கவிஞர் ரொபெர்த்தோ பொலான்யோ

ரொபெர்த்தோ பொலான்யோ சிலே நாட்டின் சாண்டியாகோ நகரில் 1953ல் பிறந்தார். இவரது அப்பா ஒரு ட்ரக் ஓட்டுநர், ஆசிரியர் மற்றும் குத்துச்சண்டை வீரர். அம்மா வெகுஜனப் புனைவுகளை வாசிக்கும் மிக இயல்பான கீழ் மத்தியதரக் குடும்பத் தலைவி. இவருக்கு ஒரு தங்கையும் இருந்தார். சிறிய வயதில் மெலிந்தவராக, கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) உள்ளவராக,  ஆனால் எப்போதும் புத்தகங்களை வாசிப்பவராக இருந்தார். பள்ளியில் ஒரு அன்னியனாக இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார். பத்து வயதிலேயே பேருந்தில் டிக்கட் விற்கும் வேலை செய்கிறார்.  இவரது பால்யத்தின் பெரும்பகுதி பையோபையோ மாகாணத்தின் தலைநகரான லாஸ் ஏஞ்செலஸ் நகரில் கழிந்தது. 1968ல் அவர்களுடைய குடும்பம் மெக்ஸிகோ நகரில் குடியேறியது. பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் ஓர் இதழிலியலாளராக வேலை செய்தார். இடதுசாரி அரசியல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபடத் தொடங்கினார். 

 அவர் மெக்ஸிகோவிலிருந்து சிலேக்கு மீண்டும் 1973ல் திரும்புகிறார். சால்வடோர் அயெந்தேவின் சோஷலிச ஜனநாயக அரசுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும் “புரட்சியைக் கட்டுவதற்கு உதவச்” செல்கிறார். ஆனால் அகஸ்டோ பினோச்செட்டின் வலதுசாரி ராணுவச் சதி மூலம் அயெந்தேவின் அரசு கவிழ்ந்துவிடுகிறது. பொலான்யோ ஒரு “தீவிரவாதியாக” இருக்கலாம் என்னும் ஐயத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். எட்டு நாள் சிறைவாசம். சிறைக் காவலர்களாக இருந்த இவருடைய முன்னாள் வகுப்புத் தோழர்கள் இருவர் இவரைச் சிறயிலிருந்து விடுவிக்க உதவுகின்றனர். இந்த நிகழ்வு இவரது “நடன அட்டை” சிறுகதையில் சித்திரிக்கப்படுகிறது. 

பொலான்யோவுக்குத் தமது சொந்த தேசத்தைப்பற்றி முரண்பட்ட உணர்வுகளே இருந்தன. சிலேயில் இசபல் அலெண்டே உட்பட இலக்கிய ஆளுமைகள் அனைவருடனும் கடுமையாகச் சண்டையிட்டு வந்தார். “சிலேக்குள் அவரால் பொருந்தியிருக்க முடியவில்லை. அவர் அனுபவித்த நிராகரிப்பு, அவர் விரும்பியதையெல்லாம் சொல்வதற்கான சுதந்திரத்தை அளித்திருந்தது. ஓர் எழுத்தாளரைப் பொருத்தவரை அது நல்ல விஷயமே,” என்கிறார் நாவலாசிரியரும், நாடகாசிரியருமான ஏரியல் டார்ஃமன். 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், (1974ல்) அவர் மெக்ஸிகோ திரும்புகிறார். தமது இளமைக் காலத்தில் இருந்தே நாத்திகராக இருந்த இவர் இப்போது ட்ராட்ஸ்கியவாதியாக மாறுகிறார். 1975ல் அக-யதார்த்தக் கவிதை இயக்கத்தைத் (Infra-Realist) தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர். இந்த இயக்கத்தை இவரே தன்னுடைய The Savage Detectives நாவலில் பகடி செய்வதைக் காணலாம். மெக்ஸிகோவில் ஒரு பொஹிமியன் வாழ்க்கையை வாழ்கிறார். இவரது ஒழுங்கற்ற வாழ்க்கைக்கு இடதுசாரிச் சித்தாந்தம், தாறுமாறான வாழ்வுமுறை இரண்டுமே காரணம் என்கிறார் ஒரு விமர்சகர்.

