சிறுகதை எழுதுவது எப்படி?

ரொபெர்த்தோ பொலான்யோ

சிறுகதை என்பது கடினமான கலை வடிவம் என்றொரு கருத்து இலக்கிய உலகில் நிலவுகிறது. நாவல்களை எழுதுவோரையே பொது வாசகர்கள் அதிகம் அறிகிறார்கள் என்றாலும், அது சந்தையின் தாக்கமே என்று நாம் கருதலாம். எழுதுவோரிடையே சிறுகதைகள் எழுதுபவர்களுக்குத் தனி மதிப்பு இருக்கவே செய்கிறது.

நாவல்களுக்காகவே அதிகம் தெரிய வந்திருக்கிற பொலான்யோ, விரும்பித் தேர்ந்த வடிவம் சிறுகதை, அல்லது மிகச் சிறு நாவல்கள் என்று அவரது பேட்டிகளிலிருந்து தெரிகிறது. 

இனி, பகடியும் எள்ளலும் நிறைந்து, ஆனால் உண்மை எனத் தோன்றும் பாவத்துடன் ரொபெர்த்தோ பொலான்யோ ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ எனச்  சொல்வதைப் பார்ப்போமா?

எனக்கு இப்போது நாற்பத்தி நான்கு வயதாகிறது. சிறுகதை எழுதும் கலையைப் பற்றி நான் சில அறிவுரைகள் தரப் போகிறேன்:

1 ஒருக்காலும் ஒவ்வொன்றாகச் சிறுகதைகளை அணுகாதீர்கள். ஒருவர் சிறுகதையை ஒவ்வொன்றாக அணுகுவாரேயானால், உண்மையிலேயே இறக்கும் வரையிலும் அவர்  ஒரு கதையையே எழுதிக் கொண்டிருக்கக்கூடும்.

2 சமயத்தில் மூன்று அல்லது ஐந்து சிறுகதைகள் எழுதுவது சாலச் சிறந்தது. சக்தி உள்ளவர்கள், ஒன்பது அல்லது பதினைந்துகூட ஒரே நேரத்தில் எழுதலாம்.

3 ஜாக்கிரதை: ஒரே நேரத்தில் இரு கதைகளை எழுதும் சபலம், ஒரே ஒரு கதையை எழுதுவதில் உள்ள அபாயத்திற்குச் சமமானதுதான். இது, காதலர்களின் ஊடுபாவும் ஆடிகள்போல, பிம்பத்தை இரட்டித்துத் துக்கத்தைக் கூட்டும்.

4 ஒருவர் சர்வ நிச்சயமாக ஹொராசியோ கிரோகா (Horacio Quiroga),  பெலிஸ்பெர்த்தோ ஹெர்னான்டெஸ் (Felisberto Hernandez), ஹொர்கே லூயிஸ் போர்ஹெஸ் (Jorge Luis  Borges) இவர்களின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும். ரூல்ஃபோ (Rulfo), அகுஸ்டோ மான்டெரோஸொ (Augusto Monterroso) இவர்களையும் படிக்க வேண்டும். மேற்குறிப்பட்ட எழுத்தாளரின் படைப்புகளால் கவரப்பட்ட எந்தவொரு சிறுகதை எழுத்தாளருமே, கமீலோ ஹோஸே சேலா (Camilo Jose Cela), ஃப்ரான்சிஸ்கோ உம்பிரால் (Francisco Umbral) ஆகியோரின் எழுத்துக்களை எப்போதுமே படிக்க மறுத்தாலும், கண்டிப்பாக ஹூலியோ கொர்தாசாரையும் (Julio Cortazar), அடால்ஃபொ பியோய் கசாரெஸ்ஸையையும் (Adolfo Bioy Casares) வாசிப்பார்கள் – ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் சேலா, உம்பிராலை வாசிக்க மட்டார்கள்.

5 மேற்சொன்னது இன்னமும் தெளிவாக இல்லையென்றால், மீண்டும் சொல்கிறேன்: என்ன ஆனாலும் சேலா, உம்பிராலைப் பரிசீலனை செய்யாதீர்கள்.

