் சமர்பிக்கிறார், அறிக்கையில்  வரும் இந்த வரி மிகவும் முக்கியமாக படுகிறது.
  “மனித மனத்தின் பாய்ச்சல் ஒருபோதும் உறைந்து நின்று விடுவதில்லை. அது கற்பனையில் இயங்கும் ஆலாபனையை தொடர்ந்து கனவு கண்டபடியே இருக்கிறது” – இதை  வாசிக்கும் போது  ஸ்டீபன் ஹாக்கிங், வாக்னரின் ஓப்ரா  இசை நாடகம் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று  கூறியது ஞாபத்துக்கு வருகிறது,  அதுவே தன்னை  ‘Motor Neurone’ வியாதியில் இருந்து மீட்டதாக குறிப்பிட்டார். இலக்கிய கதைகள் வாசகனிடம் வாழ்வியல் படிமங்களை, அனுபவத்தை மட்டுமே முன் வைக்கிறது, அறிவியல் புனைகதைகள் சில முடிவுகளை முன்வைக்கிறது, அப்படி வைக்கலாமா என்றால் அதற்கு என்னிடம் சரியான பதில் இல்லை. அறிவியல் என்று வரும்  போது இதில் விதிவிலக்கு இருக்கிறது என்றே எடுத்துக்கொள்கிறேன். கதையின் அறிக்கையில்  குறிப்பாக இப்படி வருகிறது “குழந்தைகளுக்கு நாம் அளிக்க வேண்டிய ஆகப்பெரிய கல்வி என்பது அவர்களுக்கு கற்பனை செய்யும் பழக்கத்தை புகட்டுவதுதான்”.  எனக்கு  ஜெமோவின் பேச்சை ஞாபகப்படுத்தியது,  சில வருடங்களுக்கு முன்பு ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையில்  இப்படி கூறியிருப்பார். ‘உலகமே இரண்டாக பிரிந்து இருக்கிறது வெள்ளை இனம், மஞ்சள் இனம் ‘. அவர் குறிப்பிடுவது ஐரோப்பியர்களையும், ஆசியர்களையும் (அதில் சீனா, சிங்கப்பூர், கொரியா, தைவான்) மட்டுமே மஞ்சள் இனம் என வகைப்படுத்தினார். மஞ்சள் இன நாடுகள்  தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத காரணமாக,  கற்பனையை தூண்டும் புத்தக வாசிப்பு மிகக் குறைவு என்றும் அதற்காக அரசாங்கமே தொடர்ந்து வாசிப்பை  ஆதரிப்பதாகவும் வாசிப்பு சார்ந்து கருத்தரங்குகள் என்று பல வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்கிறார்கள் என்று கூறினார். அதன்  விளைவாக  சீனாவில் இருந்து வரும் அறிவியல் புனைக்கதைகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘liu cixin’ அறிவியல் புனைக் கதைகள்  தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்படுகிறது.  சுடோகுயி சிறந்த வாசிப்பனுபவம், வேணுவிற்கு அன்பும், பாராட்டுகளும்.   ஐன்ஸ்டீன் சொல்லுவதை போல  ‘if you can’t explain it to a 5 year old you don’t understand it yourself’,   வேணு  எனக்கு அறிவியல் வாத்தியாராக வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.