பொலான்யோ 1977ல் ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்து, இறுதியாக ஸ்பெயின் வந்து சேர்கிறார். அவர் திருமணம் செய்துகொண்டு, பார்சிலோனாவுக்கு அருகில் மத்திய தரைக்கடலின் கடற்கரைப் பகுதியில் தங்கிவிடுகிறார். பாத்திரங்கள் கழுவுபவர், மைதானக் காவலர், சுமை தூக்குபவர், குப்பை சேகரிப்பவர் என்று பலவகையான வேலைகள் பார்க்கிறார். பகலில் வேலை, இரவில் எழுத்து என்று ஒழுங்குபடுத்திக்கொள்கிறார். 1981ல் இருந்து அவர் இறக்கும்வரை ‘ப்ளானெஸ்’ என்னும் சிறிய ‘கட்டலான்’ கடற்கரை நகரில் வசித்தார்.

அவர் தமது நாற்பதுகளின் தொடக்கத்தில் புனைவுக்கு மாறும்வரை தொடர்ந்து கவிதை மட்டுமே எழுதிவந்தார். ஒரு நேர்காணலில், அவரது குடும்பத்தின் பொருளாதார நிலையை உத்தேசித்தே புனைவுகள் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறார். 1990ல் அவருடைய மகன் பிறந்ததும், தனது குடும்பத்திற்குத் தானே பொறுப்பு என்பதை உணர்கிறார். புனைவு எழுதிப் பிழைத்துக்கொள்ளலாம் என்னும் அவரது முடிவு பல சிறந்த புதினங்களை உலகுக்குக் கிடைக்க வைத்தது. எனினும் பிரதானமாகத் தாம் ஒரு கவி என்றே தொடர்ந்து கூறிவந்தார். 20 ஆண்டுகளாக அவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, The Romantic Dogs என்னும் தலைப்பில் 1998ல் வெளியிட்டார். அவரது 2666 நாவல் எழுதிக்கொண்டிருந்தபோது உடல் ஆரோக்கியம் மோசமானது. கல்லீரல் மாற்று-அறுவை சிகிச்சைக்குக் காத்திருந்த சமயத்தில் 2003, ஜூலை 15ம் தேதி பார்சிலோனாவில் தனது 50வது வயதில் இறந்துபோகிறார்.

பொலான்யோ தமது ஸ்பானிஷ் மனைவியும், இரண்டு குழந்தைகளுமே, “என்னுடைய ஒரே தாய்நாடு” என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். மெக்சிகன் ப்ளேபாய் இதழுக்கு அளித்த தமது கடைசி நேர்காணலில், தம்மை ஒரு லத்தீன் அமெரிக்கன் என்று கூறிவிட்டு, “ எனது ஒரே தேசம் எனது மனைவியும் இரண்டு குழந்தைகளும் மட்டுமே. ஒரு வேளை எனக்குள் இருக்கும் சில தருணங்கள், தெருக்கள், முகங்கள் அல்லது புத்தகங்கள் ஆகியவற்றுக்கு இரண்டாவது இடம் அளிக்கலாம்….” என்று கூறினார்.

இன்று ரொபெர்த்தோ பொலான்யோ, மிகச் சிறந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகவே உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

~oOo~

இலக்கியத்தின் இயல்பு பற்றி, தன்னுடைய படைப்புகளையும் சேர்த்து விவாதிக்கும்போது இலக்கியத்தின் உள்ளார்ந்த அரசியல் குணாம்சங்களுக்குப் பொலான்யோ அழுத்தம் தருகிறார். அவர் எழுதுகிறார், “எல்லா இலக்கியமுமே, தம்முடையது உட்பட, அரசியல் ரீதியானதுதான், நான் கூறுவதின் பொருள், முதலாவதாக இது அரசியல் மீதான ஒரு பிரதிபலிப்பு, இரண்டாவதாக இதுவுமே ஓர் அரசியல் செயல்நிரல். முந்தையது யதார்த்தத்தைக் குறிப்பிடுகிறது— நாம் யதார்த்தம் என்று அழைக்கும் கொடுங்கனவு அல்லது கருணைமிக்கவரின் கனவுக்கு — இரண்டு வகைகளிலும் இலக்கியம் மட்டுமல்லாமல், காலத்தின் மரணத்திலும் துடைத்து அழித்தலிலும் அவை முடிகின்றன. பிந்தையது உயிர்த்திருக்கும், தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கும் சிறிய துண்டு துணுக்குகளைக்  குறிக்கிறது; தர்க்கத்தையும்.” 