6 சிறுகதை எழுத்தாளன் துணிவுள்ளவனாக இருக்க வேண்டும். ஒப்புக்கொள்வதற்கு வருந்தத்தக்க உண்மை என்றாலும், அது அப்படித்தான்.

7 வழக்கமாக பெட்ருஸ் போரெலின் (Petrus Borel) சிறுகதைகளைப் படித்திருக்கிறோம் என்று சொல்லிக்கொள்வதில் சிறுகதை எழுத்தாளர்கள் பெருமிதம் கொள்வார்கள். அவரது பாணியை நகலெடுத்து எழுதும் பல எழுத்தாளர்கள் இதற்காகவே கவனம் பெறுகிறார்கள். எத்தனை பெரிய தவறு இது! அதற்குப் பதிலாக அவரது உடையணியும் பாணியை அவர்கள் போலிசெய்ய வேண்டும் . உண்மையைச் சொல்வதென்றால் இவர்களுக்கு அவரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது, தியோஃபில் கோட்டியே (Theophile Gautier), ஜெரார் த நெர்வால் (Gerard de Nerval) போன்றவர்களையும் தெரியாது.

8 நாம் ஓர் ஒப்பந்தத்திற்கு வருவோம்: போரெலைப் படியுங்கள், அவரைப்போல உடை அணியுங்கள். ஜுல் ஹொனார் (Jules Renard), மார்செல் ஷ்வாப் (Marcel Schwob) ஆகியோரைப் படியுங்கள். அனைத்துக்கும் மேலாக, ஷ்வாப்பைப் படித்த பிறகு, அல்ஃபான்சோ ரேயெஸ்சிற்குச் (Alfonso Reyes) செல்லுங்கள், அவரிடமிருந்து போர்கெஸ்சிற்கு (Borges).

9 நேர்மையாக, உண்மையைச் சொல்வதென்றால், மிக அருமையான நல்ல படைப்புகள் அபரிமிதமாக உள்ள, எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe) நாம் படிப்பதற்குப் போதுமானவர்.

10 ஒன்பதாம் இலக்கமிட்ட குறிப்பினை எண்ணி எண்ணிச் சிந்தியுங்கள். உங்களுக்கு நேரம் இன்னமுமிருக்கிறது. எண் 9-ஐ நினையுங்கள். முடிந்தவரை முட்டியிட்டு அமர்ந்து சிந்தியுங்கள்.

11 மிகப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்கள், புத்தகங்கள் ஆகியவற்றையும் ஒருவர் படிக்க வேண்டும். உதாரணமாக – பெரி ஹிப்ஸௌஸ் (Peri Hypsous) முதல் நூற்றாண்டு கி பி.; ஆங்கிலத்தில் ‘ஆன் த சப்லைம்’ என்று  அழைக்கப்படுகிறது. பிலிப் சிட்னி (Philip Sidney) எழுதிய தைரியசாலிகள், அதிர்ஷ்டமற்றவர்கள் பற்றிய ஈரேழ் வரிப்பாக்கள். (சிட்னியின் சரிதையைப் ப்ரூக் பிரபு – Lord Brooke எழுதியுள்ளார்). எட்கர் லீ மாஸ்டர்ஸ் (Edgar Lee Masters) எழுதிய ‘த ஸ்பூன் ரிவர் ஆந்தாலஜி (The Spoon River Anthology – 1916), என்ரிகே விலா மாட்டாஸ் (Enrique vila Matas) எழுதிய ‘மேன்மையான தற்கொலைகள்’ (Suicidios ejemplares – 1991), ஹாவியர் மாரியாஸ் (Javier Marias) எழுதிய மியன்த்ராஸ் எய்யா டூயர்மென் ( Mientras ellas duermen – 1990 – ‘பெண்கள் உறங்குகையில்’ ) இவைகளைப் படியுங்கள்.

12 மேலும், ஆன்டன் செகாவ் (Anton Chekov) மற்றும் ரேமன் கார்வெரையும் (Raymand Carver); இந்த இருவரில் ஒருவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்.தமிழாக்கம்: பானுமதி ந.