ரொபெர்த்தோ பொலான்யோவின் எழுத்துகள் இலக்கியத்தின் இயல்பு, அதன் நோக்கம், வாழ்க்கையுடன் அது கொள்ளும் உறவு பற்றியதோர் அக்கறையைத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துகின்றன. கலாசாரம், முக்கியமாக இலக்கியக் கலாசாரம் ஒரு வேசி என்கிறார். அரசியல் ஒடுக்குமுறை, கிளர்ச்சி, அபாயம் ஆகியவற்றின் முன்னால், எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதப்பட்ட சொற்களின்மீது மயங்கி விழுகிறார்கள். பொலான்யோவுக்கு இதுவே மேன்மை, கருப்பு – நகைச்சுவை ஆகிய இரண்டுக்கும் மூலாதரமாக இருக்கிறது. ‘காட்டுமிராண்டித் துப்பறிவாளர்கள்’ நாவலில் இரண்டு இளம் லத்தினோ கவிகள் தங்களுடைய அரிய கலையின்மீது ஒருபோதும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்கள். சில சமயங்களில் அபத்தமானவர்களாகத் தெரியும் அவர்கள், எப்போதுமே வீரக் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். இது எதை அர்த்தப்படுத்துகிறது என்னும் கேள்வியைத் தமது ‘சிலியில் இரவோரம்’ நாவலில் எழுப்புகிறார்.  அதிகாரத்தின் குண்டர்கள், நிலவறைகளில் வாழும் அப்பாவி மக்களைச் சித்திரவதை செய்வதைப்போல, அறிவிஜீவி மேட்டிமையாளர்கள் கவிதை எழுதுகிறார்கள், ஓவியம் தீட்டுகிறார்கள். முற்போக்கு நாடகங்களில் உள்ள சிறந்த கருத்துகளை விவாதிக்கிறார்கள்.  

சொல்லுக்குத் தேசிய விசுவாசம் கிடையாது, அடிப்படை அரசியல் சாய்வு கிடையாது. அது அதிகாரத்தில் இருக்கப்போகும் யாரும் வரவழைக்க முடிகிற ஒரு பூதம். பொலான்யோவின் மேதைமையின் ஒரு பகுதி நகைமுரண்கள் வழியே மிகக் கூர்மையாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருவேளை நாம் கலையில் ஒரு மிக எளிய சௌகரியத்தைக் காணவும், அதை மிக நிஜமான மனிதப் பிறவிகளுக்கு மிக நிஜமான விஷயங்களைச் செய்வதில், மிகப் பரபரப்பாக இருக்கும் ஓர் உலகில், நாம் மயக்கமடைவதற்கும் மன்னிப்பைப் பெறுவதற்கும் ஒளிந்துகொள்வதற்கும் பயன்படுத்தினால், பொலான்யோவின் பக்கங்களில் நீங்கள் உங்கள் கைகளை வெட்டிக்கொள்ளக்கூடும். ஒரு ராணுவக் கிளர்ச்சியின்போது பிளேட்டோவை வாசித்துக்கொண்டிருப்பது ஒரு தைரியமான செயலா அல்லது வேறு ஏதேனுமாக இருக்குமா? 

தகவல்களுக்கு நன்றி:

  • https://en.wikipedia.org/
  • பொலான்யோவின் கவிதைத் தொகுப்புகள்: The Romantic Dogs, The Unknown University & Tres.

ரொபெர்த்தோ பொலான்யோ கவிதைகள்

உனக்கு எனது பரிசு

உனக்கு என்னுடைய பரிசு ஒரு படுபாதாளம், அவள் கூறினாள்,
ஆனால் பல ஆண்டுகள் கடந்த பிறகு மட்டுமே
மெக்ஸிகோவிலிருந்தும் என்னிடமிருந்தும் விலகிய ஒரு தொலைவில்
நீ அதை உணரும் வகையில்
அது மிக நுட்பமானதாக இருக்கும்.
உனக்கு அது அதிகமும் தேவைப்படும்போது நீ அதைக் கண்டுபிடிப்பாய்
மேலும் அது
மகிழ்ச்சிகரமான முடிவாக அல்லாது
வெறுமையும் சந்தோஷமும் கொண்டதொரு கணமாக இருக்கும்.
பிறகு நீ என்னை நினைத்துப் பார்க்கக்கூடும்,
கொஞ்சம் மட்டுமேதான் ஆனாலும்.