இதன் இங்கிலிஷ் மூலம் இங்கே கிட்டும்: https://electric-cereal.tumblr.com/post/76773707209/roberto-bola%C3%B1o-on-how-to-write-a-short-story-from

அவர் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:-

Petrus Borel (1809-1959) ஃப்ரெஞ்சு நாட்டவர். அவரை ‘ஓநாய் மனிதன்’ என்று அழைத்தார்கள். ஸர்ரியலிசத்தின் முன்னோடி என அறியப்படுகிறார்.

Jorge Luis  Borges (1899-1986) ஆர்ஜென்டினா நாட்டவர். எழுத்தாளர், தத்துவவாதி, கவிஞர், மொழிபெயர்ப்பாளர். கற்பனை இடங்களும், முடிவிலிகளும் நிரம்பிய ஆக்கங்கள் – த புக் ஆப் சேன்ட், யுனிவெர்சல் ஹிஸ்டரி ஆப் இன்ஃபேமி. லாபிரிந்த்ஸ்.  பொர்ஹே சிறுகதைகளை மிக விரும்பியவர். அவரே தனக்குப் பிடித்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது ‘த ரம்பஸ்’ என்ற தலைப்பில் வெளியானது. அதன் உள்ளடக்கத்தை இங்கே பெறலாம்: http://www.openculture.com/2013/09/jorge-luis-borges-favorite-short-stories.html

இவருடைய Labyrinths என்கிற ஒரு சிறுகதை, 70களின் துவக்கத்தில் கசடதபற பத்திரிகையில், ‘வட்டச் சிதைவுகள்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயிற்று. மொழிபெயர்ப்பாளர்: தருமு அரூப் சிவராம் (அ) பிரமிள்.

Raymond Carver (1938-1988) அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், சிறுகதை விற்பன்னர். மினிமலிசத்தைப் பின்பற்றியவர். தன் நிலைப் பார்வையில் கதை எழுதுவதில் வல்லவர். இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் பெயர் பெற்றவை: வில் யூ ப்ளீஸ் பீ கொய்யட், ப்ளீஸ் (1976), வாட் வி டாக் அபௌட் வென் வி டாக் அபௌட் லவ் (1981), மற்றும் கதீட்ரல் (1983).  இவருடைய எழுத்து அநேகமாக எல்லாமே சிறுகதைகள்தான். இவர் என்ன காரணத்தாலோ தமிழ் இலக்கியவாதிகள் நடுவே மிகப் பிரபலமாக இருக்கிறார். இவருடைய பல சிறுகதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரசுரமாகியுள்ளன. ஒரு வாழ்க்கைக் குறிப்பை இங்கே பெறலாம்- https://www.poetryfoundation.org/poets/raymond-carver  ஆம், இவர் கவிதைகளையும் எழுதி இருக்கிறார்.

Adolfo Bioy Casares (1914-1999) ஆர்ஜென்டினா நாட்டவர். பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், கதைகள் எழுதியவர். த இன்வென்ஷன் ஆஃப் மாரல் என்ற புதினம் பிரபலமானது.

Camila Jose Cela (1916-2002) ஸ்பானியர், நாவல், சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். பயண நூல்களும் எழுதியிருக்கிறார். இவருடைய புத்தகங்களின் பட்டியல் ஒன்று இங்கே கிட்டும்: https://www.goodreads.com/author/list/34773.Camilo_Jos_Cela

Anton Chekov (1860 – 1904) ருஷ்ய நாட்டவர். புஷ்கின் பரிசு பெற்றவர். உலகின் தலை சிறந்த கதைசொல்லி என அறியப்படுபவர். இம்ப்ரஷனிஸ்ட் என்ற வகைமையில் தேர்ந்தவர். சொற்களால் கட்டமைத்தவர். ரஷ்ய எழுத்தாளர்களில் நால்வர், தமிழ் வாசகர்கள், எழுத்தாளர்களிடையே பிரபலமானவர்கள். அந்த நால்வரில் ஆந்தோன் சியகாஃப் ஒருவர். இவருடைய சிறுகதைகளும் சுதந்திர இந்தியாவில் தொடக்கத்திலிருந்தே பல மொழிகளிலும், மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.  குறிப்பாகத் தமிழில். சோவியத் ரஷ்யாவின் பண்பாட்டுப் பிரசாரத்துக்கு இவர் அத்தனை உவப்பாக இருந்திருக்க வழியில்லை என்றாலும், இவரைத் தவிர்க்க முடியவில்லை என்றே தோன்றுகிறது. இவருடைய புத்தகங்களின் பட்டியல் ஒன்று இங்கே. (பெரும்பாலும் இங்கிலிஷில் மொழிபெயர்ப்பானவை.) https://www.goodreads.com/author/list/5031025.Anton_Chekhov