லிசாவின் ஞாபகம்

லிசாவின் ஞாபகம் மீண்டும் இறங்கி வருகிறது             
இரவின் துளை வழியாக.
ஒரு கயிறு, ஒரு கற்றை ஒளி
அதோ அங்கே இருக்கிறது:
லட்சிய மெக்சிகன் கிராமம்.
அநாகரிகத்தின் மத்தியில், லிசாவின் புன்னகை,
லிசாவின் உறைந்த படம், 
திறந்த கதவுடன் லிசாவின் ஃப்ரிட்ஜ்
சிறிது வெளிச்சத்தை
இந்த ஒழுங்கற்ற அறையின் மீதும் தூவுவதால்
இப்பொழுது நாற்பதைத் தொடும் நான்
மெக்ஸிகோவை அழைக்கிறேன், மெக்ஸிகோ நகரை அழைக்கிறேன்,
பெருங்குழப்பத்துக்கும் அழகுக்கும் இடையில்
தனது ஒரேயொரு உண்மைக் காதலை அழைப்பதற்காக
ஒரு பொதுத் தொலைபேசியைத் தேடிக்கொண்டிருக்கும்
ரொபெர்த்தோ பொலான்யோவை அழைக்கிறேன்.

விசித்திர நாய்கள்

அப்போது, இருபது வயது அடைந்துவிட்டபோது             
பைத்தியமாக இருந்தேன்.
ஒரு தேசத்தை இழந்தேன்.
ஆனால் ஒரு கனவை வென்றிருந்தேன்.
அந்தக் கனவு என்னிடம் இருந்தவரை
வேறெதுவுமே முக்கியமாகப் படவில்லை.
விசித்திரமான நாய்கள் உடனிருக்க
வேலை செய்ததோ, பிரார்த்தித்ததோ
காலை வெளிச்சத்தில் படித்ததோ, எதுவுமே.
எனது ஆத்மாவின் வெற்றிடத்தில் கனவு வாழ்ந்தது.
ஒரு மரப் படுக்கையறை,
மிதமான ஒளியில் போர்த்தப்பட்டு
வெப்ப மண்டலங்களின் நுரையீரல்களில் ஆழமாக.
சில சமயங்களில் நானே எனக்குள் பின்வாங்கி
கனவைப் பார்வையிட்டேன்: திரவ எண்ணங்களில்,
நித்தியத்துவமடைந்த ஒரு சிலை
காதலில் நெளியும்
ஒரு வெள்ளைப் புழு.
ஒரு தப்பியோடிய காதல்.
ஒரு கனவுக்குள்ளே இன்னொரு கனவு.
மற்றும், நீ வளர்ந்துவிடுவாயென என்னிடம் கூறும் கொடுங்கனவு.
வலிகளின் புதிர்மிக்க சுழற்பாதையின் படிமங்களை நீ பின்னால் விட்டுச் செல்வாய்
அவற்றை மறந்தும்விடுவாய்.
ஆனால்  அப்போதோ, வயதெய்துவதே ஒரு குற்றமாய் இருந்திருக்கும்.
நான் கூறினேன், இதோ, விசித்திர நாய்களுடன் இங்கிருக்கிறேனென்றும்
இங்கேதான் இனி இருக்கப் போவதாகவும்.

லூபே

அவள் ஹெரெரோவில் வேலை பார்த்தாள், ஜூலியனிலிருந்து ஒரு சில தெருக்கள் தள்ளி,
அவளுக்கு வயது 17, ஒரு மகனை இழந்திருந்தாள்.
அந்த ட்ரேபோல் ஹோட்டல் அறையில் ஞாபகம் அவளை அழ வைத்தது,
ஒரு சில ஆண்டுகள் வாழ்வதற்கு உகந்த விசாலமான, இருண்ட,
குளியலறை கழிப்பறைகளுடன் கூடிய சரியான இடம். ஞாபகங்களின்
கட்டுக் கதைகளையோ அல்லது திகிலூட்டும் கவிதைகளின் ஒரு தொகுப்பையோ
எழுதுவதற்கு ஏற்ற சரியான அறை. லுபெ
ஒல்லியாகவும் நீண்ட கால்களுடனும் ஒரு சிறுத்தையைப் போன்ற
புள்ளிகளுடனும் இருந்தாள்.
முதல் முறை ஒரு எழுச்சியைக்கூட நான் அடையவில்லை:
எழுச்சி அடைய விரும்பவும் இல்லை. லுபெ அவளது வாழ்க்கை பற்றியும்
அவளுக்கு மகிழ்ச்சி என்பது என்ன என்பதைப் பற்றியும் பேசினாள்.
ஒரு வாரம் கடந்த பிறகு நாங்கள் மீண்டும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டோம். ஒரு பழைய கேடிலாக் கார் பம்பரின் மீது
சாய்ந்து நின்ற பிற பதின்பருவ விலைப் பெண்குட்டிகளின் மத்தியில்
அவளைக் கண்டுபிடித்தேன்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்தோம். அதற்குப் பிறகு அவளது வாழ்க்கை பற்றிய எல்லா விஷயங்களையும்
என்னிடம் சொல்லத் தொடங்கினாள், சில சமயங்களில் அழுதவாறு,
சில சமயங்களில் உறவு கொண்டவாறு,
அனேகமாக எப்போதுமே படுக்கையில் நிர்வாணமாக,
முகட்டை வெறித்துக்கொண்டு, கைகளைக் கோர்த்துக்கொண்டு.
அவளது மகன் நோய்மையுடன் பிறந்தான். லுபெ, கன்னி தெய்வத்திடம்
குழந்தை குணமடைந்துவிட்டால்  இந்தத் தொழிலையே விட்டுவிடுவதாக
வேண்டிக் கொண்டாள். 
ஓரிரு மாதங்கள் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினாள்,
பிறகு மீண்டும் திரும்ப வேண்டியதாயிற்று. அவளுடைய மகன் இறந்தவுடன்,
கன்னி தெய்வத்திடம் கொடுத்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் போனது தன்னுடய தவறு என்று லூபே கூறினாள்.
ஒரு வாக்குறுதி மீறலுக்கு விலையாக கன்னி தெய்வம் குட்டி தேவதையைத்
தூக்கிக்கொண்டு போயிற்று.
என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
நிச்சயமாக, நான் குழந்தைகளை விரும்பினேன்,
ஆனால் பல ஆண்டுகள் கழித்தே
ஒரு மகனைப் பெற்றிருப்பது என்னவென்பதை அறிந்து கொள்வேன்.
எனவே நான் அமைதியாக இருந்தேன். அந்த ஹோட்டலின்
அமைதியில் இருந்து வெளிப்படும் இனம் புரியா உணர்வைப்பற்றி யோசித்தேன்.
சுவர்கள் மிகத் திண்மையாக இருந்தனவோ அல்லது நாங்கள் மட்டுமே அங்கே தங்கியிருந்தோமோ
அல்லது மற்றவர்கள் முனகுவதற்காகக்கூட வாயைத் திறக்கவில்லையோ என்னவோ.
ஓர் ஆணாக உணர்வதும் லுபெவைச் சவாரி செய்வதும் ஈனனாக உணர்வதும்
மிக எளியது. உங்கள் லயத்திற்கேற்ப அவளை இயங்க வைப்பதும் எளிது.
புகரேலி தியேட்டரில்
பார்த்த புதிய திகில் திரைப்படங்களைப் பற்றி அவள்
பிதற்றுவதைக் கேட்பதும் எளிது.
அவளது சிறுத்தைக் கால்கள் எனது இடையைச் சுற்றி வளத்திருக்கும்
எனது மார்பு நுனிகளையோ அல்லது எனது இதயத் துடிப்பையோ தேடியபடியே
தலையை என் மார்பில் புதைத்திருப்பாள்.
என்னிடம் ஒரு இரவில் கூறினாள், உனது இந்தப் பகுதியைத்தான்
நான் உறிஞ்சுவதற்கு விரும்புகிறேன்.
எதை, லூபே? உன் இதயத்தை.