Julio Cortazar (1914-1984) இருத்தலியல் சிக்கல்களைப் பேசியவர். எழுத்தில் பரிசோதனைகளைச் செய்து பார்த்தவர். 20-ஆம் நூற்றாண்டின் விழுமியங்களைப் புறம்தள்ளியதால் மன உளைச்சலுக்கு ஆளானவர்.  ஹூலியோ கொர்த்தாஸாரே நமக்குச் சிறுகதைகள் பற்றி ஒரு வகுப்பு நடத்தி இருக்கிறார். 1980-ஆம் ஆண்டு கலிஃபோர்னியா மாநிலத்தில் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் (இது இடதுசாரிகளின் பிடியில் உள்ள பல்கலை என்று பொதுவாக அறியப்படுவது! 😊 ) இவர் ஆற்றிய உரையின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்: https://lithub.com/julio-cortazar-teaches-a-class-on-his-own-short-story/

இதில் இவரே முன்வைக்கிறபடி, கற்பனை செய்யப்பட்டதிலேயே மிக எதார்த்தமான சிறுகதைகளில் ஒன்று, இவருடைய ‘அபொகலிப்ஸ் அட் ஸொலெண்டிநாமே’ என்பது. 

இவருடைய சிறுகதைகளைப் பற்றிய ஒரு மறுபார்வை, த கார்டியன் செய்தித்தாளில் வெளியானது. அது இங்கே: https://www.theguardian.com/books/booksblog/2009/oct/19/short-story-julio-cortazar

இந்தக் கட்டுரையைப் படித்தால், பொலான்யோவின் கதைகளில் கிட்டும் பல கருக்கள் ஏற்கெனவே கொர்த்தாஸாரால் கையாளப்பட்டன என்பதும், அவை ஒருக்கால் லாடின் அமெரிக்கப் புனைவுகளின் மையத்தில் இருந்து செயலூக்கம் கொடுக்கும் பொறிகள் என்றும், நமக்குத் தெரியவரும்.

Theophile Gautier (1811-1872) ஃப்ரெஞ்ச் நாட்டவர். நாடகம், நாவல், பத்திரிகை எனப் பணியாற்றியவர். கலை, இலக்கிய விமர்சகர். “கலை கலைக்காகவே” என்று முழக்கமிட்டவர். கிளியோபட்ராவின் இரவுகளுள் ஒன்றும் பிற அருமையான மையல்களும் (One of Cleopatra’s Nights and Other Fantastic Romances) எனும் சிறுகதைத் தொகுப்பு கொண்டாடப்பட்டது.

Felisberto Hernandez (1902- 1964) உருவாய் (Uruguay) நாட்டைச் சேர்ந்தவர். பியானோ இசைக்கலைஞர், கவிஞர். மேஜிக் ரியலிசத்தின் முன்னோடி எனக் கருதப்படுபவர்.புகழ்பெற்ற சிறுகதைகள்: த பால்கனி, மை ஃப்ஸ்ட் கான்செர்ட்.

Peri hyposus  கிரேக்க ஆக்கங்களின் இலக்கிய விமர்சனத் தொகுதி என அடையாளப்படுத்தப்படுகிறது. இதை எழுதியவர் யார் என்பது பற்றி இன்னமும் ஊகங்கள் உலவுகின்றன. பொதுவாக ‘சூடோ – லாஞ்சைனஸ்’ என்ற அடையாளம் தெரியாத ஒருவர் எழுதியது என்று கருதுகிறார்கள்.அவர்தான் எழுதினார் என்றால் இது  கம்பீரமாக, அறிவுபூர்வமாக, ஆன்ம எதிரொலிப்பாக உள்ளது என்று கருதப்படுகிறது.

Edgar Lee Masters (1868-1950) அமெரிக்க வழக்கறிஞர், கவிஞர், நாடகாசிரியர். ராபர்ட் ஃப்ராஸ்ட் விருது பெற்றவர். இவருடைய ஸ்பூர் ரிவர் ஆந்தாலஜி இருபதாம் நூற்றாண்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்த கவிதைத் தொகுப்பு என்று கருதப்படுகிறது. இது பெற்ற வெற்றிக்குப் பிறகு, அவர் பல நூல்களை வெளியிட்டாலும், அவை எதுவும் இதற்கு நிகராக இல்லை என்பதால் அவர் வாழ்க்கை சோகமானதாக மாறியது என்று பொயட்ரி ஃபௌண்டேஷன், இவரது இறப்புக்குப் பிறகு பிரசுரித்த வாழ்க்கைக் குறிப்பு சொல்கிறது.

Enrique vila Matas (1948) ஸ்பானியர். 28 நாவல்கள், 11 கட்டுரைகள் எழுதியுள்ளார். பற்பல விருதுகள் பெற்றவர். இவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கு டின் ஹௌஸ் என்ற இலக்கியப் பத்திரிகையில் வெளியான ஒரு பேட்டியைப் பார்க்கலாம்: https://tinhouse.com/the-literature-of-no-an-interview-with-enrique-vila-matas/

Augusto Monterroso (1921-2003) ஸ்பானிய எழுத்தாளர்.ஆரம்ப நிலைக் கல்வி மட்டுமே கற்றவர். த பிளாக் ஷீப் அன்ட் அதர் ஃபேபில்ஸ் புகழ் பெற்ற சிறுகதைத் தொகுப்பு. இவருடைய ஒரு குறுங்கதையின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்: https://spanishtextstranslated.wordpress.com/augusto-monterroso/el-eclipse-the-eclipse/ 

காலனியத்தின் திமிரை மறுதலிக்கும் வரலாற்றை எப்படிக் கதையாக எழுதலாம் என்று சுட்டும் குறுங்கதை அது.

Gerard de Nerval (1808-1855) ஃப்ரெஞ்ச் நாட்டவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், குறு நாவல்களுக்காகப் புகழ் பெற்றார். ஜெர்மனியின் அழகியல் எழுத்தாளர்களைத் தன் நாட்டினருக்கு மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் செய்தவர். தலையில் தொப்பியுடனும், இறுதிப் பகுதி எழுதியிருந்த காகிதங்களுடனும் இவர் தற்கொலை செய்துகொண்டார். மேல் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்: https://www.poetryfoundation.org/poets/gerard-de-nerval

இப்படி 1800-களில் வாழ்ந்தவர்களுக்குக்கூட வாழ்க்கைக் குறிப்புகள் எழுத ஒரு கூட்டமே இருக்கிறது, இங்கிலிஷில். தமிழில் இப்படி நம்பகமான குறிப்புகளை எழுத பத்திரிகை ஏதும் இருந்தால் நன்றாக இருக்கும்.

Edgar Allan Poe (1809-1849) அமெரிக்க நாட்டவர். கவிஞர்,       எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்,  சிறந்த சிறுகதைகளை எழுதியவர். அமானுஷ்யமான திகில் கதைகளுக்குப் பெயர் பெற்றவர். இங்கிலிஷில் மட்டுமன்று, யூரோப்பியப் புனைவுகளின் மீதும் மிகுந்த தாக்கம்கொண்ட எழுத்தாளர். இவருடைய சிறுகதைகளில் பலவற்றை இங்கே பெறலாம்: https://poestories.com/stories.php

Horacio Quiroga (1878 – 1937) உருவாய் நாட்டைச் சேர்ந்தவர். நாடகம், கவிதை. சிறுகதை என எழுதியவர். விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டவர். வெப்பக் கானகத்தில் மனிதனுக்கும், விலங்கிற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைக் கற்பனையில் கதையாய் எழுதிப் புகழ்பெற்றவர். டேல்ஸ் ஆஃப் லவ், மாட்னெஸ் அண்ட் டெத் என்ற தொகுப்புகள் புகழ்பெற்றவை.