தலைப்பில்லாதது

புருவத்தின் கீழ் உன் அழகின் பிம்பத்தைத் தாங்கி நிற்கிறேன்

—ஜார்டி டெ சாண்ட் ஜார்டி

அந்த உடலை நான் மறக்க முயற்சிப்பேன்      
உறைபனி விழுந்துகொண்டிருக்கையில் தோன்றிய அந்த உடலை
பூங்காவில்     
நாம் எல்லாரும் தனியாக இருந்த போது, கூடைப்பந்து
விளையாட்டுக் கூடங்களின் பின்புறம்
சிறிய குன்றின் மேல்
சற்றுப் பொறு என்று கூறினேன், அவள் திரும்பி வந்தாள்:
ஓர் உன்னதமான இதயத்தால் ஒளியூட்டப்பட்ட வெள்ளை முகத்தோடு    
அப்படி ஒரு அழகை நான் ஒருபோதும் பார்த்ததில்லை
நிலவு பூமியைவிட்டு விலகிச் சென்றது
வெகுதூரத்திலிருந்து நெடுஞ்சாலைக் கார்களின் சப்தம்: மக்கள்
வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
நாம் எல்லாருமே ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம்.
உறைபனியின் அடுத்தடுத்த திரைகளை விலக்கி
அதன் கூர்ந்த நோக்கில் உலகின் அழகையும் வலியையும் வெளிப்படுத்திய
அவளுடைய முகத்தைப் பார்க்க என்னை அனுமதித்த வரையிலும்.    
உறைபனியில் காற்தடங்களைப் பார்த்தேன்.     
உறைபனிக் காற்றை கன்னங்களில் உணர்ந்தேன்
பூங்காவின் மறு முனையில் யாரோவொருவர் சைகைகள் செய்தார்
ஒரு கை-மின்விளக்குடன்     
ஒவ்வொரு பனித்திவலையும் உயிர்ப்புடன்
ஒவ்வொரு பூச்சி முட்டையும் உயிர்ப்புடன் கனவு கண்டபடி   நான் நினைத்தேன்
இப்பொழுதிலிருந்து  எப்போதைக்குமான தனிமையில் இருக்கப் போகிறேனென்று     
ஆனால் உறைபனி விழுந்துகொண்டே
விழுந்துகொண்டே இருந்தது  
அவளும் போய்விடவில்லை

காவ்யா1

அவள் சூரியனை விடவும் அதிகம் அழகானவள்
எனக்குப் 16 வயதுகூட ஆகியிருக்கவில்லை.
24 ஆண்டுகள் கடந்துவிட்டன
இன்னும் அவள் என் பக்கத்தில் இருக்கிறாள்.
 
சில சமயங்களில் அவள் மலைகள்மீது
நடந்து போவதைப் பார்க்கிறேன்: நமது பிரார்த்தனைகளின்
காவல் தேவதை அவள்தான்.
கனவில் திரும்பத் திரும்ப வரும்
 
வாக்குறுதியும் சீழ்க்கையொலியும் அவள்தான்.
நம்மை அழைக்கும், கைவிடவும் செய்யும்
அந்தச் சீழ்க்கையொலி.
அவளது கண்களில் எனது தொலைந்த காதலின்
 
எல்லா முகங்களையும் பார்க்கிறேன்.
முடிவற்ற சாகசங்களின் பயங்கரமான நாட்களில்
நான் அவளிடம் கூறுகிறேன்,
ஓ, காவ்யா, என்னைக் காப்பாற்று என்று.
 
என்னிடமிருந்து ஒருபோதும் போய்விடாதே.
எனது காலடிகளையும் எனது மகன் லாட்டரோவின் காலடிகளையும்
நீ கவனித்துக் கொள்
மீண்டும் ஒருமுறை எனது முதுகெலும்பின்மீது
 
உனது விரல் நுனிகளை உணர்வதற்கு என்னை அனுமதி
எல்லாம் இருண்டிருக்கையில்,
எல்லாவற்றையும் இழந்திருக்கையில் என்னை ஊக்குவி.
சீழ்க்கையொலியை மீண்டும் கேட்கவிடு.
 
நான் உனது நமபிக்கைக்குரிய காதலன்,
சில சமயங்களில் கனவு காணுதல் என்னை
உன்னிடமிருந்து வெளியே இழுத்தாலும்.
அந்தக் கனவுகளின் மகாராணியும் நீதானே.
 
ஒவ்வொரு நாளும் என் நட்பு உன்னிடம் இருக்கிறது
மேலும் ஏதோவொரு நாளில்
உன் நட்பு என்னை மறதியின் பாழ்நிலத்திலிருந்து
வெளியே இழுத்துவிடும்.
 
எனவே நான் போகும்போது
நீ வந்தாலும்கூட
மிக ஆழத்தில்
நாம் பிரிக்கப்பட முடியாத நண்பர்கள்.
 
காவ்யா, எங்கெல்லாம்
நான் போவேனோ,
நீயும் போவாய்.
நான் உன்னை மருத்துவமனைகளில் பார்த்தேன்
 
அரசியல் கைதிகளின்
வரிசையில்
எட்னா லீபெர்மானின்2
பயங்கரமான கண்களில்.
 