Jules Renard (1864 – 1910) இவரும் ஃப்ரெஞ்சுக்காரர். கேரட் டாப் இவரது புகழ்பெற்ற படைப்பு. இவரது நாள்குறிப்பு புத்தகமும் புகழ்பெற்ற ஒன்று. 1925-இல் பிரசுரமானது.

Alfonso Reyes (1889- 1959) மெக்ஸிக படைப்பாளி, தத்துவவாதி. போர்ஹெஸ் இவரது உரைநடையை ஸ்பானிய இலக்கியத்தின் சிகரங்களில் ஒன்றாகச் சொல்கிறார். இவர் பல மொழிபெயர்ப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார். கவிஞர், அபுனைவுகள் எழுதியவர்.

Rulfo (1917 – 1986) மெக்ஸிக எழுத்தாளர், திரைக்கதை எழுதியவர், புகைப்படமெடுப்பவர். இரு சிறுகதைத் தொகுப்புகளுக்காகப் பெயர் பெற்றவர். த பர்னிங் பெயின் அண்ட் அதர் ஸ்டொரீஸ் என்பது 1953-ஆம் வருட இங்கிலிஷ் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு.

Philip Sidney (1554 – 1586) ஆங்கிலேய அரசவையில் இருந்தவர், கவிஞர், போரிடும் வீரர், ஞானம் மிக்கவர். இவரது ‘பொயட்ரி இன் அபாலஜி’ ஒரு வழக்கின் வடிவமைப்போடு, நீதிமன்ற மொழியோடு அமைந்திருந்தது.

Marcel Schwob (1867 – 1905) முதன்மையான சிறுகதை எழுத்தாளர் என அறியப்பட்ட ஃப்ரெஞ்ச் படைப்பாளி. எட்டு சிறுகதைத் தொகுப்பு, எட்டு மேடை நாடகங்கள் எழுதினார். கி ரா.வைப்போல் ஃப்ரெஞ்ச் வட்டார மொழியைத் தொகுத்தவர். சம்ஸ்கிருதமும் படித்தவர். இங்கு இவரது விரிவான வாழ்வுக் குறிப்பைக் காணலாம்: https://www.3ammagazine.com/3am/marcel-schwob-a-man-of-the-future/

Francisco Umbral (1932 – 2007) ஸ்பானியர், பத்திரிகையாளர், நாவல் எழுதியவர். இவர் முறைதவறிப் பிறந்ததால் அம்மாவே இவரை வெறுக்க, அதன் பாதிப்பிலிருந்து இவரால் இறுதிவரை வெளிவர இயலவில்லை. எண்பது புத்தகங்கள் எழுதியவர். https://nplusonemag.com/online-only/online-only/francisco-umbral/

எ மார்டல் ஸ்பிரிங் இவரது தேர்ந்த படைப்பு.

2 Replies to “சிறுகதை எழுதுவது எப்படி?”

  1. எழுத்தாளர் மகரம் அவர்களால் தொகுக்கப்பட்டு பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் 20 வருடங்களுக்கு முன்பு 5 தொகுதிகளாக வெளியிடப்பட்ட ஒரு நூல் “எழுதுவது எப்படி”.

    70 களில் தொடங்கி கதை, கவிதை, நாவல், நாடகங்கள் என ஒவ்வொன்றிலும் புகழ் பெற்ற எழுத்தாளர்களாக விளங்கிய பலரிடமிருந்தும் “எழுதுவது எப்படி” என்ற தலைப்பில் கட்டுரைகளை பெற்று தொகுத்து, தொகுப்பாக அந்த நூல்களை வெளியிட்டனர்.

    மேற்கண்ட இந்த கட்டுரையை படிக்கும் பொழுது, அந்த தொகுப்பு நூலில் நம் ரொபெர்டோ பொலான்யோ-வின் இந்த குறிப்புகளையும் இணைக்க வேண்டும் போல உள்ளது. அவரின் இந்த கட்டுரையை நல்ல விதத்தில் மொழிபெயர்த்து தந்துள்ள திருமதி/செல்வி.பானுமதி அவர்களுக்கு பாராட்டுகள்.

    அன்புடன்
    அபிமன்யு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.