துப்பாக்கி ஏந்திய வீரர்களின்
சந்துகளில்கூட.
என்னை எப்பொழுதுமே நீ காப்பாற்றினாய்!
தோல்வியிலும் வெற்றியிலும்.
 
ஆரோக்கியமற்ற உறவுகளில்
கொடூரங்களில்,
எப்பொழுதுமே நீ என்னுடன் இருக்கிறாய்.
ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்கூட
 
அல்மெடாவின் கிறிஸ்டல் புத்தக உலகின்3
ரொபெர்த்தோ பொலான்யோ
உருமாற்றம் அடைந்தாலும்,
வாதத்தால் முடமாகிப் போனாலும்,
 
கிழமாக முட்டாளாக மாறிவிட்டாலும்,
நீ அப்படியே மாறாத அழகோடிருப்பாய்.
சூரியனையும் நட்சத்திரங்களையும் விடவும்
கூடுதலாக.
 
காவ்யா, எங்கெல்லாம் நீ
போகிறாயோ
நானும் போவேன்.
உனது ஒளிரும் அடிச்சுவட்டைப் பின்தொடர்வேன்.
 
நீண்ட இரவின் குறுக்கே.
வயதையோ நோய்மையையோ பற்றிக்
கவலைப்படாது
வலியையோ
 
உன்னைப் பின் தொடர்வதற்கான
முயற்சியையோ பற்றிக் கவலைப்படாது.
ஏனெனில் உன்னோடு நான்
மாபெரும் பாழ்வெளிகளையும் கடக்க முடியும்.
 
மீண்டும் கைமேராவுக்கு4
அழைத்துச் செல்லும்
கதவை நான் எப்போதும் கண்டுபிடிப்பேன்
நீ என்னுடன் இருப்பதால்.
 
காவ்யா
மிக அழகானவள் சூரியனைக் காட்டிலும்
மிக அழகானவள்
நட்சத்திரங்களைக் காட்டிலும்.

  1. Muse என்பவள் கிரேக்கத் தொன்மத்தில் வரும் ஒன்பது கலை தேவதைகளில் ஒருவரான காவியக் கலையின் தேவதை. காவிய தேவதையை காவ்யா என்று அழைக்கலாம்.
  2. எட்னா லீபெர்மான் என்பது எந்த சிறப்பும் இல்லாத ஒரு சாதாரணமானதொரு பெயர்.
  3. அல்மெடாவில் இருக்கும் கிரிஸ்டல் புக் ஸ்டோர் ஒரு தனிச் சிறப்புடைய புத்தகக் கடை. இணையத்தில் மெக்ஸிகோவின் அழகிய ஞாபகம் என்கின்றனர். ஐரோப்பிய ஃப்ரெஞ்சு அழகியலைக்கொண்டு 1904ல் தொடங்கிய கட்டடப்பணி முடிந்து 1934ல் திறந்து வைக்கப்பட்டது. 1941ல் இது கண்ணாடி மாளிகையாக்கப்பட்டது. வாசகர்கள் முழுக்க தங்களுடைய இடமாகப் பாவித்துக்கொள்ளும் வகையில் மெக்ஸிகோவின் பண்பாட்டு அடையாளம் ஆகியது. 1973ல் பெருநகரப் போக்குவரத்துக்காக இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டபோது அக்கால அறிவுஜீவிகள் இதைக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்றார்கள்.
  4. கைமேரா என்பது பல மிருகங்கள் இணைந்த ஒரு கிரேக்கத் தொன்ம விலங்கு.

டீனா கம்பானா, காஸ்டல் பூல்ச்சி மனநல மருத்துவமனையில் தன்வரலாற்றைத் திருத்தியமைக்கிறார்                    

நான் வேதியியலுக்கு மட்டுமே பொருத்தமானவன், வேதியியலுக்கு மட்டுமே.               
ஆனால் ஒரு நாடோடியாக இருக்க விரும்பினேன்.                                                 
கோளின் புயல்களில் எனது தாயின் அன்பைப் பார்த்தேன்.
நோண்டப்பட்ட கண்களையும், என் படுக்கையைச் சுற்றிவரும்
எடையற்ற கண்களையும் பார்த்தேன்.
எனது ஒரு மறை, கழன்றுவிட்டதாக அவர்கள் கூறினார்கள்.
ரயில்களிலும் படகுகளிலும் போனேன், இளமைப் பொழுதிலேயே
மிகப் பணிவான மக்களாகிய நாடோடிகளுடனும் தலைச்சுமை வியாபாரிகளுடனும்
நியாயத்தின் நிலங்கள் முழுவதிலும் பயணம் செய்தேன்.
அதிகாலையிலேயே எழுந்துவிடுவேன் அல்லது தூங்கவே மாட்டேன். மூடுபனி
இன்னும் விலகாத பொழுதில்
கனவுகளின் காவல் பூதங்கள் வீணாக எச்சரிக்கின்றன.
எச்சரிக்கைகளையும் அபாய அறிவிப்புகளையும் கேட்டேன், ஆனால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவை எனக்கானவை அல்ல, தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கானது,
ஆனால் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எளிதில் புரியாத சொற்கள், உறுமல்கள், வலியின் கதறல்கள்,
எங்கே போனாலும் அன்னிய மொழிகளைக் கேட்டேன்.
மிகக் கீழான வேலைகள் பார்த்தேன்.
அர்ஜெண்டைனா மற்றும் ஐரோப்பா முழுவதும் எல்லாரும்
தூங்கும், கனவுகளின் காவல் பூதங்கள் தோன்றும் நேரத்தில்
பயணம் செய்தேன்.
ஆனால் அவர்கள் அடுத்தவர்களின் கனவுகளுக்குக் காவல் இருந்தார்கள்,
அவர்களது அவசரச் செய்திகளின் ரகசியங்களை என்னால்
புரிந்துகொள்ள முடியவில்லை.
சில சிதறல்கள் புரிந்திருக்கலாம் அதனால்தான் புகலிடங்களையும்
சிறைச்சாலைகளையும் போய்ப் பார்த்தேன். சிதறல்கள்,
எரியும் எழுத்தசைகள்.
சில சமயங்களில் தொன்ம மிருகம் சிமெராவை நான் நம்பிய போதிலும்
வரும் தலைமுறையை நான் நம்பவில்லை.
வேதியியலுக்கு மட்டுமே பொருத்தமானவன் நான், வேதியியலுக்கு மட்டுமே.                                                

மெக்ஸிகோவில் காட்ஜில்லா

கவனமாகக் கேள், என் மகனே: மெக்ஸிகோ நகரம்மீது
குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன.
ஆனால் ஒருவரும் கவனிக்கக்கூட இல்லை.
காற்று தெருக்கள் வழியாகவும் திறந்த ஜன்னல்கள் வழியாகவும்
விஷத்தைச் சுமந்து சென்றது.
இப்போதுதான் சாப்பாட்டை முடித்துவிட்டு டிவியில்
நீ கார்ட்டூன்கள் பார்த்துக்கொண்டிருந்தாய்.
நான் பக்கத்தில் படுக்கையறையில் வாசித்துக்கொண்டிருந்தேன்
நாம் சாகப் போகிறோம் என்பதை உணர்ந்திருந்ததால்.
தலைசுற்றலையும் குமட்டலையும் மீறி சமையலறைக்கு
என்னை இழுத்துக்கொண்டு போனபோது தரையில் உன்னைப் பார்த்தேன்.
நாம் தழுவிக்கொண்டோம். என்ன நடந்துகொண்டிருந்தது என்று நீ கேட்டாய்
மரணத்தின் செயல்நிரலியில் இருக்கிறோம் என்பதை உன்னிடம் கூறாது
இருவரும் இணைந்து இன்னுமொரு பயணம் போகப் போவதாகவும்
அதை நினைத்து நீ பயப்படக்கூடாதென்றும் கூறினேன்.
விட்டுச் சென்றபோது மரணம் நமது கண்களைக்கூட
மூடியிருக்கவில்லை.
நாம் யார்? ஒரு வாரம் அல்லது ஓராண்டிற்குப் பிறகு நீ கேட்டாய்.
தற்செயலின் பெரிய அழுகிப்போன சூப்பில்
எறும்புகள், தேனீக்கள், தவறான எண்களா?
மகனே, நாம் மனித உயிர்கள், கிட்டத்தட்ட பறவைகள்,
பொதுவெளிக் கதாநாயகர்கள் மற்றும் ரகசியங்கள்.

~oOo~

ஆங்கிலம் வழியாக தமிழில்: சமயவேல்

3 Replies to “கவிஞர் ரொபெர்த்தோ பொலான்யோ”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.